Featuredஇலக்கியம்கவிதைகள்பத்திகள்

தித்திக்குதே திருக்குறள் – 6

கூறாமல் சந்நியாஸம் கொள்

திவாகர்.

1ce9ac4f-e397-4da4-afd1-6bbb8c11ff45

ஒருமுறை இருமுறையல்ல அண்ணே

ஓராயிரம்முறை எடுத்துச்சொல்லியாச்சு

மனையாள் மனதால் இணையவேணுமென

மனசாட்சியாம்நான் மனதார சொல்லியாச்சு

 

 

மணநாளன்று மெட்டிக்காகக் குனிந்தவன்

மனையாள் கால்விரலைப்பிடிக்காது அவள்

காலைப்பிடித்தாய் இன்றுவரை நிமிரவில்லை

தலையணை மந்திரமென்று தந்தவளுக்குத்

தலையசைத்து மந்திரத்தில் மயங்கிவிட்டாய்

நாளெல்லாம் அவள்பேச்சு அவள்மூச்சு

அவள்போக்கில் வாழப் பழகினாயே

இருவரும் இணைந்து செல்லும்பாதைக்கு

இறைவன் வாழ்க்கையென பேர்கொடுத்தான்

இணைந்துசெல்ல இருவர் எதற்கென்றே

பிணைக்கைதியாகி அவள்பின் சென்றாய்.

மணப்பொருத்தம் பார்த்தவர்தாம் ஏன்மறந்தார்

மனமொத்த தாம்பத்யத்யமே தகுதியானதென

கணப்பொழுதேனும் உன்மனதைக் காயமாக்காமல்

கணவனெனத்தான் உன்மனைவியவள் மதித்தாளா

 

மனையாளுக்கு மறுபெயர் மனைச்செல்வமாம்

உனையாளும் மனையாளோ மறந்தாளிதனை

புதுமுகமாய் புக்ககத்தில் அடிவைத்தவள்தான்

புதிதுபுதிதாய் குறைகளைக் கொண்டுவந்தாளே

பழக்கமில்லா உறவுகளை அறவேவெறுக்க

பழையமுகங்கள் ஒவ்வொன்றாய் வெளியேற

ஊருணிநீரை வெறுமனேவீதியில் வீணாய்விட்டு

கார்மேகநீரை காற்றில்பிடிப்பாராம் அதுபோல

உன்வீட்டுச் செல்வங்கள் இவளெடுத்துவீணாக்கி

பொன்வாங்கி மணிவாங்கி அதுவும்பயனற்று

குறைசொல்லி கோள்சொல்லி தூக்கிவீசி

கொடும்வார்த்தை வாய்பேச குணநலனும்

கெட்டுப்போக நாள்போக நாள்போக

ஊரிலே உலகத்திலேஉன்பெயரையும் வீணாக்கி

உறவுகளென்று வந்தவரெல்லாம் வந்தவுடன்

விரைந்துஓடும் வழிபார்க்க வைத்துவிட்டாள்

 

எத்தனைகாலம்தான் பொறுப்பது என்பதல்லாமல்

இத்தனையும் வேடிக்கையாய்ப் பார்த்தாய்தான்

ஒருவார்த்தைசொன்னால் உன்னுள்ளே அச்சமாம்

மறுவார்த்தை சுடும்வார்த்தையாய் கேட்பாயே

மனையாளின் போக்குக்குத் தலையாட்டினாயே

உன்மனப்பாங்கு அவளறிந்ததால் நிலைமாறினாள்

உனைப்பெற்றவள் இன்றுவரை பொறுமைகாத்தாள்

அன்னையுலகுக்கே அன்புதெய்வம் அவளாம்

தன்மானத்தால் தலைநிமிர்ந்து வாழ்ந்தவளாம்

உன்மனையாள் அவளையும் துரத்திவைக்க

உனைப்பெற்ற பாவத்துக்குப் பலியானாயே

 

 

வழக்கம்போல வாய்மூடி பயனற்றதாய்

வாழ்ந்ததுபோதும் இதுவரை அண்ணே

பொறுத்ததுபோதும் பொங்கட்டும்அண்ணே

பேருபோனதெல்லாம் போகட்டும் அண்ணே

உன்மனசாட்சிநான் சொல்வேன் கேள்அண்ணே

உன்போன்றோருக்கென்றே வந்தசொல் அண்ணே

தமிழில் வரமாய் தந்தசொல்அண்ணே

தமிழ்தந்த அவ்வைவாயால் தரணிக்கேஅண்ணே

ஓராயிரம்முறை சொன்னசொல் அண்ணே

கூறாமல் சன்னியாஸம்கொள் இனியே.

 

 

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்

இல்லவள் மாணாக் கடை (திருக்குறள் -53)

 

மனைவி நற்குணம் பொருந்தியிருந்தால் வளமான வாழ்வு அமையும். மாறுபட்ட குணம் பொருந்திய மனைவி அமைந்தால் வாழ்க்கை பயனற்றதாகும்.

 

தொடருவோம்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Print Friendly, PDF & Email
Download PDF
Share

Comments (4)

 1. Avatar

  அன்புள்ள திவாகர், வணக்கம்.

  நீங்கள் எழுதிவரும் இந்தத்தொடரின் நோக்கத்தைப் புரிந்துகொள்ள முயன்றுவருகிறேன். ஒரு குறளை விளக்கப் பத்திபத்தியாகக் கவிபாடுகிறீர்களே, ஏன் என்று எனக்குப் புரியவில்லை. சரி, அது கிடக்க.

  இங்கே நீங்களே சொல்லியிருக்கிறீர்கள்:

  “மனைவி நற்குணம் பொருந்தியிருந்தால் வளமான வாழ்வு அமையும். மாறுபட்ட குணம் பொருந்திய மனைவி அமைந்தால் வாழ்க்கை பயனற்றதாகும்.”

  இந்தக் குறிப்பிட்ட குறளில் “கூறாமல் சந்நியாஸம் கொள்” என்ற உட்குறிப்பு இருப்பதாய் எனக்குத் தெரியவில்லையே. இது யாருடைய deducing logic? இதைப் பின்பற்றி, “”கூறாமல் சந்நியாஸம் கொண்ட” மகா மேதைகளைப் பற்றித் தெரிவித்தால் நன்றியுடையவளாவேன்.

  எல்லாவற்றுக்கும் அடிப்படையாக, அப்படிப்பட்ட மனைவி அந்த மகாமேதைக்கு எப்படி அமைந்தாள் என்பதையும் விளக்கினால் நன்று. எட்டுவகைத் திருமணமுறைகளை அறிவோம் — பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தைவம், காந்தருவம், அசுரம், இராக்கதம், பைசாசம் என. இந்தவகையில் அமைந்த எந்த மனைவியைப்பற்றி வள்ளுவர் சொன்னார் என்பது யாருக்காவது தெரியுமா? 

  உங்கள் பொருளுரையை மாற்றி இப்படிச்சொல்ல விரும்புகிறேன்:

  “கணவன் நற்குணம் பொருந்தியிருந்தால் வளமான வாழ்வு அமையும். மாறுபட்ட குணம் பொருந்திய கணவன் அமைந்தால் வாழ்க்கை பயனற்றதாகும்.”

  அப்போ, மகளிரும்  “கூறாமல் சந்நியாஸம் கொள்”ளவேண்டியதுதானோ? ஏன் இதைப்பற்றி யாரும் சிந்திக்கவில்லை?

  ++++++++++

  எனக்குத்தெரிந்த ஒரே ஒரு குடும்பத்தில் உங்கள் கவிதையில் உள்ளபடியே அமைந்த மனைவி. ஆனால் … முதுகெலும்பில்லாத கணவனுக்கோ … பிள்ளைப்பருவத்தில் தாயின் புடைவைத்தலைப்பைப் பிடித்தபடித் திரிந்த அதே நிலை! அவளுக்கு அவன் அடிமையோ அடிமை; சும்மா சொல்லப்படாது … கொடுத்துவைத்த மகராசி! 😉

  பிற பின்னர்.

 2. Avatar

  தமிழன்னையே..

  // “மனைவி நற்குணம் பொருந்தியிருந்தால் வளமான வாழ்வு அமையும். மாறுபட்ட குணம் பொருந்திய மனைவி அமைந்தால் வாழ்க்கை பயனற்றதாகும்.” //

  இது இந்த மேற்கொண்ட திருக்குறளை ஒட்டியே எழுதப்பட்டதாகும்.  ஒருவேளை வள்ளுவர் இந்த இடத்தில் மனைவிக்குப் பதில் கணவனைக் குறிப்பட்டால் நீங்கள் சொல்லியது போல எழுதத் தயங்கமாட்டேன்.

  இந்த திருக்குறளுக்கேற்ப என்னுடைய கற்பனையில் எழுதப்பட்டது. எல்லோரும் இதை ஒப்புக்கொள்வர் என நிச்சயம் கருதமாட்டேன். 

  அவ்வையார் படம் பார்த்தீர்களா.. புருஷன் சாப்பாட்டுக்காக அழைத்துவந்த ஒரு கிழவி, அவள் வெளியே காத்திருக்க மனைவி உள்ளே இந்த சின்ன விஷயத்துக்காக பெரிய சண்டை போடுவாள் புருஷனிடம். அதை வெளியே இருந்து கேட்ட கிழவி சொல்லும் வார்த்தைதான் ‘கூறாமல் சன்னியாஸம் கொள்’. சில மனைவிகள்.. வாழ்க்கைகள். அதுதான் பிரபலமாக பேசப்படுகிறது.

  பெரும்பான்மை மனைவிகள் பற்றிய என் கட்டுரை ஒன்று என் வலைப்பதிவில் உள்ளது. முடிந்தால் படித்துப்பாருங்கள். http://vamsadhara.blogspot.in/2008/06/blog-post_05.html

  திருக்குறள் பற்றிய நூறாயிரம் விரிவுரைகள் புத்தகங்கள் வந்துவிட்டன. நான் சொல்லி விரிவுரை தெரிந்து கொள்ளப்படவேண்டிய அவசியமே யாருக்கு இல்லை. இப்படி எழுதுங்கள்.. நாங்கள் படிக்கிறோம், என ஒரு சில அன்பர்களிடமிருந்து வேண்டுகோள் வந்ததால் எழுதுகிறேன்.

  உங்களை விடுவதாய் இல்லை. அடுத்த குறளுக்குப் பாருங்கள்.. இன்னமும் பெரிசு. இதிலும் மனைவி வருவாள். நீங்கள் படித்துத் திட்டினாலும் ஆனந்தமே.

  அன்புடன்
  திவாகர்

 3. Avatar

  பெரிசாய் எழுதுவது தப்பில்லை, திவாகர். இந்த இணையக்காலத்தில் … சுருக்கமாக எஸ்.எம்.எஸ், ட்விட்டெர் … அது இது என்று பலரும் தலைதெறித்து ஓடும் காலத்தில் … இப்படியொரு நீண்ட கவிதைவிளக்கமா என்பது என் வியப்பு. ஆனால், இந்த மாதிரிப் பதிவுகளே நிலைத்து நிற்கும். ஆகவே, தொடரவும்.

  அவ்வையார் படம் நினைவில்லை. அதனால், அந்த விஷயம் பற்றி வாதாட இயலாது. 

  போகட்டும், எவன் வேண்டுமானாலும் சந்நியாசம் கொள்ளப்போகட்டும். ‘சனியன் தொலைஞ்சு போகட்டும்’ என்று அதற்கு நானே உதவி செய்வேன்! ஆண்கள் பலரும் சந்நியாஸம் மேற்கொண்டால் பெண்களின் வாழ்வு சிறக்கும்!  “ஆபத்சந்யாஸம்” பற்றி இளமைக்காலத்தில் கேள்விப்பட்டிருக்கிறேன். அதெல்லாம் அந்த ஆண்பிறவியின் இயலாமையின் வெளிப்பாடே. அவனுடைய காம இச்சையால் பிறந்த பிள்ளைகளை அவன் என்ன செய்தான் என்பதும் இல்லறக்கடமைகளை அவன் எப்படித் தீர்த்துக்கட்டினான் (how did he resolve household obligations) என்பதும் தெரியவேண்டுமே, இல்லையோ? ச்சும்மா, பாலியல் சுகத்துக்காக ஒருத்தியை மணந்துகொண்டு, பிறகு அது சரியில்லை இது சரியில்லை என்று நொந்துகொண்டு சந்நியாஸமே மேல் என்று மூக்கால் அழுது புலம்பிக்கொண்டிருப்பது அவனுடைய தன்னிரக்க உணர்வைத்தான் (self pity) வெளிப்படுத்துகிறது. அந்தமாதிர் ஆட்கள் … கூறாமல் என்ன கூறியும் என்ன … சந்நியாஸம் மேற்கொண்டு வீட்டைவிட்டுத் தொலைந்துபோவதே பெண்களுக்கு நன்மை. ஆனால், என்ன … மறுபடி மறுபடி பெண்மோகம் பிடித்து அலைவார்கள். ஈதெல்லாம் புதுமையில்லையே! புராணங்களைப் படித்தாலே தெரியுமே. 😉

 4. Avatar

   //இந்த மாதிரிப் பதிவுகளே நிலைத்து நிற்கும். ஆகவே, தொடரவும்.//

  Thanks lot Amma.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க