சங்க இலக்கியத்தில் களவும் – கற்பும் உறவாடியது

1

–க.பிரகாஷ்

download

சங்க இலக்கியம் என்பது தமிழில் கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலப்பகுதியில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியம் ஆகும். 473 புலவர்களால் 2381 பாடல்கள் பாடப்பட்டுள்ளது. இப்புலவர்கள் பலதரப்பட்ட தொழில் நிலையுள்ளோரும் பெண்களும், நாடாளும் மன்னரும் ஆவர். சங்க இலக்கியங்கள் அக்காலத்தில் வாழ்ந்த தமிழர்களின் தினசரி வாழ்க்கை நிலைகளையும் மற்றும் பண்டைத் தமிழரது காதல், போர், வீரம், ஆட்சியமைப்பு, வணிகம் போன்ற நடப்புகளையும் அறியவைக்கின்றன.

சங்க இலக்கிய கூறுகள் மற்றும் பண்புகள்

அகம், புறம், ஐவகை நிலபுலன்கள், வாழ்க்கை முறைகள் போன்றவைகளை எடுத்துவிளக்கும் சங்க இலக்கியப் பாட்டுகளில் பழைய மரபுகள் பல காணப்படுகின்றன. காதல் பற்றிய கற்பனையை அகம் என்றும் வீரம், கொடை, புகழ் முதலிய வாழ்க்கைத் துறைகளைப் புறம் என்றும் பகுத்த பாகுபாடு அந்த மரபுகளுள் முதன்மையானது ஆகும்.

அகப்பாட்டுகளில் கற்பனைத் தலைவன் தலைவியின் காதல் பாடப்படும். புறப்பாட்டுகளில் நாட்டை ஆளும் தலைவனுடைய சிறந்த வீரச்செயல்களும், கொடைப்பண்பும் குடிமக்களுள் சிறந்தவர்களின் அருஞ்செயல்களும் பிறவும் பாடப்படும். ஆகவே, பெரும்பாலும், அகப்பாட்டுக்கள் கற்பனையாகவும், புறப்பாட்டுகள் உள்ளது கூறலாகவும் அமைந்துள்ளன எனலாம்.

சிற்றூர்கள் பலவாகவும் நகரங்கள் ஒரு சிலவாகவும் அவற்றிடையே போக்குவரத்தும் கலப்பும் குறைவாகவும் இருந்த காலம் அது. சிற்றூர் மக்கள் மலையிலும் காட்டிலும் வயற்புறத்திலும் கடற்கரையிலும் அமைந்த ஊர்களில் வாழ்ந்து அந்தந்த நிலத்தில் கிடைத்த உணவுப்பொருள்களுக்காக வேட்டை, உழவு, மீன்பிடித்தல் முதலிய தொழில்களில் ஈடுபட்டு வந்தனர். அன்பு, அறிவு, அழகு, வயது முதலியன பொருத்தமாக வாய்ந்த ஆணும் பெண்ணும் காதல் கொண்டு திருமணம் செய்து இல்லற வாழ்க்கை நடத்தினர். அத்தகைய காதலும் இல்லறமுமே சிற்றூர்களில் இயல்பான வாழ்க்கையாக இருந்தன. அந்த ஊர்களில் தோன்றி வழங்கிய வாய்மொழிக் கதைகளும் பாடல்களும் நாடகங்களும் அந்தக் காதல் வாழ்க்கையையே மையப் பொருளாக கொண்டிருந்தன. சிற்றூர் மக்களின் இயற்கையோடு இயைந்த வாழ்வும் தொழில்களும் நாட்டுப் பாடல்களில் பாடப்பட்டன. மலை, காடு, வயல், கடல் ஆகியவற்றின் இயற்கை அழகும் சிறப்பும் அவற்றில் பாடப்பட்டன. இயற்கைப் பொருள்களும் தொழில் முதலிய வகைகளும் வாழ்வுக்காக அமைந்தவை.

ஆகையால், காதல்வாழ்வே அந்தப் பாடல்களின் உரிப்பொருள் என்று போற்றப்பட்டது. அந்த வாழ்வை எடுத்துக்காட்டும் பொருள்களாக உள்ள மரம், விலங்கு, பறவை, தொழில் முதலிவை கருப்பொருள்கள் எனப்பட்டன. அந்த வாழ்வுக்குப் பின்னணியாக விளங்கிய நிலமும் காலமும் முதற்பொருள்கள் எனப்பட்டன. இயற்கைப் பொருள்களும், தொழில்களும் பழக்கவழக்கங்களும் வேறுவேறாக இருந்தமையால் நாட்டுப் பாடல்களும் வெவ்வேறு வகையாக அமைந்தன. சங்க இலக்கிய காலத்தில் அந்த நாட்டுப் பாடல்களே புலவர்களின் கைப்பட்டு குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனும் ஐந்திணைப் பாடலாக அமைந்தன. அவற்றின் மரபுகளை ஒட்டிப் புலவர்களால் இயற்றப்பட்ட ஐந்திணைப் பாட்டுகளும் முழுவதும் கிடைக்க வழியில்லை.

ஒரு காதல் நிகழ்ச்சியைக் கற்பனைசெய்து பாடும்போது இவ்வாறு அதற்கு உரிய நிலம், பொழுது, பறவை, விலங்கு, மரம், பூ முதலிய இயற்கைப்பொருள்களையும் அமைத்துப்பாடும் மரபு நெடுங்காலமாக இருந்துவந்தது.

ஊர்ஊராக மக்கள் எழுதாமலே பாடிவந்த நாட்டுப் பாடல்களிலேயே அந்த மரபு இருந்து வந்தமையால் புலவர்கள் அந்த மரபுகளை அவ்வாறே கையாண்டு இலக்கியம் படைத்தனர். அதனால் .கணவனும் மனைவியும் ஊடல் கொண்டு பிணக்குவதைப் பாட விரும்பினால் புலவர் அதற்கு ஏற்ற வயல் சார்ந்த மரபு நிலத்தையும் அந்த நிலத்து இயற்கைப் பொருள்களையும் அமைத்துப் பாடவேண்டி இருந்தது. மலையையோ காட்டையோ பாடுவதற்கு அந்த மரபு இடம்தரவில்லை.

நாட்டு மக்களின் எழுதா இலக்கியமாகிய நாட்டுப்பாடல்களிலேயே அவ்வளவு ஆழமாக அந்த மரபு வேரூன்றி இருந்தபடியால் எழுதும் இலக்கியத்தைப் படைத்த புலவர்களும் அந்த மரபை மீறாமல் போற்ற நேர்ந்தது. அதனால், அக்காலத்து அகப்பாட்டு, இயற்கை வர்ணனை மிகுந்துவிளங்கக் காண்கிறோம். இயற்கையைப் பாடுவதாகவே அமைந்த பாட்டுகள் போலச் சில தோன்றும். மனிதரின் காதலைப் பாடுதலே அந்தப் பாட்டுகளின் முதன்மையான நோக்கம்.

ஐந்திணையில் காதல் குறிப்பு

குறிஞ்சித்திணை, முல்லைத்திணை, மருதத்திணை, நெய்தல்திணை, பாலைத்திணை ஆகியவை அன்பின் ஐந்திணை ஆகும்.

ஒரு தலைவனும், தலைவியும் முதன்முதலாக ஒருவரை ஒருவர் கண்டு இயல்பாகவே அன்பு கொண்டு மனம்கலந்து உறவு கொள்வது குறிஞ்சித்திணையாகும்.

அன்பால் நெருங்கிப் பிணைந்த தலைவனும், தலைவியும் பிரிந்து ஒரு குறிப்பிட்ட காலம்வரை அப்பிரிவைத் தாங்கிக்கொண்டிருந்தல் முல்லைத் திணையாகும். பிரிவு பல காரணங்களால் உண்டாகும்.

இல்லற வாழ்வில் தலைவன் பல காரணங்களால் வெளியிடங்களில் அடிக்கடித் தங்கிவந்தால் தலைவி கோபமுற்று ஊடல் கொள்வது மருதத்திணையாகும்.

ஏதோ ஒரு காரணத்தால் தலைவியைப் பிரிந்து சென்ற தலைவன் குறித்த காலத்திற்குள் வரமுடியாது கால தாமதம் ஆவதால் தலைவிக்கு ஏற்படும் வருத்த்தைப்பற்றிக் கூறுவது நெய்தல்திணையாகும்.

மணந்துக்கொள்ளும் பொருட்டுத் தலைவன் முயன்று பொருள் தேடவோ, மேலும் கல்விகற்கவோ அரச கட்டளையால் தூது செல்லவோ பிரியும் பிரிவு பாலைத்திணையாகும்.

களவு

களவு என்பது ஒத்த பருவம், உருவம் முதலிவையுள்ள ஒருவனும், ஒருத்தியும் தாமே எதிர்ப்பட்டுக் கூடும் கூட்டம். தமக்கேற்ற வாழ்க்கைத் துணைவரைத் தாமாகவே தேர்ந்தெடுத்துக் கொள்வது இதில் பேசப்படும்.

கற்பு

கற்பு என்பது களவொழுக்கம் ஒழுகிக் காதலன்பு முதிர்ந்து மணந்து கொண்ட காதலர் ஒரு மனப்பட்டு இல்லறம் நடத்துதல் ஆகும். 

இல்லறம்

தலைவனும் தலைவியும் கொடுக்கும் முறைமையையுடைய பெற்றோர் உடன்பட்டுக் கொடுப்ப மணஞ்செய்துகொண்டு நடத்தும் இல்லற வாழ்க்கையே கற்பு வாழ்க்கை. இல்லறமே கற்பு ஆகும். இக்கற்பு வாழ்க்கை, களவொழுக்கம் முற்றி விளைந்த விளைவு. களவொழுக்கத்தின் கனி கற்பு; அஃதாவது அன்பின் வெற்றி ஆகும்.

தலைவனும் தலைவியும் எதிர்பட்டுக் கொண்ட காதலன்பு கெடாமல் இருவரும் மணந்து கொண்டு இல்லறம் நடத்துதலும், தலைவன் பிரிந்தால் தலைவி அன்பு வழுவாமல் ஆற்றியிருந்து வெற்றி பெறுதலும் உடைமையின் இது கற்பு எனப்படும். “மறை வெளிப்படுதல் கற்பு” கணவன் மனைவி இருவரையும் ஒன்றுபடப் பிணித்து நிற்கும் மனங்கலந்த அன்பின் பயனே கற்பு வாழ்க்கை.

இன்பம்

இன்பம் என்பது அகப்பொருளின் கூறு. ஆண், பெண் என்னும் இருபாலின்கண் நிகழ்வது, மக்களேயன்றி மற்ற விலங்கு, பறவை முதலிய உயிர்களுக்கும் ஆண், பெண் என்னும் கூறுபாட்டால் பொருந்தி நிகழ்வது; எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது தானமர்ந்து வரூஉம் மேவற்றாகும் என்பது தொல்காப்பியக் குறிப்பு.

ஆண் பெண் புணர்ச்சிக்குக் காரணமாகிய காதல் ஒருவனும் ஒருத்தியும் தாமாகவே எதிர்ப்பட்டுக் கூடுதல் இயற்கையாதலால், அதைத் தடைசெய்வதும், இழித்துக் கூறுவதும், அகப்பொருளின் உண்மையை இயற்கையாற்றலை – இன்றியமையாப் பயன்பாட்டை அறியாக் குறையேயாகும். வாழ்க்கை நலத்திற்குக் காரணமான அகவொழுக்கமென்னும் பேரின்பத்தினைத் தகாத வழியில் செலுத்தியும் தவறான பொருள்கொண்டும் சிற்றின்பம் என இழிவுபடுத்தி விட்டனர்; மக்கள் விலக்கத்தக்க பொருள்களில் ஒன்றாகச் செய்து விட்டனர். இது சமயச் சார்பில் நேர்ந்த தவறு.

உலகுயிர்த் தோற்றமே ஆண் பெண் இருகூறாய் அமைந்திருக்க, அவற்றின் கூட்டுறவே உலகுயிர்த் தோற்றத்திற்குக் காரணமாய் அமைந்திருக்க அஃது எவ்வாறு சிற்றின்பமாகும்? உயிர்கள் அடையும் இன்பங்களில் பேரின்பம் அதுவே. “ கண்ணால் கண்டும், காதல் கேட்டும், வாயால் உண்டும், மூக்கால் மோந்தும், உடம்பால் தீண்டியும்” இன்புறும் ஐவகையான இன்பமும் பெண்ணிடத்தேயுள்ளன”; இவளோடு கூடி வாழும் இன்பத்தை விட உலகில் மிகுதியான இன்பம் வேறு எதுவுமில்லை என்பது வள்ளுவர் கருத்து.

காதலின் பெருமை

இருவேறு உருவினரான ஆணையும் பெண்ணையும் ஒன்றாக்கி “ இருதலைப் புள்ளின் ஓருயிராம்” என்னும் நிலையை உண்டாக்கி, ஒருவர்க்கு உண்டான நலக்கேடு இருவர்க்கு ஒத்த பங்காகக் கொண்டொழுகும்படிச் செய்வது காதல்.

காதலன் ஒருவன் தன் காதலியிடம் எனது தாயும் நினது தாயும் ஒருவருக்கொருவர் எம் முறையினராவர்? என் தந்தையும் நின் தந்தையும் ஒருவருக்கொருவர் என்ன முறையையுடைய சுற்றத்தினர்? ஒரு முறையும் இல்லையே! அவ்வாறிருக்கவும், நானும் நீயும் எவ்வாறு ஒருவரையொருவர் அறிந்தோம்? முன்பின் அறியாதவர் நாம் அவ்வாறிருந்தும் நம் அன்புடைய நெஞ்சங்கள் பயிர் செய்வதற்குத் தகுதியாக உழுது பண்படுத்தப்பட்ட செம்பாட்டு நிலத்தில் பெய்த மழைநீர் போலக் கலந்துவிட்டனவே! என்னே காதலின் பெருமை! இன்னார் என்று அறியாத இருவர் நான் நீ என்னும் வேறுபாடின்றி ஒருமைப்பட்டதை என்னவென்பது? எனும் குறுந்தொகை காதலின் பெருமையை நன்கு விளக்குவதாகும்.

“யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
 எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
 யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே: – (குறுந் – 40) 

காளைப் பருவத்தையும் கன்னிப் பருவத்தையும் அடையுமுன் ஆண் பெண் இருவரும் ஒருவரையொருவர் கண்டதுமில்லை, கேட்டதுமில்லை. திடீரென ஒருநாள் எதிர்ப்பட்டு அன்புகொள்ளச் செய்யும் பெருமையுடையது காதல்.

காதல் மனம்

ஒருவனும் ஒருத்தியும் காதற் கலப்புற்று வரும்போது சிலர் தம் தோழர்களிடம் தமது கருத்தை வெளியிடுவர். சிலர் தம் காதலியிடம் நெருங்கிப் பழகும் பெண்களிடம் தெரிவிப்பர். இம்முறை இன்றும் நடைமுறையில் இருந்து வருகின்றது.

சில பெண்கள் தம் தோழியரின் குறிப்பு வேறுப்பாட்டைக் காதற் குறிப்பைக் குறிப்பால் உணர்ந்து அவளது பெற்றோரிடம் கூறுவர். சில பெண்கள் தம் தோழியரிடம் தாங்கொண்ட காதலைக் குறிப்பால் உணர்த்துவர். சிலர் தம் பாட்டியரிடம் கூறுவர். அப்பாட்டியர் பெற்றோரிடம் கூறுவர். பெற்றோர் மனமுவந்து  அக்காதலர்க்கே மணமுடிப்பர்.

காதலர்களின் காதற் கலப்பு பெரும்பாலும் பிறர்க்குத் தெரியாமல் நடைபெறும். அவர்களது காதலைப் பெற்றோரே அறிந்து மணம் முடிப்பதுமுண்டு. காதலர்களின் தோழரும் தோழியரும் அவர்தம் பெற்றோர்க்கு மணம் முடிப்பதும் உண்டு.

சங்க இலக்கியத்தில் கற்பு பற்றிய சொற்கள்

மாசில் கற்பு, முல்லை சான்ற கற்பு, கடவுட் கற்பு, நகரடங்கிய கற்பு, நிலைஇய கற்பு, அடங்கிய கற்பு, உவர் நீங்கு கற்பு, மறுவில் கற்பு, அருந்ததி அனைய கற்பு போன்ற பல தொடரமைப்புக்கள் கற்பின் மேம்பாட்டை உணர்த்துகின்றன.

களவிலும் – கற்பிலும் – புணர்ச்சி

“கண்தர வந்த காம ஒள்எரி
என்புஉற நலியினும் அவரொடு பேணிச்
சென்று, நாம்முயங்கற்கு அருங் காட்சியமே…(குறுந் -305)

கண்தர வந்த காமம் என்றது அவனைக் கண்ட போதே அவன்பால் விருப்புடையார் ஆயினதைக் குறித்தாம்; அதனை ஒள்எரி என்றது, சுடரிட்டுப் பலரும் காண நிகழ்வது; அங்ஙனமன்றி எவரும் காணாவிடத்து நிகழும் குப்பைக் கோழிப்போர் என்றனள். களைவார் இலர் என்றது, தோழி நீதான் அதனைப் போக்காயோ, எனக் குறிப்பால் தோழியை வேண்டியதாம்.

உள்ளப் புணர்ச்சி

ஆண் பெண் உறவுக்குக் காதல் காரணம் என்றோம். காதலுக்குப் பால் காரணம் என்றோம். அறிதோறும் அறியாமை கண்டதல்லது என்ன விளக்கம் கண்டோம்? ஒத்த தலைவனும் தலைவியும் காதற் குறிப்பொடு காண்பர் எனின், அவ்விருவரும் ஒத்தவர்களாக இருப்பதற்குக் காரணம் பிறிதுண்டோ? ஒப்பு என்பது எது? அஃது ஒரு பிறவி யொப்பா பல்பிறவி யொப்பா?

“இம்மை மாறி மறுமையாயினும்
நீயா கியரென் கணவனை
யானா கியர்நின் னெஞ்சுநேர் பவளே – (குறுந் – 49) 

இம்மை மாறி மறுமை யாயினும் நீயாகியர் என் கணவனை யான் ஆகியார் நின் நெஞ்சு நேர்பவளே என்பதைக் கவனிக்க வேண்டும். நின்னால் மாண்புற்ற போதும் இம்மைக்கண்ணும் அவர் நின் மனைவியர் ஆகார். நீயும் அவர்க்குரிய கணவன் ஆக மாட்டாய். மறுமையின்கண் தொடர்ந்து பெறும் நட்புக் கற்புடையாட்டியாகிய எனக்கன்றி அவர்க்கு வாயாது என்று கூறித் தலைவனிடத்தே தான் கொண்ட உழுவலன்பை உணர்த்துகின்றன.

கற்பு – திருமணமாக முடியுங்கால் களவுநெறி, நன்னெறி எனப் போற்றப்படும். இன்றேல் கள்ளத்தனம் என இகழப்படும். கற்பென்னும் மணவாழ்க்கைக்கு முன்னரெல்லாம் களவென்னும் மறைவுநெறி ஒருதலையாக நடக்க வேண்டுமோ எனின் இல்லை. களவின் முடிபு கற்பு என அகத்திணை வலியறுத்தும்;. கற்பு வழக்காவது தலைவியைக் கொடுத்தற்குரியோர் கொடுப்பக் கரணமுறையால் தலைவன் ஏற்றுக் கொள்வதாகும்.

“கற்பெனப் படுவது கரணமொடு புணரக்
 கொளற்குரி மரபிற் கிழவன் கிழத்தியைக்
 கொடைக்குரி மரபினோர் கொடுப்பக்கொள் வதுவே”
 (தொல் – 1087 )

தொல்காப்பியர் தமிழ்ச் சமுதாயத்தின் மணமுறையைச் சுருக்கமாக உரைப்பர். திருமணம் என்னும் கட;டுப்பாடு யாண்டும் இன்றியமையாதது; மாறாதது. மணச்சடங்குகள், தேயந்தோறும், இனந்தோறும் வேறுபடுவன; காலந்தோறும் கூடுவன, குறைவன மயங்குவன. ஆதலின் வாழ்வியலறிஞர் தொல்காப்பியர் கற்பென்னும் தலையாய அறத்தை வலியுறுத்திக் கரணமொடு புணர என்று சடங்கினைப் பொதுப்படக் கூறினார்.

“பொன்னவிர் சுணங்கொடு செறிய வீங்கிய
 மென்முலை முற்றம் கடவா தோரென
 நற்றென் கங்குலும் பகலும் இயைந்தியைந்து
 உள்ளம் பொத்திய உரஞ்சுடு கூரெரி   – ( அகம் – 279) 

நண்பினர் பிடியையும் உறவினர் துயரத்தையும் பகைவர்களின் எக்களிப்பையும் உள்ளுரில் இருந்தே பார்த்துக் கொண்டிருப்பர். அவர் யாரெனின் பொன்னிறச் சுணங்கும் திரட்சியும் வீக்கமும் மென்மையும் பொருந்திய முலைத்தடத்தை விட்டு அகலமாட்டா ஆடவர்கள்.

“இல்லோர்க் கில்லென் றியைவது காத்தல்
வல்லா நெஞ்சம் வலிப்ப நம்மினும்
பொருளே காதலர் காதல்…” (அகம் -53)

காதலர் காதல் மாறிவிட்டது எனவும் அதற்குக் காரணம் ஈகைப்பற்று எனவும் தலைமகளே கூறுதல் காண்க. நாடுகாவற் பிரிவு, பகைவயிற் பிரிவு, தூதிற் பிரிவு, ஓதற் பிரிவு, பரத்தையிற் பிரிவு எனப் பிரிவு வகைகள் பல. இவற்றினும் பொருள்வயிற் பிரிவே எல்லார்க்கும் உரியது. களவிற்கும் கற்பிற்கும் பொதுவானதாகும்.

பார்வை நூல்கள்: 

தமிழ்க் காதல்    –   வ.சுப. மாணிக்கனார்
குறுந்தொகை    –   புலியூர்க்கேசிகன்
அகநானுறு         –   புலியூர்க்கேசிகன்
தமிழ் இலக்கிய அறிவுக் களஞ்சியம்   – செந்துறையான்
தமிழ் இலக்கிய வரலாறு      – மது. ச. விமலானந்தம்
தமிழ் இலக்கிய வரலாற்றுக் களஞ்சியம்   – க. பிரகாஷ்

***

க.பிரகாஷ் எம்.ஏ, எம்.பிஃல்,
தமிழ்த்துறை
தொழில்நுட்பக் களஆய்வுப் பணியாளர்
பாரதியார் பல்கலைக்கழகம்
கோயம்புத்தூர் – 46

 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “சங்க இலக்கியத்தில் களவும் – கற்பும் உறவாடியது

  1. அருமையான கட்டுரை. சங்க இலக்கியங்கள் காட்டும் வாழ்வியலைத் தொகுத்துத் தந்துவிட்டார் கட்டுரையாளர். மிக்க நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *