பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

13318513_1022161434504722_554123272_n

வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

27182698@N05_rராமலஷ்மி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (04.06.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014-ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுக்களும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.

பதிவாசிரியரைப் பற்றி

9 thoughts on “படக்கவிதைப் போட்டி … (66)

 1. பூச் சூட…

  பூவைத் தொடுப்பவள் தலையினிலே
       பாரமாய் வறுமை வதைக்கையிலே, 
  சாவைத் தேடிடக் கணவன்தான்
       சாரா யத்தைத் நாடுகிறான்,
  தேவைக் கான பொருள்சேர்க்கத்
       தேடிப் பிள்ளைகள் வெளிநாட்டில்,
  பூவைத் தலையில் தக்கவைக்க
       பூவை தொடுக்கிறாள் பூக்களையே…!

  -செண்பக ஜெகதீசன்…

 2. இயற்கை அளித்த பூவை
  இடையில் வந்த கணவன்
  இறப்பில் பறிகொடுக்கும் நிலை…..

   பூத்தொடுக்கும் நேர்த்தியில்
  உள்ள அழகைக் கூட
  இறைவன உனக்களித்த
  படைப்பில் மறந்தானோ….

  விதவை விற்றாலே.
  வீணெனப் பூவை
  வாங்க,மறுக்கும்
  வாழ்க்கை உலகமிது.

  பூவிழந்ததை மறைத்துப்
  பூவைத்துக் கொண்டு
  பூவையர்க்குப் 
  பூவை விற்கப்
  பொய்வேடம் புனைகதையை
  என் சொல்ல..என் சொல்ல…

           ” இளவல் ”  ஹரிஹரன்,  மதுரை.

 3. உழைப்பால் வந்த ஊதியத்தை 
  கவர்ந்து கொண்டு 
  உல்லாசமாய் வாழும் 
  கணவன்மார்கள் 
  இருக்கும் வரை 

  ஜான் ஏறனால்  
  முழம் சறுக்கும் 
  என்பதை உணர்த்தியது 
  இந்த பூவின் வாசம் !

  சென்னை, ஹிஷாலி !

 4. உழைப்பால் வந்த ஊதியத்தை 
  கவர்ந்து கொண்டு 
  உல்லாசமாய் வாழும் 
  கணவன்மார்கள் 
  இருக்கும் வரை 

  நாங்கள் 
  ஜான் ஏறினால் 
  முழம் சறுக்கும் 
  என்பதை உணர்த்தியது 
  இந்த பூவின் வாசம் !

  சென்னை, ஹிஷாலி !

 5. நாளை மறுநாள் திருநாள்//
  மூத்தவளின் பிள்ளை/
  பெரிசாகி நாளாச்சு/
  முந்தானை நீளமாய் தாவணி/ நடுவிலி பெத்தது/
  முளைக்கு முன்னர் தனக்குமாம்.//

  இளையவளின் கடைக்குட்டி/
  கேளான் எதுவும்/
  நீளக்கை சேட் கட்டைக் களிசான்/
  புத்தகம் சுமக்க முதுகுப்பை.
  //
  கட்டம் போட்ட நீலக்கைத்தறி/
  அம்மாவுக்கு/
  மாமிக்கொரு நல்ல வொயில்/
  இயலாமல் படுக்கும் கண்ணாளனுக்கு/
  கதர் வேட்டியும் கம்பளியும்.//

  நாதன் கடைக்கணக்கு/
  சந்திக்கடை பாக்கி/
  கிழமைச் சீட்டுக்காசு/
  கோயில் உண்டியல்/
  இருமல் மருந்தும் தடவும் தயிலமும்.//

  கொய்த மல்லிகையை/
  குந்தியிருந்து கோர்க்கும் நாருடன்/
  வியர்த்த முகத்தில்/
  இளையோடும் எண்ணங்கள்/
  சரப் பின்னலில்/
  நாளைய நம்பிக்கையாய்/
  முடிச்சுக்களுடன்.

 6. வல்லமை பட வரி 66-
  பூக்காரி

  வறுமை பெண்களிற்குத் தன்னம்பிக்கை
  திறமை தருகிறதென்பது உண்மை.
  பொறுமையான சுய சம்பாத்தியம்.
  பொறுப்பான குடும்பக் கவனிப்பு.

  நிறம் மாறி வாடுவதாய்
  நிலை மாறாத பூக்காரியிவள்.
  தான் சூடி விரயமாக்காது
  தாரளமாய் கூவிக்கூவி விற்பவள்.

  மன்மதக் கணையாம் பூமாலை.
  புன்னகைத் திரையில் வேதனை.
  மாலைக்குள் விற்றுத் தீராவிடில்
  பாலையாய் வயிறு காயும்.

  மருக்கொழுந்தாள் முல்லைச் சிரிப்பழகி
  தாமரை இதழ் செண்பகமே
  மல்லிகையே சம்பங்கிப் பூவையே (பூக்காரியே)
  தமிழ் பூவின் கதம்பமே!

  வேதா. இலங்காதிலகம்
  டென்மார்க்
  4.6.2016

 7. குடிகார கணவன்
  ஒரு புறம்
  படிக்கும் பிள்ளைகள்
  ஒரு புறம்
  வீட்டு வருமானம்
  போதாத குறை
  ஒருபுறம்
  வறுமையை ஓட்ட
  வகையாய்தேர்ந்தெடுத்த
  வளமான தொழில் இந்த
  தொழிலுக்கு
  மூலதனம் தேவையில்லை
  வேண்டியது உழைப்பே
  லட்சியங்கள் எல்லாம்
  உயிர்பெறுவது
  நடுத்தர வர்க்கத்து
  மக்களால்தான்

  வீடெல்லாம் பூவாசம்
  வறுமைபோக்க
  வீட்டு வேலை முடிந்து
  பூக்கட்டும் வேலை
  தினமும் நூறு ரூபாய்
  தினக்கூலி தீர்ந்திடும்
  தினப்படி கவலை
  ஆனால் பூகட்டும்
  பொன்னமாவின் கவலையெல்லாம்
  பெண்கள் இன்று
  அவிழ்த்த கூந்தலை
  முடித்தால்தானே பூவைக்கமுடியும்
  பூவைப்பது அநாகரீகமாய்
  கருதும் காலமாகிவிட்டது
  பூகட்டி வறுமைதீர்த்தகாலமும்
  போய் விடும் போலிருக்கிறது
  ரிலையன்ஸ் நிறுவனமும்
  பூக்களுக்கு வேர்ஹவுஸ்
  அமைச்சுட்டால் எங்க பிழைப்பிலே
  மண்தான் போங்க

  சரஸ்வதிராசேந்திரன்

 8. மணக்கும் மனக் குளம்.

  உளம் பூக்கும் எண்ணங்கள்
  முளம் அளக்கும் கைவிரலில்
  முளைத்திருக்கும்
  கேட்டு வரம் கொடுப்பதற்கு
  வெண்மலராய்.

  வானத்து நதிகள்
  கானத்து மல்லிகையில்
  கனதியாய் கொட்டின
  மல்லிகையின் மனம் சிரிக்க
  இவள் முகம் விரிக்க
  தூத்துக்குடி முத்துக்கள் கிளையெங்கும்
  கூடையில் சரப் பந்து.

  சுழலும் கைவிரலில்
  சுற்றும் நார்க் கோர்வை
  வளைந்தோடி வந்தன
  வாழையின் தோல் உரித்து.

  பிசு பிசுக்கும்
  ஒரு கையில் திருநெல்வேலி
  மறு கையில் மலர் நிறைத்து
  மனையாளை மடக்குதற்கு
  வருவார் வரிசைகளில்
  தருவார் என
  அவர் வரவுக்காய்.

  வளைந்தாடும் சிற்றலைகள்
  இன்றும்
  இவள் மனக் குளத்தில்
  மல்லிகையாய் மணக்கிறது.

 9. நாளை மறுநாள் திருநாள்.
  மூத்தவளின் பிள்ளை
  பெரிசாகி நாளாச்சு
  முந்தானை நீளமாய் தாவணி.

  நடுவிலி பெத்தது
  முளைக்கு முன்னர் தனக்குமாம்.

  இளையவளின் கடைக்குட்டி
  கேளான் எதுவும்
  நீளக்கை சேட் கட்டைக் களிசான்
  புத்தகம் சுமக்க முதுகுப்பை.

  கட்டம் போட்ட நீலக்கைத்தறி
  அம்மாவுக்கு
  மாமிக்கொரு நல்ல வொயில்
  இயலாமல் படுக்கும் கண்ணாளனுக்கு
  கதர் வேட்டியும் கம்பளியும்.

  நாதன் கடைக்கணக்கு
  சந்திக்கடை பாக்கி
  கிழமைச் சீட்டுக்காசு
  கோயில் உண்டியல்
  இருமல் மருந்தும் தடவும் தயிலமும்.

  கொய்த மல்லிகையை
  குந்தியிருந்து கோர்க்கும் நாருடன்
  வியர்த்த முகத்தில்
  இளையோடும் எண்ணங்கள்
  சரப் பின்னலில்
  நாளைய நம்பிக்கையாய்
  முடிச்சுக்களுடன்.

  களப்பூரான் தங்கா – கனடா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *