கற்றல் ஒரு ஆற்றல் -30
க. பாலசுப்பிரமணியன்
மூளையும் கற்றலும்
ஒலி ஒளி வடிவங்களை வெளி உலகிலிருந்து பெரும் மூளை இவ்வளவு புத்திசாலித்தனமாக வேலை பார்ப்பதற்கு அதனுள் என்னதான் இருக்கிறது என்ற கேள்வி எழுகின்றது. மூளை அறிவியல் நிபுணர்களின் கணக்குப் படி மூளைக்குள் கிட்டத்தட்ட ஒரு ட்ரில்லியன் ( Trillion) ( சுமார் நூறு பில்லியன்) நியூரான்கள் இருக்கின்றன. புரியும் படி சொல்லப்போனால் இந்த பூமியிலே இருக்கின்ற மனிதர்களின் எண்ணிக்கையைப் போல் கிட்டத்தட்ட 166 மடங்கு எண்ணிக்கையில் அவைகள் உள்ளன. ஒரு நொடிக்கு ஒரு நியூரான் என்று எண்ணத் தொடங்கினோமானால், எண்ணிமுடிக்க 3171 ஆண்டுகள் ஆகும் என்று கணக்கிட்டிருக்கின்றனர். என்னே இந்த மூளையின் சக்தி !
ஒரு நாளைக்கு சுமார் ஐந்து லட்சம் நியூரான்கள் அழிந்து கொண்டிருக்கையில் அதே அளவுக்கான நியூரான்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன என்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இந்த நியூரான்கள் ஒன்றோடு ஒன்று இணைத்து ஒரு வலைத்தளத்தையே மூளைக்குள் உருவாக்குகின்றன. இந்த இணைப்புக்கள் தொடர்ந்து உருவாகிக்கொண்டும், விலகிக்கொண்டும், மாறிக்கொண்டும் இருக்கின்றன. எரிக் காண்டல் என்ற ஒரு மூளை நரம்பியல் நிபுணர் இதைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கி கற்றலுக்கும் இந்த வலைத்தள இணைப்புகளுக்கும் இருக்கின்ற தொடர்பைப் பற்றி செய்த ஆராய்ச்சிக்கு அவருக்கு 2000-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
அவர் தன் ஆராய்ச்சியின் மூலமாக எவ்வாறு மூலையிலுள்ள வலைத்தளங்கள் சிறிய செயல்களின் போதும் கற்றலின் போதும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்பதை விளக்கினார். இந்த ஆராய்ச்சி கற்றலைப் பற்றிய பல பரிமாணங்களை விளக்கவும் மாற்றி அமைக்கவும் உதவியது.
இந்த நியூரான்களில் ஊக்குவிக்கும் நியூரான்கள் (Excitory neurons ) என்றும் நிறுத்துகின்ற (சமநிலைப்படுத்தும்) நியூரான்கள் (Inhibitory neurons) என்றும் இரண்டு வகை உண்டு. முதல் வகை சிந்தனைகளை ஊக்கிவிக்கவும், கற்றலை மேம்படுத்தவும், கற்றலை உணர்வுகளுடன் ஒன்றுபடுத்தவும் செயல்படுகின்றன. இரண்டாவது வகை உணர்வுகளைக் கட்டுப்படுத்தவும் அமைதியை காக்கவும் நிலைப்படுத்தவும் உதவுகின்றன. ஒரு மனிதனின் மூளையில் இப்படிப்பட்ட நியூரான்கள் வளம், செயல்பாடுகள், வேகம் போன்ற பல நிகழ்வுகளால் கற்றல் என்ற செயல் பாதிக்கப்படுகின்றது. ஆகவே கற்றலைப் பொருத்தவரை எந்த இரண்டு மனிதர்களின் நிலையையோ அல்லது முறைகளையோ, கற்றலின் வழிகளையோ அல்லது கற்றல் வளத்தையோ ஒப்பிடுதல் அறிவுபூர்வமான செயல் அல்ல.
கற்றலின் முறைகளிலும் வெளிப்பாடுகளிலும் தாக்கம் ஏற்படுத்தும் முக்கிய இரண்டு உள்ளீடுகளாக மரபணுக்களையும் (genes) மற்றும் சூழ்நிலைகளையும்(Environment) முன்னிலை வைக்கின்றனர். ஆனால் சூழ்நிலைகளால் மரபணுக்கள் ஏற்படுத்தும் தாக்கங்களை பெரிதளவும் மாற்றி அமைக்க முடியும் என்றும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஆகவே கற்றல் சிறப்பாக நடக்க நல்ல சூழ்நிலைகள் மிகவும் அவசியமானவை. அப்பொழுதான் மூளையில் கற்றலின் காரணமாக ஏற்படும் நியூட்ரான் வலைத்தளங்கள் மேன்மையாகவும் உறுதியாகவும் இருக்க வாய்ப்புள்ளது.
பல்லாண்டுகளுக்கு முன்னாள் “இளமையில் கல்” என்ற முதுமொழிக்கேற்ப கற்றலின் திறன் வயதுடன் குறைகின்ற வாய்ப்பினை விளக்கியிருந்தனர்.
தற்போதைய ஆராய்ச்சியில் மூளையின் தொடர் உருமாற்றங்கள் (Neural Plasticity) காரணமாக “வாழ்க்கை முழுதும் கற்றல்” (Life Long Learning) என்ற கருத்தை முன்வைத்து வருகின்றனர்.
எவ்வளவுக்கெவ்வளவு மூளைக்கு நாம் வேலைகொடுக்கிறோமோ அந்த அளவுக்கு அதன் ஆற்றல் தொடர்ந்து இருப்பது மட்டுமின்றி வளர்ந்தும் வருகிறது. அதனால் தான் கவிஞரின் பாட்டு “கத்தியைத் தீட்டாதே, உந்தன் புத்தியைத் தீட்டு” என்ற பாடலின் கருத்தின் சிறப்பு தெரிய வருகின்றது.
மருத்துவ வல்லுனர்கள் முதுமை அடைந்தவர்களிடமும் மூளைக்கு ஏதாவது வேலை கொடுத்துக்கொண்டு இருக்க வேண்டும் என்று வற்புறுத்துகின்றனர். விளையாட்டாக ஒரு மனநல மருத்துவர் கூறுகின்றார் “உங்களுக்கு எழுபது வயதாகிவிட்டதா? உங்களிடம் அதிக நேரம் உள்ளதா? வேறு ஏதாவது மொழி கற்றுக்கொள்ளுங்களேன். உங்களுக்கு தொண்ணுறு வயதாகி விட்டதா? கைகால்களை நன்றாக அசைக்க முடிகின்றதா? கொஞ்சம் வயலின் கற்றுக்கொள்ளுங்களேன்”
மூளையை தொடர்ந்து நாம் உபயோகித்து வந்தால் மூளையைச் சார்ந்த பல வியாதிகளிலிருந்து நாம் தப்ப முடியும் என்று அறிவுறுத்துகின்றனர்.
கற்றல் – பிறக்கும் பொழுதிலிருந்து கடைசி மூச்சு உள்ளவரை நடக்கும் ஒரு ஆக்கபூர்வமான செயல்!!
(தொடரும்)
கற்றவர் சபையில் உனக்காக தனி இடமும் தர வேண்டும்
உன் கண்ணில் ஒரு துளி நீர் வந்தாலும் உலகம் அழ வேண்டும்
என்ற கவிஞர் வாலியின் திரைப்பாடல் வரிகள் என் நினைவுக்கு வருகிறது. கற்றோர்க்கு சென்ற இடமில்லாம் சிறப்பு.. மனித மூளையை பற்றி நன்றாக விளக்கமளித்த நண்பர் பாலசுப்ரமணியனுக்கு எனது பாராட்டுக்கள். வாழ்க்கை முழுதும் கற்க வேண்டும்.