Month: April 2016

  • ‘கைத்தறிக் காவலர்’ மு.ப. நாச்சிமுத்து!

    பவள சங்கரி

    எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
    திண்ணிய ராகப் பெறின்.

    a09192c1-2a27-4dd7-94a9-f23a7e79b832

    VISIONARIES DUP‘கைத்தறிக்காவலர்’ என்று அன்போடு அழைக்கப்பெறும், பத்மஸ்ரீ. மு.ப. நாச்சிமுத்து அவர்களின் 103 வது பிறந்தநாள் விழா மற்றும் எம்.பி.என். நினைவு தபால்தலை வெளியீட்டு விழா ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதி (2016) சென்டெக்சு, சென்னிமலை நெசவாளர் கூட்டுறவுச் சங்க வளாகத்தில், எம்.பி.என். பொறியியற் கல்லூரியின் தலைவர் உயர்திரு தங்க.விசுவநாதன் அவர்கள் தலைமையில், ஏனைய அறிஞர் பெருமக்களின் முன்னிலையில் சிறப்பாக நடந்தேறியது. சென்னிமலை என்றால் கொடிகாத்த குமரன் பெயர் நினைவுக்கு வருவதுபோல கைத்தறியும், எம்.பி.என். என்ற பெயரும் உடன் நினைவிற்கு வருவது இயற்கை. ஆம் கைத்தறி உலகில் தனக்கென்றொரு தனியிடத்தை சென்னிமலை பெறுவதற்கு முழுமுதல் காரணமாக இருந்தவர் “எம்.பி.என்.’ என, அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் மு.ப. நாச்சிமுத்து அவர்கள்தான். 28.04.1913 அன்று சென்னிமலையில் மு. பழனியப்பன் – சடையம்மாள் தம்பதியருக்கு அன்பு மகனாகப் பிறந்தவர் இவர். சட்டம் பயின்று 4 ஆண்டுகள் வழிக்கறிஞராகப் பணியாற்றினாலும், கைத்தறித் தொழிலில் நலிவுற்றிருந்த நெசவாளர்களின் துயர் கண்டு மனம் வருந்தி அவர்களை கூட்டுறவு அமைப்பில் கொண்டுவர அரும்பாடுபட்டதன் விளைவாக 1941ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ஆம் தேதி சென்னிமலை நெசவாளர் சங்கம் பதிவு செய்யப்பட்டு அதே மாதம் 14ஆம் நாள் முதல் வெற்றிகரமாக இயங்கவும் ஆரம்பித்துள்ளது. இச்சங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்ற மு.ப. நாச்சிமுத்து அவர்கள் 46 ஆண்டுகள் நெசவுத் தொழில் மேன்மையுறவும், நெசவாளர்கள் நல்வாழ்வு பெறவும் பெரும்பணியாற்றினார். கைத்தறித் துறைக்கு இவர் ஆற்றிய தன்னலமற்ற அரிய சேவையைப் பாராட்டி 1983 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. 1952 முதல் 1969 வரையிலான 17 ஆண்டுகள் கோ-ஆப்டெக்சு தலைவராகவும், 1953 முதல் 1985 வரை 32 ஆண்டுகள் அகில இந்திய கைத்தறி வாரியத்தின் உறுப்பினராகவும் தொண்டாற்றியதோடு, வெளிநாடுகளுக்குச் சென்ற கைத்தறிக் குழுக்களிலும் இடம் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. வறுமைக்கோட்டுக்கு கீழ் அல்லலுற்று, தனியாரிடம் தறித்தொழிலில் சிக்கிக்கிடந்த நெசவாளர்களை, கூட்டுறவு அமைப்பின் கீழே கொண்டு வருவதில் பெரும்பணியாற்றியவர் இவர் என்பது மறுக்கமுடியாத உண்மை. தன்னலமற்ற இவருடைய சேவையைப் பாராட்டி, 1982 இல், “தமிழகத்தின் தலைசிறந்த கூட்டுறவுத் தலைவர்’ என்ற விருதை தமிழக அரசு வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.

    bcf48538-2d7f-47c3-94a6-6ac25a18d3c8

    இவை மட்டுமன்றி இந்தியன் வங்கி இயக்குநர், ரிசர்வு வங்கி ஆலோசகர், பல்வேறு பள்ளிகள், கல்லூரிகள் நிர்வாகத்தில் பங்கேற்பு என பல பதவிகளை செவ்வனே வகித்தவர் இவர். அனைத்து நெசவாளர் சகோதரர்களின் உள்ளத்திலும் நீங்கா இடம் பெற்றவர் மேன்மைமிகு மு.ப. நாச்சிமுத்து என்றால் அது மிகையாகாது! கைத்தறிக்காவலர், பண்பாளர், ஆன்மீகச் சிந்தனையாளர், தேசியவாதி, சமுதாயச் சிற்பி, தீர்க்கதரிசி, தன்னேரில்லாத் தலைவர் என்று நெசவாளர்களும், கவிஞர்களும் இன்றும் அவரை பலவாறு போற்றி மகிழ்கின்றனர்.

    நெசவு நம் தேசத்தின் பழமையான தொழில். ஆடைகளின் அவசியத்தையும், அதன் நேர்த்தியையும் உலகிற்கு எடுத்துச் சொன்னவர்கள் நம் மூதாதையர்கள் என்றால் அது மிகையாகாது! நெசவுத்தொழில் என்பது நமது தேசியத்தின் உயிர்நாடி எனலாம். தமிழகத்தைப் பொறுத்தவரை விவசாயத்திற்கு அடுத்தபடியாக கைத்தறி நெசவுத் தொழில்தான் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால் தற்போது அத்தொழில் பல இன்னல்களுக்கிடையேத் திணறும் தொழிலாகிவிட்டது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் மக்களின் வாழ்வாதாரமாக இருப்பது கைத்தறி நெசவுத் தொழில்தான். சேலம், ஈரோடு, கரூர் போன்ற நகரங்கள் கைத்தறி நெசவுக்கும் அதைச்சார்ந்த வாணிபத்திற்கும் புகழ் பெற்றவை. ஆண்டிப்பட்டி, எட்டயபுரம், பரமக்குடி அருகே உள்ள எமனேசுவரம், திருவில்லிப்புத்தூர், நெகமம், சிறுமுகை, ஆலாங்கொம்பு, புஞ்சை புளியம்பட்டி, தொட்டம்பாளையம் ஆகிய ஊர்களும் கைத்தறி நெசவுக்கு புகழ் பெற்றவையாகும். இவ்வூர்களிலிருந்து பல விதமான ஆடைகள் வட மாநிலங்களுக்கும், தென் மாநிலங்களுக்கும் மட்டுமன்றி உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பெண்கள் பெருமளவில் இத்தொழிலில் ஈடுபட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஈரோடு நகரிலிருந்து பெரும்பாலும் துண்டுகள், படுக்கை விரிப்புகள், கைலிகள் போன்றவை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. நெசவாளர்கள் நூல் கொள்முதல், கடன் வசதி, உற்பத்தியைச் சந்தைப்படுத்துதல் என பல்வேறு நிலைகளில் இன்னல்களை எதிர்கொள்ளும்போதிலும் கைத்தறித்துறை குறிப்பிட்ட அளவு வளர்ச்சியைப் பெற்றுள்ளது என்றே பெருமைப்பட முடிகிறது. கடந்த சில ஆண்டுகளில் கைத்தறி ஆடைகளின் தேவை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளதும் நிதர்சனம்.

    தனக்கென வாழா தவநெறியர், நெசவாளர் சமூகத்தையே தம் குடும்பமாக எண்ணி அவர்தம் நலனுக்காக அல்லும், பகலும் அரும்பாடுபட்டவர் அவர்தம் உள்ளங்களில் நித்தியமாய் வாழும் வள்ளல் அமரர் எம்.பி.என். அவர்களின் பிறந்த நாளில் சென்னிமலை எம்.பி.என்.நகர் சமய இலக்கியப் பேரவை ‘கவிபாடும் தறி நாடா’ என்ற அருமையானதொரு வாழ்த்துப்பா நூலை வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள். பல்வேறு கவிஞர்களின் அழகிய பாக்கள் நூலுக்கு வளம் சேர்க்கின்றன.

    13102699_1024824607606164_368687633183519909_n

    அரசியல் கட்சிகள் பாகுபாடின்றி அனைத்துக் கட்சியினரும் எம்.பி.என். அவர்களின் சொல்லுக்கு மதிப்பளித்ததோடு அவருடைய செயல்பாடுகளுக்கு பலவகையில் ஒத்துழைப்பும் அளித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு முறை கைத்தறித் துணிகளுக்கு சலுகை அளிப்பது குறித்த பேச்சு எழுந்தபோது, ஐ.ஏ.எசு. உயரதிகாரி ஒருவர் இந்த கைத்தறி துணிகளுக்கு எவ்வளவு காலத்திற்குத்தான் சலுகை கொடுப்பது என்று சலித்துக்கொண்டு கோபமாகக் கேட்டாராம். அப்போது எம்.பி.என். அவர்கள் “ஒரு மனிதன் எத்தனை நாட்களுக்குத்தான் சாப்பிடுவான்” என்று கேட்டாராம். இந்த வினாவின் ஆழ்ந்த நுட்பமான பொருளறிந்து அந்த அதிகாரி பதில் ஏதும் பேச முடியாமல் அமைதியாக இருந்துவிட்டாராம். அதாவது ஒருவர் உயிருள்ள வரை வயிற்றுக்கு உணவு தேவைப்படுவதுபோல கைத்தறி ஆடைகள் நெய்யும் வரை சலுகை கொடுக்க வேண்டும் என்ற பொருளில் அவர் பேச்சு இருந்திருக்கிறது.

    கைத்தறி நெசவாளர்களின் அவல நிலையை விளக்கும் ஒரு கவிதை….
    அ.சீனிவாசன், பொது மேலாளர் (ஓய்வு), சென்னிமலை நகர கூட்டுறவு வங்கி, சென்னிமலை.

    முகாரி பாடிய கூட்டுறவை
    ஆனந்த பைரவியாக்கிய அற்புதர்;
    கூட்டுறவுக்கே அகராதியானவர்!

    பாவடிகள் அன்று …..
    பாவடியில் தோய்த்தெடுக்கக்
    கஞ்சித் தொட்டிகள்
    சலசலக்கும் முகாரியாய்!
    தறியோசையே சுப்ரபாதம்
    நாடாவின் ஓட்டமே
    நாடிநரம்புகளின் அதிர்வாகும்!
    பழைய சோறே பஞ்சாமிர்தம்
    நீராகாரமே நித்தியவாசம்
    பாவோடும் நூலோடும்
    நித்தமும் வறுமைவாசம்
    இறைவனே இருக்கின்றாயா நீ என
    ஏங்கித் தவித்தன
    அகிலத்தோர் மானங்காக்கும்
    நெசவாளர் நெஞ்சங்கள்.

    சோகத்தோடும் விழிநீரோடும்
    சென்னிமலையின் தவமோ
    மேதினியின் யாகங்களோ
    கைத்தறிக்கு வாழ்வுதர
    நெசவாளர்களுக்கு விடியலாக
    சுழன்றோடும் இராட்டையாக
    அகிலத்தில் அவதாரமானார்
    நல்முத்து நாச்சிமுத்து.
    மலர்ந்தார், வாழ்ந்தார்,
    வாழ்ந்து கொண்டே
    சிரகிரியின் சுவாசமாய்
    சென்னிமலையின் கவசமாய்
    உலகின் புருவமெல்லாம்
    வியந்து நோக்கிடும்
    புதுமைதனைச் செய்திட்ட
    கூட்டுறவுத் தந்தை
    ஒரு தீர்க்கதரிசி.

    புலவர் ஆ.தண்டபாணி

    வானவில்லின் வடிவத்தைக் கையால் வரையாமல்
    காலால் வரைந்திட்ட கலைஞன் நெசவாளி
    கானகத்துப் பறவைகளின் கனிவான இசையமுதை
    காலடி ஓசையிலே காணுபவன் நெசவாளி
    வானத்துத் தேவர்களும் வந்துவந்து காணுகிற
    வகையான நூற்கலையை வடிப்பவன் நெசவாளி
    ஊணமுது இல்லாமல் உறங்குகிற வேளையிலும்
    உலகத்தார் நலம்காக்க உதவுபவன் நெசவாளி
    நெசவாளி வாழ்க்கையிலே நிலைத்துவிட்ட
    நிரந்தர வறுமை தனைஓட வைத்தார்
    வசையில்லா வாழ்க்கையிலே வகையாய் வாழ
    வழக்கறிஞர் தொழில்விடுத்து வந்தார் இங்கே
    அசைபொடும் விலங்காக வாழ்ந்த மக்கள்
    ஆனந்த வாழ்வு பெறவழி அமைத்தார்
    இசையோடும் நாடாவை இழையோடு ஓடவைத்த
    இவர்தானே நம்வாழ்வின் கலங்கரை விளக்கு.

    தன்னுடைய 21 ஆம் அகவையிலிருந்து எம்.பி.என். அவர்களின் இறுதிக்காலம் வரை அவருடைய தொடர்பில் இருந்த திரு ஜெகதீசன் அவர்களின் வாழ்த்துப்பா…

    சென்னிமலை
    தன் சிகரத்தின் மகுடத்தில்
    பதித்துக்கொண்ட
    நல்முத்து
    எம்.பி.என்.நாச்சிமுத்து!

    இவருக்கு
    கண்கள் இரண்டும்
    கைத்தறியும்
    கூட்டுறவும்!

    கையில் பிடித்த
    கைத்தடியோ
    நெசவாளியின்
    வாழ்வை உயர்த்த
    சபதமேற்ற ஊன்றுகோல்!

    அவர்
    எடுத்துவைத்த
    ஒவ்வொரு அடியும்
    கைத்தறியின் எதிர்காலத்தை
    எண்ணி வைத்த அடிகள்!

    பதவி ஒரு மேல்துண்டு
    இவர் வகித்த பதவிகளால்
    பதவிகளே பெருமையடைந்தன!

    வினாக்குறியாய் வளைந்த
    நெசவாளியின் வாழ்வு
    கொடிமரமாய் நிமிரும்
    நாள் வாராதா?
    என வாதாடிய வழக்கறிஞரே!

    தறிநாடா ஓசை
    நீங்கள் விரும்பிய இசை!
    நெசவாளியின் கைகால் அசைவே
    நீங்கள் ரசித்த நடனம்!

    சென்னிமலையை
    கூட்டுறவாளர்களின்
    வேடந்தாங்களாக்கிய
    கைத்தறியின்
    கற்பக விருட்சமே!

    உங்கள் பாதம்படாத
    நெசவாளர் வாழும் ஊர்
    தமிழகத்தில் இல்லை!
    நீங்கள் அறியாத
    நெசவாளர் பிரச்சனை
    இந்தியாவில் இருந்ததில்லை!

    இந்திய வரைபடக் கோடுகளில்
    சென்னிமலைக்கு சிவப்புக்கம்பளம்
    விரித்துக் கொடுத்த
    கைத்தறியின் தந்தையே!
    நெசவாளர் துயர் துடைக்க
    இன்னும் ஒரு முறை
    இம்மண்ணில் பிறந்து வாரீரோ!

    நெசவாளர்க்கு பயன் தரும்
    மருந்து மரமாய்
    நிமிர்ந்து நிற்கும்
    சென்டெக்ஸ் நிறுவனமே!
    எம்.பி.என். புகழை என்றும்
    இன்றுபோல் பேச
    சிரகிரி முருகன் போல்
    இளமையாய் வாழ்க! வளர்க!

    இவ்வாறு நெசவாளர் வாழ்வில் ஒளிவிளக்காகத் திகழ்ந்த மு.ப.நாச்சிமுத்து அவர்கள் 27.06.1987 இல் அமரர் ஆனாலும், இன்றும் நெசவாளர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கிறார் என்பதற்கு இவ்விழாவே சாட்சி!

    Share
  • காடும் நாடும்

    மீ.விசுவநாதன்

    DSC_03951-1024x777

    காட்டுக் குள்ளே நடக்கின்றேன் – எழில்
    கண்டு நானும் களிக்கின்றேன்
    கூட்டுக் குடும்ப களிறுகளின் – நல்ல
    துணிவும் உறவும் ரசிக்கின்றேன் !

    குருவி, மைனா, பருந்துகளும் – கிளி,
    கோட்டான், கொக்கும் அழகென்றேன் !
    உருவிப் பறக்கும் காக்கையுடன் – குயில்
    உருகிப் பாடும் ஒலிகேட்டேன் !

    சருகுக் குள்ளே பாம்புடனே -தவளை
    சறுக்கித் துள்ளிப் போகிறது !
    கருகு மணிபோல் ஒருவண்டு – என்
    காத ருகிலே பாய்கிறது !

    மானும் புலியும் நீரருந்த – அந்த
    மதகுப் பக்கம் வருகிறது !
    தானும் இன்று இரையாவேன் – என்ற
    தவிப்பில் மானும் விரைகிறது !

    காட்டை ரசிக்கும் என்னாலே – ஏன்
    நாட்டை ரசிக்க முடியவில்லை !
    காட்டில் இருக்கும் ஒழுங்குமுறை – ஏன்
    நாட்டு மனிதர் பழகவில்லை !

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    ”கண்ணன் காப்பு”….
    —————————

    கஷ்டம் கலைந்திடும் நஷ்டம் நகர்ந்திடும்
    இஷ்டம் நமக்கு இணங்கிடும் – அஷ்டமி
    ரோகினியில் தோன்றிய லேகிய வண்ணனை
    ஏகிட எல்லாம் எளிது….(0)

    fe493d23-2691-47ca-b802-10771e01bf62
    தீக்குளிட்டு பாரதி தீண்டிய தெய்வத்தை
    வாக்கிலெட்டா கண்ணனை வாழ்த்துவோம்-பூக்களிட்டு
    அப்பம் அதிரசம் முப்பழங்கள் வைத்தாலும்
    அப்பயலுக்(கு) அன்பே அமுது (or) அறம்….(1)

    மாதவனை கேசவனை மாலொழிய வந்தவனை
    ஆதவனை ஆயர் அணிவிளக்கை -யாதவனை
    ரோகினி அஷ்டமியாய் ஆகிய கீதையை
    தாகிநீ தேஹியென்றோ தி….(2)

     
    நடுநிசியில் ரோகினி நட்ஷத் திரத்தில்
    கொடுஞ்சிறையில் தோன்றிய கண்ணா-முடிமிசையில்
    அப்பன் சுமந்திட ஆயர்தம் கோகுல
    குப்பம் நுழைந்தவனே காப்பு….(3)

    கட்டு மயிற்பீலி கொண்டை யிலணிந்து
    பட்டுப்பீ தாம்பரம் பூண்டாவை -வெட்ட
    வெளிதனில் மேய்க்க வேய்ங்குழல் ஊதும்
    களிமிகு கண்ணனே காப்பு….(4)

    பொன்னிற வண்ணப் புழுதி எழுந்துயர்
    விண்ணவர் கண்ணில் விழுந்திட -செந்நிற
    சாயங்கா லத்தில் சகாக்களுடன் வீடேகும்
    காயாம்பூ வண்ணனே காப்பு….(5)

    காளியன் குட்டையில் மூளியாய் மூழ்கஅவன்
    தோளினில் ஆடிய தெய்வமே -காளியின்
    அண்ணனே கைமாறி ஆயர் குலம்புகுந்த
    கண்ணனே வேண்டினேன் காப்பு….(6)

    பூதனை மார்பை புசித்தவள் ஆவியை
    வேதனை இன்றி விரட்டியவா -தீதினை
    ஓட்டவும் தர்மம் உயரவும் பாண்டவ
    கூட்டம் பிணைந்தவா காப்பு….(7)

    தாய்க்குப் பணிந்தன்று தாம்பில் புகுந்துமரம்
    சாய்க்க உரலிழுத்த சாகஸா – வாய்க்குள்
    மாதா மகிழ மகோன்னதம் காட்டிய
    கீதா உபதேசா காப்பு….(8)

    எதுரா எதுராவென எங்கெங்கோ தேடும்
    புதிராம் புவிவாழ்வு போதும் – மதுரா
    நகரொளிந்த தெய்வம் நவனீதக் கண்ணன்
    சுகமளிக்கும் செல்வச் செழிப்பு….(9)

    தீரன் யமுனா தரங்கக் கரையோரன்
    சேரும் இளமாதர் ஜீவான்ம -சோரன்
    அழகில் சுகுமாறன் அன்பில் உபகாரன்
    கழுகில் வரும்நேரம் காப்பு….(10)

    குவலயா பீடத்தின் கொம்பொசித்துக் கம்சன்
    கவலையால் பீடிக்கக் கொன்றோன் – அவலையா
    தந்தாய் எடுத்துக்கொள் தோழாயென் செல்வத்தால்
    கந்தையைக் கட்டென்றான் காப்பு….(11)

    கூவும் கஜேந்திரனை காத்த புஜேந்திரா
    ஏவிய சக்கரத்தை ஏந்தியவா -காவிய
    பாகவதக் கண்ணா பரந்தாமா நாரணா
    காகவத காகுத்தா காப்பு….(12)

    ஆலில் மிதந்தவா ஆழ்வார்கள் பாசுர
    நூலில் நிறைந்தவா நந்தலாலா -தோளில்
    திருத்துழாய் பூண்ட திருவோணத் தானே
    கருத்தில் கலந்துவளைக் காப்பு….(13)

    உதித்தவா நேற்று மிதித்தவா இன்று
    நதிக்கரை நந்தகோபன் நாட்டை -எதிர்த்ததாய்
    மாமா அனுப்பிய மல்லர் களையன்று
    கோமாளி ஆக்கியவா காப்பு….(14)

     
    கோலத்தால் காலிட்டு கைகூப்பி கும்பிட்டு
    ஞாலத்தை உண்டுமிழ்ந்த நாதனுக்காய் -தாலத்தில்
    பக்ஷணத்தை ஏந்திநின்றால் பக்தராதைக்(கு) ஈடாக
    தக்ஷிணையாய் கேட்டான் தபஸ்….(15)

    கால்கள் பலநூறு கண்டேனென் வாசலில்
    வால்கள் புடைசூழ வந்தமுகுந்தன்-நூல்போல்
    அணிவகுப்பாய் சென்று அடுக்களை உள்ளில்
    விநியோகம் செய்தான் விருந்து….(16)

    பலராமன் தம்பி, பனிநாளில் பீச்சை
    வலமாக வந்ததில் வைரஸ் -ஜலதோஷம்
    நாசியில் கொட்டும் நயகரா வீழ்ச்சியாய்
    க்ரேஸிக்கு தேவையுன் காப்பு….(17)

    உறியிழுத்தாய் பின்னர் உரலிழுத்தாய் பின்னர்
    மரமிழுத்தாய் பின்னர் மதகில் – அரவிழுத்தாய்
    பின்னர் நகிலிழுத்தாய் பெண்கள் துகிலிழுத்தாய்
    கண்ணா எனையிழுப்பாய் காப்பு….(18)

     
    கண்ணே கனியமுதே கற்கண்டே கார்முகிலே
    என்னே பெயர்வைத்து ஏத்தினாலும் -அண்ணே!
    டபாய்த்திடுவான் கண்ணன் உபாயமொன்று கேளாய்
    அபாயமென்பாய் உண்டே (அ)பயம்….(19)

    சகடா சுரனை சுமந்தா காய
    முகடில் முறித்த முகுந்தா -பகடையில்
    தோற்றவர்க்காய் தேரேறி நூற்றவர் மாய்ந்திட
    கூற்றவனாய் நின்றவனே காப்பு….(20)

    கோடி குருமார்கள் கூறிய வேதாந்தம்
    தேடிப் படித்தும் திருப்தியில்லை -நாடியில்
    ஏதோ அதிருப்தி என்னென்று சொல்வது
    கீதோ பதேசகா காப்பு….(21)

    தரையில் புரளபீ தாம்பர ஆடை
    சுருளும் முடிநுதல் சாய -முரளி
    மனோகரா வந்துன் மதிவதனம் காட்டு
    கனாவரும் நேரத்தில் காப்பு….(22)

    கன்னத்தில் அன்னையிட்ட கண்மை திருஷ்டியது
    வண்ணக் கருமையில் வாடிட -எண்ணற்ற
    இம்சைக்(கு) இடமாகி இன்னல் கடந்தோனே
    கம்சன் மருகோனே காப்பு….(23)

    வையங்கள் ஏழை வயிறார உண்டும்
    ஐயம் மிகக்கொண்டு அய்யனே -கையால்
    பிடித்துக் கமல பதத்தை அன்று
    கடித்துக் களித்தவனே காப்பு….(24)

    நான்மறை ஓதிடும் நான்முகன் வாழ்ந்திடும்
    தாமரை நாபியும், பூமகள் -போய்மறையும்
    சந்தனம், ஸ்ரீவத்ஸம், சாற்றும் திருத்துழாய்யு
    கந்திடும் திண்மார்பும் காப்பு….(25)

    மோதகப் பிள்ளை முழுங்க, பதைபதைத்து
    பீதகப் பட்டாடை பாழாக -காதினை
    கைகளால் பற்றி கரணமிட்(டு) ஆழியை
    கொய்தகோ பாலனே காப்பு….(26)

    தேர்கடவி பாரதப் போர்முடிக்க பார்த்தனின்
    சீர்கெடலை கீதையால் செப்பனிட்டோய் -மோர்குடத்தை
    கல்லால் உடைத்தன்று கோபியர் கோபத்திற்க்
    குள்ளான கண்ணனே காப்பு….(27)

    சாக்கிரதை யாக சகாக்களுடன் சென்றாயர்
    தூக்கிலிட்ட வெண்ணை திருடியுண்ட -போக்கிரிப்
    பையனே பேய்மழைக்குப் பர்வதம் தாங்கியக்
    கையனே கண்ணனே காப்பு….(28)….கிரேசி மோகன்….

    Share
  • சங்ககால ஔவையாரும்  கம்பனும்

    –புலவர் இரா. இராமமூர்த்தி

    தமிழின் தொன்மையையும், பெருமையையும் உலகிற்கு உணர்த்தும் ஆதாரங்களுள்  சங்க இலக்கியங்கள் முதலிடத்தைப்பிடிக்கின்றன!    இந்தச் சங்க இலக்கியங்கள்,  பத்துப்பாட்டு, எட்டுத்தொகை  என்ற இருவகைகளிலும், சங்கம்  மருவிய நூல்கள்,  பதினெண் கீழ்க்கணக்கு என்ற வகையிலும் பகுக்கப் பெற்றன. எட்டுத்தொகை நூல்களில், ஔவையார் இயற்றிய  59  பாடல்கள் இடம் பெற்றுள்ளன. பிற்காலப் புலவர்கள் பலரும் சங்க இலக்கியங்களில் தாம்பெற்ற பயிற்சியைத்  தாமியற்றிய  நூல்களில் நாமறியும் வகையில் புலப்படுத்தி  விடுகின்றனர். வள்ளுவரின் திருக்குறளையும், அதன் கருத்துக்களையும் எடுத்தாளுவதை  ஒரு தனித்தகுதியாகக் கருதிய புலவர் பலர் அவ்வாறே தம் நூல்களை எழுதியுள்ளனர். அவ்வகையில் கம்பர் தம் இராமாயணத்தில் முன்னோர் மொழிந்த  சொல், பொருள் ஆகியவற்றைப் போற்றித் தம் பாடல்களில் அமைத்து விடுவார்.  சங்க இலக்கியங்களில் சிறந்த புலமைபெற்ற கம்பர் தம் ‘இராமகாதை’யில் பல பாடல்களைச்  சங்க இலக்கியங்களின்  சாயலில் படைத்து அவற்றைக் கம்பராமாயணத்தில்  ஒளிவீசித் திகழ வைத்தார்!

    அவ்வையார் பாடிய பாடல்கள் சங்க இலக்கியங்களில் குறுந்தொகையில் 15, நற்றிணையில் 7, அகநானூற்றில் 4,புறநானூற்றில் 33 என்ற எண்ணிக்கையில்  அமைந்துள்ளன.  தம்மை அன்புடன் ஏற்றுக்கொண்டு,  நெடுங்காலம்  தம்  அரசவையிலேயே ஔவையாரை  அமர்த்தி அவர் புலமையை மதித்தவன் அதியமான் நெடுமான் அஞ்சி ஆவான். அவர் சற்றுச் சினத்துடன் முதலில் பாடிய பாடலில் ”எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே!” என்று பாடியதைக் கேட்டு அவர் சினத்தை ஆற்றும் வகையில் பேரன்பு காட்டி, அவரது நைந்துபோன பாசிச்செடியின் வேர் போன்று நூல்நூலாகத் தொங்கும் மண்தின்ற ஆடையை நீக்கி,  நுண்மையான நூலால்  நெய்யப்பெற்ற கெட்டிக் கரையை உடைய பட்டாடையை அணிவித்தான்.   உடனே தேள் கொட்டியது போன்று சுவைக்கும்  பழைய  கள்ளினைப் பொற் கிண்ணத்தில்  நிரப்பிப்  பருகத் தந்தான். பின்னர் முறைப்படி உணவு வகைகளைப் படைத்தான்.

    avayarஇந்தப்பாடலில்  ஔவையார், “மரம் தேடிக் காட்டுக்குச் செல்லுகின்ற தச்சன், நல்ல கருவிகளுடன் உடன்வரும் திறமைபெற்ற பணியாளர்களுடன் சென்றால் அவனுக்கு எல்லாவகை  மரங்களும் கிட்டும். அதுபோல  நாங்கள் உலகின் எத்திசை நோக்கிச் சென்றாலும்சோறு கிட்டும்! ” என்று  பாடியதன் பொருளைக் கற்றறிந்து கொண்ட கம்பன்,   தம் மைந்தன் காரணமாகத்  தன்னை  இகழ்ந்த   சோழ மன்னன் மேல் சினங்கொண்டு அவன் நாட்டை விட்டு நீங்கும் போது,

    மன்னவனும்   நீயோ?  வளநாடும்   நின்னதோ?
    உன்னையறிந்  தோதமிழை  ஓதினேன்? – என்னை
    விரைந்தேற்றுக்  கொள்ளாத  வேந்துண்டோ;  உண்டோ
    குரங்கேற்றுக்  கொள்ளாத  கொம்பு!

    என்று பாடினார்.   இது கம்பனுக்கு ஔவையார் தந்த தன்னம்பிக்கை ஆகும்.   இவ்வாறு கம்பனுக்கு நல்லுணர்ச்சி நல்கிய ஔவையாரின் பாடல்கள் மேலு சில உள்ளன.

    ஔவையார் பாடிய அகநானூற்றுப் பாடல் ஒன்றில், ”தன்னை விட்டு நீங்கி, பொருள் தேடிச்சென்ற காதலர் வரவேண்டிய காலம் கடந்த பின்னும் வாராமையால்,   காதலியின் மேனியில் சிறு முளை போன்ற பசலை நோய் தோன்றியது.  பிரிவுத் துன்பத்தால் மிக வாடிய நெஞ்சத்தில் படர்ந்தது. அதனைக் கண்ட  ஊரார் மெல்ல மெல்லத்  தமக்குள் இக்காதலைப் பற்றிப் பேசினர். அம்பல் என்ற வதந்திக் கிளைகள் பரவின. பின்னர், குறையாத காதலால் தளிர்கள் நிறைந்தன. நிலமெங்கும் நிழல் பரப்பிய மரமாய்  வளர்ந்தது! ” என்ற பொருளில்,

    தலை வரம்பறியாத் தகைவரல்  வாடையொடு
    முலையிடைத்  தோன்றிய  நோய் வளர் இளமுளை
    அசைவுடை  நெஞ்சத்து  உயவுத்திறன் நீடி
    ஊரோர்  எடுத்த  அம்பல்  அம்சினை
    ஆராக்  காதல்  அவிர்தளிர்   பரப்பி,
    புலவர் புகழ்ந்த  நாணில் பெருமரம்
    நிலவரை  எல்லாம்   நிழற்றி
    அலர்அரும்பு  ஊழ்ப்பவும் வாரா  தோரே!”

    என்று பாடுகிறார். இப்பாடலில் விதை, முளை, சிறுகிளை, தளிர்கள், பெருமரம் என்ற முழுவளர்ச்சியும் முற்றுருவகமாக அமைந்துள்ளது.

    இவ்வாறு ஒரு முழுமரம் உயர்ந்து கனியும்  பழுத்த வகையைக் கம்பர் ஔவையாரின் வழியில் பாடுகிறார். அது,

    ஏகம்  முதல் கல்வி முளைத்தெழுந்து, எண்ணில்  கேள்வி
    ஆகும்  முதல்  திண்பணை  போக்கி, அருந்  தவத்தின்
    சாகம்  தழைத்து  அன்பு அரும்பி,  தருமம்  மலர்ந்து,
    போகம்  கனி ஓன்று பழுத்தது  போலும் அன்றே!”

    என்ற பாடலாகும்.   கல்வியாகிய விதை, கேள்வியாகிய அடிமரம், தவமாகிய இலைகள், அன்பு அரும்பு, தருமமாகிய மலர், போகமாகிய கனி பழுத்தது போன்ற நகர் என்ற முற்றுருவகம் ஔவையார் இட்ட அடித்தளத்திலிருந்து உருவானது தான் என்பதை நாம் எளிதில் புரிந்து கொண்டு மகிழ்கிறோம்.

    அடுத்து  ஔவையார் தன்  காதலைப் புரிந்து கொள்ளாமல் உறங்குகின்ற ஊரைக் கண்டு மிகுந்த கோபம் கொண்டு அந்த ஊர்மக்களைத் தாக்கி வீழ்த்தித் தன்னிலையைப் புலப்படுத்த முயல்கிறாள். அடக்கம்மிக்க ஒரு  பெண்ணுக்கே இவ்வாறு ஆத்திரம் பொங்கும் என்பது இயற்கை.   தன் நிலையை அறியாத மதுரை மக்களைக் கண்டு  ஆத்திரம் அடையும் கண்ணகியை நாம் சிலப்பதிகாரத்தில் கண்டு வியக்கின்றோம். நம் ஔவையார் காணும் பெண்மணி காதல் வேட்கை மிகுதியினால் ஊர்மக்களிடமே கோபம் கொள்கிறாள். தமிழ் நூல் களில் அகத்திணைத் துறையில் ஒரு பெண் சினங்கொண்டு ஊரையே எதிர்த்துக் குரல் கொடுப்பது இங்கு மட்டுமே. குறுந்தொகை  இதனை,

    முட்டுவேன்கொல்! தாக்குவேன் கொல்!
    ஓரேன்  யானும்; ஓர்  பெற்றி  மேலிட்டு
    ஆஅ!  ஒல்‘  எனக் கூவுவேன் கொல்!
    அலமரல் அசைவளி  அலைப்ப, என்
    உயவுநோய்  அறியாது, துஞ்சும் ஊர்க்கே!”

    kambanஎன்று அப்பெண் பாடுவதாகக் குறுந்தொகை 28-ஆம் பாடல் கூறுகிறது.  இந்தப் புதுமையைக் கண்ட  கம்பர்  தம்முடைய இராமாயணத்தில், சீதையைப் பிரிந்து வருந்தும் போது, இராமன் உணர்ச்சிவசப்பட்டு, ”இந்த உலகங்கள்  அனைத்தையும் அழிப்பேன்!”  என்று   சடாயுவிடம் சூளுரைக்கின்றான். இது பிரிவின் வேதனையால் இராமன் உலகின்மீதே சினம் கொள்ளும் காட்சி.   இதனைக் கம்பர்,

    பெண்தனி  ஒருத்தி  தன்னைப்  பேதைவாள்  அரக்கன்  பற்றிக்
    கொண்டனன்   ஏக , நீ இக்   கோளுற , குலுங்கல்  செல்லா
    எண் திசை  இறுதியான  உலகங்கள்  இவற்றை,  இன்னே
    கண்டவா  னவர்க  ளோடும் களையுமாறு, இன்று காண்டி!”

    என்று இராமன் உலகங்களையும் , கண்டும் வாளாவிருந்த தேவர்களையும் கொன்றழிப்பேன்! ” என்று கோபத்துடன் கூறியதை நன்றாக உற்று நோக்கினால் , பிரிவுத் துன்பம் , நற்பண்பு மிக்க ,பொறுமைமிக்க இராமனையும் பாதித்த சூழ்நிலை நமக்குப் புரியும்! இந்தச்சினம் இராமனுக்கு வந்தது குறுந்தொகைப் பாடல் உண்டாகிய தாக்கத்தால்தான், என்பது நமக்குப் புரியும்!

    தாரகை  உதிரு  மாறும் தனிக்கதிர்  பிதிரு மாறும்
    பேரகல்  வானம்  எங்கும் பிறங்கெரி பிறக்கு மாறும்,
    நீரொடு  நிலனும் காலும், நின்றவும் , திரிந்த  யாவும்
    வேரொடு  மடியு  மாறும், விண்ணவர்  விளியு மாறும்,
    இக்கணம்  ஒன்றில்  நின்ற  ஏழினோடு  ஏழு  சான்ற
    மிக்கன   போன்று  தோன்றும் உலகங்கள்  வீயு  மாறும்,
    திக்கொடும்  அண்ட  கோளப்  புறத்தவும்   தீந்து, நீரின்
    மொக்குளின்   உடையு  மாறும்,  காண்

    என  இராமன் முனிந்தான்.    திருமணம் நடக்கும் வரை  பொறுத்துக் கொள்ள இயலாத அளவுக்குக் காதல் கைம்மிக்க போது எல்லாருமே உணர்ச்சிவசப்படுவது இயல்பு. ஆனால் பொறுமையின் எல்லைவரை அமைதியாகவே இருக்கக் கற்பிக்கப் பெற்ற தலைவி, எல்லையைக் கடக்கும் சூழ்நிலையில் மிகவும் சினம் கொண்டு ”முட்டுவேன். தாக்குவேன்! ”  என்று கூறுவது சற்று மிகையான செயல்தான். இதனை ஔவையார்  கற்பனையாகப் பாடி  நம் கவனத்தை ஈர்ப்பதைக் கற்றறிந்த கம்பர், இராமபிரான் தம் மனைவியின் பிரிவினைப் பொறுத்துக் கொள்ள  இயலாத சூழ்நிலையில் உணர்ச்சிவசப்பட்டு ” உலகையே  அழிப்பேன்” என்று சினத்துடன் பேசும் செயலைக் காப்பிய மரபின் புதுவகை  உத்தியாகக் கம்பன் கூறுவதை நாம் புரிந்து கொள்கிறோம்.

    இரண்டு செயல்களையும் ஒரேவகைப்  பிரிவுணர்ச்சியே கொண்டுசெல்வதைச் சங்க  இலக்கியமும் , கம்பகாவியமும் ஒரே விதமாகக்  காட்டும்போது ஔவையாரின் வழியில் கம்பன் பாடுவதை உணர்ந்து மகிழ்கிறோம்.

    குறுந்தொகையில்  மற்றொரு பாடல்.  தலைமகன் தலைவியைத் தன்னுடன் அழைத்துச் செல்லக் கருதுகிறான். அதே நேரத்தில்,  ‘அவளால் பாலை நிலத்தின் வெம்மையைத் தாங்க இயலாதே’, என எண்ணித் தயங்குகிறான். அப்போது தோழி, தலைவனிடம் ”தலைவி உன்னுடன் செல்லும்போது கடுமையான காட்டின் வெம்மையையும் பொறுத்துக் கொள்வாள்” என்கிறாள். இதே சூழ்நிலையைக்  கம்பரும் தம் காவியத்தில் உருவாக்குகிறார்.

    ”வல் அரக்கரின்   மால்வரை   போய்விழுந்து
    அல்  அரக்கின்  உருக்கு அழல் காட்டு அதர்க்
    கல் அரக்கும்  கடுமைய  அல்ல, நின்
    சில் அரக்குண்ட சேவடிப் போது!”

    என்கிறான் இராமபிரான். அப்போது சீதை, ” நின் பிரிவினும் சுடுமோ, பெருங்காடு?” என்று கூறி உடன்போகத் துணிகிறாள். குறுந்தொகைத் தோழி தலைவனிடம்,  ”குளம் நிறைந்த நீரில் முளைத்து மேலே தலைநீட்டி மலரும் குவளை மலர் ,   கோடைக் காலத்தில்    நீர் வற்றிய போதும் காய்ந்து கிடந்தது, அடுத்து நீர் வரும் காலத்தில்  மீண்டும் முளைத்து மலரும்.  அதுபோல் உன்னுடனே   இருக்கும்  மகிழ்ச்சியில் வாட்டத்தை உணராமல் உள்ளே  உயிர்ப்புடன் தலைவி இருப்பாள்! ” என்கிறாள். இதனைக் குறுந்தொகையின் 

    நீர்கால்   யாத்த  நிரைஇதழ்க்  குவளை
    கோடை ஒற்றினும்   வாடா தாகும்!”

    என்ற பாடற்பகுதி குறிக்கிறது.

    கம்பராமாயணத்தில், ”காட்டின் கடுமையை இராமனுடன் செல்லும் பிரிவில்லாத சூழ்நிலையில் சீதை தாங்கிக் கொள்வாள்!” என்று இலக்குவன் கூறுகிறான். நீர் நிரம்பிய குளத்தில் மீனும், குவளை மலரும் உயிர்ப்புடன்  இருப்பதுபோல் நானும் சீதையும் உயிர்ப்புடன் விளங்குவோம். அதுவும் சீதை உன்னைச் சற்றுப் பிரிந்தாலும் குவளை மலர்கள்  நீரின்றி வாடி மீண்டும் நீர் வரும்போது உயிர்த்து எழுவதுபோல், மேலே வாடினாலும் உள்ளே உயிர்ப்புடன் இருப்பாள்!”   என்று இலக்குவன் கூறுகிறான். இதில் மிகவும் நுட்பமாக இராவணன் செயலால் சீதை பிரிந்தாலும்,  அங்கே தன்னைக்  காத்துக்கொண்டு அங்கிருந்து,  மீண்டும் இராமனிடம் சேரும்போது ,உயிர்ப்படைவாள்!  (ஆனால் குளத்து  மீன், நீரில்லையேல் உடனே உயிர் விடுவது போல் நான் மாள்வேன்!)  என்று இலக்குவன் கூறும் பாடல், ஔவையாரின் குறுந்தொகைப் பாடலின் வழியில் அமைந்து, கம்பரின் சங்க நூற்பயிற்சியைக்  காட்டுகிறது. இதனை,

    நீருள  எனின் உள  மீனும்  நீலமும்
    பாருள  எனின் உள  யாவும், பார்ப்புறின்
    நாருள   தனுவுளாய்    நானும் சீதையும்
    ஆருளர்   எனினுளேம்  அருளுவாய் என்றான்!”

    என்று கம்பர்  பாடுகிறார்.  இப்பாடலில்,ஔவையாரின் நீர்க்குளம் , குவளை மலர் ஆகியவை கம்பனுக்கு வழிகாட்டியாக அமைந்த அழகை நாம் சுவைத்து மகிழ்கிறோம்.   இவ்வாறே சங்கத்தமிழில் கம்பன் தன்னையே  பறிகொடுத்த சிறப்பை  அடுத்து எழுதுவேன்.

     

     

    Share
  • அமெரிக்க ஐக்கிய மாநில விடுதலைப் போர் நினைவு நூற்றாண்டில், ஃபிரெஞ்ச் நிபுணர் அமைத்த சுதந்திர தேவிச் சிலை

    Statue of Liberty -1A

    American War of Independence Centennial

    Statue of Liberty

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா

    ++++++++++++++

    இதந்திரு மனையின் நீங்கி,
    இடர்மிகு சிறைப்பட்டாலும்,
    பதந்திரு இரண்டும் மாறி,
    பழிமிகுந்து இழிவுற்றாலும்,
    விதந்தரு கோடி இன்னல்
    விளைந்தெனை அழித்திட்டாலும்,
    சுதந்திர தேவி! நின்னைத்
    தொழுதிடல் மறக்கிலேனே.

    ++++++ 

    மேற்றி சைப்பல நாட்டினர் வீரத்தால்
    போற்றி நின்னைப் புதுநிலை எய்தினர்!
    கூற்றி னுக்குயிர் கோடி கொடுத்தும் நின்
    பேற்றினைப் பெறுவே மெனல் பேணினர்!
    தேவி ! நின் ஒளி பெறாத
    தேய மோர் தேய மாமோ ?

    +++++++++++

    மகாகவி பாரதியார் (சுதந்திர தேவியின் துதி)

    Statue of Liberty -10

    “அமெரிக்காவும் பிரான்சும் ‘இரண்டு சகோதரிகள் ‘ என்று உறவாடினர்! அமெரிக்க விடுதலை அடைந்து நூற்றாண்டு விழாக் கொண்டாட இன்னும் பத்தாண்டுகள் உள்ளன.  விடுதலை நூற்றாண்டு விழாவுக்கு பிரெஞ்ச் மக்கள் ஓர் உயர்ந்த நினைவுச் சின்னத்தை நன்கொடையாக அளித்தால் எத்தனை சிறப்பாக இருக்கும் ,”

    எடோவெர்டு லாபெளலே [Edoward Rene Lefebrve de Laboulaye] பிரெஞ்ச் புரட்சித் தலைவர்.

    முன்னுரை: அமெரிக்காவின் நியூ யார்க் தலைவாயிலில் தீப்பந்தம் ஏந்தி, புலம்பெயர்ந்து நுழையும் கோடிக் கணக்கான வெளிநாட்டு மாந்தருக்கு ஒளிகாட்டி, வழிகாட்டி வரவேற்கும் சுதந்திர தேவி, நியூ யார்க் தீவில் நிறுவமாகி அதன் நூற்றாண்டுப் பிறந்த நாள் விழா 1986 ஜூலை மாதம் சிறப்பாகக் கொண்டாடப் பட்டது! விடுதலைப் போரில் பிரிட்டனுடன் சண்டை யிட்டு, வெற்றி பெற்று அமெரிக்கா 1776 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி சுதந்திர நாடானதைப் பாராட்டி, நூற்றாண்டு விழா வாழ்த்துப் பரிசாய் 1886 இல் பிரான்ஸ் அளித்த உலகிலே உயரமான சிற்பச் சிலை அது! 151 அடி உயர்ந்த [தரைமுதல் மேல் நுனி வரை : 305 அடி] விடுதலைச் சிலையைப் படைத்த பிரான்ஸின் புகழ் பெற்ற சிற்பி ஃபிரடெரிக் அகஸ்தி பார்தோல்டி [Frederic Auguste Bartholdi (1834-1904)]. சுதந்திர தேவியின் இரும்பு எலும்புக் கூட்டை டிசைன் செய்த பொறியியல் மேதை, பிரான்ஸின் ஆயிர அடி உயர ஐஃபெல் கோபுரத்தைப் [Eiffel Tower] படைத்த அலெக்ஸாண்டர் கஸ்டாவ் ஐஃபெல் [Alexandre Gustav Eiffel (1832-1923)]! நூறாண்டுகள் தாண்டி அமெரிக்கா 87 மில்லியன் டாலர் செலவு செய்து 1986 இல் புதுப்பிக்கப் பட்டது, விடுதலைச் சிலை. நியூ யார்க் நகரின் உள்ளும் புறமும் விடுதலை மாதின் நூறாண்டுப் பிறந்த நாள் விழா நான்கு தினங்கள், கோலாகலமாக வான வேடிக்கைகளுடன் கொண்டாடப் பட்டது.

    Statue of Liberty -4

    சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் [Liberty, Equality, Fraternity] என்னும் மூன்று குடியாட்சிச் சுலோகங்களை முதலில் முழக்கிய புரட்சி எழுத்தாள மேதைகள் வால்டேர், ரூஸ்ஸோ [Voltaire (1694-1778), Rousseau (1712-1778)] ஆகியோர் பிரான்ஸில் வாழ்ந்து முடிந்த காலம் அது! முடி ஆட்சியி லிருந்து விடுபட பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த பிரான்ஸின் மேதைகளும், பெரும்பான்மையான மக்களும் விடுதலைத் தாகம் மிக்கவராக இருந்ததை இங்கே குறிப்பிட வேண்டும்! 1776 அமெரிக்கச் சுதந்திரப் போரின் சமயத்தில், ஜார்ஜ் வாஷிங்டன் போர்ப் படைகளுக்கு ஆயுதங்கள், கப்பல்கள், நிதி உதவிகள், படைகள் அளித்து, விடுதலை அடைய பிரான்ஸ் மிக்க ஆதரவாய் இருந்தது. பிரெஞ்ச் போர் வீரர் மார்குவிஸ் தி லஃபாயட் [Marquis De Lafayette] போன்றோர், போர்த் தளபதியாக ஜார்ஜ் வாஷிங்டன் ஆணைக்குக் கீழ் பணியாற்றி யுள்ளார்கள்! சுதந்திரப் போரில் அமெரிக்கா அடைந்த வெற்றியே பின்னால் பிரெஞ்ச் புரட்சிக்கும் அடிப்படையாகி, பிரான்ஸ் முடி ஆட்சியிலிருந்து விடுதலை அடைய வழி காட்டியது!

    Statue of Liberty -7

    உலகிலே உயர்ந்த உலோகச் சுதந்திரப் பதுமை உதித்த வரலாறு

    அமெரிக்க விடுதலைப் போரில் பிரான்ஸ் உதவி செய்திரா திருந்தால், தளபதி ஜார்ஜ் வாஷிங்டன் பிரிட்டன் ஏகாதிபத்தியத்தை வென்று 1774 இல் சுதந்திர நாட்டை உருவாக்கி இருக்க முடியாது! சுமார் 100 ஆண்டுகள் தாண்டிய பின் முப்பத்தியொரு வயதான பிரெஞ்ச் சிற்பி பார்தோல்டி, 1865 இல் நடந்த பின்வரும் வரலாற்று முக்கிய உரையாடலைக் கூறுகிறார். மூன்றாம் நெப்போலியன் [Napoleon III] எதேச்ச ஆதிக்க ஆட்சியை எதிர்க்கும் பலதிறப்பட்ட மேதைகள், சுதந்திர அமெரிக்காவின் குடியரசு ஆட்சியை மெச்சி, உள்நாட்டுப் போருக்குப் பின் [Civil War] ஆபிரகாம் லிங்கன் அடிமை விலங்குகளை அகற்றியதைப் பாராட்டி டின்னர் பார்டியின் போது அளவளாவிக் கொண்டிருந்தனர். அக்குழுவில் பிரென்ச் இலக்கிய மேதையும், விடுதலைப் போராட்ட அதிபரான எடோவெர்டு லாபெளலே [Edoward Rene Lefebrve de Laboulaye] கலந்து கொண்டிருந்தார்.

    Statue of Liberty -14

    லாபெளலே அமெரிக்க முறையில் இயங்கும் குடியரசைப் பிரான்ஸில் அமைக்க விரும்பியவர். சரித்திர பூர்வமாக இருநாடுகளுக்கும் இடையே இருந்த விடுதலைத் தாகத்தை எடுத்துக் காட்டி, அமெரிக்காவும் பிரான்சும் ‘இரண்டு சகோதரிகள் ‘ என்று உறவாடினர்! அமெரிக்க விடுதலை அடைந்து நூற்றாண்டு விழாக் கொண்டாட இன்னும் பத்தாண்டுகள் உள்ளன என்று அப்போது நினைவு படுத்தி, அதிபர் லாபெளலே ‘விடுதலை நூற்றாண்டு விழாவுக்கு பிரெஞ்ச் மக்கள் ஓர் உயர்ந்த நினைவுச் சின்னத்தை நன்கொடையாக அளித்தால் எத்தனை சிறப்பாக இருக்கும் ‘ என்று வியந்தார். அக்குழுவில் யாவரும் முடிவு செய்து அப்போது சிற்பி பார்தோடியின் நெஞ்சில் உதயமான சின்னம்தான், இப்போது ஓங்கி உயர்ந்து நியூ யார்க் துறைமுகத்தில் ஒளிகாட்டும் சுதந்திரச் சிலை!

    Sculptor Bartholdi & His Model

    விடுதலைச் சிலையை உருவாக்கிய சிற்ப மேதை பார்தோல்டி

    பிரான்ஸில் கால்மர் [Colmar] என்னும் நகரில் ஃபெரடிரிக் ஆகஸ்தி பார்தோல்டி 1834 ஆகஸ்டு 2 ஆம் தேதி சீரும் சிறப்பும் மிக்கச் செல்வந்த இடைவகுப்புக் குடும்பத்தில் பிறந்தவர். அவருக்கு இரண்டு வயதாகும் போது தந்தையார் காலமாகவே, சிறுவன் ஆகஸ்தி விதவைத் தாய் சார்லெட் பார்தோல்டியால் கடுமையான ஒழுக்கமுடன் வளர்க்கப் பட்டவர்! அமெரிக்கச் சுதந்திரச் சிலையின் முகம், ஆகஸ்தியின் தாய் சார்லெட் முகம் போன்று உள்ளது என்று பலர் கருதுகிறார்கள். சிலர் எகிப்து சிலை ஒன்றுக்காக அவரது புதல்வன் வரைந்த ஒரு படத்தை ஒத்துள்ளது என்று கூறுகிறார்கள்! ஆயினும் ஆகஸ்தி பார்தோல்டி படைத்த சுதந்திர மாதின் முகம் யாருடைய முகத்தைப் போன்றுள்ளது என்பது இன்னும் புதிராகவே இருந்து வருகிறது!

    Statue of Liberty -16

    ஆகஸ்தி பார்தோல்டி முதலில் ஓர் ஓவியராகத்தான் தனது ஆக்கப் பணியைத் துவங்கினார். பிறகு சிற்பக் கலை ஆர்வம் அவரைப் பற்றிக் கொண்டது. ஆனால் அவர் சிற்பியாக மாறி சிற்பக்கலை உருவங்களைப் படைத்த பின்னரே அவரது புகழ் பரவ ஆரம்பித்தது. நெபோலியன் போனபார்டின் [Napoleon Bonaparte] அதிபதிகளில் ஒருவரான ஜெனரல் ஜான் ராப்பின் [General Jean Rapp] பனிரெண்டு அடி உயர உருவச் சிலையைப் பதினெட்டு வயதில் பார்தோல்டி வடித்த போது, அவரது பெயர் பிரான்ஸ் எங்கும் பரவியது. அது முதல் தேசீயப் பிரமுகர்களின் சிலையை மிதமிஞ்சிய அளவில் படைப்பதற்குப் பார்தோல்டியே பிரான்ஸில் தேடப்பட்டார்.

    Statue of Liberty -19

    பத்தொன்பதாம் நூற்றாண்டு ஈரோப்பில், பூர்வீக கிரேக்க ரோமானியச் சிற்பங்கள் போன்று மிதமிஞ்சிய உயரத்தில் சிலைகளைப் படைப்பது ஒரு சவாலான கலையானது! கிரேக்க, ரோமானியச் சிற்பங்களின் கலை நுணுக்கத்தை அறிந்த பார்தோல்டி எகிப்துக்குச் சென்று, அங்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப் பட்ட பிரமிக்கத் தக்க பிரமிடுகளைப் [Pyramids] பார்வை யிட்டார். பேருவில் படுத்திருக்கும் சிங்கத் தலை ‘ஸ்ஃபிங்க்ஸ் ‘ [Sphinx] இதிகாச விலங்கின் பூத வடிவைக் கண்டு வியப்படைந்தார். அந்தச் சமயத்தில் எகிப்தில் சூயஸ் கால்வாயை வெட்டத் திட்டமிட்டு பணிபுரியும் ஃபெர்டினென்ட் லெஸ்ஸெப்ஸ் [Ferdinand de Lesseps] என்னும் பிரெஞ்ச் கட்டமைப்பு மேதையைச் சந்தித்தார்.

    Statue of Liberty

    சூயஸ் கால்வாய் முடியும் தருவாயில் அங்கே கலங்கரை விளக்கமாக அமைக்க, 1867 ஆண்டு பார்தோல்டிக்கு ‘முன்னேற்றச் சிலை ‘ [Progress] ஒன்றை உருவாக்க ஆசை எழுந்தது. எகிப்தின் குடியான மாது ஒருத்தி போர்த்திய ஆடையுடன், ஒளிவீசும் தலைப்பட்டை அணிந்து, வலது கரத்தில் தீப்பந்தம் ஏந்தி யுள்ளது போல் ஒரு சிற்ப மாடலைத் தயாரித்தார். ‘ஆசியாவுக்கு எகிப்த் ஏந்தும் விளக்கு ‘ [Egypt Carrying the Light to Asia] என்னும் பெயரிட்டுத் திட்டச் சிலை மாடலை, 1869 இல் எகிப்தின் அதிபர் இஸ்மாயில் பாஷாவுக்குச் சமர்ப்பித்தார். ஆனால் ஏதோ சில அரசியல் காரணங்களால் அத்திட்டச் சிலை நிறுவகமாக அங்கீரம் அடையவில்லை. தற்போதுள்ள அமெரிக்காவின் விடுதலைச் சிலை பல வடிவங்களில் எகிப்து விளக்குச் சிலைபோல் உள்ளது என்று பலர் கருதுகிறார்கள்!

    பிரென்ச் விடுதலைத் தளபதி எடோவெர்டு லாபெளலே ஆலோசனையின் பேரில் பார்தோல்டி 1871 ஜன் 8 ஆம் தேதி அமெரிக்காவுக்குப் பயணம் செய்து, நியூ யார்க் துறைமுகத்தில் சுதந்திரச் சிலைக்கு உரிய ஓர் உன்னத இடத்தைத் தேர்ந்தெடுத்தார். அதுதான் அழகிய சிறு பெட்லோ தீவு [Bedloe Island]! பார்தோல்டி முதல் ஆலோசனையின்படிப் பல்லாண்டுகள் கழித்து, இப்போது (1960 முதல்) ‘விடுதலைத் தீவு ‘ [Liberty Island] என்று அழைக்கப் படுகிறது!

    Statue of Liberty -17

    அடுத்து அமெரிக்க சுதந்திரப் போரில் ஜார்ஜ் வாஷிங்டன் படையில் ஒரு தளபதியாகப் பணியாற்றிய பிரென்ச் இராணுவ வீரர் மார்குவிஸ் லஃபாயட்டுக்கு உருவச் சிலை ஒன்றை வடித்து 1876 இல் நியூ யார்க் நகருக்கு அன்பளிப்புச் செய்தார். கனடாவுக்கு விஜயம் செய்து, மான்ட்ரியாலில் [Montreal, Canada] இருமுறைச் சந்தித்த ஜீன் எமிலியை [Jeanne Emilie Baheux] பார்தோல்டி 1876 டிசம்பர் 20 ஆம் தேதி மணந்து கொண்டார்.

    பிரான்சில் நிதி திரட்டி  அமெரிக்கச் சுதந்திரச் சிலை அமைப்பு

    விடுதலைச் சிலை வடிக்கும் நிதிச் செலவைப் பிரான்சும், அதை ஏற்றி அமர்த்தும் பீடத்தைக் கட்டும் செலவை அமெரிக்காவும் ஏற்றுக் கொள்வதாக ஆரம்ப காலத்திலே இரு நாடுகளும் ஒப்புக் கொண்டன. பிராங்க் அமெரிக்கன் யூனியன் ஒன்று ஏற்படுத்தப் பட்டு, பிரான்சில் அமெரிக்கச் சிலை வடிக்க நிதி திரட்டப் பட்டது. அம்முயற்சியில் 1879 ஆண்டு முடிவில் 250,000 பிராங்க் [சுமார் 250,000 டாலர்] நிதி சேர்ந்தது! சிற்ப வடிவங்களைப் படைக்க ‘ரிப்போஸா முறை ‘ [Art of Repousse] கையாளப்பட்டது. அந்த முறையில் வடிவங்கள் கல்லில் செதுக்கப் பட்டோ அல்லது வெண்களி மண்ணில் வடித்து சுடப்பட்டோ [Plaster of Paris or Calcium Sulphate], தாமிரத் தகடுகளில் [Copper Plates] அச்செடுக்கப் பட்டு பின்னால் இணைக்கப் படுகின்றன. தீப் பந்தத்தைக் கையில் ஏந்தி 151 அடி உயரமான விடுதலை மாதின் சிக்கலான சிரமான ஆக்கப் பணியை பார்தோல்டி எடுத்துக் கொண்டு, சிலையின் இரும்பு எலும்புக் கூட்டை டிசைன் செய்ய, புகழ் பெற்ற பொறியியல் நிபுணர் அலெக்ஸாண்டர் கஸ்டாவ் ஐஃபெல்லை நியமித்தார். அவர்தான் பாரிஸில் பெயர் பெற்ற ஐஃபெல் கோபுரத்தை [Eiffel Tower] டிசைன் செய்து 1889 இல் நிறுவியவர்.

    ast

    பிரெஞ்ச் பணியாட்கள் 300,000 பேர் சிலை முடிவு பெறுவதை மேற்பார்வை செய்ய கூலிக்கு அமர்த்தப் பட்டனர். நுணுக்கமான சிலை அங்கங்களை வடிக்க 20 சிறப்புப் பணியாட்கள் வாரம் முழுவதும் அனுதினமும் 10 மணி நேரம் வேலை செய்தனர்! முதலில் முடிந்த தீப்பந்தம் ஏந்திய 30 அடி நீளமான கரம் 1876 ஆகஸ்டில் அமெரிக்காவுக்கு அனுப்பப் பட்டது. 50 சென்ட் கட்டணத்தில் ஏணியில் ஏறி இறங்கிப் பார்க்கும்படி, கரம் பிளடல்ஃபியாவில் [Philadelphia] காட்சிப் பொருளாகத் தற்காலியமாக வைக்கப் பட்டது! அங்குதான் 1752 இல் வார்க்கப் பட்ட சரித்திரப் புகழ் பெற்ற ‘விடுதலை வெங்கல மணி ‘ [Liberty Bell] தொங்குகிறது. தலைக் கிரீடம் அணிந்த சுதந்திர மாதின் 17 அடி நீளச் சிரசு 1878 மே மாதம் தயாரிக்கப் பட்டுப் பாரிஸில் நடந்த உலக வணிகக் கண்காட்சித் தளத்தில் சிறிது காலம் வைக்கப் பட்டது!

    Statue of Liberty -23

    1884 ஜூன் 15 ஆம் தேதி சிலை இறுதித் திருத்தங்கள் செய்யப்பட்டு, 1885 இல் பிரெஞ்ச் பிரதம மந்திரி ஜூல்ஸ் ஃபெர்ரியால் [Jules Ferry] கோலாகலமாகக் கொண்டாட்டங்களுடன் அமெரிக்காவுக்குப் பிரெஞ்ச் கப்பல் ‘இஸரியில் ‘ [Isere] 214 பெட்டிகளில் சிலை உறுப்புகள் அனுப்பப் பட்டன. ஆனால் அதைத் தாங்கும் பீட மேடை [Pedestal] அப்போது நியூ யார்க்கில் தயாராக இல்லை! 1885 இல் விடுதலைச் சிலையின் காரண கர்த்தா, எடோவெர்டு லாபெளலே சிலை நியூ யார்க் துறைமுகத்தில் நிறுவப்படும் முன்பே பிரான்ஸில் காலமானார். அமெரிக்காவில் சிலை நிறுவப்படும் 90 அடி உயரப் பீடத்தைக் கட்டவும், அதற்கு 65 அடி ஆழ அடித்தளம் அமைக்கவும் நிதி திரட்டி ஆரம்பிக்கக் காலதாமதம் ஆனது. அமெரிக்க உள்நாட்டுப் போரில் [Civil War] பங்கெடுத்த ஹங்கேரியன் புலப்பெயர்ச்சிப் பத்திரிக்கைப் பதிப்பாளி ஜோஸஃப் புளிட்ஸர் [Joseph Pulitzer] 1883 இல் முன்வந்து 100,000 டாலருக்கு மேலாக பொது மக்களிடமிருந்து கொடையாகச் சேமித்தார்.

    அமெரிக்கச் சுதந்திரச் சிலையின் படைப்பு அம்சங்கள்

    அமெரிக்கன் கட்டடக் கலைஞர் ரிச்சர்டு மாரிஸ் ஹன்ட் [Richard Morris Hunt] சமர்ப்பித்த பீடம் 1884 இல் ஒப்புக் கொள்ளப் பட்டு, மேற்படி வேலைகள் ஆரம்பமாயின. 1886 மே மாதம் அடித்தளமும், பீடமும் முடிந்து, சிலையின் அங்கங்கள் பீடத்தின் மீது இணைக்கப் பெற்றன. பார்தோல்டியின் கற்பனைச் சிற்ப நங்கை வெறும் இரும்புச் சட்டங்களைச் சுற்றி, உருவங்களில் பிரதி எடுக்கப்பட்ட தாமிர உலோகத் [Copper Metal] தட்டுகள் இணைக்கப்பட்டு ஆக்கப்பட்ட சிலை! அதற்கு வடிவ மாடலாக அவரது மனைவி எமிலி பார்தோல்டி நின்றாக அறியப் படுகிறது! நார்வே தேசத்திலிருந்து 32 டன் எடை யுள்ள 300 தாமிரத் தட்டுகள் வர வழைக்கப் பட்டு வார்ப்பு அங்கங்களில் நெளிக்கப் பட்டுச் சிலை இறுதியில் இணைக்கப் பட்டது. தீப்பந்தம் விளக்கொளி வீசும்படி அமைக்கப் பட்டுள்ளது. அடித்தளத்தின் ஆழம்: 65 அடி. சுதந்திர மாது ஓங்கி நிற்கும் பீடம் 89 அடி உயரம். பீடத்தின் தளபரப்பு 91 அடிச் சதுரம். பாதங்கள் நிற்கும் மேற்தளப் பரப்பு 65 அடிச் சதுரம். அமெரிக்கக் கட்டடக் கலைஞர் நிறுவிய 89 அடி பீடம், 65 அடி ஆழத்தில் 23,500 டன் காங்கிரீட் ஊற்றிய அடித்தள மீது நிற்கிறது! மின்சக்தி இயக்கும் தூக்கிகள் [Elevators], பீடத்தில் இயங்கி வருகின்றன. சிலையின் பாதத்தி லிருந்து சிரசிற்கு ஏறி இறங்க 171 சுழலும் மாடிப்படிகள் [Spiral Staircase] நடுவே உள்ளன.

    விடுதலைச் சிலையின் முழு எடை: 225 டன்! அதன் இரும்புக் கூட்டின் எடை: 125 டன்! இரும்புக் கூட்டைச் சுற்றிப் போர்த்திய சிற்பத் தாமிரத் தகடுகளின் எடை: 90 டன்! சுதந்திர தேவியின் தீப்பந்தம் தளத்திலிருந்து 305 அடி உயரம். விடுதலைக் குமரியின் உயரம் பாதத்திலிருந்து தீப்பந்த உச்சி வரை 151 அடி. சிலையின் உயரம் பாதம் முதல் சிரசு வரை 111 அடி. ஓங்கி உயர்ந்த வலது கரத்தின் நீளம்: 42 அடி. வலக்கரத்தின் மிகையான தடிப்பு 12 அடி. விடுதலை மாதின் தலையின் உயரம்: 17 அடி. மூக்கின் நீளம்: 4.5 அடி. வாயின் அகலம்: 3 அடி. குமரியின் இடுப்புச் சுற்றளவு: 35 அடி. இடது கரத்தின் 16 அடி 5 அங்குலம். சுட்டு விரல் 8 அடி நீளம். பாதத்தில் போட்டிருக்கும் மிதியடி: 25 அடி. சுதந்திர தேவியின் கிரேக்க, ரோமானிய மாடல் தலைக் கிரீடத்தில் உள்ள சாளரங்கள்: 25. அந்த சாளரங்கள் வழியே, ஒளி வீசும் விளக்குகள் ஒளியைப் பாய்ச்சும். கிரீடப் பட்டையில் உள்ள ஈட்டிகள்: 7 [உலகின் ஏழு கடல்கள்]. இடது கரம் பிடித்திருக்கும் சாசனப் பட்டயத்தில் எழுதி இருப்பது: ஜூலை 4, 1776 [சுதந்திர அறிவிப்பு நாள்].

    The Head Making

    பிரென்ச் டிசைன் எஞ்சினியர் கஸ்டாவ் ஐஃபெல் அமைத்த விடுதலைக் குமரியின் 151 அடி உயர எலும்புக் கூடான இரும்புச் சட்டங்கள், நியூ யார்க் கடலில் பொதுவாக மணிக்கு 50 மைல் வீதம் அடிக்கும் காற்றை எதிர்த்துச் செங்குத்தாய் நிற்பவை! பத்தொன்பதாம் நூற்றாண்டு பொறியியல் நுணுக்க மாயினும், எப்போதாவது சில மணிநேரம் தாக்கும் சூறாவளிப் புயல் மணிக்கு 125 மைல் வேகத்தில் அடிப்பினும், சுதந்திரச் சிலை முறிந்து விடாமல் நிமிர்ந்து நிற்க டிசைன் செய்யப் பட்டது! மணிக்கு 50 மைல் வீதம் அடிக்கும் காற்றில் 42 அடி நீளக் கரத்தில் ஏந்திய தீப்பந்தம் 5 அங்குலம் ஆடும்! 151 அடிச் சிலை 3 அங்குலமே அசையும்! ஒழுங்காகப் பராமரிப்புப் பணிகள் செய்யப்பட்டு வந்தால், சுதந்திர தேவி இன்னும் 500 ஆண்டுக்கு மேலாகப் பிரச்சனைகள் இன்றி நீண்ட காலம் நிமிர்ந்து நிற்பாள்!

    சுதந்திரச் சிலைப் பீடமேடை

    அமெரிக்காவை இல்லமாக ஏற்றுக் கொண்ட விடுதலை மாது!

    1886 அக்டோபர் 21 ஆம் தேதி நியூ யார்க்கில் வந்திறங்கிய ஆகஸ்தி பார்தோல்டி, அவரது மனைவி எமிலி பார்தோல்டி, சூயஸ் பனாமா கால்வாய்கள் கட்ட பெரும்பங்கு ஏற்ற ஃபெர்டினென்ட் தி லெஸ்ஸெப்ஸ், மற்றும் பிரென்ச் அரசாங்கப் பிரதிநிதி ஆகிய நால்வரும் விடுதலைக் குமரி திறப்பு விழாவுக்கு விஜயம் செய்தனர். விழா நாளான அக்டோபர் 28 விடுமுறைத் தினமாக விடப்பட்டது. தீப்பந்தம் ஒளிவீச 8 விளக்குகளை ஏற்றும்படி பார்தோல்டி ஏற்பாடு செய்தார். நவம்பர் முதல் தேதி தீப்பந்தம் ஒளி வீசியது. நியூ யார்க் துறைமுகத்தில் 250 கப்பல்களும், படகுகளும் நிரம்பி வழிய பொதுமக்கள் குழுமி யிருந்தனர். பார்தோல்டி சுதந்திரச் சிலையின் தலைக்குள் தனியே நின்று முக விளக்குகளின் பட்டனைத் தட்டி முதலில் ஏற்றி வைத்தார்!

    Statue of Liberty -18

    பாண்டு வாத்திய இசைகள் ஒலித்து, பீரங்கிகள் இடி முழக்கி, நியூ யார்க்கில் விடுதலைச் சிலை உயிர் பெற்று எழுந்தது! அப்போது அதைப் படைத்த சிற்ப மேதை பார்தோல்டி, ‘கனவு பலித்ததம்மா ‘ என்று புளதாங்கிதம் அடைந்தார்! ஒரு மில்லியன் மக்கள் கலந்து கொண்ட விழாவில் அமெரிக்க அதிபதி குரோவர் கிலீவ்லண்டு [Twice American President (1885)(1893)], ‘சுதந்தர தேவி இப்போது அமெரிக்காவைத் தன் இல்லமாக ஏற்றுக் கொண்டு விட்டாள் என்பதை நாம் மறக்க மாட்டோம்! மேலும் அவளும், அவளுக்குத் தேர்ந்தெடுத்த பீடமும் புறக்கணிக்கப் படாமல் பாதுகாக்கப் படும்! ‘ என்று துவக்க விழாவில் உரையாற்றினார். அவரது கூற்றுப்படி நூறாண்டுகள் தாண்டிய பின்னும் இதுவரை சுதந்திர தேவியோ, அவள் இருக்கையான பீடமோ புறக்கணிக்கப் படவில்லை!

    Edward Moran Paintings 1886

    இருபதாம் நூற்றாண்டில் புதுப்பிக்கப்பட்ட விடுதலைப் பதுமை

    305 அடி உயரத்தில் நிற்கும் உலோகச் சிலை உலகத்திலே பெரிய சிற்பப் படைப்பாகக் கருதப் படுகிறது! 1886 இல் நிறுவப்பட்ட காலத்தில் நியூ யார்க்கின் மிக உயரச் சிற்பமாக இருந்தாலும், இப்போது அதைவிட உயர்ந்த கட்டடங்கள் அங்கே முளைத்து விட்டன! 1903 ஆம் ஆண்டில் பீடத்தின் உட்சுவர் ஒன்றில் பித்தளைப் பட்டயத்தில் பொறித்த எம்மா லாஸரஸ் 1883 இல் எழுதிய ‘பூதச் சிலை ‘ என்னும் கவிதை [Poem The Colossus By Emma Lazarus (1849-1887)] ஒன்று தொங்கவிடப் பட்டது. அரசியல் கொந்தளிப்பில் துரத்தப்பட்டு அமெரிக்காவின் தலைவாசலில் கால்வைக்கும் ஆயிரக் கணக்கான அகதிகளுக்கு எழுதப்பட்ட அனுதாபக் கவிதை அது! இப்போது பூதச் சிலைக் கவிதையும், விடுதலை மாதும் பிரிக்க முடியாதவாறு ஒன்றாய்ப் பிணைந்து விட்டன!

    1916 இல் 30,000 டாலர் நன்கொடை நிதி திரட்டப்பட்டு, இரவில் வெளிச்சம் குவிந்தடிக்க வெள்ள மின்விளக்குகள் [Flood Lights] அமைக்கப் பட்டன. 1931 இல் 1000 வாட் மெர்குரி ஆவி விளக்குகள் பீடத்திலும், தீப்பந்தக் கூண்டிலும் மாட்டப் பட்டன. 50 ஆண்டு பொன்விழாவைக் கொண்டாட 1936 இல் அமெரிக்க அதிபதி ரூஸவெல்ட், பிரென்ச் பிரதிநிதி லாபெளயேல் [De Labouyale, Grandson of Liberty Statue Promoter], மற்றும் 3500 பிரமுகர் கலந்து கொண்டனர். 1960 ஜூன் 30 ஆம் தேதி சுதந்திர தேவி நிற்கும் பெட்லோ தீவு, ‘விடுதலைத் தீவு ‘ [Liberty Island] என்று பெயரிடப் பட்டது. 1981 ஆம் ஆண்டு பிரென்ச் அமெரிக்கக் குழு ஒன்று அமைக்கப் பட்டு, நிதி திரட்டி விடுதலைச் சிலைப் புதுப்பிப்புப் பணிகள் திட்டமிடப் பட்டன. 1986 இல் சிலை நூற்றாண்டு விழாவுக்காக அப்புதுப்பிப்பு வேலைகள் ஆரம்பிக்கப் பட்டன. திரட்டிய நன்கொடை நிதி [1986] 277 மில்லியன் டாலர்! சிலையைப் புதுப்பிக்கச் செலவானது 87 மில்லியன் டாலர். புதுப்பிக்கப் பட்ட தீப்பந்த தாமிரத் தட்டுகளில் தங்கமுலாம் பூசப்பட்டது. துருப் பிடித்த இரும்புத் தளவாடங்கள் நீக்கப்பட்டு, ஸ்டெயின்லஸ் ஸ்டால் உலோகத்தில் மாற்றப் பட்டன. கஸ்டாவ் ஐஃபெல் படைத்த இரும்புச் சட்டங்களின் அளவுகள் எடுக்கப் பட்டு, விடுதலைச் சிலையின் கம்பியூட்டர் மாடல் தயாரிக்கப் பட்டு, வலுவிழந்த கம்பங்கள் உறுதியாக்கப் பட்டன.

    அமெரிக்க விடுதலைச் சிலையின் நூற்றாண்டு விழா

    அமெரிக்கா விடுதலை அடைந்து இரண்டு நூற்றாண்டுகளும், சுதந்திரச் சிலை நிலைநாட்டி முதல் நூற்றாண்டும் முடிந்து விட்டது! 1986 ஜலை 4 ஆம் தேதி, புதுப்பிக்கப் பட்ட நூறாண்டு வயதுச் சிலை முன்பாக அமெரிக்க அதிபதி ரோனால்டு ரீகன் உரை ஆற்றினார்: ‘விடுதலைக் கனலைப் பாதுகாப்பவர் நாம்! அந்தக் கனலை உலகம் காண ஓங்கி உயர்த்திக் காட்டுகிறோம் நாம்! ‘ அந்தி மயங்கும் வேளையில் அதிபர் ரீகன் ஒரு பட்டனை அழுத்தவும் இருள் நீங்கி, ஒளிமயமாகி மாபெரும் சுதந்திரச் சிலையின் மகத்தான முழுத் தோற்றம் காட்சி அளித்தது! வண்ண வண்ண தீப்பொறிகளில் வான வேடிக்கைகள் இடி முழக்கி விண்ணில் எழில் தோரணங்களைத் தெளித்தன! அமெரிக்க மக்கள் அக்காட்சியைக் கண்டு களித்ததுபோல், 1.5 பில்லியன் உலக மாந்தரும் டெலிவிஷனில் பார்த்து மகிழ்ந்தனர்! சிற்ப மேதை பார்தோல்டியும், அதை நிறுவக் காரண கர்த்தாவான அரசியல் மேதை லாபெளலேயும், விடுதலைச் சிலை அன்று ஏற்றிய வரலாற்று முக்கிய ஒளிமயத்தை எவ்விதப் பெருமிதமுடன் அனுபவிப்பார் என்று நினைத்துக் கூடப் பார்க்க முடியாது!

    தகவல்கள்:

    1. Liberty Her Lamp Relit By: National Geographic [July 1986]

    2. The New American Desk Encyclopedia [1989]

    3. History of Statue of Liberty [2001]

    4. Statue of Liberty -First 100 Years [2001 Report]

    5. Liberty Torch Chronology & Facts [www.endex.com/gf/buildings/liberty]

    6. The Statue in America [www.north-america.de]

    7. Statue of Liberty History By PageWise Inc.[2002]

    8. Lady Liberty Restored [July 1986]

    9. The New Colossus Poem By: Emma Lazarus (1849-1887)

    10.  http://twistedsifter.com/2013/05/rare-photos-of-the-statue-of-liberty-under-construction/  [May 22, 2013]

    11.  https://www.google.com/culturalinstitute/exhibit/the-construction-of-the-statue-of-liberty/QRWHcXMU?hl=en&position=5%2C8

    12.  https://en.wikipedia.org/wiki/Statue_of_Liberty  [April 28, 2016]

    *****************

    S. Jayabarathan [jayabarathans@gmail.com] April 28, 2018  [R-1]

    Share
  • நினைவு நல்லது வேண்டும்! (3)

    முனைவர் சங்கரராமன்

    Man on top of mountain. Conceptual design.

    “நீங்க நல்லவரா? கெட்டவரா?” தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற வசனம் .அதே போன்ற மற்றொரு வசனம் “அதில ஒருத்தன் என்னை ரொம்ப நல்லவனு சொல்லிட்டான்” எனும் வடிவேலு வசனம் . நல்லவனாக வாழ மெனக்கெடத் தேவையில்லை. இயல்பாக இருந்தாலே போதும் . நல்லவனாக நடிப்பதற்கே நிறைய மெனக்கெட வேண்டியிருக்கும். ஆனால் நல்லவர்களை விட நல்லவனாக நடிப்பவர்களையே உலகம் எளிதில் நம்பி விடுகிறது.

    உணவு விடுதியில் பசித்துச் சாப்பிடுபவனை கேவலமாகப் பார்க்கும் சமூகத்தில் பாதியை தின்றுவிட்டு மீதியைத் தட்டிலே வைத்துவிட்டு எழுபவரை நாகரிகமாகப் பார்க்கும் கோமாளித்தனமான இந்த சமூகத்தில் நல்லவராக காட்டிக் கொள்ள நமக்குப் பிடித்த விஷயங்களை அடுத்தவர் என்ன நினைப்பாரோ என்ற நிலையிலேயே இழந்திருப்போம். யாரும் இல்லாத தனியறையில் சந்தோசமாக பாடலைப் போட்டு நடனமாடும்போது இருக்கும் மகிழ்ச்சியை யாரோ வந்து கதவைத் தட்டுகையில் குலைத்துவிடுகிறோம். தெரிந்தவர்கள் வீட்டில் கூட அன்போடு கொடுப்பவற்றை வாங்கிக்கொள்ள நமது குழந்தைகள் நம்மை திரும்பிப் பார்த்து வாங்கலாமா? என்று கேட்க வைக்கும் அவலத்தில் நமது நல்ல வளர்ப்பை யாருக்கு பதிவு செய்கிறோம். நல்ல மழையிலே நனைந்து கொண்டே ஐஸ் சாப்பிடுவது எனக்குப் பிடிக்கும். இதற்கு யாரிடம் அனுமதி கேட்பது? யாராவது பார்த்தால் என்ன நினைப்பார்களோ என்ற எண்ணம்.

    யாரையும் குற்றம் சொல்வது எனது எண்ணமில்லை . மனசாட்சியை கேட்டுப் பாருங்கள். இந்த நிமிடம் வரை உங்களுக்கான உங்களுக்கு பிடித்த வாழ்க்கையை ஒரு நிமிடமாவது வாழ்ந்திருக்கிறீர்களா ?.. ஆம் என்றால் நீங்கள் நல்லவர்கள். இல்லை எனில் நீங்கள் கெட்டவர்கள். இது எனக்கும்தான்.

    உங்கள் மனம் யாருக்காகவாவது உங்கள் வாழ்வை நிரூபிக்க வேண்டும் என்ற வகையில் வாழ நினைத்தால் நாம் நம் வாழ்வின் சுயத்தை இழக்க நேரிடும் ஆபத்தாகவே அமைந்துவிடும் . உண்மையில் உங்களுக்குப் பிடித்த ரசனையான வாழ்வை அடுத்தவருக்கு தீங்கிழைக்காத வாழ்வை வாழ்ந்திடுங்கள் .

    உங்களை நல்லவர்கள் என்று பிறர் சொல்ல வேண்டும் என்பதற்காக உங்கள் மனசாட்சிக்கு விரோதமான வாழ்க்கையை வாழாதீர்கள்.

    நிறைவாக யார் நல்லவன் என்பதை என் வள்ளுவன் துணைகொண்டு சொல்கிறேன். “மனத்துக்கண் மாசிலன் ஆதல் “நல்லவர்கள் .

    மனதளவிலே கூட பிறருக்கு தீங்கு இல்லாத வாழ்வை வாழ்ந்தவர்களையே அவர்கள் இறந்த பின்னும் உலகம் போற்றி வருகிறது. உங்கள் வாழ்வு அமர வாழ்வாக வேண்டும் என்றால் நீங்கள் உங்கள் இயல்பைத் தொலைக்காத வாழ்வை வாழுங்கள்

    பிறருக்காக வாழலாம்
    பிறராகவே வாழ்ந்திடாதீர்கள்

    சுயமே ஜெயம்

    சதா பாரதி

    Share
  • இன்னம்பூரான் பக்கம்: இந்திய தணிக்கைத்துறையும் நானும்

     -இன்னம்பூரான்

    பொய்க்கணக்கு எளுதுவோம்லெ!

    “…தணிக்கை என்பது காசுபணம் மட்டும் பார்க்காது வச்ச காசுக்கு ஆதாயம் இருக்கிறதா என்று தோண்டிப் பார்க்கும். நாக்கை பிடுங்கிறாப்பல நாலு கேள்வி கேட்கும்….”.

    இந்த நாசமாப்போன ரேஷன் வந்தாலும் வந்தது, ஊழலும் அதன் கழுத்தைக்கட்டிக்கொண்டு வந்து உபத்ரவம் செய்தது. அரசு கொள்முதலில் நியாயவிலையில், ‘லாபம் ஒண்ணு..’ என்று நெல்லைப் படியளக்கும்போது, அதை உமி நீத்து, தவிடுத் தவிர்த்து அரிசியாக்கி மக்களுக்கு தருவதற்குள், ஒரு மோசடி நடந்து முடிந்திருக்கும் ஒரு படி நெல்லை அரைத்தால் அரைப்படி அரிசி தேறும்; குருணை, தவிடு, உமி எல்லாம் விலை போகக்கூடியவைதான். சொதப்பலான ஒப்பந்தம் எப்படி இருக்கும் என்றால், ஒரு படி நெல்லுக்கு அரைப்படியை விட 10% குறைந்தால், பரவாயில்லை. 10% க்கு மேல் குறைந்தால் ஒரு கிலோவுக்கு ஒரு ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று பகிங்கரமாக அறிவித்து விடுவார்கள். திருடுவதற்கு, இதை விடச் சுகமான வழியே தேவையில்லை. ஒரு படி நெல்லுக்கு கால்படி அரிசி கொடுத்துவிட்டு, கால் படி அரிசி வேஸ்ட் ஆனதாகச்சொல்லி, அபராதத்தை டீக் ஆகக் கட்டி விடுவார்கள். நான் இந்தத் தந்திரத்தைக் கண்டது ஒரிசாவில்; இங்கு உள்ளவர்கள் அப்படி சேமித்த அரிசியைக் கேரளாவுக்கு அனுப்பி வந்தார்களோ? நான் சொல்வதைத் தப்பாக நினைக்காதீர்கள். உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வதில் நமக்கு இணை நாம் மட்டும்தான். அது தவிர யான் ஒன்றும் அறியேன், பராபரமே!

    innampuran

    தணிக்கைத்துறையில் இதை மோப்பம் பிடித்து, அபராத விழுக்காடு திருடுவதற்கு ஊக்கத்தொகையாகப் பணிபுரிகிறது என்று நாங்கள் பொதுக்கணக்கு மன்றத்தில் புரியவைப்பது பெரும்பாடாகப் போய்விட்டது என்றாலும், அந்தத் துறை காரியதரிசி, ‘ஆடிட் சொல்வது உண்மையே. எங்களை இதைத் திருத்தவதை மேலா அனுமதிப்பதில்லை; ஆனால் ஆடிட் கூற்றை வைத்தே, அபராத விழுக்காட்டை ஐந்து மடங்கு உயர்த்திவிடுவோம் என்றார்.

    எதற்கு சொல்ல வரேன் என்றால்…. பாருங்களேன்!

    அடிக்கடி சென்னையில் காணப்படும் விருதா காட்சி ஒன்று: ‘ஆவின் பால் ஒப்பந்தவண்டி. அவசரம். வழி விடவேண்டும்.’ என்ற பதாகையுடன் வலம் வரும் லாரிகள். அவற்றில் பல நடுவழியில் நின்று நிதானமாக ரயில் இஞ்சின் மாதிரித் தண்ணிப்போட்டது வேறு சமாசாரம். இந்தியாவில் நடக்கும் பல ஊழல்கள், லஞ்ச வாவண்யங்கள் மக்களின் ஒத்துழைப்பால் தான் ரயில்மேட்டுக் கத்தாழையாக வாழ்கின்றன.

    அரசு நிர்வாகமோ, தனியார் துறையோ, தன்னார்வக்குழுவோ, ஊழியர்கள் ‘கடைத்தேங்காயை எடுத்து தனது சமையலறையில் உடைத்து சட்னி செய்து ‘கொட்டிப்போம்.’ என்றால், பயிரை மேயும் வேலிகள் கைகட்டி நிற்கும்.

    இந்த ஆடிட் ரிப்போர்ட்டை பாருங்கள். ஜம்மு-காஷ்மீர் காவல்துறை மாவட்ட அதிகாரிகள் ஊழல் தூள் கிளப்பியிருக்கிறார்கள்.

    1. 29 அலுவலகங்களில் 9 அலுவலகங்களின் ஆவணங்களை, தணிக்கைக்கு வந்த செலவு ஆவணங்கள், ஊர்தி ரிஜிஸ்டிரேஷன் அலுவலகத்து ஆவணங்களுடன் இணைத்துப் பரிசோதனை செய்த போது, பஜாஜ், சேடக்,, வெஸ்பா, ஆக்டிவா வகையறா ஸ்கூட்டர்கள்,  புல்லட், ஹீரோ ஹோண்டா மோட்டார் சைகிள், செத்துப்போன வண்டிகள் (சாம்பிள்: டாட்டா சுமோ JKB 5826), டிராக்டர், புல்டோசர் எல்லா  வகையான வண்டிகளை நாலுகால் ப்ளெஷர் கார் எனப் பொய்க்கணக்கு எழுதி, துட்டு சம்பாதித்ததாக ‘பகீர்’ நிரூபணம்;
    2. ஊர்தி ரிஜிஸ்டிரேஷன் அலுவலகத்துக்கண்களில் படாத நம்பர் சில வண்டிகள் கணக்கில்!;
    3. டூப்ளிகேட் பில்களுக்குத் தெரிந்தே பொய்க்கணக்கு எழுதிப் பட்டுவாடா;
    4. ஒன்பது மாவட்டங்களில் வண்டி வாடகை கொடுத்தது 57.37 கோடி ரூபாய். வருமான வரி கழிக்காமல் விட்டது: 6.75 லக்ஷம் ரூபாய். இது பெரிதாகப்படாவிட்டாலும், எல்லா 29 மாவட்டங்களில் என்ன என்ன நடந்ததோ?
    5. இப்படி மானாவாரியாக வண்டிகளை வாடகைக்கு எடுப்பதற்குக் கெடு: 24 12 2014.
      அதை மதிக்காமல் ஜம்மு மாவட்டத்தில் 771 வண்டிகள் வாடகைக்கு   எடுக்கப்பட்டன.
    1. விதித்த அளவுக்கு மீறி வண்டிகளை வாடகைக்கு எடுத்ததில் ஒரு நாளைக்கு அதிகப்படி செலவு: 25.89 லக்ஷம் ரூபாய்கள்.

    இப்படிப் போகிறது கதை. எல்லா மாநிலங்களிலும் இதன் பிரதிபலிப்பைக் காணலாம். சொன்னால் பொல்லாப்பு! இந்த ஆடிட் புண்ணியவான்கள் இப்படி பல துறைகளின் ஆவணங்களை அலசி, இந்த கந்தரகூளத்தை அம்பலத்துக்குக் கொண்டு வரலாமா?

    ஒரு ஐடியா தோன்றது. வண்டி வாங்காமல், பில்லை மட்டும் (லஞ்சம் கொடுத்து) வாங்கி, ஒரு பினாமி வாடகையாக அதை கற்பனையில் விட்டு துட்டு சம்பாதிக்கலாமா? ஆடிட் ஒழிக என்று கூச்சல் போடலாமா?

    -#-

    படித்தது:

    http://www.dailyexcelsior.com/2-wheelers-bulldozers-pvt-cars-govt-vehicles-hired-as-taxis/

    சித்திரத்துக்கு நன்றி:

    http://1.imimg.com/data/V/R/MY-1534782/Lorry_Receipt_500x500.jpg

    இன்னம்பூரான்
    http://innamburan.blogspot.co.uk
    http://innamburan.blogspot.de/view/magazine
    www.olitamizh.com

     

    Share
  • நாட்டுப்புற மக்கள் கையாளும் மருத்துவம்

    -க.பிரகாஷ்  

    ஒவ்வொரு மனிதச் சமுதாயமும்  தனக்கென ஒரு மருத்துவ அமைப்பு முறையைக் கொண்டுள்ளது. அதனைச் சமூக நிறுவனம் என்றே கூறலாம். நோயும் மருத்துவமும் மனித இனப் பண்பாட்டு வரலாற்றில் பிரிக்க முடியாததாகும். நாட்டுப்புற மக்கள் கையாளும் மருத்துவ முறைகளை நாட்டுப்புற மருத்துவம் என்பர். இவற்றை “கை வைத்தியம், நாட்டு வைத்தியம், பாட்டி வைத்தியம், மூலிகை மருத்துவம், வீட்டு வைத்தியம், பரம்பரை வைத்தியம், பச்சிலை வைத்தியம், இயற்கை வைத்தியம் என்றெல்லாம்”கூறுவார். (ETHNO MEDICINE, FOLK MEDICINE, POPULAR MEDICINE, POPULAR HEALTH CULTURE, ETC.,) மிகப் பழமையான மருத்துவ முறை என்று ஆயூர்வேத மருத்துவ முறையைக் குறிப்பிடுவார். நாட்டுப்புற மருத்துவம் வேத காலத்திலேயே நடைமுறையில் இருந்தது.

    நாட்டுப்புற மருத்துவமுறை பற்றி இந்திய நாட்டில் விரிந்த ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை. பழங்குடிகளை ஆராய்ந்து மேலைநாட்டு மானிடவியலறிஞர்கள் நாட்டுப்புற மருத்துவம் பற்றிச் சில குறிப்புகளை எழுதியுள்ளனார். இம்மருத்துவ முறை கிராமப்புற மக்களின் பண்பாட்டோடும், பழக்கவழக்கத்தோடும் சமூக அமைப்போடும் பின்னிப்பிணைந்துள்ளது. அவர்களது நம்பிக்கைக் கேற்ப நவீன மருத்துவ முறைகளையும் மேற்கொள்கின்றனா். பழங்குடி மக்களிடையேயும் நாட்டுப்புற மருத்துவம் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

    அவை…

    வீட்டு வைத்தியம்

    சுக்கு, மிளகு, இஞ்சி, மஞ்சள் போன்றவை வீட்டுப் trikadukamபுழக்கத்திற்கான பொருள்கள். இவை நோய்களைத் தீா்க்கும் மருத்துவ குணம் பெற்றவையாகவும் திகழ்கின்றன. வீட்டுச் சமையலுக்கான பயன்பாட்டுப் பொருள்களே மருந்துகளாகி நோய்களைப் போக்க உதவியதால் இது வீட்டு வைத்தியம் எனப் பெயர்பெற்றது. தங்களது அனுபவத்தின் அடிப்படையில் செய்திருக்கும் மருத்துவம் வீட்டு வைத்தியமாகும்.

    பரம்பரை வைத்தியம்

    தந்தை மகனுக்குச் சொல்ல மகன் அவன் மகனுக்குச் சொல்ல ஒரு தலைமுறை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொன்ன தொழில் முறையான மருத்துவ முறை பரம்பரை வைத்தியம் ஆகும்.

    இயற்கை வைத்தியம்

    ஒவ்வொரு மனிதனிடமும் நோய் வராமல் தடுக்கும் சக்தியும், நோய்வந்தால் அதனைத் தடுக்கும் சக்தியும் இயற்கையாகவே அமைந்துள்ளது. இது இயற்கை மருத்துவம் ஆகும்.

    மூலிகை வைத்தியம்

    மருத்துவ குணங்கள் அடங்கிய செடி, கொடி, வேர், தாவர வகைகளைக் கொண்டு நோய்களைப் போக்கும் மருத்துவமுறை மூலிகை வைத்தியம்  ஆகும்.

    கை வைத்தியம்

    நாட்டு வைத்திய முறைகளில் கைப்பக்குவம் என்பது முக்கிய இடம் பெறுகிறது. மருந்துப் பொருள்களை இடிப்பதும் அரைப்பதும், மருத்துவச் செயல்களாகக் கொண்டு இருந்தனா். இடித்து அரைத்து மருந்துகளின் சீரான தன்மையைக் கைவிரல்களால் தொட்டுத் தடவிப் பார்த்து, அதன் பக்குவம் அறியப்படுகிறது. மருந்தின் அளவை ஒரு கைப்பிடி அல்லது ஒரு சிட்டிகை என்று சொல்லும் போக்கு கிராமங்களில் உண்டு. மருந்தைப் பதம்பார்க்க கைப்பக்குவம் பயன்படுவதால் நாட்டு மருத்துவத்திற்குக் கை வைத்தியம் எனப் பெயா் வந்தது. தனக்கு வந்த நோயைத் தானே போக்கிக் கொள்வதற்குக் கை வைத்தியமே ஒரு முக்கியப் பங்காக அமைகிறது.

    பச்சிலை வைத்தியம்

    செடி வகையைச் சார்ந்த ஒரு வகை மூலிகை பச்சிலை எனப்படும். தாவரத்தின் இலைகள் நல்ல மணத்துடன் கசக்கினால் சாறு வரக்கூடியதாக இருக்கும். இதன் இலைகளும், விதைகளும், மருத்துவ குணமுடையவையாகச் சொல்லப்படுகிறது. தலைவலி, இருமல் போன்ற நோய்களுக்குப் பச்சிலை நல்ல மருந்தாகப் பயன்படுகிறது. நோய்களைத் தீா்ப்பதால் இதற்குப் பச்சிலை வைத்தியம் என்று பெயா்வந்தது.

    எ.கா.

    அம்மை : வேப்ப இலை மீது படுக்கச் செய்தல்.

    காது வலி : சுரைக்காய் இலைச் சாற்றைக் கசக்கிக் காதில் விடுதல்.

    முதுகு வலி : புளியந் தழையை  ஒட்டுதல்.

    இராஜ வைத்தியம்

    மன்னர்கள் காலத்தில் மன்னனுக்கு மருத்துவம் பார்க்கும் அரண்மனை மருத்துவா் இராஜ வைத்தியா் என்றழைக்கப்பட்டார். புகழ்பெற்ற மருத்துவா் அவிசென்னா அரபி மன்னரின் அரசவை  மருத்துவராக 16 வது வயதில் நியமிக்கப்பட்டார் என்னும் செய்தி மூலம் அக்காலத்தில் அரண்மனை மருத்துவா்களின் முக்கியத்துவம் தெளிவாகிறது. அரசரின் நோய் தீா்க்கும் மருத்துவா் எடுத்துக்கொள்ளும் பெரும் முயற்சியையும் மருத்துவத்திற்கு உண்டாகும் பெரும் பொருள் செலவையும் மனதிற் கொள்ளும் மருத்துவமுறை இராஜ வைத்தியமாகும். 

    இரகசிய மருத்துவம்

    நோயைக் குணமாக்கும் மருந்து மற்றும் அந்த மருத்துவ முறைகளை வெளியில் சொல்லாமல் தொழில்முறையில் செய்துவரும் மருத்துவ முறை இரகசிய மருத்துவ முறையாகும்

    பாட்டி வைத்தியம்

    உணவே மருந்து” என்பது அனுபவ மொழி.

    சுக்கு, மிளகு, இஞ்சி, மஞ்சள், கீரை வகைகள் ஆகியவை மருத்துவ குணங்கள் மிக்கவையாகக் கருதப்படுகிறது. காலங்காலமாக வீட்டின் உணவுக் கூடங்கள் பெண்களின் பொறுப்பில் இருந்து வருவதால் இம்மருத்துவப் பயன்பாடுகளைப் பெரிதும் அவா்கள் அரிந்திருப்பார்கள்.

    உணவு வகைகள் பல குழந்தைகளுக்கு ஒத்துக் கொள்ளும். சிலரின் உடம்புக்கு ஒத்துக்கொள்ளாமல் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். இவற்றை அருகிலிருந்து பார்த்துத் தம் பட்டறிவால் அதனைச் சரிசெய்ய முயல்வதில் தாயே முதலிடம் வகிக்கிறாள். இதுவே பழக்கவழக்கமானது. எனவே இதற்குப் பாட்டி வைத்தியம் எனப் பெயா் வந்திருக்கலாம்.

    ஒரு நோயை குணப்படுத்துவதற்கு அக்காலத்தில் மரப்பட்டைகள், உணவுப்பொருட்கள், பச்சிலைகள், வேர்கள், கசாயம், காய்கள், கனிகள், செடிகள், தாவரக் கொழுந்துகள், தாவரங்களின் (பால்), பழங்கள், கீரைகள், போன்றவை பயன்படுத்தப்பட்டன. சிறு குழந்தைகளில் இருந்து பெரியவா்கள் வரையும் இம்மருத்துவமுறையைப் பயன்படுத்தி நோய்களை குணப்படுத்தி வருவதுண்டு.

    இது மட்டுமல்லாமல் கிராம மக்கள் நம்பிக்கை சார்ந்த மருத்துவத்தையும் பயன்படுத்துவது உண்டு. மருத்துவா் கூறும் மந்திரங்களை வெளியில் சொன்னால் நோய் குணமடையாது (பலிக்காது) என்று குறிப்பிடுவதும் உண்டு. அவர்கள் பயன்படுத்தும் மந்திரங்களை வேறு யாவரும் பயன்படுத்தமுடியாது. அவர் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு மட்டுமே இம்மந்திரம் சொல்லிக் கொடுக்கப்படும். இம்மருத்துவத்தைப் பரம்பரை மருத்துவம் என்று குறிப்பிடுகின்றனர்.

    இன்றைய காலக்கட்டத்தில் ஆங்கில மருத்துவம் அளவுகடந்து இருந்தாலும் சில மலைவாழ் மக்களும், கிராம மக்களும் இவ்வகையான நாட்டு மருத்துவத்தைக் கைவிடுவதில்லை.

    ***

    பார்வை நூல்கள்

    • நாட்டுப்புற இயல் ஆய்வு – சத்திவேல்.சு
    • நாட்டு மருத்தவம் – சந்திரன்.ந

    ***

    க.பிரகாஷ் எம்.ஏ, எம்பிஃல்,
    தமிழ்த்துறை
    தொழில்நுட்பக் கள ஆய்வுப் பணியாளர்
    பாரதியார் பல்கலைக்கழகம்
    கோயம்புத்தூர் – 46

     

     

     

    Share
  • திருமந்திரம் – 2

    பா. மஞ்சுளா

    திருமந்திரம் ………..  திரைவிலகட்டும்

    திருமூலரின் வாழ்வும் வாக்கும் 

    திருமூலர் (1)

    தோத்திர நூல்கள் எனக் கூறும் சைவ  திருமுறைகள் பன்னிரண்டனுள் திருமந்திரம் பத்தாவது. ஏனைய திருமுறைகளைச் சேய் என்றால் பத்தாம் திருமுறையை தாய் எனலாம்.

    ‘சாத்திரங்களுக்கு சிறந்தது திருமூலர் தந்திரம் தோத்திரத்தில் சிறந்தது திருவாசகம் இவற்றை
    ஊன்றிக் கவனிக்கவும்’ என்று வள்ளலார் கூறுவார்.

    “திருவளர் திருஅம்பலத்திலே அந்நாள் செப்பிய
    மெய்ம் மொழிப்பொருளும்
    உருவளர் திருமந்திரத்திரு முறையால்.உணர்த்தி
    மெய்ம்மொழிப்பொருளும்

    கருவளர் அடியேன்உளத்திலே நின்று காட்டிய
    மெய்ம் மொழிப்பொருளும்
    மருவி என் உளத்தே நம்பி நான் இருக்கும்
    வண்ணமும் திருவுளம் அறியும்
    . திருவருட்பா   –  ஆறாம் திருமுறை 3527

    என வள்ளலார் திருமந்திரத்தின் சிறப்பை கூறுவர்.

    திருமூலர் வரலாறு :

    தெய்வச் சேக்கிழார் தம் திருத்தொண்டர் புராணத்தில் ,

    ” கயிலாயத்துஒரு சித்தர் பொதியில்சேர்வார்
    காவிரி சூழ் சாத்தனூர் கருதும் மூலன்”

    என தனது ‘திருமூலதேவ நாயனார் புராணம்’ என்ற பெயரில் திருமூலர் வரலாற்றைக் கூறுகிறார். திருகயிலையில் திரு நந்தி தேவரின் மாணவர்களில் ஒருவரான சிவயோகியார் ஒருவர் அகத்திய முனிவரை சந்திக்கவும், உலக நடைமுறை வாழ்வியலை அறியவும், தனது குருவான நந்தியின் ஆசியுடன் கயிலையை விட்டு பொதிகைக்குக் வந்தார். வரும் வழியில்  திருவாடுதுறையை அடைந்தார் அங்கே காவிரிக்கரையில் பசுக்கூட்டங்கள் மேய்க்கும் மேய்ப்பனான சாத்தனூர் மூலன் என்பவன் பாம்பு கடித்து இறந்து விட அப்பசுக் கூட்டமும் செய்வது அறியாது தவித்து நிற்க அவ்வழியே வந்த சிவயோகி பசுக்களின் துன்பம் போக்க சித்தருக்கே உரிய ஜீவகாருண்ய
    உணர்வுடன் தனது கூடு விட்டு கூடு பாயும் வித்தையின் முலம் யோகி தனது உடலை விட்டு
    மூலனின் உடலில் புகுந்து தனது உடலை ஒரு மறைவான இடத்தில் மறைத்து வைத்தார். பின்னர் அப்பசுகூட்டத்துக்கு நீருட்டி நிழலாற்றி அவற்றை காத்து மூலனின் ஊர் எல்லையிலேயே நின்றார்.பொழுது சாய்ந்தும் தன் கணவன் வரவில்லையே என நெஞ்சம் பதறடிக்கத் தேடிவந்த மூலனின் மனைவி ஊர் எல்லையில் இவர் நின்ற நிலையில் இருப்பதை கண்டு இவருக்கு
    தீங்கு நேர்ந்ததே என்று இவரது உடலைத் தீண்டினாள் அவரோ உனக்கும் எனக்கும் ஒரு தொடர்பும் இல்லை என்று விலகி அங்கு உள்ள ஒரு மரத்தின் அடியில் யோகத்தில் அமர்ந்தார்.

    இடையன் மனைவியோடு வந்த ஊரார் வினவ ?மூலன் உடலில் உள்ளே யோகி நடந்த உண்மையைக் கூறினார். ஊரார் அப்படி என்றால் உனது உடல் எங்கே ?என கேட்டதும் தனது உடலை மறைத்த இடம் தேடி யோகி காட்டுக்கு சென்றார் அங்கே சிவனின் திருவிளையாடலும் தொடங்கியது தன் உடம்பைத் தேடியும் காணாது சிந்தித்த போது சிவாகமப் பொருளைத் தம் வழியாகத் தமிழில் உரைக்கத் திருவுளம் கொண்ட இறைவனின் விளையாட்டு எனத் தெளிந்தார் .

    அதன் பின் திருவாவடுதுறை இறைவனை வணங்கி மேற்கே அமைந்திருக்கும் அரசமரத்தடியில் கீழ்ச் சிவயோக நிட்டை கூடிச் சிவாகமப் பொருளை ஓராண்டுக்கு ஒன்றாக

    ‘ஒன்றவன்தானே ‘என்று தொடங்கி மூவாயிரம்  ஆண்டுகளில் மூவாயிரம் திருமந்திரங்களை அருளினார் பின்னர் திருவருளால் திருக்கயிலை சேர்ந்தார்.

    நந்தி அருளாலே நாதனம் பேர் பெற்றோம்
    நந்தி.அருளாலே மூலனை நாடினர்
    நந்தி அருளாவது என் செயும் நாட்டினில்
    நந்தி வழிகாட்ட நானிருந்தேனே
    பாடல்__51

    யோக சித்தியால் திருமூலர் வாழ்ந்திருக்க வேண்டும் எனலாம் .மேற்கண்ட அவரது பாடலை
    அவரது வரலாற்றை கூறுகிறது.

    அகத்திய வைத்திய ரத்தின சுருக்கம் 360 என்ற நூலில் திரு மூலரை பற்றி வேறு ஒரு கதையும் உண்டு கதை எதுவாக இருந்தாலும் நமக்குக் கவலை இல்லை. அவரது பாடலே அவரை இவ்வுலகம் உள்ள வரை நிலை நிறுத்தும்.

    மூலன் உரை செய்த மூவாயிரம் தமிழ்
    மூலன் உரை செய்த முந்நூறு மந்திரம்.
    மூலன் உரை செய்த முப்பது உபதேசம்
    மூலன் உரை செய்த மூன்றும் ஒன்றாமே

    பாடல்___ 2997

    தொடருவோம்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . . ( 194 )

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்கள் !

    மற்றொரு வாரம் மலர்ந்தது. மற்றொரு மடல் பிறந்தது. மடலின் மூலமாக மனம் திறக்கும் சந்தர்ப்பம் மனதின் உணர்வுகளின் வடிகாலாகிறது.

    காலங்கள் மாறும்போது மனிதர்களின் கலாச்சாரமும் மாறுகிறது என்பது யதார்த்தம் ஆனால் அந்தக் கலாச்சார மாற்றத்தின் எல்லை எது என்பதே கேள்வியாகிறது. 1920ஆம், ஆண்டு உடுத்தப்பட்ட உடையின் கலாச்சாரம் 2016ஆம் ஆண்டு மாறிவிட்டது, ஆனால் மனிதர்களுடைய உறவுமுறை, மனிதர்களுடைய அடிப்படை கலாச்சாரம் மாறிவிட்டது என்று கூறிவிட முடியுமா ?

    காலத்தோடு மாற்றம் அடையக்கூடியவை சில மட்டுமே ! அனைத்தும் மாறி விட்டால் அதன்பின்பு மானிடம் என்பதன் அர்த்தமே மாறிவிடும்.

    மாற்றங்களை ஏற்று அனுசரித்து நடப்பதுதான் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அத்தியாவசியமானது என்பது ஒரு பொதுப்படையான கருத்து. அதற்காக மாற்றங்கள் அனைத்தும் சரியானவை என்று ஏற்றுக்கொள்ள முடியுமா ?

    அரசியல் என்பது மக்களின் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டிருத்தல் அவசியம்.. அம்மாற்றங்கள் மக்களின் வாழ்வின் முன்னேற்றத்திற்காக அமைந்திருப்பது அவசியம். அரசியல்வாதிகள் தமது நோக்கத்தை நிறைவேற்றி மக்களின் வாழ்வை முன்னேற்ற வேண்டுமானால் மக்களின் நம்பிக்கையைப் பெற்று அவர்களின் பிரதிநிதியாக செயற்படவேண்டும்.

    அத்தகைய பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்காக அவர்கள் எவ்வழியையும் கையாளலாம் என்பது நீதியாகுமா ? அடுத்தவர்களின் மீது ஏறி தாம் தமது இலட்சிய இலக்கை அடைந்து கொள்வது அரசியல் நாகரீகம் ஆகுமா ?

    இங்கேதான் மிக முக்கியமான கேள்வி எழுகிறது. “அரசியல் நாகரீகம்” என்பது என்ன ? இவ்வரசியல் நாகரீகம் காலத்தின் மாற்றத்தினால் மாறுபடுவதை ஜனநாயக நீரோட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஜீரணித்துக் கொள்ள முடியுமா ? காலமாற்றம் என்பது எவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதற்கு வரையறை வேண்டும்.

    உலகெங்கும் இன்றைய அரசியல் அரங்கின் நடப்பு ஓரளவு அச்சத்தை ஏற்படுத்துகிறது. அரசியல் நாகரீகம் என்பது இன்று தனது உண்மையான் அர்த்தத்தை இழந்து பதவி மோகம் கொண்டவர்களின் கைகளிலும், மொழிவெறி, இனவெறி, மதவெறி கொண்டவர்களின் கைகளிலும் பந்து போல உருட்டி விளையடப்படுவது போலத் தெரிகிறது.

    எப்படியாவது, எந்தவகையிலாவது பதவியைக் கைப்பற்றிக்கொண்டால் போதும் எனும் மனப்பான்மையில் இன்றைய முக்கிய ரசியல் பிரமுகர்கள் குறிப்பாக இம்மேலைத்தேச அரசியல் அரங்கிலே நடந்து கொள்கிறார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது.

    சமீபகாலங்களாக நடந்து வரும் அரசியல் நிகழ்வுகளும், அவ்வரசியல் அரங்கிலே மாற்றம் எனும் பெயரில் ஏற்படுத்தப்படும் நடவடிக்கைள் மனக்கிலேசத்தைத் தூண்டுபவையாகவே இருக்கிறது.

    ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து வெளியேற வேண்டும் எனும் கூக்குரல் வலுவடைந்து அது சர்வசனக் கருத்துக் கணிப்புக்கு விடுமளவிற்கு கூர்மையடைந்திருக்கிறது. இங்கிலாந்து ஜரோப்பிய ஒன்றியத்தில் இருப்பதா இல்லையா என்பதை அதுன் அனுகூலம், பிரதிகூலத்தின் அடிப்படையில் ஆராய்ந்து முடிவெடுப்பது இங்கிலாந்து மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமை என்பதை ஏற்றுக்கொள்ளும் அதேநேரம் வெளியேற வேண்டும் எனும் அணியில் வாதிடுவோரின் உட்கருத்து சிறிதளவு இனவெற்றியின் அடிப்படியில் அமைந்துள்ளதோ என்று எண்ணத்தோன்றுகிறது.

    அமெரிக்கத் தேர்தல் களத்தில் ஜனாதிபதி வேட்பாளராகத் தெரிவுசெய்யப்படுவதற்கு குடியரசுக் கட்சியின் சார்பில் வெகுவேகமாக, வெகு அமோகமாக முன்னேறிவரும் டொனால்ட் ட்ரம்ப் அவர்களின் கொள்கைப்பிரகடனங்கள் உலக நாடுகளில் இருந்து அமெரிக்காவை அந்நியப்படுத்துபவையாக இருந்தும் அவருக்கு அவரது கட்சியின் ஆதரவாளர்கள் மத்தியில் கிடைக்கும் ஆதரவு அச்சத்துடன் கூடிய ஒரு ஆச்சரியத்தைக் கொடுக்கிறது.

    இங்கிலாந்திலே அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் லண்டன் மாநகர மேயருக்கான தேர்தல் பிரச்சாரத்தில் தமது வெற்றிக்காக எதிர்வேட்பாளர் மீது அரசியல் நாகரீகத்துக்கு அப்பாற்பட்ட தளத்தில் பிரச்சாரங்களை மேற்கொள்வது போன்ற ஒரு நிலமை தென்படுகிறது.

    லண்டன் மேயர் தேர்தலில் பிரதான வேட்பாளர்களில் ஒருவரான லேபர் கட்சியின் சார்பில் போட்டியிடும் “சாடிக் கான்” எனும் பிரித்தானிய பிரஜையான இஸ்லாமியருக்கு வெற்றியீட்டக்கூடிய நிலமை தென்படுகிறது. அவரது செல்வாக்கைச் சரிப்பதற்காக கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளர் ” சாக் கோல்ட்சிமித்” என்பவரின் பிரச்சாரக்குழு “சாடிக் கான்” சில தீவிரவஅட்த இஸ்லாமியத் தலைவர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார் எனும் சர்ச்சையைக் கிளப்பி விட்டிருக்கிறார்கள்.

    “சாடிக் கான்” அவர்களது ஆதரவாளர்களில் ஒருவரான முன்னாள் லண்டன் மேயரான லேபர் கட்சியைச் சார்ந்த கென் லிவிங்ஸ்டன் அவர்கள் யூத மக்களுக்கெதிரான சில வாதங்களை வானொலிப் பேட்டியில் கூறியிருந்தார் என்பதற்காக அவரை லேபர் கட்சி தற்காலிகமாக தமது உறுப்பினர் எனும் அந்தஸ்த;இருந்து நீக்கியுள்ளார்கள்.

    இன்று அதுபற்றி வானொலிக்குப் பேட்டியளித்த தற்போதைய லண்டன் மேயர் “பொரிஸ் ஜான்சன்” நீக்கப்பட்ட உறுப்பினர் “சாடிக் கான்” அவர்களின் ஆதரவாளர் என்று கூறி , “சாடிக் கான்ன்” அவர்களையும் இச்சர்ச்சைக்குள் சம்மந்தப்படுத்த முயன்றிருக்கிறார்.

    “அரசியல் நாகரீகம்” என்பது தனிப்பட்ட தாக்குதல்களைத் தவிர்த்து மக்க்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை முதன்மைப்படுத்தி அவற்றிற்கான தீர்வுகளை முன்வைக்கும் கொௐகைகளின் அடிப்படையில் விவாதங்களை நடத்துவதே !

    ஆனால் இன்று நடப்பதோ மனதின் வினாக்களுக்கு விடையளிக்காமல் மேலும் கேள்விகளை தொடுத்துக் கொண்டிருக்கிறது.

    காலம் மாறட்டும், மனிதர்களும் மாறட்டும், மனிதாபிமானம் மாற முடியுமா ? அப்படி மாறினால் நாம் இன்னமும் எமக்கு மானிடர் எனும் முத்திரை குத்திக் கொண்டிருப்பது தகுமா ?

    அடுத்த மடலில் சந்திக்கும் வரை
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    வேண்டுதல் வெண்பா …..
    ————————————————–

    41b7340d-737c-4653-b6c3-8d04e1918f8d
    ”என்னதவம் செய்ததால், ஏறியது கன்றின்று
    கண்ணனவன் தோளில் குஷியாய், -மன்னவனே!
    திண்ணையாம் உன்னிரு, திண்தோள் சுமந்திடுவாய்,
    என்னையும் ஆயர்ஏ றே’’….கிரேசி மோகன்….

    Share
  • கம்பன் கழகம், காரைக்குடி மே மாதக் கூடடம் 2016

    கம்பன் கழகம், காரைக்குடி மே மாதக் கூடடம் 2016
    கம்பன் கழகம், காரைக்குடி
    67 ஆம் கூட்டம்

    அன்புடையீர்
    வணக்கம் கம்பன் புகழ் பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் மே மாதக் கூடடம் 7.5.2016 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு கல்லுக்கட்டி மேற்கு கிருஷ்ணா திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.

    3b4bec05-38cc-466c-8ef9-a19fd0ad433f
    நிகழ்நிரல்
    இறைவணக்கம் – செல்வி எம். கவிதா
    வரவேற்புரை- திரு. கம்பன் அடிசூடி
    கம்பராமாயணத்தில் இயற்கை- பொழிவு. திரு. தி.கி. வேதராஜா
    அந்தமானில் நடைபெற்ற கம்பராமாயண மூன்றாம் உலகத்தமிழ்க் கருத்தரங்கு பற்றியும்
    அந்தமான் கம்பன் கழகத்தி;ற்கு காரைக்குடி தாய் கம்பன் கழகச் சீராட்டு வழங்கித்
    தொடங்கி வைத்தமை குறித்த அறிக்கை முனைவர் மு.பழனியப்பன்
    கம்பராமாயணத்தில் தத்துவங்கள் பொழிவு- சுவாமி இராமகிருஷ்ணானந்தா
    நனறியுரை- பேரா. மா.சிதம்பரம்

    சிற்றுண்டி
    கம்பன் புகழ் பாடிக் கன்னித்தமிழ் வளர்க்க அன்பர்கள் யாவரும் வருக.
    அன்பம் பணிவுமுள்ள
    கம்பன் கழகத்தார்
    நிகழ்ச்சி உதவி
    தம் தாயார் காரைக்குடி மெ.செ. அ. பழ. அ. உண்ணாமலை ஆச்சி நினைவாக அவர்தம் புதல்வர் திரு. ப.அ. பழனியப்பன் – உண்ணாமலை தம்பதியருக்குப் பல்லாண்டு பல்லாண்டு

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    ஏக ரேகா கண்ணன்….
    ——————————

    452cdd2e-8d8e-466d-89b1-f772b9a2f66b

    “ஏகத்திற்(கு) ஏதுகை ரேகை, நாமெல்லாம்
    காகநிறக் கண்ணனின் கைபொம்மை, -போகவர,
    பூமத்ய ரேகையில் போட்டெடுத்து, ஏகாக்ர
    சூமந்த்ர காளி, சுகம்”….கிரேசி மோகன்….

    Share
  • பனியில் அழுக்கு படியாது

     
    மீ.விசுவநாதன்
    வாங்கும் கையாய் இல்லாமல் -தினம்
    வழங்கும் கையாய் இருந்திடணும் !
    தீங்கைத் தட்டிக் கேட்கின்ற – நல்ல
    தீரன் கையாய் பலப்படணும் !

    கண்ணீர் வழியும் கன்னத்தில் – பாசக்
    கைகள் நீண்டு துடைத்திடணும் !
    மண்ணைத் திருடும் கொள்ளையரை -உடன்
    மடக்கிப் பிடிக்க மனம்வரணும் !

    ஓட்டுப் போடும் முன்னாலே – ஓர்கணம்
    உயர்ந்த நாட்டை எண்ணிடனும் !
    நீட்டும் கையில் கறைகண்டால் -அதை
    நியாயத் தீயால் பொசுக்கிடணும்!

    மனிதன் எவர்க்கும் விலையுண்டு – மா
    மனிதர்க் கதிலே விலக்குண்டு !
    பனியில் அழுக்கு படியாது – தூய
    பணியில் ஊழல் நுழையாது !

    (26.04.2016 22.02pm)

    Share
  • சங்க இலக்கியத்தில் மொழிசார் வன்முறை

    -பா.சிவக்குமார்                                                                                   

    கி.பி. 21ஆம் நூற்றாண்டில் ஒன்றுபட்ட ஜனநாயகக் குடியரசான இந்தியாவில் வாழும் மக்களிடையே முல்லைப் பெரியாறு அணைநீரைப் பெறுவதற்கும், காவிரிநீரைப் பெறுவதற்கும் வழக்குமன்றத்தை நாடவேண்டியுள்ளது. மேக்கே தாட்டு (மேகதாது) எனும் இடத்தில் காவிரியின் குறுக்கே கர்நாடகத்தினர் அணைகட்டத் தீர்மானித்த நிலையிலேயே தமிழ், கன்னடம் என இருவேறு மொழி பேசுவோர் என்ற அடிப்படையில் கடையடைப்பு, பேருந்து நிறுத்தம் போன்ற அமைதியான வழிகளில் எதிர்ப்புத் தெரிவிக்கும் பொழுதுகூட பல நேரங்களில் கல்லெறிதல், கடை உடைப்பு, பேருந்தை எரித்தல், இருவேறு மொழி பேசுபவர்கள் அடித்துக் கொள்ளல், போன்ற வன்முறைகள் நிகழ்ந்துள்ளதைக் காணநேரிட்டது. முல்லைப் பெரியாறு பிரச்சனையின்போது சபரிமலைக்குச் சென்ற ஐயப்ப பக்தர்கள் மீது மலையாள மக்கள் வன்முறை நிகழ்த்தியுள்ளனர். இலங்கையில் சிங்களர்கள், தமிழர்கள் இடையே இன்றும் ஒற்றுமை ஏற்படாமல் ஆளும் வர்க்கம் அதிகாரத்தால் அடக்கியாளும் நிலையினையே கண்கூடாகக் காண்கிறோம். இது போன்ற மொழிசார் வன்முறை சங்கச் சமூகத்திலும் ஊடுருவி இருந்துள்ளமையை வெளிப்படுத்துவதாக இக்கட்டுரை அமைகிறது.

    tamil

                    சேர, சோழ, பாண்டியர் எனும் மூவேந்தர்களும் தமக்குள் சண்டையிட்டுக் கொண்டாலும் இம்மூவரின் நாடுகளிலும் பேசப்படும் மொழி தமிழ்மொழியாகும். ஆனால், இம்மூவேந்தர்களும் வேற்றுமொழி பேசும் நாட்டினரைப் போர் வன்முறையால் அழித்து, மிரட்டி அவர்களிடம் திறை பெற்றுள்ளமையைக் காணமுடிகின்றது. இதனை,

    “………………………………வென்றியொடு
    வில்லலைத் துண்ணும் வல்லான் வாழ்க்கைத்
    தமிழ்கெழு மூவர் காக்கும்
    மொழிபெயர் தேஎத்த பன்மலை இறந்தே
    ”         (அகம்.31:12-15)                             

    எனும் அகநானூற்றுப் பாடல் சான்று பகர்கின்றது. பிறமொழி பேசும் மக்களின் உழைப்பால் வந்த பொருட்களையும், அவர்களின் உரிமைகளையும் சுரண்டும் வன்செயல்களில் மூவேந்தர்களும் ஈடுபட்டிருந்தனர் என்பதை அறியமுடிகின்றது.

                    வேற்றுமொழிப் பேசுபவர்களைத் தன் ஆதிக்கத்தின் கீழ் அடிபணிய வைக்க வேலேந்திச் சென்றதனை,

    விலங்குஇருஞ் சிமையக் குன்றத்து உம்பர்,
    வேறுபல் மொழிய தேஎம் முன்னி,
    வினைநசைஇப் பரிக்கும் உரன்மிகு நெஞ்சமொடு
    புனைமாண் எஃகம் வலவயின் ஏந்தி
    ”                                       (அகம். 215:1-4)    

    என்ற பாடல் எடுத்தியம்புகின்றது. வேற்றுமொழி பேசுபவர்களைத் தன் ஆதிக்கத்தின் கீழ் அடிபணிய வைக்கும் பொருட்டுத் தமிழ்அரசர்கள் கரிய கேடயத்தை ஏந்திப் படைநடத்திச் சென்றுள்ளதை அகம். 67:12-14ஆம் பாடல் வெளிப்படுத்துகின்றது.

    மொழி அடிப்படையில் வேற்படையையுடைய ’கட்டி’ என்பவனுடைய நாட்டை ‘நல்லநாடு’ என்றும், வேற்றுமொழி பேசுபவர்களைப் பகைவர் நாடு என்றும் புலவர்கள் பதிவு செய்துள்ளமையை,

    குல்லைக் கண்ணி வடுகர் முனாஅது
    பல்வேற் கட்டி நன்னாட் டும்பர்
    மொழிபெயர் தேஎத்த ராயினும்
    ”                                 (குறுந்.11:5-7)                               

    என்ற பாடல் வழி அறிந்து கொள்ளலாம். இவ்வாறு புலவர்களும் வேற்றுமொழி பேசுபவர்களைப் பகைவர்களாகப் பார்க்கும் நிலையினைச் சங்கப்பாக்களின் வழி அறியலாம்.

    ஐ.நா.சபை போன்ற உலக சமாதான அமைப்பு, இந்திய தேசம் என்ற ஒருமைப்பாடு உள்ள நிலையிலேயே மொழிசார்  வன்முறைகள் நிகழ்கின்ற பொழுது சுமார் இருபது நூற்றாண்டுகளுக்குமுன் எத்தகைய வன்முறைகள் நிகழ்ந்திருக்கும் என்பதனைக் கற்பனைசெய்து பார்க்கமுடியாத அளவில் இருந்திருக்கும் என்பது உண்மை. அதனையே மேற்கண்ட பாடல்கள் வழி உணரமுடிகின்றது.

    ***

    பா.சிவக்குமார்,
    முனைவர்பட்ட ஆய்வாளர்,
    தமிழ்த்துறை,
    பாரதியார் பல்கலைக்கழகம்,
    கோவை, 641 046.

     

     

    Share