முனைவர் சங்கரராமன்

Man on top of mountain. Conceptual design.

“நீங்க நல்லவரா? கெட்டவரா?” தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற வசனம் .அதே போன்ற மற்றொரு வசனம் “அதில ஒருத்தன் என்னை ரொம்ப நல்லவனு சொல்லிட்டான்” எனும் வடிவேலு வசனம் . நல்லவனாக வாழ மெனக்கெடத் தேவையில்லை. இயல்பாக இருந்தாலே போதும் . நல்லவனாக நடிப்பதற்கே நிறைய மெனக்கெட வேண்டியிருக்கும். ஆனால் நல்லவர்களை விட நல்லவனாக நடிப்பவர்களையே உலகம் எளிதில் நம்பி விடுகிறது.

உணவு விடுதியில் பசித்துச் சாப்பிடுபவனை கேவலமாகப் பார்க்கும் சமூகத்தில் பாதியை தின்றுவிட்டு மீதியைத் தட்டிலே வைத்துவிட்டு எழுபவரை நாகரிகமாகப் பார்க்கும் கோமாளித்தனமான இந்த சமூகத்தில் நல்லவராக காட்டிக் கொள்ள நமக்குப் பிடித்த விஷயங்களை அடுத்தவர் என்ன நினைப்பாரோ என்ற நிலையிலேயே இழந்திருப்போம். யாரும் இல்லாத தனியறையில் சந்தோசமாக பாடலைப் போட்டு நடனமாடும்போது இருக்கும் மகிழ்ச்சியை யாரோ வந்து கதவைத் தட்டுகையில் குலைத்துவிடுகிறோம். தெரிந்தவர்கள் வீட்டில் கூட அன்போடு கொடுப்பவற்றை வாங்கிக்கொள்ள நமது குழந்தைகள் நம்மை திரும்பிப் பார்த்து வாங்கலாமா? என்று கேட்க வைக்கும் அவலத்தில் நமது நல்ல வளர்ப்பை யாருக்கு பதிவு செய்கிறோம். நல்ல மழையிலே நனைந்து கொண்டே ஐஸ் சாப்பிடுவது எனக்குப் பிடிக்கும். இதற்கு யாரிடம் அனுமதி கேட்பது? யாராவது பார்த்தால் என்ன நினைப்பார்களோ என்ற எண்ணம்.

யாரையும் குற்றம் சொல்வது எனது எண்ணமில்லை . மனசாட்சியை கேட்டுப் பாருங்கள். இந்த நிமிடம் வரை உங்களுக்கான உங்களுக்கு பிடித்த வாழ்க்கையை ஒரு நிமிடமாவது வாழ்ந்திருக்கிறீர்களா ?.. ஆம் என்றால் நீங்கள் நல்லவர்கள். இல்லை எனில் நீங்கள் கெட்டவர்கள். இது எனக்கும்தான்.

உங்கள் மனம் யாருக்காகவாவது உங்கள் வாழ்வை நிரூபிக்க வேண்டும் என்ற வகையில் வாழ நினைத்தால் நாம் நம் வாழ்வின் சுயத்தை இழக்க நேரிடும் ஆபத்தாகவே அமைந்துவிடும் . உண்மையில் உங்களுக்குப் பிடித்த ரசனையான வாழ்வை அடுத்தவருக்கு தீங்கிழைக்காத வாழ்வை வாழ்ந்திடுங்கள் .

உங்களை நல்லவர்கள் என்று பிறர் சொல்ல வேண்டும் என்பதற்காக உங்கள் மனசாட்சிக்கு விரோதமான வாழ்க்கையை வாழாதீர்கள்.

நிறைவாக யார் நல்லவன் என்பதை என் வள்ளுவன் துணைகொண்டு சொல்கிறேன். “மனத்துக்கண் மாசிலன் ஆதல் “நல்லவர்கள் .

மனதளவிலே கூட பிறருக்கு தீங்கு இல்லாத வாழ்வை வாழ்ந்தவர்களையே அவர்கள் இறந்த பின்னும் உலகம் போற்றி வருகிறது. உங்கள் வாழ்வு அமர வாழ்வாக வேண்டும் என்றால் நீங்கள் உங்கள் இயல்பைத் தொலைக்காத வாழ்வை வாழுங்கள்

பிறருக்காக வாழலாம்
பிறராகவே வாழ்ந்திடாதீர்கள்

சுயமே ஜெயம்

சதா பாரதி

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *