இன்னம்பூரான் பக்கம்: இந்திய தணிக்கைத்துறையும் நானும்

 -இன்னம்பூரான்

பொய்க்கணக்கு எளுதுவோம்லெ!

“…தணிக்கை என்பது காசுபணம் மட்டும் பார்க்காது வச்ச காசுக்கு ஆதாயம் இருக்கிறதா என்று தோண்டிப் பார்க்கும். நாக்கை பிடுங்கிறாப்பல நாலு கேள்வி கேட்கும்….”.

இந்த நாசமாப்போன ரேஷன் வந்தாலும் வந்தது, ஊழலும் அதன் கழுத்தைக்கட்டிக்கொண்டு வந்து உபத்ரவம் செய்தது. அரசு கொள்முதலில் நியாயவிலையில், ‘லாபம் ஒண்ணு..’ என்று நெல்லைப் படியளக்கும்போது, அதை உமி நீத்து, தவிடுத் தவிர்த்து அரிசியாக்கி மக்களுக்கு தருவதற்குள், ஒரு மோசடி நடந்து முடிந்திருக்கும் ஒரு படி நெல்லை அரைத்தால் அரைப்படி அரிசி தேறும்; குருணை, தவிடு, உமி எல்லாம் விலை போகக்கூடியவைதான். சொதப்பலான ஒப்பந்தம் எப்படி இருக்கும் என்றால், ஒரு படி நெல்லுக்கு அரைப்படியை விட 10% குறைந்தால், பரவாயில்லை. 10% க்கு மேல் குறைந்தால் ஒரு கிலோவுக்கு ஒரு ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று பகிங்கரமாக அறிவித்து விடுவார்கள். திருடுவதற்கு, இதை விடச் சுகமான வழியே தேவையில்லை. ஒரு படி நெல்லுக்கு கால்படி அரிசி கொடுத்துவிட்டு, கால் படி அரிசி வேஸ்ட் ஆனதாகச்சொல்லி, அபராதத்தை டீக் ஆகக் கட்டி விடுவார்கள். நான் இந்தத் தந்திரத்தைக் கண்டது ஒரிசாவில்; இங்கு உள்ளவர்கள் அப்படி சேமித்த அரிசியைக் கேரளாவுக்கு அனுப்பி வந்தார்களோ? நான் சொல்வதைத் தப்பாக நினைக்காதீர்கள். உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வதில் நமக்கு இணை நாம் மட்டும்தான். அது தவிர யான் ஒன்றும் அறியேன், பராபரமே!

innampuran

தணிக்கைத்துறையில் இதை மோப்பம் பிடித்து, அபராத விழுக்காடு திருடுவதற்கு ஊக்கத்தொகையாகப் பணிபுரிகிறது என்று நாங்கள் பொதுக்கணக்கு மன்றத்தில் புரியவைப்பது பெரும்பாடாகப் போய்விட்டது என்றாலும், அந்தத் துறை காரியதரிசி, ‘ஆடிட் சொல்வது உண்மையே. எங்களை இதைத் திருத்தவதை மேலா அனுமதிப்பதில்லை; ஆனால் ஆடிட் கூற்றை வைத்தே, அபராத விழுக்காட்டை ஐந்து மடங்கு உயர்த்திவிடுவோம் என்றார்.

எதற்கு சொல்ல வரேன் என்றால்…. பாருங்களேன்!

அடிக்கடி சென்னையில் காணப்படும் விருதா காட்சி ஒன்று: ‘ஆவின் பால் ஒப்பந்தவண்டி. அவசரம். வழி விடவேண்டும்.’ என்ற பதாகையுடன் வலம் வரும் லாரிகள். அவற்றில் பல நடுவழியில் நின்று நிதானமாக ரயில் இஞ்சின் மாதிரித் தண்ணிப்போட்டது வேறு சமாசாரம். இந்தியாவில் நடக்கும் பல ஊழல்கள், லஞ்ச வாவண்யங்கள் மக்களின் ஒத்துழைப்பால் தான் ரயில்மேட்டுக் கத்தாழையாக வாழ்கின்றன.

அரசு நிர்வாகமோ, தனியார் துறையோ, தன்னார்வக்குழுவோ, ஊழியர்கள் ‘கடைத்தேங்காயை எடுத்து தனது சமையலறையில் உடைத்து சட்னி செய்து ‘கொட்டிப்போம்.’ என்றால், பயிரை மேயும் வேலிகள் கைகட்டி நிற்கும்.

இந்த ஆடிட் ரிப்போர்ட்டை பாருங்கள். ஜம்மு-காஷ்மீர் காவல்துறை மாவட்ட அதிகாரிகள் ஊழல் தூள் கிளப்பியிருக்கிறார்கள்.

 1. 29 அலுவலகங்களில் 9 அலுவலகங்களின் ஆவணங்களை, தணிக்கைக்கு வந்த செலவு ஆவணங்கள், ஊர்தி ரிஜிஸ்டிரேஷன் அலுவலகத்து ஆவணங்களுடன் இணைத்துப் பரிசோதனை செய்த போது, பஜாஜ், சேடக்,, வெஸ்பா, ஆக்டிவா வகையறா ஸ்கூட்டர்கள்,  புல்லட், ஹீரோ ஹோண்டா மோட்டார் சைகிள், செத்துப்போன வண்டிகள் (சாம்பிள்: டாட்டா சுமோ JKB 5826), டிராக்டர், புல்டோசர் எல்லா  வகையான வண்டிகளை நாலுகால் ப்ளெஷர் கார் எனப் பொய்க்கணக்கு எழுதி, துட்டு சம்பாதித்ததாக ‘பகீர்’ நிரூபணம்;
 2. ஊர்தி ரிஜிஸ்டிரேஷன் அலுவலகத்துக்கண்களில் படாத நம்பர் சில வண்டிகள் கணக்கில்!;
 3. டூப்ளிகேட் பில்களுக்குத் தெரிந்தே பொய்க்கணக்கு எழுதிப் பட்டுவாடா;
 4. ஒன்பது மாவட்டங்களில் வண்டி வாடகை கொடுத்தது 57.37 கோடி ரூபாய். வருமான வரி கழிக்காமல் விட்டது: 6.75 லக்ஷம் ரூபாய். இது பெரிதாகப்படாவிட்டாலும், எல்லா 29 மாவட்டங்களில் என்ன என்ன நடந்ததோ?
 5. இப்படி மானாவாரியாக வண்டிகளை வாடகைக்கு எடுப்பதற்குக் கெடு: 24 12 2014.
  அதை மதிக்காமல் ஜம்மு மாவட்டத்தில் 771 வண்டிகள் வாடகைக்கு   எடுக்கப்பட்டன.
 1. விதித்த அளவுக்கு மீறி வண்டிகளை வாடகைக்கு எடுத்ததில் ஒரு நாளைக்கு அதிகப்படி செலவு: 25.89 லக்ஷம் ரூபாய்கள்.

இப்படிப் போகிறது கதை. எல்லா மாநிலங்களிலும் இதன் பிரதிபலிப்பைக் காணலாம். சொன்னால் பொல்லாப்பு! இந்த ஆடிட் புண்ணியவான்கள் இப்படி பல துறைகளின் ஆவணங்களை அலசி, இந்த கந்தரகூளத்தை அம்பலத்துக்குக் கொண்டு வரலாமா?

ஒரு ஐடியா தோன்றது. வண்டி வாங்காமல், பில்லை மட்டும் (லஞ்சம் கொடுத்து) வாங்கி, ஒரு பினாமி வாடகையாக அதை கற்பனையில் விட்டு துட்டு சம்பாதிக்கலாமா? ஆடிட் ஒழிக என்று கூச்சல் போடலாமா?

-#-

படித்தது:

http://www.dailyexcelsior.com/2-wheelers-bulldozers-pvt-cars-govt-vehicles-hired-as-taxis/

சித்திரத்துக்கு நன்றி:

http://1.imimg.com/data/V/R/MY-1534782/Lorry_Receipt_500x500.jpg

இன்னம்பூரான்
http://innamburan.blogspot.co.uk
http://innamburan.blogspot.de/view/magazine
www.olitamizh.com

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “இன்னம்பூரான் பக்கம்: இந்திய தணிக்கைத்துறையும் நானும்

 1. பிரசுரத்துக்கு நன்றி. தணிக்கை சுட்டும் குற்றங்களை காலாவட்டத்தில் மக்கள் மறன்ந்து விடுவார்கள் என்று அரசுத்துறைகள் வாளா இருப்பார். இந்த குற்றச்சாட்டை தீவிரமாக எடுத்துக்கொண்டு, விசாரணை தொடங்கியுளனர். அதையும் பகிர்ந்து கொள்கிறேன்.
  இன்னம்பூரான்

Leave a Reply

Your email address will not be published.