பா. மஞ்சுளா

திருமந்திரம் ………..  திரைவிலகட்டும்

திருமூலரின் வாழ்வும் வாக்கும் 

திருமூலர் (1)

தோத்திர நூல்கள் எனக் கூறும் சைவ  திருமுறைகள் பன்னிரண்டனுள் திருமந்திரம் பத்தாவது. ஏனைய திருமுறைகளைச் சேய் என்றால் பத்தாம் திருமுறையை தாய் எனலாம்.

‘சாத்திரங்களுக்கு சிறந்தது திருமூலர் தந்திரம் தோத்திரத்தில் சிறந்தது திருவாசகம் இவற்றை
ஊன்றிக் கவனிக்கவும்’ என்று வள்ளலார் கூறுவார்.

“திருவளர் திருஅம்பலத்திலே அந்நாள் செப்பிய
மெய்ம் மொழிப்பொருளும்
உருவளர் திருமந்திரத்திரு முறையால்.உணர்த்தி
மெய்ம்மொழிப்பொருளும்

கருவளர் அடியேன்உளத்திலே நின்று காட்டிய
மெய்ம் மொழிப்பொருளும்
மருவி என் உளத்தே நம்பி நான் இருக்கும்
வண்ணமும் திருவுளம் அறியும்
. திருவருட்பா   –  ஆறாம் திருமுறை 3527

என வள்ளலார் திருமந்திரத்தின் சிறப்பை கூறுவர்.

திருமூலர் வரலாறு :

தெய்வச் சேக்கிழார் தம் திருத்தொண்டர் புராணத்தில் ,

” கயிலாயத்துஒரு சித்தர் பொதியில்சேர்வார்
காவிரி சூழ் சாத்தனூர் கருதும் மூலன்”

என தனது ‘திருமூலதேவ நாயனார் புராணம்’ என்ற பெயரில் திருமூலர் வரலாற்றைக் கூறுகிறார். திருகயிலையில் திரு நந்தி தேவரின் மாணவர்களில் ஒருவரான சிவயோகியார் ஒருவர் அகத்திய முனிவரை சந்திக்கவும், உலக நடைமுறை வாழ்வியலை அறியவும், தனது குருவான நந்தியின் ஆசியுடன் கயிலையை விட்டு பொதிகைக்குக் வந்தார். வரும் வழியில்  திருவாடுதுறையை அடைந்தார் அங்கே காவிரிக்கரையில் பசுக்கூட்டங்கள் மேய்க்கும் மேய்ப்பனான சாத்தனூர் மூலன் என்பவன் பாம்பு கடித்து இறந்து விட அப்பசுக் கூட்டமும் செய்வது அறியாது தவித்து நிற்க அவ்வழியே வந்த சிவயோகி பசுக்களின் துன்பம் போக்க சித்தருக்கே உரிய ஜீவகாருண்ய
உணர்வுடன் தனது கூடு விட்டு கூடு பாயும் வித்தையின் முலம் யோகி தனது உடலை விட்டு
மூலனின் உடலில் புகுந்து தனது உடலை ஒரு மறைவான இடத்தில் மறைத்து வைத்தார். பின்னர் அப்பசுகூட்டத்துக்கு நீருட்டி நிழலாற்றி அவற்றை காத்து மூலனின் ஊர் எல்லையிலேயே நின்றார்.பொழுது சாய்ந்தும் தன் கணவன் வரவில்லையே என நெஞ்சம் பதறடிக்கத் தேடிவந்த மூலனின் மனைவி ஊர் எல்லையில் இவர் நின்ற நிலையில் இருப்பதை கண்டு இவருக்கு
தீங்கு நேர்ந்ததே என்று இவரது உடலைத் தீண்டினாள் அவரோ உனக்கும் எனக்கும் ஒரு தொடர்பும் இல்லை என்று விலகி அங்கு உள்ள ஒரு மரத்தின் அடியில் யோகத்தில் அமர்ந்தார்.

இடையன் மனைவியோடு வந்த ஊரார் வினவ ?மூலன் உடலில் உள்ளே யோகி நடந்த உண்மையைக் கூறினார். ஊரார் அப்படி என்றால் உனது உடல் எங்கே ?என கேட்டதும் தனது உடலை மறைத்த இடம் தேடி யோகி காட்டுக்கு சென்றார் அங்கே சிவனின் திருவிளையாடலும் தொடங்கியது தன் உடம்பைத் தேடியும் காணாது சிந்தித்த போது சிவாகமப் பொருளைத் தம் வழியாகத் தமிழில் உரைக்கத் திருவுளம் கொண்ட இறைவனின் விளையாட்டு எனத் தெளிந்தார் .

அதன் பின் திருவாவடுதுறை இறைவனை வணங்கி மேற்கே அமைந்திருக்கும் அரசமரத்தடியில் கீழ்ச் சிவயோக நிட்டை கூடிச் சிவாகமப் பொருளை ஓராண்டுக்கு ஒன்றாக

‘ஒன்றவன்தானே ‘என்று தொடங்கி மூவாயிரம்  ஆண்டுகளில் மூவாயிரம் திருமந்திரங்களை அருளினார் பின்னர் திருவருளால் திருக்கயிலை சேர்ந்தார்.

நந்தி அருளாலே நாதனம் பேர் பெற்றோம்
நந்தி.அருளாலே மூலனை நாடினர்
நந்தி அருளாவது என் செயும் நாட்டினில்
நந்தி வழிகாட்ட நானிருந்தேனே
பாடல்__51

யோக சித்தியால் திருமூலர் வாழ்ந்திருக்க வேண்டும் எனலாம் .மேற்கண்ட அவரது பாடலை
அவரது வரலாற்றை கூறுகிறது.

அகத்திய வைத்திய ரத்தின சுருக்கம் 360 என்ற நூலில் திரு மூலரை பற்றி வேறு ஒரு கதையும் உண்டு கதை எதுவாக இருந்தாலும் நமக்குக் கவலை இல்லை. அவரது பாடலே அவரை இவ்வுலகம் உள்ள வரை நிலை நிறுத்தும்.

மூலன் உரை செய்த மூவாயிரம் தமிழ்
மூலன் உரை செய்த முந்நூறு மந்திரம்.
மூலன் உரை செய்த முப்பது உபதேசம்
மூலன் உரை செய்த மூன்றும் ஒன்றாமே

பாடல்___ 2997

தொடருவோம்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க