இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . . ( 194 )

சக்தி சக்திதாசன்

அன்பினியவர்களே !

அன்பான வணக்கங்கள் !

மற்றொரு வாரம் மலர்ந்தது. மற்றொரு மடல் பிறந்தது. மடலின் மூலமாக மனம் திறக்கும் சந்தர்ப்பம் மனதின் உணர்வுகளின் வடிகாலாகிறது.

காலங்கள் மாறும்போது மனிதர்களின் கலாச்சாரமும் மாறுகிறது என்பது யதார்த்தம் ஆனால் அந்தக் கலாச்சார மாற்றத்தின் எல்லை எது என்பதே கேள்வியாகிறது. 1920ஆம், ஆண்டு உடுத்தப்பட்ட உடையின் கலாச்சாரம் 2016ஆம் ஆண்டு மாறிவிட்டது, ஆனால் மனிதர்களுடைய உறவுமுறை, மனிதர்களுடைய அடிப்படை கலாச்சாரம் மாறிவிட்டது என்று கூறிவிட முடியுமா ?

காலத்தோடு மாற்றம் அடையக்கூடியவை சில மட்டுமே ! அனைத்தும் மாறி விட்டால் அதன்பின்பு மானிடம் என்பதன் அர்த்தமே மாறிவிடும்.

மாற்றங்களை ஏற்று அனுசரித்து நடப்பதுதான் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அத்தியாவசியமானது என்பது ஒரு பொதுப்படையான கருத்து. அதற்காக மாற்றங்கள் அனைத்தும் சரியானவை என்று ஏற்றுக்கொள்ள முடியுமா ?

அரசியல் என்பது மக்களின் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டிருத்தல் அவசியம்.. அம்மாற்றங்கள் மக்களின் வாழ்வின் முன்னேற்றத்திற்காக அமைந்திருப்பது அவசியம். அரசியல்வாதிகள் தமது நோக்கத்தை நிறைவேற்றி மக்களின் வாழ்வை முன்னேற்ற வேண்டுமானால் மக்களின் நம்பிக்கையைப் பெற்று அவர்களின் பிரதிநிதியாக செயற்படவேண்டும்.

அத்தகைய பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்காக அவர்கள் எவ்வழியையும் கையாளலாம் என்பது நீதியாகுமா ? அடுத்தவர்களின் மீது ஏறி தாம் தமது இலட்சிய இலக்கை அடைந்து கொள்வது அரசியல் நாகரீகம் ஆகுமா ?

இங்கேதான் மிக முக்கியமான கேள்வி எழுகிறது. “அரசியல் நாகரீகம்” என்பது என்ன ? இவ்வரசியல் நாகரீகம் காலத்தின் மாற்றத்தினால் மாறுபடுவதை ஜனநாயக நீரோட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஜீரணித்துக் கொள்ள முடியுமா ? காலமாற்றம் என்பது எவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதற்கு வரையறை வேண்டும்.

உலகெங்கும் இன்றைய அரசியல் அரங்கின் நடப்பு ஓரளவு அச்சத்தை ஏற்படுத்துகிறது. அரசியல் நாகரீகம் என்பது இன்று தனது உண்மையான் அர்த்தத்தை இழந்து பதவி மோகம் கொண்டவர்களின் கைகளிலும், மொழிவெறி, இனவெறி, மதவெறி கொண்டவர்களின் கைகளிலும் பந்து போல உருட்டி விளையடப்படுவது போலத் தெரிகிறது.

எப்படியாவது, எந்தவகையிலாவது பதவியைக் கைப்பற்றிக்கொண்டால் போதும் எனும் மனப்பான்மையில் இன்றைய முக்கிய ரசியல் பிரமுகர்கள் குறிப்பாக இம்மேலைத்தேச அரசியல் அரங்கிலே நடந்து கொள்கிறார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது.

சமீபகாலங்களாக நடந்து வரும் அரசியல் நிகழ்வுகளும், அவ்வரசியல் அரங்கிலே மாற்றம் எனும் பெயரில் ஏற்படுத்தப்படும் நடவடிக்கைள் மனக்கிலேசத்தைத் தூண்டுபவையாகவே இருக்கிறது.

ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து வெளியேற வேண்டும் எனும் கூக்குரல் வலுவடைந்து அது சர்வசனக் கருத்துக் கணிப்புக்கு விடுமளவிற்கு கூர்மையடைந்திருக்கிறது. இங்கிலாந்து ஜரோப்பிய ஒன்றியத்தில் இருப்பதா இல்லையா என்பதை அதுன் அனுகூலம், பிரதிகூலத்தின் அடிப்படையில் ஆராய்ந்து முடிவெடுப்பது இங்கிலாந்து மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமை என்பதை ஏற்றுக்கொள்ளும் அதேநேரம் வெளியேற வேண்டும் எனும் அணியில் வாதிடுவோரின் உட்கருத்து சிறிதளவு இனவெற்றியின் அடிப்படியில் அமைந்துள்ளதோ என்று எண்ணத்தோன்றுகிறது.

அமெரிக்கத் தேர்தல் களத்தில் ஜனாதிபதி வேட்பாளராகத் தெரிவுசெய்யப்படுவதற்கு குடியரசுக் கட்சியின் சார்பில் வெகுவேகமாக, வெகு அமோகமாக முன்னேறிவரும் டொனால்ட் ட்ரம்ப் அவர்களின் கொள்கைப்பிரகடனங்கள் உலக நாடுகளில் இருந்து அமெரிக்காவை அந்நியப்படுத்துபவையாக இருந்தும் அவருக்கு அவரது கட்சியின் ஆதரவாளர்கள் மத்தியில் கிடைக்கும் ஆதரவு அச்சத்துடன் கூடிய ஒரு ஆச்சரியத்தைக் கொடுக்கிறது.

இங்கிலாந்திலே அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் லண்டன் மாநகர மேயருக்கான தேர்தல் பிரச்சாரத்தில் தமது வெற்றிக்காக எதிர்வேட்பாளர் மீது அரசியல் நாகரீகத்துக்கு அப்பாற்பட்ட தளத்தில் பிரச்சாரங்களை மேற்கொள்வது போன்ற ஒரு நிலமை தென்படுகிறது.

லண்டன் மேயர் தேர்தலில் பிரதான வேட்பாளர்களில் ஒருவரான லேபர் கட்சியின் சார்பில் போட்டியிடும் “சாடிக் கான்” எனும் பிரித்தானிய பிரஜையான இஸ்லாமியருக்கு வெற்றியீட்டக்கூடிய நிலமை தென்படுகிறது. அவரது செல்வாக்கைச் சரிப்பதற்காக கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளர் ” சாக் கோல்ட்சிமித்” என்பவரின் பிரச்சாரக்குழு “சாடிக் கான்” சில தீவிரவஅட்த இஸ்லாமியத் தலைவர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார் எனும் சர்ச்சையைக் கிளப்பி விட்டிருக்கிறார்கள்.

“சாடிக் கான்” அவர்களது ஆதரவாளர்களில் ஒருவரான முன்னாள் லண்டன் மேயரான லேபர் கட்சியைச் சார்ந்த கென் லிவிங்ஸ்டன் அவர்கள் யூத மக்களுக்கெதிரான சில வாதங்களை வானொலிப் பேட்டியில் கூறியிருந்தார் என்பதற்காக அவரை லேபர் கட்சி தற்காலிகமாக தமது உறுப்பினர் எனும் அந்தஸ்த;இருந்து நீக்கியுள்ளார்கள்.

இன்று அதுபற்றி வானொலிக்குப் பேட்டியளித்த தற்போதைய லண்டன் மேயர் “பொரிஸ் ஜான்சன்” நீக்கப்பட்ட உறுப்பினர் “சாடிக் கான்” அவர்களின் ஆதரவாளர் என்று கூறி , “சாடிக் கான்ன்” அவர்களையும் இச்சர்ச்சைக்குள் சம்மந்தப்படுத்த முயன்றிருக்கிறார்.

“அரசியல் நாகரீகம்” என்பது தனிப்பட்ட தாக்குதல்களைத் தவிர்த்து மக்க்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை முதன்மைப்படுத்தி அவற்றிற்கான தீர்வுகளை முன்வைக்கும் கொௐகைகளின் அடிப்படையில் விவாதங்களை நடத்துவதே !

ஆனால் இன்று நடப்பதோ மனதின் வினாக்களுக்கு விடையளிக்காமல் மேலும் கேள்விகளை தொடுத்துக் கொண்டிருக்கிறது.

காலம் மாறட்டும், மனிதர்களும் மாறட்டும், மனிதாபிமானம் மாற முடியுமா ? அப்படி மாறினால் நாம் இன்னமும் எமக்கு மானிடர் எனும் முத்திரை குத்திக் கொண்டிருப்பது தகுமா ?

அடுத்த மடலில் சந்திக்கும் வரை
அன்புடன்
சக்தி சக்திதாசன்

Leave a Reply

Your email address will not be published.