”கண்ணன் காப்பு”….
—————————

கஷ்டம் கலைந்திடும் நஷ்டம் நகர்ந்திடும்
இஷ்டம் நமக்கு இணங்கிடும் – அஷ்டமி
ரோகினியில் தோன்றிய லேகிய வண்ணனை
ஏகிட எல்லாம் எளிது….(0)

fe493d23-2691-47ca-b802-10771e01bf62
தீக்குளிட்டு பாரதி தீண்டிய தெய்வத்தை
வாக்கிலெட்டா கண்ணனை வாழ்த்துவோம்-பூக்களிட்டு
அப்பம் அதிரசம் முப்பழங்கள் வைத்தாலும்
அப்பயலுக்(கு) அன்பே அமுது (or) அறம்….(1)

மாதவனை கேசவனை மாலொழிய வந்தவனை
ஆதவனை ஆயர் அணிவிளக்கை -யாதவனை
ரோகினி அஷ்டமியாய் ஆகிய கீதையை
தாகிநீ தேஹியென்றோ தி….(2)

 
நடுநிசியில் ரோகினி நட்ஷத் திரத்தில்
கொடுஞ்சிறையில் தோன்றிய கண்ணா-முடிமிசையில்
அப்பன் சுமந்திட ஆயர்தம் கோகுல
குப்பம் நுழைந்தவனே காப்பு….(3)

கட்டு மயிற்பீலி கொண்டை யிலணிந்து
பட்டுப்பீ தாம்பரம் பூண்டாவை -வெட்ட
வெளிதனில் மேய்க்க வேய்ங்குழல் ஊதும்
களிமிகு கண்ணனே காப்பு….(4)

பொன்னிற வண்ணப் புழுதி எழுந்துயர்
விண்ணவர் கண்ணில் விழுந்திட -செந்நிற
சாயங்கா லத்தில் சகாக்களுடன் வீடேகும்
காயாம்பூ வண்ணனே காப்பு….(5)

காளியன் குட்டையில் மூளியாய் மூழ்கஅவன்
தோளினில் ஆடிய தெய்வமே -காளியின்
அண்ணனே கைமாறி ஆயர் குலம்புகுந்த
கண்ணனே வேண்டினேன் காப்பு….(6)

பூதனை மார்பை புசித்தவள் ஆவியை
வேதனை இன்றி விரட்டியவா -தீதினை
ஓட்டவும் தர்மம் உயரவும் பாண்டவ
கூட்டம் பிணைந்தவா காப்பு….(7)

தாய்க்குப் பணிந்தன்று தாம்பில் புகுந்துமரம்
சாய்க்க உரலிழுத்த சாகஸா – வாய்க்குள்
மாதா மகிழ மகோன்னதம் காட்டிய
கீதா உபதேசா காப்பு….(8)

எதுரா எதுராவென எங்கெங்கோ தேடும்
புதிராம் புவிவாழ்வு போதும் – மதுரா
நகரொளிந்த தெய்வம் நவனீதக் கண்ணன்
சுகமளிக்கும் செல்வச் செழிப்பு….(9)

தீரன் யமுனா தரங்கக் கரையோரன்
சேரும் இளமாதர் ஜீவான்ம -சோரன்
அழகில் சுகுமாறன் அன்பில் உபகாரன்
கழுகில் வரும்நேரம் காப்பு….(10)

குவலயா பீடத்தின் கொம்பொசித்துக் கம்சன்
கவலையால் பீடிக்கக் கொன்றோன் – அவலையா
தந்தாய் எடுத்துக்கொள் தோழாயென் செல்வத்தால்
கந்தையைக் கட்டென்றான் காப்பு….(11)

கூவும் கஜேந்திரனை காத்த புஜேந்திரா
ஏவிய சக்கரத்தை ஏந்தியவா -காவிய
பாகவதக் கண்ணா பரந்தாமா நாரணா
காகவத காகுத்தா காப்பு….(12)

ஆலில் மிதந்தவா ஆழ்வார்கள் பாசுர
நூலில் நிறைந்தவா நந்தலாலா -தோளில்
திருத்துழாய் பூண்ட திருவோணத் தானே
கருத்தில் கலந்துவளைக் காப்பு….(13)

உதித்தவா நேற்று மிதித்தவா இன்று
நதிக்கரை நந்தகோபன் நாட்டை -எதிர்த்ததாய்
மாமா அனுப்பிய மல்லர் களையன்று
கோமாளி ஆக்கியவா காப்பு….(14)

 
கோலத்தால் காலிட்டு கைகூப்பி கும்பிட்டு
ஞாலத்தை உண்டுமிழ்ந்த நாதனுக்காய் -தாலத்தில்
பக்ஷணத்தை ஏந்திநின்றால் பக்தராதைக்(கு) ஈடாக
தக்ஷிணையாய் கேட்டான் தபஸ்….(15)

கால்கள் பலநூறு கண்டேனென் வாசலில்
வால்கள் புடைசூழ வந்தமுகுந்தன்-நூல்போல்
அணிவகுப்பாய் சென்று அடுக்களை உள்ளில்
விநியோகம் செய்தான் விருந்து….(16)

பலராமன் தம்பி, பனிநாளில் பீச்சை
வலமாக வந்ததில் வைரஸ் -ஜலதோஷம்
நாசியில் கொட்டும் நயகரா வீழ்ச்சியாய்
க்ரேஸிக்கு தேவையுன் காப்பு….(17)

உறியிழுத்தாய் பின்னர் உரலிழுத்தாய் பின்னர்
மரமிழுத்தாய் பின்னர் மதகில் – அரவிழுத்தாய்
பின்னர் நகிலிழுத்தாய் பெண்கள் துகிலிழுத்தாய்
கண்ணா எனையிழுப்பாய் காப்பு….(18)

 
கண்ணே கனியமுதே கற்கண்டே கார்முகிலே
என்னே பெயர்வைத்து ஏத்தினாலும் -அண்ணே!
டபாய்த்திடுவான் கண்ணன் உபாயமொன்று கேளாய்
அபாயமென்பாய் உண்டே (அ)பயம்….(19)

சகடா சுரனை சுமந்தா காய
முகடில் முறித்த முகுந்தா -பகடையில்
தோற்றவர்க்காய் தேரேறி நூற்றவர் மாய்ந்திட
கூற்றவனாய் நின்றவனே காப்பு….(20)

கோடி குருமார்கள் கூறிய வேதாந்தம்
தேடிப் படித்தும் திருப்தியில்லை -நாடியில்
ஏதோ அதிருப்தி என்னென்று சொல்வது
கீதோ பதேசகா காப்பு….(21)

தரையில் புரளபீ தாம்பர ஆடை
சுருளும் முடிநுதல் சாய -முரளி
மனோகரா வந்துன் மதிவதனம் காட்டு
கனாவரும் நேரத்தில் காப்பு….(22)

கன்னத்தில் அன்னையிட்ட கண்மை திருஷ்டியது
வண்ணக் கருமையில் வாடிட -எண்ணற்ற
இம்சைக்(கு) இடமாகி இன்னல் கடந்தோனே
கம்சன் மருகோனே காப்பு….(23)

வையங்கள் ஏழை வயிறார உண்டும்
ஐயம் மிகக்கொண்டு அய்யனே -கையால்
பிடித்துக் கமல பதத்தை அன்று
கடித்துக் களித்தவனே காப்பு….(24)

நான்மறை ஓதிடும் நான்முகன் வாழ்ந்திடும்
தாமரை நாபியும், பூமகள் -போய்மறையும்
சந்தனம், ஸ்ரீவத்ஸம், சாற்றும் திருத்துழாய்யு
கந்திடும் திண்மார்பும் காப்பு….(25)

மோதகப் பிள்ளை முழுங்க, பதைபதைத்து
பீதகப் பட்டாடை பாழாக -காதினை
கைகளால் பற்றி கரணமிட்(டு) ஆழியை
கொய்தகோ பாலனே காப்பு….(26)

தேர்கடவி பாரதப் போர்முடிக்க பார்த்தனின்
சீர்கெடலை கீதையால் செப்பனிட்டோய் -மோர்குடத்தை
கல்லால் உடைத்தன்று கோபியர் கோபத்திற்க்
குள்ளான கண்ணனே காப்பு….(27)

சாக்கிரதை யாக சகாக்களுடன் சென்றாயர்
தூக்கிலிட்ட வெண்ணை திருடியுண்ட -போக்கிரிப்
பையனே பேய்மழைக்குப் பர்வதம் தாங்கியக்
கையனே கண்ணனே காப்பு….(28)….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *