Tag: மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

  • உழைப்பவர் உழைப்பைப் போற்றிடும் உயர்தினம் !

    உழைப்பவர் உழைப்பைப் போற்றிடும் உயர்தினம் !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண் …. ஆஸ்திரேலியா

    மேதினம் என்பது விடி வெள்ளியாகும்
    வியர்வையைச் சிந்துவார் உயர்வினைக் காட்டும்
    சாதனை நாயகர் தம்மையே போற்றிட
    பூதலம் மீதிலே பூத்தநல் நாளாகும்

    உழைப்பினை நல்குவார் உழன்றுமே இருந்தனர்
    உழைப்பினை உறுஞ்சுவார் உயர்ந்துமே நின்றனர்
    உழைப்பினை நல்குவார் உணர்வுடன் எழுந்தனர்
    உழைப்பினை உறுஞ்சுவார் ஓரமாய் ஒதுங்கினர்

    முதலைக் கொடுத்தவர் முதலையாய் நின்றனர்
    முயற்சியைக் கொடுத்தவர் முடங்கியே கிடந்தனர்
    முயற்சியைக் கொடுத்தவர் எழுந்தனர் கனலாய்
    முதலைகள் அனைத்தும் சுருண்டுமே போயின

    உண்ணும் உணவும் உடுக்கும் உடையும்
    உறையும் வீடும் உழைப்பின் வரமே
    மண்ணைப் பொன்னாய் மாற்றிடும் உழைப்பை
    மாநிலம் நினைக்கவே மேதினம் வந்தது

    எத்தனை பேர்கள் இரத்தம் சிந்தினர்
    அத்தனை பேரும் உழைக்கும் மைந்தர்கள்
    உழைப்புக் கூதியம் உயர்வாய் கேட்டால்
    கேட்டவர் வாழ்வை கிழித்துமே போட்டனர்

    களைப்பே இன்றி உழைப்பைக் கொடுத்தார்
    கண்ணீர் கடலில் மூழ்கியே நின்றார்
    காசினைக் கருத்தில் கொண்டுமே இருந்தார்
    கடும் உழைப்பதனை காணா நின்றார்

    முதலை ஆண்டவர் முதலாளி ஆகினார்
    தொழிலில் இருந்தவர் துவண்டே கிடந்தார்
    வளமும் உரமும் வழங்கிய மக்கள்
    உளமும் மடிந்து உழன்றே கிடந்தார்

    எத்தனை பொருட்கள் எத்தனை உழைப்பு
    எத்தனை வேதனை இடருடன் வாழ்க்கை
    இத்தரை உழைப்பவர் சித்தத்தில் வைப்போம்
    இடரினைப் போக்கிட எல்லோரும் இணைவோம்

    ஓடப்பராய் இருந்தார் உழைத்திடு மக்கள்
    உயரப்பராய் வந்தால் உயர்ந்திடும் உழைப்பு
    வாடப்பராய் இருப்பார் மனவுறுதி கொண்டால்
    வையகமே வாகைசூடி வரவேற்ற நிற்கும்

    வையகமே வியந்து பார்த்திட்ட நாளாய்
    வருடத்தில் மேதினமே மலர்ந்துமே இருக்கு
    மேதினத்தில் வியர்வையெலாம் வெற்றியையே காட்டும்
    மேதினத்தில் உழைப்பாரை அரவணைத்து மகிழ்வோம்

    உழைப்பவர் கரங்கள் ஓங்கிட வேண்டும்
    உழைப்பவர் வாழ்வும் உயர்ந்திட வேண்டும்
    உழைப்பவர் உழைப்பை மதித்திடு நாளாய்
    உலகமே போற்றுது மேதின நாளை

    Share
  • சித்திரைத் திருநாள்!

    சித்திரைத் திருநாள்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    தைமகள் வந்தாள் தழுவியே நின்றாள்
    கைநிறைய அள்ளித் தந்துமே நின்றாள்
    தெய்வீகம் நிறைந்தது தெளிவுமே தந்தாள்
    தித்திப்பாய் பொங்கலை ஆக்கியே நின்றாள்

    என்பின்னே சித்திரை வருகிறாள் என்றாள்
    ஏற்றபல உங்களுக்கு அளித்திடுவாள் என்றாள்
    தைமகளின் வார்த்தை தடவியே கொடுத்தது
    தளர்வகன்று சித்திரயை  வரவேற்க நின்றோம்

    சித்திரை என்றதும் நித்திரையே ஓடிவிடும்
    புத்துடுப்பு மத்தாப்பு புதுநினைப்பே எழுந்துவிடும்
    கொண்டாட்டம் குதூகலம் கூடவே சேர்ந்துவிடும்
    அத்தனையும் சித்திரைதான் அளிப்பதற்கு வந்துநிற்கும்

    தைமகளே வருடத்தில் முதல்வந்து நின்றாலும்
    சமயமது சித்திரையை முதல்மகளாய் ஆக்கிருக்கு
    சித்திரையை முன்னிறுத்திப் பஞ்சாங்கம் அமைகிறது
    அத்தனையும் சித்திரையை அடியொற்றித் தொடர்கிறது

    பஞ்சாங்கம் பார்ப்பதும் பலன்களை அறிவதும்
    பலருக்கும் பெருவிருப்பாய் சித்திரையில் அமைந்திடுமே
    பலன்பார்த்துப் பலன்பார்த்து  பரவசத்தில் மிதப்பாரும்
    பலன்சிறக்கா முழிப்பாரும் சித்திரையில் இணைந்திடுவார்

    மருத்துநீர் என்பது சித்திரையின் சிறப்பாகும்
    தலைக்கோர் இலையும் கால்களுக்கோர் இலையும்
    வைத்ததன் மேல்நின்று மருத்துநீர் தலைவைத்து
    நீராடும் வழக்கம் சித்திரையின் முக்கியமே

    மூடப் பழக்கமென்று முகஞ்சுழிக்க வேண்டாம்
    முன்னோர்கள் சிந்தனையைப் பின்தள்ள வேண்டாம்
    இயற்கை மருத்துவத்தை இணைக்கின்ற வண்ணம்
    எல்லாமே அமைவதுதான் எம்முன்னோர் எண்ணம்

    பருவ காலங்களைப் பண்டிகையோடு இணைத்து
    வருகின்ற வகையிலே வழிவகுத்தார் முன்னோர்கள்
    கருத்தூன்றிக் கவனித்தால் கருத்தாக அமையும்
    கண்மூடிப் பார்த்திட்டால் கருத்தெல்லாம் சிதறும்

    சீனிப்பலகாரம் தித்திக்கும் சோகிப் பலகாரம்
    அச்சுமுறுக்கு அமர்க்களமாய் அருமைச் சுவையோடு
    இல்லாரும் செய்வார் இருப்பார் கூடச்செய்வார்
    எல்லாமே சித்திரையை இன்பமாய் ஆக்கிடுமே

    கோவில்கள் எங்கும் கோலாகலமாய் இருக்கும்
    வாயில்கள் தோறும் மக்களாய் நிரம்பிடுவர்
    அபி‌ஷேகம் அலங்காரம் ஆண்டவனைக் குளிர்விக்கும்
    அடிபரவும் அடியாரை ஆண்டவனும் மகிழ்விப்பார்

    சித்திரையில் தேரோட்டம் நடக்கின்ற கோவிலெல்லாம்
    திரண்டடியார் சென்றுமே தேர்வடத்தைப் பிடித்திழுப்பார்
    தேர்வடத்தைப் பிடித்திட்டால் செய்தவினை அகலுமென்று
    நம்பிக்கை மனத்திலெழ வடம்பிடித்து மனம்நிறைவார்

    சித்திரையைச் சிறப்பிக்க முத்தமிழே முன்னிற்கும்
    பட்டிமன்றம் பாட்டுமன்றம் பலவுரைகள் நிகழ்ந்திடுமே
    ஆடலொடு பாடலும் ஆனந்தம் அளித்திடுமே
    அங்குமே சித்திரையும் முத்திரையாய் ஜொலித்திடுமே

    ஆன்மீகம் இருக்கும் அழகுக்கலை இருக்கும்
    அறிவியலும் இருக்கும் ஆசாரமும் இருக்கும்
    அனைத்தையும் உள்ளடக்கி அமைகின்ற திருநாளாய்
    சித்திரைத் திருநாள் சிறப்பாக மலர்கிறதே

    கருத்துடைய சித்திரையைக் களிப்புடனே பார்ப்போம்
    கைகோத்து அனைவருமே களிப்புற்று நிற்போம்
    கையணைத்து உறவுகளைக் களிப்படைச் செய்வோம்
    கற்கண்டாய், சர்க்கரையாய்க் களிசொற்கள் பகிர்வோம்

    Share
  • காரைக்கால் அம்மையை கருத்தினிலே வைப்போம் !

    காரைக்கால் அம்மையை கருத்தினிலே வைப்போம் !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண் ….. ஆஸ்திரேலியா

    மாநிலத்தில் மொழிவளமோ வகைவகையாய் இருக்கிறது
    அவற்றுக்குள் தமிழொன்றே தனித்துவமாய் மிளிர்கிறது
    காதலை, வீரத்தைக் கண்ணியமாய்ச் சொன்னாலும்
    கடவுளையும் பக்தியையும் கருவாக்கி உயர்கிறதே

    எம்மொழியும் பக்தியினை எட்டியும் பார்க்கவில்லை
    பக்தியெனும் பெருவெளியில் பயணிக்க நினைக்கவில்லை
    எம்மொழியாம் தமிழொன்றே பக்தியினைப் பற்றியது
    இதனாலே எங்கள்மொழி தனித்துவமாய் ஒளிர்கிறது

    பக்தியை இலக்கியமாய் பாருமே பார்ப்பதற்கு
    படைத்திட எங்கள்மொழி பாருக்குள் உயர்வாகும்
    பக்திக்குள் மூழ்கிவிட்டால் பரவசமே உருவாகும்
    பரவசத்தை அளிக்குமொழி பாங்குடைய தமிழாகும்

    பக்தி இலக்கியத்தைத் தொடக்கிய முன்னோடி
    காரைக்கால் ஈன்றெடுத்த கனிவான பெண்ணாவார்
    மாதரில் மாணிக்கமாய் மாசில்லா மங்கையாய்
    மாதவத்தின் உருவமாய் வந்துமே பிறந்திட்டார்

    நல்லறமாம் இல்லறத்தில் நங்கையும் இணைந்திட்டாள்
    நற்கணவன் கைப்பிடித்து நலமுடனே வாழ்ந்திட்டாள்
    தெய்வமது சித்தத்தால் சீரான குடும்பமதில்
    தித்திக்கும் மாங்கனி திசைமாறச் செய்ததுவே

    கைப்பிடித்த கணவன் கண்ணான மனைவியைச்
    சந்தேக மனத்துடனே சஞ்சலத்துள் ஆழ்த்தினான்
    மாங்கனியின் மாயத்தை மனமேற்க மறுத்ததால்
    மாதரசி மங்கையினை மனமொதுக்கி அகன்றிட்டான்

    பதறித் துடித்தாள்  பரமனையே பற்றினாள்
    அழகுடைக் கோலத்தை அருவருப்பாய் எண்ணினாள்
    யாருமே விரும்பாத கோலத்தை மனங்கொண்டாள்
    பேயுருவைப் பெருவிருப்பாய்ப்  பெற்றிட்டாள் இறைவனிடம்

    காரைக்கால் அம்மை பேயுருவாய் மாறினார்
    கணக்கில்லாப் பேரன்பை கடவுளிடம் காட்டினார்
    பக்திப் பெருவெளியில் பயணிக்கத் தொடங்கினார்
    பரமனைப் பாடினார் பக்திக்கும் வித்திட்டார்

    அன்னைத் தமிழுக்கு அம்மையார் பெருஞ்சொத்தே
    முன்னவராய் இருந்து இணைத்திட்டார் பக்தியினை
    பக்தி இலக்கியமாய் மலர்வதற்கு வித்திட்டார்
    பசுந்தமிழும் அதையேற்றுப் பார்போற்ற எழுந்ததுவே

    இசையாலே தமிழ்பாடி இறைதுதிக்க வழிசெய்த
    எங்கள்தமிழ் முன்னோடி காரைக்கால் அம்மையே
    அவர்வகுத்த அடியொற்றி அவர்பின்னே வந்தடியார்
    ஆண்டவனைப் பண்ணோடு அன்புருகப் பாடினரே

    அந்தாதி தந்தார் பதிகமும் தந்தார்
    திருவிரட்டை மணிமாலை சிறப்பாகத் தந்தார்
    பதிகத்தைத் தொடக்கிப் பக்தியைக் காட்டி
    அந்தாதிக் கன்னையாய் ஆண்டவனைப் பாடினார்

    பக்திப் பாமரபில் முன்னோடி  அம்மையார்
    பதிகத்தைத் தொடக்கியவரும் காரைக்கால் அம்மையார்
    வெண்பாவைத் தொட்டார் விருத்தத்தை காட்டினார்
    பண்பாடிப் பக்தியிலே பலர்தொடர வழிவகுத்தார்

    இசைத் தமிழால் பாடுதற்கு இவரே வித்தாவார்
    பண்பாடிப் பக்தியினைப் பரப்புதற்கும் முன்னோடி
    நாயன்மார்  பண்ணோடு  நற்றமிழில் பாட
    காரைக் காலம்மையே தனிப்பாதை வகுத்தார்

    சைவத்தை மேலாகத் தன்னகத்தில் கொண்டார்
    தமிழ்ப் பக்தியியக்கத்தின் முன்னோடி ஆனார்
    பேயுருவை உவந்தேற்ற பெரும்பெண்ணும் ஆனார்
    பெம்மானே அம்மையென அழைத்த பெண்ணுமாவர்

    இறையுணர்வை இலக்கியத்தில் இணைத்த பெண்ணாவார்
    இறையடியில் இருப்பதை இன்பமாய் ஏற்றார்
    பேயுருவில் கயிலாயம் சென்ற பெண்ணாவார்
    பெம்மானின் கோவிலில் இருப்பிடமும் பெற்றார்

    காரைக்கால் அம்மையைக் கருத்தினிலே வைப்போம்
    காலத்தால் அழியாத கவிமரபை அளித்தார்
    திருமுறைகள் வருவதற்குத் திறவுகோல் அவரே
    அவர்தினத்தைப் புனிதமாய் அனைவருமே நினைப்போம்

    Share
  • மண்ணிலிருந்து மனிதம் காத்த மாதவ யோக சுவாமிகள்!

    மண்ணிலிருந்து மனிதம் காத்த மாதவ யோக சுவாமிகள்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
    மெல்பேண் … ஆஸ்திரேலியா

    நல்லூரான் வாசலுக்குச் சென்றுமே விட்டால்
    நமையறியா ஆனந்தம் நமக்குள்ளே பெருகும் 
    நல்லூரில் சித்தர்கள் தடம் பட்டதாலே 
    நல்லூரில் தடம்பதித்தால்  நம்மயக்கம் தீரும்

    தேரடியை நாமெல்லாம் பார்த்தபடி செல்வோம்
    தேரடியை பேரிடமாய் கண்டாரே ஓர்மனிதர் 
    பித்தான செல்லப்பர் பிரதான இடமாக
    நல்லூரான் தேரடியே நாடியே தேர்ந்தாரே 

    தன்னை மறப்பார் தன்நாமம் உரையார்
    என்னவோ பேசுவார் எடுத்தெறிந்தும் ஏசுவார்
    அழுக்குத் துணியோடு அவரென்றும் திரிவார்
    ஆனாலும் அவருக்குள் அருளொளி இருந்தது

    அருளொளி இருப்பதை ஆருமே அறியார்
    அருகணைய விளைவாரை அடித்துமே ஒதுக்குவார்
    ஞானத்தின் ஒளியாக நல்லூரில் இருந்தார்
    நல்லதொரு சீடனைக் மனமெண்ணி நின்றார் 

    தேடிய சீடன் ஓடோடி  வந்தான்
    வந்தவனை நிந்தனை செய்தவரும் நின்றார்
    சீடனோ சிக்கெனப் பிடித்துமே நின்றான்
    தேரடாவுள் தீரடாபற்று மந்திரமாக வந்ததுவங்கே 

    எப்பவோ முடந்த காரியம் நாமறியோம் 
    முழுவதும் உண்மை செப்பினார் செல்லப்பர்
    சீடன் கேட்டான் சிந்தை தெளிந்தான்
    குருவே அவரெனச் சரணம் அடைந்தான் 

    சுற்றினான் சீடன் ஒதுக்கினார் குருவும்
    முற்றிய விசராய் தோற்றினார் அங்கே
    அடித்தார் விரட்டினார் ஆக்கினை கொடுத்தார்
    அயரா நின்றார் அவரடி சீடரும் 

    செல்லப்பர் முடிவை நெருங்கிய வேளை
    சீடர் யோகர் தேடியே சென்றார்
    நில்லங்கே வார்த்தை வெளியே வந்தது
    நின்றார் யோகர் உணர்ந்துமே அகன்றார்

    யோக நாதன் யோக சுவாமியானார்
    செல்லப்பா சித்தர் உள்ளே புகுந்தார்
    கொழும்புத் துறையை கோவிலாக்கி
    அமர்ந்தார் யோகர் அனைவர்க்கும் அரணாய்

    சித்தம் தெளிந்தார் சித்தும் அறிவார்
    வித்தைகள் தெரிந்தும் விளம்பரம் இல்லார்
    மேலாம் இறையை மேலாய் எண்ணினார்
    கீழாம் குணத்தை ஆழவே அழித்தார் 

    படித்தவர் வந்தனர் பாமரர் வந்தனர்
    பிடித்ததைக் கேட்டு வாசலில் நின்றனர்
    தேவைகள் அறிந்து சுவாமிகள் கொடுத்தார்
    தெரிசனம் கொடுக்கா திட்டியும் அனுப்பினார்

    அணுகுவார் பிணியை அறிந்துமே நின்றார்
    அவரவர் அகத்தை அவரறிந் திருந்தார் 
    ஆணவம் மிக்கார் அவர்முன் வந்திடின்
    அவர்களை வைது அனுப்பியே விடுவார் 

    பொருளை நாடார் அருளை நாடினார்
    பொன்னைக் கொடுத்தால் பொங்கியே எழுவார்
    அன்பாய்க் கொடுத்தால் அகமும் மலர்வார்
    கிடைக்கும் அனைத்தையும் கொடுத்துமே மகிழ்வார் 

    திருமுறை அனைத்தையும் திரவியம் என்பார்
    பாடிப் பாடிப் பரவசம் அடைவார் 
    திரு வாசகத்தை உருகியே பாடுவார்
    அனைவரும் படித்திட ஆசையும் கொண்டார்

    நல்லூர் என்றால் உள்ளமே உருகுவார்
    நற்குரு உறைவிடம் அதுவெனப் போற்றுவார்
    எல்லை இல்லாப் பற்றுங் கொண்டார்
    நல்லூர் தந்த நம்யோக சுவாமிகள் 

    சித்தராய் இருந்தவர் தெருவெலாம் திரிந்தார்
    எத்தனை பேர்கள் அவரினை அறிந்தார்
    அறிந்தவர் தெளிந்தார் அகமது வெளுத்தது
    அவர்முகம் கண்டதே அவரவர் புண்ணியம்

    மண்ணில் இருந்து மனிதம் காத்தார்
    மாதவ யோக சுவாமிகள் வாழ்வில் 
    எண்ணில் அடங்கா ஆற்றல் அனைத்தையும்
    இயல்பினை எண்ணி ஈந்துமே உயர்ந்தார் 

    Share
  • கற்பகதரு என்னும் அற்புதம் [அங்கம் – 9]

    கற்பகதரு என்னும் அற்புதம் [அங்கம் – 9]

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    ஆஸ்திரேலியா

    காகிதங்கள் பயன்பாட்டுக்கு வராது இருந்த காலத்திலும் – பலவகையில் நூல்கள் வெளிவந்திருக்கின்றன. என்ன ஆச்சரியமாய் இருக்கிறதா! ஆச்சரியப்படவே தேவை இல்லை! வெளிவந்த பல்துறை சார்ந்த நூல்களுமே கற்பகதருவாம் பனையின் ஓலையில் எழுதப்பட்டே  வந்திருக்கின்றன என்பதுதான் முக்கியமாகும். எங்களின் எழுத்தறிவினைச் சுமந்த பனை ஓலைச் சுவடிகள் அறிவின் சின்னம் என்பதில் பெருமை அல்லவா! ஏடு என்றாலே பனைதான்  எல்லோர் கண்முன்னே வந்து நிற்கும். ஏடு என்ற சொல்லின் வேரே பனை ஓலை அல்லவா !

    பனை ஓலை அரசாங்கத்தின் எழுதுகின்ற பொருளாகப் பயன்பாட்டில் இருந்திருக்கிறது. காகிதம் பயன்பாட்டுக்கு வரமுன்னர் எழுதுவதற்கு எங்களுக்குக் கைகொடுத்த தெய்வமாய் பனையும் அதன் கொடையான ஓலைகளுமே விளங்கின என்பதை கருத்திருத்தல் மிகவும் அவசியமாகும்,

    பனை ஓலைச் சுவடிகள் பலவற்றை எங்களின் முன்னோர்கள் பலர் தேடிக் கண்டு பிடித்திருக்கிறார்கள். இன்றும் ஓலைச் சுவடிகளைத் தேடும் பணியில் பலர் ஆர்வத்துடன் ஈடுபட்டும் வருகிறார்கள். பனை ஓலைச் சுவடிகளைத் தேடி உ.வே.சா என்னும் எங்கள் தமிழ்த் தாத்தா நெடும்பயணம் மேற் கொண்டார் என்பதை யாவரும் அறிவோம். அவரின் வழியில் இன்று பலரும் பயணப்பட்டு பல பனை ஓலை ஏட்டுச் சுவடிகளைப் பல இடங்களிலும் கண்டு தேடிப் பெற்றிருக்கிறார்கள் . ஓலைச் சுவடிகளை வீட்டின் கூரையில் வைத்திருந்திருந்திருக்கிறார்கள். ஓலைச் சுவடிகளைத் தேடிப் போனவர்கள் – வீட்டுக்குரியவர் கூரையில் சொருகி வைக்கப்பட்ட ஓலைச் சுவடிகளை – அவர்களிடமிருந்து பெற்ற வரலாறுகளையும் அறிந்திடக் கூடியதாக இருக்கிறது.

    கேரள மாநிலத்தில் ஆயிரத்து தொள்ளாயிரத்து இருபத்து ஐந்தாம் ஆண்டு வரையிலும் பத்திரப்பதிவு என்பது ஓலையி ல்த்தான் அமைந்திருந்தது. “தீட்டு” என்னும் பெயரால் இந்த எழுதப்பட்ட ஆவணங்கள் அழைக்கப்பட்டன. ஓலைச் சுவடிகளைத் தொகுத்து வைத்த தொகுப்பினை “கருணை” என்று பெயரிட்டு அழைத்தனர். ஓலைகளில் எழுதும் எழுத்துக்களை கேரளத்தில் – கோலெழுத்துகண்ணெழுத்து என்று பெயரிட்டு அழைத்திருக்கிறார்கள்.

    செட்டி நாட்டு வணிகர்கள் தங்களின் கணக்குகளை எழுதுவதற்கு ஓலைச் சுவடிகளையே பயன்படுத்தி இருக்கிறார்கள். தம்மபதம் என்னும் பெளத்த நூல் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் ஓலைச் சுவடியிலேயே எழுதப்பட்டிருக்கிறது.

    திபெத்து நாட்டில் தமிழ் நாட்டின் ஓலைச்சுவடிகள் பல கிடைத்திருக்கின்றன என்று அறிய முடிகிறது, திருவாங்கூர் பகுதியில் பழைய ஓலைச் சுவடிகள் கிடைக்கப்பெற்றிருக்கிறது. “அழகிய பாண்டிபுரம் பெரிய வீட்டுச் செட்டியார் ஓலைகள்” என்று இந்தப் பழைய ஓலைச்சுவடிகள் அழைக்கப்படுகின்றன.

    ஓலைச் சுவடிகள் எங்களின் மிகப்பெரிய பொக்கிஷமாகும். அந்த ஓலைச் சுவடிகளை அளித்த கற்பக தருவான பனையினை நாங்கள் எக்காலத்தும் மறந்துவிடுதல் கூடாது. அப்படி நாங்கள் மறந்து விடுவோ மேயானால் நன்றி என்னும் சொல்லையும் மறந்து விட்டவர்களாகி விடுவோம். மருத்துவம்சோதிடம் சிற்பம், ஓவியம்இலக்கியம்இலக்கணம்கணிதம்நிகண்டுநாட்டர் வழக்காறுகள்,  வரலாறு,  சமயம், தத்துவம்என்று பல்கிப் பெருகி நிற்கும் அறிவுக் கருவூலங்கள் அனைத்தையும் பனை ஓலை தன்னகத்தில் நிறைத்துக் கொண்டது. பனையின் ஓலைகள் எழுதுவதற்கு ஏற்றனவாய் அமைந்ததுவே பெரும் வரப்பிரசாதம் என்றுதான் எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.

    ஓலைச் சுவடிகளைத் தேடும் முயற்சியில் ஈடுபட்ட அறிஞர்களால் பல இடங்களில் ஓலைச்சுவடிகள் பல கிடைத்திருக்கின்றன. அந்தவகையில் திருநெல்வேலிப் பகுதியில் பல ஓலைச்சுவடிகளை அவர்கள் கண்டெடுத்திருக்கிறார்கள். அண்ணாவிமார் வீடுகளில் நாடகச் சுவடிகளைக் கண்டறிந்திருக்கிறார்கள். அங்குள்ள மருத்துவர்கள் மருத்துவம் சம்பந்தமான ஒலைச்சுவடிகளை வைத்து அதன்படி மருத்துவம் செய்வதையும் கண்டறிந்திருக்கிறார்கள்.  சோதிடர்கள்குறிசொல்லும் குறவர்கள்வில்லிசைக் கலைஞர்கள், ஓலைச் சுவடிகளைத் தம்வசம் வைத்திருந்து பாதுகாத்து வருகிறார்கள் என்பதையும் ஓலைச்சுவடி தேடிச் சென்ற வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.

    அதுமட்டுமல்ல ஜமீந்தார்கள்பண்ணையார்கள்வீடுகளிலும் பழைய ஓலைச் சுவடிகள் இருப்பதைக் கண்டறிந்திருக்கிறார்கள். கோவில்கள்பலரின் வீடுகளில் உள்ள பூஜை அறைகள்இங்கெல்லாம் ஓலைச் சுவடிகள் இருப்பதையும் கண்டிருக்கிறார்கள். கேரளப் பல்கலைக்கழகத்தில் உள்ள நூலகத்தில் கன்யாகுமரி, திருநெல்வேலிஇராமநாதபுரம் மதுரை மாவட்டங்களை சேர்ந்த ஓலைச் சுவடிகள் வைக்கப்பட்டிருக்கின்றன. இச்சுவடிகளில் பெரும்பாலான சுவடிகள் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஊர்களில்தான் மிகுதியாக  இருப்பதாக அறிய முடிகிறது. கிராமியத் தெய்வங்கள் பற்றியகதைப்பாடல்கள்வில்லுப்பாட்டுக் கதைகள்கட்ட பொம்மன் கதைகள் அடங்கிய ஓலைச் சுவடுகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்,

    இலங்கையிலும் பல ஓலைச்சுவடிகள் கிடைத்திருக்கின்றன. அனுராதபுரத்தில் 1110 வருட பழமைவாய்ந்த ஓலைச்சுவ டிகளை கண்டறிந்திருக்கிறார்கள், கேரள மணிகண்டம் என்னும் சோதிடம் பற்றிய ஓலைச் சுவடிகள்அதைவிட – குருநாடி சாத்திரம்அகத்தியர் நாடி சாத்திரம்கிரகச் சக்கர ஞான ஏடுசித்தாரூடம்ஆதித்தன் பலன் என்று சோதிடம் சம்பந்த மான சுவடிகளைக் கண்டறிந்திருக்கிறார்கள். அகத்தியர் நூறுஅகத்தியர் வாகடம்அகத்தியர் கற்பம்அகத்தியர் உட்கரு சாத்திரம்அகத்தியர் சவுக்காரத் திறவுகோல் என்னும் பெயரில் அமைந்த மருத்துவ ஏடுகளும் கண்டறியப்பட்டிருக்கி ன்றன.

    தீக்கிரையாக்கப்பட்ட யாழ்ப்பாணத்தின் பழைய நூலகத்தில் ஏறக்குறைய தொண்ணூற்று ஐயாயிரம் ஓலைச்சுவடிகள் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருந்தன என்பது கவனத்துக்குரியதாகும்அத்தனை ஓலைச்சுவடிப் பொக்கிஷங்களும் அறிவற்றவர்களின் அசுரத்தனத்தால் அக்கினிக்கு இரையாகிவிட்டன என்பதையும் கவலையுடன்தான் மனமிருத்த வேண்டி இருக்கிறது.

    கற்றறிந்த பெரியோர்களின் வழி காட்டலில் இளையவர்கள் பலர் கை கோர்த்து “நூலக நிறுவனம்” என்னும் அமைப்பினூடாக  பழைய ஓலைச் சுவடிகளைத் தேடி – அவற்றைச் சேகரிப்பதோடுதக்க முறை யில் சுத்தப்படுத்திப் பத்திரப்படுத்தி யாவரும் அறியும் வகையில் யாழ்ப்பாணத்தில் ஆடிய பாதம் வீதியில் அதற்கான இடத்தைத் தேர்ந்தெடுத்து செயற்பட்டு வருகின்ற பாங்கினை யாவரும் மனமெண்ணி பெருமைப்படுவது மிகவும் அவசியம் என்று கருதுகிறேன். இவர்களின் தேடல்கள் வழியில் பல ஓலைச் சுவடிகள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன. ஓலைச்சுவடிகளைத் தேடும் பணியில் ஈடுபட்ட வேளை கந்தபுராண ஓலைச்சுவடிகளை தெல்லிப்பளை துர்க்கையம்மன் கோவிலில் கண்டதாகவும் அங்கிருந்து அந்த ஓலைச் சுவடி களைப் பெற்றுக் கொண்டதாகவும் அறிய முடிகிறது.

    இலங்கையில் சுவடிகளுக்கென்று கி.மு முதலாம் நூற்றாண்டிலேயே நூலகம் இருந்ததை அறிய முடிகிறது. பெளத்த விகாரைகள் ஓலைச் சுவடிகளைப் பாதுகாக்கும் இடங்களாக இருந்திருக்கின்றன. ஆரம்பகால நூலகங்கள் இன்று பல்கலைக்கழகங்களில் இருப்பதுபோல சிறப்பாக இருந்திருக்கின்றன என்றும் அறிய முடிகிறது. பதின்மூன்றாம் நூற்றாண்டில்  “சரஸ்வதி மகாலயம்” என்னும் பெயரில் ஒரு நூலகம் யாழ்ப்பாணத்தில் சிறப்பாக இயங்கி இருக்கிறது  என்பதையும் வரலாற்றால் அறிந்து கொள்ளுகிறோம்.  இங்கு பல ஓலைச்சுவடிகள் வைக்கப்பட்டிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நூலகம் அமைந்த இடம் எது என்று அறிய ஆவலாய் இருக்கிறதல்லவா அந்த இடம் தான் நாயன்மார்க்கட்டாகும்.

    இன்னுமொரு சிறந்த சுவடிகள் நூலகமும் யாழ்ப்பாணத்தில் இருந்திருக்கிறது. எங்கு தெரியுமா? மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் ஆதீனத்தில்த்தான். பல துறைகள் சார்ந்த ஓலைச் சுவடிகள் இங்கு இருந்தன என்றும் அறிகின்றோம். பேராதனைப் பல்கலைக்கழகம் இலங்கையின் புகழ்பூத்த பல்கலைக் கழகமாகும். சுவாமி விபுலானந்த அடிகளாரை தமிழ்த்துறைத் தலைவராய், பேராசிரியராய், அமர்த்திப் பெருமை கொள்ளவைத்த பல்கலைக்கழகமாகும். இங்கு மிகவும் சிறந்த நூல்நிலையம் அமையப் பெற்றிருக்கிறது. அந்த நூல்நிலையத்தின் அடித்தளத்தில் உள்ள ஒரு தனி அறையில் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட பல அரிய ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன என்பது கருத்திருத்த வேண்டிய செய்தி எனலாம்.

    மட்டக்களப்பு மான்மியம் என்னும் சிறந்த ஒரு நூலை ஆக்கியவர் வித்துவான் எவ்.எக்ஸ்.சி . நடராசன் அவர்கள். அந்த நூலினை ஆக்குவதற்கு அருந்துணையாக அமைந்தன பழைய ஓலைச் சுவடிகளே என்று அவர் தனது நூலின் முன்னுரையில் காட்டுவதும் நோக்கத்தக்கது. கிழக்கு மாகாணத்தில் கண்ணகி அம்மன் வழிபாடு மிகவும் பக்திபூர்வமாக இன்றும் மக்களால்  பேணப்பட்டு வருகிறது. யாழ்ப்பாண மாவட்ட த்தைவிட – கிழக்கு இலங்கையில் கண்ணகி வழிபாடு சிறப்பாக இருக்கிறது என்பது குறிப்பிடப் பட வேண்டிய முக்கிய செய்தி எனலாம். வைகாசி மாதத்தில் அம்மனுக்கு பல விசேடங்கள் நடைபெறும். அதில் ஒன்று “கொம்பு முறித்தல்” என்பதாகும். குளித்திப் பாடல்களும் பக்தியுடன் பாடப்படும். கண்ணகை அம்மன் கோவில்களில் பெரிய பெட்டகம் இருப்பதைக் கண்டிருக்கிறேன். அந்தப் பெட்டகத்துள் பழைய ஓலைச்சுவடிகள் நிறையவே இருந்ததையும் நான் கண்டிருக்கிறேன். சித்திர புத்திரன் கதையினை ஏடுகளில் வைத்து அந்த ஏடுகள் வைப்பதற்கான பிணைச்சல் வடிவில் அமைந்த பலகையில் வைத்து கோவில்களில் பாடுவதையும் நான் பார்த்திருக்கிறேன். அந்தக் கதைகளையும் அதற்கான விளக்கங் களையும் என்னுடைய இளமைக் காலத்தில் கேட்டும் இருக்கிறேன். மாந்திரீக ஏடுகள்பில்லி சூனிய ஏடுகள்மருத்துவ ஏடுகள், சாதகம் எழுதப்பட்ட ஏடுகள்என்று பலவகைப்பட்ட ஓலைச் சுவடிகளை பலரின் வீடுகளில் நான் கண்டிருக்கிறேன். பனங்காடு என்னும் பெயருடைய கிராமத்துக்கு அயல் கிராமத்தில் வாழ்ந்தும் இருக்கிறேன். பனம்பழத்தை  சுவைத்த நினைவுகள் இன்றும் என்மனத்தில் பசுமையாய் இருக்கிறது. பனம்பழம் பற்றிய பகுதி வரும்வேளை அதனைப்பற்றி விவரமாய் பார்ப்போம்.

    ஓலைச்சுவடிகள் பல இன்னும் பலரிடம் முடங்கிப் போய் இருக்கின்றன என்று ஆராய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். அவற்றையெல்லாம் சேகரித்தால் இன்னும் பல அரிய தகவல்களை எல்லாம் அறிந்திடவும் பயன்பெறவும் இயலும் அல்லவா  ! ஹாரிங்டன் என்னும் வெள்ளைக்காரர் மதுரை மாவட்டத்தின் ஆட்சியராய் பத்தொன்பதாம் நூற்றாண்டில் கடமையாற்றி இருக்கிறார். அவருக்குச் சமையல் செய்தவர் பெயர் கந்தப்பன். அவர் – தான் வேலைபார்த்த அந்த துரையிடம் ஓலைச்சுவடிகள் பற்றி கூறியிருக்கிறார். கிராமங்களில் உள்ள வீடுகளில் ஓலைச்சுவடிகள் பல இருப்பது வழக்கம். ஆனால் அவர்கள் அதனை வருட த்துக்கு ஒருமுறை தீயில் இட்டு விடுவார்கள். கறையான் அரித்தால் அப்படிச் செய்வார்கள். சில வேளை பயன் அறியாமலும் தீயில் போடுவதும் உண்டு. “தீயில் இட்டு எரித்துவிடு” என்று என்னிடம் ஒப்படைக் கப்பட்ட பல ஓலைச் சுவடிகள் இருக்கின்றன என்று கந்தப்பன் சொன்னதும் – துரை அவற்றைப் பெற்று சென்னை மாகாணத்தின் வருவாய்த்துறைக்கு பொறுப்பாய் இருந்த எல்லீஸர் என்பவரிடம் ஒப்படைத்தார். எல்லீஸரிடம் ஒப்படைக்கப்பட்ட ஓலைச்சுவடிகளில் திருக்குறள் ஓலைச்சுவடியும் இருந்திருக்கிறது என்பதுதான். முக்கியமாகும். எல்லீஸ் என்பவர் தமிழின் மீது கொண்ட காதலால் தமிழைக் கற்று கவிதை எழுதும் அளவுக்கு ஆளுமை உடையவராக விளங்கினார். திருக்குறளை ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்திருக்கிறார். தமது காலத்தில் தமிழ்ச்சங்கம் ஒன்றை நிறுவி தமக்குக் கிடைத்த ஓலைச் சுவடிகளை அச்சு வாகனம் ஏற்றினார் என்றும் அறிந்து கொள்ள முடிகிறது.    

    ஓலைச்சுவடிகள் பல பல இடங்களில் இன்னுமே இருந்தாலும் அவற்றை எல்லாம் சேகரித்துப் பாதுகாக்க வேண்டும் என்னும் எண்ணம் இப்பொழுது  மேலோங்கி வருவது நல்லதொரு நிலை என்றுதான் கருதல் வேண்டும். ஓலைச் சுவடிகளைப் பாதுகாக்கும் பாங்கில் நூலகங்கள் பல இயங்கிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் – சென்னைப்பல்கலைக்கழக கீழ்த்திசைச் சுவடி நூலகம்உ.வே.சா. நூல் நிலையம்பிரமஞான சபை நூலகம்தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத்துறை, உலகத் தமிழாராய்சி நிறுவனம்,  சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையம்ஆசியவியல் ஆய்வு நிறுவனம், காஞ்சி புரத்தில் காமகோடி பீடம் ஶ்ரீ சங்கராசாரியார் மடம்பாண்டிச்சேரியில் பிரஞ்சு இந்திய கலைக்கழகம்விருத்தா சலத்தில் குமாரதேவ மடாலயம்,  தஞ்சையில் – சரஸ்வதி மகால் நூலகம்தமிழ்ப்பல்கலைக்கழகம்தருமபுர ஆதீன மடாலயம் மயிலாடுதுறைஶ்ரீ காசி மடம் திருப்பனந்தாள் திருவாவடுதுறை ஆதீனம்மதுரைத் தமிழ்ச்சங்கம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம்தவத்திரு சாந்தலிங்க அடிகளார் மடம் பேரூர்கலைமகள் கல்வி நிலையம் ஈரோடுகேரளப் பல்கலைக்கழகம் கீழ்த்திசை சுவடி நிலையம் திருவனந்தபுரம்.  கள்ளிக் கோட்டை சர்வகலாசாலை. திருச்சூர் சாகித்திய அகாதமிதிருவேங்கடவன் பல்கலைக்கழகம், ஆந்திரப் பல்கலைக்கழகம்உஸ்மானியாப் பல்கலை க்கழகம்தேசிய நூலகம் கல்கத்தா.

    அரசினரின் கீழ் இயங்கும் சென்னை கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தில் தான் உலகிலே அதிகமான  ஓலைச்சுவடிகள் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கின்றன என்பது மனங்கொள்ளத்தக்கதாகும். இங்கு இருபத்து ஆறு  இலட்சம் ஓலைச் சுவடிகளைக் கொண்ட எழுபத்து இரண்டாயிரத்து எழுநூற்று நாற்பத்து எட்டு ஓலைச்சுவடிக் கட்டுகள் இருக்கின்றன என்பது முக்கிய மாகும்.

    ஓலைச் சுவடிகள் எங்களின் முதுசொம்மாகும். அதனை நாங்கள் அனைவருமே பாதுகாப்பதற்கும்உரியமுறையில் பேணுவதற்கு இயன்றவரை உதவிடுதல் என்பது மிகமிக அவசியமாகும். கற்பகதருவாம் பனை பற்றி சொல்ல வந்துவிட்டு – ஏடுகளைப் பற்றிய புராணம் பாடுவதாய் எண்ணி விடாதீர்கள். பனையின் ஓலை இல்லை என்றால் ஏடுகள் என்பதே வந்திருக்கவே முடியாது அல்லவாஓலையில் பொறிக்கப்பட்ட எழுத்துக்கள் அல்லவா எங்கள் முன்னோரின் சிந்தனைகளை எம்மிடம் சேர்த்து நிற்க அருந்துணையாய் அமைந்தது அல்லவாஅப்படி அருந்துணையாய் அமைந்தனவே ஓலைச் சுவடிகள். எல்லா வற்றும் பனைதானே காரணம். பனை இல்லையேல் ஓலை வந்திருக்குமா ! ஓலை இல்லையே ஏட்டுச் சுவடிகள்தான் வந்திருக்குமா ! எனவேதான் பனையின் வரலாற்றில் ஓலைச் சுவடிகள் தொடர்பான வரலா றும் கட்டாயம் இணைக்கபடுதல் இன்றியமையாதது அல்லவா !

    விருதுநகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியரான எஸ்.யோசப் என்பவர் மிகவும் சிறப்பான ஒரு செயலினைச் செய்திருக்கிறார். ஆயிரத்து முன்னூற்று முப்பது குறட்பாக்களையும் பனை ஓலையில் எழுதிச் சாதனை படைத்திருக்கிறார். ஓலையிலும் எழுதலாமா? ஓலை எழுதுவதற்கு உகந்ததா என்று எண்ணுகின்ற இக்காலத்தவர்களுக்கு இந்த ஆசிரியரின் சாதனையானது எங்கள் கற்பகதருவாம் பனையின் மகத்துவத்தை வெளிப்படுத்தி நிற்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். காகிதம் பயன்பாட்டில் இருக்கும் வேளையிலும்; பனை ஓலை எழுதுவதற்கு உகந்ததாய் இருக்கிறது என்பதை இவரின் சாதனை காட்டி நிற்கிறது.

    வெண்பா இருகாலில் கல்லானை வெள்ளோலை
    கண்பார்க்கக் கையால் எழுதானை – பெண்பாவி
    பெற்றாளே பெற்றாள் பிறர்நகைக்கப் பெற்றாள்
    எற்றோமற் றெற்றோமற் றெற்று”

    Share
  • கற்பகதரு என்னும் அற்புதம் – அங்கம் – 8

    கற்பகதரு என்னும் அற்புதம் – அங்கம் – 8

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    அசல்பிரதிஅச்சடியோலைஇசையோலைஇணக்கோலைஏடகம்ஏட்டுப்பொறிஒற்றுதல்ஓலைத்தூக்குஓலைநாயகம்ஓலைபோக்குதல்ஓலைப் பாசுரம்ஓலை வாரிகணக்கோலைகம்பை, கம்பை கட்டுதல்காணாட்டு  குறிப்போலைசட்டோலை,  சந்திரகம்,  சரவை,  சரசுவதி  பண்டாரம் சிக்குப்பலகைநீட்டு, நெட்டோலை, பையோலைபொறியொற்றோலைமுறிப்பத்திரம்வெள்ளேடுவெள்ளோலைஎன்று – இங்கே சொல்லப்பட்ட அத்தனையும் கற்பகதருவாம் பனையுடன் இணைந்தே இருக்கின்றன என்பது கருத்திருத்த வேண்டியதே. பனைக்கும் இங்கே காட்டப்பட்ட சொற்களுக்கும் என்ன தொடர்பு என்று எண் ணத் தோன்றுகிறதல்லவா! அத்தனையும் பனையின் ஓலையால் வந்த சொற்களேயாகும்.

    ஓலையினால் உருவான ஏடு பற்றிப் பார்த்தோம். அந்த ஏட்டுக்கும் இந்தச் சொற்களுக்கும் மிகவும் நெருக்கம் என்றுதான் சொல்லுதல் வேண்டும். அசல், பிரதிஎன்றால் ஓலையில் எழுதப்பட்ட முதற் பிரதியாகிறது. அச்சடி ஓலை என்பது முத்திரை இடப்பட்ட ஓலையினைக் குறிப்பதாகும். இசையோலை எனும் பொழுது ஒப்பந்த ஓலையும், இணக்கோலை எனும் பொழுது உடன் படிக்கை ஓலையும் என்னும் கருத்தும் வந்து நிற்கிறது. ஏடகம் என்றால் பனை என்றும்பலகை என்றும் கருத்தாய் அமைகிறது. ஏட்டுப் பொறி என்றால் ஓலையில் பதிக்கும் முத்திரைக்குப் பெயராகும். ஒற்றுதல் என்பதற்கும் ஓலையில் முத்திரை இடல் என்பதும் கருத்தாய் அமைகிறது.

    சீட்டுக் கவி எழுதிக் கொடுப்பதை  ஓலைத் தூக்கு என்று அழைத்தனர். தலைமை அமைச்சராக இருப்பவரை ஓலை நாயகம் என்றும்,  ஓலையில் செய்தி அனுப்புதலை ஓலை போக்குதல் என்றும் சொன்னதாக அறிய முடிகிறது. கடிதச் செய்திகளை அனுப்பியதை ஓலைப்பாசுரம் என்று கூறினார்கள். பொருத்தமாய் ஓலைகளைத் தேர்ந்தெடுத்து அதனை வாருவதற்கு பயன்படுத்தும் கருவியான கத்திக்கு ஓலை வாரி என்று பெயரிட்டழைத்தார்கள்.

    கணக்குகளை எழுதி வைத்த ஏடுகளை கணக்கோலை என்றார்கள். ஒலையினால் ஆகிய ஏட்டுச் சுவடிகளின் சட்டங்களுக்கு கம்பை என்றும்சுவடிகளைக் கட்டுவதை கம்பை கட்டுதல் என்றும் அழைத்திருக்கிறார்கள். ஏட்டுக்கு ஏற்ப ஓலைகளை நறுக்கி எடுப்பதை காணாட்டு என்றும் கணக்குகள் எழுதப்பட்ட ஓலையினை குறிப்போலை என்றும் அழைத்திருக்கிறார்கள்.

    சட்டோலை என்றால் சட்டம் எழுதுவதற்கு பயன்பட்ட ஓலையாகும். எழுதிய ஓலையினை வைப்பதற்கு பயன்படுத்திய ஓலையின் உறை ச்சுருளை சந்திரகம் என்னும் பெயரால் அழைத்திருக்கிறார்கள். எழுதப்பட்ட ஓலைச்சுவடிகளைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் இடத்துக்கு சரசுவதி பண்டாரம் என்று பெயரிட்டமை சிறப்பாய் இருக்கிறதல்லவா! எழுதிய ஓலைச் சுவடிகளைப் படிப்பது தானே முக்கியம். படிப்பதற்கு ஏடுகளை வைக்க ஒரு பலகையினைப் பயன்படுத்தியதை அறிய முடிகிறது. அப்படி அமைந்த அந்தப் பல கையைத்தான்  சிக்குப்பலகை என்று பெயரிட்டிருக்கிறார்கள்.

    திருமுக ஓலையினை நீட்டு என்று அழைத்தார்கள். நெட்டோலை என்றும் திருமுகத்துக்கு இன்னுமொரு பெயரினையும் கொடுத்திருக்கிறார்கள். பச்சை ஓலையினை பையோலை என்றும்முத்திரை ஓலையினை பொறி யொற்றோலை என்றும் அழைத்திருக்கிறார்கள். ஒலையில் எழுதப்பட்ட பத்திரத்தை முறிப்பத்திரம் என்றார்கள். எழுதாமல் இருக்கும் ஓலையினாலான ஏடுகளை  வெள்ளேடு என்றும் வெள்ளோலை என்றும் பெயரிட்டு அழைத்தார்கள் என்று அறியக் கூடியதாக இருக்கிறது.

    பனை ஓலையினால் ஆகிய ஏடுகளைக் குறிக்க இன்னும் பல சொற்களை எங்கள் முன்னோர்கள் தங்கள் வசம் வைத்திருந்தார்கள். அவை பற்றி தனி நூலே எழுதிவிடலாம். அசைஇணாட்டு,  இருவிள,  ஊக ஆதாரப்படிஊகமூலப்படிஏடுதிருப்புதல்ஓலைதீட்டுதல்ஓலையாள்கணக்காயர்கதம்பை, கரம்கை முறிகோணோலை, சுகஸ்தலிகிதம்திருக்கைக் கோட்டிஇப்படி எண்ணில்லாச் சொற்களைப் பெயராக்கி கற்பகதருவாம் பனையின் ஓலையினை அதனால் ஆகிய ஏட்டினை கண்டு மகிழ்ந்து பயனடைந்தி ருக்கிறார்கள் எங்களின் முன்னோர்கள். அதுமட்டுமல்ல இப்படியும் பனை ஓலையினால் ஆகிய ஏட்டினை அழைத்து மகிழலாம் என்பதற்கும் பல அருஞ் சொற்களை ஆக்கி அளித்திருக்கிறார்கள் என்னும் பொழுது எங்கள் முன்னோர்களின் ஆற்ற லை ஆளுமையை வியக்காமல் இருந்திட முடியுமா!

    எண்ணக் கருத்துகளைச் சுமந்து எங்களுக்கு அளித்த பெருமை ஏட் டுச் சுவடிகளுக்கே உரியது என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை எனலாம். இன்று நாங்கள் நூல்களாய் கைகளில் வைத்து பயன் அடை யும் மூலத்தை அளித்தன ஏடுகள் அல்லவா! அரிய பெரிய பொக்கிஷங்களை யெல்லாம் அழியாமல் காத்த எங்கள் முன்னோரின் தொழில் நுட்ப ஆற்றலையும் வியக்காமல் இருக்கவே முடியாதும் இருக்கிறது அல்லவா! அத்தனை கருவூலங்களையும் அடக்குவதற்கு கைகொடுத்தது கற்பகதருவாம் பனையின் ஓலைகள் என்னும் பொழுது  – பனை எங்களின் உறவாகி எங்களுடன் இரண்டற இணைந்து விடுகிறது அல்லவா!

    பனையின் ஓலையினாலான ஏடுகள் என்றவுடன் எங்களுக்கு முன்னால் வந்து நிற்பவை சாதாரண ஏடுகளே. அதாவது நீளமாக ஒரு குறி ப்பிட்ட அளவில் வெட்டப்பட்ட நறுக்குகளாகவே அவைகள் இருக்கும். அவற்றையே நாம் கண்டிருப்போம். ஆனால் ஏட்டுச் சுவடிகள் பல வடிவங்களில் இருப்பதை நம்மில் எத்தனைபேர் அறிவோம். சிறியபெரியசுவடிகள்பம்பரச்சுவடிகள்அது மாத்திரமல்ல சிவலிங் கத்தின் வடிவத்திலும் ஏட்டுச் சுவடிகள் அமைந்திருக்கின்றன. திருமுருகாற்றுப்படை என்பது முருகப் பெருமான் பெருமை கூறும் நூலாகும்.. முருகனை அடை  வதற்கு வழிகாட்டும் அதாவது ஆற்றுப்படுத்தும் நூல் என்பது அதன் அர்த்தமாகும். இந்த நூல் வட்டவடிவான மிகச்சிறிய ஓலையில் எழுதப்பட்டிருக்கிறது. இதனை பம்பரச் சுவடி என்றார்கள். எட்டு சென்டி மீற்றர் நீளமும்முக்கால் சென்டி மீற்றர் அகலமும் கொண்ட சுவடிகள் சிறிய சுவடிகள் என்று அழைக்கப்பட்டன.  ஐம்பது சென்டி மீற்றர் நீளமும் நான்கு சென்டி மீற்றர் அகலமும் உடைய சுவடிகளை பெரிய சுவடிகள் என்று அழைத்தார்கள்   அச்சடித்த நூல்களுக்கு அப்பாவும்அம்மாவுமே எங்களின் பனை ஓலை தந்த ஏடுகளேயாகும். அச்சடித்த நூல்களை வரி சையாய் அடுக்கி வைத்து அனைவருமே பயன் அடையும் வண்ணம் செய்வதற்கு பெரிய அளவில் நூலகங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் பழந்தமிழ் ஏட்டுச் சுவடிகளையும் நூலகத்தில் பாதுகாத்து பயனடையச் செய்திருப்பதையும் அறிந்திருப்பது அவசியம் அல்லவா! சுவடிகளைத் தேடி எடுத்து ஏறக் குறைய எழுபது ஆயிரம் சுவடிகளை – அச்சடித்த நூல்களை அலுமாரிகளில் அடுக்கி வைத்திருப்பது போல இந்த நூலகத்தில் அடுக்கிப் பாதுகாப்புடன் பயன்படுத்தும் வகையில் வைத்திருக்கிறார்கள். சென்னையில் அமைந்திருக்கும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அமைந்திருக்கும் கீழ்த்திசை சுவடிகள் நூலகம்தான் இந்த அரிய பணியினைச் செய்திருக்கிறது. ஓலைச் சுவடிகளை ஆராய்கின்ற ஆய்வறிஞர்களுக்கு அந்த நூலகம் பெருங் கொடையாய்வரப்பிரசாதமாய் அமைந்திருக்கிறது எனலாம். நூலகம் என்னும் நிறுவனம் பதினாறாயிரத்து ஐஞ்ஞூறு ஏட்டுச் சுவடிகளைத் தேடி எடுத்துப் பாதுகாத்து வைத்துப் பேணி வருகிறது என்பதும் கருத்திருத்த வேண்டியதேயாகும்.

    ஓலைச் சுவடிகளின் அருமை தெரியாதவர்கள் அவற்றை அடுப்பு எரிக்கவும் பயன்படுத்தியிருக்கிறார்கள். சிலர் ஓலைச் சுவடிகளை ஓடுகின்ற நீர் நிலைகளிலும் விட்டிருக்கிறார்கள். சிலர் தம்வசம் இருந்த ஏட்டுச்சுவடிகளைப் பிரித்துப் பார்க்காமலுங்கூட இருந்திருக்கிறார்கள். சம்பந்தப் பெருமான் காலத்தில் அனல் வாதம்புனல் வாதம் என்னும் போட்டியில் முக்கியம் பெற்றது ஓலைச்சுவடிகளே. மணிவாசகர் திரு வாசகத்தை ஓலையில் எழுதி இறைவன் சன்னிதியில் வைக்க அடுத்த நாள் அந்த ஓலை திருத்த மாய் வந்ததாயும் புராணம் செப்புகிறது. “பாவை பாடிய வாயால் ஒரு கோவை பாடுக” என்று இறைவன் பணித்ததாயும் அதற்கு ஒப்ப மணிவாசகரும் திருக்கோவையாரைப் பாடினார் என்றும் அறிகின்றோம். பாவையும் கோவையும் ஓலையில்த்தான் எழுதப்பட்டன என்பதும் மனமிருத்த வேண்டியதே.

    ஏடுகளைத் தேடி ஊர் ஊராய் அலைந்து திரிந்தவர்தான் எங்கள் தமிழ்த் தாத்தா உ.வே.சா அவர்கள். அவர் பசியும் பாராதுஉடற் களைப்பும் பாராது பழந்தமிழ் ஓலைச் சுவடிகளைத் தேடுவதையே குறிக் கோளாய்க் கொண்டு வாழ்ந்தார் என்பதை யாவரும் அறிவார்கள். அவர் ஓலைச் சுவடிகளைத் தேடிப் போகும் வேளை தாம் கண்டு அனுபவித்த விஷயங்களை மனம் நொந்து எழுதியதையும் நாம் பார்க்கின்றோம்,   வீட்டில் பழைய ஓலைச் சுவடிகள் இருந்தால் பெருந்தோஷம் என்று எண்ணி அவற்றை நெருப்பில் இட்டும்  நீரில் இட்டும் பலர் செய்ததைக் கண்ணாரக் கண்டு கண்ணீர் விட்டு வேதனை அடைந்ததாகவும் தமிழ்த் தாத்தாவின் சரித்திரம் எங்களுக்கு சொல்லுகிறது. என்றாலும் அவர்களிடம் கெஞ்சி மன்றாடி பல ஓலைச் சுவடிகளை எடுத்துவந்தார் என்பதையும் அறியமுடிகிறது. சரயான முறையில் பேணிப் பாதுகாக்கப்படாத படியால் எங்களின் பக்திப் பனுவல்களான திருமுறைகள் பல – பூட்டிய அறைக்குள் கறையான்களுக்கு உணவாகிப் போனதையும் மனத்திருத்தல் வேண்டும்சரியான.  முறையில் அந்த ஓலைச் சுவடிகள் காக்கப்பட்டிருந்தால் இன்னும் எத்தனையே அரிய திருமுறைப் பாடல்களை நாம் கண்டு பயன் பெற்றிருந்திருப்போம். ஓலை தந்து அதனை ஏடாக்கி எழுதிட வைத்திட்ட பனைகூட இப்படியான செயல்களைக் கண்டு கண்ணீர் வடித்திருக்கும் என்றுதான் எண்ண வேண்டும் அல்லவா! தானமாய் தன்னுடைய ஓலைகளைக் கொடுத்து – உங்கள் சிந்தனைகளை மனத்திலே வைக்காமல் வருங்கால சந்ததியினருக்கும் வழங்குங்கள். அப்படி வழங்குவதற்கு நான் என்றும் துணையாக இருப்பேன் என்று கை கொடுத்தது பனை அல்லவா! அந்தப் பனை – பொறுப்பில்லா மனி தர்களின் செயலினைப் பார்த்து எப்படி யெல்லாம் கலங்கி இருக்கும் ! கலங்கினாலும்கவலைப் பட்டாலும் தன்னால் எவ்வளவு கொடுக்க முடியுமோஎவ்வளவு உதவிட முடியுமோ அவ்வளவையும் கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறது. நாங்களோ மரம் என்று பனையினைப் பார்த்து சொல்லி விட்டு “உணர்வில்லா” மனிதர்களாகவே உலவுகிறோம்.

    எழுத்தோலைச் சுவடிசெய்யக்
    குருத்தோலை தந்திடுவேன்
    ஏடாக நானெழுந்து
    எல்லோர்க்கும் உதவிடுவேன்
    மனமிருக்கும் கருத்துக்கள்
    மற்றவர்க்குக் கொடுப்பதற்கு
    பக்குவமாய் ஓலைதந்து
    பாரெல்லாம் வளர்ந்திடுவேன்
    எத்திசையில் இருப்பார்க்கும்             
    இயன்றவரை உதவிடுவேன்              
    எனைப்பார்த்து நீங்களுமே            
    இயன்றவரை உதவிட்டால்           
    நலமுடனே எல்லாரும்             
    நன்றாக வாழ்ந்திடலாம்

    Share
  • சிவனைக் குறிக்கும் சிறந்திடு விரதம்!

    சிவனைக் குறிக்கும் சிறந்திடு விரதம்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    ஆஸ்திரேலியா

    ஆடும் அரவும் அழகுடை நிலவும்
    ஓடும் நதியும் உயர்சடை வைத்தான்
    காடுடை சுடலைப் பொடியினை எடுத்து
    தோடுடை செவியன் சுந்தரம் ஆக்கினான்

    அடியார் அழைத்தால் அங்கே நிற்பான்
    அன்பே அவனின் அகமா யிருக்கும்
    ஆசை யடங்கினால் அருகே அணைவான்
    மாசை அகற்றும் மாணிக்கம் ஆவான்

    ஆலம் வந்தால் அதையும் ஏற்பான்
    ஆழ அன்பை அணைத்தே நிற்பான்
    சீலம் உடையார் சிந்தை வருவான்
    சிவனே என்றால் சிறப்பும் தருவான்

    கால காலனைக் காலால் உதைத்தான்
    கருத்துடைப் பக்தனை மீட்டான் கருணையால்
    பாலன் அழுதான் பாலும் கொடுத்தான்
    பக்தர் துடித்தால் பதறுவான் பரமன்

    ஆதியும் இல்லான் அந்தமும் இல்லான்
    அவனின் முன்னே ஆணவமும் எழுந்தது
    பிரமன் தானே பெரியவன் என்றான்
    திருமால் மறுத்துத் தானே என்றான்

    ஆணவம் அடக்க அரனும் எண்ணினான்
    அவர்களின் முன்னே ஜோதியைக் காட்டினான்
    ஜோதியின் முடியை ஜோதியின் அடியைக்
    காணுவார் பெரியர் ஒலித்தது பேரொலி

    ஒலியைக் கேட்டவர் ஒளியைத் தேடினார்
    அடியையும் காணா முடியையும் காணா
    அவரவர் தேடியே அலைந்துமே நிற்க
    ஆனந்த ஜோதி அரனாய் ஒளிர்ந்தது

    பிரமன் திருமால் பெம்மானைப் போற்றினர்
    மருளுடை எண்ணம் மறைந்தே போனது
    அருளுடன் சிவனும் அணைத்தே நின்றான்
    ஆணவம் பொடிப்பொடி ஆகியே நின்றது

    பெருமான் சிவனைப் பேணியே நிற்க
    உருகியே அடியார் விரதம் இருப்பார்
    சிவனைக் குறிக்கச் சிறந்திடு விரதமாய்
    அமையும் விரதம் சிவராத்திரி ஆகும்

    அடியை முடியைத் தேடிய சம்பவம்
    சிவனின் ராத்திரி செப்பியே நிற்கும்
    ஆணவம் போக்கிடும் அற்புத விரமாய்
    சினார் ராத்திரி சிறப்புடன் திகழும்

    விஞ்ஞான உண்மைகள் நிறைந்ததே விரதம்
    மெய்ப்பொருள் அதனுடன் இணைவதே தத்துவம்
    ஆன்மீகம் அறிவியல் அமைவதே சமயம்
    அனைவரும் அகத்தில் இருத்துதல் அவசியம்

    பசித்தும் விழித்தும் இருப்பது விரதம்
    பசித்து விழித்து இருப்பது பக்குவம்
    பசித்தும் விழித்தும் பக்குவம் மிகுந்தால்
    பரமனைப் பார்க்கும் பதவியும் கிடைக்கும்

    உண்மைகள் என்றும் உயிர்ப்புடன் இருக்கும்
    உண்மைகள் என்றுமே உறங்கிட மாட்டா
    உயர்வுடை உண்மைகள் இறைவனே ஆகும்
    உணர்வெலாம் இறையினை இருத்தியே வைப்போம்

    Share
  • பொங்கலோ பொங்கல் !

    பொங்கலோ பொங்கல் !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    தைபிறந்து விட்டாலே தங்கமே தங்கம்
    தளர்வகன்று போயிடும் தங்கமே தங்கம்
    பொங்லென்று சொன்னாலே தங்கமே தங்கம்
    புத்துணர்வு பிறந்திடுதே தங்கமே தங்கம்

    நன்றி சொல்லும் பெருவிழாதான்  பொங்கலாகுமே
    நாளுதிக்கும் சூரியயனே நமக்கு ஆதாரம்
    உழவதனை உளமிருத்தும் உயர்ந்த விழாவே
    உயர்வான எங்களது பொங்கல் விழாவே

    வாசலிலே கோலமிட்டு வாழை கட்டியே
    மஞ்சளிஞ்சி கரும்புமதில் சேர்த்துக் கட்டியே
    தோரணமாய் அலங்கரித்து வீட்டு வாசலில்
    தொடங்கிடுவோம் பொங்கிவிட விளக்கு ஏற்றியே

    வீட்டிலுள்ள அனைவரு மதிகாலை எழும்பியே
    விரைவாக நீராடி புத்தாடை அணிந்துமே
    பொங்கல் பொங்க புறப்படுவோம் பூரிப்பாகவே
    மங்கலமாய் பெற்றவர்கள் மகிழ்ந்து நிற்பார்கள்

    பொங்கற்பானை அடுப்பினிலே ஏற்றி வைத்ததும்
    அக்கினையை மூட்டிவிடப் பாட்டி வந்திடுவா
    அரிசி பருப்பு சர்க்கரை அனைத்தையையுமே
    அம்மாயங்கே ஒழுங்காய்க் கொண்டு வந்திடுவா

    பானையிலே பாலையூற்ற தாத்தா வந்திடுவார்
    பாட்டியோடு அம்மாவோடு நாமும் ஊற்றுவோம்
    பொங்கிவரும் வேளைக்காக காத்து நின்றுமே
    அரிசியுள்ளே போடுதற்கு ஆவல் கொள்ளுவோம்

    பொங்கிவரும் பாலைப்பார்க்க பூரிப் பெய்துவோம்
    அரிசியினை கையெடுத்து அனைவரும் போடுவோம்
    பொங்கிலினை பெருவிருப்பாய் மனதில் எண்ணியே
    பொங்கலோ பொங்கலென்று சொல்லி மகிழுவோம்

    அரிசிவெந்த பின்னரம்மா சர்க்கரை போடுவார்
    அக்கம்பக்கம் பொங்கல்மணம் காற்றில் கலந்திடும்
    பானைநிறைய பொங்கலெம்மை பார்த்துச் சிரித்திடும்
    அம்மாவுடனே  பொங்கலினை இறக்கி வைத்திடுவார்

    கோலமிடை வாழையிலை அம்மா வைத்துமே
    பொங்கலினை பக்குவமாய் படைத்து மகிழுவார்
    அந்தவேளை ஆதித்யன் ஆசி வழங்குவான்
    அனைவருமே அவனை வணங்கி ஆசிவேண்டுவோம்

    தம்பிதங்கை பட்டாசை வெடித்து மகிழுவார்
    தாத்தாபாட்டி  தூரநின்று கேட்டு மகிழுவார்
    அப்பாவம்மா அனைத்தையுமே பார்த்து மகிழுவார்
    ஆனந்தமாய் பொங்கலங்கே பொங்கி ஒளிருமே

    தாத்தாபாட்டி கால்களிலே விழுந்து வணங்குவோம்
    ஆசிகூறி காசுதந்து வாழ்த்தி மகிழுவார்
    அப்பாவம்மா ஆசிதந்து அணைத்து நிற்கையில்
    ஆனந்தமே எங்களுக்குள் பெருகி நின்றிடும்

    பொங்கலன்று அனைவருமே கோவில் செல்குவோம்
    எல்லோர்வாழ்வும் சிறப்புறவே இறையை வேண்டுவோம்
    ஆலயத்தில் பக்குவாய் அனைத்தும் நடந்திடும்
    ஆண்டவனின் நினைப்புடனே வீடு திரும்புவோம்

    பொங்கலினை மற்றவர்க்கும் கொடுத்து மகிழுவோம்
    தருகின்ற பொங்கலினை ஏற்றும் மகிழுவோம்
    உறவுகளைப் பார்ப்பதற்கு உவப்பாய்ச் செல்குவோம்
    உடனிருந்து பொங்கலினை உண்டு மகிழுவோம்

    பொங்கலெனும் வார்த்தையது பொருள் பொதிந்தது
    மங்கலத்தை மாநிலத்தில் பதித்து நிற்பது
    எங்கணுமே இன்பமதைப் பெருக்கி நிற்பது
    இனிப்போடு உறவுகளை இணைக்கச் செய்வது

    Share
  • பொங்கலோ பொங்கல் என்று ஆனந்தமாய் கொண்டாடி அகமகிழ்வோம் வாருங்கள்!

    பொங்கலோ பொங்கல் என்று ஆனந்தமாய் கொண்டாடி அகமகிழ்வோம் வாருங்கள்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    “தைபிறந்தால் வழிபிறக்கும்” என்று தமிழர்கள் சொல்லுவது வழக்கமாகும். அந்த வழக்கம் மனத்தில் புத்துணர்வையும் , உத்வேகத்தையும் , உவந்தளிக்கும்.

    “தை பொறந்தால் (பிறந்தால்) வழி பிறக்கும் தங்கமே தங்கம்
    தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம்
    முத்துச் சம்பா நெல்லு குத்தி தங்கமே தங்கம்
    முத்தத்திலே சோறு பொங்கி தங்கமே தங்கம்
    குத்து விளக்கேத்தி வச்சு (வைத்து) தங்கமே தங்கம்

    கொண்டாடி மகிழ்ந்திடுவோம் தங்கமே தங்கம்”  – என்னும் இந்தப் பாடல் மனமகிழ்ந்த பொங்கலை, மலர்ந்த பொங்கலை, மண்வாசனை தரும் பொங்கலை, உயிர்த்துடிப்பான பொங்கலை, கலாசாரம் பண்பாடு கலந்த பொங்கலை நினைவூட்டிகிறதல்லவா?  இப்படி ஒரு காலம் இருந்தது. ஆனால் அப்படி ஒரு காலம் வரவேண்டும் என்பதுதான் எல்லோரினதும்  பேராவலும் ஆகும்.

    “உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் – வீணில்
    உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்”

    “உழுதுண்டு வாழ்வார்க்கு ஒப்பில்லைக் கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு”

    “சேற்றில் கால் வைக்காவிட்டால் சோற்றில் கைவைக்க முடியாது” இவையெல்லாம் பொங்கலை மன மிருத்தும் அமுத வாக்குகள்.

    பொங்கல் என்றாலே உற்சாகம் பிறந்துவிடும். புத்தாடை வாங்குவது! புதுப்பானை வாங்குவது! சர்க்க ரையும், தேனும், நெய்யும், பருப்பும், பாலுந்தான் முன்னால் வந்து நிற்கும். கூடவே பழங்களும், கரும்பும் சேர்ந்து விடும்! இவை அனைத்தும் ஒன்றாய் இணையும் விழாவினைப் பற்றி அறிவது அவசியம் அல்லவா? அந்த விழாவின் உட்கருத்தை அறிவோமா ? வாருங்கள் !

    தைமாதத்தின் தொடக்கத்தில் இந்த விழா ஏன் கொண்டாடப்படுகிறது ? இந்த விழாவினை யாரை மையப்படுத்திக் கொண்டாடுகிறோம் ? இந்த விழாவின் அடிப்படை எதனை உணர்த்துகிறது ? இந்த விழாவில் தமிழரின் எத்தகைய பண்பாட்டு அம்சங்கள் நிறைந்திருக்கின்றன?  பொங்கல் என்றால் புது உடைகள் வாங்குவோம். பொங்குவோம். தொலைக்காட்சியில் நடக்கும் பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சிகளைப் பார்த்து ரசிப்போம். அத்துடன் பொங்கல் விழா நின்றுவிடும். இதுவல்ல பொங்கல் !

    உழைப்பு என்பதுதான் சமுதாயத்தின் அடிப்படை. அந்த உழைப்பில் பங்கு கொள்ளும் அனைவரும் வாழ்த்தப்பட வேண்டியவர்களே. உழைப்புக்கு உதவும் மனிதர்கள், உழைப்புக்கு உதவிடும் விலங்குகள்,உழைப்புக்கு உதவிடும் கரு விகள் கவனத்தில் கொள்ளப்படுவதுதான் சமூதாய அறமாகும். அப்படியான ஒரு அறத்தினை வலியுறுத்தத்தான்  தைப்பொங்கலைக் கொண்டாடுகிறோம் என்பதை மனமிருத்தல் வேண்டும்

    உலகிலே  உயிர்வாழ்வதற்கு வெப்பம் முக்கியமானது. காற்று முக்கியமானது நீர் முக்கியமானது. உணவு  முக்கியமானது. இவற்றுக்கெல்லாம் இறை அம்சம் கொடுத்து அவற்றை சமூகத்தின் உயர் நிலையில் வைக்கும் வழக்கம் நெடுங்காலமாக இருந்து வருகிறது. இவையாவும் தைப்பொங்கலுடன் இணைவதால்த்தான் பொங்கல் சிறப்பான விழாவாக அமைகிறது எனலாம்.

    விவசாயம் என்பதுதான் சமூக வாழ்வுக்கு முதுகெலும்பாகும். விவசாயம்  கொண்டு வருகின்ற பொருட் களால்த்தான் சமூகத்தில் மக்களின் அன்றாட வாழ்வே சிறப்பாகிறது. அந்த விவசாயத்தைச் செய்பவன் இந்தப் பொங்கலில் போற்றப்படுகின்றான். அந்த விவசாயிக்கு உதவும் மாடுகள் பூசிக்கப் படுகின்றன. விவசாயத்தை செழிப்பாக்கும் சூரியன் வணங்கப்படுகிறது. விவசாயத்துக்கு உதவும் கருவிகள் மதிக்கப்படுகின்றன. இதனால் தைப்பொங்கல் என்பது நன்றியினை நவில்கின்ற பெருவிழா அமைகிறது என்பது முக்கிய கருப்பொருள் எனலாம்.

    தையில் அறுவடை செய்த புத்தரிசி கொண்டு புதுப்பானையில் பாலும் சர்க்கரையும் சேர்த்து மண்பானையில் பொங்கி மகிழும்பொழுது பொங்கி வரும் பாலினைப் பார்த்து குடும்பத்தில் உள்ளார்கள் “பொங்கலோ பொங்கல்”  என்று மகிழ்ந்து நிற்கும் நிலையினை எங்கள் பிள்ளைகளின் உள்ளத்தில் இருக்கச் செய்வது மிக இன்றியமையாததாகும்.

    கலப்படம் இல்லாமல்யாவுமே உழைப்பின் பயனாக வந்த அரிசி, பால், சர்கரை, கரும்பு, இஞ்சி, மஞ்சள், வாழை, மாவிலை, இவையெல்லாம் மகிழ்ச்சியின் அடையாளங்கள். மனித சமூகத்தின் மாண்பின் அடையாளங்கள் எங்களின் பண்பாட்டின் அடையாளங்கள். இவைகள் தைப்பொங்கலில் பயன்படுத்தும் பொழுது ஏற்படும் மனநிறைவுக்கு ஈடு இல்லை எனலாம்.

    கூட்டுறவின் மகத்துவம் தைப்பொங்கலின் சிறப்பாகும். மனிதனும் விலங்குகளும் கூடி உழைத்து அதன் பயனாக வெளிப்படும் ஒரு கூட்டுறவுத் திருநாள் என்றுகூட தைப்பொங்கலை எடுத்துக் கொள்ளலாம். வருடத்தின் தொடக்க மாய்வரும் தையினை மங்களகரமாக வரவேற்க வேண்டு மென்று எண்ணி பொங்கல் திருநாளினை ஏற்படுத்திய எங்களின் முன்னோர்களை நாங்கள் வாழ்த்தாமல் இருந்திட முடியுமா? வருடத் தொடக்கத்தில் மனதில் ஏற்படும் எண்ணங்கள்தான் அந்த வருடம் முழுவதையும் மகிழ்வுடன் வாழவைக்கும் என்று எண்ணிய உளவியல் சிந்தனையை உவந்தேற்ற வேண்டாமா ?

    பொங்கலின் முதலில் மார்கழியின் நிறைவில் போகி என்றொரு பண்டிகை கொண்டாடப்படுகிறது. போகி என்றால் பழைய விஷயங்களை பழைய பொருட்களைக் களைந்து விடுவதாகும். அடுத்து பொங்கல் வருகிறது. பழைய பொருட்களை எரித்து விடுவதைத்தான் போகியில் காண்கிறோம், உண்மையில் இதன் அர்த்தம் அதுவன்று. எங்கள் மனதிலுள்ள பொறாமை வஞ்சகம். பொய், கபடு, சூது, வாது, இவற்றை யெல்லாம் ஞானம் என்னு. தீயில் பொசுக்கி மனதைத் தூய்மை ஆக்கி புத்தாடை உடுத்து புதுப்பொங்கலை சுவையாக உண்டு புத்துணர்வு பெற்று நிற்கவேண்டும் என்பதுதான் இதன் தாற்பரியம் எனலாம்.

    பொங்கலுக்கு அடுத்து மாட்டுப் பொங்கல் வருகிறது. விவசாயத்துக்கு உதவிய மாடுகளுக்கும், பால் தந்து எம்மை வாழ்வித்த பசுக்களுக்கும் நன்றி நவிலும் நாளாக இது அமைகிறது. அடுத்த நாள் காணும் பொங்கல் அமைகிறது. உற்றார் உறவினரை, பெரியவர்களைக் கண்டு அவர்களின் வாழ்த்தினை ஆசியினைப் பெற்றுக் கொள்ளும் நாளாக இந்த நாளை அமைத்து மகிழ்கின்றார்கள்.

    மாட்டுப்பொங்கல், போகித்திருநாள், காணும்பொங்கல் இவைபற்றி எல்லாம் நகரித்தில் வாழ்கின்றவர்களுக்கோ.  புலம்பெயர் பகுதிகளில் வாழ்கின்றவர்களுக்கோ தெரியவருவது குறைவாகும். பொங்கலைக் கூட குக்கரில் பொங்கி தாங்கள் இருக்கும் வீட்டின் அடுப்படியில் வைத்து கரண்டியால் இரண்டு கரண்டி அவசர அவசரமாக வாயில் போட்டுவிட்டு வேலைக்கு ஓடும் நிலையினைதான் பொங்கல் நன்னாளில் காண்கின்றோம். மாடிக் குடி இருப்புகளில் வாழ்கின்றவர்களின் பொங்கலை நினைத்துப் பார்க்கவே பரி தாபமாகவே இருக்கும்.

    சமயம் கடந்த விழாவாக தமிழர் விழாவாக தைப்பொங்கல் விளங்குகிறது என்பதுதான் இந்த விழாவின் மிகச் சிறப்பு எனலாம். உலகில் வாழுகின்ற தமிழர்கள் – கிறீஸ்தவராயினும், இந்துக்களாயினும் , தைப் பொங்கலை மகிழ்வுடன் “பொங்கலோ பொங்கல்” என்று பொங்கும் மனத்துடன் கொண்டாடி மகிழ்கி றார்கள். சமயச்சாயம் பூசப்படாத தமிழர் திருநாளாய்  தைப்பொங்கல் திகழ்கிறது என்பது தமிழருக்கெல்லாம் மிகவும் பெருமையான விஷயம் அல்லவா !  நன்றி நவிலும் விழா ! உழைப்பாளரின் உன்னத விழா ! கூட்டுறவின் விழா ! மதபேதமற்ற மகோன்னத விழா ! எல்லோரும் ஓரினம் எல்லோரும் ஓர் நிறை என்னும் விழா ! எனவே பொங்கலோ பொங்கல் என்று ஆனந்தமாய் கொண்டாடி அகமகிழ்வோம் வாருங்கள்.

    Share
  • கற்பக​த்தரு என்னும் அ​ற்புதம் – ஏடு​ தந்திட்ட எங்க​ள் பனை (அங்கம் – 7)

    கற்பக​த்தரு என்னும் அ​ற்புதம் – ஏடு​ தந்திட்ட எங்க​ள் பனை (அங்கம் – 7)

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    பனை செழித்தால் பாரம்பரியம் செழிக்கும்
    பனை அழிந்தால் பாரம்பரியமே அழியும்”

    வருடம் முழுதும் வற்றாத வளம்
    வாங்கி வந்த வரமே பனை”

    வானோங்கி நிற்பதுதான் எங்கள் கற்பகதருவாம் பனை மரம். வாழ்வில் தோள் கொடுத்துத் தோழமையுடன் நிற்பதுதான் எங்கள் பனை மரம். இருந்தாலும் பயன் கொடுக்கும். இருப்பை விட்டு மறைந்தாலும் பயன் கொடுக்கும். பனை என்பது  மரம் அல்ல. அது நல் வரம் என்பதை மனமிருத்தல் வேண்டும். பனையின் நிலையினை  நாங்கள் ஒவ்வொருவருமே மனத்தில் இருத்திட வேண்டியது அவசியமாகும். இருக்கும் வரை எவ்வளவு கொடுக்க முடியுமோ அவ்வளவு கொடுக்கிறது என்பதே எங்களுக்கெல்லாம் நல்லதொரு பாடமாய் இருக்கிறதல்லவா! மற்ற மரங்களைப் போல பனையினை நாங்கள் பார்த்துவிடக் கூடாது. தலை நிமிர்ந்து தளர்வின்றி.   கொடை வழங்கும் கர்ணனாய் கற்பகதருவாம் பனை காட்சி தருகிறது என்பதும் கருத்திருத்த வேண்டியதேயாகும்.

    பனையின் ஓலைகளை சாதாரணமாகப் பார்த்தே பழகிவிட்டோம். ஆனால் அந்த ஓலைக்குள் எவ்வளவு பொக்கிஷங்கள் பொதிந்திருக்கின்றன என்பதை ஏட்டுச் சுவடிகள் வரலாற்றுக்குள் பார்த்தோம். அந்த வரலாற் றுக்குள் சற்று உள்ளே போய் இன்னும் என்ன இருக்கிறது என்பதையும் பார்ப்பது அவசியம் அல்லவா !

    இலக்கியம் வளர்த்த பனை என்று கூறுவதில் எள்ளளவும் ஐயம் இல்லை என்றே எண்ணத் தோன்றுகிறதுஎமது முன்னோர்களின்  சிந்தனைச் செல்வங்களை இன்று நாம் பயனாக்கி நிற்கிறோம் என்றால் அதற்குதக்க துணையாக அமைந்தது பனை தானே! பனைமரத்தின் ஓலைச் சுவடிகள் இல்லை என்றால் பழந்தமிழ்ச் செல்வங்கள் எங்களுக்குக் கிடைத்திருக்க வாய்ப்பே இல்லாமல் போயிருக்கும். பனை இல்லையேல் நமக்கு  மொழியில்லை. வரலாறு இல்லை. ஏன் பாரம்பரியமே இல்லை என்பதை உணரும் பொழுது மெய்சிலிர்க்கிறதல்லவா!  “பயன்மரம்” என்று வள்ளுவமே போற்றும் தகைமையினைப் பெற்ற ஒரே மரமாய் கற்பகதருவாம் பனையே விளங்குகிறது என்பது மனமிருத்த வேண்டிய கருத்தல்லவா.

    “ஆறங்க வேதநூ லாகமநூல் வேறுமுள மெய்க்கலைகள்
    போதமிகுந்த புராணநூல் – ஓதுகின்ற
    மந்திரநூல் சிற்பநூல் வாகடநூல் வாய்மைமிகு
    செந்தமிழ்நூல் பற்பலவும் தீட்டலாம் – சுந்தரஞ்சேர்
    மங்கல நாளோலை மஙகையர்க்குக் காதோலை
    துங்கமிகு நண்பருக்குத் தூதோலை – தங்குபல
    பற்று வரவு பதியுங் கணக்கோலை
    மற்று முறுதி வரையோலை – கற்றவர்கள்
    எந்திரங்கள் கீறி எழுத்தடைத்துக் கட்டுகின்ற
    மந்திர வோலைகட்கு வாய்ப்பாகும் “

    என்று “தாலவிலாசம்” நாடகநூலும்

    “படிக்க நல்ல தம்பியர்க்கு
    பட்டோலை நானாவேண்
    எழுத நல்ல தம்பியர்க்கு
    எழுத்தோலை நானாவேன்
    தூரத்து வன்னைமைக்கு
    தூதோலை நானாவேன்
    வாசலில் வன்னிமைக்கு
    வழக்கோலை நானாவேன்”

    என்று நாட்டுப் புறப்பாடலும் பனை ஓலையின் பயன் பாட்டினை வியந்து நிற்பதைக் காண்கிறோம். பனை ஓலையென்று நாங்கள் சாதாரணமாய் எண்ணி விடும் அந்த ஓலைக்குள் இத்தனையும் இருக்கிறதா என்று எண்ணுகையில் பனையென்பது நல்வரம் என்றுதானே சொல்ல வேண்டும்.

    ஏடுதந்த பனையின் ஓலை பற்றிய எண்ணப் பதிவினை “பனை மர சோபனம்” என்னும் நூல் எப்படிப் பார்க்கிறது என்பதையும் பார்ப்போம்.

       ” வருடத்திற் கோர்தினத்தில் சரஸ்வதியம்மன் பூசைசெய்து
    மஞ்சள் படிந்துவர மங்கலங்கள் பாடிவர
    அட்சதையும் மலரெடுத்து அர்ச்சிப்பார் உலகமெலாம்
    என்னைத் திருத்தியவர் எழுத்தாணி கைப்பிடித்து
    ஆசிரியரும் வேதியரும் ஹரிநமோ என்றெழுதி
    ஹரிஹரி என்றெழுதி அர்ச்சிப்பார் என்னையவர்
    அரிச்சுவடி என்னாலே வரிக்காய்ப் பாடம்என்னாலே
    தர்க்கங்கள் என்னாலே சாஸ்திரங்கள் என்னாலே
    இராமாயணம் என்னாலே பாரதமும் என்னாலே
    பாகவதம் என்னாலே பலசாத்திரங்கள் என்னாலே
    திருவாய்மொழி என்னாலே திருமுறைகள் என்னாலே
    நாலுவேதம் என்னாலே ஆறங்கம் என்னாலே
    மங்கையர்க்கும் மன்னவர்க்கும் மணவறிவ தென்னாலே
    வர்த்தகருஞ் செட்டிகளும் கணக்கறிவ தென்னாலே
    பட்சமுள்ள வாசலுக்குப் பட்டோலை நானாவேன்
    காதத்துப் பெண்களுக்குக் காதோலை நானாவேன்
    தூரத்துப் பெண்களுக்குத் தூதோலை நானாவேன்
    கலியாண வாசலுக்குக் கட்டோலை நானாவேன்
    சீமந்து வாசலுக்குச் சீருடனே நான்போவேன்
    பிள்ளை பிறந்ததென்றால் பெருமையுடன் நான்போவேன்
    மைந்தன் பிறந்ததென்றால் மகிழ்ச்சியுடன் நான்போவேன்
    அரண்மனையில் நானிருப்பேன் ஆஸ்தானத்தில் நானிருப்பேன்
    மச்சுக்குள் நானிருப்பேன் மாளிகையில் நானிருப்பேன்
    எமலோகம் போனாலௌம் எல்லோர்க்கும் தெரியவைப்பேன்
    சிவலோகம் போனவர்க்குச் சீட்டோலை யாயிருப்பேன் “

    என்று பனை ஓலையின் ஒவ்வொரு நிலையினையும் இப்பாடல் காட்டு வதைக் கருத்திருத்துவது முக்கியம் அல்லவா!

    பனையின் ஓலை பலவிதங்களில் எங்கள் வாழ்வியலில் எப்படியெல்லாம் இணைந்திருந்தது என்பதை இங்கு பல பாடல்களால் கண்டோம். பனையின் ஒலையினால்  ஆகிய ஏடுகள் பற்றிய பல விஷயங்களையும் பார்க்கப் பார்க்க பெருமையாகவும் வியப்பாகவுமே இருக்கும். எழுதும் நிலை ஏற்பட்டவுடன் எழுதுவதற்கு உரியதாய் பனையின் ஓலைதான் பொருத்தமாய் அமைந்திருக்கிறது. இலகுவாய் கிடைத்தது. அதுவும் வாழும் அயலிலேயே கிடைத்தது. பனையின் ஓலையில் எழு துவதைக் கண்டறிந்த தன்மையினைச் சாதாரணமாகப் பார்த்துவிட முடியாது. மிகச் சிறந்த தெரிவு என்றுதான் எண்ண வேண்டும். கல்லில்மரத்தில்களிமண் தகட்டில்தோலில்செப்புத்தகட்டில் எழுதுவது என்பது இலகுவான செயலன்று. அதுமட்டுமல்ல அவற்றில் விரைவாகவும் எழுதிட முடியாது. எனவேதான் பனையின் ஓலையினை எழுதுவ தற்குத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். பனை ஓலையில் எழுதினால் அவற்றை போகும் இடமெல்லாம் எடுத்துச் செல்வது இலகுவாக இருக்கும் என்னும் காரணத்தாலும் – பனை ஓலை ஏடாய் மலர்ந்தது என்றும் எடு த்துக் கொள்ளலாம் அல்லவா !

    ஓலையில் எழுதுவது என்பது இலகுவான காரியம் அல்ல. ஓலையில் எழுதுவது என்பது ஒருவித கலை எனலாம். எழுத்தாணியைக் கொண்டு மிருதுவான ஓலையில் எழுதும் பொழுது மிகவும் கவனமாகவே எழுத வேண்டும். ஓலையில் எழுதும் எழுத்துக்கள் – நாங்கள் தற் பொழுது காகிதத்திலோ அல்லது கணிப்பொறியிலோ அல்லது தட்ட ச்சிலோ எழுதுவதுபோல் இலகுவாக எழுதிவிடல் முடியாது. பிழை யினை திருத்தவோ அழிக்கவோ முடியாது. எழுதினால் எழுதியதுதான். எழுதும் ஓலையில் பிழை வந்தால் அந்த ஓலையினைத் தவிர்த்து விட்டு புது ஓலையில்த்தான் எழுதல் வேண்டும். மெய் எழுத்துக்களை எழுத முடியாது. குற்றுப் போட்டால் ஓலை கிழிந்து விடும். ஓலையில் எழுதும் எழுத்துக்களை எழுதுவது என்பதற்கு நல்ல பழக்கம் வேண்டியதாய் இருந்தது. தற்காலத்தில் விரித்து எழுதுவதுபோல் எழுதிவிடவும் இயலாதுசுருக்கமாய் அதேவேளை செறிவாய் எழுதும் நிலையே காணப்பட்டது எனலாம். இதனாலேயே எழுதப்பட்ட எல்லாமே பாட்டின் வடிவத்தைக் கொண்டு அமையும் கட்டாயம் இருந்தது என்பது கருத்திருத்த வேண்டியதே.

    ஓலையில் பாட்டெழுதும் முறையிலும் வரையறைகள்  காணப்பட்டன என்பதற்கு ஆதாரங்களும் இருந்திருக்கின்றன.

    அந்தணர்க்கு நாலா றரசர்க் கிருபதாம்
    இந்த விரல் வணிகர்க் கெண்ணிரண்டாம் – முந்துவிரல்
    வேளாரக்க் கீராறாய் வெள்ளோலை வேயவனை
    தோளாய் அறிந் தொகுத்து

    என்று கல்லாடனார் வெண்பா காட்டுகிறது. இதன்படி நான்மறையாளர்கள் இருபத்து நான்கு விரற்கடை அளவும்அரசர்கள் இருபது விரற் கடை அளவும் வணிகர்கள் பதினெட்டு விரற்கடை அளவும்வேளார்கள் பனிரெண்டு விரற் கடை அளவு எடுத்தே ஓலையில் எழுத வேண்டும் என்னும் நிலை காணப்பட்டது என்பதை இப்பாடல் தெரிவிக்கிறது. இதனை மேலும் உறுதிப் படுத்தும் வகையில் பொய்கையார் பாடலும் வந்து அமைகிறது.

    ஓலைய திலைக்கணம் உரைக்குங் காலை
    நாலாறு விரலாம் நான்மறை யோர்க்கே
    பாருடை யோர்க்கும் பதிற்றிரண் டாகும்
    வணிகர்க் கீரெண் விரலாகும்மே
    காணென மொழிய சூத்திரக் களவே “

    புத்தகம் சரியா பொத்தகம் சரியா என்று குழம்புகின்றோம். பொத்தகம் என்னும் சொல் பல ஏடுகளை இணைத்த இணைப்பினைக் குறித்தது என்பதற்கும் பழையபாடல்கள் சான்றாய் வந்து அமைகின்றன. வெற்றிலைகளை அடிக்கி வைத்திருக்கும் அடுக்கினைக் குறிக்க “கவளி” என்னும் சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தச் சொல்லை பலரும் மறந்து விட்டாலும் இன்னும் இந்தச் சொல் பழக்கத்தில் இருக்கிறது. வெற்றிலை அடுக்கினைக் குறிக்க வழங்கப்பட்ட இச்சொல் ஏடுகளின் அடுக்கினுக்கும் வழங்கப் பட்டிருக்கிறது.

    பொத்தகம் படிகமாலை குண்டிகை பொருள் சேர் ஞான
    வித்தகம் தரித்த செங்கை விமலையை அமலை தன்னை
    மொய்த்த கொந்து அளக பாரா முகில் முலைத் தவள மேனி
    மைத்தகு கருங்கண் செவ்வாய் அணங்கினை வணங்கல் செய்வோம்

    கம்பராமாயணத்தில் சரஸ்வதியை வணங்கும் வகையில் அமைந்த இப்பாடலில் – சரஸ்வதி ” பொத்தகம் ” கையில் வைத்திருப்பதாய் காட்டுவது நோக்கத்தது.

      “மெய்யெலாம் நீறு பூசி வேணிகள் முடித்துக் கட்டி
    கையினில் படை கரந்த புத்தகக் கவளி ஏந்தி
    மை பொதி விளக்கே என்ன மனத்தினுள் கறுப்பு வைத்து
      பொய் தவ வேடம் கொண்டு புகுந்தனன் முத்த நாதன் “

    முத்திநாதன் என்பவன் உடம்பெலாம் திருநீறு பூசிக்கொண்டு சடை முடிந்த கோலத்தில் கையில் “பொத்தகச் சுவடி” வைத்துக் கொண்டு வந்தான் என்று பெரிய புராணத்தில் வரும் இப்பாடல் குறிப்பிடுகிறது. இங்கே “பொத்தகச் சுவடி” என்பதுதான் முக்கியம். அக்காலத்தில் ஏட்டுச் சுவடிகளை அடுக்காய் கொண்டுவரும் நிலையும் இருந்திருக்கிறது என்பதும் அதற்காக வழங்கப்பட்ட பெயர்களையும் கருத்திருத்துவது நலமல்லவா !

    ஏடுதந்த பனையின் ஓலைகளை எடுத்த எடுப்பில் ஓலை என்று அழைத்திடவும் முடியாது. ஓலை என்பது பொதுவான பெயராக இருந்தாலும் அது பனையின் மேல் முளைத்து எழுந்து வரும் பொழுது அதனை “குருத்தோலை ” என்கிறோம். பசுமையாய் வந்தபின்பு “சாரோலை” என்கிறோம். காய்ந்த பின்னர் “காவோலை” என்கிறோம். குருத்தோலை என் னும் பெயர் கிறீத்தவர்களுக்கு நன்கு பரிச்சயமான பெயராகும். குருத்தோலை பற்றி விவிலியத்திலும் வருகிறது. குருத்தோலை ஞாயிறு என்று ஒரு திருநாள் வருவதும் நோக்கத்தக்கது.

    குருத்தோலை என்று கூறியவுடன் அதனுள் நல்லதொரு தத்துவம் பொதிந்து இருக்கிறது என்பதை நம்மில் எத்தனைபேர் அறிந்திருப்போம் குருத்தோலைக்கு ஒரு மென்மைத் தனமையும் நெகிழும் தனமையும் உண்டு. மற்ற ஓலைகளைப் போல் குருத்தோலையானது கைகளை விரித்தபடி இருப்பதில்லை. பணிவு கொண்டு இருப்பவர்கள் போல – அக்குருத்தோலைகள் கூப்பியபடியே இருக்கின்றன. அதுமட்டுமல்ல அதன் நுனிகள் வானத்தை நோக்கியபடியே நிமிர்ந்தே நிற்கின்றன. இப்படிக் குருத்தோலைகள் இருப்பது – வாழ்வில் நம்பிக்கையினை யும்பணிவையும் எமக்குப் புகட்டுவதாக இருக்கிறது என்பதும் மனங் கொள்ளத்தக்கதாகும்

     (வளரும்)

    Share
  • புது வெளிச்சம் காட்டப் புதுவருடம் வரட்டும்

    புது வெளிச்சம் காட்டப் புதுவருடம் வரட்டும்

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    நல்லன நடக்க வேண்டும்
    நாடெலாம் சிறக்க வேண்டும்
    வல்லமை பெருக வேண்டும்
    வாழ்வது உயர வேண்டும்

    தொல்லைகள் தொலைய வேண்டும்
    தோல்விகள் அகல வேண்டும்
    இல்லது என்னும் வார்த்தை
    இன்மையாய் ஆதல் வேண்டும்

    போரெனும் வார்த்தை மண்ணில்
    பொசுங்கியே போதல் வேண்டும்
    மாசுடை  ஆட்சி மண்ணில்
    மடிந்துமே ஆக வேண்டும்

    ஊழலும் ஒழிய வேண்டும்
    உண்மையே நிலைக்க வேண்டும்
    வாய்மையின் வழியில் மக்கள்
    மண்ணிலே நடக்க வேண்டும்

    உழைபவர் உயர வேண்டும்
    நல்லூதியம் கிடைக்க வேண்டும்
    கொடுப்பவர் பெருக வேண்டும்
    குவலயம் சிறக்க வேண்டும்

    கல்வியில் உயர்வு வேண்டும்
    கசடுகள் அகல வேண்டும்
    கண்ணியம் என்றும் வாழ்வில்
    கட்டாயம் அமர வேண்டும்

    அறவழி என்னும் எண்ணம்
    அகத்தினில் அமர வேண்டும்
    அன்புதான் உயர்வு என்று
    அனைவரும் உணர வேண்டும்

    இரப்பது அகல வேண்டும்
    கொடுப்பது உயர வேண்டும்
    பொறுப்பது சிறப்பு என்று
    விருப்புடன் ஏற்க வேண்டும்

    வேற்றுமை அகல வேண்டும்
    வெறுப்புகள் ஒழிய வேண்டும்
    சமத்துவம் நிலைக்க வேண்டும்
    சன்மார்க்கம் தளைக்க வேண்டும்

    பண்பது உயரவேண்டும்
    பக்குவம் நிறைதல் வேண்டும்
    அன்பினைப் பகிர்ந்து மாந்தர்
    அனைவரும் இணைதல் வேண்டும்

    புது வருடம் அத்தனையும்
    சுமந்து கொண்டே வரட்டும்
    வரும் அனைத்தும் எங்களுக்கு
    வளங் கொடுக்க வரட்டும்

    புது வெளிச்சம் காட்டப்
    புது வருடம் வரட்டும்
    வரு வருடம் நமக்கு
    வரங் கொண்டு வரட்டும்

    Share
  • மாணிக்க வாசகர் மாசிலா மாணிக்கம்

    மாணிக்க வாசகர் மாசிலா மாணிக்கம்

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
    இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
    மன்னவன் பாண்டியன் மாபெரும் மண்டபம்
    விண்ணவர் வியக்கவே மண்ணகம் மிளிர்ந்தது

    பாண்டியன் அவையினைப் பார்ப்பவர் வியந்தனர்
    பசுந்தமிழ் புலவர்கள் பாங்குடன் நின்றனர்
    ஆக்கிய பாடலை அவையேந்தி வந்தனர்
    அதற்குரை பகர்ந்தனர் அனைவரும் மகிழ்ந்தனர்

    பண்ணொடு பாடினார் பலவுரை பகர்ந்தனர்
    மன்னவன் வதனமோ மலர்ந்துமே நின்றது
    எண்ணிலா பொருள்களை மன்னவன் ஈந்தனன்
    பாடிய புலவர்கள் பரவசம் எய்தினார்

    கற்றவர் பலரையும் பாண்டியன் அணைத்தான்
    கடவுளை நம்பினான் கண்ணியங் காத்தான்
    மற்றவர் துயருறா வழியிலே நடந்தான்
    வாழ்விலே அறத்தை மாண்புடன் காத்தான்

    நல்லமைச்சர் நாளும் நற்றுணையே என்று
    வல்லவரை நாடி நல்லசபை அமைத்தான்
    முதலமைச்சர் நாட்டின் முதுகெலும்பாய் அமைய
    வாதவூர் வந்தாரை மனங்கொண்டான் மன்னன்

    வாதவூர் பிறந்தாரை மன்னவன் மதித்து
    தென்னவன் பிரம்மராயன் பட்டத்தைக் கொடுத்தான்
    பற்றற்ற மனத்துடனே பதவியிலே அமர்ந்தார்
    பாண்டிய நாட்டின் கண்ணியம் காத்தார்

    பாண்டிய மன்னன் குதிரைப் படையினை
    பெருக்கிட மனத்திலே விருப்பங் கொண்டான்
    திருப் பெருந்துறையிலே சிறந்த குதிரைகள்
    இருப்பதாய் அறிந்தான் வாங்கிட விரும்பினான்

    அமைச்சர்க்கு அமைச்சரை அழைத்தான் அரசன்
    அள்ளிக் கொடுத்தான் பொன்னும் பொருளும்
    குதிரை வாங்கிடப் பணித்தான் பாண்டியன்
    மதுரையை விட்டு மந்திரி அகன்றார்

    திருப் பெருந்துறையில் தெரிசனம் கண்டார்
    பொன்னை மறந்தார் தன்னை மறந்தார்
    குருவடி வீழ்ந்தார் குதிரையை மறந்தார்
    பவவினை அகலப் பற்றினார் குருவடி

    பொன்னைப் பொருளைத் தானம் செய்தார்
    புனிதமாம் கோவில் பணிகளைச் செய்தார்
    அல்லும் பகலும் குருவை நினைந்தார்
    அனைத்தும் துறந்தார் அமர்ந்தார் குருநிழல்

    குதிரை வாரா கவலை கொண்டான்
    சேதியை அறிந்து சினமதில் ஏறினான்
    அழைத்தான் அமைச்சரை வினவினான் பாண்டியன்
    அமைச்சர் பகர்ந்தார் வந்திடுங்குதிரை ஆவணிமூலம்

    பார்த்தான் பார்த்தான் பாண்டியன் பார்த்தான்
    ஏய்த்தார் அமைச்சர் என்றுமே எண்ணினான்
    குதிரைகள் எதனையும் காணா வரசன்
    கொண்டான் கோபம் கொடுஞ்சிறை அடைத்தான்

    அடியார் உள்ளம் அறிந்தவன் ஆண்டவன்
    குதிரைப் பாகனாய் கொணர்ந்தார் குதிரையை
    அரசன் மகிழ்ந்தான் அமைச்சரை மீட்டான்
    அன்றிர வதிர்ச்சி அங்கே நடந்தது

    பரிகள் அனைத்தும் நரியாய் மாறின
    கடித்தன குதறின கலக்கமே எழுந்தது
    மன்னன் கோவம் எல்லையைக் கடந்தது
    வாதவூர் பிறந்தார் வதையினில் சுருண்டார்

    அடியார் துயரைக் கண்டான் ஆண்டவன்
    ஆறாம் வைகையைப் பெருகிடச் செய்தான்
    பாண்டியன் பதறினான் வெள்ளம் பரந்தது
    பாண்டிய மக்களை படர்ந்தது துயருமே

    வெள்ளம் பரவா தடுத்திட அனைவரும்
    அவரவர் பகுதியை அடைத்திடப் பணித்தான்
    செம்மனச் செல்வி திகைத்தாள் அடைத்திட
    இரங்கிய எம்பிரான் உதவிட வந்தனர்

    பிட்டை விற்றுப் பிழைக்கும் கிழவி
    பிட்டைக் கூலியாய் தருவேன் என்றாள்
    பிட்டைச் சுவைத்தார் வேலையை மறந்தார்
    கிழவியின் வேலை கிடப்பிலே கிடந்தது

    அதிகாரி வந்தார் கிழவியை மிரட்டினார்
    உறங்கிடும் வேலை யாளினைக்  காட்டினாள்
    எடுத்தார் பிரம்பை அடித்தார் முதுகினில்
    விண்ணும் அதிர்ந்தது மண்ணும் அதிர்ந்தது

    அண்ட சராசரம் அனைத்திலும் விழுந்தது
    அரசன் பயந்தான் அனைவரும் வெருண்டனர்
    வாதவூர் பிறந்தாரை நாடினான் மன்னவன்
    மன்னிக்க மன்னிக்க என்றுமே வேண்டினான்

    வாதவூர் பிறந்தார் மதுரைவிட் டேகினார்
    மணி மணியாகப் பாடினார் இறையினை
    திருவினைப் பற்றியே மலர்ந்திட்ட யாவுமே
    தேனாய் தித்திக்கும் திருவாசக மானது

    மாணிக்க வாசகர் மாசிலா மாணிக்கம்
    வாழ்வெலாம் சிவனை வாழ்த்திய மாமணி
    தேசுடைத் தமிழினைச் சிந்தையில் ஏற்றி
    வாசகம் கோவையை வழங்கிய வள்ளல்

     

    Share
  • கற்பகதரு என்னும் அற்புதம் (அங்கம் – 6)

    கற்பகதரு என்னும் அற்புதம் (அங்கம் – 6)

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா 

    இரண்டு தாத்தாக்களை நாங்கள் மறந்துவிட முடியாது. ஒருவர் எங்கள் ஈழத்தவரான தங்கத் தாத்தா சோமசுந்தரப்புலவர். மற்றவர் தமிழ் நாட்டினைச் சேர்ந்த உ.வே.சா என்று அழைக்கப்படும் உத்தமதா னபுரம்  வேங்கட  சுப்பையர் சாமிநாத ஐயர் அவர்கள். ஈழத்துத் தாத்தா கற்பகதருவாம் பனைக் கென்றேதாலவிலாசம்“  பாடிப் பனையினை வியந்து நின்றார். பனையின் ஓலையினை எங்கள் தங்கத் தாத்தா………

         ஐந்து வயதினிற் கையி லெடுக்கின்ற
                    வரிவரி யேடு முதலாக
         முந்து பலகலை யாகம மோலையில்
                 முன்ன மெழுதினார் ஞானப்பெண்ணே

    என்று பனை ஓலையின் பிறப்பாகிய எங்களின் ஓலைச் சுவடிகளை மனமிருத்தும் வகையில் பாடிப் பதித் ருக்கிறார். இந்தியத் தாத்தாவோ பனையின் கொடையான பனை ஓலையால் அமைந்த ஏடுகளை ஊரூராய்ச் தேடிச் சென்று எமக்களித்து உயர்ந்து நிற்கிறார்.

    எங்கள் முன்னோர்கள் மெஞ்ஞானத்திலும் உயர்ந்து நின்றார்கள். விஞ்ஞானத்திலும் உயர்ந்தே இருந்தி ருக்கிறார்கள். அவர்களின் அருமையான ஒரு தெரிவுதான் கற்பகதருவாய் பனையினை எடுத்தது எனலாம். பனையின் சாதாரண ஓலையினை உற்று நோக்கி அதனை சிந்தனைகளைப் பதிவிடும் ஒன்றாக மாற்றிட நினைந்தமையை வியக்காமல் இருந்திட முடியுமா! அவர்களிடம் தோன்றிய அந்தச் சிந்தனை அறிவியலின் விளைவு என்றுதானே கொள்ள முடிகிறது. குறைந்த செலவில் நிறைந்த பயனையுடைய அவர்களின் தேடலும் , அதற்காக அவர்களின் நாடலுமாகிய நிலையினை எண்ணி எண்ணி வியந்து நிற்கிறோம் அல்லவா!எத்தனையோ வகை இருக்கஎத்தனையோ மரமும் இலைகளும் இருக்க பனையின் இலையை அதாவது அதன் ஓலையினை எப்படித்தான் தேர்ந்தெடுத்தார்களோ தெரியவில்லை. அந்தத் தெரிவினால் எங்களுக்கு சிந்தனைச் செல்வங்களும் கிடைத்தன. கற்பகதருவாம் பனையும் எங்கள் வாழ்வியலுடன் இணைந்து போயும் விட்டது என்பதைக் கருத்திருத்துதல் கட்டாயமாகும்.

    பனை மரங்களில் நிறைய வகைகள் உண்டு.  எல்லாப் பனைகளது ஓலைகளும் ஏட்டுக்குப் பொருத்தமாய் அமைந்திருப்பதில்லை. தாளப்பனை  கூந்தல்பனைலாந்தர்பனை  போன்ற பனை மரங்களினது ஓலை களே  ஓலைச்  சுவடிகள் செய்ய ஏற்றனவாக அமைந்தன என்று அறிய முடிகிறது. பழுப்பு நிறம் கொண்ட ஓலைகளையே ஓலைச்சுவடிகள் தயாரிக்கத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். பொருத்தமான பனை ஓலைகளைத் தேர்ந்தெடுத்த பின்னர் – சுவடிகள் தயாரிப்பதற்கு – முதலில் பனை ஓலைகளைத் தேவையான அளவில் கத்தரித்துக் கொள்வர். இவ்வாறு கத்தரிக்கப்பட்ட ஓலைகள் மிக நன்றாக உலர்த்தப்படும். ஈரமின்றி நன்றாகக் காய்ந்த பிறகு இவ்வோலைகள் தண்ணீரில் இட்டு வேகவைக்கப்படும். இவ்வாறு இவை கொதிக்க வைக்கப்படுவதால் ஓலைகளில் ஒரு இலகுத்தன்மை ஏற்படுகிறதாம். பிறகு ஓலைகள் மறுபடியும் நன்கு காயவைக்கப்படும்காய்ந்த பிறகு கனமான சங்கு அல்லது மழுமழுப்பான கல்கொண்டு ஓலைகளை நன்றாகத் தேய்ப்பார்கள். இப்படிச் செய்வதால் எழுதுவதற்குத் தயாரான ஓலைகள் அதாவது ஏட்டுக்கு ஒரு பளபளப்பு ஏற்படும். மேலும் நேராகத் தகடுபோலவும் ஆகிவிடும். இவ்வாறு பதப்படுத்தப் படுவதனால்  ஏடு எழுதுவதற்கு ஏற்ற நிலையை அடைந்து விடுமாம். வேறு ஒரு முறையும் இதில் இருக்கிறது என்றும் அறிய முடிகிறது. அதாவது  ஓலையின்மீது  நல்லெண்ணெய் பூசி ஊற வைப்பார்களாம். இவ்வாறு செய்வதை ஓலை வாருதல்” என்று அழைத்தார்கள். குறிப்பிட்ட பனை ஓலைகளைப்  அதாவது பதப்படுத்திய ஓலைச் சுவடிகளை ஒரே அளவில் வெட்டிய பிறகு அவற்றை ஓன்று சேர்த்து இடது பக்கம் கயிறு கட்டுவதற்காக ஓட்டை போடுவார்கள். அதில் மஞ்சள் தடவிய கயிறாய் கோர்த்து ஏடுகள் விழாமல் கட்டுவார்கள். கயிற்றின்  மேல்முனையில் துளையிட்ட   செப்புக்காசினை  வைத்து விடுவார்கள். ஓலைச் சுவடியின் நீளம் அதிகமாக இருந்தால், வலது பக்கமும் ஒரு துளையிட்டு அந்த  துளையில் இரும்பினால் ஆகிய கம்பியால் சேர்த்துக் கட்டுவார்கள். இதனை ‘நாராசம்’ என் று பெயர் சொல்லி அழைத்தார்கள். 

    பனை ஓலைகளால் ஆகிய சுவடிகளை ஒன்றாக இணைக்கும் பொழுது அவற்றின் ஆரம்பத்திலும் முடிவிலும் அதாவது ஓலைச்சுவடிகளின் இருபக்கமும் தேக்கு மரத்தால் ஆன பலகையை சேர்த்து கட்டுவார்கள். ஓலைகள் பாதுகாப்பாய் இருப்பதற்கும் குலைந்து போகாமல் ஒழுங்காய் இருப்பதற்கும் இவ்வாறு எமது முன்னோர்கள் செய் திருக்கிறார்கள். நூல்களை அச்சடிக்கும் இக்காலத்தில் முன்னட்டை பின்னட்டை நூலுக்குப் பாதுகாப்பாய் இருப்பது போல் பலகையினைக் கட்டுவது இருந்திருக்கிறது. அக்காலத்தில் ஏட்டின் முன்னும் பின்னும் பலைகையினைக் கட்டியதுதான் இக்காலத்தில் நூல்களின் பின்னும் முன்னும் அட்டைகளை கட்டுவதற்கு வழி சமைத்திருக்கலாம் என்றும் எண்ண முடிகிறதல்லவா! முன்னோர்களின் சிந்தனை அறிவியல் மயமாய் இருந்தே இருந்திருக்கிறது என்பதை ஒவ்வொரு செயல்களாலும் நாம் கண்டு பெருமைப்படவைக்கிறது ! 

    பனை ஓலையினால் ஆகிய ஓலைச்சுவடிகளில் எழுதுவது என்பது இலகுவான காரியம் அல்ல. ஓலையில் எழுதுவதற்கு ஏற்றது எது என்று எண்ணி அதற்கான ஒரு கருவியையும் கண்ட எங்கள் முன்னோரை வியக்காமல் இருக்கவே இயலாது.   ஓலையில் எழுதுவதற்கென்று வடிவமைக்கப்பட்ட கருவியே எழுத்தாணி ஆகும். இதனைக் கொண்டே பனை ஓலைகளினால் தயாரிக்கப்பட்ட சுவடிகளில் எழுதினார்கள். எழுதிக் குவித்தார்கள் எனலாம். பொதுவாக இது இரும்பினால் செய்யப்பட்டதாக இருக்கும்.  ஆனால்  அரசர்களும் வசதி படைத்தவர்களும் தங் கம்வெள்ளிதந்தம்  போன்றவற்றில் செய்த எழுத்தாணிகளை வைத்திருந்தார்கள் என்றும் அறிய முடிகிறது. தந்தம் என்றவுடன் எங்களுக்கு விநாயகப் பெருமானே வந்து நிற்பார். பனை ஓலை ஏட்டுக்கும் விநாயகப் பெருமானுக்கும் ஒரு இணைப்பு இருக்கிறது. கிறித்துவுக்கு முன் எழுந்ததுதான் வியாசரது மகாபாரதம். அந்தப் பாரததத்தை வியாசர் சொல்லச் சொல்ல விநாயகப் பெருமானே எழுத்தாணி கொண்டு எழுதினார் என்பது வழங்கிவரும்  ஒரு செய்தியாகவே இருக்கிறது. வியாசர் வேகமாக கதையினைச் சொல்லி வரும்போது – எழுதிய எழுத்தாணி முறிந்து விட – விநாயகப் பெருமான் கதை இடையில் நின்று விடக்கூடாது என்று எண்ணி – தன்னுடைய ஒரு கொம்பினை அதாவது தந்தத்தை ஒடித்து பாரதக் கதையினை எழுதினார் என்பது மரபாய் நீண்ட காலம் இருந்து வருகிறது. இங்கு முக்கியமாய் மனமிருத்த வேண்டியது தந்தினாலும் எழுத்தாணி கொண்டு பனை ஓலைச் சுவடிகள் எழுதப்பட்டிருக்கின்றன என்பதே ஆகும். அத்துடன் மிகவும் தொன்மையான அதாவது பாரதக் கதையினை எழுதுவதற்கும் எங்கள் கற்பகதருவாம் பனையின் ஓலைகள் துணையாக இருந்திருக்கின்றன என்னும் செய்தியும் எனலாம். எழுத்தாணி மூலம் எழுதப்பட்ட ஓலைகளில்,  மஞ்சள்,  விளக்குக்கரிகோவை  இலைச்சாறு, ஊமத்தை இலைச் சாறு –போன்ற வற்றில் ஏதாவது ஒன்றை பூசியிருக்கிறார்கள்.ஏனென்றால்  சுவடியில் உள்ள எழுத்துக்கள் தெளிவாக தெரியவருவதற்காகவாம்.எங்களின் முன்னோர்களின் அறிவியல் முறைமையினை இங்கு கண்டு தெளிகிறோம் அல்லவா !

    தற்காலத்தில் காகிதத்தில் அச்சடிக்கும் முறை வந்துவிட்டது. ஆயிரக்கணக்கில் பல நூல்கள் குறிப்பிட்ட மணி நேரத்தில் அல்லது நாளில் எங்களின் கைகளுக்கு வந்துவிடும். அதே வேளை அந்த நூல்களுக்கான நகல்களையும் இலகுவாகப் பெற்றிடவுமான வாய்ப்பும் இன்று எமக்குக் கிடைத்துள்ளது. ஓலைகளில் எழுத் தாணி கொண்டு எழுதப்பட்ட பல நூல்களையும் அக்காலத்தில் பிரதிபண்னும் நிலையும் காணப்பட்டது என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது. சுந்தரமூர்த்தி நாயனாரைத் திருமணம் செய்யவிடாமல் எம்பெருமான் கிழப்பிராமண வடிவத்தில் வந்து வாதங்கள் செய்துதடுத்தாட் கொண்டார் என்பதைப்  புராணத்தால் அறிகிறோம். சுந்தரரும் அவர் வழி வந்தவர்களும் தனக்கு அடிமை என்று சபையில் கூறி அதற்கான ஆதாரமாக தன் மடியில் இருந்த ஓலையினைக் காட்டுகிறார். கிழப்பிராமணர். அந்த ஓலையினை எட்டிப்பறித்து சுந்தரர் கிழித்து விடுகிறார். அப்பொழுது அந்தக் கிழப்பிராமணர் “நீ எப்படியும் இந்த மூல ஓலையைக் கிழிப்பாய் என்று தெரிந்தே நான் இதன் நகல் ஓலையினையும் கொண்டு வந்திருக்கிறேன்” என்று சபையில் நகலினைக் காட்டி சுந்தரரை ஆட் கொண்டார் என்று புராணத்தால் அறிகிறோம். இங்கு முக்கியமான செய்தி என்ன வென்றால் மூல ஓலைக்குப் படி ஓலை எடுக்கும் வழக்கமும் இருந்திருக்கிறது என்பதேயேயாகும். நூல்களைப் பல பிரதிகள் அச்சடிப்பது போல அன்று மூல ஓலைச் சுவடிகளில் இருந்து அதை பிரதி எடுத்து எழுதும் முறையும் இருந்திருக்கிறது. அவ்வாறு எழுதுவதற் கென்றே தனியாக  எழுத்தாளர்களும் இருந்திருக்கிறார்கள். 

    அப்படியான –  அவர்கள் வாழ்ந்த தெருவுக்கு எழுத்துக்காரத் தெரு என்று பெயரும் வைக்கப்பட்டிருக்கிறது. இப்படி நகல் எடுப்பவர்கள் அந்தச் சுவடிகளின் கடைசி வரியின் கீழ் கையெழுத்திட்டு தமது பெயரையும்ஊரையும் எழுதி இருந்தார்கள் என்பதையும் அறிகின்றோம். நகல் எடுப்பவர்கள் பலர் இருந்த படியால்த்தான் முன்னோர்களின் பல ஏட்டுச் சுவடிகளை அச்சடித்த நூலாக்கி நாங்கள் எங்களின் அறிவினை அகலமும் ஆளமும் ஆக்கிட முடிகிறது என்பதையும் கருத்திருத்தல் அவசியமேயாகும். இன்னு மொரு செய்தியையும் இங்கு நாம் பார்த்திட வேண்டும். அதாவது-ஓலை எழுதுவதையே தொழிலாகக் கொண்டோர் தமிழ் மண்ணில் வாழ்ந்திருக்கின்றார்கள். அவர்களுக்கு முறையாக ஊதியமும் வழங்கப் பட்டும் இருக்கிறது. இவர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியத்தைக் குறிக்க ஓலைக்காசுஓலை எழுத்துப் போறு, போன்ற சொல்லாடல் பயன்படுத்தப்பட்டிருப்பதாக பிற்காலச் சோழர் காலத்திய கல்வெட்டுகள் வாயிலாக அறியக்கிடக்கிறது. பழம் பெரும் சொத்துக்களாய் அமைந்திருக்கும் பனை ஓலையினால் ஆன ஏடுகளைப் பக்குவமாய் பேணிக் காத்திட எங்கள் முன்னோர்கள் கோவில்களையும்,   அரண்மனை களையும்,   மடங்களையும்அருங்காட்சி அகங்களையுமே தேர்ந்தெடுத்தார்கள் என்பதும் மனங்கொள்ளத் தக்கதாகும்.

    தமிழர்களின் எழுத்து மரபுக்குத் தனித்துவமான குணமுண்டு. அது பனை தந்த விழுதுகளால் வேர்விடத் தொடங்கியது. பனை ஓலைகள் தமிழர்  வரலாற்றைத்  தாங்கி நின்ற அரண்களாகி இருக்கின்றன அல்லவா ! ஆதித் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஏடுகள் பனை மர ஓலைகளே என்பதும் கற்பதருவுக் கான பெருமை அல்லவா !  மன்ன ராட்சி கால நிகழ்வுகளை விளிக்குமிடத்து மன்னர்களுக்கும் அமைச்சர்களுக்குமிடையே நடைபெறும் உரையாடல்களின் போது ஓலை என்கின்ற சொல்லாட்சி இடம் பெற்றி ருப்பதையும் அறிய முடிகிறது. சங்க இலக்கியங்களான அகத்திணை,  கலித்தொகைஅகநானூறு,  நவ நீதிப்பாட்டியல் போன்றவைகளில் “ஓலையைக் குறிக்கும் சிறப்புப் பெயர்கள் இடம் பெற்றிருப்பதும் நோக்கத்தக்கதாகும்.

    சங்க கால மக்களின் மரபார்ந்த அறிவுச் செழுமையைச் சமகாலத் திற்கு கைமாற்றிய ஊடகமாக கற்பக தருவாம் பனை விளங்குகின்றது என்பதும் கருத்திருத்த வேண்டியதே!. பனை ஓலைகள் இல்லாதிருந்தால் தொடக்க காலத்தில் புழக்கத்தில் இருந்த தமிழ் இலக்கணஇலக்கியங்கள் யாவும் புலவர்களின் நாவிலே தவழ்ந்து காற்றோடு கலந்தே போயிருக்கும்.

    பனை மரத்திலிருந்து பெயர்த்து எடுக்கப்பட்ட ஓலைக் கீற்றில் எடுத்த எடுப்பிலேயே எழுத்தாணி கொண்டு எழுத்தை எழுதிவிட முடியாது. எழுதுவதற்கு ஏற்ப ஓலைகளைப் பதப்படுத்தும் தொழில் நுட்பத்  தினைத் தமிழர்கள் அறிந்திருக்கிறார்கள். அருங்காட்சியகத்தில் ஓலைச் சுவடிகள் இன்றும் காட்சிப் படுத்தப்படுவதற்கு பதப்படுத்தல் சார்ந்த நுட்பமும் காரணமாகும். ஓலைகளை எழுத்தாணி கொண்டு எழுதுவதற்கு ஏற்றாற்போன்று தயார்ப்படுத்துவதற்கு “ஏடு பதப்படுத்துதல்‘ என்கின்ற தொழில் நுட்பத்தினைக் கையாண்டிருக்கின்றார்கள் எங்களது முன் னோர்கள் என்பது வியப்பாய் இருக்கிறதல்லவா ! அரேபிய நாட்டைச் சேர்ந்த பயணி அல்புருணி என்பவர் 1030இல் தென் இந்தியாவுக்கு வருகை தந்தபோது எழுதிய பயணக்குறிப்பில் பனைமரம் குறித்தும் பனை ஓலையில் எழுதும் முறை குறித்தும் வியந்து எழுதியுள்ளார். கிறித்தவ மதத்தைப் பரப்பும் நோக்கில் இந்தியாவில் தரங்கம்பாடி என்னும் இடத்துக்கு கி.பி 1706 இல் வந்தவர்தான் சீகன்பால்கு என்னும் மத போதகராவர். இவர் தமிழை நன்கு கற்றார். ஜேர்மனியிலுந்து அச்சு யந்திரங்களை வரவழைத்து  ஏட்டில் இருந்த பல தமிழ் நூல்களை அச்சில் கொண்டுவந்து சேர்த்தார். அச்சிலே ஏற்றுவதற்கு இவர் பல தமிழ் ஏட்டுச்சுவடிகளைத் தனது கைகளால் தொட்டுப் பெருமிதம் அடைந் திருக்கிறார். தமிழர்கள் பனை ஓலையினைத் தேர்ந்தெடுத்து அதனை ஏடுகள் என்னும் முறையில் ஒழுங் கமைத்து அதில் எழுதியதையும்பராமரித் ததையும் கண்டு வியந்து மிகவும் பெருமைப்படக் கூறினார் என்றும் அறியமுடிகிறது. இப்பொழுது செய்திகளை அனுப்பிடப் பலவழிகளும்பல நிறுவனங்களும் இருப்பதுபோன்று – அக்காலத்திலும் இருந்திருக்கின்றன. அதாவது செய்தியினைத் தூதாக அறிவிப்பதில் பனையின் ஓலைகள் எந்தளவு முக்கியத்துவம் உடையனவாக விளங்கி இருந்திருக்கின்றன என்பதற்கு அக்கால நாட்டார் பாடல்கள் சான்றாகி இருக்கின்றன. இந்த வகையில் கி.பி நான்காம் நூற்றாண்டினைச் சேர்ந்த கல் வெட்டு ஒன்றினால் ஓலைதூது” முறை இருந்ததாய் அறிய முடிகிறது.  

    (வளரும்) 

    Share
  • மார்கழி என்பது மனநிறை மாதம் !

    மார்கழி என்பது மனநிறை மாதம் !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    மார்கழி என்பது மனநிறை மாதம்
    மாதவன் மலரடி போற்றிடும் மாதம்
    கோதையும் தமிழைக் கொட்டிய மாதம்
    குவலயம் குளிர்மையாய் ஆகிடும் மாதம்

    வாசகர் ஈசனைப் பாடிய மாதம்
    மகேசனை மங்கையர் போற்றிடும் மாதம்
    பூவெலாம் பனித்துகள் அமர்ந்திடு மாதம்
    புவியினைத் தேவரும் விரும்பிடு மாதம்

    வைகறை யாவரும் விழித்திடும் காலம்
    மனமெலாம் இறையினை இருத்திடு காலம்
    பொய்யெனும் மாயைப் போக்கிட இறையினை
    மெய்யடியார்கள் வேண்டிய காலம்

    உணர்வுடன் இறையினை உளமதில் இருத்தியே
    துயிலினைக் களைந்திடத் தொடக்குவார் மங்கைகள்
    பரமனைப் பாடியே தெருவெலாம் வருவதால்
    பக்தியின் பேரொளி பரவிடும் காலமே

    ஆலயம் எங்கணும் தீபங்கள் ஒளிர்விடும்
    அடியவர் அனைவரும் ஆலயம் ஏகுவார்
    காலையில் கதிரவன் எழுந்திடு முன்னரே
    கனிவுடன் இசைத்தமிழ் காற்றிலே கலந்திடும்

    மாதவன் கோவிலில் பாசுரம் ஒலிக்கும்
    மகேசன் கோவிலில் வாசகம் ஒலிக்கும்
    சைவம் வைணவம் சங்கமம் ஆகும்
    சன்மார்க்க வழியை  மார்கழி வழங்கும்

    பீடை என்பது பொருத்தமே அல்ல
    பீடுடை என்பதே பெரிதும் பொருத்தம்
    மார்கழி தேவர்க்கு உகந்த நல்மாதம்
    மனமதில் இருத்தியே பரவுவோம் இறையினை

    Share
  • கற்பகதரு என்னும் அற்புதம் – இலக்கியத்தில் இணைந்த பனை (அங்கம் – 5)

    கற்பகதரு என்னும் அற்புதம் – இலக்கியத்தில் இணைந்த பனை (அங்கம் – 5)

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா 

    உருக்கு வாளேந்திப் பகைசெற் றுலகினை
    ஓம்பும் மணிமுடி மன்னவன் போல்
    கருக்கு வாளேந்திக் கலியை அழித்திந்தக்
    காசினியைக் காக்கும் ஞானப் பெண்ணே

    “பெண்பிளையும் தண்பனையும் பேணி வளர்த்தால்
    வருடம் பண்ணிலொரு பத்தில்  பயன் கொடுக்கும்”

    “நட்டாயிரம் வருடம் நாநிலத்தில் காய்த்து நிற்கும்
    பட்டாயிரம் வருடம் பாழ்போகா”

    “திங்கட் குடையுடைச் சேரனும் சோழனும்
    தென்னவனும் ஓளவை சொற்படியே
    மங்கல மாயுண்ட தெய்வப் பனம்பழம்”

    “முப்பாசந் தீர்த்த முனிவர்மொழி வாய்மைபோல்
    எப்போதும் நின்று பயனீயும்”

    கறுத்து, நிமிர்ந்து, உரமேறி, உயர்ந்து வான்பார்த்து, நிமிர்ந்து நிற்கின்ற கற்பக தருவாம் பனை பற்றித்தான் இப்பாடல்கள் வியந்து நிற்கின்றன. கூரையாய்,  வேலியாய், படலையாய், மனித உணவாய், கால்நடைத் தீனியாய், பாயாய்,  படுக்கையாய், அலங்காரப் பொருட்களாய்,  ஏடாய், காவலாய்,  மருந்தாய்,  விருந்தாய், பண்பாட்டின் அடையாளமாய், என்று பல நிலைகளில் தன்னைப் பயனாக்கி; முடியாத கட்டத்தில் விறகாக நின்று பெருங்கொடையினை நல்கிடும் “நவீன கர்ணனாய்” எங்களின் கற்பகதருவான பனை விளங்குகிறது என்பதைக் கருத்திருத்தல் அவசியமாகும்.

    கற்பகதருவாம் பனையின் வரலாறு மிகவும் தொன்மையானது எனலாம். திவாகர நிகண்டில் பனை பற்றிய பெயர்கள் தொகுத்துக் காட்டப்பட்டிருக்கிறது. தமிழின் முதுபெரும் சொத்தான தொல்காப்பியத்தில் – மடல், ஓலை, ஏடு, பாளை, ஈர்க்கு, குலை, போன்ற சொல்லாடல்களைக் காணமுடிகிறது. தமிழ்ப் பிராமிக் கல்வெட்டுகள் கிறித்துவுக்கு முற்பட்ட தாகும். அக்கல்வெட்டிலும் பனை என்னும் சொல் இடம் பெற்றிருக்கிறது என்றும் அறிய முடிகிறது.

    தமிழ் மன்னர்கள் பனையினைப் பேணி வந்திருக்கிறார்கள் என்றும் வரலாற்றால் அறிய முடிகிறது. பொருளாதார மேம்பாட்டுக்குப் பனை பேருதவியாக அமைந்திருக்கிறது. சோழ மன்னர்கள் பனையினை எல்லைப் புறங்களில் வளர்க்கவும் “பலாவும் கமுகும் பனையுங் கொடியும் உள்ளிட்ட பல்லுருவில் பயன் மரம் இடவும் நடவும்” என்று சோழர் காலத்துச் செப்பேட்டில் காணப்படுகிறது. “பயன் மரம்” என்னும் நிலையில் பனை இடம் பெற்றிருப்பது கருத்திருத்த வேண்டிய விடயம் அல்லவா!

    பனையின் கொடையாக அமைவது நுங்கு. அதன் சுவையினை அருந்தியவர்கள் உணருவார்கள். அறியாதார் சுவைத்தால் அதன் அருமை அகம் அமரும். நுங்கினைச் சுவைத்த பின்னர் வெட்டப்பட்ட இரண்டு நுங்கின் பாதிகளை ஒரு குச்சியால் இணைத்து அதன் நடுவில் கவரான நீளமான குச்சியைப் பயன்படுத்தி வண்டிலாய் ஓட்டிச் சிறுவர்கள் மகிழ்ந்தார்கள், தெருத்தெருவாய் இதனை உருட்டி மகிழ்வது ஒரு விளையாட்டாக இருந்திருக்கிறது. இதனை இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்திருக்க மாட்டார்கள். பெரியவர்களில் எத்தனை பேருக்கு இந்த விளையாட்டு நினைவில் இருக்கிறதோ தெரியாது! ஆனால் இந்த விளையாட்டு பழைய காலத்தில்  விளையாடப் பட்டிருக்கிறது என்பதனை –

    ” பெருமடல் பெண்ணைப் பிணர்ந்தோட்டு குடவாய்க்
    கோடிப் பின்னல் வாங்கித் தளரும் பைங்குரும்பை”

    என்று கலித்தொகை காட்டுவதும் நோக்கத்ததாகும்.

    வேரிலிருந்து பனையின் பயன்கள் பல்கிப் பெருகியே இருக்கின்றன. இதனால்த்தான் கற்பகதரு என்னும் அடைமொழியே ஏற்பட்டது எனலாம். பழைய காலத்தில் ஊர்கள்தோறும் பல குளங்களை வெட்டினார்கள். குளங்களை வெட்டினால் மட்டும் நீர் மட்டம் உயர்ந்து விடாது. நீர் மட்டம் உயர்வதற்குச் சில மரங்கள் உதவியாய் அமைந்தன. அப்படி யான மரங்களுள் ஒன்றுதான் எங்கள் கற்பகதருவாம் பனை ஆகும். குளங்களைச் சுற்றி ஆயிரக் கணக்கில் அக்காலத்தில் பனை மரங்களை வளர்த்தார்கள். பொதுவாக எல்லா மரங்களுமே வேர்களைப் பக்கவாட்டில் மட்டுமே பரப்பக் கூடியன. ஆனால் பனைமரம் மட்டுமே வேரினை செங்குத்தாக நிலத்தின் உள்ளே செலுத்தி வளரும். பனையின் வேர் செங்குத்தாக நிலத்தடியில் காணப்படும் நீரினை நோக்கியே செல்லும். நீரை நோக்கி நேராகச் செல்லும் குழாய் போல பனையின் வேர்கள் அமைந்திருப்பதால் – நிலத்தடியில் உள்ள நீரை தரைப் பகுதிக்கு கொண்டு வரும் நீர்ப்பாசனப் பொறியாளராக பனையின் வேர் விளங்கி நின்றது. பனையின் வேரின் இந்தப் பெருஞ் செயலினால் நீரானது குளங்களில் நிரம்பவும், நிலத்தில் வழிந்தோடவும், ஆறுகளில் நீர் நிறையவும் வழிவகுத்து நிற்கிறது எனலாம். பனையால் ஏற்படும் நீர் முகாமைத்துவத்தை அறிவது அவசியம் அல்லவா! புயலினின்றும் பாதுகா ப்பினை அளிக்கவும் பனைகள் உதவியாய் இருக்கின்றன. வெள்ளப் பெருக்கைத் தடுக்கும் நிலையிலும் பனைகள் கைகொடுத்திருக்கின்றன. நாட்டின் பாதுகாப்பு அரணாய் அக்காலத்தில் பனை மரங்களை எல் லைகளில் நட்டு வைத்தார்கள் என்பதையும் அறிய முடிகிறது.

    பத்துப்பாட்டு என்கிறோம். எட்டுத்தொகை என்கிறோம். மேற்கணக்கு கீழ்க் கணக்கு என்றெல்லாம் சொல்லுகிறோம். காவியங்கள் என்கிறோம். இதிகாச புராணங்கள் என்கிறோம். ஐம்பெரும் காப்பியங்கள் என்று பெருமையுடன் அழைகின்றோம். இவை அத்தனையும் எங்களுக்கு இன்று கிடைத்திருக்கிறது என்றால் அதற்குக் காரணமாய் அமைந்தது கற்பகதருவாம் பனை என்பதை மட்டும் மறந்துவிடக் கூடாது. ஆழ்வார் பாடல்களோ, நாயன்மார் பாடல்களே,  சோதிடம், வைத்தியம் தொடர்பான விஷயங்களோ எங்களுக்குக் கிடைத்திருக்கிறது என்றால் அதற்கு அருந்துணையாய் அமைந்தது பனைதான் என்பதை எவருமே மறுத்துரைத்து விட முடியாது. பனைக்கும் இலக்கியத்துக்கும் என்ன தான் இருக்கிறது என்று எண்ணுகிறீர்களா? பனை இல்லாவிட்டால் நாங்கள் பெருமைப்படுத்திக் காட்டிக் கொண்டிருக்கும் அத்தனையும் எப்பவோ மறைந்திருக்கும். ஆனால் அவற்றை எல்லாம் எங்கள் பரம்பரைக்கே அளித்த பெருமை பனையின் கொடையான “பனை ஓலைக்கே” உரித்தாகும். ஏட்டில் எழுதப்படா விட்டால் நாங்கள் எல்லாவற்றையும் இழந்திருப்போம். பனை என்பது மரம் அல்ல ! அது வரமாகும் ! பனை ஓலையினை நாம் சாதாரணமாக எடை போட்டு விடக் கூடாது. செய்திகளைப் பறிமாறப் பயன்பட்டது பனை ஓலைதான். இதலனால்த்தான் ஓலை எழுதுதல், திருமணப் பட்டோலை எழுதுதுதல், என்னும் வழக்கும் வந்தது எனலாம். இன்று பல இடங்களில் “பட்டோலை” எழுதுதல் என்பது நடைமுறையில் இருப்பதும் நோக்கத்தது.

    ஏட்டில் எழுதப்பட்ட வேளையில் – அவ்வோலைகளுக்குக் கென்று தனித்த விசேடமான பெயர்களும் இருந்திருக்கின்றன. திருமணத்துக்கு அனுப்பப்படும் ஓலை, இறப்பினைத் தெரிவிப்பதற்கான ஓலைக்கு “நீட்டோலை” என்னும் பெயரும் – படி அதாவது நகல் எடுத்து நிற்கும் ஓலைக்கு “மூல ஓலை” என்றும், ஆவணங்கள் இடம் பெற்ற ஓலைக்கு “சுருள் ஓலை” என்றும், எந்தவித பழுதுமில்லா ஓலைக்கு “குற்றமற்ற ஓலை” என்றும், செய்திகளைக் குறிக்கும் ஓலைகளுக்கு “நாளோலை” என்றும், அரச ஆணையினைத் தாங்கிவரும் ஓலைகளுக்கு “திருமந் திர ஓலை” என்றும், அக்காலத்தில் அழைக்கப்பட்டது. திருமணம்,   இறப்புக்கு “நீட்டோலை” என்னும் பெயர் பயன்படுத்துப்பட்டாலும் அவற்றுக்குக் கென்று தனி ஓலைகளும் இருந்திருக்கின்றன. “மணவினை ஓலை” திருமணத்தையும் – “சாவோலை” இறப்பையும் காட்டிடஅமைந்திருந்தது என்பதை அறிகிறோம்.

    “நீட்டோலை வாசியான் நின்றான் குறிப்பறியான்
    மாட்டாதவன் மரம்”

    “ஆவீன மழை பொழிய இல்லம் வீழ …… என்னும் பாட்டில் ….. “சாவோலை கொண்டொருவன் முன்னேவர” என்று வருவது – ஓலை பற்றிய நிலைக்கு எடுத்துக்காட்டுகளாய் இருக்கிறது அல்லவா.

    எங்களின் முன்னோர் தங்களின் மனத்தெழுந்த பல அறிவுக் கருவூலங்களை எல்லாம் – தமக்குப் பின்னால் வருகின்ற பரம்பரையும் அறிய வேண்டும் என்பதற்காக – எடுத்துக்கொண்ட அளப்பரும் பணிதான் ஏட்டில் யாவற்றையும் எழுதி வைத்தமை எனலாம். அவர்கள் அகத்தில் மட்டும் இவ்வரிய சிந்தனை ஏற்பட்டிருக்கா விட்டால் நாம் பலவற்றை இழக்கும் நிலைக்கு ஆளாகியிருப்போம் என்பதை மனமிருத்தல் அவசியமாகும். களி மண்ணில் எழுதினால் காலத்துக்கும் நிற்காது. கற்களில் எழுதுவது பெருங்கடினமாகும். மரப்பட்டைகளும் நின்று நிலைக்காது. விலங்குகளின் தோல்களில் எழுதுவது அறத்துக்கு ஒவ்வாததது, எனவே இலகுவாய் கிடைப்பதும், பெருஞ் சிரமம் இல்லாததுமான பனை ஓலையினைத் தேர்ந்தெடுத்தார்கள். அவர்களின் அந்த அறிவு பூர்வமான செயலினை எவ்வளவு பாராட்டினாலும் தகும் எனலாம். காகிதத்தில் அச்சடிக்கப்பட்ட நூல்கள் வந்தாலும் இன்றும் பழைய ஏட்டுச் சுவடிகள் காலத்தையும் கடந்து நிற்கின்றன என்றால் எங்களின் முன்னோர்களைக் கட்டாயம் கருத்திருத்த வேண்டியது அவசியம் அல்லவா !

    ஓலைச் சுவடிகளைத் தயாரிப்பது சற்றுக் கடினமானதுதான். மிகவும் கவனமாய் அதனைக் கையாழுதல் வேண்டும். எல்லாப் பனையின் ஓலைகளையும் ஏட்டுக்குப் பயன்படுத்திட முடியாது. “கூந்தல் பனை” என்னும் பனையின் ஓலையே ஏட்டுக்கு ஏற்றதாக அமைந்திருந்தது. இதனை “தாழிப்பனை” என்றும் அழைத்தனர். இந்தவகையான பனை மரங்கள் சற்று வித்தியாசமானவை. ஏனைய பனை மரங்கள் போல் இவைகள் இருக்க மாட்டா. இந்த வகையான பனைகள் வாழ்நாளில் ஒரே ஒரு முறைதான் பூக்கும் தன்மை வாய்ந்தனவாம். இந்தப் பனைகள் அறுபத்து ஐந்து அல்லது எழுபது ஆண்டுகள் சென்ற பின் தான் பூக்கும். ஒரு முறை பூத்த பின்னர் இவ்வகைப் பனைகள் காய்ந்து விடுமாம். ஏடுகள் எவ்வாறு தயாரிக்கப்பட்டன! ஏடுகளில் எவ்வாறு எழுதினார்கள்! ஏடுகளை எவ்வாறு பேணினார்கள் என்பதையெல்லாம் அறியும் ஆவல் எழுகிறதா? விரைவில் ஏடுகளைத் தேடுவோம்!

    Share