கற்பக​த்தரு என்னும் அ​ற்புதம் – ஏடு​ தந்திட்ட எங்க​ள் பனை (அங்கம் – 7)

0

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மெல்பேண், ஆஸ்திரேலியா

பனை செழித்தால் பாரம்பரியம் செழிக்கும்
பனை அழிந்தால் பாரம்பரியமே அழியும்”

வருடம் முழுதும் வற்றாத வளம்
வாங்கி வந்த வரமே பனை”

வானோங்கி நிற்பதுதான் எங்கள் கற்பகதருவாம் பனை மரம். வாழ்வில் தோள் கொடுத்துத் தோழமையுடன் நிற்பதுதான் எங்கள் பனை மரம். இருந்தாலும் பயன் கொடுக்கும். இருப்பை விட்டு மறைந்தாலும் பயன் கொடுக்கும். பனை என்பது  மரம் அல்ல. அது நல் வரம் என்பதை மனமிருத்தல் வேண்டும். பனையின் நிலையினை  நாங்கள் ஒவ்வொருவருமே மனத்தில் இருத்திட வேண்டியது அவசியமாகும். இருக்கும் வரை எவ்வளவு கொடுக்க முடியுமோ அவ்வளவு கொடுக்கிறது என்பதே எங்களுக்கெல்லாம் நல்லதொரு பாடமாய் இருக்கிறதல்லவா! மற்ற மரங்களைப் போல பனையினை நாங்கள் பார்த்துவிடக் கூடாது. தலை நிமிர்ந்து தளர்வின்றி.   கொடை வழங்கும் கர்ணனாய் கற்பகதருவாம் பனை காட்சி தருகிறது என்பதும் கருத்திருத்த வேண்டியதேயாகும்.

பனையின் ஓலைகளை சாதாரணமாகப் பார்த்தே பழகிவிட்டோம். ஆனால் அந்த ஓலைக்குள் எவ்வளவு பொக்கிஷங்கள் பொதிந்திருக்கின்றன என்பதை ஏட்டுச் சுவடிகள் வரலாற்றுக்குள் பார்த்தோம். அந்த வரலாற் றுக்குள் சற்று உள்ளே போய் இன்னும் என்ன இருக்கிறது என்பதையும் பார்ப்பது அவசியம் அல்லவா !

இலக்கியம் வளர்த்த பனை என்று கூறுவதில் எள்ளளவும் ஐயம் இல்லை என்றே எண்ணத் தோன்றுகிறதுஎமது முன்னோர்களின்  சிந்தனைச் செல்வங்களை இன்று நாம் பயனாக்கி நிற்கிறோம் என்றால் அதற்குதக்க துணையாக அமைந்தது பனை தானே! பனைமரத்தின் ஓலைச் சுவடிகள் இல்லை என்றால் பழந்தமிழ்ச் செல்வங்கள் எங்களுக்குக் கிடைத்திருக்க வாய்ப்பே இல்லாமல் போயிருக்கும். பனை இல்லையேல் நமக்கு  மொழியில்லை. வரலாறு இல்லை. ஏன் பாரம்பரியமே இல்லை என்பதை உணரும் பொழுது மெய்சிலிர்க்கிறதல்லவா!  “பயன்மரம்” என்று வள்ளுவமே போற்றும் தகைமையினைப் பெற்ற ஒரே மரமாய் கற்பகதருவாம் பனையே விளங்குகிறது என்பது மனமிருத்த வேண்டிய கருத்தல்லவா.

“ஆறங்க வேதநூ லாகமநூல் வேறுமுள மெய்க்கலைகள்
போதமிகுந்த புராணநூல் – ஓதுகின்ற
மந்திரநூல் சிற்பநூல் வாகடநூல் வாய்மைமிகு
செந்தமிழ்நூல் பற்பலவும் தீட்டலாம் – சுந்தரஞ்சேர்
மங்கல நாளோலை மஙகையர்க்குக் காதோலை
துங்கமிகு நண்பருக்குத் தூதோலை – தங்குபல
பற்று வரவு பதியுங் கணக்கோலை
மற்று முறுதி வரையோலை – கற்றவர்கள்
எந்திரங்கள் கீறி எழுத்தடைத்துக் கட்டுகின்ற
மந்திர வோலைகட்கு வாய்ப்பாகும் “

என்று “தாலவிலாசம்” நாடகநூலும்

“படிக்க நல்ல தம்பியர்க்கு
பட்டோலை நானாவேண்
எழுத நல்ல தம்பியர்க்கு
எழுத்தோலை நானாவேன்
தூரத்து வன்னைமைக்கு
தூதோலை நானாவேன்
வாசலில் வன்னிமைக்கு
வழக்கோலை நானாவேன்”

என்று நாட்டுப் புறப்பாடலும் பனை ஓலையின் பயன் பாட்டினை வியந்து நிற்பதைக் காண்கிறோம். பனை ஓலையென்று நாங்கள் சாதாரணமாய் எண்ணி விடும் அந்த ஓலைக்குள் இத்தனையும் இருக்கிறதா என்று எண்ணுகையில் பனையென்பது நல்வரம் என்றுதானே சொல்ல வேண்டும்.

ஏடுதந்த பனையின் ஓலை பற்றிய எண்ணப் பதிவினை “பனை மர சோபனம்” என்னும் நூல் எப்படிப் பார்க்கிறது என்பதையும் பார்ப்போம்.

   ” வருடத்திற் கோர்தினத்தில் சரஸ்வதியம்மன் பூசைசெய்து
மஞ்சள் படிந்துவர மங்கலங்கள் பாடிவர
அட்சதையும் மலரெடுத்து அர்ச்சிப்பார் உலகமெலாம்
என்னைத் திருத்தியவர் எழுத்தாணி கைப்பிடித்து
ஆசிரியரும் வேதியரும் ஹரிநமோ என்றெழுதி
ஹரிஹரி என்றெழுதி அர்ச்சிப்பார் என்னையவர்
அரிச்சுவடி என்னாலே வரிக்காய்ப் பாடம்என்னாலே
தர்க்கங்கள் என்னாலே சாஸ்திரங்கள் என்னாலே
இராமாயணம் என்னாலே பாரதமும் என்னாலே
பாகவதம் என்னாலே பலசாத்திரங்கள் என்னாலே
திருவாய்மொழி என்னாலே திருமுறைகள் என்னாலே
நாலுவேதம் என்னாலே ஆறங்கம் என்னாலே
மங்கையர்க்கும் மன்னவர்க்கும் மணவறிவ தென்னாலே
வர்த்தகருஞ் செட்டிகளும் கணக்கறிவ தென்னாலே
பட்சமுள்ள வாசலுக்குப் பட்டோலை நானாவேன்
காதத்துப் பெண்களுக்குக் காதோலை நானாவேன்
தூரத்துப் பெண்களுக்குத் தூதோலை நானாவேன்
கலியாண வாசலுக்குக் கட்டோலை நானாவேன்
சீமந்து வாசலுக்குச் சீருடனே நான்போவேன்
பிள்ளை பிறந்ததென்றால் பெருமையுடன் நான்போவேன்
மைந்தன் பிறந்ததென்றால் மகிழ்ச்சியுடன் நான்போவேன்
அரண்மனையில் நானிருப்பேன் ஆஸ்தானத்தில் நானிருப்பேன்
மச்சுக்குள் நானிருப்பேன் மாளிகையில் நானிருப்பேன்
எமலோகம் போனாலௌம் எல்லோர்க்கும் தெரியவைப்பேன்
சிவலோகம் போனவர்க்குச் சீட்டோலை யாயிருப்பேன் “

என்று பனை ஓலையின் ஒவ்வொரு நிலையினையும் இப்பாடல் காட்டு வதைக் கருத்திருத்துவது முக்கியம் அல்லவா!

பனையின் ஓலை பலவிதங்களில் எங்கள் வாழ்வியலில் எப்படியெல்லாம் இணைந்திருந்தது என்பதை இங்கு பல பாடல்களால் கண்டோம். பனையின் ஒலையினால்  ஆகிய ஏடுகள் பற்றிய பல விஷயங்களையும் பார்க்கப் பார்க்க பெருமையாகவும் வியப்பாகவுமே இருக்கும். எழுதும் நிலை ஏற்பட்டவுடன் எழுதுவதற்கு உரியதாய் பனையின் ஓலைதான் பொருத்தமாய் அமைந்திருக்கிறது. இலகுவாய் கிடைத்தது. அதுவும் வாழும் அயலிலேயே கிடைத்தது. பனையின் ஓலையில் எழு துவதைக் கண்டறிந்த தன்மையினைச் சாதாரணமாகப் பார்த்துவிட முடியாது. மிகச் சிறந்த தெரிவு என்றுதான் எண்ண வேண்டும். கல்லில்மரத்தில்களிமண் தகட்டில்தோலில்செப்புத்தகட்டில் எழுதுவது என்பது இலகுவான செயலன்று. அதுமட்டுமல்ல அவற்றில் விரைவாகவும் எழுதிட முடியாது. எனவேதான் பனையின் ஓலையினை எழுதுவ தற்குத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். பனை ஓலையில் எழுதினால் அவற்றை போகும் இடமெல்லாம் எடுத்துச் செல்வது இலகுவாக இருக்கும் என்னும் காரணத்தாலும் – பனை ஓலை ஏடாய் மலர்ந்தது என்றும் எடு த்துக் கொள்ளலாம் அல்லவா !

ஓலையில் எழுதுவது என்பது இலகுவான காரியம் அல்ல. ஓலையில் எழுதுவது என்பது ஒருவித கலை எனலாம். எழுத்தாணியைக் கொண்டு மிருதுவான ஓலையில் எழுதும் பொழுது மிகவும் கவனமாகவே எழுத வேண்டும். ஓலையில் எழுதும் எழுத்துக்கள் – நாங்கள் தற் பொழுது காகிதத்திலோ அல்லது கணிப்பொறியிலோ அல்லது தட்ட ச்சிலோ எழுதுவதுபோல் இலகுவாக எழுதிவிடல் முடியாது. பிழை யினை திருத்தவோ அழிக்கவோ முடியாது. எழுதினால் எழுதியதுதான். எழுதும் ஓலையில் பிழை வந்தால் அந்த ஓலையினைத் தவிர்த்து விட்டு புது ஓலையில்த்தான் எழுதல் வேண்டும். மெய் எழுத்துக்களை எழுத முடியாது. குற்றுப் போட்டால் ஓலை கிழிந்து விடும். ஓலையில் எழுதும் எழுத்துக்களை எழுதுவது என்பதற்கு நல்ல பழக்கம் வேண்டியதாய் இருந்தது. தற்காலத்தில் விரித்து எழுதுவதுபோல் எழுதிவிடவும் இயலாதுசுருக்கமாய் அதேவேளை செறிவாய் எழுதும் நிலையே காணப்பட்டது எனலாம். இதனாலேயே எழுதப்பட்ட எல்லாமே பாட்டின் வடிவத்தைக் கொண்டு அமையும் கட்டாயம் இருந்தது என்பது கருத்திருத்த வேண்டியதே.

ஓலையில் பாட்டெழுதும் முறையிலும் வரையறைகள்  காணப்பட்டன என்பதற்கு ஆதாரங்களும் இருந்திருக்கின்றன.

அந்தணர்க்கு நாலா றரசர்க் கிருபதாம்
இந்த விரல் வணிகர்க் கெண்ணிரண்டாம் – முந்துவிரல்
வேளாரக்க் கீராறாய் வெள்ளோலை வேயவனை
தோளாய் அறிந் தொகுத்து

என்று கல்லாடனார் வெண்பா காட்டுகிறது. இதன்படி நான்மறையாளர்கள் இருபத்து நான்கு விரற்கடை அளவும்அரசர்கள் இருபது விரற் கடை அளவும் வணிகர்கள் பதினெட்டு விரற்கடை அளவும்வேளார்கள் பனிரெண்டு விரற் கடை அளவு எடுத்தே ஓலையில் எழுத வேண்டும் என்னும் நிலை காணப்பட்டது என்பதை இப்பாடல் தெரிவிக்கிறது. இதனை மேலும் உறுதிப் படுத்தும் வகையில் பொய்கையார் பாடலும் வந்து அமைகிறது.

ஓலைய திலைக்கணம் உரைக்குங் காலை
நாலாறு விரலாம் நான்மறை யோர்க்கே
பாருடை யோர்க்கும் பதிற்றிரண் டாகும்
வணிகர்க் கீரெண் விரலாகும்மே
காணென மொழிய சூத்திரக் களவே “

புத்தகம் சரியா பொத்தகம் சரியா என்று குழம்புகின்றோம். பொத்தகம் என்னும் சொல் பல ஏடுகளை இணைத்த இணைப்பினைக் குறித்தது என்பதற்கும் பழையபாடல்கள் சான்றாய் வந்து அமைகின்றன. வெற்றிலைகளை அடிக்கி வைத்திருக்கும் அடுக்கினைக் குறிக்க “கவளி” என்னும் சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தச் சொல்லை பலரும் மறந்து விட்டாலும் இன்னும் இந்தச் சொல் பழக்கத்தில் இருக்கிறது. வெற்றிலை அடுக்கினைக் குறிக்க வழங்கப்பட்ட இச்சொல் ஏடுகளின் அடுக்கினுக்கும் வழங்கப் பட்டிருக்கிறது.

பொத்தகம் படிகமாலை குண்டிகை பொருள் சேர் ஞான
வித்தகம் தரித்த செங்கை விமலையை அமலை தன்னை
மொய்த்த கொந்து அளக பாரா முகில் முலைத் தவள மேனி
மைத்தகு கருங்கண் செவ்வாய் அணங்கினை வணங்கல் செய்வோம்

கம்பராமாயணத்தில் சரஸ்வதியை வணங்கும் வகையில் அமைந்த இப்பாடலில் – சரஸ்வதி ” பொத்தகம் ” கையில் வைத்திருப்பதாய் காட்டுவது நோக்கத்தது.

  “மெய்யெலாம் நீறு பூசி வேணிகள் முடித்துக் கட்டி
கையினில் படை கரந்த புத்தகக் கவளி ஏந்தி
மை பொதி விளக்கே என்ன மனத்தினுள் கறுப்பு வைத்து
  பொய் தவ வேடம் கொண்டு புகுந்தனன் முத்த நாதன் “

முத்திநாதன் என்பவன் உடம்பெலாம் திருநீறு பூசிக்கொண்டு சடை முடிந்த கோலத்தில் கையில் “பொத்தகச் சுவடி” வைத்துக் கொண்டு வந்தான் என்று பெரிய புராணத்தில் வரும் இப்பாடல் குறிப்பிடுகிறது. இங்கே “பொத்தகச் சுவடி” என்பதுதான் முக்கியம். அக்காலத்தில் ஏட்டுச் சுவடிகளை அடுக்காய் கொண்டுவரும் நிலையும் இருந்திருக்கிறது என்பதும் அதற்காக வழங்கப்பட்ட பெயர்களையும் கருத்திருத்துவது நலமல்லவா !

ஏடுதந்த பனையின் ஓலைகளை எடுத்த எடுப்பில் ஓலை என்று அழைத்திடவும் முடியாது. ஓலை என்பது பொதுவான பெயராக இருந்தாலும் அது பனையின் மேல் முளைத்து எழுந்து வரும் பொழுது அதனை “குருத்தோலை ” என்கிறோம். பசுமையாய் வந்தபின்பு “சாரோலை” என்கிறோம். காய்ந்த பின்னர் “காவோலை” என்கிறோம். குருத்தோலை என் னும் பெயர் கிறீத்தவர்களுக்கு நன்கு பரிச்சயமான பெயராகும். குருத்தோலை பற்றி விவிலியத்திலும் வருகிறது. குருத்தோலை ஞாயிறு என்று ஒரு திருநாள் வருவதும் நோக்கத்தக்கது.

குருத்தோலை என்று கூறியவுடன் அதனுள் நல்லதொரு தத்துவம் பொதிந்து இருக்கிறது என்பதை நம்மில் எத்தனைபேர் அறிந்திருப்போம் குருத்தோலைக்கு ஒரு மென்மைத் தனமையும் நெகிழும் தனமையும் உண்டு. மற்ற ஓலைகளைப் போல் குருத்தோலையானது கைகளை விரித்தபடி இருப்பதில்லை. பணிவு கொண்டு இருப்பவர்கள் போல – அக்குருத்தோலைகள் கூப்பியபடியே இருக்கின்றன. அதுமட்டுமல்ல அதன் நுனிகள் வானத்தை நோக்கியபடியே நிமிர்ந்தே நிற்கின்றன. இப்படிக் குருத்தோலைகள் இருப்பது – வாழ்வில் நம்பிக்கையினை யும்பணிவையும் எமக்குப் புகட்டுவதாக இருக்கிறது என்பதும் மனங் கொள்ளத்தக்கதாகும்

 (வளரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *