Tag: கருமலைத் தமிழாழன்

  • தமிழிசையை உயிர்ப்பிப்போம்

    பாவலர்  கருமலைத்தமிழாழன்

     

    சிலம்புரைக்கும்    அரங்கேற்றுக்    காதை    தன்னில்

    சிறந்திருந்த    தமிழிசையைக்    கொணர்வோம்    மீண்டும்

    புலமையொடு    தமிழிசைக்கு    இலக்க   ணத்தைப்

    புகன்றிட்ட    இசைநுணுக்கம்    பஞ்ச   மரபு

    வலம்வந்த    பெருநாரை    பெருங்குரு   கென்று

    வரிசையாக   இருந்தஇசை   நூல்கள்   சொல்லும்

    நலமான    தமிழிசைதான்    செவிவி    ழுந்தால்

    நாமுணர்ந்து    தலையாட்டி    மகிழ்வோம்    அன்றோ !

     

    கீர்த்தனைகள்   எனப்புரியா    மொழியில்   பாடக்

    கீழ்மேலாய்த்    தலையாட்டும்   மாடாய்   ஆனோம்

    சீர்த்தகுரல்    கைக்கிளையும்    துத்தம்    தாரம்

    விளரியொடு    உழைஇளியும்    ஏழாய்   நின்று

    ஆர்த்தசுரம்    பன்னிரண்டும்   பாலைக்    குள்ளே

    அரும்பண்கள்   நூறோடு    மூன்றில்    தேனைச்

    சேர்த்தளிக்கும்   துளைநரம்பு    கருவி   பெய்யும்

    செம்மையான    தமிழிசையே    மயக்கும்   நெஞ்சை !

     

    புறக்கணிப்பால்    மறைந்துவரும்    தெருவின்    கூத்து

    புறமொதுக்கும்    கரகாட்டம்    மயிலின்     ஆட்டம்

    குறத்தியர்தம்    ஏலேலோ    பொம்ம   லாட்டம்

    குற்றுயிராய்ப்    போனதுபோல்    போயி   டாமல்

    சிறப்பாகத்    தமிழிசையை     இசைக்கச்    செய்தால்

    சீர்பெற்று    மீண்டுமிங்கே    தழைக்கும்   நன்றாய்

    உறவாக    உலகத்தை    இணைக்கும்    நம்மின்

    உயர்வான    தமிழிசையை    உயிர்ப்பிப்    போமே !

     

    Share
  • தந்தை பெரியார்!

    -பாவலர் கருமலைத் தமிழாழன்

    விடியாத   இரவுக்கு   விடியல்   தந்து
                –விரிகதிராய்   எழுந்திட்ட   வீரச்   சிங்கம்
    மடியாதோ   எனயேங்கி   மாய்ந்த   மக்கள்
                –மனக்குமுறல்   தீர்த்திட்ட   ஞான   வித்து  Thanthai_Periyar
    பிடியாதோ   எனும்மயலில்   பின்னால்   நின்றோர்
               — பிடறிதள்ளி   முன்நிறுத்திய   புரட்சி   வேந்தன்
    படியீதோ   எனத்தன்னைத்   தந்து   தாழ்ந்தோர்
                –பயணத்தைத்   துவக்கிவைத்த   பண்பின்   முத்து!

    நீவந்த   பின்னால்தான்   எங்கள்   வீட்டில்
               –நின்றிருந்த   பழமைகளும்   எரியக்   கண்டோம்
    நீவந்த   பின்னால்தான்     எங்கள்   நெஞ்சில்
                –நியாயத்தின்   நினைவுகளும்   எழும்பக்   கண்டோம்
    நீவந்த   பின்னால்தான்   இந்த   நாட்டில்
                –நின்றமூடம்   முடமான   காட்சி   கண்டோம்
    நீவந்த   பின்னால்தான்   தாழ்ந்தி   ருந்தோர்
                –நிமிர்ந்துதலை   நடக்கின்ற   துணிவு     கண்டோம்!

    சிந்தனையைத்     தூண்டிவிட்டே   அறிவால்   எந்தச்
                –சிறுவினையும்     செய்கவென்றே   முழக்க   மிட்டு
    இந்நிலத்தில்   பகுத்தறிவுப்   பாதை   வெட்டி
                –இருக்கின்ற   சூத்திரர்க்கே   உணர்வை   யூட்டி
    மந்தையென   வாழ்ந்தோர்க்கு   மதியை   ஈந்து
                –மறுமலர்ச்சி   வரலாற்றைப்     புதிதாய்   ஆக்கித்
    தந்திட்ட   பெரியாரை   நாம்ம   றந்தால்
                –தலைநிமிர்ந்த   நாம்மீண்டும்   தாழ்ந்து   போவோம்!

     

    Share
  • நேரு வியந்த காமராசர்!

    -பாவலர் கருமலைத்தமிழாழன்

    பெருந்தலைவர்   காமராசர்   முதல்வ   ராகப்
    –பெருமைமிகு   தமிழ்நாட்டை   ஆண்ட   போது
    வருங்காலச்   சந்ததியை     நெஞ்சி   லெண்ணி
    –வளர்தொழில்கள்   விவசாயம்     கல்விக்   காக
    அருந்திட்டம்   பலதீட்டி   மாநி   லத்தை
    –அனைத்துவகைத்     துறைகளிலும்   முதன்மை   யாக்கித்
    திருவாக   இந்தியாவை   ஆட்சி   செய்த
    –திருமகனாம்   நேருவினை   அழைத்தார்   காண !

    மதுரையிலே   நடக்குமொரு   விழாவிற்   காக
    –மாண்புமிகு   நேருவுடன்   சென்ற   போது
    இதுவுங்கள்   ஊருக்குப்   பக்கம்   தானே
    –இன்றுங்கள்     அம்மாவைப்   பார்த்துச்   செல்வோம்
    பொதுவாழ்விற்     குயர்ந்தோனை   அளித்த   தாயின்
    –பொன்முகத்தைக்   காட்டுங்கள்   என்றே   நேரு
    வதுவையினைச்     செய்யாமல்   நாட்டிற்   குழைத்த
    –வாய்மையாளன்   காமராசைக்   கேட்டுக்   கொண்டார் !

    செல்கின்ற   வழியினிலே   வயலில்   பெண்கள்
    –சேற்றினிலே   பணிசெய்ய   வண்டி   நிறுத்தி
    எல்லோரை   வரப்பினிலே   அழைத்துச்   சென்றே
    –ஏறுவெயில்   தனில்வயலில்   உழைக்கும்   தாயை
    நல்லவராம்   காமராசர்   அழைத்துக்   காட்ட
    –நாடாளும்   நேருகண்டு   வியந்து   போனார்
    இல்லையிவர்     போலவொரு     தலைவ     ரென்றே
    –இருவரையும்   இருகரத்தால்     வணங்கி   நின்றார் !

     

     

    Share