-பாவலர் கருமலைத்தமிழாழன்

பெருந்தலைவர்   காமராசர்   முதல்வ   ராகப்
–பெருமைமிகு   தமிழ்நாட்டை   ஆண்ட   போது
வருங்காலச்   சந்ததியை     நெஞ்சி   லெண்ணி
–வளர்தொழில்கள்   விவசாயம்     கல்விக்   காக
அருந்திட்டம்   பலதீட்டி   மாநி   லத்தை
–அனைத்துவகைத்     துறைகளிலும்   முதன்மை   யாக்கித்
திருவாக   இந்தியாவை   ஆட்சி   செய்த
–திருமகனாம்   நேருவினை   அழைத்தார்   காண !

மதுரையிலே   நடக்குமொரு   விழாவிற்   காக
–மாண்புமிகு   நேருவுடன்   சென்ற   போது
இதுவுங்கள்   ஊருக்குப்   பக்கம்   தானே
–இன்றுங்கள்     அம்மாவைப்   பார்த்துச்   செல்வோம்
பொதுவாழ்விற்     குயர்ந்தோனை   அளித்த   தாயின்
–பொன்முகத்தைக்   காட்டுங்கள்   என்றே   நேரு
வதுவையினைச்     செய்யாமல்   நாட்டிற்   குழைத்த
–வாய்மையாளன்   காமராசைக்   கேட்டுக்   கொண்டார் !

செல்கின்ற   வழியினிலே   வயலில்   பெண்கள்
–சேற்றினிலே   பணிசெய்ய   வண்டி   நிறுத்தி
எல்லோரை   வரப்பினிலே   அழைத்துச்   சென்றே
–ஏறுவெயில்   தனில்வயலில்   உழைக்கும்   தாயை
நல்லவராம்   காமராசர்   அழைத்துக்   காட்ட
–நாடாளும்   நேருகண்டு   வியந்து   போனார்
இல்லையிவர்     போலவொரு     தலைவ     ரென்றே
–இருவரையும்   இருகரத்தால்     வணங்கி   நின்றார் !

 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “நேரு வியந்த காமராசர்!

Leave a Reply

Your email address will not be published.