பாவலர்  கருமலைத்தமிழாழன்

 

சிலம்புரைக்கும்    அரங்கேற்றுக்    காதை    தன்னில்

சிறந்திருந்த    தமிழிசையைக்    கொணர்வோம்    மீண்டும்

புலமையொடு    தமிழிசைக்கு    இலக்க   ணத்தைப்

புகன்றிட்ட    இசைநுணுக்கம்    பஞ்ச   மரபு

வலம்வந்த    பெருநாரை    பெருங்குரு   கென்று

வரிசையாக   இருந்தஇசை   நூல்கள்   சொல்லும்

நலமான    தமிழிசைதான்    செவிவி    ழுந்தால்

நாமுணர்ந்து    தலையாட்டி    மகிழ்வோம்    அன்றோ !

 

கீர்த்தனைகள்   எனப்புரியா    மொழியில்   பாடக்

கீழ்மேலாய்த்    தலையாட்டும்   மாடாய்   ஆனோம்

சீர்த்தகுரல்    கைக்கிளையும்    துத்தம்    தாரம்

விளரியொடு    உழைஇளியும்    ஏழாய்   நின்று

ஆர்த்தசுரம்    பன்னிரண்டும்   பாலைக்    குள்ளே

அரும்பண்கள்   நூறோடு    மூன்றில்    தேனைச்

சேர்த்தளிக்கும்   துளைநரம்பு    கருவி   பெய்யும்

செம்மையான    தமிழிசையே    மயக்கும்   நெஞ்சை !

 

புறக்கணிப்பால்    மறைந்துவரும்    தெருவின்    கூத்து

புறமொதுக்கும்    கரகாட்டம்    மயிலின்     ஆட்டம்

குறத்தியர்தம்    ஏலேலோ    பொம்ம   லாட்டம்

குற்றுயிராய்ப்    போனதுபோல்    போயி   டாமல்

சிறப்பாகத்    தமிழிசையை     இசைக்கச்    செய்தால்

சீர்பெற்று    மீண்டுமிங்கே    தழைக்கும்   நன்றாய்

உறவாக    உலகத்தை    இணைக்கும்    நம்மின்

உயர்வான    தமிழிசையை    உயிர்ப்பிப்    போமே !

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *