Tag: கல்வெட்டு ஆராய்ச்சியாளர் து.சுந்தரம்

  • கல்வெட்டு எழுத்துகள் கற்போம்-13 – 18

    து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
    அலைபேசி : 9444939156.

    மீண்டும் தஞ்சைக்கோயிலின் ஓரிரு கல்வெட்டுகளைக் காண்போம்.

    இவை, கோயிலின் சுற்று மாளிகையின் தூண்களில் இருப்பன. விமானத்தின்
    அதிட்டானப்பகுதியில் உள்ள கல்வெட்டுகளைக்காட்டிலும் இவற்றில் அழகும் திருத்தமும் குறைவு.

    கல்வெட்டு-1

    பதினாறு வரிகள் கொண்ட இக்கல்வெட்டு, தூணின் ஒரு முகத்தில் உள்ளது. கொடையாளி, இறைவரின் செப்புத்திருமேனி ஒன்றையும் அதன் பீடத்தையும் அளித்து, உருத்திராக்கம் (ருத்ராக்‌ஷம்) ஒன்றைப் பொன்கொண்டு பொதித்தளித்திருக்கிறார்.

    கல்வெட்டின் படத்தை உருப்பெருக்கம் செய்து எழுத்துகளைச் சற்றே
    ஊன்றிப்பார்த்துப் படிக்க. கல்வெட்டின் பாடம் கீழே தரப்பட்டுள்ளது.

    தஞ்சை-தூண் கல்வெட்டு-1

    1 விரல் நீளத்து எ
    2 ண் விரல் அகலத்
    3 து எண் விரலுசர
    4 த்து பத்மத்தோடு
    5 ங்கூடச்செய்த பீ
    6 டம் ஒன்று இவ
    7 னே இவர்க்குக்
    8 குடுத்தன ருத்ரா
    9 க்‌ஷம் ஒன்றிற் கட்
    10 டின பொன் ஏழு ம
    11 ஞ்சாடி உட்பட ருத்ரா
    12 க்‌ஷம் ஒன்று நிறை அ
    13 ரைக் கழஞ்சே நா
    14 லு மஞ்சாடியுங் கு
    15 ன்றிக்கு விலை காசு
    16 ஒன்று

    குறிப்பு:
    1 செப்புத்திருமேனியின் நீள,அகல, உயரங்கள் தரப்பட்டுள்ளன. உசரம்=உயரம்
    (யகர, சகர மயக்கம்.)
    விரல்-பெருவிரல் அளவு.
    12 விரல்=ஒரு சாண்.

    2 பொன்னின் நிறை கழஞ்சு, மஞ்சாடி ஆகிய அளவுகளில் சொல்லப்பட்டிருக்கிறது.
    மஞ்சாடி= இரண்டு குன்றிமணி எடை
    20 மஞ்சாடி= ஒரு கழஞ்சு

    3 நீல வண்ண எழுத்துகள் கிரந்த எழுத்துகளைக்குறிப்பன.
    ( பத்ம பீடம், ருத்ராக்‌ஷம்)

    கிரந்தம்

    கல்வெட்டு-2

    இதுவும் ஒரு தூண் கல்வெட்டு. இருபத்து நான்கு வரிகளை
    உடையதாய் முழுச்செய்தியைச் சொல்லும் கல்வெட்டு. ஆறு படங்களாகக்
    காட்டப்பட்டுள்ளது. எழுத்துகளைப்படிக்கும் பயிற்சிக்கு உகந்தது எனக்கருதுகிறேன். முதலாம் இராசராசனின் அதிகாரிகளுள் புரவுவரித் திணைக்களம் என்னும் துறையில் வரிப்பொத்தக நாயகன் என்னும் பதவியிலிருக்கும் காஞ்சன கொண்டையன் என்பவன் தஞ்சைக்கோயிலின்
    சிறு தேவதைகளுக்கான பரிவாரக்கோயிலில் கணபதிப்பிள்ளையார்க்கு
    இருபத்தொன்பது பலம் நிறையுள்ள வெண்கலத் தளிகையைக் கொடையாக
    அளித்த செய்தியைக்கல்வெட்டு தெரிவிக்கிறது.

    முதல் படம்:

    Kalvettu73

    பாடம்:
    ஸ்வஸ்திஸ்ரீ உடை
    யார் ஸ்ரீ ராஜராஜீ
    ச்0வரம் உடையா

    இரண்டாம் படம்:

    Kalvettu74

    பாடம்:
    ர் கோயிலில் பரி
    வாராலயத்துப்
    பிள்ளையார் க3ண
    பதியார்க்கு உடை

    மூன்றாம் படம்:

    Kalvettu75

    பாடம்:
    யார் ஸ்ரீ ராஜராஜ
    தே3வர் பணிமக
    ன் புரவுவரி திணை

    நான்காம் படம்:

    Kalvettu76

    பாடம்:
    க்களத்து வரிப்பொ
    த்தக நாயகன் பா
    ண்ட்3ய குலாச0நி
    ள நாட்டுப் புறக்கிளி
    யூர் நாட்டுக் காமத

    ஐந்தாம் படம்:

    Kalvettu77

    பாடம்:
    மங்கலமுடையா
    ன் காஞ்சன கொண்
    டையன் உடையார் ஸ்ரீ
    ராஜராஜதே3வர்க்கு யா

    ஆறாம் படம்:

    Kalvettu78

    பாடம்:
    ண்டு இருபத்தொன்ப
    தாவது வரை குடுத்த
    வெண்கலத்தளிகை
    ஒன்று நிறை இருப
    த்தொன்பதின் பலம்

    குறிப்பு:
    1 நீல வண்ண எழுத்துகள் கிரந்த எழுத்துகளைக்குறிப்பன.
    2 புரவுவரித் திணைக்களம் – அரசு வருவாய்(வரி)த்துறை.
    3 வரிப்பொத்தக நாயகன் – அரசு வரிக்கணக்குப்
    பதிவேட்டுத்துறை மேலலுவலர்.
    4 தளிகை – உண்கலம் (தட்டு).
    5 பலம் – ஓர் எடை.

    கிரந்தம்-2

    து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
    அலைபேசி : 9444939156.

    கல்வெட்டு எழுத்துகள் கற்போம் – 14

    படிக்கும் பயிற்சியில் மேலும் சில கல்வெட்டுகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

    [1] கீழ்வரும் கல்வெட்டு உடுமலை அருகிலுள்ள கடத்தூர் மருதீசர் கோயிலில் உள்ள தூண் கல்வெட்டு. தூணின் மூன்று சதுரங்களில் மூன்று பகுதியாகக் கொடுக்கப்பட்டுள்ளது. எளிமையான ஒரு கல்வெட்டு. ஒளிப்படத்தை அவரவர் தேவைக்கேற்பப் பெரிதாக்கி எழுத்துகளைப் படித்துப்பார்க்க.

    தூணின் முதல் சதுரத்தில் கல்வெட்டுப்பகுதி

    P1080081

    தூணின் முதல் சதுரத்தின் பாடம்:

    ஸ்வஸ்திஸ்ரீ
    வீரசோழ தே
    வற்கு யாண்
    டு பத்தொன்
    பதாவது

    தூணின் இரண்டாம் சதுரத்தில் கல்வெட்டுப்பகுதி

    P1080082

    தூணின் இரண்டாம் சதுரத்தின் பாடம்:

    வெள்ளப்ப நா
    ட்டுத்தேவி
    யர் சேரியில்
    கோளந் இரா
    மநாந அழ(கி)
    ய மாணிக்கப்
    பல்லவரைய

    தூணின் மூன்றாம் சதுரத்தில் கல்வெட்டுப்பகுதி

    P1080083

    தூணின் மூன்றாம் சதுரத்தின் பாடம்:

    நேந் இத்தூண்
    செய்வித்தேந்

    ——————————————————————————————————————————————-
    து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
    அலைபேசி : 9444939156.

    கல்வெட்டு எழுத்துகள் கற்போம் – 15

    படிக்கும் பயிற்சியில் மேலும் ஓரிரு கல்வெட்டுகள் கீழே;

    Rajarajan pallipadai kalvettu

    [1] இராசராசன் பள்ளிப்படைக் கல்வெட்டு.

    கல்வெட்டின் பாடம்:

    ஸ்வஸ்திஸ்ரீ ஸகலபு4வந சக்ரவத்திகள் ஸ்ரீ கு
    லோத்துங்க சோழதேவற்கு யாண்டு நாற்ப
    த்திரண்டாவது ஸ்ரீ சிவபதசேகரமங்கலத்து
    எழுந்தருளிநின்ற ஸ்ரீராஜராஜதேவராந ஸ்ரீ
    சிவபாதசேகரதேவர் திருமாளிகை முன்பில்
    பெரியதிருமண்டபமுன்…டுப்பு ஜீ(ர்)
    நித்தமையில் இம்மண்டபம் எடுப்பி
    த்தார் பிடவூர் பிடவூர் வேளான் வேளிர்
    அரிகேசவனாந கச்சிராஜற்காக இவ்வூர்
    யகம் செய்துநின்ற ஜயசிங்ககுல கா
    வளநாட்டு குளமங்கல நாட்டு சா
    மங்கலத்து சாத்தமங்கலமுடை
    ன நம்பிடாரன் நாடறிபுகழுன் இ
    டன் விரதங்கொண்டு செய்தார் இ
    (ர்) பிடார்களில் ராஜேந்த்ரசோழனு
    (ட) நாயகநான ஈசாநசிவரும் தேவ
    யமந அறங்காட்டிப்பிச்சரும் ||-

    குறிப்பு: பச்சைவண்ண எழுத்துகள் கிரந்த எழுத்துகள்.
    ஜீர்நித்தமையில்-அழிவு ஏற்பட்டமையால்

    [2] உடுமலை-கடத்தூர் மருதீசர் கோயில் கல்வெட்டு:

    P1080078

    கல்வெட்டின் பாடம்:

    1. இருதூணி குறுணிக்கும் பூவில் எண்கல்லு பாட்டம் அளந்
    2. ற்கும் குறுணி இரு நாழி அரிசி அமுதுபடி சென்றுவ(ரு)
    3. . த்திரத்துக்கு ஆறுநாழி சோறும் இட்டு வருவ
    4. சோழபட்டனும் கைக்கொண்ட அச்சு இரண்(டு)

    [3] உடுமலை-கடத்தூர் மருதீசர் கோயில் கல்வெட்டு:

    கல்வெட்டின் பாடம்:

    கும் கோவணப்பொழிக்கு தெற்கும் இந்நான்கெல்லைக்கு 20 – வி. இ
    நாச்சியாற்கும் வினாயகப்பிள்ளையாற்கும் க்ஷேத்திரபாலப்பிள்(ளையா)ற்
    சனி எண்ணைக்காப்புக்கு வந்துசேவித்த ஆடுபாத்திரம் பாடு(பா)த்
    டைய சிவபிராமணன் சைய்வச்சக்கரவத்தியும் விக்கி
    ணை சாத்திவருவோம்மாகவும்
    குறிப்பு: பச்சைவண்ண எழுத்துகள் கிரந்த எழுத்துகள்.

    —————————————————————————–

    கல்வெட்டு எழுத்துகள் கற்போம் – 16

    கல்வெட்டு படிக்கும் பயிற்சியில் மேலும் சில கல்வெட்டுகள் இங்கு தரப்பட்டுள்ளன. வழக்கம்போல், படங்களை உருப்பெருக்கம் செய்து படியுங்கள். எழுத்துகளை அதன் வடிவத்திலேயே (பார்வைப்படி) எழுதிப்பார்ப்பது நல்ல பயன் தரும்.

    கல்வெட்டு – 1

    Copy of P1040100

    கல்வெட்டின் பாடம் :

    ம் குமுதகத்திலும் வெட்டிக்கிடந்த
    ட்டிஎடுத்து சுந்தரபாண்டிய தே
    த படியே ஆற்றூருடையான்
    ழதேவற்கு யாண்டு 35 வது கெ
    றம் உடைய நாயனார் கோயிலில்
    ல் நாள் ஒன்றுக்கு சந்தி ஒன்றுக்
    நாழியும் ஆக நாள் ஒன்றுக்கு அரிசி
    க்கும் நெல்லு குறுணி ஒரு நாழியு

    குறிப்புகள்:

    குமுதகம் – கோயில் விமானத்தின் அடித்தளப்பகுதியில் ஒன்று. குமுதம்
    என்பது பொதுவாக வழங்கும் பெயர்.
    சந்தி – பூசை வேளை
    நாழி = 1 படி
    குறுணி = 8 நாழி

    கல்வெட்டு – 2

    P1080141

    கல்வெட்டின் பாடம் :

    ஸ்வஸ்திஸ்ரீ வீரராஜே
    ந்த்ர தேவற்கு யாண்டு
    பத்தாவது கோடி
    க்காரைத்தொழிலிர
    ருக்கும் பெ(ரு)மாள் உ
    ரிமையா(ரி)ல் இராச
    சிசிறியானேந் இட்
    (திரு) வாயல் முகவணை
    (உத்திரம்) உள்பட இந்நிலை
    கால் இட்டேந் இராசசிறி
    யானேந்

    குறிப்புகள் :
    பெருமாள் – அரசன்
    உரிமையார் – அரசனுக்கு உரிமையானவர் (இங்கே படை வீரர்கள்
    ஆகலாம்).
    திருவாயல்(திருவாயில்), முகவணை, உத்திரம், நிலைக்கால் – கட்டிட
    உறுப்புகள்.

    கல்வெட்டு – 3

    கல்வெட்டின் பாடம் :

    1. ஸ்வஸ்திஸ்ரீ வீரராஜேந்திர தேவ
    2. ற்கு யாண்டு பதிநஞ்சாவது எதிர் எதிர்
    3. ரைவழினாட்டுக் கோடிக்காரைத்
    4. (தொ)ழு முதலிகளில் சோழன் கூத்தனான
    5. ராசேந்திர இருங்கோளனேன் பெருமா
    6. டுகக்கொத்துக்கு நாயக்கமாரில் தொ

    குறிப்பு :
    கரைவழி நாட்டுக் கோடிகாரைத்தொழு என்னும் ஊர் குறிப்பிடப்படுகிறது.
    முதலி – தலைவன்; அரச அதிகாரி.
    கொத்து – வேலையாள் அல்லது ஊழியர் தொகுதி. இங்கே குரிப்பிடப்
    படுவது பெருமாள் வடுகக் கொத்து என்பவர்.
    (பெருமாள் – அரசன்)

    குறிப்பு : சிவப்பு வண்ண எழுத்துகள் கிரந்த எழுத்துகள்.

    ————————————————————–

    கல்வெட்டு எழுத்துகள் கற்போம் – 17

    கல்வெட்டு படிக்கும் பயிற்சியில் மேலும் சில கல்வெட்டுகள் இங்கு தரப்பட்டுள்ளன. வழக்கம்போல், படங்களை உருப்பெருக்கம் செய்து படியுங்கள். எழுத்துகளை அதன் வடிவத்திலேயே (பார்வைப்படி) எழுதிப்பார்ப்பது நல்ல பயன் தரும்.

    கல்வெட்டு – 1

    Copy of P1070195

    கல்வெட்டுப் பாடம்:

    1 ஸ்வஸ்திஸ்ரீ வீரராசேந்
    2 திர தேவற்கு யாண்டு 40
    3 வது வைகாசி திங்க வடபரிசா
    4 ர நாட்டில் சேவூரில் வெள்ளா
    5 ன் உகையரில் தேவந்தேவநேந்
    6 ஆளுடையா திருமுருகந்பூண்டி
    7 நாயநாற்கு சந்தியாதீபம் ஒந்(று)
    8 க்கு சீபண்டாரத்தில் ஒடுக்கி(ன)
    9 பழஞ்சலாகை அச்சு ஒன்றுக்
    10 கும் சந்திராதித்தவரை செல்
    11 வதாகக் கல்வெட்டுவித்தே
    12 ந் இது பந்மாஹேஸ்வர
    13 க்ஷை

    குறிப்புகள் :

    சிவப்பு வண்ண எழுத்துகள் கிரந்தம்
    கல்வெட்டின் காலம் கி.பி. 1247. அரசன் வீரராசேந்திரன், கொங்குச்சோழன்.
    வடபரிசார நாடு – கொங்குப்பகுதியில் பண்டு வழங்கிய இருபத்து நான்கு நாட்டுப்பிரிவுகளில் ஒன்று.
    உகையர் – கொங்கு வெள்ளாளர்களில் ஒரு பிரிவு
    சீபண்டாரம் – கோயில் கருவூலம்; ”ஸ்ரீ” என்பது வடமொழி எழுத்தைத் தமிழாக்கியது.
    ப்ழஞ்சலாகை அச்சு – கொங்குப்பகுதியில் புழக்கத்தில் இருந்த பழங்காசு.
    வெள்ளாளன் தேவன் தேவன் என்பவன், திருமுருகன்பூண்டி கோயிலுக்குச் சந்திவிளக்கு எரிப்பதற்காகக் காசு கொடை அளித்த செய்தி கூறப்படுகிறது.

    கல்வெட்டு – 2

    Copy of P1060325

    கல்வெட்டுப் பாடம்:

    1 ஸ்வஸ்திஸ்ரீ விசையாபுதைய சாலிவாகன சகாத்தம் (உ)
    2 1458ன் மேல் செல்லாநின்ற துன்
    3 முகி வரு. அற்பசி மீ 7 தேதி துவாதெசியும் புத
    4 வாரமும் உத்திர நக்ஷரமும் பெற்ற னாள் ஸ்ரீ
    5 ன் ராசாதிராசன் ராசபரமேசுரன் ஸ்ரீ வீரப்பி
    6 றதாப ஸ்ரீவீர அச்சுத்தராயமகாராயர் பிறுது
    7 வி ராச்சியம் பண்ணி அருளாநின்ற காலத்து அந்
    8 த அச்சுதராயமகாராயற்கு தெக்ஷிணாபுமாதெ
    9 ண்டமான் காவேரிவல்லபன் கடகசூறைக்காற்
    10 றன் விருதன் வாயுவந்தி விருதுகஜாசிங்கன் பெ
    11 க்கெத்துராசுல ஒக்கெத்துகண்டன் மண்டலி
    12 க மகலராசன் உறையூற்புரவாதீசுரன் பொன்னா
    13 ம்பலநாத ஸ்ரீபாதசேகர காசிபகோத்திரத்
    14 து ஆபஸ்தம்ப சூத்திரத்து சூரிய வங்கித்தில் சோ
    15 ழகுல ஒங்கர சென்னையதேவ மகாராசாவின் பு
    16 த்திரரான ஸ்ரீமன்மகாமண்டலேசுர வாலையதேவமகா
    17 ராசா நம்முடைய சுவாமி அச்சுத்தராயமகாராயற்கு பு

    குறிப்புகள் :

    கல்வெட்டின் காலம், கல்வெட்டில் சாலிவாகன சகாத்தம் 1458 எனக்குறிப்பிடப்பெறுகிறது. சாலிவாகன ஆண்டு, சக வருடம், சகரை ஆண்டு ஆகிய அனைத்தும் சாலிவாகன சகாப்தத்தைக்குறிப்பதாகும். இந்த ஆண்டுடன் 78 ஆண்டுகளைச் சேர்க்க கிறித்தவ ஆண்டு பெறப்படும். எனவே இக்கல்வெட்டின் காலம் கி.பி. 1536. விஜய நகர அரசர்கள் காலம். இங்கு, அரசர் அச்சுதப்ப நாயக்கர். கல்வெட்டில் கொடுக்கப்பட்ட துன்முகி தமிழ்வட்டத்து ஆண்டு கி.பி. 1536-ஆம் ஆண்டுடன் மிகச்சரியாகப்பொருந்துவதைக் காணலாம். ஒரு சில், கல்வெட்டுகளில், இக்காலக் குறிப்புகள் பொருந்தாமல் போவதுண்டு. (இந்த 2016-ஆம் ஆண்டும் துன்முகி/துர்முகி என்பதை நோக்குக.) தமிழ் மாதமான ஐப்பசி மாதம், கல்வெட்டில் அற்பசி மாதம் எனக்குறிக்கப்பெறுகிறது. இது போன்ற பெயர்களை நினைவில் கொள்ளுதல் கல்வெட்டுகள் படிக்க் உதவும். காலக்குறிப்பில், புதவாரம், துவாதசி திதி, உத்திர நட்சத்திரம் ஆகிய குறிப்புகள் விளக்கமாகத் தரப்பட்டுள்ளதை நோக்குக.
    கல்வெட்டுக்காலத்தில், விஜயநகர அரசரின் சார்பாக கொங்குமண்டலத்தின் மகாமண்டலேசுவரனாக நிர்வாகம் செய்தவன் வாலையதேவமகாராசன். அவனுடைய கோத்திரமும், சூத்திரமும் தரப்பட்டுள்ளன.
    விஜயநகர அரசருக்கும், மண்டலாதிபதிக்கும் பல்வேறு விருது/சிறப்பு அடைமொழிகள் தரப்பட்டுள்ளன.

    ——————————————————————

    கல்வெட்டு எழுத்துகள் கற்போம் – 18

    கல்வெட்டு படிக்கும் பயிற்சியில் மேலும் சில கல்வெட்டுகள் இங்கு தரப்பட்டுள்ளன. வழக்கம்போல், படங்களை உருப்பெருக்கம் செய்து படியுங்கள். எழுத்துகளை அதன் வடிவத்திலேயே (பார்வைப்படி) எழுதிப்பார்ப்பது நல்ல பயன் தரும்.

    கல்வெட்டு – 1 கல்லின் முன்புறம்

    Copy of P1060940

    கல்வெட்டின் பாடம் :

    1 யுவ வரு சித்
    2 திரை மீ
    3 ஸ்ரீ ராமப்ப
    4 அய்யனவ
    5 ர்கள் காரிய
    6 த்துக்குக்கற்த
    7 ரான சிதம்
    8 பரநாத பிள்ளை
    9 பாரபத்தியத்தில்
    10 வடபரிசாரநா
    11 ட்டு ஒத்தனூரா
    12 ன பெரும்பழ
    13 னத்துக் காணி
    14 யுடைய வெள்
    15 ளாழர் மூலர்க
    16 ளில் வேலப்ப
    17 னும் பாளந்தை
    18 களில் உத்தமனு
    19 (ம் மேற்படியூர்ச்)
    20 …………………………….

    கல்லின் பின்புறம்

    Copy of P1060940

    கல்வெட்டின் பாடம் :

    1 இ நித்த தன்ம
    2 ம் பரிபாலன
    3 மாக நடத்தின
    4 பேரெல்லா
    5 ங் காசிராமே
    6 சுரம் சேவித்தா
    7 பலன் பெறுவ
    8 ராகவும் இந்த
    9 த்தன்மம் வில
    10 கினவர்கள் கெ
    11 ங்கைக் கரையி
    12 ல்க்காராம்பசு
    13 ப்பிராமணன்
    14 மாதாபிதாகுரு
    15 இவர்கள் அஞ்
    16 சுபேரையுங்
    17 கொன்ற தோ
    18 ஷத்திலே
    19 போகக்கடவ
    20 தாகவும்

    குறிப்பு :

    கோவை மாவட்டக் கல்வெட்டுகள் நூலின் குறிப்புகளில், ராமப்பய்யன் அலுவலராகிய சிதம்பரநாதபிள்ளை காலத்தில் வெளியிடப்பெற்ற அரசு ஆணை
    என்று கூறப்பட்டுள்ளது. காலம் கி.பி. 17-ஆம் நூற்றாண்டு என்று தரப்பட்டுள்ளது.
    ராமப்பய்யன் என்பவர் திருமலை நாயக்கரின் படைத்தளபதி ஆவார். எனவே இக்கல்வெட்டு, திருமலை நாயக்கர் காலத்தைச் சேர்ந்தது. திருமலை நாயக்கரின் ஆட்சிக்காலம் கி.பி. 1623-1659. கல்வெட்டில் வரும் யுவ வருடம் (அறுபது ஆண்டுகள் கொண்ட தமிழ் ஆண்டு வட்டத்தில் ஒரு ஆண்டின் பெயர்) என்னும் குறிப்பு
    கி.பி. 1635-ஆம் ஆண்டுடன் பொருந்துகிறது. எனவே, கல்வெட்டின் காலம் சரியாகக்
    கி.பி. 1635 எனலாம். இங்கே தரப்பட்டுள்ள கல்வெட்டின் படத்தில் 20-ஆம் வரியிலிருந்து மேலும் ஒன்பது வரிகள் நிலத்தில் புதைந்து போயுள்ளன.
    மேற்படி நூலின் குறிப்புப்படி, கொங்கு நாட்டின் வடபர்ரசார நாட்டுப்பிரிவைச்
    சேர்ந்த ஒத்தனூரான பெரும்பழனத்து உத்தமசோழீசுவரர் கோயிலுக்கு அபிஷேகம்,
    நைவேத்தியம், நந்தாதீபம், சந்தியா தீபம் ஆகியவற்றுக்காக ஊர்ச்சந்தையின் மகமை
    வருமானத்தைக் கொடையாக அளித்துள்ள செய்தி தெரியவருகிறது.
    காரியத்துக்குக் கர்த்தரான என்னும் தொடர் நாயக்கர் காலக் கல்வெட்டுகளில்
    பெரும்பாலும் காணப்படுகின்ற ஒன்று. வெள்ளாளர்களில், மூலர்கள், பாளந்தைகள்
    ஆகிய கூட்டப்பிரிவினர் இருந்துள்ளனர் என்பது அறியப்படுகிறது.
    தன்மத்தைக் காப்பவர், காசி-இராமேசுவரம் சென்றுவழிபட்ட நன்மையையும்,
    தன்மத்தை விலக்கினவர் கங்கைக் கரையில், பசு, பிராமணன், தாய்,தந்தை, குரு
    ஆகிய ஐவரைக்கொன்ற தோஷத்தை அடைவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது
    குறிப்பிடத்தக்கது.
    பழங்கல்வெட்டுகளில் நல்ல தமிழ்ச்சொற்கள் பயின்றதைப் போலன்றி,
    நாயக்கர் காலக் கல்வெட்டுகளில், காரியகர்த்தர், பாரபத்தியம், அபிஷேகம்,
    நைவேத்தியம், பரிபாலனம், சேவித்தல், தோஷம் ஆகிய வடமொழிச் சொற்கள்
    மிகுதியும் காணப்படுவது சிந்தனைக்குரியது. ஆட்சியாளர்களைச் சார்ந்தே மொழி
    வளர்வதும் தேய்வதும் நடைபெற்றுவந்துள்ளது என்பது வரலாற்றுச் சான்றாகும்.
    கல்வெட்டில் வரும் பெரும்பழனம் (பெரும்பழன நல்லூர்) தற்போது
    பெருமாநல்லூர் என்று அழைக்கப்படுகிறது.

    —————————————————
    து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
    அலைபேசி : 9444939156.

    Share
  • கல்வெட்டு எழுத்துகள் கற்போம் ! (1-7)

    கல்வெட்டு எழுத்துகள் கற்போம்  பகுதி-1

    து.சுந்தரம், கோவை

    அலைபேசி:     9444939156.

     

             கோயில்கள். வரலாற்றுக் கருவூலங்களுள் சிறப்பிடம் பெறுபவை. வரலாற்று ஆவணங்களான கலவெட்டுகளைத் தம்மகத்தே பொதித்து வைத்துள்ள களஞ்சியங்கள். நினைத்தவுடனே கல்வெட்டுகளைப் பார்க்க வாயில் திறந்து காத்திருக்கும் எளிமை அகங்கள். கோயில்கள் இல்லையேல் தொல்லியல் துறையே இல்லை எனலாம்.

             கோயில்களுக்குச் செல்கிறோம். கோயிற்சுவர்களில் ஏதோ எழுதப்பட்டுள்ளதைக் கண்கள் பார்க்கின்றன. மனமோ அறிவோ அவற்றைப் பொருட்படுத்துவதில்லை. கல்வெட்டுகளில் காணும் எழுத்துகள் தமிழ் எழுத்துகள்தாம் என்றுகூட அறிந்திருப்பதில்லை. பெரும்பாலான நிகழ்வு இது. ஆனால், இதற்கு விலக்கு உண்டு. பலர் இக்கல்வெட்டுகள் பற்றிச் சற்றே எண்ண முற்படுகின்றனர். ஆனால் மேலே முயலுவதில்லை. கல்வெட்டுகளைப் பற்றிய அறிவு குடத்துக்குள் வைத்த சிறு விளக்கொப்ப வெளிச்சம் பரப்பாமலே மறைந்துவிடுகிறது.

             இக்கட்டுரை ஆசிரியரின் நிலையும் மேற்சொன்னவாறுதான். சிறுவயது முதல் பார்த்துவரும் கல்வெட்டுகளைப்பற்றிய ஒரு விழிப்பு, பணி ஓய்வுக்குப்பிறகு (அகவை அறுபதுக்கு மேல்) ஏற்படுகிறது. முயற்சி தொடர்கிறது. தமிழகத் தொல்லியல் கழகத்தின் தொடர்பு ஏற்படுகிறது. அங்கு, மூத்த அறிஞர்கள், கல்வெட்டறிவை இளைஞர்களுக்கு எடுத்துச் செல்லுங்கள் எனக்கூறுகின்றனர். அண்மையில், சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பதிவாளர் முனைவர் மு.முத்துவேல் அவர்களைக் காணும் வாய்ப்பு கிட்டியது. அவர் சொன்னதும் கல்வெட்டு அறிவை இளய தலைமுறைக்குச் சேர்ப்பியுங்கள் என்பதே. இந்த நோக்கமே இப்பகுதியைத் தொடங்கியமைக்குக் காரணம்.

             கல்வெட்டு எழுத்துகள் ”தமிழி” என்னும் தமிழ் பிராமி, வட்டெழுத்து, தமிழ் எழுத்து என முப்பெரும் பிரிவாக விரியும். தமிழ் பிராமியும், வட்டெழுத்தும் எங்கும் காண இயலா. அவற்றைத் தேடித்தான் போகவேண்டும். ஆனால், ஏழைக்கும் கிடைக்கும் உப்புப் போல எங்கும் கிடைப்பது தமிழ் எழுத்தே. கிடைக்குமிடம் கோயில்கள். கற்க எளிது. கற்றபின் காண எளிது. இளைய தலைமுறையினர் முன்வரவேண்டும்.

             முதல் பகுதியில், உயிர் எழுத்துகளும், மெய்  (உயிர்மெய் வடிவில்) எழுத்துகளும் கொடுக்கப்பட்டுள்ளன. க,ங,ச,ஞ,ட,ண,த,ந,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன என்னும் வரிசையை மனப்பாடமாக வைத்துப்பழகுதல் நல்லது பயக்கும். ஏனெனில் ங் எழுத்து க எழுத்துடன் இணைந்தே பார்க்கப்படும். இதுபோலவே, ஞ்-ச, ண்-ட, ந்-த, ன்-ற ஆகியன இணைந்து வருவன. இனி, பாடம் தொடர்கிறது.

    கல்வெட்டு எழுத்துகள் - உயிர்

    கல்வெட்டு எழுத்துகள் - மெய் 2

    கல்வெட்டு எழுத்துகள் கற்போம்-பகுதி 2

                                

             முதற்பகுதியில் உயிர் எழுத்துகளையும், மெய் எழுத்துகளையும் பார்த்தோம். இனிக் காண இருப்பவை உயிர்மெய் எழுத்துகள். பெரும்பாலும் தற்போதுள்ள எழுத்துகளை ஒத்திருப்பினும், ணை, லை, ளை, னை ஆகிய எழுத்துகள் பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்துக்கு முன்பு வழக்கில் இருந்த எழுத்துகளை ஒட்டியிருப்பன. பாடம் தொடர்கிறது.

    கல்வெட்டு எழுத்துகள் - உயிர் மெய் 3

    கல்வெட்டு எழுத்துகள் கற்போம்-பகுதி 3

             உயிர்மெய் எழுத்துகளில் “த” எழுத்தின் இறுதிப்பகுதியையும் ”ந”, “ப”, “ம”, ”ய”, “ர” ஆகிய எழுத்துகளின் வடிவங்களையும் இப்பகுதியில் காணலாம். பாடம் தொடர்கிறது.

    கல்வெட்டு எழுத்துகள் - உயிர் மெய் 4

    கல்வெட்டு எழுத்துகள் - உயிர் மெய் 5

    கல்வெட்டு எழுத்துகள் கற்போம்-பகுதி 4

             “ல” முதல் “ற”  வரையிலான இறுதி உயிர்மெய் எழுத்துகள் இப்பகுதியில்   தரப்பட்டுள்ளன. ஐகாரத்தைக் குறிக்கப்பயன்படும் முன்னொட்டு இரு வடிவங்களில் கல்வெட்டுகளில் பயில்கிறது. அதேபோல், னா, ணா, றா ஆகியவை பழைய வடிவில் அமைந்திருக்கும். விளக்கம் கீழ் வருமாறு:

    கல்வெட்டு எழுத்துகள் - உயிர் மெய் 6

    கல்வெட்டு எழுத்துகள் - உயிர் மெய் 7

    கல்வெட்டு எழுத்துகள் கற்போம் – பகுதி 5


    இதுவரை எழுத்துகள் முழுமையும் பார்த்தோம். இனி, நேரடியாகக் கல்வெட்டுகளின் மூலவடிவத்தில் எழுத்துகளை இனம் கண்டு, படிக்கும் பயிற்சி தொடங்குகிறது. முன்பே குறிப்பிட்டவாறு, பிராமி, வட்டெழுத்து, தமிழ் எழுத்து என மூவகை வடிவங்களைக் கல்வெட்டுகளில் காண்கிறோம். தமிழ் எழுத்துகளைப் பொதுமைப்படுத்தி, முதலாம் இராசராசன் காலத்தைச் சேர்ந்த (கி.பி. 985) எழுத்து வடிவங்களையே நாம் பயின்றோம். இக்கால எழுத்துகள் திருத்தமான வடிவும் அழகும் அமையப்பெற்றவை.  இவற்றை மையமாகக் கொண்டு பயின்றால், இதன் காலத்துக்கு முன்பு, பின்பு என எழுத்துகளின் வடிவ மாறுபாட்டைக் கண்டுணர்ந்து  பயிற்சி பெறுதல் எளிது. எனவே, தஞ்சைப் பெரியகோயில் கல்வெட்டு எழுத்துகளில் நம் பயிற்சி தொடங்குகிறது.

    Kalvettu27 9

    எழுத்துகளைப் படித்துத் தனியே எழுதிவைத்துக்கொண்டு, கீழே தரப்பட்ட கல்வெட்டின் பாடத்தோடு உங்கள் பயிற்சியை ஒப்பிடுக.

    கல்வெட்டின்  பாடம்

    —————————-

    த்து ஏழு கழஞ்சேய் முக்காலே நாலு ம

    த்து எண் கழஞ்சு-ஒற்றை கங்கி(ல்)

    பள்ளித்தொங்கல் மகுடங்கள் திருப்ப

    ழஞ்சேய் முக்காலே யிரண்டு மஞ்சாடி

    சேய் முக்கால் திருப்பள்ளித்தொ

    (தி)ன் கழஞ்சாக இரண்டினால் பொன்

    பத்து ஒன்பதின் கழஞ்சே ஏழு ம(ஞ்)

    ண்டு மஞ்சாடியுங் குன்றி – திருப்ப(ள்)

    எழுத்துகளில் கவனிக்கவேண்டியவை

    ——————————————————

    1. எகரம், ஏகாரம் இரு எழுத்துகளும் ஒன்றே.
    2. ”ழு”, “மு”  இரு எழுத்துகளும் ஒன்றே.
    3. “னா” எழுத்தின் பழைய வடிவம்.
    4. “பொ” எழுத்தில் பின்னொட்டுக் குறியீடு “ப” எழுத்தை அடுத்து எழுதப்படாமல்

       “ப” எழுத்தோடு ஒட்டியுள்ளது.

    1. இரண்டாவது வரியில் “ஒற்றை” என்னும் சொல்லில் ஐகாரக்குறியீடு.

    இன்னுமொரு கல்வெட்டு.

    கல்வெட்டின் பாடம்

    —————————–

    VadaSuvar60 10

    முதல் வரியில் கிரந்த எழுத்துகள் உள்ளன. எனவே பாடம் தரவில்லை.

    இருபத்தாறாவது நாள் நூற்று

    மேற்படி கல்லால் நிறை

    ழஞ்சு –  நாளதினாலேய் கு

    டுத்த பொன்னின் கலச

    பொன்னின் தட்டம் ஒன்

    ல்  நிறை ஐய்ம்பதின் க

    கவனிக்கவேண்டியன

    ——————————

    1. “றா”  எழுத்தின் பழைய வடிவம்
    2. “ஞ்” எழுத்து முந்தைய கல்வெட்டில் உள்ள “ஞ்” எழுத்திலிருந்து

        மாறுபட்டுள்ளது.

    1. இறுதி வரியில் உள்ள “நிறை” என்னும் சொல்லில் ஐகாரக்குறியீடு

       முந்தைய கல்வெட்டில் உள்ள குறியீட்டிலிருந்து மாறுபட்டுள்ளது.

    ——————————————————————————————-

     

     

    கல்வெட்டு எழுத்துகள் கற்போம்-6

             சென்ற பாடத்தில் நான்கு கல்வெட்டுகளின் ஒளிப்படங்களைத் தந்து அவற்றைப்படிக்கும் முறையையும் சொல்லியிருந்தேன். நீங்கள் அவ்வாறு படித்திருந்தால் உங்கள் பாடத்தைச் சரிபார்த்துக்கொள்ளுங்கள். சரியான பாடம் கீழே தரப்பட்டுள்ளது.

    வரி 1 உடையார் ஸ்ரீராஜராஜதேவர் சேரமானையும் பாண்டியர்களையும் மலைநாட்டு எறிந்துகொண்ட பண்டாரங்களில் யாண்டு இருபத்தாறாவது நாள் முன்

    வரி 2 னூற்று ஒருபத்தொன்பதினால் ஸ்ரீராஜராஜஈஸ்வரமுடைய பரமஸ்வாமிக்குக் குடுத்த பொன்னின் சின்னங்கள் ஆடவல்லான் என்னும் கல்லா

    வரி 3 ல் நிறையெடுத்து கல்லில் வெட்டினபடி காளாஞ்சி ஒன்று பொன் ஐஞ்ஞூற்று எண்பத்து அறுகழஞ்சு – காளாஞ்சி ஒன்று பொன் அறுநூ

    வரி 4 ற்று ஒருபத்து ஒரு கழஞ்சரை குடம் ஒன்று பொன் முன்னூற்று எண்பத்து இரு கழஞ்சரை குடம் ஒன்று பொன் முன்னூற்று அறுபத்து எழு

    வரி 5 கழஞ்சு குட ஒன்று பொன் முன்னூற்று ஐம்பத்து ஒரு கழஞ்சு – குடம் ஒன்று பொன் இருநூற்றுத் தொண்ணூற்று நாற்கழஞ்சு – கரண்டிகைச்

    வரி 6 செப்பு ஒன்று அடியும் மூழலும் உட்பட பொன் நூற்று ஒருபத்து ஒரு கழஞ்சரை இலைச்செப்பு ஒன்று யாளிக்கால் நாலும் மூழலும் உட்பட பொ

    வரி 7 ன் நூற்று எண்பத்து ஐங்கழஞ்சே முக்கால் இலைச்செப்பு ஒன்று யாளிக்கால் நாலும் …. லும் உட்பட பொன் நூற்று நாற்பத்து எழு கழஞ்சு –

    வரி 8 தளிகை ஒன்று அடியுட்பட (பொன்) ஆயிரத்து ஒருநூற்று முப்பத்து ஐங்கழஞ்சரை  கல …… நை ஒன்று மூக்கும் அடியும் உட்பட பொன் நானூற்று எ

    சில விளக்கக் குறிப்புகள் :

    • நீலவண்ணத்தில் காட்டப்பட்டுள்ள எழுத்துகள் கிரந்த எழுத்துகள். அவற்றின் வடிவத்தை இக்கட்டுரையின் இறுதியில் காண்பித்திருக்கிறேன்.
    • அருஞ்சொற்பொருள் :

    உடையார் = அரசர்

    எறிந்து = வென்று

    பண்டாரங்கள் = கருவூலங்கள்

    ஈஸ்வரம் = சிவன்கோயில்

    பரமஸ்வாமி = இறைவன்

    சின்னங்கள் = பொருள்கள்

    ஆடவல்லான் என்னும் கல் = எடைக்கல்

    காளாஞ்சி = தாம்பூலக்கலம்

    கழஞ்சு = நகை எடைகளில் ஒன்று

    கரண்டிகை = பானை போன்ற கலம்

    இலைச்செப்பு = வெற்றிலைச்சிமிழ்

    மூழல் = மூடி

    தளிகை = தட்டு அல்லது உண்கலம்

    • கல்வெட்டின் செய்தி :

    முதலாம் இராசராசன் சேர பாண்டியரை வென்று அவர்களின் கருவூலங்களிலிருந்து  கொணர்ந்த செல்வங்களைக்கொண்டு தஞ்சைப்பெரியகோயிலுக்குப் பொன்னால் செய்யப்பட்ட பல பொருள்களைக் கொடையாக அளித்தான். கொடை அளிக்கப்பட்ட ஆண்டு இராசராசனின் இருபத்தாறாவது ஆட்சியாண்டு; (கி.பி. 1011) அவ்வாண்டில் முன்னூற்றுப் பத்தொன்பதாவது நாளும் கூட.

    • சில நுட்பங்கள் :

    நாம் முன்னூற்றுப் பத்தொன்பது என்று தற்போது குறிப்பதைக் கல்வெட்டு முன்னூற்று ஒருபத்தொன்பது என்றும், நாம் நூற்றுப்பத்து என்று கூறுவதைக் கல்வெட்டு நூற்று ஒருபத்து என்றும் குறிப்பதை நோக்குக.

    வெற்றிலைச்சிமிழுக்கு நான்கு கால்களை யாளியின் உருவத்தில் அமைத்த கலை வடிவத்தின் அழகை நோக்குக.

    அரசன் ஆட்சியில் அமர்ந்த நாளிலிருந்து ஆட்சிக்காலம் ஆண்டு மற்றும் நாள் கணக்கீடு பெறுவதைக் காண்க.

    • கிரந்தம் பற்றிய குறிப்புகள் :

    கல்வெட்டில் வரும் கிரந்த எழுத்துகளைக் கீழே இணைத்துள்ளேன். இவ்வாறு, அவ்வப்போது காணுகின்ற கிரந்த எழுத்துகளைத் தனியே தொகுத்து வைத்துக்கொள்வது நலம். பின்னால் கல்வெட்டுகளைப் படிக்கும் நேரத்தில் அடையாளம் கண்டு படிக்கத் துணை செய்யும்.

    ——————————————————

    kirantham 11

    து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.

    அலைபேசி : 9444939156.

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    ஜூன் 29, 2015

    இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு “கல்வெட்டு ஆராய்ச்சியாளர் து.சுந்தரம்” அவர்கள் 

    dorai sundaram

     

    தனது பணிநிறைவுக்குப் பின்னரும், ஆர்வத்துடன் தனது பொழுதை மக்களுக்கு உதவும் பொருட்டோ அல்லது தமிழ்க் கலாச்சாரத்தை உலகறியச் செய்யும் வகையிலோ தன்னார்வப்பணி செய்யும் தொண்டர்கள் பலர் பெருகி வருவது தமிழகம் பெற்ற பேறு. வல்லமையின் வல்லமையாளர் வரிசையில் அவர்களில் பலரை சிறப்பித்துப் பாராட்டி மகிழ்வதில் வல்லமை இதழும் பெருமை அடைந்து வருகிறது. அந்த வரிசையில் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டப் படுபவர் கோவையைச் சேர்ந்த கல்வெட்டு ஆராய்ச்சியாளர் திரு. து.சுந்தரம் அவர்கள். இவர் அவினாசி பள்ளியிலும், கோவை அரசு கலைக்கல்லூரியிலும் படித்து, பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணியாற்றியவர். நடுவணரசுப் பணிநிறைவுக்குப் பின்னர் தொல்லியல் ஆர்வமும் கல்வெட்டறிவும் அமையப்பெற்றதால் கல்வெட்டுகளைத் தேடிச் சென்று, அவற்றை ஆராய்ந்து, தகவலைப் படித்து, கல்வெட்டுகளைப் படமெடுத்து, அவற்றைப் பற்றி தானறிந்த விவரங்களை “கொங்கு கல்வெட்டு ஆய்வு” என்ற தனது வலைத்தளத்தில் தொகுத்து பதிவு செய்து வருகிறார். அத்துடன் “கல்வெட்டு எழுத்துகள் கற்போம்” என்ற தொடரின் வழியாக கல்வெட்டுகளை எப்படிப் படிப்பது என்று கல்வெட்டுகளைப் படிக்கும் பயிற்சியை வழங்கும் பாடங்களையும் தொடர்ந்து எழுதி வருகிறார். தமிழக வரலாற்றில், கல்வெட்டுகளில் ஆர்வம் உள்ள எவரும் அவரது பதிவுகளைத் தொடர்ந்து படிப்பதில் பயனடைவார்கள் என்பதில் ஐயமில்லை.

    இவரது இரு பதிவுகளில் இருந்து கருத்தைக் கவர்ந்த தகவல்களும் படங்களும் தொகுக்கப்பட்டு வல்லமை வாசகர்களுக்காக இங்கு வழங்கப்படுகிறது. விவரமான கட்டுரைகளை அவரது “கொங்கு கல்வெட்டு ஆய்வு” வலைத்தளத்தில் படிக்கலாம். தனது கல்வெட்டு பயணத்தை விவரித்து, கல்வெட்டு பற்றி சேகரித்த செய்திகளை படங்களுடனும் விளக்கங்களுடனும் இவரது கட்டுரையின் முதல்பகுதியில் அறியத் தரும் திரு. து.சுந்தரம் அவர்கள், கட்டுரையின் பிற்பகுதியை கல்வெட்டுப் பாடத்திற்காக ஒதுக்கி, அதில் கல்வெட்டின் வரிகளைக் கொடுத்து அவற்றைப் படிக்கும் முறையைக் குறிப்பிட்டு விளக்கமும் தருகிறார். இனி, அவர் கட்டுரையிலிருந்து …

    இராசகேசரிப்பெருவழி (The Rajakesari Highway) 

    இராசகேசரிப்பெருவழி, கல்வெட்டு:

    … தமிழகத்தின் மிகப்பழமையான பெருவழி என்று அறியப்படும் “இராசகேசரிப்பெருவழி” கொங்கு நாட்டில் அமைந்திருந்தது கொங்கு நாட்டின் பழமைக்கும் பெருமைக்கும் சான்றாகும். இராசகேசரிப்பெருவழி இந்திய நாட்டிலேயே மிகப்பழமையான சாலை என்று தொல்லியலார் கருதுகின்றனர்…

    … இராசகேசரிப்பெருவழிக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வு எதிர்பாராது நிகழ்ந்த ஒன்று. 1976 –ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6-ஆம் தேதி இக்கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. கண்டுபிடித்துக் கல்வெட்டினைப் படித்து வெளிக்கொணர்ந்தவர் முனைவர் பூங்குன்றன் ஆவார்…

    rajakesari peruvazhi stone inscription-file photo

    கல்வெட்டுப்பாடம்:
    … “இக்கல்வெட்டில் மூன்று முறை நிழல் என்ற சொல் பயின்றுவருகிறது. இங்கு பயன்படுத்தப்பெறும் நிழல் என்ற சொல்லின் பொருளை விளங்கிக்கொள்ள கேரள மாநிலச் செப்பேடுகள் மற்றும் கல்வெட்டுகள் ஆகியவற்றில் கிடைக்கும் சான்றுகளை அணுகவேண்டும். அந்த ஆவணங்களில் நிழல் என்ற சொல் நிழற்படை (Shadow Army) என்ற பொருளில் கூறப்பெறுகின்றது. அரசனைப் பாதுகாக்க இப்படை பயன்படுத்தப்பெற்றது. பெருவழிக் கல்வெட்டிலும் “நிழல்” என்ற சொல் (Shadow Army) என்ற பொருளில் வழங்கப்பெற்றிருக்கவேண்டும். நிழற்படை அரசனைமட்டும் பாதுகாக்கவில்லை. பெருவழியைக் கண்காணிக்கவும் செய்தது. மக்களோடு மக்களாக வீரர் என்று தெரியாவண்ணம் மறைந்து நின்று பெருவழியைக் கண்காணித்தனர் என்பதாகப் பூங்குன்றன் அவர்கள் கருத்துத் தெரிவித்தார்…

    தமிழக அரசர்கள் தங்கள் ஆட்சிக்கு உதவும் வகையில் நிழற்படை என்ற ஒரு படையை வைத்திருந்தார்கள் என்பதே பலருக்கு புதிய செய்தியாக இருக்கும். அடுத்து,

    பெள்ளாதி – நடுகல் சிற்பம் 

    புலிகுத்திக்கல்:

    … ஒரு தோட்டத்தில் அமைந்துள்ள நடுகல் சிற்பத்தைக்காணச்சென்றோம். இந்த நடுகல் சிற்பம் புலிகுத்திக்கல் என அழைக்கப்படுகிறது. கல்வெட்டுடன் கூடிய இந்நடுகல் பற்றி மேற்சுட்டிய தொல்லியல் துறைக்கல்வெட்டு நூலில் (தொடர் எண்: 936/2003) குறிப்பிடப்பெறுகிறது. மறவர்களுக்கு நடுகல் எடுக்கப்பட்டதைச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. போரில் இறந்துபட்ட வீரர்களுக்கும், முல்லை நிலப்பகுதியில் ஆனிரை கவர்தலிலும், மீட்டலிலும் ஈடுபட்டு இறந்த வீரர்களுக்கும் நடுகல் நட்டு மக்கள் வணங்கினர். (ஆனிரையில் ஆடுகளும் அடங்கும் எனலாம்) கோவைப்பகுதி பழங்காலத்தே பெருமளவில் முல்லை நிலப்பகுதியாக விளங்கியமையால் பட்டிகளில் ஆனிரை காத்த வீரர்கள் ஆடுமாடுகளைத் தின்னவரும் புலிகளுடன் போரிட்டு மடிவதுண்டு. (புலியைக்கொன்ற பின்னரே வீரன் மடிகிறான்) அத்தகைய வீரர்களுக்கு நடுகல் எடுத்து வணங்கினர். கோவைப்பகுதியில் இவ்வகை நடுகற்கள் புலிகுத்திக்கல் என்னும் பெயரால் அழைக்கப்படுகிறன. இக்கற்களில் வீரன் புலியைக் குத்திக்கொல்லும் காட்சி புடைப்புச்சிற்பமாகச் செதுக்கப்பட்டிருக்கும். இந்நடுகற்கள் பெரும்பாலும் எழுத்துகள் பொறிக்கப்படாமல் இருக்கும். அரிதாகச் சில நடுகற்கள் எழுத்துப்பொறிப்பைக்கொண்டிருக்கும். நாங்கள் பார்த்தது எழுத்துடைய நடுகல் ….

                        kalvettukalvettu2

    கல்வெட்டுப்பாடம்:
    … நல்ல வெண்மையான நிறத்துடன் ஏறத்தாழ நான்கு அல்லது நாலரை அடி உயரத்தில் உள்ள இக்கல்லில் வீரன் புலியுடன் போரிட்டுக் கொல்லும் காட்சி பொறிக்கப்பட்டுள்ளது. சிற்பத்தின் கீழே ஆறுவரிகளில் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. வீரனின் தலையில் தலைப்பாகை; காதுகளில் காதணிகள்; கழுத்திலும் அணிகள். கைகளில் தோள்வளை காணப்படுகிறது. வீரனின் இடைப்பகுதியில் இடைக்கச்சு. கால்களில் கழல்கள். வீரன் தன் வலக்கையால் நீண்ட வாளைப் புலியின் நடுமார்பில் பாய்ச்சிய நிலையில் வாள் புலியின் உடலைக் குத்தி உடலின் மறுபுறம் வெளிவந்த தோற்றம். இடக்கை புலியின் முகத்தருகே நெருங்கிய நிலையில் கைவிரல்கள் தோன்றாதவாறு காணப்படுவதால் இடக்கையில் இருந்த குறுவாள் புலியின் வாய்ப்பகுதியில் நுழைந்துவிட்டது புலனாகிறது. இடைக்கச்சில் குறுவாள் காணப்படாதது இதை உறுதிப்படுத்துகிறது. (வீரர்களின் சிற்பங்களில் இடையில் குறுவாள் தப்பாது இடம் பெறுகிறது.) புலி நின்ற நிலையில் ஒரு காலை வீரனின் தொடைப்பகுதியில் தாக்குகிறது. புலியின் நிமிர்ந்து நிற்கும் வால் புலியின் சினவெறியைக்காட்டும் எனக் கல்வெட்டு அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர் …

    மேலும்,
    கல்வெட்டு எழுத்துகள் கற்போம் 
    மதுரை அரண்மனை
    சுமை தாங்கி
    போன்ற பதிவுகளும் சுவையான வரலாற்றுச் செய்திகள் பல அடங்கியவை.

    தொல்லியல்துறை சொற்பொழிவுகளுக்கு சென்று அங்கு அத்துறை அறிஞர்களின் உரையில் கிடைக்கும் தகவல்களையும் திரு. சுந்தரம் தனது வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார். ஆர்வத்துடன் தான் திரட்டும் தொல்லியல் செய்திகளை அனைவருக்கும் உதவும் வகையில் பதிவு செய்து, கல்வெட்டுகளைப் படிக்க பயிற்சியும் அளித்துவரும் திரு. சுந்தரம் தொடர்ந்து இப்பணியைச்செய்து தமிழக வரலாற்றைப் பற்றிய விரிவான பார்வையை பலரும் பெற உதவுமாறு தொடரவேண்டும் என்று பாராட்டி வாழ்த்துவதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி கொள்கிறோம்.

     

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

     

    தொடர்பு கொள்ள:
    திரு. து.சுந்தரம்,
    கல்வெட்டு ஆராய்ச்சியாளர்,
    21, கிரீன்வியூ டெலிகாம் காலனி,
    விளாங்குறிச்சி சாலை,
    பீளமேடு, கோவை-641 004.

    அலை பேசி: 9444939156.
    மின்னஞ்சல்: doraisundaram18@gmail.com
    வலைத்தளம்: கொங்கு கல்வெட்டு ஆய்வு
    கூகுள் + : https://plus.google.com/116958920038237666409/

     

    படங்களும் தகவல்களும் வழங்கிய கொங்கு கல்வெட்டு ஆய்வு  இணையதளத்திற்கு நன்றி.

    Share