கல்வெட்டு எழுத்துகள் கற்போம்  பகுதி-1

து.சுந்தரம், கோவை

அலைபேசி:     9444939156.

 

         கோயில்கள். வரலாற்றுக் கருவூலங்களுள் சிறப்பிடம் பெறுபவை. வரலாற்று ஆவணங்களான கலவெட்டுகளைத் தம்மகத்தே பொதித்து வைத்துள்ள களஞ்சியங்கள். நினைத்தவுடனே கல்வெட்டுகளைப் பார்க்க வாயில் திறந்து காத்திருக்கும் எளிமை அகங்கள். கோயில்கள் இல்லையேல் தொல்லியல் துறையே இல்லை எனலாம்.

         கோயில்களுக்குச் செல்கிறோம். கோயிற்சுவர்களில் ஏதோ எழுதப்பட்டுள்ளதைக் கண்கள் பார்க்கின்றன. மனமோ அறிவோ அவற்றைப் பொருட்படுத்துவதில்லை. கல்வெட்டுகளில் காணும் எழுத்துகள் தமிழ் எழுத்துகள்தாம் என்றுகூட அறிந்திருப்பதில்லை. பெரும்பாலான நிகழ்வு இது. ஆனால், இதற்கு விலக்கு உண்டு. பலர் இக்கல்வெட்டுகள் பற்றிச் சற்றே எண்ண முற்படுகின்றனர். ஆனால் மேலே முயலுவதில்லை. கல்வெட்டுகளைப் பற்றிய அறிவு குடத்துக்குள் வைத்த சிறு விளக்கொப்ப வெளிச்சம் பரப்பாமலே மறைந்துவிடுகிறது.

         இக்கட்டுரை ஆசிரியரின் நிலையும் மேற்சொன்னவாறுதான். சிறுவயது முதல் பார்த்துவரும் கல்வெட்டுகளைப்பற்றிய ஒரு விழிப்பு, பணி ஓய்வுக்குப்பிறகு (அகவை அறுபதுக்கு மேல்) ஏற்படுகிறது. முயற்சி தொடர்கிறது. தமிழகத் தொல்லியல் கழகத்தின் தொடர்பு ஏற்படுகிறது. அங்கு, மூத்த அறிஞர்கள், கல்வெட்டறிவை இளைஞர்களுக்கு எடுத்துச் செல்லுங்கள் எனக்கூறுகின்றனர். அண்மையில், சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பதிவாளர் முனைவர் மு.முத்துவேல் அவர்களைக் காணும் வாய்ப்பு கிட்டியது. அவர் சொன்னதும் கல்வெட்டு அறிவை இளய தலைமுறைக்குச் சேர்ப்பியுங்கள் என்பதே. இந்த நோக்கமே இப்பகுதியைத் தொடங்கியமைக்குக் காரணம்.

         கல்வெட்டு எழுத்துகள் ”தமிழி” என்னும் தமிழ் பிராமி, வட்டெழுத்து, தமிழ் எழுத்து என முப்பெரும் பிரிவாக விரியும். தமிழ் பிராமியும், வட்டெழுத்தும் எங்கும் காண இயலா. அவற்றைத் தேடித்தான் போகவேண்டும். ஆனால், ஏழைக்கும் கிடைக்கும் உப்புப் போல எங்கும் கிடைப்பது தமிழ் எழுத்தே. கிடைக்குமிடம் கோயில்கள். கற்க எளிது. கற்றபின் காண எளிது. இளைய தலைமுறையினர் முன்வரவேண்டும்.

         முதல் பகுதியில், உயிர் எழுத்துகளும், மெய்  (உயிர்மெய் வடிவில்) எழுத்துகளும் கொடுக்கப்பட்டுள்ளன. க,ங,ச,ஞ,ட,ண,த,ந,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன என்னும் வரிசையை மனப்பாடமாக வைத்துப்பழகுதல் நல்லது பயக்கும். ஏனெனில் ங் எழுத்து க எழுத்துடன் இணைந்தே பார்க்கப்படும். இதுபோலவே, ஞ்-ச, ண்-ட, ந்-த, ன்-ற ஆகியன இணைந்து வருவன. இனி, பாடம் தொடர்கிறது.

கல்வெட்டு எழுத்துகள் - உயிர்

கல்வெட்டு எழுத்துகள் - மெய் 2

கல்வெட்டு எழுத்துகள் கற்போம்-பகுதி 2

                            

         முதற்பகுதியில் உயிர் எழுத்துகளையும், மெய் எழுத்துகளையும் பார்த்தோம். இனிக் காண இருப்பவை உயிர்மெய் எழுத்துகள். பெரும்பாலும் தற்போதுள்ள எழுத்துகளை ஒத்திருப்பினும், ணை, லை, ளை, னை ஆகிய எழுத்துகள் பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்துக்கு முன்பு வழக்கில் இருந்த எழுத்துகளை ஒட்டியிருப்பன. பாடம் தொடர்கிறது.

கல்வெட்டு எழுத்துகள் - உயிர் மெய் 3

கல்வெட்டு எழுத்துகள் கற்போம்-பகுதி 3

         உயிர்மெய் எழுத்துகளில் “த” எழுத்தின் இறுதிப்பகுதியையும் ”ந”, “ப”, “ம”, ”ய”, “ர” ஆகிய எழுத்துகளின் வடிவங்களையும் இப்பகுதியில் காணலாம். பாடம் தொடர்கிறது.

கல்வெட்டு எழுத்துகள் - உயிர் மெய் 4

கல்வெட்டு எழுத்துகள் - உயிர் மெய் 5

கல்வெட்டு எழுத்துகள் கற்போம்-பகுதி 4

         “ல” முதல் “ற”  வரையிலான இறுதி உயிர்மெய் எழுத்துகள் இப்பகுதியில்   தரப்பட்டுள்ளன. ஐகாரத்தைக் குறிக்கப்பயன்படும் முன்னொட்டு இரு வடிவங்களில் கல்வெட்டுகளில் பயில்கிறது. அதேபோல், னா, ணா, றா ஆகியவை பழைய வடிவில் அமைந்திருக்கும். விளக்கம் கீழ் வருமாறு:

கல்வெட்டு எழுத்துகள் - உயிர் மெய் 6

கல்வெட்டு எழுத்துகள் - உயிர் மெய் 7

கல்வெட்டு எழுத்துகள் கற்போம் – பகுதி 5


இதுவரை எழுத்துகள் முழுமையும் பார்த்தோம். இனி, நேரடியாகக் கல்வெட்டுகளின் மூலவடிவத்தில் எழுத்துகளை இனம் கண்டு, படிக்கும் பயிற்சி தொடங்குகிறது. முன்பே குறிப்பிட்டவாறு, பிராமி, வட்டெழுத்து, தமிழ் எழுத்து என மூவகை வடிவங்களைக் கல்வெட்டுகளில் காண்கிறோம். தமிழ் எழுத்துகளைப் பொதுமைப்படுத்தி, முதலாம் இராசராசன் காலத்தைச் சேர்ந்த (கி.பி. 985) எழுத்து வடிவங்களையே நாம் பயின்றோம். இக்கால எழுத்துகள் திருத்தமான வடிவும் அழகும் அமையப்பெற்றவை.  இவற்றை மையமாகக் கொண்டு பயின்றால், இதன் காலத்துக்கு முன்பு, பின்பு என எழுத்துகளின் வடிவ மாறுபாட்டைக் கண்டுணர்ந்து  பயிற்சி பெறுதல் எளிது. எனவே, தஞ்சைப் பெரியகோயில் கல்வெட்டு எழுத்துகளில் நம் பயிற்சி தொடங்குகிறது.

Kalvettu27 9

எழுத்துகளைப் படித்துத் தனியே எழுதிவைத்துக்கொண்டு, கீழே தரப்பட்ட கல்வெட்டின் பாடத்தோடு உங்கள் பயிற்சியை ஒப்பிடுக.

கல்வெட்டின்  பாடம்

—————————-

த்து ஏழு கழஞ்சேய் முக்காலே நாலு ம

த்து எண் கழஞ்சு-ஒற்றை கங்கி(ல்)

பள்ளித்தொங்கல் மகுடங்கள் திருப்ப

ழஞ்சேய் முக்காலே யிரண்டு மஞ்சாடி

சேய் முக்கால் திருப்பள்ளித்தொ

(தி)ன் கழஞ்சாக இரண்டினால் பொன்

பத்து ஒன்பதின் கழஞ்சே ஏழு ம(ஞ்)

ண்டு மஞ்சாடியுங் குன்றி – திருப்ப(ள்)

எழுத்துகளில் கவனிக்கவேண்டியவை

——————————————————

  1. எகரம், ஏகாரம் இரு எழுத்துகளும் ஒன்றே.
  2. ”ழு”, “மு”  இரு எழுத்துகளும் ஒன்றே.
  3. “னா” எழுத்தின் பழைய வடிவம்.
  4. “பொ” எழுத்தில் பின்னொட்டுக் குறியீடு “ப” எழுத்தை அடுத்து எழுதப்படாமல்

   “ப” எழுத்தோடு ஒட்டியுள்ளது.

  1. இரண்டாவது வரியில் “ஒற்றை” என்னும் சொல்லில் ஐகாரக்குறியீடு.

இன்னுமொரு கல்வெட்டு.

கல்வெட்டின் பாடம்

—————————–

VadaSuvar60 10

முதல் வரியில் கிரந்த எழுத்துகள் உள்ளன. எனவே பாடம் தரவில்லை.

இருபத்தாறாவது நாள் நூற்று

மேற்படி கல்லால் நிறை

ழஞ்சு –  நாளதினாலேய் கு

டுத்த பொன்னின் கலச

பொன்னின் தட்டம் ஒன்

ல்  நிறை ஐய்ம்பதின் க

கவனிக்கவேண்டியன

——————————

  1. “றா”  எழுத்தின் பழைய வடிவம்
  2. “ஞ்” எழுத்து முந்தைய கல்வெட்டில் உள்ள “ஞ்” எழுத்திலிருந்து

    மாறுபட்டுள்ளது.

  1. இறுதி வரியில் உள்ள “நிறை” என்னும் சொல்லில் ஐகாரக்குறியீடு

   முந்தைய கல்வெட்டில் உள்ள குறியீட்டிலிருந்து மாறுபட்டுள்ளது.

——————————————————————————————-

 

 

கல்வெட்டு எழுத்துகள் கற்போம்-6

         சென்ற பாடத்தில் நான்கு கல்வெட்டுகளின் ஒளிப்படங்களைத் தந்து அவற்றைப்படிக்கும் முறையையும் சொல்லியிருந்தேன். நீங்கள் அவ்வாறு படித்திருந்தால் உங்கள் பாடத்தைச் சரிபார்த்துக்கொள்ளுங்கள். சரியான பாடம் கீழே தரப்பட்டுள்ளது.

வரி 1 உடையார் ஸ்ரீராஜராஜதேவர் சேரமானையும் பாண்டியர்களையும் மலைநாட்டு எறிந்துகொண்ட பண்டாரங்களில் யாண்டு இருபத்தாறாவது நாள் முன்

வரி 2 னூற்று ஒருபத்தொன்பதினால் ஸ்ரீராஜராஜஈஸ்வரமுடைய பரமஸ்வாமிக்குக் குடுத்த பொன்னின் சின்னங்கள் ஆடவல்லான் என்னும் கல்லா

வரி 3 ல் நிறையெடுத்து கல்லில் வெட்டினபடி காளாஞ்சி ஒன்று பொன் ஐஞ்ஞூற்று எண்பத்து அறுகழஞ்சு – காளாஞ்சி ஒன்று பொன் அறுநூ

வரி 4 ற்று ஒருபத்து ஒரு கழஞ்சரை குடம் ஒன்று பொன் முன்னூற்று எண்பத்து இரு கழஞ்சரை குடம் ஒன்று பொன் முன்னூற்று அறுபத்து எழு

வரி 5 கழஞ்சு குட ஒன்று பொன் முன்னூற்று ஐம்பத்து ஒரு கழஞ்சு – குடம் ஒன்று பொன் இருநூற்றுத் தொண்ணூற்று நாற்கழஞ்சு – கரண்டிகைச்

வரி 6 செப்பு ஒன்று அடியும் மூழலும் உட்பட பொன் நூற்று ஒருபத்து ஒரு கழஞ்சரை இலைச்செப்பு ஒன்று யாளிக்கால் நாலும் மூழலும் உட்பட பொ

வரி 7 ன் நூற்று எண்பத்து ஐங்கழஞ்சே முக்கால் இலைச்செப்பு ஒன்று யாளிக்கால் நாலும் …. லும் உட்பட பொன் நூற்று நாற்பத்து எழு கழஞ்சு –

வரி 8 தளிகை ஒன்று அடியுட்பட (பொன்) ஆயிரத்து ஒருநூற்று முப்பத்து ஐங்கழஞ்சரை  கல …… நை ஒன்று மூக்கும் அடியும் உட்பட பொன் நானூற்று எ

சில விளக்கக் குறிப்புகள் :

  • நீலவண்ணத்தில் காட்டப்பட்டுள்ள எழுத்துகள் கிரந்த எழுத்துகள். அவற்றின் வடிவத்தை இக்கட்டுரையின் இறுதியில் காண்பித்திருக்கிறேன்.
  • அருஞ்சொற்பொருள் :

உடையார் = அரசர்

எறிந்து = வென்று

பண்டாரங்கள் = கருவூலங்கள்

ஈஸ்வரம் = சிவன்கோயில்

பரமஸ்வாமி = இறைவன்

சின்னங்கள் = பொருள்கள்

ஆடவல்லான் என்னும் கல் = எடைக்கல்

காளாஞ்சி = தாம்பூலக்கலம்

கழஞ்சு = நகை எடைகளில் ஒன்று

கரண்டிகை = பானை போன்ற கலம்

இலைச்செப்பு = வெற்றிலைச்சிமிழ்

மூழல் = மூடி

தளிகை = தட்டு அல்லது உண்கலம்

  • கல்வெட்டின் செய்தி :

முதலாம் இராசராசன் சேர பாண்டியரை வென்று அவர்களின் கருவூலங்களிலிருந்து  கொணர்ந்த செல்வங்களைக்கொண்டு தஞ்சைப்பெரியகோயிலுக்குப் பொன்னால் செய்யப்பட்ட பல பொருள்களைக் கொடையாக அளித்தான். கொடை அளிக்கப்பட்ட ஆண்டு இராசராசனின் இருபத்தாறாவது ஆட்சியாண்டு; (கி.பி. 1011) அவ்வாண்டில் முன்னூற்றுப் பத்தொன்பதாவது நாளும் கூட.

  • சில நுட்பங்கள் :

நாம் முன்னூற்றுப் பத்தொன்பது என்று தற்போது குறிப்பதைக் கல்வெட்டு முன்னூற்று ஒருபத்தொன்பது என்றும், நாம் நூற்றுப்பத்து என்று கூறுவதைக் கல்வெட்டு நூற்று ஒருபத்து என்றும் குறிப்பதை நோக்குக.

வெற்றிலைச்சிமிழுக்கு நான்கு கால்களை யாளியின் உருவத்தில் அமைத்த கலை வடிவத்தின் அழகை நோக்குக.

அரசன் ஆட்சியில் அமர்ந்த நாளிலிருந்து ஆட்சிக்காலம் ஆண்டு மற்றும் நாள் கணக்கீடு பெறுவதைக் காண்க.

  • கிரந்தம் பற்றிய குறிப்புகள் :

கல்வெட்டில் வரும் கிரந்த எழுத்துகளைக் கீழே இணைத்துள்ளேன். இவ்வாறு, அவ்வப்போது காணுகின்ற கிரந்த எழுத்துகளைத் தனியே தொகுத்து வைத்துக்கொள்வது நலம். பின்னால் கல்வெட்டுகளைப் படிக்கும் நேரத்தில் அடையாளம் கண்டு படிக்கத் துணை செய்யும்.

——————————————————

kirantham 11

து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.

அலைபேசி : 9444939156.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.