இந்த வார வல்லமையாளர்!

ஜூன் 29, 2015

இவ்வார வல்லமையாளர்
வல்லமைமிகு “கல்வெட்டு ஆராய்ச்சியாளர் து.சுந்தரம்” அவர்கள் 

dorai sundaram

 

தனது பணிநிறைவுக்குப் பின்னரும், ஆர்வத்துடன் தனது பொழுதை மக்களுக்கு உதவும் பொருட்டோ அல்லது தமிழ்க் கலாச்சாரத்தை உலகறியச் செய்யும் வகையிலோ தன்னார்வப்பணி செய்யும் தொண்டர்கள் பலர் பெருகி வருவது தமிழகம் பெற்ற பேறு. வல்லமையின் வல்லமையாளர் வரிசையில் அவர்களில் பலரை சிறப்பித்துப் பாராட்டி மகிழ்வதில் வல்லமை இதழும் பெருமை அடைந்து வருகிறது. அந்த வரிசையில் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டப் படுபவர் கோவையைச் சேர்ந்த கல்வெட்டு ஆராய்ச்சியாளர் திரு. து.சுந்தரம் அவர்கள். இவர் அவினாசி பள்ளியிலும், கோவை அரசு கலைக்கல்லூரியிலும் படித்து, பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணியாற்றியவர். நடுவணரசுப் பணிநிறைவுக்குப் பின்னர் தொல்லியல் ஆர்வமும் கல்வெட்டறிவும் அமையப்பெற்றதால் கல்வெட்டுகளைத் தேடிச் சென்று, அவற்றை ஆராய்ந்து, தகவலைப் படித்து, கல்வெட்டுகளைப் படமெடுத்து, அவற்றைப் பற்றி தானறிந்த விவரங்களை “கொங்கு கல்வெட்டு ஆய்வு” என்ற தனது வலைத்தளத்தில் தொகுத்து பதிவு செய்து வருகிறார். அத்துடன் “கல்வெட்டு எழுத்துகள் கற்போம்” என்ற தொடரின் வழியாக கல்வெட்டுகளை எப்படிப் படிப்பது என்று கல்வெட்டுகளைப் படிக்கும் பயிற்சியை வழங்கும் பாடங்களையும் தொடர்ந்து எழுதி வருகிறார். தமிழக வரலாற்றில், கல்வெட்டுகளில் ஆர்வம் உள்ள எவரும் அவரது பதிவுகளைத் தொடர்ந்து படிப்பதில் பயனடைவார்கள் என்பதில் ஐயமில்லை.

இவரது இரு பதிவுகளில் இருந்து கருத்தைக் கவர்ந்த தகவல்களும் படங்களும் தொகுக்கப்பட்டு வல்லமை வாசகர்களுக்காக இங்கு வழங்கப்படுகிறது. விவரமான கட்டுரைகளை அவரது “கொங்கு கல்வெட்டு ஆய்வு” வலைத்தளத்தில் படிக்கலாம். தனது கல்வெட்டு பயணத்தை விவரித்து, கல்வெட்டு பற்றி சேகரித்த செய்திகளை படங்களுடனும் விளக்கங்களுடனும் இவரது கட்டுரையின் முதல்பகுதியில் அறியத் தரும் திரு. து.சுந்தரம் அவர்கள், கட்டுரையின் பிற்பகுதியை கல்வெட்டுப் பாடத்திற்காக ஒதுக்கி, அதில் கல்வெட்டின் வரிகளைக் கொடுத்து அவற்றைப் படிக்கும் முறையைக் குறிப்பிட்டு விளக்கமும் தருகிறார். இனி, அவர் கட்டுரையிலிருந்து …

இராசகேசரிப்பெருவழி (The Rajakesari Highway) 

இராசகேசரிப்பெருவழி, கல்வெட்டு:

… தமிழகத்தின் மிகப்பழமையான பெருவழி என்று அறியப்படும் “இராசகேசரிப்பெருவழி” கொங்கு நாட்டில் அமைந்திருந்தது கொங்கு நாட்டின் பழமைக்கும் பெருமைக்கும் சான்றாகும். இராசகேசரிப்பெருவழி இந்திய நாட்டிலேயே மிகப்பழமையான சாலை என்று தொல்லியலார் கருதுகின்றனர்…

… இராசகேசரிப்பெருவழிக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வு எதிர்பாராது நிகழ்ந்த ஒன்று. 1976 –ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6-ஆம் தேதி இக்கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. கண்டுபிடித்துக் கல்வெட்டினைப் படித்து வெளிக்கொணர்ந்தவர் முனைவர் பூங்குன்றன் ஆவார்…

rajakesari peruvazhi stone inscription-file photo

கல்வெட்டுப்பாடம்:
… “இக்கல்வெட்டில் மூன்று முறை நிழல் என்ற சொல் பயின்றுவருகிறது. இங்கு பயன்படுத்தப்பெறும் நிழல் என்ற சொல்லின் பொருளை விளங்கிக்கொள்ள கேரள மாநிலச் செப்பேடுகள் மற்றும் கல்வெட்டுகள் ஆகியவற்றில் கிடைக்கும் சான்றுகளை அணுகவேண்டும். அந்த ஆவணங்களில் நிழல் என்ற சொல் நிழற்படை (Shadow Army) என்ற பொருளில் கூறப்பெறுகின்றது. அரசனைப் பாதுகாக்க இப்படை பயன்படுத்தப்பெற்றது. பெருவழிக் கல்வெட்டிலும் “நிழல்” என்ற சொல் (Shadow Army) என்ற பொருளில் வழங்கப்பெற்றிருக்கவேண்டும். நிழற்படை அரசனைமட்டும் பாதுகாக்கவில்லை. பெருவழியைக் கண்காணிக்கவும் செய்தது. மக்களோடு மக்களாக வீரர் என்று தெரியாவண்ணம் மறைந்து நின்று பெருவழியைக் கண்காணித்தனர் என்பதாகப் பூங்குன்றன் அவர்கள் கருத்துத் தெரிவித்தார்…

தமிழக அரசர்கள் தங்கள் ஆட்சிக்கு உதவும் வகையில் நிழற்படை என்ற ஒரு படையை வைத்திருந்தார்கள் என்பதே பலருக்கு புதிய செய்தியாக இருக்கும். அடுத்து,

பெள்ளாதி – நடுகல் சிற்பம் 

புலிகுத்திக்கல்:

… ஒரு தோட்டத்தில் அமைந்துள்ள நடுகல் சிற்பத்தைக்காணச்சென்றோம். இந்த நடுகல் சிற்பம் புலிகுத்திக்கல் என அழைக்கப்படுகிறது. கல்வெட்டுடன் கூடிய இந்நடுகல் பற்றி மேற்சுட்டிய தொல்லியல் துறைக்கல்வெட்டு நூலில் (தொடர் எண்: 936/2003) குறிப்பிடப்பெறுகிறது. மறவர்களுக்கு நடுகல் எடுக்கப்பட்டதைச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. போரில் இறந்துபட்ட வீரர்களுக்கும், முல்லை நிலப்பகுதியில் ஆனிரை கவர்தலிலும், மீட்டலிலும் ஈடுபட்டு இறந்த வீரர்களுக்கும் நடுகல் நட்டு மக்கள் வணங்கினர். (ஆனிரையில் ஆடுகளும் அடங்கும் எனலாம்) கோவைப்பகுதி பழங்காலத்தே பெருமளவில் முல்லை நிலப்பகுதியாக விளங்கியமையால் பட்டிகளில் ஆனிரை காத்த வீரர்கள் ஆடுமாடுகளைத் தின்னவரும் புலிகளுடன் போரிட்டு மடிவதுண்டு. (புலியைக்கொன்ற பின்னரே வீரன் மடிகிறான்) அத்தகைய வீரர்களுக்கு நடுகல் எடுத்து வணங்கினர். கோவைப்பகுதியில் இவ்வகை நடுகற்கள் புலிகுத்திக்கல் என்னும் பெயரால் அழைக்கப்படுகிறன. இக்கற்களில் வீரன் புலியைக் குத்திக்கொல்லும் காட்சி புடைப்புச்சிற்பமாகச் செதுக்கப்பட்டிருக்கும். இந்நடுகற்கள் பெரும்பாலும் எழுத்துகள் பொறிக்கப்படாமல் இருக்கும். அரிதாகச் சில நடுகற்கள் எழுத்துப்பொறிப்பைக்கொண்டிருக்கும். நாங்கள் பார்த்தது எழுத்துடைய நடுகல் ….

                    kalvettukalvettu2

கல்வெட்டுப்பாடம்:
… நல்ல வெண்மையான நிறத்துடன் ஏறத்தாழ நான்கு அல்லது நாலரை அடி உயரத்தில் உள்ள இக்கல்லில் வீரன் புலியுடன் போரிட்டுக் கொல்லும் காட்சி பொறிக்கப்பட்டுள்ளது. சிற்பத்தின் கீழே ஆறுவரிகளில் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. வீரனின் தலையில் தலைப்பாகை; காதுகளில் காதணிகள்; கழுத்திலும் அணிகள். கைகளில் தோள்வளை காணப்படுகிறது. வீரனின் இடைப்பகுதியில் இடைக்கச்சு. கால்களில் கழல்கள். வீரன் தன் வலக்கையால் நீண்ட வாளைப் புலியின் நடுமார்பில் பாய்ச்சிய நிலையில் வாள் புலியின் உடலைக் குத்தி உடலின் மறுபுறம் வெளிவந்த தோற்றம். இடக்கை புலியின் முகத்தருகே நெருங்கிய நிலையில் கைவிரல்கள் தோன்றாதவாறு காணப்படுவதால் இடக்கையில் இருந்த குறுவாள் புலியின் வாய்ப்பகுதியில் நுழைந்துவிட்டது புலனாகிறது. இடைக்கச்சில் குறுவாள் காணப்படாதது இதை உறுதிப்படுத்துகிறது. (வீரர்களின் சிற்பங்களில் இடையில் குறுவாள் தப்பாது இடம் பெறுகிறது.) புலி நின்ற நிலையில் ஒரு காலை வீரனின் தொடைப்பகுதியில் தாக்குகிறது. புலியின் நிமிர்ந்து நிற்கும் வால் புலியின் சினவெறியைக்காட்டும் எனக் கல்வெட்டு அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர் …

மேலும்,
கல்வெட்டு எழுத்துகள் கற்போம் 
மதுரை அரண்மனை
சுமை தாங்கி
போன்ற பதிவுகளும் சுவையான வரலாற்றுச் செய்திகள் பல அடங்கியவை.

தொல்லியல்துறை சொற்பொழிவுகளுக்கு சென்று அங்கு அத்துறை அறிஞர்களின் உரையில் கிடைக்கும் தகவல்களையும் திரு. சுந்தரம் தனது வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார். ஆர்வத்துடன் தான் திரட்டும் தொல்லியல் செய்திகளை அனைவருக்கும் உதவும் வகையில் பதிவு செய்து, கல்வெட்டுகளைப் படிக்க பயிற்சியும் அளித்துவரும் திரு. சுந்தரம் தொடர்ந்து இப்பணியைச்செய்து தமிழக வரலாற்றைப் பற்றிய விரிவான பார்வையை பலரும் பெற உதவுமாறு தொடரவேண்டும் என்று பாராட்டி வாழ்த்துவதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி கொள்கிறோம்.

 

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]

 

தொடர்பு கொள்ள:
திரு. து.சுந்தரம்,
கல்வெட்டு ஆராய்ச்சியாளர்,
21, கிரீன்வியூ டெலிகாம் காலனி,
விளாங்குறிச்சி சாலை,
பீளமேடு, கோவை-641 004.

அலை பேசி: 9444939156.
மின்னஞ்சல்: doraisundaram18@gmail.com
வலைத்தளம்: கொங்கு கல்வெட்டு ஆய்வு
கூகுள் + : https://plus.google.com/116958920038237666409/

 

படங்களும் தகவல்களும் வழங்கிய கொங்கு கல்வெட்டு ஆய்வு  இணையதளத்திற்கு நன்றி.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.