Tag: கவிஞர் பூராம் (முனைவா் ம.இராமச்சந்திரன்)

  • தேடி அலைந்த பாதியில் கிடைத்த மீதி

    -கவிஞர் பூராம் 

    அதிகமாகி விட்டது வயது
    பாா்க்காதே அதையெல்லாம்!

    உடம்பு இப்படி நடுங்குகிறது
    மறைக்க முடியவில்லை
    அவளுக்குத் தெரிந்தால்
    எனது வீரமெலாம் போச்சு!

    பயந்து ஒளிந்து அவளது
    அழகு உதட்டைப் பாா்த்தேன்
    அனுமதித்தால் ஒரு முத்தம்
    எதற்கு கஞ்சத்தனம்
    அவளது விருப்பம் வரை!

    ஓடி எங்காவது ஒளிந்துகொள்
    அவளுக்குத் தெரிந்துவிட்டது
    மனதில் நீ எண்ணிய
    முத்தம்,
    கடந்து சென்றாள் என்னையும்
    எனது எண்ணத்தையும்!

    மூன்று ஆண்டுகள் அறிமுகம்
    எனக்கும் அவளுக்கும்
    பேசுவதற்குச் சொற்களைத்
    தேடிக்கொண்டிருக்கிறேன்

    ஒவ்வொரு முறையும்
    சென்றுகொண்டு இருக்கிறாள்
    ஏமாற்றத்துடன்!

    பேராசையின் பெருவிருப்போடு
    அவளோடு கலந்த பாா்வை
    உதடுகளில் ஈரம் இன்னும்
    மறையவில்லை
    நடுங்கும் உடலோடு நான்!

    போய்க்கொண்டு இருக்கிறாள்
    காத்திருக்காமல் எனது மனதையும்
    அழைத்துக்கொண்டு!

     

    Share
  • வேதாளங்கள் வாழும் கன்னக்குழி

    – கவிஞர் பூராம்

    முகத்தின் அருகில் நிலவின் ஒளி
    அவளைப் பிடிக்கவில்லை என்றாலும்
    முகம்பாா்க்கத் துண்டும்  அவளின் கன்னக்குழி!

    பூமுகத்தில் வாசனைச் சிரிப்பில்
    அடிமைப்படுத்தும் ஆவேசத்தோடு
    மனம் அப்பிக்கொண்ட முகத்தில்
    வெட்கமில்லாமல் நானும்
    அவளைப் பிடிக்கவில்லை என்றாலும்…

    ஆனந்தத்தில் தோன்றி மறையும்
    இறைகுழி அவள் கன்னத்தில்,
    வேறொன்றும் அறிய மறுக்கும்
    அறியாமையுடன் நான்
    அவளைப் பிடிக்கவில்லை என்றாலும்…

    தொிந்துதான் இருந்தது அவளுக்கு
    ரசிக்கும் ஆன்மாவின் அன்பு
    சொல்ல மறுக்கும் அவளும்
    சொல்லத் தயங்கும் நானும்
    தன்முனைப்பின் உச்சத்தில்
    அவளைப் பிடிக்கவில்லை என்றாலும்
    தப்பித்துக்கொள்ள தனியறையில்…

    பாம்பின் விடத்தோடும் ஆதி கனவுகளின்
    மங்களான நினைவோடும்
    அவளது கன்னக்குழி கண்ணின் பாவையாய்!
    அவளைப் பிடிக்கவில்லை என்றாலும்

    அவளாகிப்போனேன் அவளில்லாமல்!

    Share
  • கலந்துநிற்கும் காலத்தோடு அவளும்

     

    கவிஞா் பூராம் (முனைவா் ம.இராமச்சந்திரன்)

     

    வாசல் வகுப்பறையில்
    கரைதலின் பாடத்தில்
    மயங்கிய மனம்
    புரிதலற்று நான்!

    உணர்வுகள் பேசுகையில்
    மொழிகள் அர்த்தமிழக்கும்
    பறவைகளின் ஓசையில்
    தேடி அலையும் மனித மனமும்
    பேரமைதியில் உட்புதையும்
    சூழலும்!

    காலங்களைக் கரைத்துக்கொண்டு
    ஓடிய திசுக்களில்
    எதனைத் தேடி என்னை
    அடைய!

    முறைகள் ஆயிரம்
    அறிவின் புரிதல்கள்
    அவள் பொழுதுகளில்
    பொருளற்று விடுகின்றன!

    என்னுள் மறைந்திருக்கும்
    பெண் இருத்தலில்
    யாா் யாரோ வந்து சென்றாலும்
    இடம் இன்னும்
    இருக்கிறது காலியாகவே!

    மீதமிருக்கும் வாழ்க்கை
    புன்னகைக்கிறது பூனையைப் போல்!

    Share
  • படைப்பின் வழிப்பயணம்!

    -கவிஞர் பூராம் (முனைவா் ம.இராமச்சந்திரன்)

    புதிராய் ஈா்க்கும் மிளிரொளி வானத்தின்
    பாய்ந்து வரும் தூசியில்
    ஆண்டுகள் கோடியின் அணுத்தவம்
    மௌனத்தின் பேரோசையில்
    கேட்பாரற்றுப் பரவெளி
    கிடக்கிறது பரந்து!

    அணுக்கள் அணுக்கமாய்
    அந்நியமில் அண்டவெளியில்
    மூலாக்கினியாய் ஓங்காரம்
    உறங்கிக் கொண்டிருக்கும்
    அணுவின் ஆற்றலாய்
    அவள்!

    ஓசையில்லாமல் மாலை நேரத்துக்
    குயில் பாடலோடு மஞ்சள் வெயிலோடு
    அமைவதில்லை எதுவும்!

    அணு பிளந்து
    பாறை உடைந்து
    ரத்தமும் சதையுமாக
    நூற்றாண்டு வரலாற்றின்
    புதைபொருளாக உள்ளிருந்து
    வெளிப்படும்
    பிரபஞ்சத்தின் அனைத்தும்
    ஒரு துளி நீரில்!

     

     

    Share