கலந்துநிற்கும் காலத்தோடு அவளும்
கவிஞா் பூராம் (முனைவா் ம.இராமச்சந்திரன்)
வாசல் வகுப்பறையில்
கரைதலின் பாடத்தில்
மயங்கிய மனம்
புரிதலற்று நான்!
உணர்வுகள் பேசுகையில்
மொழிகள் அர்த்தமிழக்கும்
பறவைகளின் ஓசையில்
தேடி அலையும் மனித மனமும்
பேரமைதியில் உட்புதையும்
சூழலும்!
காலங்களைக் கரைத்துக்கொண்டு
ஓடிய திசுக்களில்
எதனைத் தேடி என்னை
அடைய!
முறைகள் ஆயிரம்
அறிவின் புரிதல்கள்
அவள் பொழுதுகளில்
பொருளற்று விடுகின்றன!
என்னுள் மறைந்திருக்கும்
பெண் இருத்தலில்
யாா் யாரோ வந்து சென்றாலும்
இடம் இன்னும்
இருக்கிறது காலியாகவே!
மீதமிருக்கும் வாழ்க்கை
புன்னகைக்கிறது பூனையைப் போல்!