Author: ம. இராமச் சந்திரன்

  • நூல் அறிமுகம் – நிலம் பூத்து மலர்ந்த நாள்

    நூல் அறிமுகம் – நிலம் பூத்து மலர்ந்த நாள்

    முனைவர் ம. இராமச்சந்திரன்
    ஸ்ரீவித்யா மந்திர் கலை அறிவியல் கல்லூரி, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி மாவட்டம்.
    மின்னஞ்சல்: ramachandran.ta@gmail.com
    

    (நிலம் பூத்து மலர்ந்த நாள்) இந்நாவலை மலையாளத்தில் எழுதியவர் மனோஜ் குரூர், தமிழாக்கம் கே.வி. ஜெயஸ்ரீ, வம்சி பதிப்பகம் திருவண்ணாமலை.

    சங்க கால மக்களின் வாழ்வியலை நவீன மொழியோடு  எடுத்துரைக்கும் நாவல். தமிழரின் தொன்மையான பண்பாடு சங்க காலப் பண்பாடு. இதனை எடுத்துக் கூறும் அகச் சான்று சங்க இலக்கியம். சங்க கால மக்கள் மனித வாழ்க்கையை இரண்டு பிரிவாகப் பிரித்துச் சிந்தித்துள்ளனர். ஆண் பெண் உறவைக் கூறுவது அக வாழ்க்கை என்றும் மன்னர்களின் போர் வீரம் பற்றிப் பேசுவது புற வாழ்க்கை என்றும் பதிவு செய்துள்ளனர். இந்த இலக்கியப் பதிவுகள் அக்கால மக்களின் எண்ண ஓட்டங்களை மன உணர்வுகளை வரலாற்றுப் பின்புலத்தை அறிந்து கொள்ள உதவுகின்றன. இத்தகைய பின்புலத்தைக் கொண்டு எழுதப்பட்ட நாவல் இது.

    சங்கப் புலவர்கள் கபிலர், பரணர், ஒளவை இவர்கள், கடையெழு வள்ளல்களில் வேள்பாரி, நன்னன், அதியமான் போன்றோரைப் புகழ்ந்து பாடியுள்ளனர். இவர்களின் நட்புக்குப் பாத்தியப்பட்டவர்களாக இருந்து வந்தனர். நன்னனின் நட்புக்குப் பரணரும், பாரியின் நட்புக்குக் கபிலரும், அதியமானின் நட்புக்கு ஒளவையும் விளங்கியதை அவர்களின் பாடல் நமக்கு உணர்த்துகிறது.

    நவிற மலையை ஆட்சி செய்தவன் நன்னன், பறம்பு மலையை ஆண்டவன் பாரி, குதிரை மலையை ஆண்டவன் அதியமான் இவர்கள் அனைவரும் கலை இலக்கியத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர்கள், அதே வேளையில் அரசியல் போர் முதலியவற்றிலும் சிறந்து விளங்கினர். மக்களின் நலன் கருதி புலவர்களின் அன்பு பெற்றுச் செம்மையாக அரசியல் வாழ்வை முன்னெடுத்தவர்கள் இவர்கள். என்றாலும் இம்மன்னர்களின் வாழ்க்கைப் பின்புலத்தைக் கொண்டு பாணர்களின் வாழ்வியலோடு கதைக் கூறுவது இந்நாவல்.

    பாடி ஆடி மக்களையும் மன்னர்களையும் மகிழ்விப்பவர்கள் பாணர்கள். இசை கூத்து கதை என்று வாழ்ந்து வரும் பாணர்கள் வறுமையில் உழன்று புகழிடம் தேடி பயணிக்கும் பயணத்தில் இந்நாவல் தொடங்குகிறது. வறுமையின் துன்பம் தாளாமல் கொடையாளரைத் தேடியதில் நன்னன் முதலிடம் பெறுகிறான்.

    பெரும் பாணர் தலைமையில் பாணர்க் கூட்டம் பயணத்தைத் தொடங்குகிறது. இதில் கொலும்பன் குடும்பம் (கொலும்பன், மனைவி, மயிலன், சித்திரை, சீரை, உலகன்) இக்கதையின் முதன்மை கதைமாந்தர்களாகப் பின்னப்பட்டுள்ளது. நாவல் மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. முதல் பகுதி கொலும்பன் மூலமும் இரண்டாம் பகுதி சித்திரை மூலமும் மூன்றாம் பகுதி மயிலன் மூலமும் சொல்லப்படுகிறது. இவர்களின் வாழ்க்கைச் சூழலில் மனிதர்களாகப் புலவர்களும்  வள்ளல்களும் வந்து செல்கின்றனர்.

    சங்க கால வாழ்வியல் மன்னர்களில் தொடங்கி மன்னர் களில் முடியுமாறு அமைக்கப்பட்டுள்ளது. அங்கொன்றும் இங்கொன்றுமாக மக்களின் புலவர்களின் வாழ்க்கை சொல்லப்பட்டுள்ளது. இதனால் நமது சிந்தனை மன்னன், புலவர், சமூகம், மக்கள் என்று பழக்கப்பட்டு உள்ளது. இந்நிலையைத் தலைகீழாக மாற்றியுள்ளது இந்நாவல். நவீனத்துவத்தின் மாபெறும் இருப்பாக இதனைக் கூற முடியும். கொலும்பனும் சித்திரையும் மயிலனும் முதன்மை பெற்று இவர்களின் வாழ்வியல் போக்கில் புலவர்களும் மன்னர்களும் வந்து செல்வது புதுமையான நவீனமான எடுத்துரைப்பு முறையாகும்.

    பெண் கொலை புரிந்த நன்னன் என்று கூறும் போதும் பாணர்களின் சூழ்நிலையைப் பயன்படுத்தி கொலை செய்யப்படும் பாரியின் நிலையும் அதியனின் ஒதுங்கி நிற்கும் அரசியல் சூழ்ச்சியிலும் அறம் அழுத்தமாகப் பேசப்படுகிறது. மயிலனை இந்த அறம் வேறு நாட்டிற்கு  துரத்தும் அளவிற்கு வினையாற்றுவதாகக் கூறப்படும் பின்புலம் (இந்து தத்துவ மரபு) சிந்தனையைத் தூண்டுகிறது.

    நாவலை எடுத்துரைக்கும் பண்பில் ஒரு புதிர் கூடவே பயணிப்பதை வாசர்கள் அறிய முடியும். வாசகனை அடுத்து என்ன நிகழப் போகிறது என்ற தூண்டுதலைக் கடைசி வரை தொய்வில்லாமல் கொண்டு சென்றது பாராட்டத்தக்கது. மொழிபெயர்ப்பு என்ற உணர்வு சற்றும் இல்லாமல் நாவல் செம்மையாகத் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. அனைவரும் வாசிக்க வேண்டிய சிறந்த நாவல் இது.

    Share
  • வேதாளங்கள் வாழும் கன்னக்குழி

    – கவிஞர் பூராம்

    முகத்தின் அருகில் நிலவின் ஒளி
    அவளைப் பிடிக்கவில்லை என்றாலும்
    முகம்பாா்க்கத் துண்டும்  அவளின் கன்னக்குழி!

    பூமுகத்தில் வாசனைச் சிரிப்பில்
    அடிமைப்படுத்தும் ஆவேசத்தோடு
    மனம் அப்பிக்கொண்ட முகத்தில்
    வெட்கமில்லாமல் நானும்
    அவளைப் பிடிக்கவில்லை என்றாலும்…

    ஆனந்தத்தில் தோன்றி மறையும்
    இறைகுழி அவள் கன்னத்தில்,
    வேறொன்றும் அறிய மறுக்கும்
    அறியாமையுடன் நான்
    அவளைப் பிடிக்கவில்லை என்றாலும்…

    தொிந்துதான் இருந்தது அவளுக்கு
    ரசிக்கும் ஆன்மாவின் அன்பு
    சொல்ல மறுக்கும் அவளும்
    சொல்லத் தயங்கும் நானும்
    தன்முனைப்பின் உச்சத்தில்
    அவளைப் பிடிக்கவில்லை என்றாலும்
    தப்பித்துக்கொள்ள தனியறையில்…

    பாம்பின் விடத்தோடும் ஆதி கனவுகளின்
    மங்களான நினைவோடும்
    அவளது கன்னக்குழி கண்ணின் பாவையாய்!
    அவளைப் பிடிக்கவில்லை என்றாலும்

    அவளாகிப்போனேன் அவளில்லாமல்!

    Share
  • சுவரற்ற வீட்டில் எனக்கான தனியறை

    -கவிஞர் பூராம்

    உடல்பூத்து மலர்ந்த நாளொன்றில்
    காற்றின் இருத்தலைப் போலக் காமம்
    வாடையின் காற்று உள்ளத்தை உருக்குலைக்க
    இரவுகள் இங்கிதம் மறந்தொழிய
    ஊற்றெடுக்கும் உள்ளொளியில் துணைதேடி
    கனவுகளோடு நானும்

    தொடுதலின் வெற்றுக் கற்பனைகளில்
    பண்பாட்டுப் பாறையின் சுமையில்
    நிறம் மாறிய ஓவியமாக மனம்!

    துணையின் தேவையில் கண்டடைந்த
    வாழ்க்கையில் காத்திருக்கிறேன்
    முதல் காமமுத்தத்திற்காக!

    அவனோடு வாழ்ந்துவிட
    துணிந்துவிட்ட துணிச்சலில் சிறு உடைப்பு
    உதடுகளின் உரசலில் நாசியில்
    மோதிச் சென்ற வாசனை
    தன்னிலை இழந்த வயிறும் மனமும்

    காமத்தின் தேவையில்
    சேர்த்துவைத்த பொக்கிஷங்கள்
    கேட்பாறற்றுக் குப்பைத்தொட்டியில்
    முகச்சிரிப்பில் உடல் பூரிப்பில்
    கடந்துசெல்லும் ஒவ்வொரு இரவிலும்
    நகும் காலம்!

     

    Share
  • நினைவுகள்

    -கவிஞர் பூராம்

    கண்குளத்தில்  விழுந்து மூச்சடங்கி போனேன்
    இதயபிச்சியில் தேனலைந்து தொலைந்து போனேன்

    பொன்தாள் மண்ணடியில் கிடந்துறங்கும் என்னை
    நினைவிருக்க நியாயமில்லை

    உன் வாசம் போகமறுக்கும்
    நாசியில் புழுக்களோடு கதையாடல்.

    மற என்கிறது நா கூசாமல்
    பட்ட துன்பம் தெரியாது அதற்கு

    புலம்பாதே வாயை மூடு என்கிறது
    கோபத்தில் ஓங்கி அடித்தேன்
    இரத்தக்கறையோடு அது
    அவளாக மாறி

    சிறு புன்னகை வந்துபோனது
    மரணத்தைப்போல.

    Share
  • வரைந்த ஓவியத்தில் ஒளிந்துகொண்ட கோடுகள்

    -கவிஞர் பூராம்

    கடந்து சென்ற பாா்வையில்
    காற்றோடு உறவாடி காலம்காணா
    வானோடு நிலைத்திருந்து
    கண்களைக் கேட்டேன்
    காட்டு அவனது இதயத்தை என்று!

    காணும் பொருளெல்லாம் காணாமல்போக
    காணாத பொருளைக் கண்டேன்
    அவனெனும் இதயத்துள் – மாயை
    மனதுக்குத் தெரியவில்லை காற்றாய்
    கண்ணாமூச்சி ஆடுகிறது என்னோடு!

    அவனுக்கும் தெரிந்துதான் இருக்கும்
    என் தேவை, ஏற்க மறுக்கும் பாா்வையோடு
    நகர்ந்து செல்லும் பயத்தோடு அவன்!

    மரணத்தின் வாசனை சில நுகர்தல்
    அவனோடு அலைவதைக்கண்டு
    சொல்லாமல் கடந்து சென்ற அன்பு
    பாறையின் ஓவியமாக
    ஒவ்வொரு சந்திப்பிலும் அழகோடு அபிநயத்தது!

    பத்தாண்டு கோடை கழிந்து
    முதல் மழையில் பேருந்து நிறுத்தத்தில்
    எதிரெதிர் திசையில் ….

    அதே பாா்வையோடு அவன் சொன்ன
    முதல் வாா்த்தை முட்டியது உதட்டில்
    வழிந்த கண்ணீர்த்தூளியில் அவன்
    அழ மறுக்கும் கண்களில் நான்
    கொடுரமானது சமூகம்.

    Share
  • கலந்துநிற்கும் காலத்தோடு அவளும்

     

    கவிஞா் பூராம் (முனைவா் ம.இராமச்சந்திரன்)

     

    வாசல் வகுப்பறையில்
    கரைதலின் பாடத்தில்
    மயங்கிய மனம்
    புரிதலற்று நான்!

    உணர்வுகள் பேசுகையில்
    மொழிகள் அர்த்தமிழக்கும்
    பறவைகளின் ஓசையில்
    தேடி அலையும் மனித மனமும்
    பேரமைதியில் உட்புதையும்
    சூழலும்!

    காலங்களைக் கரைத்துக்கொண்டு
    ஓடிய திசுக்களில்
    எதனைத் தேடி என்னை
    அடைய!

    முறைகள் ஆயிரம்
    அறிவின் புரிதல்கள்
    அவள் பொழுதுகளில்
    பொருளற்று விடுகின்றன!

    என்னுள் மறைந்திருக்கும்
    பெண் இருத்தலில்
    யாா் யாரோ வந்து சென்றாலும்
    இடம் இன்னும்
    இருக்கிறது காலியாகவே!

    மீதமிருக்கும் வாழ்க்கை
    புன்னகைக்கிறது பூனையைப் போல்!

    Share
  • படைப்பின் வழிப்பயணம்!

    -கவிஞர் பூராம் (முனைவா் ம.இராமச்சந்திரன்)

    புதிராய் ஈா்க்கும் மிளிரொளி வானத்தின்
    பாய்ந்து வரும் தூசியில்
    ஆண்டுகள் கோடியின் அணுத்தவம்
    மௌனத்தின் பேரோசையில்
    கேட்பாரற்றுப் பரவெளி
    கிடக்கிறது பரந்து!

    அணுக்கள் அணுக்கமாய்
    அந்நியமில் அண்டவெளியில்
    மூலாக்கினியாய் ஓங்காரம்
    உறங்கிக் கொண்டிருக்கும்
    அணுவின் ஆற்றலாய்
    அவள்!

    ஓசையில்லாமல் மாலை நேரத்துக்
    குயில் பாடலோடு மஞ்சள் வெயிலோடு
    அமைவதில்லை எதுவும்!

    அணு பிளந்து
    பாறை உடைந்து
    ரத்தமும் சதையுமாக
    நூற்றாண்டு வரலாற்றின்
    புதைபொருளாக உள்ளிருந்து
    வெளிப்படும்
    பிரபஞ்சத்தின் அனைத்தும்
    ஒரு துளி நீரில்!

     

     

    Share
  • சூழல்

    கவிஞர் பூராம்

    தூரலொடு கூடிய பெருமழை
    கூட்ட நெரிச்சலில்
    அவளுக்கருகில் அவன்
    விரும்புவதில்லை இதுபோன்ற
    நெருக்கத்தை
    அவளின் பரிசம் அவனை
    விலக மறுத்தது
    அவளின் தேவையும் நிராகரிக்க மனமில்லாத
    மனதோடு அவனும்
    உடல்கள் உரசலில் இனம்புரியாத இன்பத்துடன்
    பயணத்தின் நடுவே
    சூழல் கண்காணிப்பின்
    அருவருப்பும் அவளின் புரிதலும்
    இன்பமெல்லாம் அடி வனத்திற்கு அப்பால்
    சிறிய அவமானத்துடன்
    அவள் நினைவோடு
    கடந்து செல்லும் காற்று.

    Share
  • கல்வி

    -கவிஞர் பூராம்

    பிஞ்சு விரல்கள்
    வலி தாங்காமல் மனம்

    கண்களில் குளம்
    வலிந்தோடும் கன்னத்தி்ன் நீா்
    சுட்டது என்னை

    கூன்விழுந்த முதுகு
    கவிழ்ந்த தலை
    நம்பிக்கையில்லாக் கண்கள்

    பேச மறுக்கும் வாய்
    ஓலமிடும் மௌனம்
    அவமானத்தில்  நான்

    உண்ண பசியில்லை உண்கிறேன்
    சிந்திக்க மனமில்லை படிக்கிறேன்

    எழுத்துக்களோடு ஓயாத போராட்டம்
    சொற்களோடு முடிவில்லா தொல்லை

    அன்பாய் சில பேச
    பாசமாய் பகிர்ந்துண்ண
    ஏது நேரம்
    படிக்கிறார்கள் பிஞ்சுகள்

    அம்மாவின் ஆசைக்காக
    அப்பாவின் அன்புக்காக

    Share
  • ஹைக்கூக் கவிதைகள்

    கவிஞா் பூராம்
    (முனைவா் ம.இராமச்சந்திரன்)

    1.பிழை.

    மழழை பேசும்
    வாா்த்தைகள் அனைத்தும்
    கவிதை

    2. பணமுதலை.

    உழைத்து உழைத்து
    அனாதையானது நடுத்தரவா்க்கம்
    உழைத்து உழைத்து
    வறுமையானது ஏழைவா்க்கம்

    3. குறட்டை.

    நோக்கிக் கொண்டே
    இருக்கத் தூண்டும் முகம்
    பேசிக் கொண்டே
    இருக்கத் தூண்டும் குரல்
    இரவெல்லாம் கண்விழித்த
    அசதியில் அவன்

    Share