நூல் அறிமுகம் – நிலம் பூத்து மலர்ந்த நாள்

0
முனைவர் ம. இராமச்சந்திரன்
ஸ்ரீவித்யா மந்திர் கலை அறிவியல் கல்லூரி, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி மாவட்டம்.
மின்னஞ்சல்: ramachandran.ta@gmail.com

(நிலம் பூத்து மலர்ந்த நாள்) இந்நாவலை மலையாளத்தில் எழுதியவர் மனோஜ் குரூர், தமிழாக்கம் கே.வி. ஜெயஸ்ரீ, வம்சி பதிப்பகம் திருவண்ணாமலை.

சங்க கால மக்களின் வாழ்வியலை நவீன மொழியோடு  எடுத்துரைக்கும் நாவல். தமிழரின் தொன்மையான பண்பாடு சங்க காலப் பண்பாடு. இதனை எடுத்துக் கூறும் அகச் சான்று சங்க இலக்கியம். சங்க கால மக்கள் மனித வாழ்க்கையை இரண்டு பிரிவாகப் பிரித்துச் சிந்தித்துள்ளனர். ஆண் பெண் உறவைக் கூறுவது அக வாழ்க்கை என்றும் மன்னர்களின் போர் வீரம் பற்றிப் பேசுவது புற வாழ்க்கை என்றும் பதிவு செய்துள்ளனர். இந்த இலக்கியப் பதிவுகள் அக்கால மக்களின் எண்ண ஓட்டங்களை மன உணர்வுகளை வரலாற்றுப் பின்புலத்தை அறிந்து கொள்ள உதவுகின்றன. இத்தகைய பின்புலத்தைக் கொண்டு எழுதப்பட்ட நாவல் இது.

சங்கப் புலவர்கள் கபிலர், பரணர், ஒளவை இவர்கள், கடையெழு வள்ளல்களில் வேள்பாரி, நன்னன், அதியமான் போன்றோரைப் புகழ்ந்து பாடியுள்ளனர். இவர்களின் நட்புக்குப் பாத்தியப்பட்டவர்களாக இருந்து வந்தனர். நன்னனின் நட்புக்குப் பரணரும், பாரியின் நட்புக்குக் கபிலரும், அதியமானின் நட்புக்கு ஒளவையும் விளங்கியதை அவர்களின் பாடல் நமக்கு உணர்த்துகிறது.

நவிற மலையை ஆட்சி செய்தவன் நன்னன், பறம்பு மலையை ஆண்டவன் பாரி, குதிரை மலையை ஆண்டவன் அதியமான் இவர்கள் அனைவரும் கலை இலக்கியத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர்கள், அதே வேளையில் அரசியல் போர் முதலியவற்றிலும் சிறந்து விளங்கினர். மக்களின் நலன் கருதி புலவர்களின் அன்பு பெற்றுச் செம்மையாக அரசியல் வாழ்வை முன்னெடுத்தவர்கள் இவர்கள். என்றாலும் இம்மன்னர்களின் வாழ்க்கைப் பின்புலத்தைக் கொண்டு பாணர்களின் வாழ்வியலோடு கதைக் கூறுவது இந்நாவல்.

பாடி ஆடி மக்களையும் மன்னர்களையும் மகிழ்விப்பவர்கள் பாணர்கள். இசை கூத்து கதை என்று வாழ்ந்து வரும் பாணர்கள் வறுமையில் உழன்று புகழிடம் தேடி பயணிக்கும் பயணத்தில் இந்நாவல் தொடங்குகிறது. வறுமையின் துன்பம் தாளாமல் கொடையாளரைத் தேடியதில் நன்னன் முதலிடம் பெறுகிறான்.

பெரும் பாணர் தலைமையில் பாணர்க் கூட்டம் பயணத்தைத் தொடங்குகிறது. இதில் கொலும்பன் குடும்பம் (கொலும்பன், மனைவி, மயிலன், சித்திரை, சீரை, உலகன்) இக்கதையின் முதன்மை கதைமாந்தர்களாகப் பின்னப்பட்டுள்ளது. நாவல் மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. முதல் பகுதி கொலும்பன் மூலமும் இரண்டாம் பகுதி சித்திரை மூலமும் மூன்றாம் பகுதி மயிலன் மூலமும் சொல்லப்படுகிறது. இவர்களின் வாழ்க்கைச் சூழலில் மனிதர்களாகப் புலவர்களும்  வள்ளல்களும் வந்து செல்கின்றனர்.

சங்க கால வாழ்வியல் மன்னர்களில் தொடங்கி மன்னர் களில் முடியுமாறு அமைக்கப்பட்டுள்ளது. அங்கொன்றும் இங்கொன்றுமாக மக்களின் புலவர்களின் வாழ்க்கை சொல்லப்பட்டுள்ளது. இதனால் நமது சிந்தனை மன்னன், புலவர், சமூகம், மக்கள் என்று பழக்கப்பட்டு உள்ளது. இந்நிலையைத் தலைகீழாக மாற்றியுள்ளது இந்நாவல். நவீனத்துவத்தின் மாபெறும் இருப்பாக இதனைக் கூற முடியும். கொலும்பனும் சித்திரையும் மயிலனும் முதன்மை பெற்று இவர்களின் வாழ்வியல் போக்கில் புலவர்களும் மன்னர்களும் வந்து செல்வது புதுமையான நவீனமான எடுத்துரைப்பு முறையாகும்.

பெண் கொலை புரிந்த நன்னன் என்று கூறும் போதும் பாணர்களின் சூழ்நிலையைப் பயன்படுத்தி கொலை செய்யப்படும் பாரியின் நிலையும் அதியனின் ஒதுங்கி நிற்கும் அரசியல் சூழ்ச்சியிலும் அறம் அழுத்தமாகப் பேசப்படுகிறது. மயிலனை இந்த அறம் வேறு நாட்டிற்கு  துரத்தும் அளவிற்கு வினையாற்றுவதாகக் கூறப்படும் பின்புலம் (இந்து தத்துவ மரபு) சிந்தனையைத் தூண்டுகிறது.

நாவலை எடுத்துரைக்கும் பண்பில் ஒரு புதிர் கூடவே பயணிப்பதை வாசர்கள் அறிய முடியும். வாசகனை அடுத்து என்ன நிகழப் போகிறது என்ற தூண்டுதலைக் கடைசி வரை தொய்வில்லாமல் கொண்டு சென்றது பாராட்டத்தக்கது. மொழிபெயர்ப்பு என்ற உணர்வு சற்றும் இல்லாமல் நாவல் செம்மையாகத் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. அனைவரும் வாசிக்க வேண்டிய சிறந்த நாவல் இது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *