சீலமும் நோன்பும் செறிந்த சிவப்பேறு!
ஔவை நடராசன்
சிவ பூசையிலேயே பழுத்துக் கனிந்த செந்தமிழ் மாமுனிவராகப் புகழோடு திகழ்ந்த தருமை ஆதீனக் குருமுதல்வரை அறிந்து அவர்பால் பணிந்து வணங்கிய நிலையில் ஐம்பதாண்டுகள் நினைவில் மின்னுகின்றன.
1970 ஆம் ஆண்டிலிருந்தே தியாகராய நகர் – வேளூர்த் திருமடத்தில் ஈரோட்டு அப்பா என்று அழைத்த பெருந்தகை சென்னியப்ப முதலியாரும், நானும் – என் துணைவியாரும் – பிள்ளைகளும் தம்பிரான் சாமிகளுக்கு முன்னிலையில் விருந்தோடுப் பழகியதை நினைந்து உருகுகிறேன்.
அருட்செல்வர், வாரத்துக்கு ஒருமுறையேனும் வேளூர் மடத்திற்கு வந்து தம்பிரான் சாமிகளைக் கண்டு பேசுவது வழக்கம்.
வேளூர்த் திருமடத்தைச் சென்னையிலேயே மாபெரும் மண்டபமாக உருவாக்க வேண்டுமென்று திட்டமிட்டார்கள் .
திருவாமூர்த் திருக்கோயிலுக்குப் பெருஞ்சிறப்புச் சேர்த்து முதலாண்டு விழா தொடங்கியது என் நினைவில் இப்போதும் நிழலாடுகிறது.
1971ஆம் ஆண்டு நவம்பர்த் திங்களில் திடுமென 25ஆவது குரு மகா சந்நிதானம் திருவடிப்பேறு எய்தியதைக் கேட்டுத் தமிழுலகம் கலங்கியது. சந்நிதானத்தின் திருமேனி வாரணாசியிலிருந்து வானூர்தியில் வந்ததும், அருட்செல்வர் உடனிருந்து விமான நிலையத்தில் மகத்தான ஏற்பாடுகளைச் செய்ததையும் சைவ உலகம் என்றும் மறக்காது. கதறி அழுது வீதியில் புரண்ட தம்பிரான் சாமிகளுக்கு எவராலும் தேறுதல் சொல்ல முடியவில்லை.
இராமலிங்கர் பணி மன்றத்தில் அன்பர்கள் புடைசூழ அருட்செல்வரோடு ஊரன் அடிகளாரும் இரண்டு சீருந்துகளில் தருமை சென்றதும், தம்பிரான் சாமிகள் செங்கோல் ஏற்றதும் வரலாற்று நிகழ்வுகளாகும். கசிந்துருகித் திருமுறைகளை ஓதுவதும் – சொக்கேசரைத் தொழுதபடி சிவபூசையிலேயே வாழ்வைக் கழித்ததுமாகக் குருமகா சந்நிதானத்தின் தலைமை நிறைவெய்தியது.
கால நேரம் கருதாமல் காண்போரிடம் உரையாடி மகிழ்வதிலேயே நெடுநேரத்தைச் செலவழிப்பார்கள். சிவ சிந்தனையும், சைவ சித்தாந்தப் பொருண்மையும்தான் அவருடைய உரையாடலில் மிதந்து வரும். தொண்ணுற்றைத் தொடுவது என்பது நெடிய வயதுதான். நடக்க முடியாமல் அடியவர் இருவரின் தோளைப் பற்றி மெல்லச் சோர்ந்து இடறி நடந்ததைக் கண்டு நான் கண் கலங்கினேன்.
நண்பர் தாமோதரனும் நானும் அணுக்கமாக இருந்து தியாகராய நகர் திருமடத்தில் பேசிக் கழித்த பொழுதுகள் இனி என்றும் வாரா.
குரு மகா சந்நிதானம், திருவடிப்பேறு எய்தியது, காலத்தின் நிறைவிதுதான் என்பதைக் காட்டுகிறது.
தருமையின் பெருமைச் சரிதத்தின் இருபத்தாறாவது குருமகா சந்நிதானத்தின் நெடும் புகழ் நிலைத்து நிற்கும்.