அன்பிற்கினிய நண்பர்களே!

கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

அனு பாலா எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (08.12.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “படக்கவிதைப் போட்டி – 235

 1. உதவிக்கு…

  பூமரக் காட்டில் மலைமீது
  பாவை யவளும் காத்திருக்கிறாள்,
  தாமத மானது வரவில்லை
  தலைவன் வரவைப் பார்த்திருக்கிறாள்,
  சாமரம் வீசிடும் மரக்கிளையும்
  சற்றும் அவளைத் தேற்றவில்லை,
  நாமும் தேடி உதவுவோமெனும்
  நீல வான மேகங்களே…!

  செண்பக ஜெகதீசன்…

 2. பார்வையை-விசாலமாக்கு

  பதுமையின் பார்வையில்
  பரணியும் பலிங்கு குண்டுதான்,
  உயர்ந்த எண்ணங்கள்
  உலவும் உள்ளத்தில்,
  குழப்பங்கள் என்றும்
  தெளிந்த நீரோடைதான்.
  தொலைநோக்கா பார்வையை
  அணியாத மேவியும்,
  குட்டைக்குள் குடிகொண்ட
  சிறுமீன்கள் தானோ..?
  இயற்கையின் எழிலோடு
  நம் வாழ்வியலை இணைத்து
  தரணி போற்றிடும்
  தார்மீக சிந்தனைகளை
  மனதில் விதைத்து,
  எட்டா உயரங்களையும்
  எட்டிடுவோம்..!
  சுமந்த பல கனவுகளுடன்….

  இவன்
  ராவணா சுந்தர்

 3. நல்வழி

  கள்ளிப்பால் கடந்து
  கல்வியறிவுதான் வென்று
  எட்டா அறிவுதனை
  எட்டிப் பிடித்துவிட்டு
  பட்டங்கள் பலபெற்று
  சட்டங்கள் தானறிந்து
  திட்டமிட்டு தான் வாழும்
  திறமனைத்தும் பெற்றிருந்தும்
  பெட்டை பிள்ளை என்று
  புறம் பேசித் திரிகின்றார்!

  பட்டாம்பூச்சிபோல
  சிட்டாகப் பறந்திடும் கனவை
  கிட்டாமல் செய்கின்றார்…
  வீட்டு முற்றத்தில் நிறுத்துகின்றார்!

  காரியங்கள் பல செய்ய
  காத்திருக்கும் காலத்திலும்
  காமமொன்றே காரணமாய்
  காரிகையை ஆக்குகின்றார் – நெஞ்சைக்
  காயம்தினம் செய்கின்றார்!

  உயிருள்ள பொம்மையாக
  உருவத்தைப் புணர்கின்றார்
  உணர்ச்சிகளை மிதிக்கின்றார்
  உள்ளத்தைக் காண்பதில்லை…

  விட்டுவிடுதலையாகி நினறு
  எட்டும் எல்லை தானடைந்து – வான்
  முட்டும் மலைச் சிகரம்
  தொட்டுவிடச் செய்யுமொரு
  வழிதேடி இருக்கின்றேன் – நல்
  வழிபார்த்துக் காத்திருப்பேன்…

 4. வானமே எல்லை

  சேரும் இடம் அறிந்திருந்தும்
  பாதை மாறி போனாலே
  ஊரும் வந்து சேராதே!
  அடிமேலே அடியெடுத்து
  முன்னே நடக்கையில்
  மெல்ல விரிந்திடும் பாதை
  உன் கண் முன்னே!
  போட்டு வைத்த பாதையில்
  செய்யும் பயணமதில்
  சுவாரசியம் ஏதும் இல்லை
  புதிய பாதை அமைத்து முன்னேறு
  சரித்திரம் படைத்திடுவாய்
  தடை ஏதும் இன்றியே!
  அச்சமின்றி நீ எடுத்து வைத்த
  முதல் அடி உச்சி வரை
  உனை அழைத்துவந்திட
  தயங்கி ஏன் திரும்பி பார்க்கிறாய்?
  கடந்து வந்த பாதையில்
  முளைத்த முற்கள்
  நீ மிதிக்க மடிந்து போனதே
  களிப்பு மட்டும்
  உற்சாகமாய் நின்றது நின்றதே!
  உச்சிதனை நீ தொட்ட போதும்
  சிறகை விரித்து பறந்திடு
  அடுத்த கட்டம் நோக்கி
  உனது பயணத்தை
  நம்பிக்கையோடு தொடர்ந்திடு
  அந்த நிலவும்
  நீ தொடும் தூரத்தில்
  வந்து சேர்ந்திடும்
  பறந்து விரிந்து கிடக்கும்
  அந்த வானும் உனக்கு வசப்படும்
  முயற்சிக்கு என்றும்
  இல்லையே எல்லையே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.