நெல்லைத் தமிழில் திருக்குறள்- 83
நாங்குநேரி வாசஸ்ரீ
83. கூடா நட்பு
குறள் 821:
சீரிடங் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு
மனசார இல்லாம வெளிஒலகத்துக்கு சேக்காளிமாரி நடிக்கவன், பொருளத் தாங்குததுக்கு ஒதவுதது கணக்கா தோணினாலும் பொருள வெட்டி எறிய ஒதவுத பட்டடை கணக்கா தான்.
குறள் 822:
இனம்போன் றினமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும்
பாக்குததுக்கு வேண்டியவரு கணக்கா இருந்து மனசுக்குள்ளார வேண்டாதவரா இருக்கவங்களோட சேக்க தாசியோட மனசு கணக்கா உள்ளார ஒண்ணும் வெளிய ஒண்ணுமா வித்தியாசப்படும்.
குறள் 823:
பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்
ஆகுதல் மாணார்க் கரிது
பல நல்ல நூல்களப் படிச்சிருந்தாலும் பகைய மனசுல வச்சிருக்கவன் மனசு திருந்தி நல்ல சேக்காளியாவது நடக்க ஏலாத காரியம்.
குறள் 824:
முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
வஞ்சரை அஞ்சப் படும்
சிரிச்சுப் பேசி நம்மள சீரளிக்க நெனக்கவுகளோட சேக்கயக் கண்டு பயந்துக்கிடணும்.
குறள் 825:
மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்
சொல்லினால் தேறற்பாற் றன்று
மனசு ஒத்துப்போவாம பழகுதவங்களோட வார்த்தய நம்பி எந்தக் காரியத்திலயும் எறங்கக் கூடாது.
குறள் 826:
நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை உணரப் படும்
சேக்காளி கணக்கா இனிக்க பேசினாலும் பகையாளியோட சொல்லுல இருக்க உண்மய அப்பமே உணந்துக்கிடலாம்.
குறள் 827:
சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான்
வில்லோட வளைவு தீம செய்யுததுக்குத்தான். அதுகணக்கா பகையாளி பம்மிக்கிட்டு கும்புடுதத நன்மனு நெனைக்கக் கூடாது.
குறள் 828:
தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து
பகையாளி கும்பிடுதப்போ கைக்குள்ளார கொலைசெய்யுத ஆயுதம் இருக்கும். அவன் அழுகையில வெளிவிடுத கண்ணீரும் அதுமாரிதான்.
குறள் 829:
மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து
நட்பினுட் சாப்புல்லற் பாற்று
வெளிய சேக்காளி கணக்கா பெரிசா காட்டிப்போட்டு மனசுக்குள்ளார எளக்காரமா நெனைக்கவன அவன் மொறையிலயே நாமுளும் போலியா ஒப்புக்கு சேக்காளிமாரி நடிச்சு கவுக்கணும்.
குறள் 830:
பகைநட்பாங் காலம் வருங்கால் முகநட்
டகநட் பொரீஇ விடல்
பகையாளிகூட பழகுத காலம் வருதப்போ மனசார இல்லாம மேம்போக்கா சேக்காளிமாரி இருந்துட்டு பொறவு அந்த சேக்கய உட்டுப்போடணும்.