Photo-poetry-contest-234

-மேகலா இராமமூர்த்தி

Yesmk எடுத்திருக்கும்  இந்த எழிற்படத்தை வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தெரிவுசெய்து, படக்கவிதைப் போட்டி 234க்குத் தந்திருக்கின்றார் திருமதி. சாந்தி மாரியப்பன். படக்கலைஞர், தேர்வாளர் இருவருக்கும் என் நன்றிகள்!

அட்டணக்காலிட்டு அமர்ந்து, சுந்தரப் புன்னகை வீசும் இச்சிறுவன் சிந்தை கவர்கின்றான்.

”தம்பி உன் கம்பீரம் தருகிறது பூரிப்பு!
நல்லவனாய் நீ வாழ்ந்தால்
பெற்றிடுவாய் சிறப்பு!” என்று சிறுவனை வாழ்த்தி, இப்படத்துக்குக் கவிபாடக் கவிஞர்களைக் கரங்கூப்பி வரவேற்கின்றேன்.

*****

”அறத்தின் வழியில் நடந்திடு! கள்வனையும் கயவனையும் களைந்திடு! தோல்விகளை விதைத்து உழைப்பின் துணையோடு வெற்றிக்கனி பறித்திடு” என்று சிறுவனுக்கு அறிவுரை கூறுகின்றார் திரு. ராவணா சுந்தர்.

அறி-ஆசனம்

நெகிழியின் இருக்கையில்
வீற்றிருக்கும் சுடரே,
மகுடம் சூடா மழலை வேந்தே,
தரணி ஆளும் தகுதி
உன்வசம் பிறக்க,
ஈன்றோரை மதித்து
சான்றோர் அறிவுச்சாலையில்
நீ ஒளிர வேண்டும்!
அறத்தின் வழியை
நீ அறிந்திட வேண்டும்!
இகழ்ச்சியின் இருளை
நீ கடந்திட வேண்டும்!
தூற்றும் சமூகத்தைத்
துறந்திட வேண்டும்!
சுற்றமும் சூழலும்
நட்புடன் பழக
கள்வனையும், கயவனையும்,
களைந்திட வேண்டும்!
நேர்மையின் பிடியில்,
முறுக்கேறிய திமிரில்,
பொய்ம்மைப் பொசுங்கிட வேண்டும்!
எண்ணிய எண்ணம்
உள்ளத்தில் உயர்ந்திட!
நெஞ்சுரம் நிமிர்ந்திட வேண்டும்.
தோல்விகளை விதைத்து
வெற்றிக்கனியைப் பறித்திட
எந்நாளும் உழைத்திட வேண்டும்!

*****

”சாதி அபிமானத்தில், சுயநலத் தாக்கத்தில், குறுமதிகொள் சிறியோரை
அரியாசனம் ஏற்றிவைத்து அறிவிழந்து வாழ்கின்றோம்” என்று நாற்காலியில் அமர்ந்திருக்கும் சிறுவனை வைத்து நாட்டுநிலை காட்டுகின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

நாற்காலி ஆட்டம்

வெற்று கோஷத்திலே,
வீண் வாதத்திலே,
மத மார்ச்சரியத்திலே,
சாதி அபிமானத்திலே,
சுயநலத் தாக்கத்திலே
சூழ்நிலைக் கைதியாகித்
தகுதியற்றோரைத் தேர்ந்தெடுத்தோம்
தலைவர்களை வீழ்த்திவிட்டோம்…

மன்னர் எவ்வழியோ மக்கள் அவ்வழியே…
குடியாட்சியிலோ மக்களே மன்னர் – எனவே
மக்கள் எவ்வழியோ மந்திரியும் அவ்வழியே…

தேர்ந்தெடுத்த மக்களையே
ஒரு பொழுது மேலேற்றிப் பின் கீழ்த்தள்ளி
மகாராட்டினத்தில் ஆட்டிவைக்கும்
குறுமதிகொள் சிறியோரை
அரியாசனம் ஏற்றிவைத்து
அறிவிழந்து வாழ்கின்றோம்…

கொள்கைக் கோலம் கலைந்து
பின்புலமும் களையிழந்து
எடுப்பார் கைப்பிள்ளையாய்
ஏமாற்றம் அறியாமல்
குரங்காட்டம் கண்டு
குதூகலித்து அமர்ந்துள்ளோம்!

*****

காணும்பொங்கலன்று இச்சிறுவனைக் கம்பீரமாய் அமரவைத்துக் கைப்பேசியில் படம்பிடித்தபோது தன் மனம் மலரும் நினைவுகளில் மூழ்கியதை நமக்கும் அறியத் தருக்கின்றார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ்.

மந்திரப் புன்னகை

வீதியெங்கும் வாசல் முன்னே
வண்ணக்கோலங்கள்
ஊரெங்கும் விழாக்கோலமாய்ப்
பழையன களைந்து புதிய முகம் பூண்டதே!

விளையும் பயிர் முளையிலே தெரியும்
இவன் சிரிப்பில்
விவசாயின் வெற்றி தெரியும்
தைப் பிறந்து நல்வழி பிறந்ததின் அடையாளமாய்!

புத்தாடை போட்டுப் பூமியின் அச்சாணியாய்ப்
புன்னகை பூட்டி அரியாசனம் ஏறி அமர்ந்தானே
அழியும் உலகுக்கு அன்னம் தந்த
அத்தனைக்கும் நன்றி சொல்லியே!

பிழைப்புத் தேடி ஓடி வந்தவன் பிள்ளை வந்ததும்
கூடி வாழ்ந்தால் பெறும் நன்மையை உணர்ந்திட
ஊரை நோக்கி ஓடி வந்தான்
குடும்பத்தோடு ஒன்றாய்ச் சேர்ந்திட!

காணும் பொங்கலில்
உற்றார் உறவினர்களைக்
கண்டு மகிழ்ந்திட
இத்தனை நாளாய்
இவன் கைகளில்
சிறைப்பிடித்த கைப்பேசியில்
பட்டு வண்ண வேட்டி கட்டி
கால்மேல் கால் போட்டு
இவன் முகத்தில் மலர்ந்த
மந்திரப்புன்னகையைப் படம் பிடித்தேன்
கள்ளம் கபடமில்லா இவன் சிரிப்பில்
களவு போன
குழந்தைப் பருவம் கண்டேன்
மறந்து போன
மந்திரப் புன்னகைகள்
மெல்ல விரிந்ததே நினைவுகளாய்…
மலரும் நினைவுகளாய்…

சிறுவனை வைத்து உலகியல் நடப்பை, மலரும் நினைவுகளை, அறவாழ்வின் அவசியத்தை நமக்கு உணர்த்தியிருக்கும் கவிஞர் பெருமக்களுக்கு என் பாராட்டுக்களைப் பரிசளிக்கின்றேன்.

அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

முதலிடம் பிடித்திடுவாய்…

சின்னவனே சின்னவனே சேதி கேளு
சிறந்துவாழ வழியெல்லாம் உன்னிடம் தானே,
முன்னோர்கள் சொன்னதெல்லாம் பொய்யே யல்ல
முறைப்படியே தெரிந்தவற்றைச் செயலில் காட்டு,
அன்னைதந்தை பெரியோரை மதித்து வாழ்வாய்
அடுத்தவர்க்கும் உதவும்கலை அறிந்து கொள்வாய்,
முன்னேறு பலகலையும் கற்றுத் தேர்ந்தே
முதல்நிலையில் ஆசனத்தில் அமர்வாய் நீயே…!

”சின்னவனே! அன்னை தந்தையை மதித்து வாழ்! அடுத்தவர்க்கு உதவிடு! கலைபல தேர்! அமருவாய் நீ அரியாசனத்தில்!” என்று சிறுவனின் மனத்தில் நம்பிக்கையை விதைத்திருக்கும் இக்கவிதையின் ஆசிரியர் திரு. செண்பக ஜெகதீசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.