தேடி அலைந்த பாதியில் கிடைத்த மீதி

-கவிஞர் பூராம் 

அதிகமாகி விட்டது வயது
பாா்க்காதே அதையெல்லாம்!

உடம்பு இப்படி நடுங்குகிறது
மறைக்க முடியவில்லை
அவளுக்குத் தெரிந்தால்
எனது வீரமெலாம் போச்சு!

பயந்து ஒளிந்து அவளது
அழகு உதட்டைப் பாா்த்தேன்
அனுமதித்தால் ஒரு முத்தம்
எதற்கு கஞ்சத்தனம்
அவளது விருப்பம் வரை!

ஓடி எங்காவது ஒளிந்துகொள்
அவளுக்குத் தெரிந்துவிட்டது
மனதில் நீ எண்ணிய
முத்தம்,
கடந்து சென்றாள் என்னையும்
எனது எண்ணத்தையும்!

மூன்று ஆண்டுகள் அறிமுகம்
எனக்கும் அவளுக்கும்
பேசுவதற்குச் சொற்களைத்
தேடிக்கொண்டிருக்கிறேன்

ஒவ்வொரு முறையும்
சென்றுகொண்டு இருக்கிறாள்
ஏமாற்றத்துடன்!

பேராசையின் பெருவிருப்போடு
அவளோடு கலந்த பாா்வை
உதடுகளில் ஈரம் இன்னும்
மறையவில்லை
நடுங்கும் உடலோடு நான்!

போய்க்கொண்டு இருக்கிறாள்
காத்திருக்காமல் எனது மனதையும்
அழைத்துக்கொண்டு!

 

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க