திருவிடைமருதூரில் சோழர் காலத்தில் சாக்கைக் கூத்து நாடகம் பற்றிய கல்வெட்டு
-சேஷாத்ரி ஸ்ரீதரன்
முத்தமிழில் ஒன்று நாடகத் தமிழ். இந்த நாடகக் கலை கூத்துவடிவில் சோழர் கால ஆட்சியில் கோவில்களில் நடத்தப்பெறுதற்கு வேண்டிய கொடையை நல்கி நல்லாதரவு தந்து வளர்த்ததற்கு சான்றாக உள்ளவையே கீழ் உள்ள கல்வெட்டுகள். இவை இரண்டும் திருவிடைமருதூரில் உள்ள மகாலிங்கேசுவரர் கோவில் மண்டப வடக்கு சுவரில் பொறிக்கப்பட்டுள்ளன.
- இரண்டாம் ஆதித்ய கரிகாலனின் ஆட்சியில் சாக்கைக் கூத்தனுக்கு பசிக்கு கூலியாக ஒரு வேலி நிலம்.
கல்வெட்டுப் பாடம்:
ஸ்வஸ்திஸ்ரீ பாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரி பந்மற்கு யாண்டு 4 ஆவது திருவிடைமருதில் ஸ்ரீ மூலஸ்தானத்தில் பெருமானடிகளுக்கு ஆரியக் கூத்தாட ஸ்ரீ காரியம் ஆராய்கின்ற சிற்றிங்கண் உடையான் கோயில் மயிலை ஆன பராந்தக மூவேந்த வேளாரும் திரைமூர் நாடுடையாரும் திருவிடைமருதில் நகரத்தாரும் தேவகந்மிகளும் நாடக சாலையிலேயிருந்து கித்திமறைக்காடன் ஆன திருவெள்ளறை சாக்கைக்கு நிவந்தஞ் செய்து குடுக்க என்று ஏவலால் இத்தேவர் தேவதானம் விளங்குடி நிலத்தில் பறைச்சேரி பத்து உள்பட நிலம் வேலியும் இவ்வாண்டின் எதிராமாண்டு முதல் இந்நிலங்கொண்டு தைப்பூசத் திருநாளிலே ஒரு கூத்தாடுவதாகவும், திருத்தம் ஆடின பிற்றை நாள் துடங்கி மூன்று கூத்தாடுவதாகவும், வைகாசித் திருவாதிரையின் பிற்றைநாள் தொடங்கி மூன்று கூத்தாடுவதாகவும் ஆக இந்தக் கூத்து ஏழு அங்கமும் ஆடுவதாகவும் பண்டாரத்தே பதினாற்கல நெல்லு கொற்றுப் பெறுவதாகவும் இந்நெல்லும் விலை அடைப்படி நெல்லும் கொற்றும் இரட்டி அவ்வவ் வாட்டையாடுகவும். இப்பரிசு கித்திமறைகாடனால் திருவெள்ளறை சாக்கைக்குச் சந்திராதி _ _ _ _ _
சொற்பொருள்:
காரியம் ஆராய்கின்ற – கருத்தாலோசிக்கும், consultant; சிற்றிங்கண் – தணிக்கை செய்கிற. முதுகண் என்பதற்கு எதிர்ச்சொல் ஆகுமோ; கோயில் மயிலை – ; தேவகன்மிகள் – இறைப்பணியாளர்; நிவந்தம் – கோயிற்பணி செலவு; ஏவல் – மேலிடத்துக் கட்டளை; எதிராமாண்டு – ; திருத்தம் – பத்தாம் நாள் நடைபெறும் தீர்த்தவாரி; கொற்றும் – உணவு; கூத்து – ஆடி நடிப்பது.
கல்வெட்டு விளக்கம்:
இரண்டாம் ஆதித்ய கரிகாலனின் 4 ஆம்ஆண்டு ஆட்சியில் (கி.பி. 968) திருவிடைமருதூர் மூலவருக்கு ஆரியக் கூத்தாடுவற்கான திருப்பணி பற்றி கருத்தாலோசனை செய்கின்ற தணிக்கை செய்கின்ற அதிகாரியான பராந்தக மூவேந்த வேளாரும், திரைமூர் நாட்டவரும், திருவிடைமருதூர் நகரத்தாரும், இறைபணியாளர்களும், நாகடசபையில் கூத்தாடும் திருவெள்ளறை சாக்கையான கித்திமறைக்காடன் என்பானும் இவனுக்கு பணிக்கூலி கொடுக்க மேலிடக் கட்டளையால் ஒன்று கூடி ஆலோசித்து விளங்குடியில் இவ்இறைவர்க்கு உள்ள தேவதான நிலத்தில் பறைச்சேறிபற்று உள்பட ஒரு வேலி நிலத்தை கோயிற்பணி கூலியாக ஏற்றுக் கொண்டு எதிர்வரும் ஆண்டு முதல், இதாவது, ஐந்தாம் ஆட்சி ஆண்டு முதல் தைப்பூசத்தன்று ஒரு கூத்தாடவும், தீர்த்தவாரி கழிந்து வரும் பின் மூன்று நாளும், வைகாசித் திருவாதிரைக்கு பின் மூன்று நாளும் ஆக இந்தக் கூத்து ஏழு அங்கங்கள் ஆடவேண்டும். கோயில் அலுவலகத்தில் 16 கலம் நெல், உணவு பெற்றுக் கொள்ளவும் இசைவு தரப்பட்டது. அடுத்தடுத்த ஆண்டுகளில் கூத்து நடத்த 16 கல நெல்லும், விலை அடைப்படி நெல்லும், உணவும் இரட்டிப்பாக பெற்றுக் கொள்ளலாம். இந்த வெகுமதிப் பரிசு திருவெள்ளறை சாக்கையருக்கு கித்தமறைக்காடனால் சந்திராதித்தர் வரை தொடர்வதாக என்று குறிக்கப்பட்டுள்ளது.
திருவிடைமருதூர் கோவிலில் நாடகசபை ஒன்று இருந்ததையும் அதில் மூலவருக்காக ஆண்டுதோறும் கூத்து நடைபெற ஏற்பாடு ஆனது பற்றியும் அறியமுடிகின்றது. சாக்கை கூத்து ஆடியவர்கள் பறையர்கள் என்பதால் கித்தமறைக்காடனுக்கு பறைச்சேரியில் உள்ள பற்று ஒதுக்கப்படுகின்றது. அதைக் கொண்டு அவர் பறையர் என்பதையும் அறிய முடிகின்றது. புராணத்தில் பக்த நந்தனார் தீண்டாமைக்கு ஆட்பட்டு கோயிலுக்கு வெளியே நிறுத்தப்பட்டார். ஆனால் இங்கோ கித்திமறைக்காடன் என்ற பறையர் கோயிலில் அமைந்த நாடக சபையில் கூத்து நிகழ்த்துகிறார். இவ்விரண்டு செய்திக்கும் எத்தனை முறண். இது சோழர் காலத்தில் தீண்டாமை இல்லை என்பதற்கு சான்று. எவரும் தாழ்த்தி ஒடுக்கப்கவில்லை என்பதற்கு சான்று. இதனால் இரண்டாயிரம் ஆண்டு ஒடுக்குமறை என்பது பொய்யன்றோ?
2. முதற் பராந்தகன் காலத்தில் உடுக்கை அடிப்போனுக்கு பணிக்கூலியாக நிலம்.
கல்வெட்டுப் பாடம்:
ஸ்வஸ்திஸ்ரீ மதுரைகொண்ட கோப்பரகேசரி பந்மற்கு யாண்டு 17 ஆவது திருவிடைமருதூருடையாருக்கு ஸ்ரீ காரியம் ஆராய்கின்ற குறும்பில் வாஸுதேவனார் ஆராய்ச்சியில் திரைமூர் ஸபையாரும் _ _ _ _ _ த _ _ _ ரல் நகரத்தாரும் திருக்கோயிலுடையார்களும் பதிபாத மூலத்தாரும் நாடக சாலையிலிருந்து திருவிடைமருதூருடையார்க்குத் திருஓலக்கத்து மூன்றுஸந்தியும் உடுக்கை வாசிப்பான் ஒருவனுக்கு விளங்குடி தேவர் நிலத்தில் நிவந்தமாகச் செய்த நிலம் முக்கால்.
சொற்பொருள்:
ஆராய்ச்சி – கருத்தாலோசனை, consult; பதிபாத – சிவன்கோயில் பூசகர்; திருஓலக்கம் – நாயனம், நாதஸ்வரம்.
கல்வெட்டு விளக்கம்:
முதற் பராந்தகனின் 17 ஆம் ஆண்டு ஆட்சியின் (கி.பி. 924) போது திருவிடைமருதூர் ஈசன் கோயிலில் கருத்தாலோசனை செய்கின்ற குறும்பில்லைச் சேர்ந்த வாசுதேவன் நடத்தின கருத்தாலோசணை கூட்டத்தில் பங்கெடுத்த திரைமூர் கருவறை பட்டர்களும், நகரத்தவரும், திருக்கோயில் பணியாளர்களும், சிவன்கோயில் பூசகரும் கூடி நாடக சபையில் இருந்து திருவிடைமருதூருடைய ஈசர்க்கு நாதாவரம் வாசிக்கின்ற போது மூன்று கால பூசனையின் போது உடுக்கை அடிப்பவனுக்கு விளங்குடியில் உள்ள தேவதான நிலத்தில் தானமாகக் கொடுத்த நிலம் முக்கால் பங்கு வேலி.
கூத்து, நாடகம் முதலியவை கோவிலகளில் இராசராசனுக்கு முன்பே பல்லவர் காலத்திலேயே தொடங்கி விட்டன போலும். உடுக்கை அடிப்பவர் பறையர் என்பதால் விளங்குடியில் அவருக்கு நிலக் கொடை வழங்கப்பட்டது.
பார்வை நூல்: திருவிடைமருதூர் கல்வெட்டுகள், வெளியீடு 1960, ஸ்ரீ மகாலிங்க சுவாமி தேவாதானம்.
இந்த மகாலிங்க சுவாமி தேவஸ்தானம், திருப்பதி தேவஸ்தானம் போல ஆங்காங்கே உள்ள திருக்கோயில் நிருவாகத்தார் தமது கோயில் கல்வெட்டுகளை அச்சில் ஏற்றி இருந்தால் தமக்கு இப்போது எவ்வளவோ கல்வெட்டுகள் ஆராயக்கிட்டி இருக்கும்.
மேலும் சேதிகள் அறிய https://groups.google.com/d/msg/vallamai/LC8qarAIaHU/TnHrLNH3AAAJ