Tag: கார்த்திகேயன்

  • மன நல ஆலோசனை: கேள்வி பதில்கள்

    –கார்த்திகேயன், விமலதாரணி.

     

     

    கேள்வி : 1
    என் பெயர் பல்லவி வயது 35. எனக்கு 2 குழந்தைகள். சமீபத்தில் என் கணவர் மும்பைக்கு மாற்றலாகி செல்ல நேர்ந்தது விட்டது. நான் பத்தாவது வகுப்பு வரைதான் படித்துள்ளேன். தற்போது வீட்டிற்குத் தேவையானதை வாங்கவும், பில் கட்டவும் என் குழந்தைகளை அழைத்து வரவும் நான்தான் செல்ல வேண்டியுள்ளது. (இதற்கு முன்  இந்த வேலைகளை என் கணவரே செய்து விடுவார்.) ஆனால் எனக்கு தனியே வெளியெ செல்லவே பயமாக இருக்கிறது. போவதற்கு முன் படபடப்பாகவும், இதயத்துடிப்பு அதிகமாகவும் உள்ளது. நான் என்ன செய்வது மருத்துவரை காண வேண்டுமா?

    பதில் :
    உங்கள் உடம்புக்கோ, இதயத்திற்கோ எந்த பிரச்சினையும் இல்லை, உங்களுடைய பிரச்சனை பதட்டம் (ஆன்சைட்டி ). பெரிய ஆபத்தில் மாட்டிக் கொள்ளும் போது மனிதர்களுக்கு இயல்பாய் ஏற்படக்கூடிய உடலியல் மாற்றங்கள் உங்களுக்கு  தனியாக வெளியே செல்ல வேண்டும் என்று நினைக்கும் போதே ஏற்படுகிறது. இதற்குக் காரணம், உங்களுடைய  எல்லா வெளி வேலைகளையும் தானே செய்து உங்களை பொத்தி பொத்தி வைத்திருந்த உங்கள் கணவர்தான் இதற்கு காரணம் என்றும் கூறலாம். தனியே வெளியே சென்றால் ஏற்படக்கூடிய ஆபத்துகளை முன்கூட்டியே அனுமானிப்பதும், தன்னால் அதை சமாளிக்க முடியாது என்று நம்புவதும், தான் பத்தாவது வரை மட்டுமே படித்திருப்பதால் தனக்கு தகுதி குறைவு என்ற தாழ்வு மனப்பான்மை தான் உங்களுடைய பதட்டத்திற்குக் காரணம். படிப்பிற்கும், சமயோசிதம் மற்றும் புத்திசாலித்தனத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பிரச்சனைகள் ஏற்படுமோ என்று முன்கூட்டியே யோசிக்காமல் வரும் போது பார்த்து கொள்ளலாம் என்று முதலில் நினையுங்கள். எந்த ஒன்றை செய்ய பயமாக இருக்கிறதோ அதையே திரும்ப திரும்ப செய்யும் போது பயம் நீங்கி விடும் எனவே சின்ன சின்ன விஷயங்களுக்காக,  உங்களுக்கு பிடித்த விஷயங்களுக்காக அடிக்கடி வெளியே சென்று வர பழகுங்கள். வெளியில் இருப்பர்களுக்கெல்லாம் வேறு வேலையே இல்லை உங்களை கவனிப்பது தான் அவர்களுக்கு முக்கியம் என்ற உங்கள் கற்பனையை ஒதுக்கித் தள்ளுங்கள். உங்களுடைய திறமைகளை பாசிட்டிவ் விஷயங்களை பட்டியலிட்டு அவற்றை வளர்த்துக் கொள்ளுங்கள். இவற்றை செய்தால் உங்களால் இயல்பாக வெளியே சென்று வர முடியும்.

    கேள்வி: 2
    நான் 23 வயது கல்லூரி மாணவன் நானும் என் சிறு வயது நண்பனும் சமீபத்தில் ஒரு பெண்ணை சந்தித்தோம். நாங்கள் இருவரும் அவளை காதலிக்கிறோம். இதைப்பற்றி நாங்கள் இருவரும் பேசிக் கொள்ளவில்லையென்றாலும் இந்த காதல் விவகாரத்தால் எங்களின் நட்பு கெட்டுவிடுமோ என்று பயமாக இருக்கிறது. இதற்கு எனக்கு ஒரு வழி சொல்லுங்கள்.

    பதில் :
    நீங்கள் 23 வயது நிரம்பிய கல்லூரி மாணவர் என்பதால் உணர்ச்சி வசப்படாமல் இப்பிரச்சனையை அணுகலாம். நீங்கள் முதலில் செய்ய வேண்டியது, உங்கள் நண்பருடன் பேசி அவரும் அந்த பெண்ணை காதலிக்கிறாரா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். அவரும் காதலிக்கிறார் என்றால் அடுத்து அந்த பெண்ணிடம் கேட்டு அவள் உங்கள் இருவரில் யாரை காதலிக்கிறார் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள். ஒரு வேளை உங்கள் இருவரில் யாரையுமே அவள் காதலிக்காமல் நட்போடு பழகுவதாகவும் இருக்கலாம் அல்லவா? உங்கள் நண்பருடன் பேசும் போது அவள் உங்கள் இருவரில் யாரை காதலித்தாலும் மற்றவர்  விட்டுக்கொடுத்து விட வெண்டும் என்று முடிவெடுத்துக் கொள்ளுங்கள். முடிவு செய்வதுடன், முடிவை செயல்படுத்தவும் தயங்கக் கூடாது. சிறு வயது நட்பை மதிப்பவரானால் இந்த முடிவை ஏற்றுக் கொள்வதில் தயக்கம் இருக்காது.

    கேள்வி : 3
    என் வயது 40. எனக்கு கடந்த 10 வருடங்களாக முதுகு வலி இருக்கிறது. சிறிது நாட்களுக்கு முன் என் தம்பியுடன் சிறிது மனஸ்தாபம் ஏற்பட்டு அதிக கோபப்பட்டு விட்டேன். அதன் பிறகு என் முதுகு வலி அதிகமாகிறது. அதிக உணர்ச்சி வசப்படும் போதெல்லாம் முதுகு வலி அதிகமாவதாகவும் உணர்கிறேன். என் உணர்வு உண்மையானது தானா? அல்லது இது என் கற்பனையா?

    பதில் :
    உங்கள் உணர்வு உண்மையானது தான். நீடித்த முதுகு வலி என்பது எலும்புத் தேய்மானத்தினால் ஏற்படலாம். எலும்பு தேய்வதால் எலும்பின் பலம் குறையும் போது அதை சுற்றியுள்ள தசைகளின் சுருங்கி விரியும் தன்மை குறைந்து விடும். அதனால் தான் முதுகு வலி போன்ற மூட்டு வலிகளுக்கு அம்மூட்டை சுற்றியுள்ள தசைகளை உறுதியாக்கும் உடற்பயிற்சிகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பர். எனவே உங்கள் முதுகு தசை வேலை பளு அல்லது திடீர் வேலை காரணமாக சுருங்கி மீண்டும் விரிவடையாமல் போனாலோ அல்லது விரிவடைந்து சுருங்காமல் போனாலோ வலி ஏற்படும். இது உடல் ரீதியாக வலிக்கான காரணம். இதற்கு மன ரீதியான காரணமும் இருக்கிறது. நாம் மனதளவில் பயம், கோபம், பதட்டம் போன்ற உணர்வுகளை அடையும் போது நம் நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டினால் உடலில் பல உடலியல் மாற்றங்கள் ஏற்படும். அவற்றில் ஒன்று தான்  தசைகள் சுருங்குவது ஆபத்தான தருணங்களில் தான் இந்த உடலியல் மாற்றம் பெரும்பாலும் ஏற்படும். ஆபத்திலிருந்து காத்துக் கொள்ள ஓடவோ, சண்டையிடவோ தசைகளை தயார்படுத்த நம் உடல் எடுக்கும் எச்சரிக்கை நடவடிக்கையே இதுவாகும். நீங்கள் கோபம், பதட்டம் போன்ற உணர்வு நிலைகளில் அதிக நேரம் இருக்கும் போது உங்கள் உடலின் சில தசைகள் இவ்வாறு சுருங்கி விடுகிறது. இதனால் வலி ஏற்படுகிறது. தசை வலியை சரி செய்ய மருந்து, ஓய்வு, சுடு நீர் அல்லது ஐஸ் கட்டி ஒத்தடம் தேவை. அதே நேரம் மனதிற்கு மனம் தளர்த்தும் பயிற்சிகளை செய்தல் வேண்டும். ஒரு நல்ல மன நல ஆலோசகரை சந்தித்து இப்பயிற்சியை கற்றுக் கொள்ளலாம்.

    கேள்வி :4
    என் வயது 42 என் கணவரின் வயது 45. என் கணவர் மிகவும் நல்லவர். எங்களுக்குள் இணக்கமான உறவே இருந்து வந்துள்ளது. ஆனால் சமீப காலமாக அவர் நடத்தையில்  மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் அலுவலத்தில் உடன் பணிபுரிபவர் மூலம் அவருடன் வேலை செய்யும் பெண்ணிற்கும், இவருக்கும் தொடர்பு இருப்பதாக தெரிய வந்தது. அந்த பெண் இரண்டு வருடங்களுக்கு முன் கணவரை இழந்தவர். இதைப் பற்றிக் என் கணவரிடம் கேட்ட போது ஆம் என்று ஒத்து கொண்டாலும் அவரால் அவளை விட முடியவில்லை. அவள் என் கணவருக்கு ஏதோ செய்வினை செய்து விட்டதாக நண்பர்கள் கூறுகின்றனர். இதை நினைத்து எனக்கு பயமாக இருக்கிறது. நான் என்ன செய்வது?

    பதில் :
    உங்கள் கணவர் நல்லவர். உங்களுடன் இணக்கமாக இருக்கிறார் என்பதால் நடந்த தவறுக்கு அந்த பெண்ணை மட்டும் குற்றம் கூறும் ஒரு மன நிலை தான் அவள் செய்வினை செய்து விட்டாள் என்று கூறுவதெல்லாம். இந்த விஷயத்தில் மற்றவர்களிடம் குறிப்பாக அவருடைய நண்பர்களிடம் இதைப் பற்றி விசாரிப்பது கூடாது. இப்பிரச்சனையை உங்கள் கணவர் மற்றும் அந்த பெண்ணுடன் பேசி தான் சரி செய்ய வேண்டும். உங்கள் கணவர் இந்த விஷயத்தை ஒத்துக் கொண்டதிலிருந்து அவர் தெரிந்தே தான் அந்த பெண்ணுடன் பழகியிருக்கிறர் என்பது தெரிகிறது. திடீரென்று அந்த பெண் கணவரை இழந்ததால் அவர் மேல் ஏற்பட்ட இரக்கம் நாளாவட்டத்தில் இம்மாதிரி உறவில் முடிந்திருக்கும். எப்படியிருந்தாலும் இந்த முறையற்ற உறவை உங்கள் கணவரும் அந்த பெண்ணும் தொடர்வது பல பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும். எனவே இப்பொழுதே அவர்கள் இருவருடனும் சண்டை போடாமல் பேசி அந்த உறவை நிறுத்தி விடச் சொல்லுங்கள். நடந்ததை மறந்து விட்டு இனி நல்ல முறையில் வாழலாம் என்று கணவருக்கு எடுத்துச் சொல்லுங்கள். முடியாவிட்டால் மூவரும் மன நல ஆலோசனை எடுத்துக் கொள்வது உகந்தது.

     

     

     

     

     

    படம் உதவிக்கு நன்றி:  www.123rf.com

    Share
  • மன நல ஆலோசனை: கேள்வி பதில்கள்

    –கார்த்திகேயன், விமலதாரணி.

     
     
     
     

    கேள்வி : 1
    எனக்கு வயது 24. என் அண்ணன், என் அக்காவின் மகளை முறைப்படி  திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. திருமணமான மூன்றாம் ஆண்டில் என் அண்ணன் ஒரு விபத்தில் காலமாகி விட்டார். இதனால் என் அக்கா பெண் 19 வயதில் விதவையாகி விட்டார்.

    இதை என்னால் பொறுக்க முடியவில்லை. ஆகையால் அந்த குழந்தையின் நலன் கருதியும் , என் அக்கா பெண்ணின் நலன் கருதியும் அவர்களை நானே திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்தேன். அவர்களுக்கு என்னை மணந்து கொள்ள விருப்பம் தான். ஆனால் இதை சிலரிடம் சொன்னேன்.

    அவர்கள் அண்ணன் மனைவியை செய்து கொள்ளவது தவறு என்கிறார்கள். நான் அவர்களை திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருக்கிறேன், இதைப்பற்றி உங்களுடைய கருத்தினை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

    பதில் :
    வட இந்தியாவில் சில குறிப்பிட்ட சமுதாயங்களில் அண்ணன் இறந்து போனால் அவரது விதவை மனைவியை கணவரின் தம்பிக்கே திருமணம் செய்து வைக்கிறார்கள். அந்த பெண்ணுக்கு 35 வயதாக இருந்து கணவரின் தம்பிக்கு அதை விட வயது குறைவாக  இருந்தாலும் மன ஒற்றுமை அடிப்படையில் திருமணம் செய்து வைக்கிறார்கள். அத்தகைய திருமணங்களில் நானே கலந்து கொண்டிருக்கிறேன்.

    கணவரை பறி கொடுத்த விதவை பெண் மனரீதியாக பாதிக்கப்பட்டிருப்பாள். அவளுக்கு மறுமணம் தேவை. அதே நேரம் மறுமணம் செய்து புதிய வீட்டிற்கு புதிய குடும்பத்திற்கு அவள் செல்லும் போது அங்குள்ள சூழ்நிலைக்கு தக்கபடி அனுசரித்து செல்ல சிரமமாக இருக்கும். அந்த சிரமத்தை குறைக்கவே ஏற்கனவெ பழகிய வீட்டில் பழகிய மனிதருக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். தென்னிந்தியாவை பொறுத்தவரையில்  விதவை பெண்ணை கணவரின் தம்பியே திருமணம் செய்யும் பழக்கம் இப்போது தான் தோன்றி வருகிறது.. இது ஒரு நல்ல பழக்கம் தான்.

    திருமணம் என்றாலும் மறுமணம் என்றாலும் அதில் கவனிக்கத்தக்க முதல் விஷயம் மணம் புரியபோகும் ஆண் – பெண் இருவருக்குமே பிடிக்க வேண்டும் என்பது தான். உங்களுக்கும் அந்த பெண்ணுக்கும் பிடிப்பதாக நீங்கள் சொல்கிறீர்கள். அப்படியானால் நீங்கள் மகிழ்ச்சியாக இந்த மறுமண நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்.

    ➢➢➢இதில் நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் :

    அந்த பெண்ணுக்கு 19 வயது தான். ஒரு குழந்தைக்கு தாயாகி விட்டாலும் அந்த பெண் இன்னும் வாழ்க்கை புரிந்து கொள்ள முடியாதவளாக இருப்பாள் . நீங்கள் இதுவரை அண்ணி என்ற எண்ணத்தில் பழகி வந்து இருப்பீர்கள். அவரும் உங்களிடம் மைத்துனர் என்ற எண்ணத்தில் பழகி வந்திருப்பார். இனி இந்த சூழல் அடியோடு மாற வேண்டும். அண்ணி என்பதை மாற்றி மனைவி என்கிற அந்தஸ்தை முழுமையாகத் தர வேண்டும்.

    தொடக்கத்தில் குடும்பமும் சமுதாயமும் உற்றுப்பார்க்கும். அந்த பார்வையின் அர்த்ததை  புரிந்து கொண்டு ஒரு சில மாதங்கள் மிக பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும். அந்த பக்குவம் உங்கள் இருவருக்கும் இருக்கும் என்று நம்புகிறேன். இதில் எந்த அவசரமும் காட்டாமல் மற்றவர்கள் உங்களையோ அந்தப் பெண்ணையோ தப்பாக பேச வாய்ப்பு கொடுத்து விடாமல் பெற்றோர் மூலமாக நிதானமாக மறு திருமண நடவடிக்கையை மேற்கொள்ளுங்கள்.

    திருமண வாழ்க்கையை விட மறுமண வாழ்க்கை சிறப்பானது . இருவரும் இணைந்து விட்டுக் கொடுத்து கருத்தொருமித்து வாழ்ந்தாலே அந்த சிறப்பை அடைய முடியும். இல்லாவிட்டால் சிரமமானதாகி விடும்.

     
     
     
     

    கேள்வி : 2
    நான்  பிளஸ் – 2 மாணவி. வயதுக்கு ஏற்றபடி அழகாக இருக்கிறேன். ஆனால் என்னிடம் இருக்கும் ஒரு பழக்கம் என்னை பாடாய் படுத்துகிறது. நான் இப்போதும்  படுக்கையில் சிறுநீர் கழித்து விடுகிறேன். இதை நினைத்து என் மனம் சஞ்சலப்படுகிறது. இதனால் நான் உறவினர் வீடுகளில் இரவு தங்குவது இல்லை. என்னை நினைத்து என் அம்மா ரொம்ப வருந்துகிறார். என் திருமணத்திற்கு பிறகும் கணவர் வீட்டில் இப்படி ஆகி விடுமோ எனப் பயமாக இருக்கிறது.?

    பதில் :
    சகோதரி உங்கள் கடிதத்தின் பதிலுக்கு சற்று பொறுத்திருங்கள். இதே கேள்வியை ஒரு சில சிறுவர்களின் பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்காக கேட்டிருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு முதலில் பதில் தருகிறேன்.

    படுக்கையில் சிறுநீர் கழிப்பவர்களை ஆறு வயதிற்கு முன், ஆறு வயதுக்கு பின் என்று  இரண்டு வகையாக பிரிக்கலாம். 6 வயதுக்கு முன்பு என்பது இயல்பானது. பெற்றோர் சற்று சிரமம் எடுத்து கவனித்தால் நிறுத்தி விடலாம்.

    சிறுவர்கள் படுக்க போவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பு பால் கொடுக்க வேண்டும். பின்பு அவர்கள் தூங்க செல்வதற்கு முன்பு சிறுநீர் கழிக்க செய்யுங்கள். சிறுநீர் பை வற்றி விடும். அப்புறமாகத் துங்கட்டும். 15 நாட்கள் சிறுவர்களை தொடர்ச்சியாக 3 மணி நேரத்துக்கு ஒரு முறை எழுப்பி சிறுநீர் கழிக்க வையுங்கள். அவ்வாறு செய்தால் இயல்பாகவே சிறுநீர் கழிக்கும் மூட் வந்தால் சிறுவன் தானாக எழுந்து அம்மா ஒண்ணுக்கு என்று சொல்லி விடுவான்.

    சிறுவர் சிறுமிகள் தொடர்ந்து படுக்கையை நனைத்தால் attention seeking  இயல்பாகக் கூட இருக்கலாம். குழந்தைகள் மீது அதிக கவனம் எடுத்து கொள்ளாத பெற்றோரை தன் பக்கமாக ஈர்த்து என்னையும் கவனியுங்கள். இல்லாவிட்டால் இப்படித்தான் நடந்து கொள்வேன் என்பது போல் செயல்படுவார்கள். இது தான் அட்டென்ஷன் சீக்கிங்.   தாய் மீண்டும் கர்ப்பிணியாதும் முதல் குழந்தைக்கு ஒரு வித பாதுகாப்பு குறைவு ஏற்படும். அந்த பயத்தில் சிறுவர்கள் படுக்கையை நனைப்பார்கள். இப்படிப்பட்ட சிறுவர்களிடம் தாய் அதிக பாசத்தைக் காட்டி எப்போதும் நீ என் அன்பு குழந்தை என்று உணர்த்தினாலே போதும். 6 வயதுக்கு பிறகும் படுக்கையை நனைத்தால் குழந்தை நல மருத்துவரிடம் ஆலோசனை கேளுங்கள்.

    17 வயது சகோதரியின் பெற்றோரே நீங்கள் அவளை திட்டவோ, மிரட்டவோ வேண்டாம் டாக்டரிடம் அழைத்து சென்று ஆலோசனை கேளுங்கள். இது மிகச் சாதாரண விஷயம்.

     

     

    படம் உதவிக்கு நன்றி:  www.123rf.com

    Share
  • மன நல ஆலோசனை

    மன நல ஆலோசனை

    கேள்வி பதில்கள் :

    கேள்வி : 5

    எனது தோழி என்னைச் சில காலம் அண்ணா என்று அழைத்தாள். நானும் அப்படியே இருந்தேன். ஆனால் போகப் போக எங்களுக்குள் அன்பு அதிகமாகி ஒருவரை ஒருவர் விட்டுப் பிரிய முடியாத வண்ணம் உள்ளோம். ஆனால் நண்பர்கள் வட்டாரத்தில் எங்களை அண்ணன் தங்கை என்று நம்புகிறார்கள். நாங்கள் என்ன செய்வது?

    பதில் :

    புதிதாய் பார்த்துப் பழகும் ஒருவரை முறை சொல்லி அழைப்பது நம் கலாச்சாரம். என்றாலும் முறைக்காக அழைப்பது உணர்வு ரீதியாக அப்படியே  இருப்பதில்லை. உங்கள் இருவரின் உணர்வுகள் காதலாக இருப்பதால் அதை ஏற்றுக் கொள்வதில் தவறொன்றுமில்லை. உங்கள் நண்பர்களை அழைத்து ஒரு விருந்து கொடுத்து இருவரும் உங்கள் நிலையை  அவர்களுக்கு விளக்கிவிடுங்கள். புரிந்து கொள்பவர் நண்பர்களாக தொடரட்டும். புரிந்து கொள்ளாதவர்களைப் பற்றி கவலைப் பட வேண்டாம். நீங்கள் இருவரும் உங்கள் உணர்வுகளை உண்மையாக புரிந்து கொள்வதே முக்கியம்.

    கேள்வி : 6

    நானும் என் கணவரும் வேலைக்குப் போகிறோம். என் 8 வயது மகன் உறவுக்காரப் பெண் ஒருவரின் பராமரிப்பில் இருக்கிறான். அந்தப் பெண் எங்கள் வீட்டோடு இருக்கிறாள். அவள் என் மகன் வீட்டிலிருந்து பணத்தைத் திருடுவதாகக் கூறினாள். ஒரு நாள் இதை நானும் கண்டுபிடித்தேன். அவனிடம் இதைப் பற்றி கேட்டு கண்டிக்கலாமா? கண்டித்தால் பிரச்சனை அதிகமாகுமா?

    பதில் :

    குழந்தை பணத்தை எடுத்ததை தெரிந்து கொண்டு உடனடியாக அவனை அடித்தோ, திட்டியோ கேட்காமல் இருந்ததிலிருந்து உங்களின் பக்குவமான மனப்பான்மை தெரிகிறது. இதே பக்குவத்துடன் குழந்தையிடம் மென்மையாக தனிமையில் இதைப்பற்றி கேளுங்கள். பணம் அங்கே இருக்கிறது எனவே எடுத்துக் கொண்டேன் என்பதாக அவன் பதில் இருந்தால் பணத்தை ஆங்காங்கே போட்டு வைப்பது உங்கள் தவறு. தெரியாமல் எடுத்திருந்தால் அது திருட்டு அப்படி செய்யக் கூடாது என்பதை எடுத்துச் சொல்லுங்கள். அவன் எதற்காக எடுக்கிறான் என்பதைத் தெரிந்து கொண்டு அவன் தேவையை நீங்களாக பூர்த்தி செய்யுங்கள். குழந்தைகள் பணத்தைத் தானாகக் கையாள்வதால் ஏற்படக்கூடிய அபாயங்களை அவனுக்குப் புரிய வையுங்கள். அவன் செய்வது தவறு ஆனால் அதை மாற்றிக் கொள்ளலாம் என்பதை அவனுக்கு பக்குவமாகப் புரிய வையுங்கள். போதுமான அன்பு கிடைக்கவில்லையென்றாலும் கூட சில குழந்தைகள் பெற்றோருக்கு பிடிக்காத விஷயத்தை செய்ய முற்படும். எனவே அவனுடன் அதிக நேரத்தை செலவு செய்யுங்கள். அன்போடு கூறினால் குழந்தைகள் சுலபமாக திருந்தி விடுவார்கள்.

     கேள்வி :7

    என் குழந்தை (வயது 3) வீட்டில் எதைக் கொடுத்தாலும் சாப்பிட மறுக்கிறான். தொல்லை செய்து அடித்துதான் ஊட்ட வேண்டியுள்ளது. அதுவே உறவினர் நண்பர் வீடுகளுக்குச் செல்லும் போது அங்கு எதைக் கொடுத்தாலும் அலைந்து சாப்பிடுகிறான். இதனால் எனக்கு அவமானமாக இருக்கிறது. என்ன செய்யலாம்?

    பதில் :

    நீங்கள் அவமானமாக  நினைப்பதற்கு இதில் ஒன்றுமில்லை. குழந்தைகள் வீட்டில் சாப்பிடும் போது பொதுவாக ஒரே மாதிரியான உணவைத் தான் சாப்பிடுகிறார்கள். உங்கள் ரசனை  மற்றும் தேவைக்கேற்ப உணவை சமைத்து அதை ஊட்டுவீர்கள். அது குழந்தைகளுக்கு வெறுப்பாக இருக்கும். ஆனால் வெளியில் செல்லும் போது வெளியே செல்கிறோம் என்ற குஷியான மன நிலையில் குழந்தைகள் இருப்பார்கள். மற்றொன்று  மற்ற வீடுகளில் அவர்களின் உணவு மற்றும் கொடுக்கும் முறை வித்தியாசமாக இருக்கும் போது குழந்தைகள் அதை விரும்பி உண்பார்கள். எவ்வளவு விலையுர்ந்த பொம்மையாக இருந்தாலும் சிறிது நாளில் தூக்கிப் போட்டு விட்டு உடைந்து போன பழைய பொம்மைக்காக குழந்தைகள் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டுக் கொள்வதை பார்த்திருப்பீர்கள். குழந்தைகள் வளரும் வயதில் புதிது புதிதாய் கற்கவும் அனுபவிக்கவும் விரும்புவார்கள். எனவே குழந்தையின்  ரசனைக்கேற்ப உணவை வித்தியாசமாக தயாரித்து வித விதமாய் பரிமாறுங்கள். நிறைய பளிச்சென்ற நிறங்கள் உணவில் (காய்கறிகள், பழங்கள், பருப்புகள் மூலம்) இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். வடிவங்களை வித்தியாசமாக (வடை, சப்பாத்தி வட்டமாகத்தான் இருக்க வேண்டுமா என்ன?) செய்து கொடுங்கள். குழந்தைகளுக்காக சிறிது மெனக்கெட்டால் போதும், ”என் அம்மா கொடுத்தா தான் சாப்பிடுவேன்” என்று உங்கள் குழந்தை சொல்லும்.

    Share