மன நல ஆலோசனை: கேள்வி பதில்கள்
–கார்த்திகேயன், விமலதாரணி.
கேள்வி : 1
எனக்கு வயது 24. என் அண்ணன், என் அக்காவின் மகளை முறைப்படி திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. திருமணமான மூன்றாம் ஆண்டில் என் அண்ணன் ஒரு விபத்தில் காலமாகி விட்டார். இதனால் என் அக்கா பெண் 19 வயதில் விதவையாகி விட்டார்.
இதை என்னால் பொறுக்க முடியவில்லை. ஆகையால் அந்த குழந்தையின் நலன் கருதியும் , என் அக்கா பெண்ணின் நலன் கருதியும் அவர்களை நானே திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்தேன். அவர்களுக்கு என்னை மணந்து கொள்ள விருப்பம் தான். ஆனால் இதை சிலரிடம் சொன்னேன்.
அவர்கள் அண்ணன் மனைவியை செய்து கொள்ளவது தவறு என்கிறார்கள். நான் அவர்களை திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருக்கிறேன், இதைப்பற்றி உங்களுடைய கருத்தினை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
பதில் :
வட இந்தியாவில் சில குறிப்பிட்ட சமுதாயங்களில் அண்ணன் இறந்து போனால் அவரது விதவை மனைவியை கணவரின் தம்பிக்கே திருமணம் செய்து வைக்கிறார்கள். அந்த பெண்ணுக்கு 35 வயதாக இருந்து கணவரின் தம்பிக்கு அதை விட வயது குறைவாக இருந்தாலும் மன ஒற்றுமை அடிப்படையில் திருமணம் செய்து வைக்கிறார்கள். அத்தகைய திருமணங்களில் நானே கலந்து கொண்டிருக்கிறேன்.
கணவரை பறி கொடுத்த விதவை பெண் மனரீதியாக பாதிக்கப்பட்டிருப்பாள். அவளுக்கு மறுமணம் தேவை. அதே நேரம் மறுமணம் செய்து புதிய வீட்டிற்கு புதிய குடும்பத்திற்கு அவள் செல்லும் போது அங்குள்ள சூழ்நிலைக்கு தக்கபடி அனுசரித்து செல்ல சிரமமாக இருக்கும். அந்த சிரமத்தை குறைக்கவே ஏற்கனவெ பழகிய வீட்டில் பழகிய மனிதருக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். தென்னிந்தியாவை பொறுத்தவரையில் விதவை பெண்ணை கணவரின் தம்பியே திருமணம் செய்யும் பழக்கம் இப்போது தான் தோன்றி வருகிறது.. இது ஒரு நல்ல பழக்கம் தான்.
திருமணம் என்றாலும் மறுமணம் என்றாலும் அதில் கவனிக்கத்தக்க முதல் விஷயம் மணம் புரியபோகும் ஆண் – பெண் இருவருக்குமே பிடிக்க வேண்டும் என்பது தான். உங்களுக்கும் அந்த பெண்ணுக்கும் பிடிப்பதாக நீங்கள் சொல்கிறீர்கள். அப்படியானால் நீங்கள் மகிழ்ச்சியாக இந்த மறுமண நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்.
➢➢➢இதில் நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் :
அந்த பெண்ணுக்கு 19 வயது தான். ஒரு குழந்தைக்கு தாயாகி விட்டாலும் அந்த பெண் இன்னும் வாழ்க்கை புரிந்து கொள்ள முடியாதவளாக இருப்பாள் . நீங்கள் இதுவரை அண்ணி என்ற எண்ணத்தில் பழகி வந்து இருப்பீர்கள். அவரும் உங்களிடம் மைத்துனர் என்ற எண்ணத்தில் பழகி வந்திருப்பார். இனி இந்த சூழல் அடியோடு மாற வேண்டும். அண்ணி என்பதை மாற்றி மனைவி என்கிற அந்தஸ்தை முழுமையாகத் தர வேண்டும்.
தொடக்கத்தில் குடும்பமும் சமுதாயமும் உற்றுப்பார்க்கும். அந்த பார்வையின் அர்த்ததை புரிந்து கொண்டு ஒரு சில மாதங்கள் மிக பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும். அந்த பக்குவம் உங்கள் இருவருக்கும் இருக்கும் என்று நம்புகிறேன். இதில் எந்த அவசரமும் காட்டாமல் மற்றவர்கள் உங்களையோ அந்தப் பெண்ணையோ தப்பாக பேச வாய்ப்பு கொடுத்து விடாமல் பெற்றோர் மூலமாக நிதானமாக மறு திருமண நடவடிக்கையை மேற்கொள்ளுங்கள்.
திருமண வாழ்க்கையை விட மறுமண வாழ்க்கை சிறப்பானது . இருவரும் இணைந்து விட்டுக் கொடுத்து கருத்தொருமித்து வாழ்ந்தாலே அந்த சிறப்பை அடைய முடியும். இல்லாவிட்டால் சிரமமானதாகி விடும்.
கேள்வி : 2
நான் பிளஸ் – 2 மாணவி. வயதுக்கு ஏற்றபடி அழகாக இருக்கிறேன். ஆனால் என்னிடம் இருக்கும் ஒரு பழக்கம் என்னை பாடாய் படுத்துகிறது. நான் இப்போதும் படுக்கையில் சிறுநீர் கழித்து விடுகிறேன். இதை நினைத்து என் மனம் சஞ்சலப்படுகிறது. இதனால் நான் உறவினர் வீடுகளில் இரவு தங்குவது இல்லை. என்னை நினைத்து என் அம்மா ரொம்ப வருந்துகிறார். என் திருமணத்திற்கு பிறகும் கணவர் வீட்டில் இப்படி ஆகி விடுமோ எனப் பயமாக இருக்கிறது.?
பதில் :
சகோதரி உங்கள் கடிதத்தின் பதிலுக்கு சற்று பொறுத்திருங்கள். இதே கேள்வியை ஒரு சில சிறுவர்களின் பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்காக கேட்டிருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு முதலில் பதில் தருகிறேன்.
படுக்கையில் சிறுநீர் கழிப்பவர்களை ஆறு வயதிற்கு முன், ஆறு வயதுக்கு பின் என்று இரண்டு வகையாக பிரிக்கலாம். 6 வயதுக்கு முன்பு என்பது இயல்பானது. பெற்றோர் சற்று சிரமம் எடுத்து கவனித்தால் நிறுத்தி விடலாம்.
சிறுவர்கள் படுக்க போவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பு பால் கொடுக்க வேண்டும். பின்பு அவர்கள் தூங்க செல்வதற்கு முன்பு சிறுநீர் கழிக்க செய்யுங்கள். சிறுநீர் பை வற்றி விடும். அப்புறமாகத் துங்கட்டும். 15 நாட்கள் சிறுவர்களை தொடர்ச்சியாக 3 மணி நேரத்துக்கு ஒரு முறை எழுப்பி சிறுநீர் கழிக்க வையுங்கள். அவ்வாறு செய்தால் இயல்பாகவே சிறுநீர் கழிக்கும் மூட் வந்தால் சிறுவன் தானாக எழுந்து அம்மா ஒண்ணுக்கு என்று சொல்லி விடுவான்.
சிறுவர் சிறுமிகள் தொடர்ந்து படுக்கையை நனைத்தால் attention seeking இயல்பாகக் கூட இருக்கலாம். குழந்தைகள் மீது அதிக கவனம் எடுத்து கொள்ளாத பெற்றோரை தன் பக்கமாக ஈர்த்து என்னையும் கவனியுங்கள். இல்லாவிட்டால் இப்படித்தான் நடந்து கொள்வேன் என்பது போல் செயல்படுவார்கள். இது தான் அட்டென்ஷன் சீக்கிங். தாய் மீண்டும் கர்ப்பிணியாதும் முதல் குழந்தைக்கு ஒரு வித பாதுகாப்பு குறைவு ஏற்படும். அந்த பயத்தில் சிறுவர்கள் படுக்கையை நனைப்பார்கள். இப்படிப்பட்ட சிறுவர்களிடம் தாய் அதிக பாசத்தைக் காட்டி எப்போதும் நீ என் அன்பு குழந்தை என்று உணர்த்தினாலே போதும். 6 வயதுக்கு பிறகும் படுக்கையை நனைத்தால் குழந்தை நல மருத்துவரிடம் ஆலோசனை கேளுங்கள்.
17 வயது சகோதரியின் பெற்றோரே நீங்கள் அவளை திட்டவோ, மிரட்டவோ வேண்டாம் டாக்டரிடம் அழைத்து சென்று ஆலோசனை கேளுங்கள். இது மிகச் சாதாரண விஷயம்.
படம் உதவிக்கு நன்றி: www.123rf.com