மன நல ஆலோசனை
மன நல ஆலோசனை
கேள்வி பதில்கள் :
கேள்வி : 5
எனது தோழி என்னைச் சில காலம் அண்ணா என்று அழைத்தாள். நானும் அப்படியே இருந்தேன். ஆனால் போகப் போக எங்களுக்குள் அன்பு அதிகமாகி ஒருவரை ஒருவர் விட்டுப் பிரிய முடியாத வண்ணம் உள்ளோம். ஆனால் நண்பர்கள் வட்டாரத்தில் எங்களை அண்ணன் தங்கை என்று நம்புகிறார்கள். நாங்கள் என்ன செய்வது?
பதில் :
புதிதாய் பார்த்துப் பழகும் ஒருவரை முறை சொல்லி அழைப்பது நம் கலாச்சாரம். என்றாலும் முறைக்காக அழைப்பது உணர்வு ரீதியாக அப்படியே இருப்பதில்லை. உங்கள் இருவரின் உணர்வுகள் காதலாக இருப்பதால் அதை ஏற்றுக் கொள்வதில் தவறொன்றுமில்லை. உங்கள் நண்பர்களை அழைத்து ஒரு விருந்து கொடுத்து இருவரும் உங்கள் நிலையை அவர்களுக்கு விளக்கிவிடுங்கள். புரிந்து கொள்பவர் நண்பர்களாக தொடரட்டும். புரிந்து கொள்ளாதவர்களைப் பற்றி கவலைப் பட வேண்டாம். நீங்கள் இருவரும் உங்கள் உணர்வுகளை உண்மையாக புரிந்து கொள்வதே முக்கியம்.
கேள்வி : 6
நானும் என் கணவரும் வேலைக்குப் போகிறோம். என் 8 வயது மகன் உறவுக்காரப் பெண் ஒருவரின் பராமரிப்பில் இருக்கிறான். அந்தப் பெண் எங்கள் வீட்டோடு இருக்கிறாள். அவள் என் மகன் வீட்டிலிருந்து பணத்தைத் திருடுவதாகக் கூறினாள். ஒரு நாள் இதை நானும் கண்டுபிடித்தேன். அவனிடம் இதைப் பற்றி கேட்டு கண்டிக்கலாமா? கண்டித்தால் பிரச்சனை அதிகமாகுமா?
பதில் :
குழந்தை பணத்தை எடுத்ததை தெரிந்து கொண்டு உடனடியாக அவனை அடித்தோ, திட்டியோ கேட்காமல் இருந்ததிலிருந்து உங்களின் பக்குவமான மனப்பான்மை தெரிகிறது. இதே பக்குவத்துடன் குழந்தையிடம் மென்மையாக தனிமையில் இதைப்பற்றி கேளுங்கள். பணம் அங்கே இருக்கிறது எனவே எடுத்துக் கொண்டேன் என்பதாக அவன் பதில் இருந்தால் பணத்தை ஆங்காங்கே போட்டு வைப்பது உங்கள் தவறு. தெரியாமல் எடுத்திருந்தால் அது திருட்டு அப்படி செய்யக் கூடாது என்பதை எடுத்துச் சொல்லுங்கள். அவன் எதற்காக எடுக்கிறான் என்பதைத் தெரிந்து கொண்டு அவன் தேவையை நீங்களாக பூர்த்தி செய்யுங்கள். குழந்தைகள் பணத்தைத் தானாகக் கையாள்வதால் ஏற்படக்கூடிய அபாயங்களை அவனுக்குப் புரிய வையுங்கள். அவன் செய்வது தவறு ஆனால் அதை மாற்றிக் கொள்ளலாம் என்பதை அவனுக்கு பக்குவமாகப் புரிய வையுங்கள். போதுமான அன்பு கிடைக்கவில்லையென்றாலும் கூட சில குழந்தைகள் பெற்றோருக்கு பிடிக்காத விஷயத்தை செய்ய முற்படும். எனவே அவனுடன் அதிக நேரத்தை செலவு செய்யுங்கள். அன்போடு கூறினால் குழந்தைகள் சுலபமாக திருந்தி விடுவார்கள்.
கேள்வி :7
என் குழந்தை (வயது 3) வீட்டில் எதைக் கொடுத்தாலும் சாப்பிட மறுக்கிறான். தொல்லை செய்து அடித்துதான் ஊட்ட வேண்டியுள்ளது. அதுவே உறவினர் நண்பர் வீடுகளுக்குச் செல்லும் போது அங்கு எதைக் கொடுத்தாலும் அலைந்து சாப்பிடுகிறான். இதனால் எனக்கு அவமானமாக இருக்கிறது. என்ன செய்யலாம்?
பதில் :
நீங்கள் அவமானமாக நினைப்பதற்கு இதில் ஒன்றுமில்லை. குழந்தைகள் வீட்டில் சாப்பிடும் போது பொதுவாக ஒரே மாதிரியான உணவைத் தான் சாப்பிடுகிறார்கள். உங்கள் ரசனை மற்றும் தேவைக்கேற்ப உணவை சமைத்து அதை ஊட்டுவீர்கள். அது குழந்தைகளுக்கு வெறுப்பாக இருக்கும். ஆனால் வெளியில் செல்லும் போது வெளியே செல்கிறோம் என்ற குஷியான மன நிலையில் குழந்தைகள் இருப்பார்கள். மற்றொன்று மற்ற வீடுகளில் அவர்களின் உணவு மற்றும் கொடுக்கும் முறை வித்தியாசமாக இருக்கும் போது குழந்தைகள் அதை விரும்பி உண்பார்கள். எவ்வளவு விலையுர்ந்த பொம்மையாக இருந்தாலும் சிறிது நாளில் தூக்கிப் போட்டு விட்டு உடைந்து போன பழைய பொம்மைக்காக குழந்தைகள் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டுக் கொள்வதை பார்த்திருப்பீர்கள். குழந்தைகள் வளரும் வயதில் புதிது புதிதாய் கற்கவும் அனுபவிக்கவும் விரும்புவார்கள். எனவே குழந்தையின் ரசனைக்கேற்ப உணவை வித்தியாசமாக தயாரித்து வித விதமாய் பரிமாறுங்கள். நிறைய பளிச்சென்ற நிறங்கள் உணவில் (காய்கறிகள், பழங்கள், பருப்புகள் மூலம்) இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். வடிவங்களை வித்தியாசமாக (வடை, சப்பாத்தி வட்டமாகத்தான் இருக்க வேண்டுமா என்ன?) செய்து கொடுங்கள். குழந்தைகளுக்காக சிறிது மெனக்கெட்டால் போதும், ”என் அம்மா கொடுத்தா தான் சாப்பிடுவேன்” என்று உங்கள் குழந்தை சொல்லும்.
இது விமலா தாரணி அவர்களிடம் கேட்கப்படும் ஒரு மன நல ஆலோசனை கேள்வி:
என் கணவர் மிகவும் நல்லவர்.ஆனால் எங்களுக்குள் ஒரு விஷயத்தில் பெரிய மனஸ்தாபம். அவர் முழுக்க ஆண் பிள்ளைகள் இருக்கும் வீட்டில் வளர்ந்தவர். ஒரு இரத்த சம்பந்தம் இல்லாத தம்பி( unblood brother) போன்ற ஒரு உறவு,அலுவலகத்தில் கிடைத்த தம்பி உறவு . அக்கா உனக்கு ஒரு பிரிசனை என்றால் தம்பி அங்க வந்து முன்னாடி நிற்பேன் என்று சொல்லும் அளவுக்கு அன்பான தம்பி…என் திருமணத்திற்கு பின்பு ,அந்த தம்பி நீ pregnant ஆனால் எனக்கு சொல்லு,உன்னை நல்லா பார்த்துக்கோ என்று மெசேஜ் செய்தால் குற்றமா..அப்படி unblood brothers, தான் அக்காவாக நினைத்த சகோதரி கல்யாணம் ஆகி போன பின்பு நீ pregnant ஆனால் சொல்லு என்ன என்ற Unblood brother ஒரு சகோதரனாக சமூகத்தில் பொதுவாக கேட்பார்களா.அதில் ஏதும் தவறு உண்டா..?????என் கணவர்
அதை அநாகரீகமாக பார்க்கிறார்.அதை ஒரு நடைமுறை வழக்கில் இல்லாத ஒன்றாக நினைக்கிறார். அந்த தம்பி மார்களுடன் பேச கூடாது என்று சொல்லிவிட்டார். மிகுந்த மன உளைச்சலில் இருக்கிரேன்.. Unblood brother sister உறவு தேவையற்றது என்று நினைக்கிறார்.அவர் அப்படி எந்த அக்காவவது ஆம் இதில் ஒன்று தவறு இல்லை..இது சகஜம் என்று சொன்னால்தான் ஏற்று கொள்வேன் என்கிறார்.
. நீங்களும் ஒரு பெண் என்பதால் உங்களிடம் பதில் கிடைத்தால் அதை வைத்து அவரிடம் தெளிவை கொண்டு வர முடியும் என நம்புகிறேன்…
நன்றி…