நூல் அறிமுகம் – அந்த ஆறு நாட்கள்!

0

வல்லமை வாசகர்களுக்கு,

ஆரூர்பாஸ்கரின் அன்பு வணக்கங்கள்!

அந்த ஆறு நாட்கள்”  எனும் எனது மூன்றாவது புதினம் (நாவல்)  அமேசான் கிண்டிலில் இந்த ஆண்டு பிப்ரவரியில் வெளியானது.  வெளியான நாள்முதல் வாசகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இந்த நூலை வல்லமை  வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மிக்க மகிழ்ச்சி!

நாவல் குறித்து நான் எழுதுவதைவிட, சிங்கப்பூர் எழுத்தாளர் திரு. சித்தூராஜ் பொன்ராஜ் (Sithuraj Ponraj) முகநூலில் எழுதிய வாசிப்பனுபவத்தை உங்களுடன் பகிர்வது சரியாக இருக்குமென நினைக்கிறேன்.

“…Gripping tale என்பார்கள். தொடக்கத்திலிருந்தே வாசகனை அங்கும் இங்கும் அசையாதபடி கட்டிப் போடும் கதை. ஆரூர் பாஸ்கர் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலத்தை 2017ல் அடித்து நொறுக்கிய மிக உக்கிரமான இர்மா புயலைச் சுற்றி அப்படிப்பட்ட ஒரு நாவலைப் பின்னியிருக்கிறார்.

சகல வல்லமைகளும் வசதிகளும் பொருந்திய வல்லரசு இயற்கைக்கு முன்னால் எதுவும் செய்ய முடியாமல் நிற்கும் நிதர்சனத்தைப் பரணி என்ற மின்சாரக் கம்பெனியில் வேலை பார்க்கும் இந்திய ஊழியரின் கண்களின் வழியே காட்டியிருக்கிறார். அதே இயலாமையைக் காட்டும் விதத்தில் பரணியின் கையில் பணமிருந்தும் புயலுக்கு முந்திய நாள்களில் அவருக்குச் சேமித்து வைப்பதற்காக குடிநீர் வாங்குவதும் பெட்ரோல் வாங்குவதும்கூட சிரமமாக இருக்கிறது. வழக்கமாக மிகுந்த ஒழுங்கோடும், பரஸ்பர மரியாதையோடும் காரியங்களைச் செய்யும் அமெரிக்கர்களிடையே இந்த இயலாமை ஏற்படுத்தும் நுணுக்கமான மாறுதல்கள். ஆரூர் பாஸ்கர் அற்புதம் செய்து இருக்கிறார்.

இயற்கை பேரிடர் போருக்கு ஒப்பானதுதான். இர்மா புயல் தாக்கத்தை மட்டும் சொல்லாமல் அது வரும் முன்பான நாள்களில் நாவலை பாஸ்கர் தொடங்கியது சிறப்பானது. போரும் பேரிடரும் வரும் முன்பு மனிதர்களிடையே ஏற்படும் வெற்று நம்பிக்கைகளையும், ஆயத்தங்களையும், மனப் போராட்டங்களையும் எடுத்துக் காட்ட இது உதவி இருக்கிறது. அது மட்டுமல்லாமல், இந்த விவரிப்புகளின் மூலமும், அமெரிக்காவை முன்னர் தாக்கிய புயல்களைப் பற்றி இடையிடையே சொல்லியும் பாஸ்கர் அமெரிக்க வாழ்வின் சவால்களை, அரசியலை, கறுப்பர்களுக்கு இழைத்த அநீதியை, அமெரிக்காவில் வேலை செய்யும் இந்தியர்களின் சந்தோஷங்களை, மன சஞ்சலங்களை, நட்பை ஒரு சேர அள்ளித் தந்திருக்கிறார். இதற்கு மிக உதவியாய் இருப்பவை நாவல் முழுவதும் பரவிக் கிடக்கும் தினசரி அமெரிக்க வாழ்வைப் பற்றிய மிக இயல்பான விவரங்கள். இதில் புயலால் அதிகம் பாதிப்படையக் கூடிய மின்சாரக் கட்டமைப்பு ஊழியரைக் கதாநாயகன் ஆக்கியிருப்பது புத்திசாலித்தனம் – அதிக தகவல்களைப் போகிற போக்கில் கொடுக்க முடிகிறது. புயலைப் படிக்கத் தொடங்கித் தற்கால அமெரிக்காவைப் பற்றி முழுமையாக படித்த அனுபவம். அழகான நடை. 

வாசகர்களுடனான இது போன்ற உரையாடல்கள் உற்சாகமளிக்கின்றன. தொடர்ந்து வாசித்து ஆதரவளிக்கும் அனைத்து வாசகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!

*****

புதின ஆசிரியரைப் பற்றி…

அமெரிக்காவின் ஃப்ளாரிடா (Florida) மாகாணத்தில் வசிக்கும் திரு. ஆரூர்பாஸ்கர் மென்பொருள் துறையில் பணிபுரிகிறார்.  தனது சொந்த ஊரான ஆரூரை (திருவாரூர்) தனது பெயருடன் சேர்த்து ’ஆரூர் பாஸ்கர்’ எனும் புனைபெயரில் எழுதிவருகிறார்.

“சிறகுகள் கல்வி அறக்கட்டளை” எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை நடத்திவரும் இவர், கவிஞர், எழுத்தாளர் எனப் பன்முகம் கொண்டவர்.

இவருடைய நூல்கள்: என் ஜன்னல் வழிப்பார்வையில் (கவிதை), பங்களா கொட்டா, வனநாயகன் – மலேசிய நாட்கள், அந்த ஆறு நாட்கள் (புதினங்கள்).

*****
இணையதளம்: http://aarurbass.blogspot.com/
முகநூல்: https://www.facebook.com/aarurbass
மின்னஞ்சல்: aarurbass@gmail.com
அமெசான் கிண்டில் முகவரி (இந்தியா):
https://amzn.to/2UYBi4d
அமெசான்
 கிண்டில் முகவரி (அமெரிக்கா):
https://amzn.to/2K1IoEr

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *