மௌனம் எதற்கு, சண்டை போடலாமே!
-நிர்மலா ராகவன்
நலம்.. நலமறிய ஆவல் – 152
மௌனம் எதற்கு, சண்டை போடலாமே!
மூன்று வயதுக் குழந்தைகள் அடிக்கடி தாயை அழைத்துப்பார்க்கும். அவள் வீட்டிலேயேதான் இருப்பாள். இருந்தாலும், அவர்களுக்கு என்னவோ பயம் – தனியாக விட்டுவிடுவார்களோ என்று.
`நான் எப்பவும் உன்கூட இருப்பேன். பயப்படாதே!’ என்று சில முறை சொன்னால் ஆறுதலும், தாய்மீது நம்பிக்கையும் பிறக்கும். (தந்தை வேலை நிமித்தம் அல்லது நண்பர்களுடன் பொழுதைக் கழிக்க வீட்டைவிட்டு அடிக்கடி வெளியே போய்விடுவதால் இப்படியோர் அச்சம் பிறக்கிறதோ?)
சிறு குழந்தைகளுக்கு மட்டுமில்லை, எந்த வயதிலும், எவர்மீதிலும் அவநம்பிக்கை எழலாம்.
கதை
காதலிக்கும்போது தன்னையே சுற்றிச் சுற்றி வந்து கைப்பிடித்த கணவன் திருமணத்திற்குப்பிறகு தான் ஒருத்தி இருப்பதையே மறந்தவன்போல் நடப்பது கண்டு ரேணுவுக்குத் துக்கம் பெருகியது. அழுகையுடன், பிற பெண்களிடம் முறையிடத்தான் அவளால் முடிந்தது.
வீட்டிலேயே சில நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு சீட்டாட்டத்தில் தன்னையும் உறவுகளையும் மறந்துபோனான் வேணு. எப்போதாவது மனைவி அதைப்பற்றி முறையிட்டால், `உன் தொணதொணப்பு தாங்க முடியாதுதான் நண்பர்களை நாடுகிறேன்!’ என்ற ரீதியில் விவாதித்து பேச்சை முடிப்பான்.
பெண் தன் கணவன் எப்போதும் தன்னருகில் இருந்தால்தான் அன்பு என்று நினைக்கிறாள். அவளுக்கு அந்த அருகாமை வேண்டியிருக்கிறது. ஆணுக்கோ, நீண்டகால நெருக்கம் மூச்சை அடைப்பதுபோல் இருக்குமாம்.
நம்பிக்கை எழ
வேலை, நண்பர்களுடன் உல்லாசம், தனக்கென ஒரு பொழுதுபோக்கு — இதெல்லாம் அவசியம் என்று ஆண்களுக்குத் தோன்றினாலும், குடும்பத்தினருக்கும் சிறிதளவாகிலும் நேரத்தை ஒதுக்கி, தன் வாழ்க்கையில் நடந்ததை அவ்வப்போது பகிர்ந்துகொண்டால்தான் உறவு பலக்கும்.
ஒருவருக்கு நேர்ந்தது நல்லதோ, கெட்டதோ, அதைப் பகிர்ந்துகொண்டாலே போதும். இதனால் சில சமயம் சிறு சர்ச்சைகள் எழலாம். ஆனால், வெளிக்காட்டமுடியாத கோபத்துடன் மௌனம் சாதிப்பதைவிட சண்டையாவது போடலாமே! ஒருவர் மனம் மற்றவருக்குப் புரிய வேறு வழி ஏது!
யாரைத்தான் நம்புவது!
நம் நம்பிக்கையைப் பெற நல்லவர்கள்மாதிரி நடித்து, வலிய வந்து உதவி செய்பவர்கள் பெருகிவிட்ட இக்காலத்தில் யாரைத்தான் நம்புவது என்ற அவநம்பிக்கைதான் எவருக்கும் எழுகிறது.
`நம்மிடமிருந்து ஏதோ காரியத்தைச் சாதித்துக்கொள்ளத்தான் இவர் நல்லவர்போல் நடிக்கிறார்!’ என்று முதலில் அவநம்பிக்கை ஏற்படும்.
கதை
சீனப்பெருநாளன்று, `அங் பௌ’ என்று, திருமணம் ஆகாதவர்களுக்கு உறவினர்களும், பெற்றோரின் நண்பர்களும் பணம் கொடுப்பது வழக்கம்.
அப்படிக் கிடைத்த பணத்தை எப்படிப் பத்திரப்படுத்துவது என்று அந்த பத்து வயதுச் சிறுமிக்கு தெரியவில்லை.
`நான் வைத்துக்கொள்கிறேன், கொடு!’ என்று வீட்டிலிருந்த பெரியவர் கைநீட்ட, கொடுத்தாள். ஆனால், அடுத்த சில நாட்கள், “என் காசை எடுத்தீர்களா?” என்று அடிக்கடி கேட்கத் தவறவில்லை!
அவளுடைய அவநம்பிக்கை புரிந்து அவருக்குச் சிரிப்புதான் வந்தது. `என்னிடமே நிறைய பணம் இருக்கிறது. நான் ஏன் உன்னுடையதை எடுக்கப்போகிறேன்!’ என்று அலட்சியமாகக் கூற, அவளுக்கு அவரிடம் நம்பிக்கை பிறந்தது.
பிறர் நமக்குத் தீங்கு இழைக்க மாட்டார்கள், மாறாக, அவர்கள்தாம் நம் நலனையே விழைபவர்கள் என்று தோன்றும்போதுதான் நம்பிக்கை எழ, அவர்களை ஏற்கிறோம்.
நம்பிக்கை துரோகிகள்
ராஜன் படித்து, பெரிய வேலையில் இருந்தார். எந்தவித தீயபழக்கத்தையும் விட்டுவைக்கவில்லை. அவருக்குக்கீழ் வேலை பார்ப்பவர்களைத் தன் வசம் இழுத்து, அவர்களையும் குடிபோதைக்கு அடிமையாக்க பெரும் பிரயத்தனம் செய்வார். மேலதிகாரியைப் பகைத்துக்கொள்ள முடியாது, அவர்களும் அவர் காட்டிய தீய வழிகளில் நடப்பார்கள். விலைமாதர்களை நண்பர்களுக்குப் பரிந்துரைக்கும் ராஜனைப்போல் ஒருவரை எந்தப் பெண்தான் ஏற்பாள்?
அவரது குணத்தைப் புரிந்து, கணவன்மார்களை எச்சரித்த மனைவிகளிடம் மனக்குறையுடன், “என்னை நீங்கள் நம்பவில்லை என்று தெரியும்!” என்று பிரலாபிப்பார். தான் செய்துவருவது தவறு என்று அவர் கருதாததுதான் வியப்பு.
நம்பிக்கையே ஆயுதமாக
சந்தித்த உடனேயே அதிக நட்புடன், நைச்சியமாகப் பேசுகிறவர்களிடம் கவனமாக இருக்கவேண்டும்.
`என்னை நம்பு!’
`ஐயோ! என்மேல் உனக்கு நம்பிக்கை வரவில்லையே!’
இளம்பெண்களை வசப்படுத்த முயற்சி செய்பவர்கள் அடிக்கடி பிரயோகிக்கும் வசனங்கள் இவை.
அப்படி ஒருவர் வெளிப்படுத்தும் போலியான தன்னிரக்கத்தைப் பார்த்து இரங்கி, `அன்புக்கு ஏங்குகிறார். அவரை என்னால் திருத்த முடியும்!’ என்று இரக்க குணம் படைத்த பெண்கள் ஏமாறலாம்.
ஆனால், கீழே இருப்பவர்கள் பிறரையும் கீழே இழுக்கத்தான் பார்ப்பார்கள். அவர்களைத் திருத்த முயல்வது துர்லபம். அப்படி ஒரு நிலையில் இருப்பதுதான் அவர்களுக்குப் பிடிக்கிறது என்றால், விட்டுத்தொலைக்க வேண்டியதுதான். `சவால்’ என்று நம்மையே வாட்டிக்கொள்வானேன்! அவர்களைவிட்டு விலகினால் ஆரோக்கியமான உறவுகள் அமைய வாய்ப்புண்டு.
துஷ்டர் என்று கண்டும் தூர விலக முடியாதவர்கள்
அது ஏன், சிலர் தகாத நட்பு என்று தெரிந்தாலும், அதிலிருந்து விலக முடியாது தவிக்கிறார்கள்?
சிறு பிராயத்தில் பெற்றோரை நம்பி, அவர்களால் ஏமாற்றம் அடைந்தவர்களாக இருப்பார்கள்.
கதை
மனைவியை ஒதுக்கிவிட்டு, இளமையான இன்னொரு பெண்ணை மணந்தார் ஒரு சுயநலக்காரர். குழந்தைகளுடன் தம்பியின் வீட்டில் தஞ்சம் புக நேரிட்டது முதல் மனைவிக்கு. வேண்டாத இச்சுமையால் குழந்தைகளைக் கொடுமைப்படுத்தினார் அந்த உறவினர்.
`இருக்கும் ஆதரவையும் பகைத்துக்கொண்டால், குடும்பத்துடன் எங்கு போவது!’ என்று தாய் கண்டும் காணாததுபோல் இருந்தாள். உடனுக்குடனே அவள் ஆதரவாக ஏதாவது குழந்தைகளிடம் சொல்லியிருந்தால் அவர்களுக்கு அவ்வளவு மனக்கிலேசம் ஏற்பட்டிருக்காது.
ஆண் குழந்தைகள் முடிவெடுத்தது: எல்லா ஆண்களுமே அப்பாவைப்போல்தான்! கைவிட்டுவிடுவார்கள். நம்பமுடியாது.
பெண்களின் முடிவு: ஆண்கள் அனைவரும் பெண்பித்தர்கள்! எந்த விதத்திலாவது பெண்களைக் கஷ்டப்படுத்துகிறவர்கள்.
வளர்ந்ததும், பெண்கள் தந்தையைப் போன்றவரையே கணவனாக வரித்தார்கள். மகிழ்ச்சியாக இருப்பதைப்போல் காட்டிக்கொண்டார்கள். ஏனெனில், அவர்களுக்குத் தெரிந்த வாழ்க்கைமுறை அதுதான்.
ஆண்பிள்ளைகளோ, `எனக்கு நல்ல நண்பர்களே கிடைக்க மாட்டார்கள்!’ என்று எண்ணியதுபோல், தம்மையும் அறியாது, தந்தையைப் போன்றவர்களையே உற்ற நண்பர்கள் என்று எண்ணி ஏமாந்தார்கள். அவர்களிடம் தந்தை தமக்கிழைத்த அநீதியைச் சொல்லிச் சொல்லி மாய்ந்தார்கள்.
நம்பிக்கைக்கு உரியவராக இருக்க வேண்டியவரே துரோகம் செய்கிறார் என்று புரியும்போது, முதலில் அதிர்ச்சியும், பிறகு, `ஏமாந்துவிட்டோமே!’ என்ற ஆத்திரமும் எழுகின்றன.
ஆத்திரம் தணியாமலே இருந்தால் நம் உடல்நிலைதான் கெடும். பாம்பு தன் சட்டையை உரிப்பதுபோல், பழையனவற்றை நம் நினைவிலிருந்து அகற்றிவிட்டு, அதிலிருந்து கற்ற பாடத்தை நினைவில் வைத்துக்கொண்டாலே போதும். அதே குணத்தைக்கொண்ட வேறொருவரைச் சந்திக்கும்போது, ஜாக்கிரதையாகப் பழக முடியுமே!