படக்கவிதைப் போட்டி – 190
பவள சங்கரி
அன்பிற்கினிய நண்பர்களே!
வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?
ஷாமினி எடுத்த இந்தப்படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (08.12.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.
ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்
முயற்சி திருவினை ஆகும்
————————————–
ஆழ்கடல் அமைதியை அறிந்திட
எழும் அலைதனை கடந்திட முயன்றாயோ
அலை வந்து அடித்திடும் கரைதனில்
அலைபாயும் மனம் கொண்டு நின்றிட
மரம் கொண்டு எழும் அலைதனில் சறுக்கி
சரித்திரம் படைத்திட முயன்றாயோ
உன்னக்கென இடம் ஒன்றை பிடித்து
தடம் பதித்திட முயன்றாயோ
காலங்காலமாய் கரையை கடக்க முயன்று
எழுவதும் வீழ்வதுமாய் அலைகள் ஓய்ந்ததில்லை
அளவாய் இருக்கும் வரை அழகாய் தோன்றும் அலை கூட
அதிர்ஷ்டம் வந்து சுனாமியாய் கரையை கடக்க
வாகை சூடும் வெற்றியில் பலரது வாழ்வை அள்ளி சென்றதே
நல்நோக்கம் கொண்டு ஆக்கம் தரும் செயலில்
மனம் தளராமல் முயன்றிடு வெற்றி உனதாகும்
ஊரே கை கோர்த்து உன்னை கொண்டாடும்
முயற்சி திருவினை ஆகும்
சரித்திரம் படைப்போம்
————————————-
அகன்ற பெருங்கடலும்
அஞ்சி நடுங்கி என்
கால்களின் ஊடே
கடலையாய் ஓடும்
காட்சியைக் கண்டீரோ
திண்ணிய எண்ணமும்
திடமான நோக்கமும்
தெளிவான பார்வையும்
தொய்வில்லா உறுதியும்
அஞ்சா நெஞ்சமும்
அளவில்லா முயற்சியும்
எதிர்வரும் இடர்களை
எதிர்கொண்டு போராடி
இலக்கை அடைய
இனிய பாதை வகுக்கும்
என்பதை உணர்ந்து
எதிர்வரும் நாளிலாவது
சமூக அவலங்களை
சறுக்கிக் களைந்து
ஒளிமயமான வாழ்விற்கு
ஒற்றுமையாய் வழிவகுக்க
விரைந்து வாரீர்
வீர இளைஙர்களே
விடியல் நம் கையில்
சாதனை செய்வோம்
சரித்திரம் படைப்போம்.
துணையாய்…
துணிச்சல் நெஞ்சில் துணையிருந்தால்
தோணியும் படகும் தேவையில்லை,
பணியா அலைகள் நிறைந்திருக்கும்
பரந்த கடலின் மீதினிலும்
துணையாய்த் துண்டு மரமிருந்தால்
துடுப்பாய்க் கைகளைக் கொண்டேதான்
துணிந்து செல்லலாம் தூரதேசம்
தெரிந்து கொள்வாய் தம்பிநீயே…!
செண்பக ஜெகதீசன்…
விடாமுயற்சி விஷ்வ௹ப வெற்றி
முனைவர் மு.புஷ்பரெஜினா
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,
தஞ்சாவூர்.
வானகமும் வையகமும் வணங்கிக்கொள்ளும் ஆழிதாமே,
வாழ்க்கையெனும் ஓடந்தனில் வழியறியா உள்ளங்களை
வல்லமையுடன் வழிநடத்திடுமே,
இன்னல்கள் இறுக்கினாலும் இருள் சூழாது
இதந்தந்து இன்னொளி தான் காட்டிடுமே,
கலையாத கனவுகளைக் கண்முன்னே காட்சிப்படுத்திடுமே,
கற்பனைக்கும் எட்டிடா வகையில் கப்பலாக வந்து,
தத்தளிக்கும் தங்கங்களைத் தம்கரந்தான் ஏந்திடுமே,
விடையற்ற வினாக்களுடன் வருந்திடும் வறியவனுக்கும்
வடக்கிருந்து வரும் அலைதான் வாழ்த்துச்செய்தி அனுப்பிடுமே,
இன்னல்கள் போக்கிடுமே, இன்பந்தான் நல்கிடுமே,
வருந்திடும் உள்ளத்தார்க்கு வான்புகழ் தான் வழங்கிடுமே,
அல்லல் தனை அடக்கி அலைகடல் தான்
அள்ளித்தரும் வளங்களைக் கண்டே
உள்ளம் துள்ளி குதித்திடாதோ
துன்பக்கடல் துடைத்திடாதோ என்றே தான்
சமுத்திரம் மீதினிலே சறுக்கிடும் வேளைதனில்
துணிச்சலுடன் தூண்டில்தான் போட்டானோ
இத்தங்கமகன்….
எதிர் நீச்சல்..!
============
ஊர்மக்கள் கண்டு காணும்
……………உல்லாசப் பொழுது போக்கு
வேர்த்தாலும் தெரியா வண்ணம்
……………வேகமாக வீசும் தென்றல்
பார்த்தாலே வியக்க வைக்கும்
……………படகுபோன்ற மிதவை தன்னில்
ஆர்ப்பரிக்கும் அலைக ளூடே
……………அஞ்சாது செல்லும் பாலா.!
வருங்காலம் உன்பேர் சொல்லும்
……………வருவதைக் கண்டஞ் சாதே.!
பெரும்பேரை நீயும் ஈட்ட
……………பம்பரமாய்ச் சுழல வேண்டும்.!
வருகின்ற அலைபோல் துன்பம்
……………வந்தாலும் எதிர்த்துச் செல்வாய்.!
தருகின்ற இயற்கை என்றும்
……………தயங்காது அளிக்கும் தர்மம்.!
==================
அறுசீர் விருத்தம்
==================