சிவ. விவேகானந்தனந்தனின் பெண்ணரசுக்     காவியத்தில் சடங்குகளும் நம்பிக்கைகளும்

0

                 நீ.அகிலாண்டேஸ்வரி

                 முனைவர் பட்ட ஆய்வாளர் 

                 அரிய கையெழுத்துச் சுவடித் துறை

                   தமிழ்ப் பல்கலைக் கழகம்

                   தஞ்சாவூர் -10

     ——————————————–                                    

நாட்டுப்புறவியல் என்பது மக்களின் நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் போன்றவற்றை உள்ளடக்கியதாகும். பழக்க வழக்கங்கள் யாவும் காலப்போக்கில் அறிவியல் வளர்ச்சிக் காரணமாகச் சமுதாயத்தில் முன்னேற்றம் ஏற்படும்போது      சடங்காக மாறுகின்றன. அறிவியல் வளர்ச்சி எவ்வளவு மாற்றம் அடைந்தாலும்  மக்களிடையே பல்வேறு வகையான சடங்குகளும், நம்பிக்கைகளும் ஏதோ ஒரு வகையில்  பின்பற்றப் பட்டு வருகின்றன. கதைப்பாடல்களைத் தமிழில் பதிப்பித்து வெளியிடுவதில் மிகவும் ஆவல் கொண்டவராகவும், நாட்டுப்புற இலக்கியத்தில் மிகுந்த ஆர்வம் உடையவராகவும் திகழ்பவர்   சிவ. விவேகானந்தன் அவர்கள். இருபதுக்கும் மேற்பட்ட கதைப்பாடல்களை பதிப்பித்து வெளியிட்டுள்ளார். இவர் பதிப்பித்து வெளியிட்ட கதைப்பாடல்களில் பெண்ணரசு காவியம் மிகவும் குறிப்பிடத்தக்கது ஆகும். இக்காவியத்தில் பல சடங்குகளும் நம்பிக்கைகளும் இடம்பெற்று உள்ளன.

நம்பிக்கை

            மக்கள் தம் வாழ்வில் பலவித பழக்கவழக்கங்களை மேற்கொள்கின்றனர். அவையே காலப்போக்கில் நம்பிக்கைகளாக மாறுகின்றன தனது அச்சத்தினைப் போக்குவதற்கு ஒன்றன் மீது மிகுந்த நம்பிக்கைக் கொள்கின்றன. மேலும் தம் அன்றாட வாழ்வில் நிகழும் அனுபவங்களின் வழியும், நம்பிக்கை ஏற்படுகிறது. பெண்ணரசுக் காவியக் கதையில் மரங்கள், மகப்பேறு, சோதிடம் போன்றவற்றின் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர்.

மரங்கள் பற்றிய நம்பிக்கைகள்

          திருமணம் முடிந்து குழந்தை இல்லாத பெண்கள் பல விரதங்களை மேற்கொள்வார்கள். குழந்தை வேண்டி விரதம் மேற்கொள்ளும் பெண்கள் கோயில்களில் உள்ள அரச மரத்தை சுற்றி வழிபடுவர். இதில் அரச மரம் பெண் மரம் எனவும் வேம்பு மற்றும் ஆலமரம் ஆண்மரங்கள் எனவும் நம்பப்படுகின்றன.

                        ஆலரசுசுத்தியல்லோ அருகுவெச்சுப் பூசே சேஞ்சா

                   ஆக்கியானம்  தீந்திடுமோ அதிக வரந்தந்திடுமே1

என்ற அடிகளால் மக்கள் மரத்தினை தெய்வமாக வழிபாடு செய்கின்றனர். அவ்வாறு வழிபாடு செய்வதினால் இம்மரங்கள் வரந்தந்திடும் என்றும் நம்பப்படுகின்றன. இம்மரம் பற்றிய நபிக்கைகளைப் பெண்ணரசுக் காவியம்குறிப்பிடும் போது, பெண்ணரசித் திருநாட்டிலுள்ள கல்லாற்றில் வாழ்ந்து வந்த ஐந்து தலை நாகமானது பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை ஒரு மணியை ஈன்றெடுக்குமாம். அந்தமணி கல்லாற்றின் அக்கறையில் சேர்ந்தால் ஆண்மரமான ஆல மரமும், இக்கரையில் சேர்ந்தால் பெண்மரமான அரச மரமும் முளைத்திடும் என்றும், இம்மரங்கள் ஒன்றை ஒன்று தழுவிக் கொள்ளும் காலகட்டத்தில் பெண்கள் கருவுறுவார்கள் என்று இக்காவியம் குறிப்பிடுகின்றது. இதனை,

                        கல்லாறு ஆனதி லேகல்புடையில் வாழுகின்ற 

                   ஐந்தலை நாகம் வருசம் பன்னிரண்டு சென்றால்

                   பாரமணி ஒன்று ஈனும் அக்கதைக்கே சேர்ந்தமணி ஆலக

                   முளைத்திடுமாம் இக்கதைக்கே சேர்ந்தமணி அரசாக முளைத்திடுமாம்..”2 என்ற கதைப்பாடல் வரிகள் சுட்டுகின்றன.

மகப்பேறு பற்றிய நம்பிக்கைகள்

                        நாட்டுப்புறங்களில் திருமணம் நடைபெற்ற வீடுகளில் ஓரிரு மாதங்களில் குளவி கூடு கட்டுவதைக் காணலாம். அக்கூடு கட்டப்பட்டு இருப்பதையும், அங்கு குளவி வந்து போவதையும் பெரியவர்கள் பார்த்து விட்டால் தமது வீட்டில் உள்ள மகளோ அல்லது மருமகளோ கருவுற்று இருப்பதாக முடிவு செய்கின்றன.அக்குளவிக்கூட்டில் ஒரு துவாரம் இருந்தால் பிறக்கும் குழந்தை ஆண் குழந்தைஎனவும், பல துவாரங்கள் இருந்தால் பெண் குழந்தை எனவும், நம்பப்படுகிறது. இந்த நம்பிக்கையின் அடிப்படையில் குழந்தைக்காகத் தவம் மேற்கொண்ட பெண்ணரசியின் கனவில் மடிமீது நாகம் படமெடுத்து ஆடுவது போலவும், அரண்மனையில் குளவி(வேட்டவாளி) கூடு கட்டுதல் போன்ற சில சகுனங்கள் கனவில் வந்து சென்றன என்று தோழியர்களிடம் கேட்ட போது அவை நற்சகுனங்களாகும், மேலும் இவை யாவும் நல்ல பிள்ளைக்கான அடையாளங்கள் என்றும் கூறுகின்றன.இதனை,

                        மண்ணாக மடிமீதில் பையரவு நின்று ஆடிடவும்

                   மண்ணாரும்  அரண்மனையில் வாழ்குளவி கூடவும்

                   கூடதுவும் கண்டதினால் குணமோ சொல் தோழியரே

                   நாடதுவே தோன்றிய நல்ல பிள்ளை என்றனராம்…”3

என்ற பெண்ணரசுக் காவியக் கதைப்பாடல் வரிகள் மூலம் அறியலாம்.

ஈற்றுப்புரை கட்டுதல்

            அக்காலத்தில் அதிக அளவு மருத்துவ வசதிகள் இல்லாத போது வீட்டிலே பெண்கள் குழந்தை பெற்றன. அக்குழந்தை பேற்றினை ஊரில் உள்ள வயது முதிர்ந்த நன்கு அனுபவமுள்ள பெண்கள் பார்த்து வந்தனர். குழந்தை பெறப்போகும் பெண்கள் ஒன்பது மாதங்கள் முடிந்தவுடன் வீட்டை விட்டுத் தனியே ஒரு அறையில் தங்க வைக்கப்படுகின்றனர். அவ்வாறு அவர்கள் தங்கி இருக்கும் இடத்தை ஈற்றுப்புறை என்று குறிப்பிடுவர். (இக்காலத்தில் பிரசவ அறை) பெண்ணரசுக் காவியத்தில் பெண்ணரசியின் பேறுகாலம் நெருங்கிய போது ஈற்றுப்புரை கட்டியது பற்றிய செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை,

                        எந்தவகை தாயாரே ஈத்துப்புரை கட்ட

                   எங்களுக்கு விடைதாரும் என்று பெண்கள் கேட்க

                   வெற்றியுடன்  ஈத்துப்புரை கட்டும் என சொல்லி

                   விரைவினுடன் பெண்ணரசி வெகுமானம் கொடுத்தாள்….”4

மேலும், ஈற்றுப்புரை கட்டுவதறகாக மரம் வெட்டக் காட்டிற்குச் சென்ற பெண்களைக் காட்டுத் தெய்வங்கள்  அச்சுறுத்துகின்றன.இதில் காட்டுத் தெய்வங்களாக வடமலை பூதம், அக்னி மாடன், வன்னிமறவன் , வலுவறுகாளி, வரைதனில் அரசன் முதலிய தெய்வங்களை சுட்டுகின்றனர். இத்தெய்வங்கள் யாவும் அம்மரங்களில் குடி கொண்டு பெண்களைத் துன்புறுத்துகின்றன. இத்துன்பங்களில் இருந்து விடுபட அந்த பெண்கள் காட்டுத் தெய்வங்களுக்குப் பலி கொடுக்கின்றன.

            நாட்டுப்புறங்களில் ஒரு செயலினை தொடங்குவதற்கு முன் அச்செயல் நல்ல முறையில் தடங்கல் இன்றி நடைபெற வேண்டும் என்று தெய்வங்களுக்கு பலி கொடுக்கும் வழக்கம் இன்றளவிலும் இருந்து வருவதைக் காணலாம். மேலும் பலியிடுதல் பழஞ்சமுதாயத்தில் தெய்வத்தை அமைதிப்படுத்தக் கையாண்ட வழிபாட்டு முறையாகும் 5.இது உயிர்பலி, மலர்பலி என இரு வகைப்படும். உயிர்பலி முறையே தொடக்க கால மக்கட் சமுதாயத்திடையே தெய்வத்தின் சீற்றம் போக்கக் கையாண்ட வழிபாட்டு முறை என்பதை,

                        “ வளநகர் கிலம்பப் பாடிப் பலி கொடுத்து

                   உருவச் செந்தினை குருதியொடு தூஉய்

                   முருகாற்றுப் படுத்த உருகெழு நடுநாள்…”6.

அகநானூற்றின் பாடல் வரிகள் மூலம் அறியப்படுகின்றன.

            குருதியோடு, திணையையும் சேர்த்து வழிபட்டமையை நோக்கும் பொழுது தெய்வத்திற்குப் படைத்தலே முதன்மை பெறுகிறது. அதுபோல, பெண்ணரசுக் காவியத்தில் மரம் வெட்டக் காட்டுக்குச் சென்ற பெண்கள் ஒரு மரத்தின் அடியில் பூஜை செய்து திருப்பலி கொடுத்து பின்னர் அத்தெய்வங்களை வேண்டி மரத்தினை வெட்டிச் சென்று ஈற்றுப்புரை கட்டுவர். இவ்வாறு தெய்வங்களுக்கு பலி கொடுக்கும் வழக்கமானது,

                        “ அத்தனருள் மறவாத பெண்ணரசி தனக்கு

                   அழகுடனே ஈத்துப் புரை யானது முடிக்க

                   சுற்றுமுற்றும் ஓடிவரும் சுடலை மாடனுக்கு

                   தோகையிள மயிலனையான் துய்ய பிரம்ம சக்தி…”7

என்ற பெண்ணரசு காவியக் கதைப்பாடல் வரிகள் மூலம் அறியலாம்.

சோதிடம் பற்றிய நம்பிக்கைகள் 

            சோதிடம் பார்க்கும் பழக்கம் நாட்டுப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் இன்றும் உள்ளது. பிறந்த நேரத்தை வைத்து அதன் வருங்காலத்தைச் சொல்வார்கள். கையிலுள்ள ரேகையைப் பார்த்து வருங்காலத்தைப் பற்றிக் கூறுவதும் உண்டு. இதனை ரேகை பார்த்தல் என்பர். விண்ணியல் நிகழ்வுகளே வாழ்வியல் நிகழ்ச்சிகளை நிச்சயிக்கின்றன என்று மக்கள் நம்பத் தொடங்கிய நிலையில் சோதிடம் வளர்ச்சியுற்றது எனலாம். இச்சோதிடம் பற்றி பெண்ணரசுக் காவியத்தில் சில குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

            பெண்ணரசிக்குக் குழந்தை பிறந்து இருபத்தேழு நாட்கள் கழிந்தவுடன் சோதிரியரை வரவழைத்துப் பிறந்த பலன் பற்றி கேட்கின்றனர். அவர் குழந்தையின் பிறந்த ராசியை வைத்து கணித்துப் பலன் கூறுகிறார். அவர்கள் கூறியதாவது இந்தப்பெண் நாட்டை ஒரு குடைக்குள் ஆள்வாள் என்றும், சிவன் அருளால் அரசும் அழித்து, நாடும் இழப்பாள் என்று அவளுடைய வருங்காலத்தைக் கணித்து சொல்கின்றனர்.இதனை,

                        “ நகரில் ஒரு குடைக்குள் ஆலவும் வேணும் 

                    ஆண்டங் கிருக்கின்ற நாளது தன்னிலே

                   அழிவு வருங்கானும் ராசாக்களோடு செயித்து

                   மிக்க சிவலோகம் சேரவும் வேனும் ….”8.

என்ற கதைப்பாடல் வரிகளால் அறிய முடிகிறது.

பெண்ணரசுக் காவியத்தில் நாகம் ஈனும் மணி ஆல், அரசமரமாக முளைக்கும் என்ற மக்களின் நம்பிக்கை விசித்திரமாக உள்ளது எனலாம். வீட்டில் குளவி கூடு கட்டுவது குழந்தைப் பேற்றுக்கான அறிகுறியாக நம்புகின்றன. வனத்திலிருந்து மரங்களைப் பெற வனதெய்வங்களுக்கு பலியிடும் வழக்கத்தினை இக்காவியத்தின் மூலம் அறிய முடிகிறது. மேலும் வருங்காலத்தை அறியலாகும் கலையாக சோதிடம் இன்றுவரையிலும் தொடரும் நம்பிக்கையாக மக்களிடம் இருந்து வருகிறது எனலாம்.

                        “பழங்காலம் முதல் இன்று வரை மக்கள் கொண்டிருந்த நம்பிக்கைகளையும் பின்பற்றி வருகின்ற சடங்குகளையும் இலக்கியங்கள் வாயிலாகவே தெளிவாக அறிந்து கொள்ள முடிகின்றது.”9 மனித சமூகம் ஆரம்பகாலம் தொட்டு இன்றுவரை எத்தனையோ மாற்றங்களுக்கு உட்பட்டிருந்தாலும், அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்திருந்தாலும் பண்டைக்காலம் முதல் இன்றுவரை சில பழக்கவழக்கங்களை மக்கள் கடைபிடிக்கத் தவறவில்லை. பழமையில் இருந்து புதுமைக்கு மாறினால் தங்களுடைய வாழ்வில் துன்பங்கள் ஏற்படும் என்று கருதுகின்றன.  எனவே சடங்குகள் மனித வாழ்வில் முக்கிய பங்கு வகுக்கின்றன என்றால் அது மிகையாகாது. இத்தகைய சடங்குகளையும், நம்பிக்கைகளையும் மேலும் நுணுகி ஆராய்ந்தால் அக்கால மக்களின் வாழ்வியல், சமுதாயநிலை பண்பாட்டுக் கூறுகளைத் தெளிவாக அறிந்துகொள்ள முடியும்.

————————————-

சான்றெண்விளக்கம் 

1.கிருட்டிணசாமி.க, நாட்டுப்புற இலக்கியம் ஓர் ஆய்வு, சீதை பதிப்பகம், சென்னை,முதல் பதிப்பு – ஜூன் 2007, பக்கம் – 16.

2.விவேகானந்தன்.சிவ, பெண்ணரசுக்காவியம், காவ்யா, கோடம்பாக்கம், சென்னை, முதல் பதிப்பு – 2012, பக்கம் – 122.

3.மேலது பக்கம் – 124.

4.மேலது பக்கம் – 128.

5.காந்தி.க, தமிழர் பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, முதல் பதிப்பு – 1980.

6.அகநானூறு, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்(பி) லிமிடெட், அம்பத்தூர், சென்னை, ஐந்தாம் பதிப்பு – அக்டோபர் – 2014, பக்கம் – 63, பாடல் எண் – 22.

7.விவேகானந்தன்.சிவ, பெண்ணரசுக் காவியம், காவ்யா, கோடம்பாக்கம், சென்னை, முதல் பதிப்பு – 2012. பக்கம் – 132.

8.மேலது பக்கம் – 135.

9.ஆதித்தன்.த, சங்க இலக்கிய சடங்குகளும் நம்பிக்கைகளும், வல்லமை மன்னிதழ், ஆகஸ்ட் – 2018.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.