ஆடிப்பாவைப் போல: சூழும் பிரதிபிம்பங்கள்

முனைவர் அ.மோகனா
உதவிப் பேராசிரியர்
தமிழ்த் துறை
தியாகராசர் கல்லூரி, மதுரை


பிரதி என்றால் பல்வேறு செய்திகள் போகும் தந்திக் கம்பி எனலாம். வாழ்த்துச் செய்தியும் போகும். மரண அறிவிப்பும் போகும். நாவல் பிரதியாகப் பார்க்கப்படுகையில் அதன் அழகியல் தள்ளிப் போடப்படுகிறது. அழகியலாகப் பார்க்கப்படுகையில் அதன் பிரதியியல் (அதாவது மொழி, வடிவம், செய்தி, உத்தி) என்று எந்திரத்தின் பல பாகங்கள் போல தன்மைத் தள்ளிப் போடப்படுகிறது.
– தமிழவன்

சமகால அரசியலுடன் நெருங்கிய தன்மை கொண்டவை நவீனப் புனைவுகள். வடிவத்திலும் கோட்பாட்டு அளவிலும் அவை புதிய தன்மைகளை உட்செரித்துக் கொண்டிருந்தாலும் பேசும்பொருளில் சமகால யதார்த்தத்தை அவற்றால் தவிர்க்க இயலுவதில்லை. 2017 ஆகஸ்டில் தமிழவனின் ‘ஆடிப்பாவைபோல’ நாவல் வெளியானது. அந்நாவல் குறித்த நிகழ்வுகளும் தொடர்ந்து ஒருங்கிணைக்கப்பட்டன. தற்பொழுது ஓராண்டு இடைவெளிக்குப் பிறகு அந்நாவலுடனான பயண அனுபவத்தை நோக்கும்போது இன்றும் இந்நாவலைப் பேச வேண்டிய தேவை இருப்பதனை உணரமுடிகின்றது.

தமிழவனின் ‘ஆடிப்பாவைபோல’ நாவலைப் பிரதியாகக் காணும்போது பெறப்படுகின்ற அனுபவத்திற்கும் அதனை அழகியலாகப் பார்க்கும்போது பெறுகின்ற அனுபவத்திற்குமான ஊடாட்டம் குறிப்பிடத்தக்கது. இவ்விரு நிலைகளிலும் அணுக வேண்டிய தேவை இந்நாவலுக்கு உண்டு. இந்நாவலைப் பிரதியாக அணுகும்போது இரண்டு காலங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. ஒன்று பிரதியின் காலம் மற்றொன்று கதையின் காலம். பிரதியின் காலத்தைப் பொறுத்தவரை அது நேர்கோட்டுத் தன்மையானது மட்டுமன்றி மாற்றவே முடியாதது. ஒருபடித்தாக அமைந்த இந்தத் தன்மையினால்தான் வாசிப்பவர், வார்த்தை அடுத்து வார்த்தையாக, வாக்கியம் அடுத்து வாக்கியமாக வாசிக்க பழக்கப்பட்டுள்ளனர். (2016:258) இவ்வாறு புனைகதைக்காக வரையறுக்கப்பட்ட வாசிப்பு எல்லைகளைத் தமிழ்ச்சூழலில் உடைக்க முயன்றதாகத் தமிழவனின் ஆடிப்பாவைப்போல நாவல் உள்ளது. இருப்பினும் ஸ்பானிஷ் மொழியிலும் ஆங்கிலத்திலும் இதற்கான முன்னெடுப்புகள் 1963இல் தொடங்கிவிட்டன. அப்புனைவுகள் குறித்துப் பிரம்மராஜனின் பதிவு வருமாறு,

இத்தகைய புனைகதையின் விவரணை எல்லைகளை உடைக்க முயன்ற இரண்டு நாவல்கள் சாமுவெல் பெக்கெட்டின் வாட் மற்றும் கொர்த்தஸாரின் ஹாப்ஸ்காட்ச். அத்தியாயங்களின் ஒழுங்கில் மாறுபாட்டினைச் செய்வதன் மூலம் பிரதியின் ஒருதிசைத் தன்மையை மறுக்கிறார் கொர்த்தஸார். பிரதியின் காலம் தவிர்க்க இயலாதபடி நேர்க்கோட்டுத் தன்மையில் இருப்பதால் நிஜமான கதைக்காலத்தின் பன்முகக் கோட்டுத் தன்மையுடன் ஒன்றிணைய முடியாது. ஒன்றிணைய வேண்டிய கட்டாயத்திலும் அவை இல்லை. (2016:258,259)

ஆடிப்பாவை நாவலில் தமிழவன் மூன்றுவிதமான வாசிப்புகளை வாசகனுக்கு அறிமுகப்படுத்துகின்றார். ஒன்று அகம். அதாவது மொத்தமுள்ள பத்தொன்பது அத்தியாயங்களை 1,3,5 என்று வாசித்து விட்டுப் பின்னர் புறம் 2,4,5 என்று வாசிப்பது. இரண்டாவது வாசிப்பு புறம். முதலில் 2,4,6 என்று புறத்தை வாசித்து விட்டுப் பின்னர் 1,3,5 என்று அகத்தை வாசிப்பது. மூன்றாவது இவற்றை விடுத்து எப்போதும் போல அகப்புறமாக வரிசையாக அத்தியாயங்களை வாசிப்பது. நாவலைப் படிக்கும்போது மூன்று வழிமுறைகளுள் ஏதேனுமொன்றைப் பின்பற்ற வேண்டும். இம் மூன்று முறைகளில் வாசித்தபின்பும் வாசிப்புப் பயணம் முடியவில்லை. ஆடிக்கு முன் பாவையை விடுத்துப் பிறிதொரு ஆடியினை வைப்பதனால் நிகழும் எதிரொளிப்பு முடிவற்ற பிரதிபிம்பங்களாகச் சூழுகின்றன. இத்தன்மை வாசகனுக்கும் பிரதிக்குமான நெருக்கத்தைக் கூட்டுகின்றது. ஆடிப்பாவைபோல நாவலின் பிரதித்தன்மை குறித்த சில விவாதங்களைக் கீழ்க்கண்ட நிலைகளில் பகுக்கலாம்.

பிரதியின் உருவாக்கமும் ஒத்திசைவும். இந்நாவலின் மொழி, அமைப்பு குறித்த சில புரிதல்கள். வசதிகருதி விக்ரம் சந்திராவின் red earth and pouring rain, ஜூலியோ கொத்தஸாரின் Hopscotch ஆகிய நாவல்கள் குறித்த அறிமுகத்துடன் ஆடிப்பாவை போல நாவலுடனான சில ஒப்புமைகள்.
– பிரதி கூறவந்துள்ள செய்தி. குறிப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காலம் (1964). அக்காலத்தின் சூழல், அரசியல் குறித்த சில பதிவுகள். மூன்று நிலைகளில் இதனைப் புரிந்து கொள்ளலாம். ஒன்று திராவிட இயக்கச் செயல்பாடுகள், இரண்டு இடதுசாரி இயக்கத்தின் நிலைப்பாடு,
– மூன்று இவை குறித்த எந்தப் பிரக்ஞையுமற்ற திருவாளர் வெகுசனங்கள். இவற்றை மையப்படுத்தி நிகழும் கதை.

1996 ஆம் ஆண்டு முதன்முதல் வெளியிடப்படுகின்ற சிறந்த படைப்புக்கான Commonwealth writer பரிசினை விக்ரம் சந்திரா என்கிற மகாராஷ்டிர எழுத்தாளர் பெறுகின்றார். அவருடைய Red earth and Pouring rain (1995) நாவலுக்காக இவ்விருது அளிக்கப்பட்டது. 1985இல் ஏ.கே.இராமானுஜம் எட்டுத்தொகை நூல்களிலிருந்து சில பாடல்களை மொழிபெயர்த்து Love and War என்று வெளியிடுகின்றார். அந்நூலில் இடம்பெற்ற செம்புலப் பெயல்நீராரின் குறுந்தொகைப் பாடலை, What could my mother be/ to yours? what kin in my father/ to yours anyway? and how/ Did you and I meet ever?/ But in love/ our hearts have mingled/ as red earth and pouring rain (Kurunthogai 40) என்றவாறு இராமானுஜன் மொழிபெயர்த்திருக்கின்றார். இப்பாடலின் கடைசி அடியைத்தான் விக்ரம் சந்திரா தன் நாவலுக்கு வைத்திருக்கிறார்.

அமெரிக்காவில் படிக்கின்ற இந்திய மாணவனான அபய் கோடை விடுமுறைக்கு மும்பை வருகின்றான். விளையாட்டாக அவனால் சுடப்படுகின்ற வெள்ளை முகங்கொண்ட குரங்கொன்று தான் உயிர்த்திருக்க கடவுளோடு ஒரு ஒப்பந்தம் செய்துகொள்கின்றது. அதன்படி தினமும் ஒரு கதையினைக் கூறி அபயின் குடும்பத்தினரை அது மகிழ்விக்க வேண்டும். ஒரு அத்தியாயம் குரங்கு சொல்லும் கதையாகவும் இன்னொரு அத்தியாயம் நிகழ்காலமாகவும் நகர்கின்ற கதையமைப்பினைக் கொண்டது இந்நாவல். அரபியநாட்டின் ஆயிரத்தி ஓர் இரவுகளை ஒத்த அமைப்பில் அக்குரங்கு கதை சொல்லத் தொடங்குகின்றது. அக் குரங்கு தன்னை பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரித்தானிய காலனிய ஆதிக்கத்தை எதிர்த்த கவிஞரான சஞ்சய் பராசர் என்கிறது. பதினெட்டாம் நூற்றாண்டு தொடங்கி பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையிலான சமூகச்சூழல் அக்குரங்கின் மொழியாகப் பயணிக்கின்றது. பல பிராந்தியங்களின் தொகுப்பாக அமைந்த இந்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற முகலாயர்களின் ஆக்கிரமிப்பு, பாரம்பரிய நம்பிக்கை, கடவுளர்கள், தொன்மங்களின் அழிவு மற்றும் தொடர்ச்சியான பண்பாட்டு கலப்பு, பண்பாட்டு சிதைவு, சதி நிகழ்வு, கிறித்தவ மிஷனரிகளின் செயல்பாடு, அமெரிக்க வணிக ஏகாதிபத்தியம் என கதைகளினூடாகப் பரந்து பட்ட அரசியல் செயல்பாடுகள் விரிந்து செல்கின்றன. இடையிடையே அபயின் நிகழ்காலமும் ஊடாடுகின்றது. இறுதியில் அபய் தனது நண்பர்களுடன் இணைந்து அமெரிக்காவின் throwaway pop culture ஐயும் இந்தியாவின் தர்மம், கர்மம் அடிப்படையிலான பண்பாட்டையும் முரண்பொருளாகக் கொண்டு நாடகம் ஒன்றினை இயக்குகிறான்.

இந்த நாவலை ஆடிப்பாவை நாவலோடு ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றியதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று அதன் தலைப்பு; இரண்டு நாவலின் அமைப்பு. தலைப்பினைப் பொறுத்தவரை முன்னர்க் குறித்தபடி சங்க இலக்கியத்துள் குறுந்தொகைப் பாடலொன்றின் அடியினை விக்ரம் சந்திரா கைக்கொண்டது கவனத்திற்குரியது. இருபத்தியிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பிறிதொரு தளத்தில் மீண்டும் சங்க இலக்கியப் பாடலின் அடி தமிழவனால் நாவலின் தலைப்பாகக் கொள்ளப்படுகின்றது. இவ்விரண்டு நாவல்களுமே பிரதியின் காலத்தைப் பேசவில்லை. முந்தைய காலத்தையே பேசுகின்றன.
இரண்டாவதாக நாவலின் அமைப்பு. இரண்டு கதைகள் ஒரே தளத்தில் பயணிப்பது. Red earth and pouring rain நாவலின் உள்ளமைப்பு,
The book of war and ancestors
. . .now. . . 19
The strange passion of Benito de Bojgne 21
. . . now. . . 38
A thin kind of happiness 42
என்றவாறு அமைந்துள்ளது. ஆடிப்பாவை போல நாவலின் உள்ளமைப்பு முன்னர்க் குறித்தபடி அகம், புறம் என்று உள்ளது. விக்ரம் சந்திராவின் படைப்பில் குரங்கின் மூலம் வெளிவருகின்ற கவிஞரின் கதை, அபயின் நிகழ்கால கதை இரண்டையும் தனித்தனி நெடுங்கதைகளாகக் கொள்ளமுடியும். இறுதியில் அவை ஒரு பொருண்மையில் முடிகின்றன. ஆடிப்பாவைபோல நாவலில் அகமும் புறமும் ஒன்றிற்குள் ஒன்று ஊடாடினாலும் தனித்தனியே நகர்ந்து செல்கின்றன. மேலும் ‘செம்புலத்தில் நீர் கலத்தல்’ என்கிற பொருள் இந்தியப் பண்பாட்டின் பொதுத்தன்மையாக விக்ரம் சந்திரா நாவலில் குறியீட்டாக்கம் பெற்றிருக்கின்றது. ஆடிப்பாவைபோல நாவலோ யதார்த்தத்தினைப் பிரத்தியட்சமாகக் காட்டு ஆடி அல்ல. அது அதுபோல் காட்டுவது; பிரதி பலிப்பது. அதாவது அது இப்படியாகவும் இருக்கலாம் என்ற இரட்டைத் தன்மையைக் கூறுவது. இந்த ஆடிஅரசியலின் குறியீடாக இப்பொருள் பயன்பட்டிருக்கிறது. அமைப்பிலும் கதைசொல்லல் தன்மையிலும் தவிர்க்க இயலாத ஒப்புமையை இவ்விரண்டு நாவல்கள் பெற்றிருப்பதைப்போலவே வேறுபட்டும் உள்ளன. இருப்பினும் இந்திய புனைவு மரபில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்ற விக்ரம் சந்திராவின் நாவல் தமிழவனின் ஆடிப்பாவைபோல நாவலை வாசிக்கும்போது நினைவிற்கு வருவது தவிர்க்க இயலாததாகின்றது.
அடுத்ததாக ஜூலியத் கொர்த்தஸாரின் Hopscotch. ஸ்பானிஷ் மொழியில் 1963இல் வெளியிடப்பட்ட இந்நாவல் 1966இல் கிரிகோரி ரபாசாவால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. Hopscotch என்பது குழந்தைகள் கட்டம் போட்டுத் தாண்டி விளையாடுகின்ற ஒரு விளையாட்டினைக் குறிப்பது. இந்நாவலை இத்தகு கட்டங்களால் ஆன விளையாட்டாக கொர்த்தஸார் ஆக்கியிருக்கின்றார். ஆடிப்பாவைபோல நாவல் வெளிவந்த நேரத்தில் முகநூலில் Hopscotch நாவலின் உத்திகள் குறித்துச் சிலாகித்துப் பேசப்பட்டது. எனவே அந்நாவலை முழுமையாக வாசித்து ஆடிப்பாவைபோல நாவலோடு ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றியது. ஆனால் அது அவ்வளவு எளிதானதாக அமையவில்லை. Hopscotch ஒரு மூடுண்ட பிரதி. நாவலின் தொடக்கத்தில் தமிழவன் அளித்திருக்கும் முறை போலவே நாவலைப் படிப்பதற்கான வழிமுறைகள் Table of Instruction என்று கொடுக்கப்பட்டுள்ளன. அப்பகுதி வருமாறு,
In its own way, this book consists of many books, but two books above all.
The first can be read in a normal fashion and it ends with chapter 56, at the close of which there are three garish little stars which stand for the word The End. consequently, the reader may ignore what follows with a clean conscience.
The Second should be read by beginning with chapter 73 and then following the sequence indicated at the end of each chapter. In case of confusion or forget fullness, one need only consult the following list:
73-1-2-116-3-84-4…
Each chapter has its number at the top of every right – hand page to facilitate the search.
584 பக்கங்களும் மூன்று பகுதிகளும் கொண்ட இந்நாவலின் கடைசிப் பகுதி நாவலின் பிற்சேர்க்கை போன்றுள்ளது. இவ்வாறான முயற்சிகள் தமிழில் இன்னும் கால்கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது. இந்நாவலின் அமைப்பு குறித்து பிரம்மராஜன் கூறியுள்ள கருத்து வருமாறு,
1-36 அத்தியாயங்கள் பாரிஸ் நகரில் அமைந்திருக்கின்றன. 37-56 அத்தியாயங்கள் அர்ஜன்டீனாவில் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஹாப்ஸ்காட்சின் முன்னேற்றம் அத்தியாயம் 73இல் ஆரம்பிக்கிறது. இந்த வாசிப்புகளுக்காக ஆசிரியனின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நாவலின் முழுமைக்கும் முன்னும் பின்னுமாகத் தாவித் தாவிக் குதித்துச் செல்ல வேண்டியிருக்கிறது. ஹாப்ஸ்காட்ச் ஒரு திறந்த முனை எதிர்நாவல். பிரதான இரண்டு விவரணைப் பகுதிகளும் மொத்த நாவலின் 349 பக்கங்களை எடுத்துக் கொள்கின்றன. மூன்றாவது விவரணைப் பகுதியான 350 – 564 From Divers Sides தேவையில்லை என்று நினைத்தால் கூட எடுத்துவிடக் கூடிய அத்தியாயங்களால் அமைந்திருக்கிறது.(2016:262)
Hopscotch நாவல் From the other side என்று தொடங்குகிறது. இந்நாவலில் மீனவர்களின் சடங்கு குறித்த லெவிஸ்ட்ராஸின் சிறிய மேற்கோளொன்று எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.(ப.359) நவீன பெண் நாவலாசிரியரான அனைஸ்நின் வின்டருடைய ஆட்டிவிஸ் என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்ட மேற்கோள் ஓர் அத்தியாயமாக (110) உள்ளது. நவீன கனடா நாவலாசிரியரான மால்கம் லவ்ரியின் அண்டர் த வால்கனோ நாவலின் ஒற்றை வரி மேற்கோள் அத்தியாயம் 118 ஆக உள்ளது. இப்பகுதிகளை வாசகர்கள் கழற்றிவிடக்கூடிய அத்தியாயங்களாகக் கருதலாம் என்கிறார் பிரம்மராஜன் (2016:266,267). ஆடிப்பாவைபோல நாவலின் தொடக்கத்திலும் தமிழவன் சுந்தரராமசாமி, ஏ.எஸ்.பன்னீர்செல்வம் ஆகியோரின் எழுத்துகள் பயன்படுத்தியுள்ளேன். அவர்களுக்கு நன்றி என்று குறிப்புப் போட்டுள்ளார். ஆனால் அவ்வெழுத்துகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவை பிரதியின் கதைக்குள் பிணைந்துள்ளன. அவ்விருவரையும் முழுமையாகப் படிக்காத வாசகனால் அவ்வெழுத்துக்களைக் கண்டுபிடிக்க இயலாது. இருப்பினும் ஆய்வு நேர்மையைப் போல ஒரு படைப்பு நேர்மையைத் தமிழவன் கடைபிடித்துள்ளார். இந்தத் தன்மை Hopscotch நாவலுடன் அமைப்பு நிலையில் ஒப்பிட உதவுகிறது.

Hopscotch நாவலின் பிரதான பாத்திரங்கள் ஆலிவேய்ரா – லாமகா. இவ்விருவரின் அகவாழ்ககைச் சிக்கல்கள் நாவல் முழுக்க பரந்து கிடக்கின்றன. பாரிஸ் நகரில் Club de la serpentine என்ற கிளப் ஒன்று செயல்படுகின்றது. அதில் முடிவற்ற விவாதங்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறான் ஆலிவேய்ரா. பாரிஸ் நகரம் ஒரு சொர்க்கமாக உருவகிக்கப்பட்ட காலகட்டத்தை இந்நாவல் முன்னிறுத்துகின்றது. இந்தக் கற்பிதத்திற்கு எதிரான கருத்துகளை இந்தக் கிளப் வரையறுககின்றது. ஆலிவேய்ரா தனிமனித விமோசனம், எந்த விசாரம், செயல்படாதிருப்பது பற்றிய குற்ற உணர்வு சுயவெறுபபு ஆகிய பல்வேறுபட்ட உணர்வு நிலைகளால் ஆனவன். அவனை ஒரு மத்தியர வர்க்க அறிவுஜீவியாக மட்டுமன்றி சுயப்ரக்ஞை மிகுந்த நாடோடியாகவும் இனங்காண்கிறார் பிரம்மராஜன் (2016:250). ஆடிப்பாவைபோல நாவலின் அகத்திற்குரிய நாயகன் வின்சென்ட் ராஜாவும் ஏறக்குறைய இதே பண்புகளை ஒத்தவன்தான். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை முன்னிட்டுக் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நேரத்தில் அவன் காதலியான காந்திமதியை ஊருக்குப் பத்திரமாகக் கொண்டு சேர்க்க வேண்டிய ‘கடமை’தான் அவனுக்கு இருக்கின்றது. அந்தக் கடமை நிறைவேறும் நேரத்தில் அவனும் ஊருக்குச் சென்றிருந்தான். நாவலின், ‘வெளியில் நடந்து கொண்டிருந்த கலவரங்கள் அவனுக்குள் மெதுவாய் ஒரு பெரும் தீயைக் கிளப்ப ஆரம்பித்தன. தான் புறப்பட்டுப்போய் தன் ஊரை அடையும்போது இருள் தன்னை வரவேற்கும் என்ற நினைப்பு வந்தது. அப்போது கலவரம் நினைவிலிருந்து அகன்றது. இருள் மட்டுமே நினைவில் அகலாமல் நின்றது ’(256) இந்தப் பகுதி வின்சென்ட் குறித்த புரிதலுக்கு உதவுகிறது. இங்கு அவன் மனதில் கிளம்பிய தீ கலவரம் குறித்த ப்ரக்ஞையால் உருவான தீ; காந்திமதி பத்திரமாகப் போய்ச்சேர்ந்திருப்பாளா என்கிற தீ; இரண்டில் எதுவாக இருப்பினும் அந்தத் தீயானது அவன் ஒரு அநாதை என்கிற இருளில் அவிந்துவிட்டது. பிற்காலத்தில் இந்தச் சம்பவத்தை நினைத்து அவன் கொள்ளும் சுயவெறுப்பு, ‘எனக்கு ஆச்சரியமா இருக்கு. நான் இந்தி எதிர்ப்பு சூழ்நிலையில் நடந்துகிட்ட முறைகூட… என் சுயமான உணர்வுகள் சார்ந்து மட்டுமே வாழ்ந்திருக்கிறேன். ஹௌ ஸ்டுப்பிட் ஐ வாய்…’ (388) என்றவாறு வெளிப்படுகின்றது. ஆலிவேய்ரா பாரிஸ் பற்றிய கனவுத் தன்மையான எண்ணங்கள் கரைந்து போவதற்கு முன்னரான தன் நாட்களைக் குற்ற உணர்வு மிகுந்த ஓய்வு நேரங்களால் நிரப்புகின்ற நிலை இத்தருணத்தில் சுட்டத்தக்கது. காந்திமதி குறித்த எந்தக் குழப்பங்களுக்கும் விடைதேடும் முயற்சியில் வின்சென்ட் ஈடுபடவில்லை. ஆலிவேய்ரா தன் காதலியுடன் கொள்கிற மனவிசாரம் இங்குக் கவனத்திற்குரியது. அவன் லாமகாவை ஒரு பைத்தியக்கார ஹாப்ஸ்காட்சாகக் கூறுவது; மனநிலை பிறழ்ந்த நிலையில் லாமகாவின் உண்மை இயல்பினைப் புரிந்து கொள்ளும்போது இறந்து போவது. அல்லது இறக்காமலும் இருக்கலாம் என்கிற வாசப் பிரக்ஞைக்கு விடப்பட்டு பிரதிக்குள் தொலைந்து போவது நிகழ்கிறது. ஆனால் வின்சென்ட் ராஜா ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த தன் நண்பன் ஆதிக்க சாதியினரால் கொல்லப்பட்ட நிகழ்வை ஏற்றுக் கொள்ள இயலாமல் சமூகப் ப்ரக்ஞை பெற்று அடுத்தகட்டத்தை நோக்கிச் செல்கிறான். இது தமிழ்மரபிற்குரிய ஹீரோயிச மாற்றம். மேற்கொண்டு Hopscotchன் கதை மாந்தர்களோடும் நிகழ்வுகளோடும் ஆடிப்பாவைபோல நாவலை ஒப்பிட அதன்மீதான ஆழ்ந்த வாசிப்பும் பிரெஞ்சு மொழிப் பயிற்சியும் தேவை. ஒரு சிறிய நிலையிலான ஒப்பிடலுடன் மேற்கத்திய புனைவுலக மரபில் உருவான உத்தியொன்றின் அறிமுக நிலையாக மேற்கண்ட செய்திகளைக் கொள்ளலாம்.

அடுத்ததாக ஆடிப்பாவைபோல நாவலின் கதை. மேலும் வெளியீட்டகம் ஆடிப்பாவைபோல நாவல் குறித்துச் சொல்லாட்டம் என்கிற கட்டுரைத் தொகுப்பொன்றினை வெளியிட்டுள்ளது. இத்தொகுப்பினைத் தாண்டி இந்நாவல் குறித்து விவாதிப்பதற்கு ஏதேனும் இடம் இருக்கிறதா எனில் அது கடினம். குறிப்பாக ஜமாலன், துரைச்சீனிச்சாமி, வின்சென்ட் இவர்களுடைய கட்டுரைகளைக் கடந்து பேசுவதற்கு ஏதேனும் கண்ணிகள் உள்ளனவா என்று தேட வேண்டியுள்ளது. இவர்கள் விட்ட இடங்களில் இட்டு நிரப்புகின்ற வேலையை மட்டுமே அடுத்த கட்டத்தில் செய்ய இயலும். முன்னர்க் குறித்தபடி மூன்று நிலைகளில் இக்கதையினை அணுகலாம். ஒன்று திராவிட இயக்கச் செயல்பாடு ஒரு கட்சிசார்ந்த செயல்பாடாக மடைமாற்றம் அடைந்து அது மாணவர், மக்களின் போராட்டத்தை உணர்வு நிலைகளை எப்படிப் பயன்படுத்திக் கொண்டது என்பது. இரண்டாவது இடதுசாரி இயக்கமானது ஒரு பார்ப்பனிய போர்வையில் செயல்படுகின்றது என்கிற குற்றச் சாட்டிற்கு ஆளாவதோடு தொடர்ந்து நக்சல்களாகப் போராளிகள் கருதப்பட்ட நிலையினையும் அவர்களின் கருத்துகள் திருடப்படுவதையும் பேசுவது. மூன்றாவது இது குறித்த எந்த அக்கறையும் அற்ற வெகுசனங்களின் வாழ்வு.
கடவுள் மறுப்பு என்பது புரூனோ எரிக்கப்பட்ட

பிறகு மேற்கத்திய சூழலில் ஓர் அதிர்வாகக் கிளம்பி இரண்டாம் உலகப்போரின் பேரழிவிற்குப் பின்னர் இயக்கமாக உருப்பெற்ற கருத்தாக்கம். இதன் நீட்சியைத் தமிழகத்தில் காணமுடிந்தது. தியோபிகல் சொசைட்டி, சுயாக்கியானிகள் சங்கம் ஆகியன இந்நிலையில் முன்னோடித்தன்மை கொண்டவை. இதற்குப் பின்னர் உருவான பெரியாரின் சுயமரியாதை இயக்கம் (1879 – 1973) அந்த நூற்றாண்டிற்கு உரிய நெளிவு சுழிவுகளை உள்வாங்கிக் கொண்டு ஒரு சனநாயக இயக்கமாக வடிவம் பெற்றது. பொருளதார காரணங்களை ஒதுக்கிவிட்டுப் பண்பாடு சார்ந்த அடையாளங்களைக் கருத்துநிலைகளை இவ்வியக்கம் முதன்மைப்படுத்தித் திராவிட இயக்கமாக மாறியது. மொழி இவ்வியக்கத்தின் பிரதான கருவியாக இருந்தது. இது குறித்த வீ.அரசு அவர்களின் கருத்து வருமாறு,

வெகுசன வெளியில் பேச்சு சார்ந்து உருவாகும் தொடர்பாடல் (Communication) அரசியல் இயக்கங்கள் காலூன்ற அடிப்படையாக அமைகின்றன. வெகுமக்களுக்கும் அரசியல் கட்சித் தலைவர்களுக்குமான உறவு என்பது, அவ்வியக்கம் மக்களிடத்து முன்னெடுக்கும் உரையாடல் மொழியாகப் பேச்சு அமைகிறது. திராவிட இயக்க பேச்சுகள் குறிப்பாக மேடைச் சொற்பொழிவுகள் திராவிட இயக்கச் சனநாயகச் செயல்பாட்டின் சட்டகங்களாக (Paradigm) வடிவம் பெற்றன. இவ்வகையான முறையில் இந்தியாவில் வேறு எந்த இயக்கமும் செயல்பட்டதாகக் கருதமுடியவில்லை. திராவிட இயக்கத்தின் இவ்வகையான செயல்பாடுகளால் வெகுசனப் பரப்பில் தமிழ்மொழி வளமாகப் பரவிய வரலாறு மிக முக்கியமானது. அதுவும் காலப்போக்கில் நீர்த்துப் போனதாகவும் கருதப்படுகிறது. திராவிட இயக்கத்தின் மொழிசார்ந்த இச்சட்டகத்தின் பண்புகளைப் புரிந்து கொள்ளும் தேவை நமக்குண்டு. (உங்கள் நூலகம், 2017)

மொழியைப் பின்புலமாகக் கொண்டு மக்களோடு தவிர்க்க இயலாத பிணைப்பை ஏற்படுத்திக் கொண்டது திராவிட இயக்கம். இந்த இயக்கச் செயல்பாடு கட்சிச் செயல்பாடாக நீர்த்த நிலையை ஆடிப்பாவைபோல முன்வைக்கின்றது. உணர்வு நிலையால் உந்தப்பட்ட மக்களின் செயல்பாடுகளையும், மாணவர்களின் போராட்டத்தையும் கட்சியின் செயல்பாடுகளாகக் கட்டமைப்பது. மொழிக்காகத் தீக்குளித்த பள்ளி மாணவன் அவன் முருகானந்தமா இல்லையா என்பது வாசகனின் முடிவு. அவன் தம் கட்சியைச் சேர்ந்தவன் என்பதற்கான ஆதாரத்தினைத் தயார்செய்யும் அளவிற்கு மனிதத்தன்மை கேள்விக்குள்ளானதைக் காணமுடிகின்றது. தொடர்ச்சியாக மனிதர்களையும், விலங்குகளையும் வதைத்துக் கொள்கின்ற வெப்பத்தினூடாகவே கட்சி அரசியல் இந்நாவலில் பயணப்படுகின்றது. ‘இயற்கையில் இருக்கும் வெக்கையுடன் அரசியலில் உள்ள வெக்கையும் அந்த ஹாஸ்டல் மாணவர்களின் மனதில் ஏற்பட்டுவிட்டது’(30) என்ற பதிவு இதனை வெளிப்படையாகக் கூறியுள்ளது.

இடதுசாரி இயக்கம் குறித்து எம்.எஸ்.ராவ் என்கிற பாத்திரத்தின் வழி இப்பிரதி பேசியுள்ள கருத்து, ‘நம்ம கம்யூனிஸ்டுகளைப் பாருங்க. முதலாளித்துவத்தப் புரிஞ்சுக்கல. அதுக்குப் பதிலா இன்று பொருத்தமில்லாத க்ளாஸ் அனாலிசிஸ் ஒன்றைத் தூக்கிக்கிட்டு அலையறாங்க. கம்யூனிஸ்டுகளில் பலர் பிராமின்ஸாக இருப்பதுக்கும் கிளாஸ் அனாலிஸிஸை அவர்கள் தூக்கிப் பிடிப்பதுக்கும் தொடர்பில்லன்னு நினைக்கிறீங்களா? முந்தி சமஸ்கிருதம் இப்போ கம்யூனிஸம்… (326) இடதுசாரி இயக்கத்தின் நீர்த்துப்போன தன்மையினைக் காட்டுகின்றது. இந்த இரண்டு நிலை நீர்த்தலுக்கும் இடையில் உண்மையான சமூகப் பிரக்ஞை கொண்ட ஒரு கணிதப் பேராசிரியராக வலம்வருகிறார் சபாஷ்ராஜ். ஒருபக்கம் தமிழ்ப்பேராசிரியர்கள் தான் மொழிப்பிரச்சனையைக் கிளப்புகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் பதிவாகின்றது. இன்னொருபுறம் விடுதியில் மேடைப்பேச்சு பயிற்சி வகுப்பு தமிழாசிரியர் ஒருவரால் ஒருங்கிணைக்கப்படுகிறது. அதேநேரம் சோமன் சட்டர்ஜி என்கிற வேதியியல் பேராசிரியர் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராத் தீவிரவாதியாக வருகிறார்; அர்த்தமுள்ள வார்த்தைகளை மட்டும் பிரயோகித்துப் பேசுகிறார். பாலத்திற்குக் குண்டுவைத்துத் தகர்க்க முயன்றதாகச் சுடப்பட்டு இறக்கவும் செய்கிறார். கட்சி, இயக்கச் செயல்பாடுகளில் கல்லூரிப் பேராசிரியர்களின் பங்களிப்பு ஒரு சரடாக ஊடுருவிச் செல்கின்றது. இறுதியில் ஆளுங்கட்சி, எதிர்கட்சி அரசியல் சமரசமாவதும் கட்சி அரசியலுக்குள் காம்ரேட்களின் முயற்சிகள் காணாமல் போவதும் நடக்கிறது.

இவ்வாறு மக்களின் வாழ்க்கையில் பல மாற்றங்களை அவர்களை மீறித் திணிக்கின்ற அதிகார சூழலில் இதுகுறித்த பிரக்ஞை ஏதுமற்ற மனிதர்களும் உலவிச் செல்கின்றனர். சந்தோஷம், காந்திரமதி, காந்திமதியின் அக்கா விசாலாட்சி, தங்கை அபிராமி, தந்தை விநாயகமூர்தி, ஹெலன், கிருபாநிதி, கிருபாநிதியின் அண்ணன், அண்ணி, அம்மா என்று பெரிய பட்டியல் நீளுகின்றது. இவர்கள்தான் திருவாளர் வெகுசனங்கள். சமூகப் பிரக்ஞை என்ற நிலையில் வின்சென்ட் மட்டும் மடைமாற்றம் பெற்றுவிடுவது கவனிக்கத்தக்கது. அவனது மடைமாற்றம் சந்தோஷத்தின் கொலையோடு சம்பந்தப்பட்டது. ஆதிக்க சாதியினரின் வன்முறைச் செயல்பாடுகளில் காணாமல் போகிறான் சந்தோஷம். தான்சார்ந்த சமூகத்தின் மீதான ஆதிக்க சாதியினரின் காழ்ப்புணர்விற்குப் பயந்து மறைந்து பதுங்கி வாழ்கிறான் சந்தோஷம். இருப்பினும் ஒருகட்டத்தில் ஒளிவதற்கு முடியாமல் இல்லாமல் போக நேர்கின்றது. காந்திமதி இந்தி எதிர்ப்புப் போராட்டம் குறித்து நினைத்துப் பார்ப்பதாக அமைந்த பகுதி,‘ காந்திமதி இந்தி எதிர்ப்புப் போராட்டம் பற்றி முழுமையாய்ப் புரிந்து கொள்ளும் ‘வயது’ தனக்கு இல்லை என்று நினைத்தாள். அல்லது தன் சூழலில் அரசியல், போராட்டம் என்ற நினைவுகளுக்கு இடமில்லை என்று நினைத்தாள். பெரும்பான்மை ஆட்களும் தன்னைப் போலத்தானே என்றும் எண்ணினாள். அவள் தங்கியிருந்த பெண்கள் விடுதியில் செய்தித்தாள் வந்தன. யாரும் அந்தத் தாள்களை அதிகம் படிப்பதில்லை. அரசியல், தர்ணா, போராட்டம் என்பவை தங்கள் அண்ணன் தம்பிமார்களின் உலகத்தைச் சார்ந்தது என்றே நினைத்தார்கள். செய்தித்தாள்களில் சினிமா செய்திகள் படிப்பது பெண்களின் செயல். அல்லது வார இதழ்களில் வரும் தொடர்கதைகளைப் படிப்பது பெண்களின் ஒரே காரியமாக இருந்தது’ (327). ஒரு வெகுசனக் கருத்தியலை இதைவிடத் துல்லியமாகக் காட்சிபடுத்திவிடமுடியாது. அதே நேரம் காமாட்சி எம்.எல்.ஏ., மலர்க்கொடி இவர்களின் இருப்பு வெகுசன இருப்பிலிருந்து சற்று மாறுபட்டதாக உள்ளது. வான்மீகநாதனின் அரசியல் வாழ்க்கைக்கு முகவரியாகக் காமாட்சியும் பொன்வண்ணனின் அரசியல் செயல்பாட்டிற்குப் பின்புலமாக மலர்க்கொடியும் அவளுடைய தந்தையும் இருக்கின்றனர்.

தமிழ்ச்சூழலில் பாவிச், சாமுவேல் பக்கெட், ஜூலியஸ் கொத்தசார் ஆகியோரால் முன்னெடுக்கப்பட்ட உத்திகள் இன்னும் முழுதாக உள்வாங்கப்படவில்லை. அதற்கான முன்னெடுப்பாக இந்நாவலைப் புரிந்து கொள்ள முடியும். இருப்பினும் தமிழவனின் ஆடிப்பாவைபோல நாவல் அறிமுகப்படுத்தியிருக்கும் உத்தி தமிழுக்கு உரியதான புதிய உத்தியாகவே கால்கொண்டுள்ளது. தமிழவனின் ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள், ஜி.கே.எழுதிய மர்மநாவல், வார்ஸாவில் ஒரு கடவுள் உள்ளிட்ட நாவல்களின் வரிசையில் பார்க்கும்போது மொழிகனம் இந்நாவலில் குறைவு. ஆனால் பேசியிருக்கும் அரசியல், கைக்கொண்டுள்ள உத்திகள் வாசர்களை அடுத்தகட்ட நகர்வை நோக்கிச் செல்லவைக்கின்றன. பிறமொழி நாவல்களின் உத்திமுறைகளை வாசிக்கத் தூண்டுகின்றன. இந்நாவலுடனான பயணம் வாசகனை முடிவற்ற வெளியில் சேர்க்கின்றது.

———————
உதவிய நூல்கள்
1995 Red earth and pouring rain, Vikram Chandra, Penguin Books, New Delhi
2013 Hopscotch, Julio Cortazar, Random house, U.S.A
2016 இலையுதிராக் காடு, பிரம்மராஜன், எதிர் வெளியீடு, பொள்ளாச்சி
2017 ஆடிப்பாவைபோல, தமிழவன், எதிர்வெளியீடு, பொள்ளாச்சி

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *