மன நல ஆலோசனை: கேள்வி பதில்கள்
–கார்த்திகேயன், விமலதாரணி.
கேள்வி : 1
என் பெயர் பல்லவி வயது 35. எனக்கு 2 குழந்தைகள். சமீபத்தில் என் கணவர் மும்பைக்கு மாற்றலாகி செல்ல நேர்ந்தது விட்டது. நான் பத்தாவது வகுப்பு வரைதான் படித்துள்ளேன். தற்போது வீட்டிற்குத் தேவையானதை வாங்கவும், பில் கட்டவும் என் குழந்தைகளை அழைத்து வரவும் நான்தான் செல்ல வேண்டியுள்ளது. (இதற்கு முன் இந்த வேலைகளை என் கணவரே செய்து விடுவார்.) ஆனால் எனக்கு தனியே வெளியெ செல்லவே பயமாக இருக்கிறது. போவதற்கு முன் படபடப்பாகவும், இதயத்துடிப்பு அதிகமாகவும் உள்ளது. நான் என்ன செய்வது மருத்துவரை காண வேண்டுமா?
பதில் :
உங்கள் உடம்புக்கோ, இதயத்திற்கோ எந்த பிரச்சினையும் இல்லை, உங்களுடைய பிரச்சனை பதட்டம் (ஆன்சைட்டி ). பெரிய ஆபத்தில் மாட்டிக் கொள்ளும் போது மனிதர்களுக்கு இயல்பாய் ஏற்படக்கூடிய உடலியல் மாற்றங்கள் உங்களுக்கு தனியாக வெளியே செல்ல வேண்டும் என்று நினைக்கும் போதே ஏற்படுகிறது. இதற்குக் காரணம், உங்களுடைய எல்லா வெளி வேலைகளையும் தானே செய்து உங்களை பொத்தி பொத்தி வைத்திருந்த உங்கள் கணவர்தான் இதற்கு காரணம் என்றும் கூறலாம். தனியே வெளியே சென்றால் ஏற்படக்கூடிய ஆபத்துகளை முன்கூட்டியே அனுமானிப்பதும், தன்னால் அதை சமாளிக்க முடியாது என்று நம்புவதும், தான் பத்தாவது வரை மட்டுமே படித்திருப்பதால் தனக்கு தகுதி குறைவு என்ற தாழ்வு மனப்பான்மை தான் உங்களுடைய பதட்டத்திற்குக் காரணம். படிப்பிற்கும், சமயோசிதம் மற்றும் புத்திசாலித்தனத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பிரச்சனைகள் ஏற்படுமோ என்று முன்கூட்டியே யோசிக்காமல் வரும் போது பார்த்து கொள்ளலாம் என்று முதலில் நினையுங்கள். எந்த ஒன்றை செய்ய பயமாக இருக்கிறதோ அதையே திரும்ப திரும்ப செய்யும் போது பயம் நீங்கி விடும் எனவே சின்ன சின்ன விஷயங்களுக்காக, உங்களுக்கு பிடித்த விஷயங்களுக்காக அடிக்கடி வெளியே சென்று வர பழகுங்கள். வெளியில் இருப்பர்களுக்கெல்லாம் வேறு வேலையே இல்லை உங்களை கவனிப்பது தான் அவர்களுக்கு முக்கியம் என்ற உங்கள் கற்பனையை ஒதுக்கித் தள்ளுங்கள். உங்களுடைய திறமைகளை பாசிட்டிவ் விஷயங்களை பட்டியலிட்டு அவற்றை வளர்த்துக் கொள்ளுங்கள். இவற்றை செய்தால் உங்களால் இயல்பாக வெளியே சென்று வர முடியும்.
கேள்வி: 2
நான் 23 வயது கல்லூரி மாணவன் நானும் என் சிறு வயது நண்பனும் சமீபத்தில் ஒரு பெண்ணை சந்தித்தோம். நாங்கள் இருவரும் அவளை காதலிக்கிறோம். இதைப்பற்றி நாங்கள் இருவரும் பேசிக் கொள்ளவில்லையென்றாலும் இந்த காதல் விவகாரத்தால் எங்களின் நட்பு கெட்டுவிடுமோ என்று பயமாக இருக்கிறது. இதற்கு எனக்கு ஒரு வழி சொல்லுங்கள்.
பதில் :
நீங்கள் 23 வயது நிரம்பிய கல்லூரி மாணவர் என்பதால் உணர்ச்சி வசப்படாமல் இப்பிரச்சனையை அணுகலாம். நீங்கள் முதலில் செய்ய வேண்டியது, உங்கள் நண்பருடன் பேசி அவரும் அந்த பெண்ணை காதலிக்கிறாரா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். அவரும் காதலிக்கிறார் என்றால் அடுத்து அந்த பெண்ணிடம் கேட்டு அவள் உங்கள் இருவரில் யாரை காதலிக்கிறார் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள். ஒரு வேளை உங்கள் இருவரில் யாரையுமே அவள் காதலிக்காமல் நட்போடு பழகுவதாகவும் இருக்கலாம் அல்லவா? உங்கள் நண்பருடன் பேசும் போது அவள் உங்கள் இருவரில் யாரை காதலித்தாலும் மற்றவர் விட்டுக்கொடுத்து விட வெண்டும் என்று முடிவெடுத்துக் கொள்ளுங்கள். முடிவு செய்வதுடன், முடிவை செயல்படுத்தவும் தயங்கக் கூடாது. சிறு வயது நட்பை மதிப்பவரானால் இந்த முடிவை ஏற்றுக் கொள்வதில் தயக்கம் இருக்காது.
கேள்வி : 3
என் வயது 40. எனக்கு கடந்த 10 வருடங்களாக முதுகு வலி இருக்கிறது. சிறிது நாட்களுக்கு முன் என் தம்பியுடன் சிறிது மனஸ்தாபம் ஏற்பட்டு அதிக கோபப்பட்டு விட்டேன். அதன் பிறகு என் முதுகு வலி அதிகமாகிறது. அதிக உணர்ச்சி வசப்படும் போதெல்லாம் முதுகு வலி அதிகமாவதாகவும் உணர்கிறேன். என் உணர்வு உண்மையானது தானா? அல்லது இது என் கற்பனையா?
பதில் :
உங்கள் உணர்வு உண்மையானது தான். நீடித்த முதுகு வலி என்பது எலும்புத் தேய்மானத்தினால் ஏற்படலாம். எலும்பு தேய்வதால் எலும்பின் பலம் குறையும் போது அதை சுற்றியுள்ள தசைகளின் சுருங்கி விரியும் தன்மை குறைந்து விடும். அதனால் தான் முதுகு வலி போன்ற மூட்டு வலிகளுக்கு அம்மூட்டை சுற்றியுள்ள தசைகளை உறுதியாக்கும் உடற்பயிற்சிகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பர். எனவே உங்கள் முதுகு தசை வேலை பளு அல்லது திடீர் வேலை காரணமாக சுருங்கி மீண்டும் விரிவடையாமல் போனாலோ அல்லது விரிவடைந்து சுருங்காமல் போனாலோ வலி ஏற்படும். இது உடல் ரீதியாக வலிக்கான காரணம். இதற்கு மன ரீதியான காரணமும் இருக்கிறது. நாம் மனதளவில் பயம், கோபம், பதட்டம் போன்ற உணர்வுகளை அடையும் போது நம் நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டினால் உடலில் பல உடலியல் மாற்றங்கள் ஏற்படும். அவற்றில் ஒன்று தான் தசைகள் சுருங்குவது ஆபத்தான தருணங்களில் தான் இந்த உடலியல் மாற்றம் பெரும்பாலும் ஏற்படும். ஆபத்திலிருந்து காத்துக் கொள்ள ஓடவோ, சண்டையிடவோ தசைகளை தயார்படுத்த நம் உடல் எடுக்கும் எச்சரிக்கை நடவடிக்கையே இதுவாகும். நீங்கள் கோபம், பதட்டம் போன்ற உணர்வு நிலைகளில் அதிக நேரம் இருக்கும் போது உங்கள் உடலின் சில தசைகள் இவ்வாறு சுருங்கி விடுகிறது. இதனால் வலி ஏற்படுகிறது. தசை வலியை சரி செய்ய மருந்து, ஓய்வு, சுடு நீர் அல்லது ஐஸ் கட்டி ஒத்தடம் தேவை. அதே நேரம் மனதிற்கு மனம் தளர்த்தும் பயிற்சிகளை செய்தல் வேண்டும். ஒரு நல்ல மன நல ஆலோசகரை சந்தித்து இப்பயிற்சியை கற்றுக் கொள்ளலாம்.
கேள்வி :4
என் வயது 42 என் கணவரின் வயது 45. என் கணவர் மிகவும் நல்லவர். எங்களுக்குள் இணக்கமான உறவே இருந்து வந்துள்ளது. ஆனால் சமீப காலமாக அவர் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் அலுவலத்தில் உடன் பணிபுரிபவர் மூலம் அவருடன் வேலை செய்யும் பெண்ணிற்கும், இவருக்கும் தொடர்பு இருப்பதாக தெரிய வந்தது. அந்த பெண் இரண்டு வருடங்களுக்கு முன் கணவரை இழந்தவர். இதைப் பற்றிக் என் கணவரிடம் கேட்ட போது ஆம் என்று ஒத்து கொண்டாலும் அவரால் அவளை விட முடியவில்லை. அவள் என் கணவருக்கு ஏதோ செய்வினை செய்து விட்டதாக நண்பர்கள் கூறுகின்றனர். இதை நினைத்து எனக்கு பயமாக இருக்கிறது. நான் என்ன செய்வது?
பதில் :
உங்கள் கணவர் நல்லவர். உங்களுடன் இணக்கமாக இருக்கிறார் என்பதால் நடந்த தவறுக்கு அந்த பெண்ணை மட்டும் குற்றம் கூறும் ஒரு மன நிலை தான் அவள் செய்வினை செய்து விட்டாள் என்று கூறுவதெல்லாம். இந்த விஷயத்தில் மற்றவர்களிடம் குறிப்பாக அவருடைய நண்பர்களிடம் இதைப் பற்றி விசாரிப்பது கூடாது. இப்பிரச்சனையை உங்கள் கணவர் மற்றும் அந்த பெண்ணுடன் பேசி தான் சரி செய்ய வேண்டும். உங்கள் கணவர் இந்த விஷயத்தை ஒத்துக் கொண்டதிலிருந்து அவர் தெரிந்தே தான் அந்த பெண்ணுடன் பழகியிருக்கிறர் என்பது தெரிகிறது. திடீரென்று அந்த பெண் கணவரை இழந்ததால் அவர் மேல் ஏற்பட்ட இரக்கம் நாளாவட்டத்தில் இம்மாதிரி உறவில் முடிந்திருக்கும். எப்படியிருந்தாலும் இந்த முறையற்ற உறவை உங்கள் கணவரும் அந்த பெண்ணும் தொடர்வது பல பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும். எனவே இப்பொழுதே அவர்கள் இருவருடனும் சண்டை போடாமல் பேசி அந்த உறவை நிறுத்தி விடச் சொல்லுங்கள். நடந்ததை மறந்து விட்டு இனி நல்ல முறையில் வாழலாம் என்று கணவருக்கு எடுத்துச் சொல்லுங்கள். முடியாவிட்டால் மூவரும் மன நல ஆலோசனை எடுத்துக் கொள்வது உகந்தது.
படம் உதவிக்கு நன்றி: www.123rf.com