தமிழர்கள் போற்றிய, நம் உயிரோடும் உணர்வோடும் கலந்த உன்னதக் காதல் காட்சிகள் சிலவற்றை நினைவுகூர்வோம், நெஞ்சில் ஏந்துவோம்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

தமிழர்கள் போற்றிய, நம் உயிரோடும் உணர்வோடும் கலந்த உன்னதக் காதல் காட்சிகள் சிலவற்றை நினைவுகூர்வோம், நெஞ்சில் ஏந்துவோம்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

முன்னுரை
ஒலைச்சுவடிகள் மூலம் தொடங்கிய சங்க இலக்கியப் பதிப்பு, இன்று வானுயுரத்திற்கு வளர்ந்து நிற்கிறது. எண்ணற்ற அரிய நூல்கள் அழிந்து போனாலும் இன்றும் நம் வரலாற்றை உரைக்கப் பல நூல்கள் துணை நிற்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. கால மாற்றத்திற்கேற்ப நாமும் நம் தேவைகளை மாற்றிக்கொண்டே வருகிறோம். ஒரு காலத்தில் “ஆலும் வேலும் பல்லுக்குக்குறுதி” என்று வாழ்ந்தவர்கள், இன்று பற்குச்சிகளைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டோம். நம் வசதிக்காக நம்மை மாற்றிக்கொள்ளும் போதுதான் வளர்ச்சி ஆரம்பிக்கிறது. இத்தகைய வளர்ச்சியை அனைத்துத் துறைகளிலும் ஏற்றுக்கொள்ள நாம் பழகிவிட்டோம். தமிழ் வளர்ச்சியில் இதை நாம் ஒரு குறிப்பிட்ட அளவிற்கே ஏற்றுக்கொண்டிருக்கிறோம் என்றால் அது மிகையாகாது. கணினித் தொழில்நுட்ப வளர்ச்சி, ஆட்கள் தேவையைக் குறைத்ததோடு, பன்மடங்கு நேரத்தை மிச்சப்படுத்தியுள்ளது. இத்தகு கணினிப் பயன்பாடு இன்று எல்லாத் துறைகளிலும் முத்திரை பதித்து வருகிறது. ஆங்கிலம் இன்று உலகப் பொதுமொழி என்று வளர்ந்ததற்குக் கணினியும் பெரும் பங்கு வகித்ததை நாம் மறுப்பதற்கில்லை. எனவே மொழியின் வளர்ச்சியில் கணினித் தொழில்நுட்பத்தின் பங்கு மிக அவசியமானது அத்தகைய தொழில்நுட்பங்கள் மூலம் சங்க இலக்கியப் படைப்புகளுக்கு எப்படிப்பட்ட கருவிகளை உருவாக்கலாம் என்பதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.
கணினித் தொழில்நுட்பம் (Computer Technologies)
கணினியில் தமிழைத் தட்டச்சு செய்வதும் அதற்கான எழுத்துருக்களை உருவாக்குவதுமே கணினித் தமிழ் வளர்ச்சிக்குப் போதுமானது என்று இருந்துவிட்டால், நாம் தமிழை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு நகர்த்த விரும்பவில்லை என்றே பொருள்படும். ஆங்கில மொழியின் அசுர வளர்ச்சிக்கு அதற்கென சொல்திருத்தி, இலக்கணத் திருத்தி, சொற்பொருள் களஞ்சியம் எனக் கருவிகள் அதிகரித்ததைக் காரணமாகக் கூறலாம். அதுபோன்ற கருவிகளை நம் தாய்மொழியில் உருவாக்கினால் ஆங்கிலத்திற்கு இணையாகத் தமிழின் வளர்ச்சி இருக்கும் என்பதில் ஐயமில்லை.
சங்க இலக்கியத்திற்கென நம்மிடம் உள்ள கருவிகள் எத்தனை? சங்க இலக்கியச் சொற்களுக்கென நம்மிடம் பிரத்தியேக இணைய அகராதி (online dictionary) உள்ளதா, ஆசிரியர் குறிப்பு (author information), நூற்குறிப்பு (poem information), சொல்லடைவு (index), தொடரடைவு (concordance), சொற்பிறப்பு (etymology), பிற மொழி சொற்கலப்பு (non native language words), உரையாசிரியர் வரலாறு, உரையாசிரியர் வழி பொருள் விளக்கம், மொழிபெயர்ப்பு என இவையனைத்தையும் அறிந்துகொள்ள நம்மிடம் வசதியுள்ளதா என்பதைச் சிந்தித்துப் பார்ப்பது மிக அவசியமானது.
கணினி மொழியியல் (Computational Linguistics)
மொழியில் உள்ள இலக்கணக் கூறுகளைக் கணினியில் வழி மாற்றுவதற்கான அறிவியலைக் கணினி மொழியியல் எனலாம். இது இயற்கை மொழியாய்வுக்கு (மனிதன் மொழியைப் புரிந்துகொள்வது போல கணினியும் புரிந்துகொள்ள வழிவகை செய்வது) அடிப்படை ஆகும். கணினி மொழியியல் வழி இத்தகைய பணிகளை மேற்கொள்வது ஆய்வுக்கு நன்மை பயப்பதோடு தமிழ்க் கணினி மொழியியலிலும் ஒரு வளர்ச்சியை உண்டாக்கும். பெரும்பாலும் கணினி மொழியியலில் நவீன தமிழுக்கே பலர் கருவிகளை உருவாக்கி வருகின்றனர். இதைச் சங்க இலக்கிய படைப்புகளுக்குப் பயன்படுத்தும் போது கணினி மொழியியலின் நெகிழ்வுத்தன்மை வெளிப்படும். ஏனெனில், சங்க இலக்கியப் படைப்புகளும் தமக்கே உரிய இலக்கணங்களைப் பெற்றுள்ளன.
பொதுவாக, மொழி என்பது கணிதப் பண்புகளை உடையது. அதன் ஒவ்வோர் இலக்கண மாற்றத்தையும் விதிகள் மூலம் நம்மால் வரையறுக்க முடியும். சான்றாக “உயிர் வரின் உக்குரல் மெய்விட்டோடும்” (உப்பு +ஐ = உப்ப் +ஐ) என்ற புணர்ச்சி விதியைக் கூறலாம். இது போலவே யாப்பையும் நம்மால் வரையறுக்க முடியும்.
சங்க இலக்கியப் பாடல் ஒன்றை உள்ளீடாகக் கொடுப்பதன் மூலம், அப்பாடல் எந்த வகை யாப்பைச் சார்ந்தது என்பதைக் கணினியால் யூகிக்க முடியும். யாப்புக்குரிய இலக்கணங்களை விதிகளாக மாற்றியமைப்பதன் மூலம் இதைச் செய்யலாம். இவ்வகைக் கருவிகள், ஆய்வாளர்களுக்கு எல்லா விதத்திலும் பயனளிக்க முடியும்.
குறிப்புத் தொடர்கள் (Regular Expressions)
குறிப்புத் தொடர்களை ஒரு சொல்லைக் கோப்பில் இருந்து தேடிப் பெறத் துணைபுரியும் கருவி எனலாம். ஸ்டிபன் கோலே கிளினி என்ற அறிஞர் 1950ஆம் ஆண்டு இதை அறிமுகப்படுத்தினார். குறிப்பிட்ட ஒரு சொல்லை முழுவதுமாகவோ அல்லது அதன் பகுதியையோ அது இடம்பெற்றிருக்கும் வாக்கியத்தோடு பெறும் வசதியை நமக்கு அளிக்கும் தொழில்நுட்பமே குறிப்புத் தொடர்களாகும். காட்டாகப் புத்தகம் என்ற ஒரு சொல்லை நாம் நம் கோப்பில் தேட வேண்டுமெனில் அதற்கான குறியமைப்பு, பின்கண்டவாறு அமைய வேண்டும்.
/புத்தகம்/ = “கண்ணன் கடையில் புத்தகம் வாங்கினான்”. தற்போது கணினி ஆவணங்களில் நாம் பயன்படுத்தும் தேடு (find), பதிலிடு (Replace) என அனைத்துமே இதனைக் கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒரு சொல்லின் வடிவத்தை வைத்து அது இடம்பெற்றிருக்கும் வாக்கியத்தைத் தேட, இது நமக்கு உதவுகிறது. சங்க இலக்கியங்களில் இடஞ்சுட்டி பொருள் விளக்குதல் , தலைவி கூற்று, தலைவன் கூற்று, நற்றாய் கூற்று, செவிலி கூற்று என எந்த வாக்கியத்தையும் மிகத் தெளிவாகக் கண்டறிய இந்தக் குறிப்புத் தொடர்கள் பெரிதும் பயன்படும். ஏனெனில் எந்த ஒரு சங்க இலக்கியப் பாடலுக்கும் அதன் தன்மைகேற்ப தனியொரு அடையாளம் இருக்கவே செய்கிறது. இப்பாடல்களின் இயல்புகளின் ஆய்வை (feature analysis) அதாவது அப்பாடலின் நூல், ஆசிரியர் பெயர், பயன்படுத்தப்பட்டுள்ள மொத்த சொற்கள், காலம், விளக்கவுரை, எதுகைப் பட்டியல், மோனைப் பட்டியல், ஓசை, எந்த வகை இலக்கணம், மொழிபெயர்ப்பு, உவமை என அனைத்துமே ஒரு பாடலின் சிறப்பியல்புகளில் அடக்கம். இதை மேற்கொள்வது மூலம் நாம் நம் கணினிசார் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும். சங்க இலக்கியத்திற்கு இது போன்ற ஒரு கருவி
இருந்தால் அது மாணவருக்கு எந்த அளவிற்குப் பயன்படும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இன்றைய சூழ்நிலையில் முனைவர் பட்ட ஆய்வாளர்கள் பலர், சங்க இலக்கியங்களின் பல்வேறு தலைப்புகளின் கீழ் தங்களது ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர் இது போன்ற கருவிகள் உருவாக்கம் அவர்களை ஊக்கவிப்பதோடு மேலும் பல ஆய்வுகள் தொடர நிச்சயம் வழி வகுக்கும்.
சங்க இலக்கியத் தரவுகளைக் கணினித் தொழில்நுட்பத்திற்கேற்ப தகவமைப்பது எப்படி?
சங்க இலக்கியங்களுக்குப் பல்வேறு கருவிகள் உருவாக்கப்பட சாத்தியம் வெகுவாக உள்ள நிலையில் அதைக் கணினிப் பயன்பாட்டிற்கென தகவமைப்பது அவசியமாகிறது. இந்தத் தகவமைப்பு எந்த விதத்திலும் அதன் தரத்தைப் பாதிக்காது. எந்தவொரு கணினிசார் பயன்பாட்டுக்கும் தரவுத்தளம் என்பது மிக அவசியமானது எதை மையமாக நாம் கருதுகிறோமோ அதைத் தரவுத் தளமாக, நம் அவசியத்திற்கேற்ப வடிவமைக்க வேண்டும்.
மேலே நாம் விவாதித்த பல்வேறு விதமான கருவிகளைச் செய்ய நம்முடைய சங்க இலக்கியத்தையே நாம் தரவுத் தளமாகப் பயன்படுத்த வேண்டும். இது நிரல் மொழிக்கு ஏற்ற வகையில் இருப்பது மேலும் சிறப்பானது. காட்டாகப் பத்துப் பாட்டுக்கு ஒரு தொடரடைவி செய்ய வேண்டுமெனில் அதை ஒரு நோட்பேடில் .txt வடிவத்தில் சேகரித்து வைத்துக்கொண்டால் அது ஒரு சிறந்த தரவுத்தளமாகப் பயன்படும். பயனர் எந்தவொரு சொல்லை விரும்புகிறாரோ அந்த சொல்லின் பயிலிடத்தை நம்மால் எளிமையாகக் இதன் மூலம் கண்டறிய முடியும். ஒப்பீட்டு ஆய்வுக்கும் இது துணைபுரியும் (comparative analysis).
Html, xml அல்லது mdb வடிவத்தில் இருந்தால் அது இணையக் கருவிகள் (Internet Applications) செய்வதற்குப் பயன்படும். இதன் மூலம் உலகின் எந்த மூலையில் இருந்தும் இக்கருவியைப் பயன்படுத்துவது சாத்தியமாகிறது. மின் புத்தகங்கள் போல சங்க இலக்கியமும் இணையத்தில் முழுவதும் கிடைத்தால் அது இன்றைய இளைஞர்களையும் சென்றடையும். குறிப்பாகச் செவ்வியல் இலக்கியங்களுக்கு இது போன்ற ஒரு கருவியின் தேவை அவசியமாகிறது.
முடிவுரை
சங்க இலக்கியங்களுக்கெனத் தனியொரு இணையத்தளத்தைத் நாம் ஏற்படுத்திட வேண்டும். அவ்விணையத்தளத்தை நாம் மேற்சொன்ன வசதிகளோடு உருவாக்க வேண்டும். ஏற்கனவே அரிய பல தமிழ் சொற்களை ஆங்கிலத்தின் ஆதிக்கத்தால் நாம் இழந்து வருகிறோம். படிக்காத பலரும் கூட ஆங்கிலம் எனத் தெரியாமலே தமிழோடு ஆங்கிலத்தைப் பயன்படுத்தும் அவலங்கள் இன்று அரங்கேறி வருவதை நம்மில் பலர் கண்டிருக்கிறோம்.
தமிழறிஞர்கள் பலரும் தங்கள் இலக்கியத் திறனாய்வுக்கெனப் பல மணி நேரங்களைச் செலவழிக்கின்றனர் அவர்களின் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்ய ஒரு மென்பொருள் இருந்தால் தமிழுக்கு மேலும் சிறந்த பல படைப்புகள் கிடைக்க அது வழிவகுக்கும். பொருண்மை ஆய்வைத் தவிர மற்ற எல்லா விதமான ஆய்வுகளையும் தற்போது மேற்கொள்ள முடியும். பொருண்மையை ஆராய்வதற்கான சாத்தியக்கூறுகளும் தற்போது பரிசீலனையில் உள்ளன. இது போல் கணினி மொழியியல் அடிப்படை ஆய்வுகள் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு மென்மேலும் வலுசேர்ப்பதோடு மொழிக் கருவிகளின் தரத்தை மேம்படுத்தவும் பெரிதும் துணைபுரியும்.
நூற்பட்டியல்
A grammar of contemporary literary Tamil by Pon.kothandaran
Speech and Language Processing by Danial jurafsky
கட்டுரை
கணினித் தமிழ் வளர்ச்சிக்கான அடிப்படைத் திட்டப் பணிகள் – பேரா.ந.தெய்வசுந்தரம் 2010, உலகத் தமிழ் இணைய மாநாடு.
=========================================================================
ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):
தமிழ் இலக்கியங்களை – குறிப்பாகச் சங்க இலக்கியங்களை ஓலைச்சுவடித் தொழில்நுட்பம் எவ்வாறு தமிழ் வரலாற்றில் சேமித்து, பாதுகாத்து வந்துள்ளது என்பதைக் குறிப்பிடுகிற கட்டுரை ஆசிரியர் , இன்றைய கணினித் தொழில்நுட்பத்தில் அந்த முக்கியப் பொறுப்பைக் கணினித் தொழில்நுட்பம் எவ்வாறு ஏற்றுக்கொள்கிறது, ஏற்றுக்கொள்ள வைக்கவேண்டும் என்பதை மிகத் தெளிவாக வலியுறுத்தியுள்ளார். கணினித் தமிழ் என்பதானது கணினியில் தட்டச்சு செய்வதோடு நின்றுவிடுவதில்லை ; மாறாக, தமிழ் மொழியைக் கணினி புரிந்துகொண்டு, பலவேறுபட்ட கணினிவழி மொழிச் செயல்பாடுகளை மேற்கொள்ள வைப்பதே ஆகும் என்று தெளிவாக எடுத்துரைக்கிறார். மேலும் தமிழாய்வை எவ்வாறு கணினிவழி மேற்கொள்ள முடியும் என்பதைச் சில எடுத்துக்காட்டுகளுடன் ஆசிரியர் விளக்குகிறார். அவ்வாறு கணினி மேற்கொள்வதற்கு ஆய்வாளர்கள் எவ்வாறு கணினிக்குத் தமிழ் அமைப்பைக் கணித அடிப்படையில் விளக்க வேண்டும் என்பதையும் கூறுகிறார்.
கணினித் தொழில்நுட்பத்தின் அடிப்படையே கணிதம் என்பதைத் தெளிவாக உணர்ந்துள்ள கட்டுரை ஆசிரியர், தமிழின் அமைப்பைக் கணித அடிப்படையில் வழங்க இயலும் என்று கூறுவது, தமிழ் இலக்கணத்தின் சிறப்பை எடுத்துக்காட்டி நிற்கிறது. செய்யுள்களின் யாப்பிலக்கணம்கூட கணித அடிப்படையில்தான் அமைந்துள்ளது என்பதைக் கூறுகிற ஆசிரியர், தமிழ் இலக்கியங்களைப் பல்வேறு நோக்கில் ஆய்வு செய்வதற்குக் கணினித் தொழில்நுட்பம் ஏற்றதே என்பதை மிக உறுதிபடச் சொல்கிறார். அதைத் தொடர்ந்து, சங்க இலக்கிய ஆய்வுக்கு எவ்வாறு தரவக மொழியியல் அடிப்படைகளைப் பயன்படுத்தலாம் என்பதை விளக்குகிறார். சங்க இலக்கியங்கள் அனைத்தும் மின்னூல் வடிவத்தைப் பெறவேண்டும் என்று வலியுறுத்துகிறார். அதனை அடிப்படையாகக் கொண்டு, சங்க இலக்கியத் தரவகம் எவ்வாறு தகவமைக்கப்பட வேண்டும் என்பதையும் அவ்வாறு உருவாக்கப்பட்ட அந்தத் தரவகத்தை எவ்வாறெல்லாம் தமிழ் ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் பயன்படுத்தலாம் என்பதையும் நன்றாகவே விளக்குகிறார்.
மேற்கூறிய அடிப்படையில் இக்கட்டுரையானது வல்லமை ஆய்விதழில் வெளியிடுவதற்குரிய தகுதியைப் பெற்றுள்ளது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
=========================================================================

முனைவர் சு. சரவணன்
ஆய்வறிஞர்,
பிரெஞ்சு ஆசியவியல் நிறுவனம், புதுச்சேரி.
சங்கத் தமிழில் எதிர்மறை: தொடரியல் ஆய்வு
எதிர்மறை என்பது உடன்பாடான கருத்திற்கு மறுதலையான கருத்தினை வெளிப்படுத்துவதாகும். இது வினைச்சொல்லமைப்பில் வெளிப்படுவதாகும். சங்கத் தமிழிலக்கியங்களில் அமைந்துள்ளதன்படி எதிர்மறையினை மொழியியல் அடிப்படையில் இருவகையில் ஆய்வு செய்யமுடியும். 1. உருபனியல் ஆய்வுமுறை, 2. தொடரியல் ஆய்வுமுறை. உருபனியல் ஆய்வில் எதிர்மறையானது ஒரு சொல்லுக்குள்ளேயே எதிர்மறை உருபால் உணர்த்தப்படுகின்றது (செய்யலன், சூழேன், செய்யான், செய்யாதான், வாரல் போன்றவை). தமிழ் மரபிலக்கணங்கள் சிலவும் அதற்கான எதிர்மறை உருபுகளைத் தந்துள்ளன.
தொடரியல் ஆய்விலும் எதிர்மறை ஒரு சொல்லுக்குள்ளேயே எதிர்மறை உருபினால் உணர்த்தப்பட்டாலும் அச்சொல் மட்டுமின்றி இன்னொரு சொல்லும் எதிர்மறையை உணர்த்துவதில் பங்குகொள்கிறது. இதனாலேயே இது உருபனியல் ஆய்விலிருந்து வேறுபட்டுத் தொடரியல் ஆய்வினை மேற்கொள்ள இடந்தருகின்றது. ஆயினும், பல்வேறு வகையில் தொடரியல் நிலையில் பெயர்ச்சொற்களைத் தொடர்ந்து எதிர்மறை, பழந்தமிழில் காணப்பட்டாலும் அவையெல்லாம் இங்கு எடுத்துக்கொள்ளப்படாமல் வினைச்சொற்களைத் தொடர்ந்து வருகின்ற ஒருசில தொடர்களே எடுக்கப்படுகின்றன. குறிப்பாகச் சொல்லப் போனால் எதிர்மறையை ஒருசொல்லால் பதிலீடு செய்யக்கூடிய இடங்களில் தொடர்நிலையில் எதிர்மறை வெளிப்படுத்தப்பட்டிருக்கும் இடங்களே பெரும்பான்மையாகக் கவனத்திற் கொள்ளப்படுகின்றன.
இக்கட்டுரையில் எடுத்தாளப்படும் எதிர்மறைத் தொடர்கள் சிறப்பாகச் செய்யுள் வழக்கிற்கு உரியவை என்றும் குறிப்பிடலாம். இவை தற்காலத்தில் பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படவில்லை. ஆனாலும் மாற்று இலக்கண வடிவங்களில் தொடர்நிலையில் இவைபோன்ற தொடரமைப்புகள் தற்காலத் தமிழில் பேசுபவரின் மனநிலைக்கேற்பப் பயன்படுத்தப்படுகின்றன. அவை கீழே சுட்டப்படும். இக்கட்டுரையில் குறிப்பிடப்படாத ஏனைய எதிர்மறைத் தொடர்களும் பழஞ்செய்யுட்களில் பயின்றுவந்துள்ளன என்றாலும் அவை பெரும்பாலும் இன்று பேச்சுவழக்கிலும் அவ்வாறே காணப்படுகின்றன. அதனாலேயே அவை இங்கு எடுக்கப்படவில்லை.
இங்குச் சுட்டிக் காட்டப்படுபவை; இரண்டு சொற்களில் இரண்டும் எதிர்மறையினை உணர்த்தும் வகையில் அமைவது (உண்ணேன் அல்லேன் – இவ்வாறு இரண்டு எதிர்மறை வடிவங்கள் அமைந்து பொருளளவில் உடன்பாட்டுப் பொருளினைத் தருகின்றது). இரண்டு சொற்களில் முன்னது உடன்பாடாகவும் பின்னது எதிர்மறை வடிவத்திலும் அமைந்து எதிர்மறைப் பொருளைத் தருவது (உண்பேன் அல்லேன்). இவ்விருவகையில் வரும் சொற்களிலும் பாலியைந்து எதிர்மறையை உணர்த்துவதை அறியலாம். இவ்வாறன்றித் தொழிற்பெயரைத் தொடர்ந்து அதே சொற்பொருள் வடிவமுடைய சொல் எதிர்மறையில் வருவது (உண்ணலும் உண்ணேன்). தொழிற்பெயரை அடுத்து வேறு வடிவத்துடன் எதிர்மறைச்சொல் வருவது (எடுக்கல் செல்லாது) என்று நால்வகையில் அமைந்த எதிர்மறைகளைத் தொடரியல் அணுகுமுறையில் சங்கத் தமிழிலக்கியத்திலிருந்து ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
இரண்டு சொற்களும் எதிர்மறை வடிவத்தில் வருவது
’அறியேம் அல்லேம்; அறிந்தனம் மாதோ!’ -ஐங். 240
’காணேம் அல்லேம், கண்டனம், கடத்திடை’-கலி. 9: 9
மேற்கண்ட தொடர்களில் இரண்டு சொற்களும் எதிர்மறையில் வந்துள்ளன. ஆயினும் இரண்டு சொற்களும் சேர்ந்து பொருளுணர்த்தும்போது அப்பொருள் உடன்பாட்டில் வருகின்றது. ’அறியேம் அல்லேம்’ என்னுஞ் சொற்கள் எதிர்மறை வடிவங்களில் அமைந்து ‘அறிந்தோம்’ என்னும் உடன்பாட்டுப் பொருளைத் தருகின்றன. மேலும் அத்தொடரில் ‘அறிந்தனம்’ என்ற உடன்பாட்டுச் சொல்லும் எதிர்மறை வடிவங்களைத் தொடர்ந்து வந்துள்ளது. இச்சொல் இல்லாமலும் அவ்விரண்டு சொற்களும் உடன்பாட்டினை உணர்த்துவதை அறியலாம். ஆயினும் உரையாசிரியர்கள், தேற்றத்திற்காக ‘அறிந்தனம்’ என்ற சொல் பயன்படுத்தப் பட்டுள்ளது என்று விளக்குகின்றனர். இதே நிலையினைத் தான் இரண்டாவதாக உள்ள ’காணேம் அல்லேம்’ என்ற எதிர்மறைச் சொற்கள் இடம்பெற்ற தொடரிலும் காணமுடிகின்றது. இதுபோன்ற இரட்டை எதிர்மறைச் சொற்கள் இடம்பெற்று உடன்பாட்டினை உணர்த்தும் வகையில் பயன்படுத்தப்பட்டிருப்பது உரையாசிரியர்கள் கூறியதுபோல் தேற்றம் என்னுங் காரணமுமாகலாம் என்று கொள்ள முடிகின்றது. இவற்றை இரட்டை எதிர்மறை என்றும் அவை இரண்டும் சேர்ந்து உடன்பாட்டை உணர்த்துகின்றன என்றும் சுசீலா (2001: 43) குறிப்பிடுகின்றார். இரட்டை எதிர்மறையால் உடன்பாட்டுத் தேற்றம் உணர்த்தப்படுகின்றது என்கிறார் ஏவா வில்டன் (2018: 153).
தற்காலத் தொடர்களுடன் இவற்றை ஒப்பிடும்போது பேசுபவரின் மனநிலையால் தேற்றப் பொருளை உணரமுடிகின்றது. பழந்தமிழ்த் தொடர்களில் முதற்சொல் வினைமுற்றமைப்பாக வும் இரண்டாவது சொல் குறிப்பு எதிர்மறை முற்றாகவும் அமைகின்றன. தற்காலத் தொடரமைப்புகளில் முதற்சொல் வினைமுற்றமைப்பில் வராமல் இலக்கண வடிவங்களில் வேறுபட்டு வருகின்றது.
நான் அவனிடம் பேசாதவன் இல்லை – பேசுகிறவன் (பேசுறவன்)
நான் அவனிடம் பேசாதவன் கிடையாது – பேசுகிறவன் (பேசுறவன்)
மேற்கண்டவற்றுள் வினையாலணையும் பெயரமைப்பில் ஒருசொல்லும் குறிப்பு வினை முற்றில் ஒருசொல்லும் எதிர்மறையில் வந்து பாலியைபிலும் வேறுபடுகின்றன. ஒற்றைச் சொல்லாக வருகின்ற உடன்பாட்டுச் சொல்லும் வினையாலணையும் பெயராகவே வருகின்றது. இங்குத் தேற்றப்பொருளே வெளிப்படுகின்றது. இப்பொருளையே பழந்தமிழ்த் தொடரமைப்புகள் வெளிப்படுத்தும் பொருளாகக் கருதலாம். மேலும்,
நான் அவனிடம் பேசாமல் இல்லை பேசுகிறேன்
எனத் தற்காலத் தமிழில் வினையெச்ச அமைப்புடன் சேர்ந்தும் இரட்டை எதிர்மறை வந்து உடன்பாட்டுப் பொருளைத் தருகின்றது.
மேலும், ராஜம் (1992: 763) தொடரமைப்பில் எதிர்மறைக்காக,
’தோன்றாது இருக்கவும் வல்லன்’ -புறம். 315: 5
என்னும் புறநானூற்று வரிகளை எடுத்துக்காட்டி வினையெச்சத்தில் எதிர்மறை வந்துள்ளதைச் சுட்டுகின்றார் (எதிர்மறை வினையெச்சம் + செயவெனெச்சம்). ஆயினும் இத்தொடரை வினையமைப்பில் ஒற்றைச் சொல்லினால் பதிலீடு செய்யமுடியாது.
தற்காலத் தமிழிலும்,
வராமல் இருக்க வேண்டும்,
பேசாமல் இருக்க வேண்டும்
என்னுந் தொடர்களின் பயன்பாட்டைக் காணமுடியும்.
ஒருசொல் மட்டுமே எதிர்மறை வடிவத்தில் வருவது
இரண்டில் ஒருசொல் மட்டுமே எதிர்மறை வடிவத்தில் வர ஒருசொல் உடன்பாட்டில் வந்து இரண்டும் சேர்ந்து எதிர்மறையை உணர்த்துவதாகும்.
செல்வார் அல்லர் என்று யான் இகழ்ந்தனனே -குறும். 43:1
விலங்கிரு முந்நீர் காலிற் *செல்லார் -குறும். 130:2
ஈயாய் ஆயினும் இரங்குவேன் அல்லேன் –புறம். 209: 13
செல்வேம் அல்லேம் என்னார்; கல்லென் -புறம். 31:11
’செல்வார்’ என்னும் உடன்பாட்டுச்சொல் ’அல்லர்’ என்னும் எதிர்மறைச் சொல்லுடன் இணைந்து ’செல்லமாட்டார்’ என்னும் எதிர்மறைப் பொருளைத் தருகின்றது. ஆயினும் ’செல்வார் அல்லர்’ என்ற இரண்டு சொற்களுக்குப் பதிலாகச் ’செல்லார்’ என்ற ஒற்றைச் சொல்லாலும் எதிர்மறையை உணர்த்தும் வகையில் பதிலீடு செய்ய முடியும். மேலும் அந்த ஒற்றை எதிர்மறைச் சொல்லும் குறுந்தொகையில் இடம்பெற்றிருப்பது மேலே காட்டப் பட்டுள்ளது. இதுபோலவே ‘இரங்குவேன் அல்லேன்’, ’செல்வேம் அல்லேம்’ என்ற தொடர்களையும் கொள்ள வேண்டியுள்ளது. எதிர்மறையை உணர்த்தத் தொடர்ச்சொற் களுக்குப் பதிலாக ஒற்றைச் சொல்லால் எதிர்மறை சில இலக்கியங்களில் பதிலீடு செய்யப்பட்டிருப்பதைக் காணும்போது தொடர்ச்சொற்கள் யாப்பமைதிக்காகவேயன்றிப் பேசுவோரின் பல்வேறுபட்ட மனநிலையை வெளிப்படுத்தும் நோக்கிலுங்கூடச் சங்க இலக்கியத்தின் சிலவிடங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதை ஊகிக்க முடிகின்றது. மேற்கண்ட இரண்டு வகைகளிலும் இரண்டு சொற்களும் பாலியைபு கொண்டனவாக அமைந்து எதிர்மறையை உணர்த்துவதைக் காணலாம். இவ்வகையில் வருகின்ற எதிர்மறைத் தொடர்களை ‘இறப்பல்லாக்கால உடன்பாட்டுத் தொடர்கள் + அல் எனப் பகுப்பாய்வு செய்கிறார் சுசீலா (2001: 31).
தற்காலத் தமிழிலும் இவைபோன்ற எதிர்மறைத் தொடர்களை வேறுபட்ட இலக்கணக் கூறுகளுடன் பாலியைபு இல்லாமல் காணமுடியும். வினையாலணையும் குறிப்புவினை முற்றுடன் முடியுமாற்றைக் காணமுடியும்.
அவன் படிப்பவன் இல்லை
அடித்தாலும் அவன் திருந்துபவன் இல்லை
பணம் கொடுத்தாலும் அவர் பொய்சொல்பவர் இல்லை.
போன்ற தொடர்கள் சூழலுக்கேற்பச் சொல்வோரின் பல்வேறு வகையான மனநிலையைக் காட்டுகின்றன. இந்த நோக்கில்கூட பழந்தமிழிலும் மனநிலைகளை வெளிப்படுத்தப் புலவர்கள் இவைபோன்ற சிலதொடர்களைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று கருத முடியும்.
மேலும், கோதண்டராமன் (2010: 275) ”இறப்பு அல்லது இறப்பல்லா உடன்பாட்டு வினைமுற்று அமைப்புடன் அல்லன், அல்லள், அல்லர் போன்றவை இணைந்து வரும். ஆனால் செய்யும் வாய்பாட்டுடன் வாராது” எனக் குறிப்பிடுகின்றார். ’செய்யும்’ என்னும் சொல்லுடன் ’அல்லது’ என்னுஞ் சொல் இணைந்து வரும்போது (செய்யுமல்லது) அந்த இணைவு பெற்ற வடிவம் எதிர்மறையை உணர்த்தாமல் செய்வதல்லது என்பது போல் ‘தவிர’ என்ற பொருளை உணர்த்துவதனால் அவர் செய்யும் வாய்பாட்டின் விடுபாட்டினைக் குறிப்பிட்டுள்ளார் என்று எண்ணத் தோன்றுகின்றது.
இரண்டு சொற்களும் ஒரே சொற்பொருளில் வந்து இரண்டாவது சொல்லில் எதிர்மறை
இரண்டு சொற்களும் வடிவத்திலும் பொருளிலும் ஒற்றுமைப்பட்டு இரண்டாவது சொல் எதிர்மறையாக வந்து இரண்டும் சேர்ந்து எதிர்மறைப் பொருளை உணர்த்தும் நிலையைச் சங்கத்தமிழில் காணமுடியும். இவற்றில் முதற்சொல் –’உம்’ சேர்ந்த தொழிற்பெயராகவும் இரண்டாவது சொல் திணை-பால் உணர்த்தும் எதிர்மறைச் சொல்லாகவும் அமைந்து வருகின்றன.
’இனியான்
உண்ணலும் உண்ணேன் வாழலும் வாழேன்’ -கலி. 23: 6-7
’உண்ணலும்’ என்று உடன்பாட்டுத் தொழிற்பெயராகவும் ‘உண்ணேன்’ என்று எதிர்மறை முற்றாகவும் வந்து இரண்டும் இணைந்து எதிர்மறைப் பொருளான ‘உண்ணமாட்டேன்’ என்பதை உணர்த்துகின்றன. இதே முறையினைப் பின்னர் உள்ள ‘வாழலும் வாழேன்’ என்பதற்கும் பொருத்த வேண்டும். ஆயினும் ‘உண்ணேன், வாழேன்’ என்னும் வினை வடிவங்கள் ‘செய்’ என்னும் வாய்பாட்டு வடிவமாக வந்து ’உண்ணலைச் செய்யேன், வாழலைச் செய்யேன்’ என்று வரவேண்டும் அல்லது ’உண்ணல், வாழல்’ என்னும் வினைகளின் உண்மையான வினைவடிவ முற்றுகளான ’உண்ணேன், வாழேன்’ என்றும் வரலாம் என நச்சினார்க்கினியார் குறிப்பிடுகின்றார். ”வனைந்தான் என்பது ‘குடத்தை வனைதலைச் செய்தான்’, என்று பொருள் தந்துழிச் ’செய்தான்’ என்றதன் தகரங் காலங் காட்டித் தொழிலைத் தோற்றுவித்தவாறும், ‘வனை’ என்னும் வினை காலங் காட்டாமல் நின்றவாறும், ‘வனைதல்’ என விரிந்துழியும் புடைபெயர்ச்சி மாத்திரம் அன்றிக் காலங் காட்டாமல் நின்றவாறும் உணர்க. காரியத்திற்கு யாண்டுங் காலங் காட்டும் எழுத்துக்களோடு கூடிய ‘செய்’ என்பதே வாசகம் என்று உணர்க. இக்காரிய வாசகம், இவ்வாறன்றி ஒருசொல் முழுவதும் தானாய் நிற்பனவும் உள. அவை, ‘கறைமிட றணியலும் அணிந்தன்று’ (புறம். 1:5) என்புழிக் ‘கறை மிடற்றை அழகு பெறுதலையுஞ் செய்தது’, எனவும், ‘இனியான் உண்ணலும் உண்ணேன்’ (கலி. 23:7) என்புழி, ‘இனி யான் சோற்றை உண்ணுதலையுஞ் செய்யேன்’, எனவும், ‘வாழ்தலும் வாழேன்’ (கலி. 23:7) என்புழி, ‘இனியான் உயிரை வாழுதலையுஞ் செய்யேன்’, எனவும் வந்தவற்றுள் ‘அணிந்தன்று, உண்ணேன், வாழேன்’ என்பன முழுதும் காரிய வாசகமாயே நின்றவாறு காண்க” (நச். வே. மயங்கியல். 29).
அவர் கூற்றுப்படி இங்கே ’உண்ணல்’ என்பதும் ’வாழல்’ என்பதும் ’உண்ணுதல், வாழ்தல்’ என அகநிலைச் செயப்படுபொருளாக அமைந்து ’உண்ணுதலைச் செய்யேன்’ எனவும் ’வாழ்தலைச் செய்யேன்’ எனவும் வந்துள்ளன. மேற்கண்ட தொடரமைப்பை உருபனியல் அடிப்படையில் ‘வினையடி + சூனிய உருபு என்று சுசீலா (2001: 30) பகுக்கின்றார்.
இவ்வாறு இத்தொடரமைப்பு எதிர்மறையில் வருவது போலவே எவ்வித மாறுபாடுமின்றி உடன்பாட்டிலும் வருவதைச் சங்க இலக்கியத்தில் காண முடிகின்றது.
தொழலும் தொழுதான் தொடலும் தொட்டான் -கலி. 55: 20
அறிதலும் அறிதியோ பாக பெருங்கடல் –நற். 106:1
உள்ளாது அமைதலும் அமைகுவம் மன்னே -ஐங். 36:3
மேற்கண்டவற்றுள் இரண்டாவதாக வருகின்ற தொழுதான், தொட்டான், அறிதி, அமைகுவம் என்பன ‘செய்’ என்னும் வாய்பாட்டில் அடங்குவனவாகும்.
மேற்கண்டவற்றினைப் போலவே’
’பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே’ -புறம். 192: 12-3
என்னுந் தொடரினையும் அவற்றுடன் இணைக்க முடியும். ஆனால், முன்னர் குறிப்பிட்டவை ஒரே வகையான சொல்லமைப்பினை உடையவை. இத்தொடர்களில் அமையும் வடிவங்கள் வேறுபட்டவை. ஆயினும் இவற்றையும் ‘வியத்தலும் செய்யோம்’ ’இகழ்தலும் செய்யோம்’ என்று பதிலீடு செய்ய முடியும். மேலும் ஒற்றைச் சொற்களாக ‘வியந்திலம், இகழ்ந்திலம்’ எனவும் பதிலீடு செய்ய முடியும். இவைபோன்ற வடிவங்களும் இவற்றிற்கு இணையான வடிவங்களும் தற்காலத் தமிழில் இருப்பதாகத் தெரியவில்லை. ஆயினும்,
அனுப்பவும் செய்தான் (அனுப்பினான்)
அனுப்பவும் இல்லை (அனுப்பவில்லை)
அனுப்பவும் மாட்டான் (அனுப்பமாட்டான்)
என்று வினையெச்சத்தைத் தொடர்ந்து உடன்ப்பாட்டு எதிர்மறைத் தொடர்கள் காணப்படுகின்றன. இவற்றுள் அமையும் உடன்பாட்டுத் தொடர் வட்டாரவழக்கு மொழி யாகும். பொதுவாகப் பயன்படுத்துவதில்லை.
இரண்டு வேறுபட்ட வடிவங்கள் வந்து இரண்டாவது சொல்லில் எதிர்மறை
இரண்டு சொற்களில் முதற்சொல் தொழிற்பெயராகவும் இரண்டாவது சொல் ’செல்’ என்னும் வாய்பாட்டில் அமைந்த எதிர்மறைச் சொல்லாகவும் அமைந்து இரண்டும் இணைந்து எதிர்மறையினை உணர்த்துகின்றன.
இகுத்த கண்ணீர் நிறுத்தல் செல்லாள் –புறம். 143: 13
(அப்பொழுது இன்னாதாகச் சொரியப்பட்ட கண்ணீரை; ஒழித்தல் மாட்டாளாய்)
எடுக்கல் செல்லாது உழப்பவன் போல -கலி. 38: 5
(கைகளையும் எடுக்க முடியாமல் அலறியது போல)
பொறுத்தல் செல்லாது இறுத்த வண்பெயல்-நற்.308: 5
(தான் தாங்கமாட்டாமே பெய்தொழித்த வளவிய மழையை)
எதிர்மறையினை உணர்த்துஞ் சொல்லானது வினைமுற்றாகவும் வினையெச்சமாகவும் அமைந்து வந்துள்ளது. இங்கெல்லாம் ’செல்’ என்னும் வினை தன் இயல்பான பொருளை இழந்து ’முடிதல்’ அல்லது ’இயலுதல்’ என்னும் பொருளில் வந்து எதிர்மறையை உணர்த்துகின்றது. தற்காலத் தமிழில் இதன்பயன்பாடு வேறு இலக்கணக்கூறின் மூலம் நிகழ்கிறது.
எடுக்க முடியாது
பொறுக்க முடியாது
எனப் பழந்தமிழில் முதற்சொல்லாக அமையுந் தொழிற்பெயர் தற்காலத் தமிழில் வினை யெச்சமாக மாற்றமடைந்து ’முடியாது’ என்னும் எதிர்மறையைத் தழுவுகின்றது. தொழிற் பெயரின் தன்மை வினையெச்சத்திற்கும் உண்டு என்பது ஆராய்ச்சியாளர் சிலரின் கருத்தாகும். மீனாட்சிசுந்தரன் (1974: 127) ’செய வேண்டும் செயல் வேண்டும் என மாறாட வருவதால் செய என்பதும் தொழிற்பெயரே எனக் கொள்ள இடமுண்டு’ என்கிறார்.
எதிர்மறைப்பெயரெச்ச அடுக்கு
பெயரெச்சமும் பெயரடையும் உடனே பெயர்ச்சொல்லினைத் தழுவி வருவதே பெரும்பான்மை யாகும். ஆனால் வினையெச்சமும் வினையடையும் இவ்வாறன்றிச் சிலசொற்களை இடையிட்டுப் பின்னர் வினைச்சொற்களைத் தழுவிவரும். அருகிய நிலையில் பெயரெச்சமானது இன்னொரு பெயரெச்சத்தினைத் தழுவி அதன்பின்னர் பெயரினைத் தழுவுவதைத் திருக்குறளில் காணமுடிகின்றது.
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும் -குறள். 448
இங்கு ’இல்லாத ஏமரா’ என்னும் இரண்டு எதிர்மறைப் பெயரெச்சங்கள் ’மன்னன்’ என்னும் பெயரைத் தழுவும் வகையில் அமைந்துள்ளன.
எதிர்மறை –பொருள் மாற்றம்
ஒரே தொடரில் சொல்லானது எதிர்மறை வடிவத்திலும் உடன்பாட்டு வடிவத்திலும் வந்து எதிர்மறையில் இருக்கின்ற வடிவம் எதிர்மறையை உணர்த்தாமல் வேறுபொருளை உணர்த்துவதைக் காண முடிகின்றது.
‘பூவா வஞ்சியிற் பூத்த வஞ்சி’ -சிலம்பு. 26: 50
இங்குப் ’பூவா வஞ்சி’ என்பது ‘கருவூர்’ என்று அரும்பத உரையாசிரியரால் பொருளுரைக்கப்படுகின்றது. எனவே அது ‘பூவாத’ என்னும் எதிர்மறைப் பொருளைத் தரவில்லை. இவ்வகையிலமைந்த வடிவங்களை உரையாசிரியர்கள் குறிப்பு, வெளிப்படை என்று குறிப்பிடுகின்றனர். இதுபோன்ற வடிவங்கள் பழந்தமிழில் பரவலாகக் காணப்படுகின்றன.
முடிவாகச் சில
பல்வேறு வகையான எதிர்மறைத் தொடர்கள் சங்க இலக்கியத்தில் காணக் கிடப்பினும் சிறப்பாகச் செய்யுள் வழக்கிற்கே உரிய, தற்காலத் தமிழில் பயன்பாட்டில் இல்லாத அல்லது இலக்கண வடிவங்களில் மாற்றம்பெற்று வருகின்ற ஒருசில தொடர்களே இங்கு எடுத்துக் காட்டப்பெற்றன. மேலும், எதிர்மறையை உணர்த்த ஒரு சொல்லே போதும் என்ற நிலையிலும் தொடரமைப்பில் ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களைப் பயன்படுத்தியிருப்பதைச் சங்க இலக்கியத்தில் காண முடிகின்றது. குறிப்பாக, மேற்கண்ட இடங்களில் எதிர்மறையை உணர்த்தத் தொடர்களைப் பயன்படுத்தியிருப்பது உயர்நிலைச் செய்யுள் வழக்கு என்று கொள்ள முடிகின்றது. மேலும் புலவர்களின் சிறந்த அறிவுத் திறத்தையும் காட்டுகின்றது. ஏனெனில் பொதுவான எதிர்மறைத் தொடர்களிலிருந்து இத்தொடர்கள் வேறுபட்டு அமைவது மேற்கண்ட அனுமானங்களுக்கு இடந்தருகின்றது. தற்காலத் தமிழ்த் தொடர்களுடன் இவற்றை ஒப்பிடும்போது மக்களின் பல்வேறு வகையான மனநிலைகளை வெளிப்படுத்துவதற்கு இத்தொடர்களின் பயன்பாடு அமைந்திருக்கலாம் என்றும் ஊகிக்க இடமுண்டு. பெயர்ச்சொற்களையன்றி, வினையையும் தொழிற்பெயரையும் உள்ளடக்கி வருகின்ற எதிர்மறைத் தொடர்களை ஒரு சொல்லால் பெரும்பாலும் பதிலீடு செய்ய இயலும். அவ்வகையில் தொடருக்கு இணையான ஒற்றைப் பதிலீட்டுச் சொற்கள் சில, சங்க இலக்கியத்தில் பயின்று வந்துள்ள நிலையையும் மேலே கண்டோம்.
தொடரில் இரு சொற்களும் எதிர்மறை என்ற நிலையில் பயன்படுத்தியிருப்பது செய்யுள் நடைக்காக என்பதையும் உரையாசிரியர்களின் கருத்துப்படி தேற்றத்திற்காக என்பதையும் இவைபோன்ற தொடர்கள் பழங்காலத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படுவது வழக்கமாக இருந்திருக்கலாம் என்பதையும் உணர முடிகின்றது. இரண்டு சொற்களில் ஒன்று எதிர்மறை என்று இருக்கின்ற நிலையில் அதற்கு யாப்புச் சீர்மையும் ஒரு காரணமாக அமையலாம் என்பதையும் அறிய முடிகிறது. ஆயினும் ‘உண்ணலும் உண்ணேன்’ என்பதுபோல் ஒரே வாய்பாட்டில் உள்ள சொற்களைப் பயன்படுத்தியிருப்பது பிற செயல்களன்றி ஒரே செயலில் கவனத்தைச் செலுத்தும் வெளிப்பாட்டின் அழுத்தமுங் காரணமாக இருக்கலாம்.
இவ்வாறு சங்க இலக்கியத்தில் காணப்படும் பல்வேறு வகையான எதிர்மறைத் தொடரமைப்புகளன்றி மேற்கண்ட தொடரமைப்புகளின் வாயிலாகவும் எதிர்மறையை வெளிப்படுத்திருப்பது சங்க இலக்கியத்தில் புலவர்களின் மொழிப்பயன்பாட்டு, கட்டமைப்புச் சிறப்புகளுள் ஒன்றாகக் கருத முடியும்.
துணைநூல்கள்
=======================================================
ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):
பழந்தமிழில் எதிர்மறை வினை வடிவங்களைப் பற்றி இந்தக் கட்டுரை பேசுகிறது. இந்த வடிவங்களில் இரண்டு வகை உண்டு: உருபால் எதிர்மறைப் பொருளைக் குறிப்பது (synthetic), சொல்லால் எதிர்மறைப் பொருளைக் குறிப்பது (analytic). இவற்றில் இரண்டாவது வகை சங்க காலத் தமிழில் பயன்படுவதைப் பற்றியது இந்தக் கட்டுரை. இன்றைய தமிழிலும் இந்த இரண்டு வகையும் உண்டு: வராது, வரவில்லை. மற்றைய திராவிட மொழிகளிலும் இரண்டாவது வகை உண்டு. இந்தக் காரணங்களால் இந்த வகை சங்க இலக்கியத்தில் யாப்பு காரணமாக வருகிறது என்னும் கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியது இல்லை. வரலாற்று நோக்கில் இதைப் பற்றி நிறைய ஆராய்ச்சி நடந்திருக்கிறது. அண்மையில் வெளிவந்த ஒரு நூலைத் தவிர வேறு எந்த ஆராய்ச்சியையும் இந்தக் கட்டுரை கவனத்தில் கொள்ளவில்லை. ஒரு சில ஆராய்ச்சிகளை மட்டும் இங்கே குறிப்பிடுகிறோம்.
- P. Meenakshisundaran, A History of Tamil Langauge
- S. Rajam, A Reference Grammar of Classical Tamil
- Sanford Steever From Analysis to Synthesis (This covers all Dravidian languages)
- Thomas Lehman has published a book in German on the grammar of old Tamil, a summary of it can be found in English in a chapter by him in the book Dravidian Languages edited by Sanford Steever
There ae so many publications of grammars of individual Sangam works.
இவற்றில் எதையும் கட்டுரை மேற்கோள் காட்டவில்லை. ஆய்வில் ஆய்வுப் பொருள் தொடர்பான ஆய்வு வெளியீடுகளைத் தேடல் முதல் படி. அதன் பிறகு வெளிட்டுள்ள முடிவுகளை வெட்டியோ, ஒட்டியோ, திருத்தியோ புதிய கருத்துகளைச் சொல்வதுதான் ஆராய்ச்சி.
இந்தக் கட்டுரையின் ஒரு பிழை மேலே சொல்லப்பட்டது. இன்னொரு பிழை இது. தவிர என்ற பொருளில் வரும் செய்வது அல்லது, செய்வான் அல்லான் என்பது போல் வினை-வினை அமைப்பு அல்ல. செய்வது வினைப்பெயர்; பெயரும் இந்த இடத்தில் வரலாம்: நல்வினை அல்லது இரண்டையும் ஒன்றுபோல் விளக்குவது பிழை. உண்ணலும் உண்ணேன் என்பது போன்ற வடிவங்களை உண்ணலும் செய்யேன் போன்ற வடிவங்களுக்கு இணையாகப் பார்க்கும்போது இன்றைய தமிழிலும் இப்படியான இணைவடிவங்கள் இருப்பதைக் காட்டலாம்: அடிக்கவும் அடிப்பான், அடிக்கவும் செய்வான்.
மேற்கண்ட மதிப்பீட்டின் அடிப்படையில் இந்தக் கட்டுரை திருத்தி எழுதப்பட்டிருக்கிறது.
=======================================================

த.திருமுருகன்
முனைவர் பட்ட ஆய்வாளர்
தமிழ்த் துறை
அழகப்பா பல்கலைக்கழகம்
காரைக்குடி – 630003
thirukutty5593@gmail.com
சங்க இலக்கியத்தில் மண்ணறிவியல்
சங்ககாலத் தமிழகம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று நிலப் பகுப்பைப் பெற்றிருந்ததைத் தொல்காப்பியமும் சங்க இலக்கியங்களும் குறிப்பிடுகின்றன. இந்நில அமைப்புகளை நிறம், குணம், பயன் அடிப்படையில் ‘புலம்’ என்ற சொல்லால் குறிப்பிட்டமையைச் சங்க இலக்கியங்கள் சுட்டுகின்றன. நிலமும் புலமும் ஒன்றா அல்லது வேறுபட்டவையா என்ற ஐயம் பொதுவாகத் தோன்றும். இவ்வையப்பாட்டை நீக்கும் பொருட்டு நிலம், புலம் பற்றிய வரையறைகளைக் காண்பதும், அவற்றுக்குள்ள வேற்றுமைகளை விளக்குவதும், சங்க கால மண் வகைகளைத் தற்கால மண்வகைகளோடு ஒப்பிட்டுக் காண்பதும், இந்நில, புலத்தில் இடம்பெறும் தாவரங்கள், விலங்குகள், தொழில்கள் பற்றிக் காண்பதும் இக்கட்டுரையின் நோக்கமாகும்.
நிலம், புலம் வரையறை
புலம் என்பதற்கு “வயல், மேட்டு நிலம், இடம், திக்கு, நுண்மை, அறிவு, திசை, வேகம்” என்று சங்க இலக்கியப் பொருட்களஞ்சியமும் (பக்.70-79), நிலம் என்பதற்கு, “பூமி, இடம், தேசம், தரை, மண், உலகு” என்று நா.கதிரைவேற்பிள்ளை அகராதியும் (ப.93) குறிப்பிடுகின்றன. புலமும் நிலமும் ஒரே பொருளைக் குறிப்பன அல்ல. இதனைத் தொல்காப்பியம் “நிலம் பெயர்ந்து உரைத்தல்” (தொல்.பொருள்.இளம்பூரணர் உரை, நூற்.167) என்று குறிப்பிடுகிறது. அதாவது தலைவன் வேறொரு நாட்டுக்கு நிலம் பெயர்ந்து செல்லுதல் என்று நிலத்தை மட்டும் குறிப்பிட்டுள்ளார்.
இவர் புலம் பற்றிக் குறிப்பிடவில்லை. சங்க இலக்கியத்தில்தான் முதன்முதலாகப் புலம் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. நிலம் என்பது வாழும் இடத்தைக் குறிப்பதாகத் தொல்காப்பியமும், புலம் என்பது வாழும் இடத்திற்கு வெளியேயுள்ள இடத்தைக் குறிப்பதாகச் சங்க இலக்கியங்களும் சுட்டுவதை உரைகளின் வழி அறிய முடிகிறது. நில புலங்கள் என்றொரு சொல் இன்று வரையிலும் வருவாய்த் துறைப் பதிவேட்டில் வழக்கிலுள்ளது.
புலம் பற்றி, “புன்புல மயக்கத்து விளைந்தன தினையே” (ஐங்குறுநூறு260), “வன்புலத்துப் பகடு விட்டு” (புறநானூறு.395), “மென்புலத்து வயல் உழுவர்” (புறநானூறு.395) என்ற இப்பாடலடிகள் சுட்டுகின்றன. புன்புலமான குறிஞ்சி நிலத்தில் தினைப்பயிர் விதைக்கப்பட்ட செய்தியும், வன்புல முல்லை நிலத்தில் எருதுகள் மேய்கின்ற செய்தியும், மென்புல மருத நிலத்தில் உழவர் பயன்படுத்தும் மென்மையான நிலச் செய்தியும் பற்றிச் சங்க இலக்கியங்கள் குறிப்பிட்டுள்ளன. இச்சங்கப் பாடல்கள், மக்கள் வாழும் இடத்தின் வெளிப்புறப் பகுதியில் தினை பயிரிடும் இடத்தையும், விலங்குகள் வாழும் இடத்தையும் கால்நடை மேய்ச்சல் இடத்தையும் மக்கள் வேளாண்மைக்கு உழவு செய்யும் இடத்தையும் புலமென்று சுட்டுகின்றன. இவற்றின் வழி புலம் என்பது மக்கள் வாழும் இடத்தின் புறத்தேயுள்ள வயல் வெளிகள் என்பதனை அறிய முடிகிறது.
மக்கள் வாழும் இடத்தைவிட்டு மற்றோர் இடத்தை வெளிப் புழக்கத்திற்காகவும், பயணத்திற்காகவும் பயன்படுத்துவதனால் இவற்றிற்குப் புலம் என்று சான்றோர்கள் சுட்டியிருக்க வேண்டும். சங்க காலத்தில் குறிப்பிட்டுள்ள புலம் என்ற பெயர் தற்காலத்தில் ஊர்ப்பெயர்களாகத் தாழிபுலம் (ஓர் ஊரில் இடுகாட்டைக் குறிப்பிடும் பகுதி), செட்டிபுலம் (செட்டியார்கள் வாழும் பகுதி), மாரியப்புலம், கோயிலுப்புலம், பள்ளம்புலம் போன்றவை அமைந்துள்ளன. இவை பெரும்பாலும் ஊரின் புறப்பகுதியில் உள்ள குடியிருப்புகளாக அமைகின்றன. இவற்றை நோக்கும்போது புலம் என்பது ஊரின் வெளிப்பகுதியையே சுட்டுகின்றது. இதனாலேயே தற்காலத்தில் புலம் பெயர்ந்தோர் என்ற சொல் வந்திருக்க வேண்டும் என்று எண்ண இடமளிக்கிறது. இதனை, “தென்புலத்தார் தெய்வம்” (இளங்குமரனார் உரை, திருக்குறள்.43) என்ற இத்திருக்குறளுக்குப் புங்கையூரன், “புலம் என்பது திசையைக் காட்டுகின்றது. எனவே வெவ்வேறு திசைகளுக்குப் போனவர்களைப் புலம்பெயர்ந்தவர்கள் என்று கூறலாம்” (புங்கையூரன், யாழ் இணையக் கட்டுரை, நவம்பர் 14, 2011) என்று தன் இணையக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
தற்கால மண் வகைகள்
மனிதர்கள் தாவரங்கள், உயிரினங்கள் போன்றவற்றைச் சார்ந்தே வாழ்கின்றனர். நிலத்தில் வெவ்வேறு மண் அடுக்குகள் காணப்படுகின்றன. மண்ணமைவில் பௌதிக, மற்றும் இரசாயன மாற்றங்கள் ஏற்படும் என்பது அறிஞர்களின் கருத்தாகும். இவற்றின் அடிப்படையில் மனிதன் வேளாண்மையைத் தொடங்கினான். தற்கால வேளாண்மைக்குரிய அனைத்து மண்வகைகளும் தமிழ்நாட்டில் உள்ளதென்று வேளாண் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். செம்மண், வண்டல் மண், கரிசல் மண், சரளை மண், மணற்சாரி மண், உவர்மண் மற்றும் களர்மண் போன்றவை தற்கால மண்வகைகள் ஆகும்.
பாறைகளிலிருந்து தோன்றிய மண், பாறைகளின் தன்மைகளிலிருந்து மிகவும் வேறுபட்டதென்று தற்கால ஆய்வின் மூலம் விளக்கப்பட்டுள்ளது. தற்காலத்தில் மண்ணைப் பரிசோதனை செய்து அதன் வளத்தினைக் கண்டறிந்து வேளாண்மை செய்கின்றனர். சங்க காலத்தில் நிலத்தின் இயற்கைத் தன்மையையும், விளையும் குணத்தையும், நிறத்தையும் அறிந்து வன்புலம் (புறநானூறு.395), புன்புலம் (குறுந்தொகை.383), மென்புலம் (புறநானூறு.395), இடைப்புலம் (புறநானூறு.288), சேட்புலம் (புறநானூறு.326), செம்புலம் (குறுந்தொகை.40), மெல்லம்புலம் (ஐங்குறுநூறு.120), கானலம்புலம் (ஐங்குறுநூறு.152,154), உவர்நிலம் (அகநானூறு.309), செம்மணல் (அகநானூறு.345), செம்புலப்புறவு (அகநானூறு.221), மென்பால் (புறநானூறு.384), வன்பால் (புறநானூறு.384), சாய்அறல் (பதிற்றுப்பத்து.74) என்று பெயரிட்டு வழங்கியுள்ளனர்.
இப்புல வகைகள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐவகை நிலங்களுக்குள் அடங்கும். இதனை மகிழேந்தி, “வன்னிலங்களாகக் குறிஞ்சி, முல்லை ஆகியனவும் மென்னிலங்களாகப் பிற மூன்றும் காணப்படுகின்றன” (மகிழேந்தி, சுற்றுச் சூழலியல் நோக்கில் சங்கத் தமிழகம், ப.160) என்பர். இதனை, “வன்புலம் தழீஇய மென்பால் தோறும்” (பதிற்றுப்பத்து.75:8) என்ற பாடலடி விளக்கும். தற்கால வேளாண் அறிஞர்களின் கண்டுபிடிப்பை அன்றே தமிழன் எவ்விதப் பரிசோதனைக் கருவியுமின்றிக் கண்டுபிடித்துள்ளான் என்பதை மேற்கண்ட சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன.
சங்க இலக்கியப் புல வகைகளும், தற்கால மண்ணமைவும்
மக்கள் வாழும் பகுதியைத் தமிழர்கள் ஐவகை நிலமாகக் குறிப்பிடுவதை, ”காடுறை உலகம், மைவரை உலகம், தீம்புனல் உலகம், பெருமணல் உலகம்” (தொல்காப்பியம் பொருளதிகாரம், இளம்பூரணர் உரை, நூற்.951) என்ற நூற்பாவில் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்று குறிப்பிடுகிறார். இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் பாலை நிலத்திற்கு விளக்கம் தந்துள்ளார். இதனை, “முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து … பாலை என்பதோர் படிவம் கொள்ளும்” (அடியார்க்கு நல்லார் உரை, சிலப்பதிகாரம் – காடுகாண் காதை 64-66) என்று குறிப்பிடுகிறார். இவ்வகை நிலங்கள் பெரும் நிலப்பரப்பினை உடையன. இந்நிலங்களில் உள்ள மண்ணின் இயல்புகளையும் தன்மைகளையும் அறிந்து நிலங்களின் உட்பிரிவாக மென்புலம், வன்புலம், இடைப் புலம், புன்புலம், சேட்புலம், செம்புலம், உவர்நிலம் என்று சங்க இலக்கியப் புலவர்களால் வைக்கப்பட்டுள்ளதை அறிய முடிகிறது.
தற்காலத்தில், “நஞ்சை நிலம் – மென்பால் (விளையும் நிலம்) என்றும், புன்செய் நிலம் – வன்புலம் (விளையாத நிலம்) என்றும், கரம்பை நிலம் – வன்னிலம்” என்று கிராம நிர்வாக அலுவலகப் பதிவேட்டில் (ப.55) இடம் பெற்றுள்ளது. “வன்னிலம் என்பது வன்புலத்திலுள்ள நீர் வறண்டு போவதால் அவற்றைப் பாழ்நிலம் என்றும், கரம்பை நிலமென்றும்” என்று பவானந்தன் தமிழ்ச் சொல்லகராதி (ப.414,114) குறிப்பிடுகிறது.
செம்மண்
சிவப்பு நிறமாக இருப்பதால் இதற்குச் செம்மண் எனச் சான்றோர் பெயரிட்டுள்ளனர். சங்க இலக்கியங்களிலும் தற்காலத்திலும் செம்மண் என்றே வழங்கப்படுகிறது. இம்மண் புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம், பெரம்பலூர், அரியலூர் போன்ற மாவட்டங்களில் பரவிக் காணப்படுகிறது. செம்மண் என்ற மண் வகை, செவ்வாய்க் கோளிலும் இருப்பதாகத் தற்கால விண்வெளி ஆராய்ச்சிகள் புலப்படுத்துகின்றன.
“செம்மண் வகைகள், அமிலத்தன்மையுடைய கருங்கல் பாறைகள், பழங்காலப் பாறைகள், உருமாறிய பாறைகள் போன்றவை காலப்போக்கில் சிதறுண்டு நொறுங்கியதால் உண்டானவை ஆகும். மலைச் சரிவுகளில் இருந்து மழை நீரினாலும், புவி ஈர்ப்பு விசையினாலும் இவை கீழே கொண்டு வரப்பட்டு மலை அடிவாரங்களில் பரவிக் கிடக்கின்றன. இவற்றில் இரும்பு ஆக்ஸைடு அதிக அளவில் உள்ளதால் இம்மண் சிவப்பு நிறத்துடன் காணப்படுகின்றது. இவை பொதுவாக இளகிய இயல்புடையது ஆகும்” என்று தமிழ் விக்கிப்பீடியா (நாள்.10.02.2014) விளக்குகிறது. தற்காலத்தில் புவியியல் ஆய்வாளர்கள் குறிப்பிடும் செம்மண், சங்க இலக்கியங்களில் செம்புலம், செம்புலப்புறவு, செம்மணல், செந்நிலப்புறவு, செந்நிலம், செந்நிலன் என்று அழைக்கப்பட்டுள்ளதை அறிய முடிகிறது.
செம்புலம்
“செம்புலப் பெயல்நீர் போல” (குறுந்தொகை.40) என்ற பாடலடியில், குறிஞ்சி நிலத்தில் செம்மண் இருப்பதையும், இம்மண்ணைச் செம்புலம் என்று குறிப்பிடுவதையும் அறிய முடிகிறது. “செம்புல மருங்கில்” (அகநானூறு.389) என்ற பாடல், பாலை நிலத்தில் சிவந்த நிறமான செம்மண் இருப்பதாகச் சுட்டுகிறது.
செந்நிலப்புறவு
செம்மண் முல்லை நிலத்தில் அமைவதனை, “வம்பு விரிந்தன்ன செம்புலப் புறவில்” (நற்றிணை.221), “செந்நிலப் புறவின் புன்மயிர்ப் புரவை” (நற்றிணை.321) என்ற இப்பாடலடிகளில் சரக்கொன்றைப் பூக்கள் பூப்பதையும் செம்மண் காடுகள் இருந்தமையையும், இந்நிலத்தில் ஆயர்களின் ஆடுகள் கட்டப்பட்டிருந்த செய்தியையும் அறிய முடிகிறது. முல்லை நிலச் செம்மண்ணில், வள்ளிக்கொடியும் பெய்த மழையால் வளைந்த கதிரையுடைய வரகுகள் விளைந்திருந்ததையும் (மலைபடுகடாம்.97-100) சுட்டுகிறது. செம்மண் அரக்கைப் பரப்பி வைத்தாற்போல சிவந்த நிலத்தில் இருந்ததை, “அரக்குவிரித் தன்ன செந்நில மருங்கின்” (மலைபடுகடாம்.507-508) என்ற அடி உணர்த்துகின்றது.
முல்லை நில செம்புலக் காட்டில் செவ்வரக்கும், காயாம் பூக்களும் இந்திர கோபப் பூச்சிகளும் (அகநானூறு.14), உடும்பு (மலைபடுகடாம்.507), மான்கள் (நற்றிணை.97) இருப்பதையும், பாலை நிலச் செம்மண்ணில் பிடவ மலர்களும் (அகநானூறு.79), தேக்கு, இருப்பை மரங்களும் (அகநானூறு.225), யானைகள் (அகநானூறு.227) இருப்பதையும் அறிய முடிகிறது.
செம்மணல்
பாலை நிலத்திலுள்ள செம்மண்ணில் வேங்கை மரத்தின் மலர்கள் பரவியிருந்தன எனபதனை, “செம்மணற் சிறுநெறி கம்மென வரிப்ப” (அகநானூறு.345) என்ற அடி விளக்குகிறது. செம்புலம் என்ற சிவந்த மண் முல்லை, குறிஞ்சி, பாலை போன்ற நிலங்களில் அதிகம் இருப்பதைச் சங்க இலக்கியங்கள் சுட்டுகின்றன. செம்மண் இருக்கும் இடத்தைச் செம்புலமென்றும், அந்நிலத்தில் காணப்படும் மலர்கள், விலங்குகள், பூச்சிகள், மரங்கள் மற்றும் நிறங்கள் பற்றியும் விளக்கப்பட்டுள்ளது. இம்மண் வேளாண்மைக்கு மிகவும் ஏற்றதாகவும், தழைச்சத்து, நார்ச்சத்து, கனிமங்கள் உடையதாக இருப்பதையும் தற்கால ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
வண்டல் மண்
இம்மண்ணில் நெல், வாழை, கரும்பு, கோதுமை போன்ற பயிர்களும், ஊடு பயிராகச் சோளம், உளுந்து, பாசிப்பயிறு, வெற்றிலை போன்ற பயிர்களும் நன்கு விளையும். பெரும்பாலும் மருத நிலம் விளைநிலமாகக் கருதப்படுகிறது. நீர்ப்பிடிப்புப் பகுதியான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, பெரம்பலூர், கடலூர், கரூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் இம்மண் பரவிக் காணப்படுகிறது.
வண்டல் மண்ணைச் சங்க இலக்கியத்தில் மென்புலம், மென்பால், சேட்புலம், வண்டல் என்ற பெயரில் குறிப்பிட்டுள்ளனர். மருத நிலத்து உழவர் பயன்படுத்தும் நிலமாக மென்புலம் கருதப்படுவதை “மென்புலத்து வயல் உழவர்” (புறநானூறு.395) என்ற பாடலடி விளக்குகிறது. மென்பால் என்பது மென்மையான நீரினையுடைய நிலம் ஆகும். இந்நீரையுடைய வயல்களில் நாரை வாழ்வதைப் பற்றிப் புறநானூறு 384ஆம் பாடல் குறிப்பிடுகிறது.
மருத நிலத்தில் வேளாண்மை செய்வதற்காகக் கண்மாய் நீர் வரும் மடை அருகிலுள்ள சேற்று நிலத்தைச் சேட்புலம் என்று குறிப்பிடப்படுகிறது. இச்சேற்று நீர் வற்றாமல் இருக்கும். இந்நிலத்தில் குறுந்தாள் உடும்பு இருந்ததைப் புறநானூறு 326ஆம் பாடல் குறிப்பிடுகிறது. வண்டல் மண்ணில் பாவை செய்த செய்தியையும், தலைவன் ஊரைச் சிறப்பிக்கும் நிலையிலும் வண்டல் மண் குறிப்பிடப்படுகிறது. இதனை, “வண்டற் பாவை வௌவலின்” (கலித்தொகை.29:5) என்றும், “மென்புல வைப்பின் நாடுகிழ வோனே” (ஐங்குறுநூறு.407:4) என்றும் இப்பாடலடிகள் உணர்த்துகின்றன.
கரிசல் மண்
கரிசல் மண், எரிமலைக் குழம்பு லாவா பூமியிலிருந்து வெளிவந்து படிதலால் ஏற்படுகிறது. இம்மண் பெரும்பாலும் தண்ணீரை உறிஞ்சும் தன்மை கொண்டது. கரிசல் மண்ணைச் சங்க இலக்கியத்தில் வன்புலம், வன்பால், கரம்பை, வன்னிலம் என்ற பெயரில் சான்றோர்கள் அழைத்துள்ளனர். வன்புலம் என்பது முல்லை நிலத்தில் அமைந்த வலிமையான புலம் என்றும், இந்நிலத்தில் இடையர்கள் ஆடு மேய்த்ததையும், உடும்பு, தவளை, ஈசல் வாழும் மண்ணையுடைய செய்தியையும் புறநானூறு 395ஆம் பாடல் விளக்குகிறது.
முல்லை நிலக் கரிசல் மண்ணில் செம்பூழ்ப் பறவைகளும் (ஐங்குறுநூறு.469), நடுகல் நிரம்பிய காடுகளும், நெல்லி மரங்களும் (புறநானூறு.314), மருத நிலக் கரிசல் மண்ணில் குறும்பூழ்ப் பறவையும் கடம்ப மலரும் (பெரும்பாணாற்றுப்படை.77), முயல்களும் (புறநானூறு.322) காணப்படுகின்றன. மேலும் வன்புலத்தைக் கரம்பை என்று குறிப்பிடுவதையும், இப்புலத்தில் வௌ்வரகு, செந்நெல் விளைவதையும் “வௌ்வரகு உழுத கொள்ளுடைக் கரம்பைச் செந்நெல்” (பதிற்றுப்பத்து.75) என்ற பாடலடிகள் விளக்குகின்றன. வன்புலத்தை வன்னிலம் என்று குறிப்பிடுவதை, ‘‘வன்னிலங்கள் துனிபடச் சென்று’’ (அகநானூறு.79) என்ற பாடலடி குறிப்பிடுகிறது. இப்புலம், கற்கள் நிறைந்த நீண்ட காடுகளால் ஆனது.
சரளை மண்
இம்மண் பாறைப் பரல்களாலான பீட பூமியாகும். மலைப்பாங்கான பிரதேசத்தில் இம்மண் காணப்படும். சோளம், கம்பு, தினை வகைகள் பயிரிடப்படுகிறன. தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, நீலகிரி, திருப்பூர், கோவை மாவட்டங்களில் சரளை மண் (துருகல் மண்) பரவிக் காணப்படுகிறது. இம்மண்ணைச் சங்க இலக்கியம் புன்புலம், இடைப்புலம் என்று குறிப்பிடுகின்றது. இம்மண்ணின் பெயரைப் பண்டைய மக்கள் முறைப்படக் குறிப்பதை, “புன்புலத்து அமன்ற சிறியிலை நெருஞ்சிக்” (குறுந்தொகை.202) என்று குறுந்தொகையும், புன்செய் நிலத்தில் நெருஞ்சி மலர் பூத்திருப்பதையும், தினைப் பயிர்களை யானைகள் மேய்ந்ததையும் (ஐங்குறுநூறு.260) உழவர்கள் காளைகளைப் பூட்டிக் கலப்பையால் உழவு செய்யும் திண்மையான நிலம் என்பதையும் (பரிபாடல்.58:15) சங்க இலக்கியங்கள் விளக்குகின்றன.
முல்லை நிலமான புன்புலத்தில் முயல்களும் (ஐங்குறுநூறு.421), வேல மரங்கள் (பரிபாடல்.58) இருப்பதையும், இந்நிலம் பொலிவற்று இருந்ததையும் இவ்விலக்கியங்கள் சுட்டுகின்றன. இப்புலத்தில் நெல் விளையாது. வரகு, தினை போன்றவை விளைந்தன என்ற செய்தியை, “புறவு சேர்ந்திருந்த, புன்புலச் சீறூர் நெல் விளையாதே, வரகும் தினையும் உள்ளவை எல்லாம்” (புறநானூறு.328) என்ற பாடலடிகள் குறிப்பிடுகின்றன.
உவர்(களர்)மண், மணற்சாரிமண்
உவர்மண், பாலை மண் என்று அழைக்கப்படுகிறது. இந்நிலத்தில் உப்பு எடுத்தல், மீன் உணக்கல், மீன் வலை உலர்த்தல் போன்ற தொழில்கள் நடைபெறுகின்றன. இம்மண் வகையைச் சங்க இலக்கியம் மெல்லம்புலம், கானலம் புலம், உவர்நிலம் என்று குறிப்பிடுகிறது. உவர்மண் நெய்தல் நில மண்ணாகும். நெய்தல் நிலத்திலுள்ள இம்மண்ணை, “மெல்லம் புலம்பன் வந்த மாறே” (ஐங்குறுநூறு.120) என்ற பாடலடி விளக்கும். மெய்ப்புலம் என்பது நெய்தல் நிலத்திலுள்ள ஊரைக் குறிக்கும். இந்நிலம் உவர் நிலமென்றும், சேண்புலம் என்றும் குறிப்பிடுவதை, “உவர்விளை உப்பின் கொள்ளை சாற்றி, அதன்படு பூழிய சேண்புலம் படரும்” (அகநானூறு.309) என்ற இப்பாடலடிகள் உணர்த்துகின்றன.
நெய்தல் நிலத்திற்கும் மருத நிலத்திற்கும் இடையே காணப்படும் கருப்பு நிறமான மணலைச் ‘சாய் அறல்’ (பதிற்று.74) என்று குறிப்பிட்டுள்ளனர். இதன்மூலம் நெய்தல் நிலத்திற்கும் மருத நிலத்திற்கும் இடையே கருநிற மணல் இருப்பதை அறிய முடிகிறது. சங்க இலக்கியத்தில் குறிப்பிட்ட மண்ணின் அமைப்பை, “வண்டல் மருத நிலத்து ஆற்றுப் படுகைகளிலும், செம்புறை குறிஞ்சி நிலத்திலும் மணற்பாங்கானது நெய்தல் நிலத்திலும், செம்மண் முல்லை நிலத்திலும் காணப்படுகின்றன. கரிசல் மண் மிகுதியான அளவு நன்புலத்திலும், சிறுபான்மை புன்புலத்திலும் காணப்படுகின்றது” (ப.118) என்று ந.வீ.செயராமன், தமிழ் இலக்கியத்தில் வேளாண்மை அறிவியல் என்ற நூலில் குறிப்பிடுகிறார்.
தொகுப்புரை
சங்ககால மக்கள் மண்ணின் தன்மைக்கும் நிறத்திற்கும் ஏற்றவாறு பெயரிட்டுள்ளதைச் சங்க இலக்கியங்கள் தெளிவுபடுத்துகின்றன. ஐவகை நிலங்களில் ஆறு வகையான புலங்கள் காணப்படுகின்றன. செம்புலம், வன்புலம், மென்புலம், புன்புலம், மெல்லம் புலம் போன்றவை குறிஞ்சி நிலத்தில் இடம்பெற்றுள்ளன.
குறிப்பிட்ட வேளாண் பயிர்கள், விலங்குகள் பூக்கள் வேற்று நிலத்தில் பெரும்பான்மையாக வளர்வதில்லை. இவற்றை அறிந்த முன்னோர்கள் இந்நிலத்தில் இன்னதுதான் வளரும் என்பதற்கு ஏற்றவாறு மண்ணிற்கு அக்காலத்தில் பொருள்பட பெயர் வைத்துள்ளதை மேற்கண்ட சான்றுகளின் வழி அறியமுடிகிறது.
புலம் என்ற பெயர் வைத்து வேளாண்மை செய்யும் இடத்திற்கும், நிலத்தின் இயல்புக்கும் ஏற்றவாறு பெயர்கள் சூட்டியிருக்க வேண்டும். எந்தெந்தப் பயிர்கள். எந்தெந்த நிலங்களில் நன்றாக விளையும் என்ற அறிவைச் சங்க கால மக்கள் பெற்றிருந்தனர். இதன் மூலம் அக்கால மக்களிடம் மண்ணியல் அறிவும், நிலத்திற்கும் புலத்திற்கும் வேறுபாடு உண்டு என்பதையும் அறிய முடிகிறது.
சங்க கால மக்கள் நிலத்தில் வாழ்ந்து புலத்தில் வேளாண்மை செய்தனர் என்பதை மேற்கூறிய கருத்துகள் வெளிப்படுத்துகின்றன. ஓரிடத்தில் பல தலைமுறைகளாக வாழ்ந்த மக்களில் சிலர், தாம் வாழ்ந்த நிலத்தை விட்டு வேறொரு நிலத்திற்குப் புலம் பெயர்ந்ததைப் ‘புலம்பெயர்ந்தோர்’ என்ற சொல் குறிப்பிடுவதையும் அறிய முடிகிறது.
துணைநூற்பட்டியல்
======================================================================
ஆய்வறிஞர் கருத்துரை (Peer review):
‘சங்க இலக்கியத்தில் மண்ணறிவியல்’ என்னும் கட்டுரை, நிலம், புலம் குறித்த பதிவுகள் தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியத்திலும் எவ்வாறு இடம்பெற்றுள்ளன என்பதை விளக்க முயல்கின்றது. தொல்காப்பியத்தில் நிலம் பற்றிய சான்றுகளே உள்ளன. இதை ஐந்து வகையான திணைகளும் அவற்றின் இடங்களும் புலப்படுத்துகின்றன. புலம் என்பது குறித்த பதிவு சங்க இலக்கியத்தில்தான் முதன்முதல் இடம் பெறுகின்றது. புலம் குறித்த பதிவுகள் ஐங்குறுநூறு, புறநானூறு உள்ளிட்ட இலக்கியங்களில் காணப்படுவதை முறையாகத் தொகுத்துக் கட்டுரையாளர் விளக்குகின்றார்.
சங்க கால மண்ணமைப்பு முறைகளையும் தற்கால மண்வகைகளையும் அறிமுகப்படுத்தும் இக்கட்டுரை, சங்க காலத்தில் இருந்த புலங்களைத் தக்க சான்றுகளோடு எடுத்துரைக்கின்றது. செம்புலம், வன்புலம், மென்புலம், புன்புலம், மெல்லம்புலம் என்னும் இப்புலங்களில் பயிரிடப்படும் உணவுப் பொருட்களைப் பட்டியலிட்டுச் செல்கின்றார் கட்டுரையாளர். மேலும் நவீன வேளாண்மைக்கு முன்னோடியாகப் பண்டைத் தமிழர்களின் வேளாண்மைத் தொழில்களும் உற்பத்தி முறைகளும் இருந்தன என்பதைத் தக்க ஆதாரங்களோடு முன்வைத்திருக்கும் கட்டுரையாளருக்குப் பாராட்டுகள்.
======================================================================
முனைவர் க. இராஜா
இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர்,
ஸ்ரீ வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
காட்டேரி, ஊத்தங்கரை, கிருட்டிணகிரி (மா.)
சங்க இலக்கியத்தில் மணச் சடங்குகள்
சடங்கு நிகழ்த்தப்படும் இடம், காலம், சூழல், தேவை, நோக்கம் போன்ற காரணங்களை முன்வைத்து அவற்றின் தன்மைகள் வேறுபடுகின்றன. சடங்குகள் செயல், நிகழ்த்துதல், நனவு, தன்னார்வம், கருவி, பகுத்தறிவு, கூட்டுத்தன்மை, சமூகம், சமூக உறவுகள், புனைவு, குறியீடு, வெளிப்பாடு, நடத்தை, அழகியல், புனிதம் ஆகியவற்றோடு தொடர்புடையதாக அமைகின்றது.
சடங்குகள் வாழ்க்கை வட்டச் சடங்குகள், வளமைச் சடங்குகள், வழிபாட்டுச் சடங்குகள், திருவிழாச் சடங்குகள், மந்திரச் சடங்குகள், பிற சடங்குகள் என வகைப்படுத்தப்படுகின்றன. அவற்றுள் நிச்சயதார்த்தம், சிலம்பு கழித்தல், மணநாள் குறித்தல் போன்றன வாழ்க்கை வட்டச் சடங்குகளாகும். மணநாளில் நிகழும் சடங்குகள் மணச் சடங்குகள் எனப்படும்.
‘மணம்’ என்ற சொல் நிறைந்த பொருளுடையது. மணம் என்பதன் வேர்ச்சொல் மண், மண்ணின் நலன்களைப் பெருமளவில் நுகர்வதற்கு வாய்ப்பளிப்பது ஆகும். எனவேதான் நல்லறமாக இல்லறத்தை மண வாழ்க்கை என்றனர் (நாஞ்சில் ஆனந்தன், சங்க இலக்கியத்தில் மனித உரிமைகள், பக்.27-28).
திருமணமும் அதற்குரிய சடங்குகளும் சமுதாயத்தில் எக்காலத்தில் தோன்றி வளம் பெற்றன என்பதை அறுதியிட்டுக் கூற முடியவில்லை. இருப்பினும் திருமணச் சடங்கு என்பது பொய்யிலிருந்து, வழுவிலிருந்து சமுதாயத்தைக் காப்பாற்றியது என்பதை,
பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப (தொல். கற்.4)
என்னும் தொல்காப்பியப் பொருளதிகாரச் சூத்திரம் மூலம் அறிய முடிகிறது. தொல்காப்பியம், மணத்தைக் கரணம் என்று குறிப்பிடுகின்றது. தொல்காப்பியர் காலத்தில் திருமணம் செய்யும் முறை நடைமுறையில் இருந்தது என்பது இதனால் விளங்கும்.
திருமணச் சடங்குகள் இனச் செழிப்பை வேண்டிச் செய்யப்படும் சடங்குக் கூறுகளை மிகுதியாகப் பெற்றுள்ளன. “இச்சடங்கின்போது, முளைப்பாலிகைகள், கும்பம் (விளைந்த தானியப் பயிர்களை நீர் நிரம்பிய இடத்தில் வைத்தல்) முதலியவற்றை மணமக்களுக்கு முன் வைக்கும் வழக்கம் கள்ளர், பள்ளர், பறையர் இனங்களுக்கிடையே காணப்படுகிறது முளைத்த நெல், கம்பு போன்ற தானிய விதைகளை மணமக்களின் மேல் தூவும் மரபும் நிலவுகிறது” (தே. ஞானசேகரன், மனித வாழ்வில் மந்திர சடங்குகள், ப.24).
வேளாண்மையில் நேரடியாகப் பங்குபெறும் சமுதாயத்தினரிடம் இச்சடங்கு முறைகள் வேரூன்றிக் காணப்படுகின்றன. “கண்ணகி கோவலன் திருமணத்தில், பெண்கள் முளைப்பாலிகைகளைக் கையிலேந்தி, முளைத்த விதைத் தானியங்களை மக்களின் மேல் தூவி வாழ்த்துக் கூறுவதை இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார்” (தே. ஞானசேகரன், மனித வாழ்வில் மந்திர சடங்குகள், ப.25).
முளைப்பாலிகைகளிலும், தானிய விதைகளிலும் பயிர்கள் எவ்வாறு செழித்து வளர்கிறதோ அதேபோன்று மணமகளும் விரைவில் குழந்தைப் பேற்றை அடைந்து, மானிடச் செழிப்பைப் பெருக்க வேண்டும் என்ற வளமைச் சடங்கின் சாயலாக இல்வாழ்வியல் சடங்கு அமைந்துள்ளது.
மணமக்களுக்குக் கட்டப்படும் தாலியைத் திருமணத்தில் கலந்துகொள்ளும் அனைத்துப் பெரியோர்களும் குறிப்பாகப் பெண்களும் தொட்டு வணங்குவர். இச்சடங்கு முடிந்த பின்புதான் மணமகன், மணமகளுக்குத் தாலி கட்டுவார். தாலியைத் தொட்டு வணங்குகின்ற அனைத்துப் பெண்களின் வளமை ஆற்றலும் மணமகளுக்குச் சென்று சேரும் என்ற நம்பிக்கைக் கூறுகள் இதில் காணப்படுகின்றன.
நிச்சயதார்த்தம்
சங்க காலத்தில் திருமணத்தை வதுவை, வரைவு, மணம், மன்றல் எனக் குறிப்பிட்டனர். திருமணத்தின் முதல் சடங்காகக் கொடுப்போர், கொள்வோர் ஆகியோரின் பரிமாற்றம், மன நிம்மதி ஆகியவை அமைகின்றன. இதனை,
கற்பெனப் படுவது கரணமொடு புணர
கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியை
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே (தொல். கற்.1)
என்னும் நூற்பா விளக்குகிறது. மணமகளின் வீட்டார், தம் மகளைத் திருமணம் செய்ய எண்ணியதன் பின்னர் மனம் உவந்து மணமகனுக்கு வதுவை செய்து தரவேண்டும் என்பதை,
யானுங் காதலென் யாயும்நனி வெய்யள்
எந்தையுங் கொடீஇயர் வேண்டும் (குறுந்.51)
என்னும் குறுந்தொகை அடிகள் விளக்குகின்றன. இப்பாடலில் தலைவி ஒருத்தியை அவள் விரும்பிய தலைவனுக்குத் தந்தையும் தாயும் திருமணம் செய்து கொடுக்க முன்வருகின்றனர்.
திருமணம் நடைபெறும் முன்னர் நிச்சயதார்த்தம் என்னும் முறைமையும் நடைபெற்றது. இந்நிச்சயதார்த்தம் என்பது கொடுப்போர், கொள்வோர் இருவரின் எண்ணங்களையும் உறுதி செய்துகொள்ளுதல் என்னும் மரபாகும். சங்க காலத் திருமணங்கள் பெரும்பான்மையாகக் கொடுப்போர், கொள்வோர் சம்மதத்துடன் நடைபெற்றவை என்பதை அறிய முடிகிறது.
திருமணம் நிச்சயிக்கப் பெண் கேட்டு வரும் தலைவன் வீட்டாரைத் தலைவி வீட்டார் வரவேற்று உபசரிக்கும் பண்பு அக்காலத்தில் இருந்தே நிலைபெற்று வருகிறது. அதனை,
தண்டுடைக் கையர் வெண்டலைச் சிதலவர்
நன்றுநன் றென்று மாக்களோ
டின்றுபெரி தென்னு மாங்கன தவையே (மேலது, ப.146)
என்னும் குறுந்தொகைப் பாடலடிகள் விளக்குகின்றன.
சிலம்பு கழித்தல்
திருமணம் ஆகாத பெண்கள், காலில் சிலம்பு அணியும் வழக்கம் நடைமுறையில் இருந்தது. திருமணத்தின்பொழுது காலில் உள்ள அச்சிலம்பினைச் சடங்கு நிமித்தமாகக் கழற்றுவது மரபாக இருந்தது. இம்மரபு மணமகளின் வாழ்வில் பூப்புச் சடங்கினைப் போன்று ஒரு புனிதத் திருவிழாவாகக் கொண்டாடப்பட்டது. இதனைச் ‘சிலம்பு கழி நோன்பு’ என்று கூறுவர்.
“திருமணத்திற்கு முன்பு இளமை தொட்டே தலைவி அணிந்திருந்த காற்சிலம்பைக் கழற்றுதலை மரபாகக் கொண்ட செய்தி தெரிகின்றது. இதனை ஒரு விழாவாகவே பெற்றோர் கொண்டாடினர் எனலாம்” (அ. தட்சிணாமூர்த்தி, தமிழர் நாகரிகமும் பண்பாடும், ப.78).
தலைவனும் தலைவியும் உடன்போக்கின்போது தலைவியின் காலில் அணிந்துள்ள சிலம்பைக் காணும் கண்டோர்கள், இவர்களின் நிலையை நினைத்து அச்சமுறுகின்றனர். இவள் காலில் சிலம்பணிந்துள்ளாள். அதனால் இன்னும் திருமணம் முடியவில்லை என்பதைத் தெரிந்து, எப்படித் தனியே வாழப் போகிறாள் என்று ஐயம் கொள்கின்றனர். இதனை,
வில்லோன் காலன கழலே தொடியோள்
மெல்லடி மேலவுஞ் சிலம்பே (குறுந்.7)
என்னும் அடிகளால் அறியமுடிகின்றது. இங்ஙனம் இளமை வாழ்வு கழிய ஆடவர் வீரக்கழல் அணிந்து போர்ப் பயிற்சி முதலியன பெறுதலும் பெண்கள் சிலம்பு அணிதலும் அதனை கழித்தலும் சடங்குகளாகப் பின்பற்றப்பட்டன.
மணநாள்
அக்காலத்தில் திருமணம் நல்ல நாளும் நேரமும் கணிக்கப்பட்டே நடைபெற்றது. வேங்கை மலர்கள் மலரும் இளவேனிற் காலமே மணத்திற்குரிய காலமாகக் கருதப்பட்டது. இதனை,
வேங்கை தந்த வெற்பணி நன்னாள் (நற்.336)
என்றும், ‘நன்னாள் வேங்கை, ‘கணிவாய் வேங்கை’ என்றும் குறிப்பிடுகின்றது நற்றிணை. சந்திரன் உரோகிணியைக் கூடிய நாள் திருமணத்திற்குச் சிறந்த நாளாகக் கருதப்பட்டது. இதனை அகநானூறு (அகம்.86, 136), சிலப்பதிகாரம் (சிலம்பு.50-53) வாயிலாக அறிய முடிகிறது.
பரத்தையிற் பிரிந்த தலைமகன் விடுத்த தூதைக் கண்டு ஒரு தலைவி பேசும் பேச்சிலிருந்து மணக்காலத்தில் தீ வேட்டனர் என்பதை அறிய முடிகின்றது. தலைவனுடைய தூதுவனைக் கண்ட தலைவி, அவன் என்னை மணந்த காலத்தில் இருந்த அன்புடைய நிலையில் சிறிதும் மாறாமல் நாம் இருக்கின்றோம். நாங்கள் மணந்த காலத்தில் நெய் பெய்த தீ முன்னர் எப்படி விருப்பத்துடன் இருந்தோமோ அதேபோன்று இப்பொழுதும் நான் இருக்கின்றேன் என்று பேசுகிறாள்.
நெய்பெய் தீயி னெதிர்கொண்டு
தான்மணந் தனையமென விடுகந் தூதே (குறுந்.106)
மணக்காலத்து நிலைமையில் தான் உள்ளமையைக் கூறி, நெய்பெய் தீயின் எதிர்கொள்வோம் என்பதால் இது மனைவியின் பகுதியாக அமைந்த எரிவேட்டல் எனப்படுகிறது.
தெறல்அருங் கடவுள் முன்னர் தேற்றி
மெல் இறைமுன்கை பற்றிய சொல் இறந்து
ஆர்வ நெஞ்சம் தலைத்தலைச் சிறப்ப நின்
மார்பு தருகல்லாய் (அகம்.396)
என வரும் அகநானூற்றுத் தலைவியின் பேச்சை நோக்கும்போது, தீக்கடவுள் முன்னர் நின்று, என்றும் பிரியாமல் இருப்பதாக உறுதி உரைத்து ஏற்றுக்கொள்வதாகத் தலைவியின் கையைப் பற்றுதல் அக்கால வழக்கம் என்பது தெரியவருகிறது.
மணக்கும் பொழுது தீயில் நெய் பெய்து யாகம் வளர்ப்பது, பண்டைக் காலமுறை. தீயில் நெய் பெய்யப்பட்டபோது அத்தீயானது மேல்நோக்கி எழுந்து நெய்யை ஏற்றுக்கொண்டு தான் அவியாது நிற்றலைப்போலத் தலைவன் தலைவியை ஏற்றுக்கொண்டு செம்மையடைய வேண்டுதல் என்பது வழக்கு.
நெருப்பு என்பது தூய்மையானது. மங்களம் சார்ந்தது. எண்ணெய் நிலையிலிருந்து தீ என்னும் நிலைக்கு வேள்வி மாற்றம் அடைவதைப் போல ஆண், பெண் இருவரையும் அந்நிலையிலிருந்து கணவன் மனைவி என்னும் நிலைக்கு மாற்றம் செய்கிறது.
சங்க காலத்தில் மணமுரசு ஒலித்தலைப் பற்றி,
என்று அகநானூறு உறுதி செய்கிறது. சங்க காலத்தைவிட அதனை அடுத்த சங்கம் மருவிய சிலப்பதிகாரக் காலத்தில் பல்வேறு இசைக் கருவிகள் முழங்கப்பட்டன.
தமிழகத்தில் திருமணம் எனத் தாம் எழுதிய கட்டுரையில் எஸ். வையாபுரிப்பிள்ளை, “பாணிக் கிரகணம், ஓமம், தீ வலம் வருதல், சப்தபதி முதலியன சங்க காலத்தில் நிகழ்ந்தன அல்ல. புரோகிதர்கள் மந்திரம் ஓதுதலும் மணவினையில் இல்லை என்றே கூறலாம். தாலி கட்டும் சடங்கும் காணப்படவில்லை” (மு. சண்முகம் பிள்ளை, சங்கத் தமிழரின் வழிபாடுகளும் சடங்குகளும், ப.264) என்று எழுதியுள்ளார். எனினும் குறுந்தொகைப் பாடலில் (குறுந்.106) யாகம் வளர்த்துத் தீயின் முன்னர் திருமணம் நடைபெற்றது என்ற செய்தியால் தீ வலம் வருதல் அக்காலத்தில் இருந்திருக்க வாய்ப்புண்டு என்பதைத் தெரியப்படுத்துகிறது. அவர் சுட்டிய சடங்குகளில் மற்ற சடங்குகள் ஏதும் சங்க காலத்தில் இல்லை என்பது உறுதியாகிறது.
திருமணம் நிகழ்வதற்கு முன்னதாக நிச்சயதார்த்தம் நிகழ்த்தப்பெறுதல் வழக்கத்தில் இருந்துள்ளது. ஆண், பெண் இருவரும் சிலம்பு அணியும் வழக்கம் இருந்தாலும் மணநாள் அன்று பெண்ணுக்குச் சிலம்பு கழித்தலைச் சங்க காலத்தில் காண முடிகின்றது. அதனைச் சிலம்பு கழி நோன்பு என்று வழங்குகிறோம். அவை தவிர ஒரு சிறந்த நாளை மணநாளாகக் குறித்து, அன்று சில சடங்குகள் நிகழ்த்தி மணம் முடித்துத் தரும் வழக்கம் சங்க காலத்தில் இருந்தமையை அறிய முடிகின்றது.
பயன்பட்ட நூல்கள்
=========================================================
ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):
தமிழரின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்தது, சடங்கு. இச்சடங்கு, மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை பல நிலைகளில் நிகழ்த்தப்படுகின்றது. இவற்றைப் பண்டைய இலக்கண, இலக்கியங்கள் மிகத் தெளிவாகப் பதிவு செய்துள்ளன. ‘சங்க இலக்கியத்தில் மணச் சடங்குகள்’ என்னும் இக்கட்டுரை, தமிழரின் திருமணம் சார்ந்து மேற்கொள்ளப்படும் சடங்குகளை முறையாக அறிமுகம் செய்கின்றது. தொல்காப்பியத்தின் நூற்பாவையும், குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு முதலிய சங்கச் செய்யுட்களையும் ஆதாரமாகக் கொண்டு இக்கட்டுரை நகர்கின்றது. சங்க காலத்தில் திருமணத்திற்கு முன் நிகழும் நிச்சயதார்த்தம், வதுவைச் சடங்கு, சிலம்பு கழித்தல், மணநாள் பார்த்தல் உள்ளிட்ட சடங்குகளைப் பண்டைய தமிழர்கள் எவ்வாறு மேற்கொண்டனர் என்பதைச் சங்கப் பாடல்களின் சான்றுகளோடு கட்டுரையாளர் விளக்கிச் செல்வது பாராட்டத்தக்கது.
=========================================================
முனைவர் செ. பொன்மலர், உதவிப்பேராசிரியர், விவேகானந்தா கல்லூரி, அகஸ்திஸ்வரம்,
அறிமுகம்
“பெண்மையிலும் மென்மையுண்டு
மென்மையிலும் மேன்மையுண்டு
கண்டிடுவார் யாரோ
கண்கலங்க வைப்பது கண்ணீரோ….”
மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் என்று முழங்கினார் நம் தேசக்கவி பாரதியார். பெண்ணுக்கு உரிமைகள் தரப்பட வேண்டும் என்ற குரலை ஓங்கி ஒலிக்கச் செய்தார் பெரியார். பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டில் மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற் கொம்பே என்றார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டும் அம்மா என்று பெண்பிறப்பின் மகத்துவம் பேசினார் கவிமணி. இன்னும் பலரும் பெண்ணின் பெருமை குறித்துப் பேசியுள்ளனர். நாகரிகம் தோன்றிய காலத்தில் பெண்கள் உரிமையோடு வாழ்ந்துள்ளனர். ஆனால் காலப்போக்கில் பெண்களின் இயங்குதளம் விரிவடையும் போது பெண் அடிமைத்தனமும் பெருகி வந்துள்ளது. பெண் சார்ந்த சிக்கல்களும் அதிகப்படியான நிலையில் வளர்ந்து விட்டன. எனவே பண்டைய இலக்கியத்தில் ஆணாதிக்க போக்குடன் கூடிய சமுதாய சித்தரிப்பு இருந்துள்ளமையை இக்கட்டுரை விளக்க முற்படுகிறது.
பெண் ஒடுக்குமுறை
பெண்ணை ஒடுக்குமுறைக்கு உட்படுத்த ஆணாதிக்க சமூகம் எடுத்துக் கொண்ட ஆயுதம் அவர்களுக்கு இயற்கையாக நிகழும் உடலியல் மாற்றங்களான உபாதைகள் ஆகும். உடலியல் மாற்றத்தால் நிகழ்கின்ற பெண் பூப்படைதல் நிகழ்வு முற்காலத்தில் எல்லா இனக்குழு மக்களின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சிக்குரிய சடங்காகவே இருந்து வந்துள்ளது. ஆனால் கால மாற்றத்தால் ஆணாதிக்கச் சமூகத்தினால் பூப்பு என்பது தீட்டு, விலக்கு, தீண்டத்தகாதது என்று கூறி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே பெண்கள் வீட்டிற்கு வெளியே தனியாக அமர்த்தப்படுகின்றனர். இதனை “மனைச் செறிந்தனளே வாணுதல்” (புறம், 337: 6௧2) என்ற புறப்பாடல் சான்றுபகர்கின்றது. ஆரிய இனப்பண்பாட்டின் தாக்கத்தினாலும் வைதீக ஆண் சமுதாயம் பெண்ணை அடிமைப்படுத்த முனைந்த காலத்திலும் தான் பூப்பு என்ற செயல் தீட்டாக மாறியுள்ளது. இதன் காரணமாக தற்போது பூப்புச் சடங்கினை மிக விமரிசையாக்க் கொண்டாடும் வழக்கம் குறைந்து கொண்டே வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
பெண்களுக்கு மாதந்தோறும் வருகின்ற இயற்கை உபாதைகளில் மாதவிடாய் நிகழ்வும் ஒன்று. இக்காலங்களில் பெண்களைத் தீட்டு என்று ஆணாதிக்க சமூகம் கூறி ஒதுக்கியுள்ளது. இதனால் அந்தக் காலங்களில் வீட்டில் சமைக்கும் பாத்திரங்களைத் தொடக்கூடாது கோவிலுக்குச் செல்லக்கூடாது எனவும் சங்க சமூகம் புறந்தள்ளியுள்ளது. இதனை,
“தண்ணடை மன்னர் தாருடைப் புரவி
அணங்குஉடை முருகன் கோட்டத்துக்
லன்தொடா மகளிரின் இகழ்ந்துநின் றவ்வே” – (புறம் . 299)
என்ற பாடல் தெளிவுறுத்துகின்றது. நெய்யிட்ட உணவை உண்ட பகை மன்னரின் குதிரைகள் எல்லாம், முருகன் கோயிலிலே புகுந்த தூய்மையற்றார், கலம் தொடுவதற்கு அஞ்சினராக ஒதுங்கி நிற்றலைப்போல அஞ்சி ஒதுங்கி நின்றன காணீர், என்று பெண்ணை உவமையாக கூறியுள்ளமையைக் காணமுடிகின்றது.
ஆணாதிக்கம்
தந்தைவழி சமூக உருவாக்கத்தின் காரணமாக பெண்களை இழிவுப்படுத்தியும் அவர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டும், ஆண்கள் தங்களின் ஆணாதிக்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். குழந்தை பிறப்பு என்பது மகிழ்ச்சிக்குரிய நிகழ்வு ஆகும். ஆனால் சங்ககாலத்தில் பெண் குழந்தையின் பிறப்பு ஆண் குழந்தையின் பிறப்பைப் போல் மகிழ்ச்சி கொடுப்பதாக இல்லை. தாயினை அழைக்கும் போது கூட புதல்வனின் தாயே என்றே அழைத்துள்ளனர். ஆண் குழந்தையின் பிறப்பு மூலமே பெண் பெருமையடைவதை,
“புதல்வற் பயந்த புகழ்மிகு சிறப்பின்
நன்ன ராட்டிக்கு அன்றியும்” – (அகம்.184)
என்ற அகநானூற்றுப் பாடல் சான்றுபகர்கின்றது. பெண் பத்துமாதம் சுமந்து ஆண் குழந்தையினை இவ்வுலகிற்கு அறிமுகப்படுத்துகிறாள் ஆனால் அந்த குழந்தை பிறந்ததினால் தான் பெண்ணுக்குச் சிறப்பு என்று வரையறைச் செய்யப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கதாகும்.
சங்ககாலத்தில் பெண்களுக்குப் போரில் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் ஆணாதிக்க வெளிப்பாட்டின் காரணமாக போரில் எவ்வித பங்கும் பெறாத பெண்கள் துன்பத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். நன்னன் என்ற மன்னன் போரில் தோல்வியுற்ற தன் பகையரசனின் உரிமை பெண்களை அழைத்து வந்து, அவர் தம் தலைக் கூந்தலை மழித்து, அந்த கூந்தலைக் கயிறாகத் திரித்து, அந்த கயிற்றால் பகை மன்னனின் யானைகளைக் கட்டியுள்ளான். இதனை,
“……………………………. நன்னன்
கூந்தன் முரற்சியிற் கொடிதே
மறப்பன் மாதோ நின்விறற் தகைமையே” -(நற். 270.)
என்ற பாடல் மூலம் அறியலாம். ஆணாதிக்கத்தின் வெளிப்பாடக பெண்ணின் தலை மயிர் மழிக்கப்பட்டு அவர்கள் அவமானப்படுத்தப்பட்டுள்ளமை பெண்ணிய சிக்கல்களின் உச்சமாகக் கருதலாம்.
ஆணாதிக்கத்தின் வெளிப்பாட்டில் பெண் கொலைச் செய்யப்பட்ட நிகழ்வும் சங்கப்பாடல்களில் காணமுடிகின்றது. நன்னன் என்ற மன்னனின் தோட்டத்திலுள்ள ஒரு மரத்திலிருந்து காயொன்று அருகில் உள்ள ஆற்றில் தானே வீழ்ந்து மிதந்து வர, அதனை ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த அந்நாட்டுப் பெண்ணொருத்தி எடுத்து உண்டாள். அதனைக் கண்ட நன்னனின் காவலர்கள் அவளை மன்னன் முன் அழைத்துச் சென்று நிறுத்த, அவன் தன்னுடைய காவல் மரக்காயை உண்டதினால் அவளுக்குக் கொலைத் தண்டனை வழங்கினான். தண்டனையை அறிந்த அவளுடைய தந்தை அவளின் நிறைக்கு (எடைக்கு) ஒத்த பொன் பாவையும், 81 யானைகளையும் தண்டமாக தருவதாகக் கூறிய நிலையிலும் மன்னன் நன்னன் அவளைக் கொலைச் செய்வதில் உறுதியாக இருந்தான். இதனை,
“மண்ணிய சென்ற வொண்ணுதல் அரிவை
புனற்தரு பசுங்காய் தின்றதன் தப்பற்
கொன்பதிற் றொன்பது களிற்றொ டவணிறை
பொன்செய் பாவை கொடுப்பவும் கொள்ளான்
பெண்கொலை புரிந்த நன்னன் போல” – ( குறு.292)
என்ற பாடல் வரிகள் வெளிப்படுத்துகின்றன. பெண் அறியாமல் செய்த சிறிய செயலுக்காகக் கொலைச் செய்யப்பட்ட்டுள்ளமை ஆணாதிக்கத்தின் வெளிப்பாட்டினைக் காட்டுகின்றது.
இல்லறம்
மானுடச் சமூகமானது குடும்பம் என்ற அமைப்பினுள் கட்டுண்டு காணப்படுகின்றது. இதனுள் திருமணம், பாலுறவு, குழந்தைப்பேறு முதலிய முக்கிய செயல்பாடுகள் நடைபெறுகின்றன. இதில் பெண் இல்லத்தரசியாக விளங்குகின்றாள். இல்லத்தில் ஆணும், பெண்ணும் இணைந்து வாழ்ந்தாலும் இல்லத்திற்குரியவளாகப் பெண் மட்டுமே சுட்டப்படுகிறாள். இல்லத்தரசி என்று கூறினாலும் கணவன், மகன், தந்தை முதலியோர்க்குப் பணிச்செய்வதே இவருடைய பணியாக இருக்கின்றது.
குழந்தைப் பேறு
சங்க இலக்கியத்தில் பெண், குடும்பத்தில் ஆணைச் சார்ந்தே வாழ வேண்டிய நிலை. எனவே பெண் குடும்பம், வீடு என்று குறுகிய பரப்பினுள் தங்களின் புழக்கத்தை அமைத்து கொள்ள வேண்டிய சூழல். இப்பரப்பினுள் குழந்தையைப் பெறுதல் என்பது முக்கிய செயலாக கருதப்பட்டது. அவ்வாறு குழந்தையைப் பெறும் போது ஆண் குழந்தையைப் பெற்றெடுப்பதே சிறப்பாகக் கருதப்பட்டுள்ளது. பொன் முடியார் என்ற பெண்பாற் புலவர் பெண்களின் கடமைகளாக,
“ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கி
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே” – (புறம். 312)
என்ற பாடல்வழி உணர்த்துகின்றார். இதில் மகனைப் பெற்றெடுத்தல் மட்டும் தாயின் கடமையில்லை. அவனைச் சமுதாயத்திலுள்ள சிக்கல்களை எதிர்கொள்ளுகின்ற வகையில் உடல்வலிமையும், மனவலிமையும் உடையவனாக வளர்த்து, சமுதாயத்திற்கு வழங்குவதும் அவளுடைய கடமையாகும். இப்பாடலின் ஆசிரியர் பெண்பாற் புலவராக இருப்பதால் என் தலைக்கடனே என்கிறார். எனவே மறக்குடியில் பிறந்த பெண்கள் அனைவரும் சமூகக் கடமையுள்ளவர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளமை காணலாம். இங்கு பெண், ஆண் குழந்தைகளைப் பெற்றுத் தருகின்ற இயந்திரமாக கருதப்பட்டுள்ளமைப் புலனாகிறது.
ஆண் குழந்தையினைப் பெற்றவர்கள் இவ்வுலகில் புகழோடும்,மறுஜென்மத்தில் வாழ்கின்ற பாக்கியத்தையும் பெறுவார்கள் என்ற நம்பிக்கை சங்க கால மக்களிடம் இருந்துள்ளது. இதனை,
“இம்மை உலகத்து இசையொடும் விளங்கி
மறுமை உலகமும் மறுஇன்று எய்துப
செறுநரும் விழையும் செயிர்தீர் காட்சிச்
சிறுவர்ப் பயந்த செம்மலோர்”
என்ற பாடல் சான்று பகர்கின்றது. பகைவர்கள் விரும்பும் குற்றமற்றஅழகினையுடைய ஆண் குழந்தைகளை உடையோர், இவ்வுலகத்தே புகழோடும்விளங்குவர். அதோடு மறுமை உலக வாழ்வினையும் குற்றமின்றி எய்துவர் என்று கோசிகன் கண்ணனார் என்ற கவிஞர் பாடியுள்ளார். இதிலிருந்து ஆண் குழந்தைப்பேறு கிடைப்பதைப் பாக்கியமாக பெண்கள் கருதும் அளவிற்கு ஆணாதிக்கச் சமூகம் நம்பிக்கையினை விதைத்துள்ளமையைக் காணமுடிகிறது.
குழந்தைப்பேறு சில பெண்களுக்கு மறுக்கப்பட்டுள்ளமையினை சங்க இலக்கியங்கள் பாறைச்சாற்றுகின்றன. பரத்தையர் ஒழுக்கம் என்ற பண்பாடு சங்ககாலத்தில் இருந்துள்ளது. இத்தகைய பரத்தையர் சமூக பெண்களுக்குக் குழந்தை பெற்றுத்தரும் தகுதியில்லை என்று ஆணாதிக்கச் சமூகம் வரையரை வகுத்துள்ளது. ஆனால் பரத்தையும் ஒரு பெண் தான் அவளுக்கும் எல்லா விதமான உணர்வுகளும் உண்டு. ஆணாதிக்கச் சமூதாயம் பரத்தையரை தங்களின் தேவைக்கான நுகர்பொருளாகவே, அடிமையாகவே இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் இத்தகைய வரைமுறையினை உருவாக்கியுள்ளனர். பரத்தையும் தலைவியைப் போன்று குழந்தையின் மீது தீரா ஆசையுடையவளாக இருந்துள்ளாள். எனவே தலைவனின் புதல்வனைக் கண்ட போது அவனை அணைத்து இள்புறுகிறாள். இதனை,
“யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வனைத்
தேர்வழக்கு தெருவில் தமியோற் கண்டே
கூர்எயிற்று அரிவை குறுகினள்; யாவரும்
காணுநர் இன்மையின் செத்தனள் பேணிப்
பொலங்கலம் சுமந்த பூண்தாங்கு இளமுலை
வருகமாள, என்உயிர் எனப் பெரிது உவந்து” – (அகம். 16)
என்ற காகலாசனார் பாடல் மூலம் அறியமுடிகிறது. எல்லோரும் விரும்புகின்ற பொற்றொடி அணிந்த புதல்வனைச், சிறுதேர் ஓட்டி விளையாடுகின்ற தெருவிலே நின்றதைக் கண்ட காதல் பரத்தையானவள், இவன் காண்பதற்குத் தலைவனைப் போலவே இருக்கிறான் என்று போற்றினாள். எவரும் காண்பதற்கு இல்லாமையினால் துணிந்து அவனருகே சென்றாள். மிகுந்த மகிழ்ச்சியுடன் என் உயிரே என்னிடம் வருவாயாக என்று மார்போடு தழுவிக் கொண்டாள். பெண்களுக்கே உரிய தாய்மைப் பேற்றைப் பரத்தையர் சமூக மக்கள் ஆணாதிக்கச் சமூதாயத்தால் இழந்து தவிக்கின்ற ஆழ்மன ஓட்டத்தை இப்பாடல் சுட்டிக்காட்டுகின்றது. ஒரு பெண் தாய்மையடையும் போதுதான் முழுமை பெறுகிறாள். தாய்மையடைவது மறுக்கப்படும் போது பெண்ணிய சிக்கலாக மாறிவிடுகிறது.
விருந்தோம்பலும் சிக்கலும்
பழந்தமிழரின் பண்பாட்டில் விருந்தோம்பல் சிறப்பிடம் பெறுகின்றது. இவ்விருந்தோம்பலைப் பெண்களே செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. பெண்களைப் புற வெளியில் இயங்க விடாமல் வீட்டுக்குள்ளே அடக்கி வைப்பதற்கு அவர்களுக்கென்று சில பணிகளை வரையறை செய்தனர். இல்லத்தரசியின் கடமைகளாகத் தொல்காப்பியர்
“விருந்து புறந்தருதலும் சுற்றம் ஒம்பலும்” ( தொல்.கற்பு.1098:3)
என்கிறார். சங்ககால குலமகளிர் தங்களின் வீட்டிற்கு வருகின்ற விருந்தினருக்கு அமிழ்தம் போன்ற உணவினை மகிழ்ந்து வழங்கியுள்ளனர்.
“அமிழ்து அட்டு ஆனாக் கமழ்குய் அடிசில்
வருநர்க்கு வரையா வசையில் வாழ்க்கைமகளிர்” -(புறம் )
என்ற பாடலின் முலம் மகளிரின் விருந்தோம்புகின்ற இயல்பினை அறியலாம். மேலும் சங்க மகளிர் தன்னுடைய இல்லத்திற்கு வருகின்ற விருந்தினரை மிகவும் முகமலர்ச்சியோடு உபசரித்துள்ளனர். தம்மிடம் உணவுப் பொருட்கள் இல்லாத வேளையில் விதைப்பதற்கு வைத்திருந்த தினையினை உரலில் இட்டு குத்தி உணவுத் தயார் செய்து உபசரித்துள்ளனர். இதனை
“வரகும் தினையும் உள்ளவை எல்லாம்
ரவல் மாக்கள் உணக்கொளத் தீர்ந்தெனக்
குறுத்துமாறு எதிர்ப்பை பெற அமையின்
குரல்உணங்கு விதைத்தினை உரல்வாய்ப் பெய்து
சிறிது புறப்பட்டன்றோ விலள்” – (புறம். 333 )
என்ற பாடல் சான்றுரைக்கின்றது. இன்றும் தமிழ்ச் சமூகத்தில் பெண்களிடம் இத்தகைய விருந்தோம்பல் பண்பாடு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
நிறைவுரை
ஆதிக்கம் நிலைத்தால்
சாதிக்க முடியுமா!
சித்தரிப்புகள் வலையானால்
வாழத்தான் முடியுமா…!
காதலும், வீரமும் இரு கண்களெனக் கருதப்பட்ட காலம் சங்ககாலம். ஆணாதிக்க சமூகத்தின் உருவாக்கமே பெண்ணடிமைத்தனத்தின் தொடக்கம் என்று கூறலாம். சங்க காலத்தில் சமுதாய அமைப்பு போற்றதக்கதாய் இருந்தாலும் பெண்களின் நிலை சிக்கலுக்குரியதாகவே இருந்துள்ளது என்பதை சங்கப் பாடல்கள் மூலம் அறிய முடிகிறது.
துணைநூற் பட்டியல்
எஸ். கருணானந்தராஜா (யுகசாரதி)–பாரதிஇலக்கியச்செல்வர்.
சங்க நூல்களில் நற்றிணை, குறுந்தொகை, அகநாநூறு, புறநாநூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை ஆகியவற்றை எட்டுத்;தொகை நூல்களுள் அடக்குவர். அகவற்பா, விருத்தப்பா(ஆசிரியம்), வஞ்சிப்பா, வெண்பா, கலிப்பாவென்னும் ஐந்து பாவினங்களுள் கலிப்பாவென்னும் பாவகையைச் சார்ந்து பல புலவர்களால் இயற்றப்பட்ட செய்யுள்களின்; தொகுப்பாயமைந்தது கலித்தொகையாகும். கலித்தொகையும் பரிபாடலும் இசைகலந்து எடுத்துப் பாடப்படக்கூடிய இன்னிசைப் பழம்பாட்டுவகையினவென்று இசைவல்லார் கூறுவர்.
கலித்தொகை பண்டைய தமிழரின் அகவாழ்வைப் படம்பிடித்துக் காட்டும் அகத்திணைநூலாகும். பாலை, குறிஞ்சி, மருதம் முல்லை, நெய்தல் ஆகிய ஐவகை நிலங்களிலும் வாழ்ந்த பண்டைத்தமிழரின் காதல் வாழ்வுபற்றிய செய்திகளை அந்நூல் கூறிநிற்கின்றது.
கலித்தொகை பாடிய புலவர்கள் விபரம் பின்வருமாறு:
பாலைக்கலி: பெருங்கடுங்கோன், குறிஞ்சிக்கலி: கபிலர், மருதக்கலி: மருதனிளநாகன், முல்லைக்கலி: அருஞ்சோழன் நல்லுருத்திரன், நெய்தற்கலி: நல்லந்துவன். கலித்தொகையைத் தொகுத்தவர் நெய்தற் கலிபாடிய நல்லந்துவனார் என்றும், முதலில் உரைசெய்தவர் நச்சினார்க்கினியரென்றும் கூறப்படுகின்றது. பழஞ்சுவடிகளைத் தேடியெடுத்து முன்முதலில் பதிப்பித்தவர் பெருந்தகை சி வை தாமோதரம்பிள்ளையாவார்.
கலித்தொகையின் இலக்கியப் பரப்பினுட் சென்று அதன் நயங்களைக் கூறுவதை ஏனைய நண்பர்களிடம் விட்டு கலித்தொகை போன்ற நூல்கள் உருவான பின்னணியை ஆய்வு செய்வதே என்பங்கில் இங்கு முதன்மை பெறுகின்றது.
அகத்திணைப் பிரிவுகள்
தமிழரின் அகவாழ்வில் காதலும் காமமும் பெரும்பங்கு வகித்தன. ஆடவர் பெண்டிரிடையே ஏற்பட்ட ஒருதலைக்காதல் கைக்கிளையெனப்பட்டது. வயது வித்தியாசம் மிக அதிகப்பட்ட நிலையில் அல்லது மனம் ஒருமைப்படா நிலையில் ஏற்படும் பொருந்தாக் காமம் பெருந்திணையெனப்பட்டது. கருத்தொருமித்து ஆதரவுபட்ட அன்புடைக்காதல் அன்பின் ஐந்திணைக் கூறுகளாய் வகுக்கப்பட்டு ஐவகை நிலங்களுக்குமேற்ப அவ்வச் சூழல்களுடன் பின்னிப்பிணைந்த நிகழ்வுகளைக் குறிப்பனவாய் புலவர்களால் இலக்கியம் சமைக்கப்பட்டது. ஆதலின் அத்திணை இலக்கியங்கள் அவ்வந் நிலத்தின்தன்மைக்கேற்ப அந்நிலம் வாழ் மாந்தர்களின் காதல், காமவுணர்வகளை ஊட்டும் முதற்பொருளெனும் காலமும் பொழுதும், அந்நில மாந்தர்களின் உள்ளத்தேயெழுகின்ற வேறுபட்ட உணர்வுகள் என்னும் உரிப்பொருள், நிலங்களின் கருப்பொருள்களான தெய்வம், உயர்குடி, தாழ்குடி, பறவை, விலங்கு, ஊரைக்குறிக்கும் பெயர், அம்மாந்தர் அருந்த நீர்பெற்ற இடங்கள், உண்ட உணவுவகை, நிலங்களுக்குரிய பூக்கள், மரங்கள், பறை, யாழ், பண், தொழில் போன்றன தொடர்பாய் வேறுபட்டமைந்தன.
மேற்கண்ட பொருட் பிரிவுகள் புறத்திணை இலக்கியங்களுக்கும் பொருந்துவனவாம். அன்பின் ஐந்திணைகளுக்கும் புறம்பே தொல்காப்பியம், புறப்பொருள் வெண்பாமாலை போன்ற நூல்கள் கூறும் கைக்கிளை, பெருந்திணையுட்பட அகப்புறத் திணைகளை மொத்தம் பதின்மூன்றாக வகுப்பர். மேலும் தொல்காப்பியம் ‘மாயோன் மேய காடுறை உலகம(முல்லை), சேயோன் மேய மைவரை உலகம்(குறிஞ்சி), வேந்தன்(இந்திரன்)மேய தீம்புனல் உலகம்(மருதம்), வருணன் மேய பெருமணல் உலகம்(நெய்தல்) என நான்கு நிலங்களையே கூறுகின்றது.
பாலை நிலமென்பது நாம் பொதுவாகக் கருதும் பாலைவன நிலமன்று. அத்தகைய பாலை தமிழகத்திலில்லை. அதனால் பாலையென்பது சிலப்பதிகாரக் கூற்றுப்படி ‘முல்லையும் குறிஞ்சியும் முறைமையிற் திரிந்து, நல்லியல் பிழந்து நடுங்கு துயருறுத்து வெம்மையாலே தண்மையிழந்து காலத்திற்கேற்ப பாலையென்பதோர் கோலங்கொண்ட வரண்ட நிலத்தையே குறிக்கும். அக்காலத்திற்கேற்ப அந்நிலத்திற்குரிய மக்களின் வாழ்வியலும் மாறியமைந்ததென்றே கொள்ளவேண்டியுள்ளது.
இவ்வாறமைந்த நிலத்தியல்புகளும் மக்கட்பண்பும் அக்காலத் தமிழிலக்கியத்தின் போக்கை வழிப்படுத்தி குறித்த நியமங்களினூடாக இட்டுச் சென்றதால் அம்மரபையொட்டியே சங்க இலக்கியங்கள் தோற்றுவிக்கப்பட்டன.
இந்த ஒத்த பண்பு எம் பண்டைய இலக்கியங்களில் காணப்பட்டதாலேயே இதனை நெறிப்படுத்த ஆன்றோர்கூடியவோர் தமிழ்ச்சங்கம் இருந்திருக்க வேண்டுமென்னும் ஊகம் ஏற்பட்டது. அது உண்மையென்றே இன்று தோன்றுகின்றது. அவ்வகையில், கலித்தொகை பாடிய புலவர்களின் இலக்கிய ஆக்க முறைமை அக்காலத்தில் தமிழ்ச்சங்கத்தின் இருப்புக்கு மேலும் சான்றாயமைகின்றது.
சங்கம் இருந்தது உண்மையா?
ஆன்றோர் அன்று பேணிய இலக்கிய மரபையும் அதனை நிருவகித்த சங்கத்தையும் சீர்தூக்கிப் பார்க்காது, சிலர் தமிழர் காட்டு வாழ்விலிருந்து நகரங்களை உருவாக்கி நகர்ந்த பரிணாமப் போக்கில் காணப்பட்ட ஐந்து வித்தியாசமான படிமுறைகளின் விளைவே இத் திணைசார் இலக்கியங்கள் என்கின்றனர். அப்படி நோக்கும்போது சமகாலத்தில் இப்படிமுறைச் சமுதாயங்கள் வாழ்ந்திருக்கவில்லை என்று பொருள்படுகின்றது. ஆனால் புறப்பொருள் வெண்பாமாலை இயற்றிய ஐயனாரிதனார், தொல்காப்பியர் உட்படப் பல தனிப்பட்ட புலவர்கள் திணைவழி இலக்கணமும் பல்திணை இலக்கியங்களும் செய்திருப்பதன்மூலம் அக்கால ஆன்றோர் மத்தியில் ஓர் எழுதப்படாத வரன் முறையாகவேனும் இந்த இலக்கியமரபு நிர்வகிக்கப்பட்டும் பேணப்பட்டும் வந்துள்ளமை புலனாவதோடு பல்வேறு காலகட்டங்களுக்கேற்ப அவ்விலக்கியங்கள் தோன்றவில்லையென்பதையும், ஓர் மரபு வழிப்பட்ட இலக்கியப்பண்பின் அடிப்படையிலேயே அவை உருவாகியுள்ளனவென்பதையும் கூறக்கூடியதாயுள்ளது. இந்தப் பண்பைக் கட்டிக்காத்தது யார்? ஓர் எழுதப்படாத யாப்புடன்கூடிய சங்கமாய் அது ஏன் இருந்திருக்கக்கூடாது?
தற்காலத்தில் தலித்துவம், நவீனத்துவம், பின் நவீனத்துவம் போன்ற இலக்கியப் போக்குகள் சமகால எழுத்தாளர்களிடையே காணப்படுவதைப்போன்று அக்காலத்திலும் இத்தகைய திணைஇலக்கியப் பிரிவுகளை அவரவர் விருப்புக்குக்கேற்ப சமகாலப் பெரும்புலவர்கள் தெரிந்தெடுத்திருக்கக்கூடும்.
மேற் குறித்தவாறு சங்கம் என்னும் போது பலரும் சேர்ந்து யாப்புடன் உருவாக்கி மாதாமாதம் அன்றேல் வாராவாரம் ஓரிடத்திற்கூடி தமிழாய்வு செய்தவோர் நிறுவனமாயியிருந்திருக்க வேண்டுமென்னும் உருவகத்தை மனதிற்கொண்டோர் அதன் அடிப்படையிலேயே எமது பண்டைய தமிழ்ச்சங்கத்தை அது அப்படி இருந்திருக்கவில்லையென்று வாதிடுகின்றனர். ஆனால் நிலைமை அத்தகையதன்று. திணை மரபைப்பேணி இலக்கியஞ் சமைத்தலும் அதனை அக்கால முன்னணி இலக்கியகர்த்தாக்கள் பார்வையிடலும் அதற்கு அங்கீகாரம் வழங்கலுமாய் இருந்தவோர் திணை இலக்கணம் எழுதப்படாத காலத்திலிருந்து பரிணாமம் பெற்று, ஆன்றோரின் அங்கீகாரத்துடன் தொல்காப்பியம் போன்ற இலக்கணநூல்கள் உருவாகி மரபைப் பேணவேண்டிய விதிமுறைகள் எழுத்தில் கொணரப்பட்ட காலம்வரை இருந்த புலவோரின் ஒத்த கருத்தையும் அக்கருத்துக்கள் காலங்காலமாய்ப் பேணப்படக்காலாயிருந்த பொதுக்கொள்கையை நிருவகித்த ஆன்றோர் கூட்டத்தையுமே சங்கமெனக் கொள்ளல் வேண்டும். அந்த வகையில் நோக்கும்போது சங்கத்தைப்பற்றிய மருட்சி ஏற்பட இடமேயில்லை. மேலும் இந்தோனேசியாவில் கிடைத்தவோர் கல்வெட்டுப்படி தமிழ் வணிகர்சங்கம் இருந்ததற்கான சான்றுகள் காணப்படுகின்றன. அவ்வாறாயின் இலக்கியச் சங்கமும் தமிழர் மத்தியில் இருந்தமையை அதிசயமாகக் கொள்ளமுடியாது.
கடவுளர்கள் சங்கத் தலைவர்களாயிருந்தார்களாவென்று நகையுற நோக்கும் புத்தி ஜீவிகள் ஏன் அக் கடவுளர்கள் எம்மைப்போன்ற சாதாரண மனிதர்களாயிருந்திருக்கக்கூடாது? என்று பகுத்தறிவுடன் நோக்குவதாகத் தெரியவில்லை. பின்னாளில் அம்மனிதர்கள் கடவுளர்களாக்கப்பட்டதற்குத் தமிழன்னை பொறுப்பாளியாகமாட்டாள் என்று இவர்கள் உணர்வார்களாக.
திணை மயக்கமாவது யாது?
ஒரு குறித்த நிலத்திற்கு அதாவது திணைக்கு உரிய மாந்தரின் முதல் உரி கருப் பொருள்களை வேறொரு திணக்குரியதாய் இலக்கியஞ் சமைத்தல் திணை மயக்கத்தின் பாற்பட்டதாம். உதாரணமாக மருதநில மாதொருத்தி கடலிற் சென்ற தலைவனுக்காய் இரங்கல் அல்லது நெய்தல் நிலப்பெண்ணாள் கடலினின்றும் மீண்டு பசியோடு களைத்து வந்த கணவனுடன் ஊடுதல் போன்றன இத்திணை மயக்கத்தைக் குறிப்பனவாம்.
மேலும் தத்தம் நிலத்திற்குப் பொருந்தாத பூக்களை மாதர் அணிதல் – உதாரணமாக மருதத்திற்குரிய தாமரையை பாலைப் பெண் சூடியுள்ளதாக வர்ணித்தல், குறிஞ்சித் தெய்வமாம் சேயோனை(முருகனை) வழிபடவேண்டிய குறக்குலமாது நெய்தற் கடவுளாம் வருணனைப் பணிந்ததாகக் காவியம் சமைத்தல் போன்றன மரபு பிறழ்வுபட்ட திணை மயக்கங்களாக அந்நாளில் கருதப்பட்டது எனலாம். இம்மரபை மீற முற்பட்ட புலவர்களைச் சங்கப் பலகையிற் சாடி அக்காலத்தைய புலவர்கள் நியமங் காத்தனர். இதனாலேயே தமிழன்னையைச் சங்கம் வளர்த்த தமிழ் என்று அடைமொழியிட்டு இன்றுவரை ஆன்றோர் கூறுகின்றனர்.
இனிக் கலித்தொகைக்கு வருவோம்:
கலித்தொகை தரும் ஐந்து திணைகளுக்குமான உரிப்பொருள்களை அஃது, காதலர் மனவுணர்வுகளின் வகையறாக்களை இங்கே நோக்குவது அவசியமாகின்றது.அவை முறையே: குறிஞ்சிக்கு – புணர்தலும் புணர்தல் நிமித்தமாகவும், பாலைக்கு – பாலையுட் சென்ற தலைவனைப் பிரிதலும் பிரிதல் நிமித்தமாகவும், முல்லைக்கு – காத்திருத்தலும் இருத்தல் நிமித்தமாகவும், மருதத்திற்கு – ஊடலும் ஊடல் நிமித்தமாகவும், நெய்தலுக்கு – கடலிற் சென்ற தலைவன் வராதபோது இரங்கலும் இரங்கல் நிமித்தமாகவும் உணர்வு வழிப்படுவதாக புலவோர் இலக்கியஞ் செய்தனர். இவ்வாறு ஓர் நியம வரைமுறையின் கீழ் கூடியவரை திணை மயக்கங்கள் உருவாகாதவாறு பண்டைய புலவோர் இலக்கியஞ் செய்துள்ளமை தமிழ் தவிர்ந்த வேறெந்த மொழிக்குமில்லாத பெருஞ்சிறப்பாகும். அதனாலேயே சங்கம் இருந்திருக்கின்றது என்று அடித்துக் கூறக்கூடிதாயுள்ளது.
பாலைக்கலி
கடவுள் வாழ்த்தாய்ச் சிவனைப் பணிதலோடு தொடங்கும் கலித்தொகையில் முதன் வருவது பெருங்கடுங்கோவின் பாலைக்கலியாகும். ஆறலைகள்வர் களவும் கொலைத் தொழிலும் புரியும் வரண்ட பாலைநிலத்தைக் கடந்து பொருள் தேடுவான் பொருட்டுச் செல்லும் அல்லது செல்ல முயலும் தலைவனது பிரிவாற்றாமையான் வருந்தும் தலைவி அவனைத் தடுத்து நிறுத்த முயலுதல் அல்லது தலைவி சார்பாய் தோழி தலைவனிடம் தலைவியின் வருத்தம் கூறல், பிரிவின் வாடும் தலைவியைத் தேற்றல் போன்றன பாலைக்கலியின் உரிப்பொருளாகும். மேலும் காதலனுடன் உடன்போக்கிலீடுபட்ட தலைவியைத் தேடும் பெற்றோரின் அவல நிலைகளும் இங்கே காட்சிப்படுத்தப்படுகின்றன.
பாலையின் கொடுமை, வெம்மை, வரட்சி போன்ற புறச்சூழல்களும், தலைவியின் பிரிவுத்துயர், தலைவனின் பிரிவால் அவளுக்கேற்படும் கையறுநிலை உட்பட்ட அகச்சூழல்களும் பெருங்கடுங்கோனால் பாலைக்கலியில் விபரிக்கப்படும் அதேவேளை தலைவனை பாலையுள் விடுத்து அவனுக்காகக் காத்திருக்கும் தலைவியின் வளமிக்க வாழிடம் தொடர்பான வர்ணனைகளுக்கும் குறைவில்லை. பாலைக்கலி முப்பத்தைந்து பாடல்களைக் கொண்டது.
குறிஞ்சிக்கலி
கபிலர் பாடிய குறிஞ்சிக்கலி மலைப் பிரதேச மக்களின் காதல் வாழ்வை மையப்படுத்தி எழுதியதாகும். குறவன,; குறத்தி வேட்டுவன், வேட்டுவிச்சி போன்ற தலைவன் தலைவியரைச்சுற்றிப் பின்னப்பட்ட அழகிய காதற் குறிப்புகளாய்க் குறிஞ்சிக்கலி அமைந்துள்ளது. கிளி, மயில், மான்கள், புலி,கரடி, சிங்கம், யானையென்று பல சாதுவானதும், கொடியவையுமான காட்டுவிலங்குகள் வாழும் கானகத்தில் சந்தனம், அகில் போன்ற வாசனை மரங்கள் நிறைந்த சூழலில் தினைப்புனங்காக்கும் வஞ்சியருக்கும் வேட்டையாடும் வாலிபருக்குமிடையில் நிகழ்ந்த களவொழுக்கம் மக்கட்பண்பின் தகைமை குன்றாவகையில் இருபத்தியொன்பது கலிப்பாக்களடங்கிய அழகிய இலக்கியமாகக் கபிலர் பெருமானால் படைக்கப்பட்டுள்ளது.
மருதக்கலி
மிகுந்த பொருள் வளமுடைய பெருநிலக்கிழார்கள் வாழ்ந்த பிரதேசம் மருதநிலமாகும். நீர் நிலவளங்கள் நிறைந்து உழைப்பும் உற்பத்தியும் மிகுந்திருந்த சூழலில் வாழ்ந்த இம்மாந்தர் கூட்டம் இல்வாழ்விலீடுபட்டு அறம் வளர்த்த அதேவேளை காமக்களியாட்டங்களிலும் ஈடுபட்டது. அதனால் பரத்தமை இம்மாந்தர் வாழ்வின் ஒரு பகுதியாயிற்று. இல்லங்களில் கற்பின் செல்வியர் கணவன் வரவை எதிர்பார்த்து வழிமேல் விழிவைத்துக் காத்திருக்க வரைவின்மகளிர் மாடங்களில் கணிகையருடன் களியாட்டம் நடாத்திவிட்டு பொழுது புலரும் வேளையில் வீடுதிரும்பும் தலைவன்பால் தலைவியர்; காட்டும் ஊடலே மருதக்கலியின் உரிப்பொருளாயிற்று. அறம் பேசும் குறளும் இப்பரத்தமையை அதன் விளைவான ‘ஊடுதல் காமத்திற்கின்பம்’ என்னுமாறாய் அங்கீகரிததுள்ளமையினால்; தமிழர் வாழ்வில் இதுவோர் ஏற்றுக்கொள்ளப்பட்ட பண்பாகவே கொள்ளல் வேண்டும். சிறியதோர் ஊடலுடன் கணவனின் இப்பரத்தமைப் பண்பை மன்னித்து அவனை இல்லத்தில் ஏற்றுக்கொள்ளும் அன்புடை நெஞ்சர்களான தலைவியரின் தாபங்களை அழகுறச் சித்தரிக்கும் மருதனிளநாகர் உரிப்பொருளான ஊடல் விடுத்து நகைச்சுவை ததும்பும் பாடலும் பாடியுள்ளார். முப்பத்தைந்து அழகிய பாடல்கள் மருதக்கலியில் காணப்படுகின்றன.
முல்லைக்கலி
மந்தைகளை மேய்க்கும் ஆயர் குலத்தவர் பாடிகளமைத்து வாழ்ந்த இடம் முல்லையாகும். அதனால் இவர்கள் நாடோடிகளாகவே இருந்திருக்க வேண்டும். பசும்புற்றரை வரட்சியினால் பாலையாகும்போது தமது மந்தைகளை வேற்றிடம் கூட்டிச்செல்லும் வழக்கத்தைக் கொண்ட இவர்களின் காதல் வாழ்வில் தலைவன் தலைவியரது திருமணம் நிறைவேறக் காளையர் ஏறுதழுவித் தம்வீரத்தைக் காட்டவேண்டிய நிர்ப்பந்தம் காணப்பட்டதால் தலைவி தலைவனை அடைதற்காகக் காத்திருக்கவேண்டிய நிலை உருவாகின்றது. அதனால் தலைவியர் தமக்குரிய தலைவன் அல்லது காதலன் வந்து ஏறு தழுவித் தம்மை வெற்றி கொள்ளும்வரை களவொழுக்கங்களில் ஈடுபடாது நிறைகாத்து இருத்தல் முல்லையின் உரிப்பொருளாகின்றது. காதலும் கூடலும் இம்மாந்தர் வாழ்விலே இல்லாமலும் இல்லை. ஆயினும் இத்தகைய களவொழுக்கத்தினரும் உடன்போக்கிலீடுபடாது ஏறுதழுவி வெற்றிவாகை சூடும் திருமண நாள்வரை காத்திருக்க நேரிடுகிறது. இத்தகைய காதலரின் மனவுணர்ச்சிகளைச் சித்தரிக்கும் குறுங்கதைக் கூறுகளை பதினேழுபாடல்களில் புலவர் நல்லுருத்திரனார் தமிழுலகு மகிழத் தனது முல்லைக்கலியிற் தந்துள்ளார்.
நெய்தற்கலி
நெய்தநிலம் வாழ் மாந்தர் கடற்றொழில் செய்தனர். மாலையிற் கடல் ஓடி மறுநாட் காலைவரை அலைகளுடன் போராடி மீன்கொணரும் தம் தலைவரின் வரவை நாளும் மிகுந்த பதட்டத்துடன் எதிர்பார்க்கும் தலைவியர் தம் காதலர் திரும்பும்வரை அவரை நினைந்து இரங்கலே நெய்தற்கலியின் உரிப்பொருளாயமைகின்றது. காதலன் பிரிவால் கலக்கமுற்று கடலைக் காற்றை நிலவை விலங்குகளை விழித்துத் தம் துயர்கூறல், பொருள்தேடி அன்றேல் போர்புரியக் கடல்மீது கலஞ் செலுத்திச் சென்ற கணவனுக்காக வருந்துதுல் போன்ற காட்சிகளைக் கொண்ட நெய்தற்கலியை முப்பத்திரண்டு பாடல்கள் கொண்ட சொற்சித்திரங்களாக வகுத்தவர் நல்லந்துவனார் ஆவர்.
முடிவாக:
இவ்வாய்வில் கலித்தொகையின் கட்டமைப்பே சுருக்கமாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதனுட் சென்று அதன் இலக்கிய நயங்களை நண்பர்கள் சுவைபடத் தருவார்களாக. உலகின் நாகரீகங்கள் தோன்றிய அன்றேல் அதற்கும் முற்பட்ட காலத்தே எம் புலவர் பெருமக்கள் ஓர் செழுமை மிக்க மொழியாகத் தமிழன்னையை இத்தகைய தமிழிலக்கியக்கங்கள் மூலம் வளர்த்தெடுத்தனர். இன்தமிழின் பெருமையறிந்து எம் எதிர்காலச்சந்ததி இப்பொக்கிசங்களை நன்கறிந்து, ஆய்ந்து உலகமுள்ளவரை அன்னை தமிழின் இருப்பை உறுதிசெய்யுமாக.கலித்தொகையில்பாலைக்கலியில்படித்தஒருசிறுபாடலைஎளியதமிழில்இங்குஅனைவரும்புரியும்படிகீழ்வரும்கவிதையாக்கியிருக்கிறேன்.
தலைவியின்பிடிவாதம்
தன்தலைவன்பொருள்தேடிப்பாலையுயூடே
தனிவழியில்போவதற்குத்துணிந்துவிட்டான்
என்பதறிந்தப்பேதைமனம்கவன்றாள்
என்னையும்நீகூட்டிப்போஎனத்துடித்தாள்.
‘கானிடையேபசுமைதனைக்காணாதேகி
கள்ளிதனைமுள்ளோடுபுசித்துச்சோரும்
ஆனிரைகள்அலைகின்றவனத்திலாங்கே
ஆறலைகள்வர்தொடுக்கும்அம்பால்மாய்ந்து
போனவர்கள்எத்தனைபேர்அறியீரோநீர்
போகத்தான்புறப்பட்டீர்நீரேகாணா
வானமழைபொழியாதபூமியாங்கே
வாழ்பவரும்வெப்பத்தால்வருந்திச்சாவார்
ஆனதனால்அதிற்போவோர்துயரத்தாலே
அழுகின்றகண்ணீரேநிலம்நனைக்கும்
ஏனுமக்குஇவ்வெண்ணம்துன்பம்தன்னை
ஏற்பதுவேவிருப்பென்றால்அதனையேற்க
நானுமுடன்வருகின்றேன்நண்ணும்துன்பம்
நமக்கின்பம்அன்பறுத்தபிரிவுவேண்டாம்.‘
என்றுரைத்தான்தலைவியவள்இதயதாபம்
எழிற்கலியில்பாலைக்குத்திணையமைத்து
அன்றுநிலம்ஐந்தாகவரையறுத்த
அருங்கவிஞன்பெருங்கடுங்கோஅறிகமாதோ!
செ. முத்துமாரி,முனைவர் பட்ட ஆய்வாளர்,தமிழ் உயராய்வு மையம், ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி,
திருநெல்வேலி – 8.
முன்னுரை
மாறாத சுவையும் தோய்ந்த இன்பமும் அளவின்றிச் சுறப்பன சங்கப் பாடல்கள். அவை பழந்தமிழர் வாழ்வை படம் பிடித்தாற் போல் கண்ணெதிரில் நிறுத்தி காட்டும் காலக்கண்ணாடியாக அமைத்துள்ளது. உற்றுநோக்கி, அதன் சிறப்பை, ஆற்றலை, நுட்பமான நிகழ்வுகளைத் தம் இலக்கியங்களில் பதிவு செய்தனர். சங்கப் புலவர்களின் கூர்மையான கவனத்திற்கு உட்பட்டு பதிவு செய்யப்பட்ட ஒலி வகையுள் ஒன்றான எதிரொலிக்கும் மனித குரல் வழி எழும் எதிரொலி பற்றி ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
எதிரொலி
“echo என்ற ஆங்கிலச் சொல்லுக்கு தமிழில்
எதிரொலி என்பது பொருளாகும் ஒருவர் எழுப்பும்
ஒலியை ஒலி அதிர்வினால் மீண்டும் திரும்பக்
கேட்பதே எதிரொலி ஆகும்” 1
“எதிரொலி என்ற பொருள் தரும் ‘சிலம்பு’
என்னும் சொல்லை சங்க இலக்கியங்களில்
பரவலாகக் காணலாம் எதிரொலி செய்தலால்
மலைக்குச் சிலம்பு என்ற பெயரும் உண்டு“ 2
குரல் ஒலி
குரல் ஒலித் தோற்றுவிப்பன மனிதனின் உடல் உறுப்புகளே அவற்றைப் பேச்சு உறுப்புகள் அல்லது ஒலிவுறுப்புகள் எனக் குறிப்பிடுவர். உதடு, பல், அண்ணம், உள்நாக்கு, காற்றுகுழல், குரல்வளை, தொண்டை போன்ற உறுப்புகள் குரல் ஒலியைத் தோற்றுவிக்கின்றன. குரல்ஒலியானது, முணுமுணுப்பு ஒலி கீச்சுகுரல் ஒலி, கிசுகிசு ஒலி, பேரொலி என ஒலிக்கும் தன்மையைப் பொறுத்து வகைப்படுத்தப்படுகின்றது.
குரல் ஒலி மனிதர்கள் பேசும் சுழலமைவைப் பொருத்து மிகுந்தும் குறுகியும் ஒலிக்கும் மிகுந்து ஒலிக்கும் போது அவ்வொலி எதிரொலியாகத் திரும்பக் கேட்பதும் உண்டு இவ்வெதிரொலி பற்றிய சான்றுகளைச் சங்கப் பாடல்களில் காணலாம்.
சங்க இலக்கியங்களில் எதிரொலிக் குறித்த செய்திகள் பரவலாக காணப்படிகின்றன. ஆயினும் மனிதக் குரல் ஒலி மூலமாக எழும் எதிரொலிகள் பற்றிய செய்திகள் ஒருசிலவே காணப்படுகின்றன அவை பின்வருமாறு அவை பின்வருமாறு
பெரியவர்கள் தம்மைவிட வயதில் சிறியவர்களையோ, விலங்குகளையோ, பறவைகளையோ அதட்டி தாம் கருதியதைச் செய்து முடிப்பது உண்டு. அவ்வாறு அதட்டும் ஓசையானது பேரொளியாக எழும்பி எதிரொலியாகக் கயமனார் என்னும் புலவர் அகநானூற்றில் அழகுற எடுத்தியம்பியுள்ளார்.
பாலை நிலத்தின் அரிய வழியில் சகடத்தை இழுத்துச் செல்லும் எருதுகள் அவ்வழியில் போக முடியாமல் இடற்படுகின்றன. அவ்வெருதுகளை உப்புவணிகர் அதட்டி ஓட்டுவதால் அவரது அதட்டும் குரல்வொலியனது மலைப்பகுதிகளில் எதிரொலிக்கின்றது. இதனை,
“கொடுங் கோல் உமணர், பகடு தெழி தென் விளி
நெடும் பெருங் குன்றத்து இமிழ் கொள இயம்பும்”
(அகம்: 17:13-14)
எனும் பாடல்வரிகள் அறியலாம்.
ஒருவர் இன்னொருவரை அழைக்கும் பொது அருகில் இருந்தால் மெதுவாகவும், தொலைவில் இருந்தால் சத்தமாகவும் அழைப்பது வழக்கம். அவ்வாறு சத்தமாக அழைக்கும் பொது இடத்தின் சூழலமைவைப் பொறுத்து அவ்வழைப்போலி எதிரொலியாகக் கேட்பதும் உண்டு. இதனை பரிபாடலில் காணலாம்.
பேதை பருவத்தில் உள்ள ஓர் இளம்பெண் தன் உறவினரை விட்டுப் பிரிந்ததால் மலைப்பகுதியில் இட வேறுபாடு காரணமாக எங்கு செல்ல வேண்டும் என்பது கூடத் தெரியாமல் திகைக்கிறாள். பின் தன் உறவினரைச் ‘சிறந்தவரே! சிறந்தவரே!’ என்று அழைக்கிறார். அங்குள்ள குகைகள் அவள் அழைப்பை ஏற்காமல் விளியின் இசையே மட்டும் ஏற்றுக்கொண்டு எதிரொலிக்கின்றன. அப்பெண் குகையின் எதிரொலி என்பதறியாமல் உறவினரின் அழைப்பொலி என்று நினைத்துக் கொண்டு திரும்பத் திரும்ப அழைத்துக் கூவுவதை,
‘ஏஎ’ ஓஒ’ என விளி ஏற்பிக்க
ஏஎ’ ஓஒ’ என்று ஏலா அவ் விளி
அவ் இசை முழை ஏற்று அழைப்ப அழைத்துழிக்
செல்குவர் ஆங்குத் தமர்க் காணாமை
மீட்சியும், கூவுக் கூஉ மேவும் மடமைத்தே
வாழ்த்து உவப்பான் குன்றின் வகை’’ (பரி. 19;61-66)
எனும் பரிபாடல் வரிகளால் அறியலாம். இப்பாடல் அவ்விடம் பெண்ணின் வழியாத் துயரத்தை எதிரொலி மூலம் நுட்பமாக புலப்படுத்தி நிற்பது படித்து இன்புறத் தக்கதாகும்.
ஒருவரைப் பலர் கூடி வாழத்தும் பொது மிகுந்த ஆரவாரத்துடன் வாழ்த்தி மகிழ்வது வழக்கம். திருமுருகாற்றுப்படை இத்தகைய வாழ்த்தொலி மூலம் எழும் எதிரொழி குறித்த செய்தியைப் பதிவு செய்திருப்பது நோக்கத்தக்கது.
சூரர மகளிர் பலரும் ஒன்று கூடி விளாமரத்தின் தளிரை ஒருவர் மேல் ஒருவர் அத்தளிர் படும்படி விரலால் தெறிக்கச் செய்வர். அத்தளிர் பட்டவுடன் ‘அசுரர்களை வென்று, அவர்களைக் கொன்றொழித்து அவ்வெற்றி குறித்துத் தூக்கிய கோழிக் கொடி வாழிய பெரிது’ என்று வாழ்த்திப் பலரும் ஒன்றாக கூடி ஆடிப்பாடும் ஆரவாரம் மலையெங்கும் எதிரொலிக்கின்றது. இதனை,
‘கோழி ஓங்கிய வென்றுஅடு விறற் கொடி
வாழிய பெரிது! என்று ஏத்தி பலர் உடன்
சீர்திகழ் சிலம்புஅகம் சிலம்பப் பாடி
சூரர மகளிர் ஆடும் சோலை” (தி.மு. 38-41)
எனும் திருமுருகாற்றுப்படையின் பாடல்வரிகள் உணர்த்துகின்றன.
பொதுவாக எதிரொலி மலைப்பகுதிகளில் அதிகமாக எழுவது உண்டு. விலங்குகளின் ஓசையும், இடி ஓசையும், மலைகளில் பட்டு எதிரொலிப்பது வழக்கம். அவற்றோடு மலைவாழ் மக்கள் எழுப்பும் குரல் ஒலிகளும் மலைகளில் பட்டு எதிரொலிக்கும் செய்தியைச் சங்க இலக்கியங்களில் ஒன்றான மலைபடுகடாம் மிக நுட்பமாக பதிவு செய்துள்ளது வியப்பிற்குரியதாகும். மலைபடுகடாம் மலைவாழ் குறவர்கள் விலங்குகளைப் பிடிக்கும் போது எழுப்பும் ஒலி, தேன் எடுக்கும் போது எழுப்பும் ஆரவார ஒலி, ஆகியவற்றின் எதிரொலிகளை எடுத்துரைக்கின்றன.
“விலங்கல், மீமிசைப் பணவைக் கானவர்
புலம்புக்கு உண்ணும் புரிவளைப் பூசல்”
(மலைப்படு 298-299)
எனும் பூசல் ஒலியும்,
“கலை கையற்ற காண்பின் நெடுவரை,
நிலை பெய்திட்ட மால்பு நெறியாகப்,
பெரும்பயன் தொகுத்த தேங்கொள் கொள்ளை””
என்னும் தேன் எடுக்கும் போது எழும் ஒலியும் எதிரொலிகளை ஏற்படுத்துவதை இப்பாடல் வரிகள் வரிகள் எடுத்துரைக்கின்றன.
மேலும், மலைவாழ் பெண்களின் பாட்டொலி, கிளியோட்டும் ஒலி, சூரர மகளிரின் ஆரவார ஒலி, ஆகியனவும் அவற்றின் பாடலைப் படிப்பவர்க்குப் புதிய அனுபவத்தை ஏற்படுத்துகின்றன.
‘கொடுவரி பாய்ந்தெனக் தொழுநர் மார்பின்
நெடுவிசி விழுப்புண் தனிமார், காப்பென
அறல் வாழ் கூந்தற் கொடிச்சியர் மாடல்’
(மலைபடு: 302-304)
‘தினைக்குறு மகளிர் இசைபடு வள்ளையும்’ (மலைபடு:342)
எனும் பாட்டொலிகளும்,
‘ஒலிகழைத் தட்டை புடைநர் புனன்தொனும்,
கிளிகடி மகளிர் விளிபடுபூசல்’ (மலைபடு:328-329)
எனும் கிளியோட்டும் ஒலியும்,
‘அருவிருகளும் வான் அரமகளிர்
வருவிசைதவிராது வாங்குபு குடைதொறும்
தெரிஇமிழ் கொண்டதும் இயம்போல் இன்னிசை’
(மலைபடு:294-296)
எனும் சூரர மகளிரின் ஆரவார ஒலியும் மலைப்பகுதிகளில் பட்டு எதிரொலிப்பதை மலைபடுகடாம் அழகுற எடுத்துரைக்கிறது எனலாம்.
இவ்வொலிகள் தவிர மலைவாழ்மக்கள் எழுப்பும் குரலைக் கூத்தொலியும் (மலைபடு:322), காட்டுப்பசுக்கள் ஒன்றோடு ஓன்று போர் இடுவதைக் கண்டும் குறவர்கள் எழுப்பும் ஆரவார ஒலியும் (மலை 330-333), குறவச் சிறுவர்கள் எழுப்பும் ஓசையும் (மலை 336-339) எதிரொலிகள் எழுப்புவதை மலைபடுகடாம் நுட்பமாக பாடிக் களிக்கிறது.
முடிவுரை
எதிரொலிகள் அறிவியல் நுட்பம் ஆகும். திரும்பக் கேட்டல் என்பது மனித மனதிற்கு இன்பம் விளைவிப்பது மலை பகுதிகளே பெரும்பாலும் எதிரொலிகளின் பிறப்பிடமாகும். இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ள அனைத்தும் குரல் ஒலிகளும் மலைபகுதிகளிலேயே பட்டுத் திரும்ப எதிரொலிக்கும் எதிரொலிகளாக அமைத்துள்ளன. பெரும்பாலும் மனித உணர்வுகளும் சூழல் அமைவுகளுமே எதிரொளிக்குக் காரணமாக அமைவதை இக்கட்டுரை உறுதிபடுத்துகிறது எனலாம்.
அடிக்குறிப்புகள்
துணைநூற்பட்டியல்
1.மறைமலை இலக்குவனார், சங்க இலக்கியத்தில் ஒலிச்சூழலமைவு, உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டு கட்டுரை, 2010.
4.மு.பூங்கோதை, மதுரைக்காஞ்சியில் ஒலிச்சூழலமைவு, முத்துக்கமலம், இணைய இலக்கிய இதழ்.
அ.சரண்யா, முனைவர்பட்ட ஆய்வாளர், இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி,தமிழ்ப் பல்கலைக்கழகம்,
முனைவர் ச.கவிதா, பேராசிரியர் & நெறியாளர், இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி,தமிழ்ப் பல்கலைக்கழகம்,
முன்னுரை
பத்துப்பாட்டில் முதலாவதாகச் சிறப்பிக்கப்படுவது திருமுருகாற்றுப்படை. திருமுருகு என்ற சொல் முருகப்பெருமானை உணர்த்தும். முருகன் என்ற சொல்லுக்கு அழகு, இளமை, மணம் எனப் பொருள் பல உண்டு. ஆற்றுப்படை என்பது வழிப்படுத்துவது அல்லது வழிகாட்டல் என்பர். முருகப்பெருமான் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் தலங்களுக்குச் சென்று அப்பெருமானின் அருள்பெற்ற பக்தன் முருகப் பெருமானின் அருள் வேண்டி நின்ற ஒருவனுக்கு வேலன் வீற்றிருக்கும் இடங்களைக் கூறி முருகனின் பேரருளினையும் அழகு திருமேனிப் பொலிவினைச் சிறப்பாக எடுத்துக் கூறி ஆற்றுப்படுத்தி வழிகாட்டுவதாக அமைந்த நூலே திருமுருகாற்றுப்டையாகும்.
அறம், பொருள், இன்பம், வீடுபேறு இந்நான்கும் செம்மையுற அமைந்தால்தான் ஒரு மனிதன் நிம்மதியான வளமான வாழ்வை வாழ முடியும். அவ்வாழ்வை நல்வழிப்படுத்துபவர் இறைவன் ஒருவரே. தன் அன்பர்கள் நன்மைகள் பல பெற்று வாழ வேண்டும் என்பதற்காகவே இறைவன் ஞாயிறும் திங்களும் மாறி மாறித் தோன்றுவது போல எப்போதும் காட்சி தந்து காத்தரு வருகிறார்.
இவ்வுலகில் புகழ் ஒன்றைத் தவிர நிலைத்த பொருள் எதுவுமில்லை. ஒருவன் வீடுபேற்றை அடைந்து நிலைத்து நிற்க வேண்டும் என்றால் இறைவனின் தாள்களைச் சரணடைதல் வேண்டும். அந்த வகையில் முருகப் பெருமானின் சிறப்பையும் அவ்விறைவனின் அருட்கொடையினையும் திருமுருகாற்றுப்படையின் வாயிலாக அறிந்துகொள்ள முடிகின்றது.
தமிழர்களின் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் திருமுருகாற்றுப்படைக்குத் தனியே இலக்கணம் காணப்படுகின்றது. பத்துப்பாட்டில் ஐந்து பாடல்கள் ஆற்றுப்படை நூல்களாகும். அவை பழங்காலத்தில் அரசர்கள், புலவர்கள், வள்ளல்கள் முதலானவர்களைப் பாராட்டுவதற்காக அமைந்தவை. ஆற்றுப்படை என்றால் ஆற்றுவித்தல் என்று பொருள்.
இதனைத் தொல்காப்பியர்
“கூத்தரும் பாணரும் பொருநாறும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச்
சென்று பயன்எதிர் சொன்ன பக்கமும்.” (தொல்காப்பியம்?)
என்று கூறுகிறார்.
கூத்தர், பாணர், பொருநர், விறலி ஆகியோர் தாம் பெற்ற பெரும் செல்வத்தினைப் பெறாதவர்களுக்கு எடுத்துக்கூறி ஆற்றுவிப்பது ஆற்றுப்படையாகும். தன்னை யார் வழிப்படுத்துகிறார்களோ அவர்களின் பெயரால் வழங்கப்படுவது ஆற்றுப்படை ஆனால் திருமுருகாற்றுப்படையில் ஆற்றுப்படுத்தியவர்களின் பெயர் இடம்பெறாமல் பாட்டுடைத் தலைவனாகிய முருகனின் பெயரால் வழங்கப்படுகின்றன.
தன்னுடைய அனுகிரகங்களும் இறைவனின் செயல்களினால் தான் நடைபெறுகின்றன என்பதால் முதற் பாட்டு இறைவனின் பெயரால் வழங்கப்பட்டுள்ளது. மேலும் முருகப் பெருமானின் சிறப்புகள் மற்றும் அவர்தம் அருட்சிறப்புகளை வெளிக்கொணர்வதாக இக்கட்டுரை அமையப்பெறுகின்றது.
உலகம் என்ற சொல்
திருமுருகாற்றுப்படிடயின் முதற்பாவில் ‘உலகம்’ என்ற சொல் காணப்படுகிறது. பலர் எந்தச் செயலையும் தொடங்குவதற்கு முன்பு பிள்ளையார் சுழி போடுவதைப் போன்று முற்காலத்தில் இவ்வழக்கம் இடம்பெற்றுள்ளது.
உலகம் என்பது இறைவனால் படைக்கப்பட்டது. நாம் எந்தச் செயலைத் தொடங்கினாலும் இறைவனை மனத்தில் எண்ணித் தொடங்கினால் தொய்வின்றி வெற்றியடையும் என்பதால் சங்க காலத்திலும் உலகம் என்ற சொல்லைக் கையாண்டுள்ளனர்.
“உலகம் உவப்ப வலன்ஏர்பு திரிதரு” (திருமுருகாற்றுப்படை, 1)
“உலகம் யாவையும் தாமுள ஆக்கலும்” (கம்பராமாணயம், 1)
‘உலகெலாம் உணர்ந்து” (பெரியபுராணம், 1)
சங்க இலக்கியம், கம்பராமாயணம், பெரியபுராணம் போன்ற நூல்கள் உலகம் என்ற சொல்லிலேயே தொடங்கப்பட்டுள்ளன. இவ்வுலகம் எல்லா வளமும் நலமும்பெற்று வாழ வழிவகுப்பவர் இறைவன் ஒருவரே. அவரை எண்ணித் தொடங்கினால் நாம் எண்ணியவாறே வெற்றியடையும் என்பதை இங்கு அறியலாகிறது.
தோற்றப் பொலிவு
அழகு என்ற சொல்லிற்கு முருகன் என்று பொருள். பவளம் போன்ற மேனியையும் செம்மையான ஆடையையும் அணிந்து காண்போரின் உள்ளங்களைக் கவரக்கூடிய பேரழகு வாய்ந்த தோற்றப் பொலிவுடன் முருகன் இருக்கிறார். கையில் வேலும் சேவற் கொடியும் மயிலை வாகனமாகவும்கொண்டு பேரழகுடன் பக்தர்களுக்கு அருள்புரிகின்றார். மேலும்
“பலர்புகழ் ஞாயிறு கடற்கண்டா அங்கு
ஓவற இமைக்கும் சேண்விளங்கு அவிர்ஒளி” (திருமுருகாற்றுப்படை, 2-3)
குன்றுகளைத் தன் இருப்பிடமாகக் கொண்டு திகழ்பவர் முருகப்பெருமான். விடியற்காலையில் சூரியன் அடிவானத்தில் கடற்பரப்பின் மேல் ஒளிப்பிழம்பாய் உலகிற்குக் காட்சியளிப்பது போல நெடுந்தொலைவில் உள்ள மலையில் வளமாக எழுந்து பற்பல சமயத்தவரும் புகழ்ந்து போற்றும் முருகப்பெருமான் அக இருளையும் புற இருளையும் நீக்கி மெய்ப்பொருளைத் தெரிந்துணர்த்தும் பேரொளியாகத் திகழ்கின்றார்.
மேலும் தன் அடியவர்களுக்கு அருள் புரிவதற்காக அவர்கள் இருக்கும் இடம் தேடி நெருங்கிவருவார். அப்படி வருவதால் மக்களின் துன்பங்களையும் அறியாமையையும் நீக்கி இன்பமாக வாழ வழிவிடுபவர் முருகப்பெருமான் ஒருவரே என்பது இங்குப் புலனாகிறது.
வடிவங்கள்
இறைவன் ஒவ்வொருவருக்கும் பல வடிவமாகத் திகழ்கின்றான். விநாயகரின் திருவடிகள் 32 என்றும் மகேஸ்வரனின் வடிவங்கள் 25 என்றும் முருகப்பெருமாரினன் திருவடிகள் 16 என்றும் பேராசிரியர் க.பெருமாள் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
முருகப்பெருமான் பாலனாகவும் வெற்றி வீரனைப் போன்ற தோற்றத்தனாகவும் திருமணக்கோலத்தில் இருதேவியருடன் நின்ற வடிவிலும் பல ஆயுதங்களைக் கொண்டு பகைவர்களை அச்சுறுத்துகின்ற கோலத்திலும் பன்னிரு திருக்கைகளால் அள்ளி அள்ளிப் பக்தர்களுக்கு அளித்த அருள் வள்ளல் கோவணத்துடன் தண்டூன்றி ஆண்டியாய் நிற்கின்ற வடிவிலும் பல வடிவங்கள் கொண்டு தன் அன்பர்களுக்கு அருள் புரிவதை
“எல்லாம் தந்தாண்டி – ஆனால்
ஆண்டியும் ஆனாண்டி.” (இன்பவௌ;ளம்)
என்பதன்வழி அறிய முடிகின்றது.
தாளின் சிறப்பு
இறைவன் எல்லாச் சக்திகளையும் பெற்று இவ்வுலகில் உள்ள உயிர்கள் அனைத்தையும் தன்னகத்தே கொண்டு இயக்கி வருகின்றான். அவரைப் பற்றுவது என்பது மிகக் கடினமானதாகும். அடியவர்களுக்குப் பற்றுக்கோடாக இருப்பது அவனுடைய தாள்களே என்பதை
“கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை” (திருக்குறள், 758)
என்பதன்வழி அறிய முடிகிறது.
வள்ளுவர் பெருந்தகை, பெரும் புலவர் அவரே இறைவனின் திருமேனியில் அவரின் தாள்களைப் பற்றுவதே சிறந்தது என்று தன் குறளில் தெளிவுபட விளக்கியுள்ளார். மேலும் திருமுருகாற்றுப்படையிலும் பரிபாடலிலும் தாள்களைப் பற்றுவதே மேலானது என்பதை
“நின்னிற் சிறந்த நின்தாளினையே” (பரிபாடல்)
“உறுநர்த் தாங்கிய மதன்உடை நோன்தாள்” (திருமுருகாற்றுப்படை, 4)
என்பவற்றின்வழி அறிய முடிகின்றது.
கடம்பமாலை புரளும் மார்பினன்
முருகப்பெருமானின் அருளினால் நல்ல மழை பொழிந்து பார்க்கும் இடமெங்கும் பசுமையான தோற்றத்துடன் காணப்படுகின்றன. பசுமையான சோலைகளில் தழைத்துப் பூத்து அழகுற வளர்ந்துள்ள கடம்ப மரத்தின் மலர்கள் வட்ட வடிவில் மாலை மாலையாகப் பூத்து நிற்கும். அம்மலர்களை மாலையாகச் சேர்த்து அணிந்திருப்பார். அக் கடம்ப மாலையை அணிந்திருக்கும்போது இன்னும் பேரழகுடன் காட்சியளிப்பார். அம்மாலை அவரின் மார்பில் புரளும்போது மாலையும் பேரழகுடன் இருக்கும். இதனைத் திருமுருகாற்றுப்படையின்
“தலைப்பெயல் தலைஇய தண்ற்றுங்கானத்து
இருள்படப் பொதுளிய பராசுரை மராஅத்து
உருள்பூந்தாண்டார் புரளும் மார்பினை” (திருமுருகாற்றுப்படை, 9-10)
என்கிற அடிகள் விளக்குகின்றன.
இவ்வாறு முருகன் கடம்பமாலை புரளும் மார்பினை உடையவன் என்றும் மேலும் மரமேறும் தொழில் வல்லமையுடைய மந்தியும் ஏற முடியாத உயரத்தினையுடைய மரங்கள் நெருங்கி நிறைந்த பக்க மலையில் வண்டுகள் மொய்த்தலில்லாத தெய்வத் தன்மை வாய்ந்த நெருப்பு போல் செங்காந்தள் மலரின் பெரிய குளிர்ந்த கண்ணியை விரும்பிச் சூடிய திருமுடியை உடையவன் திருமுருகன் என்றும் முருகன் விரும்பி அணியும் அடையாளப் பூமாலை காந்தாளம் பூ என்பதையும் திருமேனிச் சிறப்பையும் மேற்கண்ட பாடலின்வழி அறியமுடிகின்றது.
வேலவனும் வேலும்
முருகனின் திருக்கைகளில் காணப்பெறும் கருவிகளாக வேல், அங்குசம், கிடுகு எனத் திருமுருகாற்றுப்படை கூறுகிறது. இவற்றில் முக்கியமான ஆய்தம் வேல். முருகன் தனது ஆயுதத்தால் சூரபதுமன் சிங்கமுகன், தாரகன் ஆகிய மூன்று அரக்கர்களையும் அழித்தார். அரக்கர் முவரையும் கொன்று மும்மலத்தையும் நீக்கினான் எனப் பொருள் கொள்வர் பெரியோர்.
“குன்றம் எறிந்ததும் குன்றப்போர் செய்ததுவும்
அன்றங் கமரிடர் தீர்த்ததுவும் – அன்றென்னைக்
கைவிட நின்றதுவும் காற்போதும் பின்காத்ததுவும்
மெய்விடா வீரன்கை வேல்” (திருமுருகாற்றுப்படை, 2 வெண்பா)
சூரபதுமன் என்னும் ஆணவமலத்தையும் சிங்கமுகன் என்னும் கன்மமலத்தையும் தாரகன் என்னும் மாயை மலத்தையும் கொன்று இறைவன் நீக்கியதால் ‘சூரசம்ஹாரம்’ விழா கொண்டாடப்படுகிறது என்பர்.
“வெஞ்சமரில் அஞ்சல் எனவேல் தோன்றும்”
(திருமுருகாற்றுப்படை, 6 வெண்பா)
அன்பர்களை ஆபத்தில் இருந்து காக்கவும் அவர்களுக்குத் தீங்கு விளைவிப்பவர்களை முற்றிலும் அழிக்கவும் ஆறுமுகன் வேலைத் தாங்கியுள்ளான் என்பதை நக்கீரர் ஆழம்படி எடுத்தியம்பியுள்ளார்.
முருகனின் வாகனம்
“அல்லல் இல் அனலன்தன் மெய்யில் பிரித்துச்
செல்வ வாரணம் கொடுத்தோன் வானத்து
வளம்கெழு செல்வன் தன் மெய்யில் பிரித்துத்
திகழ்பொதிப் பீலி அணிமயில் கொடுத்தோன்
திருந்துகோல் ஞமன்மெய்யில் பிரித்து
இருங்கள் வெள்யாட்டு எழில்மறி கொடுத்தோன்” (பரிபாடல்)
முருகனின் வாகனமாக ஆடு இமயவனால் கொடுக்கப்பட்டது. அக்கினி பகவான் ஆறுமாமுருகனுக்குசு ஆனை ஈந்ததும் இந்திரன் இனிமையாக இன்பமயில் வழங்கியுள்ளார்கள் என்பதைப் பரிபாடலின்வழி அறிய முடிகின்றது.
சரஸ்வதியின் வாகனம் அன்னம். விஷ்ணுவின் வாகனம் கருடன், சனீஸ்வரனின் வாகனம் காக்கை, மன்மதனின் வாகனம் கிளி, முருகனின் வாகனம் மயில் என்பர். பறவை வாகனங்களில் பார்க்க அழகுடையது மயிலே. அதன் தோற்றம் ஓரழகு, நடை ஓரழகு, அதன் சாயல் எனப் பல வகையான வண்ணப் பொலிவுடன் காட்சியளிக்கின்றது. அழகு மயில் பறப்பது ஓரழகு, தோகை விரித்தாடும்போது காண்போர் எல்லாம் மெய்மறந்து மகிழும் அளவுக்குப் பேரழகு கொண்டு விளங்குவது முருகனின் மயில் வாகனமாகும்.
மயிலின் வேறு பெயர்கள்
அழகு மயிலுக்கு மயில், மஞ்ஞை, மயூரம், தோகை, கேயகம், கேதாரம், சிகண்டி, சிகி, பிணிமுகம் போன்ற பெயர்கள் வழங்கப்படுகின்றன.
மயிலை வாகனமாகக் கொண்டுள்ள முருகப்பெருமானுக்கு மஞ்ஞையன், மயிலோன், மயில்வாகனன், மயில்சாமி, மயூரேசன், சிகிவாகனன் என்றும் பெயர்கள் உள. முருகனுடன் சார்ந்து மயிலுக்கும் உயர்வு தருகின்ற பெயராகும் எனத் திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் கூறியுள்ளார்.
“தரகன் மஞ்ஞையன் புகர்இல் சேவல்அம்….” (திருமுருகாற்றுப்படை, 210)
முருகன் மயிலை வாகனமாகக் கொண்டதற்குக் காரணம் சூரபதுமன் முருகனுடன் முரண்பட்டுப் பல மாய முறைகளில் முனைப்புடன் முயன்று போரிட்டு அவனை வெல்ல முடியாமல் திகைத்து நின்று முடிவில் ஒரு மாமரமாக நின்றான். அப்போது முருகன் தன் வேலால் அம் மரத்தை இருகூறுகளாகப் பிளந்தான். அதன் ஒரு கூறுதான் மயிலாயிற்று. இவனே மயில் வாகனன். மற்றொரு கூறு சேவலாயிற்று. அதைத் தன் கொடியாக ஏந்தி நிற்கின்றான். சேவற்கொடியோன் என்றும் முருகன் அழைக்கப்பட்டான்.
அறுபடை வீடும் முருகப்பெருமானும்
முருகப்பெருமான் எழுந்தருளியிருக்கும் தலங்களில் முக்கியமானவை ஆறுதலங்களாகும். திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திருவாவினங்குடி, திருவேரகம், குன்றுதோறாடல், பழமுதிர்சோலை ஆகிய இடங்களில் தங்கித் தன்பால் வருபவர்களுக்கு அருள் செய்து பக்தர்களுக்கு இறையின்பம் தருபவர் முருகப்பெருமான். ஆறு தலங்கள் ஆறுபடை வீடுகளாகும். முதல் படைவீடு திருப்பரங்குன்றம்.
திருப்பரங்குன்றம்
மதுரையில் இருந்து மேற்கே 7 கி.மீ. தொலைவில் திருப்பரங்குன்றம் அமைந்துள்ளது. இக்கோயில் மலை அடிவாரத்தில் உள்ளது. மலையைக் குடைந்து செதுக்கப்பட்ட சிற்பங்கள் அழகுறத் திகழ்கின்றன. இங்கு முருகன் வடக்கு நோக்கி அமைந்த வண்ணம் காட்சியளிக்கின்றான். இங்ஙனம் வழிபடுபவர்க்கு அருள்வதற்காகத் திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக்கிறார். இத்திருப்பரங்குன்றம் நீர்வளமும் நில வளமும் நிறைந்தது. இங்குள்ள மக்கள் முருகப் பெருமானின் அருளால் எல்லா வளமும் பெற்றுச் செழிப்புற இன்பமுற வாழ்கின்றனர் என்பதை நக்கீரர் வண்டுகளை உவமையாகத் தாமரைப் பூவில் துயில்கின்ற வைகறையில் நெய்தல் பூவிலுள்ள தேனையருந்திப் பகலவன் தோன்றியபின் சுனைமலரின்கண் ஆரவாரிக்கும் என நிலவளத்தின் பெருமையை இங்குத் திறம்பட விளக்கியுள்ளார்.
திருச்சீரலைவாய்
திருநெல்வேலியில் இருந்து 54 கி.மீ. தொலைவில் திருச்செந்தூர் அமையப்பெற்றுள்ளது. இதன் பழமையான பெயர் செந்தில் ஆலைவாய் என்பர்.
“சீரலைவாய் உறைசெந்தில் நாதன்” (திருமுருகாற்றுப்படை)
ஓங்கி உயர்ந்த மலையின்மேல் ஆறுமுகங்களோடும் பன்னிரு கரங்களோடும் முருகன் வீற்றிருக்கின்றார். ஆறு முகனின் தோற்றத்தைத் திருமுருகாற்றுப்படையில் அழகுற விளக்குகிறார். இவ்வுலகம் அறியாமை என்னும் இருளில் மூழ்கிக் கிடக்கிறது. அதனை ஒளியுடையதாக ஆக்க வேண்டும் என்ற அருளால் குமரனின் ஒருமுகம் அறிவாகிய ஒளிக்கதிர்களைப் பரப்பி அந்த ஒளியின் எல்லைக்குள் வந்தவர்கள் அறியாமை என்னும் பேரிருளிலிருந்து விலகி ஞான ஒளியை அடைவார்கள் என்பதை நக்கீரர்
“மாயிருள் ஞானம் மறுவின்றி விளங்கப்
பல்கதிர் விரிந்தன்று ஒருமுகம்” (திருமுருகாற்றுப்படை, 91-92)
என்றும்
மேலும்
“ஆர்வலர் ஏத்த அமர்த்தினிது ஒழுகிக்
காதலின் உவந்து வரம்கொடுத்தன்று” (திருமுருகாற்றுப்படை, 94-95)
முருகப்பெருமானிடம் அன்பர்கள் எவ்வளவு அன்புடன் ஈடுபாட்டுடன் திகழ்கின்றார்களோ அந்த அளவுக்கு அவர்களுக்கு எல்லா வளங்களையும் அருளுகின்றான் என்பதை நக்கீரரின்வழி திருமுருகாற்றுப்படையில் காணமுடிகின்றது.
திருவாவினன்குடி
திருவாவினன்குடியும் பழனியும் வெவ்வேறான அடுத்தடுத்த இரண்டு தலங்களாகும். பழனி மலையின் அடிவாரத்தில் இருப்பது திருவாவினன்குடி. மிகப் பழமை வாய்ந்த தலம். இக்கோயிலை வேள்குலத்தில் தோன்றிய ஆவி என்பவன் அரசாண்டான். அவனது ஆட்சிக்கு உட்பட்ட எல்லா ஊரும் திருஆவினன்குடி. இப்பெயர் ஆவினன்குடி என்று மாறியது. பழனியைச் சுற்றி இருக்கின்ற பகுதியைத் திருஆவினன்குடி என்று அழைப்பர்.
திரு-ஆ-இனன்-கு-டி என்று பிரித்துத் திருமகள்-காமதேனும்-ஞாயிறும்-நிலம்-தீக்கடவுள் என அனைவரும் வழிபட்ட தலம் என்று புராணங்களும் சான்றோர்களும் குறிப்பிடுகின்றனர். ஆவினன்குடியில் முருகனைக் காண அடியவர்கள் மட்டும் வரவில்லை. முனிவர், தேவர்கள், திருமால், சிவபெருமான், இந்திரன் போன்றோர்களும் காண வந்தார்கள் என்றும் குறையிருந்தவர்களுக்கு அருளுவதற்காகத் தெய்வானையுடன் திருவாவினன்குடியில் முருகப்பெருமான் குடிகொண்டுள்ளார்.
திருவேரகம்
முருகனின் நான்காம் படைவீடு மிக அழகுடைய ஊர் ஏரகம். ஏரகம் என்பது எந்தத் திருத்தலம் என்பதில் கருத்து வேறுபாடு அனைவருக்கும் உண்டு. சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்று, ஏரகம் நீங்கா இறைவன் என இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார்.
“சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்று
ஏரகமும் நீங்கா இறைவன்” (சிலம்பு)
“ஏரக வெற்பனும் அற்புத மிக்க சுவாமிமலைப்பகுதி”
என்பது அருணகிரிநாதரின் அருள்வாக்கு. அந்த அருள்வாக்கினால் சுவாமிமலை என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. சிவபெருமான் பிரணவ மந்திரப் பொருளைக் கேட்க முருகன் தந்தைக்கு உபதேசம் செய்து குருவாகவும் தகப்பன் சாமியாகவும் சுவாமிநாதனாகக் காட்சியளிப்பது சுவாமிமைலை எனும் திருவேரகமாகும் என்று அருணகிரியார்
“அருணதள பாத பத்மம் அனுநிதமுமே துதிக்க
அரியதமிழ் தானளித்த மயில்வீரா
அதிசமய் அநேகமுற்ற பழநிமலை மீதுதித்த
அழகு திருவேரகத்தின் முருகோனே” (அருணகிரியார்)
முருகப் பெருமானின் பெருமைகளைப் பாடுகிறார். மேலும் இறைவனை எவ்வாறெல்லாம் வழிபட வேண்டும் என்பதை நக்கீரர்
“ஆறெழுத்தடங்கிய அருமறைக் கேள்வி
நாஇயல் மருங்கில் நவிலப்பாடி” (திருமுருகாற்றுப்படை, 186-187)
சரவணபவநம, குமாராய என்ற ஆறெழுத்து மந்திரங்களை அந்தணர்கள் ஓதுகின்றனர். நாஇயல் மருங்கில் நாவில்பாடும் ஓதும்போது பிறரின் காதில்விழாதபடி மெதுவாக ஓத வேண்டும். இறைவனை நாம் வணங்கும்போது இறைவனிடம் மனம் உருகி வழிபடுவோம். அவை மற்றவர்கள் காதில் விழும்போது அவர்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதற்காக நக்கீரர் தன்பாடலில் வெளிப்படுத்துகிறார்.
குன்றுதோறாடல்
குறிஞ்சி நிலத் தெய்வம் முருகன். குன்றுகள் அனைத்தும் அவன் வீற்றிருக்கும் தலங்களாகும். அவ்விடங்களில் குறவர்கள் அதிகமாக வாழ்ந்தனர். குறவர்கள் முருகனை வேலன் என்று அழைத்தனர். ஒவ்வொரு குன்றிலும் வாழ்பவர்கள் குரவைக்கூத்தாடி மகிழ்வார்கள். அங்கு வேலை வைத்து ஆடுகின்ற பூசாரியும் இருப்பான். அப்பூசாரி வேலன் என அழைக்கப்படுவான். அவ்வேலன் தலையில் கண்ணி அணிந்துள்ளான். அக்கண்ணி பச்சிலைமாலைக்குள் சாதிக்காயையும் தாக்கோல காயையும் காட்டு மல்லிகை மலர்களையும் வெண்மையான கூதாள மலர்களையும் சேர்த்துக் கட்டிய தலை மாலையை அணிந்து மக்களுக்குக் காட்சியளிக்கின்றான்.
பழமுதிர் சோலை
பழமுதிர் சோலை முருகனின் ஆறாம்படை வீடாகும். இங்கு உயரமான மலைகளிலும் பசுமையான செறிந்த சோலைகள், காடுகள் போன்றவற்றில் முருகன் விரும்பி வீற்றிருக்கின்றான். வழிபாட்டிற்கு என்று இடங்கள் ஒன்றும் இல்லை. மனம் உருகி நாம் எங்கு இறைவனை நினைக்கின்றோமோ அங்கெல்லாம் காட்சியளிப்பான் என்று நக்கீரர் குறிப்பிடுகிறார்.
வழிபாட்டிடங்களால் ஏற்றத்தாழ்வு ஒன்றுமில்லை. அன்பொன்றே வேண்டப்படுகிறது. அடியவர் இருக்கும் இடம் தேடிவந்து முன்னின்று அருள்புரிவான் என்று அவனுடைய எளிமையை விளக்குவதாகப் பழமுதிர்சோலை அமைந்துள்ளது. குறிஞ்சி நிலப்பகுதியில் அமைந்த முருகன் குன்று தோறாடல் ஐந்தாம் படைவீடாகும். குறிஞ்சி, முல்லை நிலப் பகுதியில் மரம், செடி, கொடிகள் செறிந்த சோலைகளில் அமைந்த முருகன் கோயில் பழமுதிர்சோலை என்ற ஆறாம் படைவீடாகக் காட்சியளிக்கிறது.
முடிவுரை
திருமுருகாற்றுப்படையில் முருகனின் தோற்றம், திருவடிப்பெருமை, திருமேனியின் பெருமை, வேலனும் வேலும் வாகனம், மயிலின் வேறு பெயர்கள், அதன் சிறப்புகள் மற்றும் முருகனின் ஆறுபடை வீடுகளும் அவை அமைந்துள்ள இடங்களையும் விவரித்துரைப்பதாய் இவ்வாய்வுக் கட்டுரை அமையப்பெற்றது.
துணைநூற்பட்டியல்
சங்க இலக்கியம் பத்துப்பாட்டு மூலமும் உரையும் அறிஞர் ச.வே.சுப்பிரமணியன்
முனைவர் ம. தமிழ்வாணன்,முதுநிலை ஆய்வு வல்லுநர்,செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்,தரமணி, சென்னை – 113
செவ்விலக்கியங்களில் பல வள்ளல்கள் பற்றிய குறிப்புகள் பரந்த அளவில் இடம் பெற்றுள்ளன. அவர்கள் வாழ்ந்த காலத்தைக் கணக்கில் கொண்டு வள்ளல்கள் முதலேழு, இடையேழு, கடையேழு என்று பகுத்துள்ளனர். ஆனால் முதலேழு மற்றும் இடையேழு வள்ளல்களுடைய பெயர்கள் அவ்வளவு எளிதாக யாருக்கும் தெரிந்திருப்பதில்லை, கர்ணனை தவிர்த்து. அவர்களைப் பற்றியத் தரவுகள் கூட மிகவும் அரிதாக இருக்கின்றன. பழங்காலத்தில் ஈகையையும் கொடையையும் ஒன்றாகப் பார்த்தனர். உண்டாட்டுக் கொடையென (தொல். பொ 58). இல்லான் கொடையே கொடைப்பயன் (நாலடி,65). என்கிறது பாடல். நுணுகிப் பார்க்கும்போது பொதுவாக ஈகையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது கொடையாகும்.
கொடை விளக்கம்
கொடை என்ற சொல்லிற்குத் தியாகம், புறத்துறை, திருவிழா, வசவு, அடி என்றும் ஈகைக்கு – கொடை, பொன், கற்பகம் என்றும் சென்னை பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி. (பக்.236 ) பொருள் தருகின்றது.
தமிழ்-தமிழ் அகரமுதலி கொடை என்ற சொல்லிற்கு ஈகம், தியாகம், கொடை, கைக்கொண்ட ஆநிரையை இரவலர்க்கு வரையாது கொடுக்கும் (புறத்துறை), ஊர்த்தேவதைக்கு மூன்று நாள் செய்யும் திருவிழா, வசவு, அடி(ப.- 387) என்று பொருள் சுட்டுவதைக் காணலாம்.
செவ்வியல் காலத்தில் அரசர்கள் நற்கொடை வள்ளல்களாக இருந்திருக்கிறார்கள். தம்மைப் பாடி வருகின்ற புலவர்களுக்கும் மற்றவருக்கும் பொன்னையும் பொருளையும் வரையாது கொடுத்து மகிழ்ந்தமையைச் செவ்விலக்கியங்களால் உணர முடிகிறது. பாரி, காரி, ஓரி, அதியன், பேகன், நள்ளி, ஆய் அண்டிரன் போன்றோர் கடையேழு வள்ளல்கள் என்று போற்றப்பட்டனர். பாரி முல்லைக்குத் தேரையும் பேகன் மயிலுக்குப் போர்வையையும் அளித்து அழியாப் புகழ் பெற்றனர். ஆற்றுப்படை இலக்கியங்கள் மன்னர்களின் கொடைத் தன்மையைக் கூறுவனவாக இருத்தலைக் காண்கிறோம். கல்வெட்டுக்கள், செப்பேடுகள் மூலமும் மன்னர்களின் கொடைத்தன்மைகளைக் காணலாம். கொடை குறித்து வள்ளுவர்,
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு (குறள். 222)
என்று குறிப்பிடுவது நாம் ஈட்டும் செல்வம் மற்றவருக்கும் கொடுப்பதற்கே என்கிறார். கொடை குறித்து புறநானூற்றுப் பாடல் கூற்று.
“கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று. (புறம். 204:4)
இதோ வாங்கிக்கொள் என்று நாமே மனமுவந்து கொடுப்பது மிகச் சிறந்தது என்கிறது.
தமிழ்க் கொடை வள்ளல்கள்
முதலேழு வள்ளல்கள் : சகரன், காரி, நளன், தந்துமாரி, நிருதி, செம்பியன், விராடன்
இடையேழு வள்ளல்கள்: அக்குரன், அந்திமான், கர்ணன், சந்திமான், சிசுபாலன், வக்கிரன், சந்தன்
கடையேழு வள்ளல்கள்: பாரி, காரி, ஓரி, அதியன், பேகன், நள்ளி, ஆய் அண்டிரன்.
கடையேழு வள்ளல்கள்
பத்துப்பாட்டில் இடம்பெற்றுள்ள சிறுபாணாற்றுப்படையைப் பாடிய நல்லூர் நத்தத்தனார், ஏழு வள்ளல்கள் பற்றியும் அவர்களின் கொடைமடச் செயல்கள் பற்றியும் எடுத்துரைத்துள்ளார். கொடைமடச் செயல்கள் என்றால், பகுத்தறியாது மடமையோடு கொடையளித்த செயல்கள் என்று பொருள் கொள்ளலாம். இத்தகைய செயல்களே அவ்வள்ளல்களுக்குச் சிறப்பைச் சேர்த்துள்ளன. இவ் வள்ளல்களைப் பற்றிய செய்திகளை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான புறநானூற்றுப் பாடல்களும் சுட்டுகின்றன.
கடையேழு வள்ளல்களும் புறநானூற்றுப் பாடல் எண்களும்
சிறுபாணாற்றுப்படையில் (84 – 114) ஓய்மானாட்டு நல்லியக்கோடனும் வள்ளல் குமணனும் (புறம்.158) மேற்குறிப்பிட்ட கடையேழு வள்ளல்களுக்குப் பின்னர் வாழ்ந்தவர்களாக அறியப்படுகின்றனர்.
பிற வள்ளல்களும் புறப்பாடலும்
புறநானூற்றுப் பாடல்களைப் பாடிய புலவர் பெருமக்கள் அவர்கள் வாழ்ந்த காலத்தில் அரசாண்ட பிற வள்ளல்களையும் பாட்டில் பதிவு செய்துள்ளனர். அவர்களின் பெயர்கள் வருமாறு, அம்பர் கிழான் அருவந்தை – 385, அவியன் – 383, ஆதனுங்கன் – 175, 389, எவ்வி – வேள் எவ்வி – 233, 234, எழினி – அதியமான் எழினி – 230 \ எழினி – அதியமான் நெடுமான் அஞ்சி மகன் பொகுட்டெழினி – 96 \ எழினி – அதியமான் மகன் பொகுட்டெழினி – 392 \ எழினி – அதியான் மகன் பொகுட்டெழினி – 102, எழினியாதன் – வாட்டாற்று எழினியாதன் – 396, ஓய்மானாட்டு நல்லியக்கோடன் – புறம் 176, & சிறுபாணாற்றுப்படை, ஓய்மான் நல்லியாதன் – 376, ஓய்மான் வில்லியாதன் – 379, கரும்பனூர் கிழான் – 381, 384, காரியாதி – மல்லி கிழான் காரியாதி – 177, குமணன் – 158, 159, 160, 161, 162, 163, 164, 165, கொண்கானங்கிழான் – 154, 155, 156, சாத்தன் – ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன் – 242, 243, சாத்தன் – சோணாட்டுப் பிடவூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன் – 395, தருமபுத்திரன் – 366, திருக்கண்ணன் – மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன் – 174, திருக்கிள்ளி – ஏனாதி திருக்கிள்ளி – 167, தொண்டைமான் இளந்திரையன் – பெரும்பாணாற்றுப்படை, தோன்றிக்கோன் – தாமான் தோன்றிக்கோன் – 399, நன்னன் – செங்கண்மாத்து வேள் நன்னன்சேய்நன்னன் – மலைபடுகடாம், நாகன் – நாலை கிழவன் நாகன் – 179, பண்ணன் – சிறுகுடி கிழான் பண்ணன் – 173, 388, பண்ணன் – வல்லார் கிழான் பண்ணன் – 181, பாரிமகளிர் – 113, 114, பிட்டங்கொற்றன் – 168, 169, 170, 171, 172, பொறையாற்று கிழான் – 391, மாறன் – ஈந்தூர் கிழான் தோயன் மாறன் – 180, மாறன் – தந்துமாறன் – 360, வள்ளுவன் – நாஞ்சில் வள்ளுவன் – 137, 138, 139, 140, 380, விண்ணத்தாயன் – சோணாட்டுப் பூச்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணத்தாயன் – 166, வெளிமான் – 238.
புறநானூற்றிலேயே போலி வள்ளல்களாகத் திகழ்ந்த மன்னர்கள் பற்றியக் குறிப்புகளும் காணக்கிடைக்கின்றன. அவர்களின் பெயர்களும் வருமாறு, இளவெளிமான் – பரிசில் சிறிது – 207, 237, கடியநெடுவேட்டுவன் – பரிசில் நீட்டித்தவன் – 205, குமணன் தம்பி இளங்குமணன் – 165, மூவன் – பரிசில் நீட்டித்தவன் – 209
இனி தொல்தமிழ் நிலத்துக் கடையேழு வள்ளல்களான பேகன், பாரி, காரி, ஆய், அதிகன், நள்ளி, ஓரி எனும் அந்த ஏழு வள்ளல்களின் சிறப்பினைக் காண்போம்.
தொன்மைக்காலத்தில் பழனிமலையைப் பொதினி என்று அழைத்தனர். ஊருக்கு ஆவிநன்குடி என்று பெயர் வழங்கியது. பொதினி என்பதே பிற்காலத்தில் பழனி என்று மாறிவிட்டது. ஆவியர் குலம் என்பது ஒரு குறுநில மன்னர் குடிக்குப் பெயர். அவர்கள் அரசாண்ட இடம் ஆதலால் ஆவிநன்குடி என்று ஊருக்குப் பெயர் வந்தது. ஆவி, வையாவி என்று இரு வகையிலும் ஆவியர் குல மன்னர்களை வழங்குவதுண்டு. ஆதலால் வையாவிபுரி என்றும் அழைத்தனர். அதுவே நாளடைவில் வையாபுரி என்று மாறியது. அந்த ஆவியர் குலத்தில் வந்தவன் பேகன் என்னும் குறுநில மன்னன். பாரியைப்போல அவனும் ஒரு வேள். அவனை வையாவிக் கோப்பெரும் பேகன் என்று குறிப்பிடுவர். வையாவி ஊரில் உள்ள அரசனாகிய பெரிய பேகன் என்பது இதன் பொருளாகும்.
வள்ளல் பேகன் ஓர் சிறந்த கொடையாளியாவார். புலவர்களுக்கு வாரி வாரி வழங்கும் வள்ளல். யாழை வாசித்துப் பாடும் பாணர்கள் வருவார்கள். அவன் அரண்மனையில் பல நாள் தங்குவார்கள். அவர்களுடைய இசையின்பத்தை நுகர்ந்து களிப்பான் பேகன். பிறகு பலவகைப் பரிசில்களை அளிப்பான். பொன்னாலாகிய தாமரைப் பூவை அவர்கள் அணியும்படியாகத் தருவான். அந்தக் காலத்தில் பாணர்களுக்குப் பொற்றாமரை அளிப்பது வழக்கம். பாணர்களுடைய மனைவிமார்கள் ஆடுவார்கள்; பாடுவார்கள். அவர்களுடைய ஆடல் பாடல்களையும் கண்டு மகிழ்வான். அவர்களுக்குப் பல்வகையான அணிகலன்களைப் பரிசளிப்பான். சில சமயங்களில் பாணர்களுக்கும் புலவர்களுக்கும் தேரையும் அளித்து மகிழ்வான். பொதினி எனப்படும் பழனி மலைக்குத் தலைவர். மழை வளம் மிக்க அம்மலையின் காட்டில் மயில்கள் திரிந்து கொண்டிருக்கும். ஒருநாள் அப்படித் திரிந்து கொண்டிருந்த ஒரு மயில் அகவியதைக் கேட்டு, அது குளிரால் நடுங்கி அகவியது என்று நினைத்தான். அவரகத்தே அருள் உணர்ச்சி பெருகவே, தமது போர்வையை அம்மயிலுக்குப் போர்த்தினார். மயில் போர்வையைப் பயன்படுத்திக் கொள்ளுமா? கொள்ளாதா? எனச் சிறிதும் எண்ணிப் பாராமல் இத்தகைய செயலைச் செய்தார். இவ்வாறு செய்தமையே ‘கொடைமடம்’ என்று போற்றுகின்றார்கள்.
வானம் வாய்த்த வளமலைக் கவாஅன்
கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய
அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்
பெருங்கல் நாடன் பேகனும் (சிறுபாண்.84-87)
புறநானூற்ற்றின் 142ஆம் பாடலைப் பாடிய பரணர், “கழற்கால் பேகன், வரையாது (அளவில்லாது) வழங்குவதில் மழை போலக் கொடைமடம் படுவதன்றி, வேந்தரது படை மயங்கும் போரில் மடம்படான்” என்ற கருத்தை அமைத்து பாடியிருக்கிறார். பேகனின் கொடைச்சிறப்பைக் கபிலர், பரணர், அடிசில்கிழார், பெருங்குன்றூர்கிழார் போன்றோர் பதிவிட்டுள்ளனர்.
எத்துணை ஆயினும் ஈதல் நன்று என
மறுமை நோக்கின்றோ அன்றே
பிறர் வறுமை நோக்கின்று அவன் கைவண்மையே (புறம்.141:13-15)
என்று புலவர் பரணர் நயம்படச் சுட்டுகிறார்.
கொடைமடம் படுதல் அல்லது
படைமடம் படாண் பிறர் படைமயக் குறினே (புறம்.142:5-6)
இப்பரணரின் பாடல் இரந்து நிற்பவர் எத்தகுதியைப் பெற்றிருந்தாலும் வரையறை இன்றி கொடுக்கும் வண்மனம் படைத்தவன் பேகன் என்பதை அறிவிக்கிறது. கபிலர் பாட்டில் கைவள் ஈகைக் கடுமான் பேக! (புறம்.143:6) என்றும் சுட்டுவது சிறப்பாகக் கருதப்படுகிறது. பேகனின் கொடைத் தன்மையால் அவனின் மனைவி நலிந்தவளாகி கூந்தலிலே நறும்புகையூட்டி தண்மலர் சூடிட வழி இல்லாமல் இருப்பதாக, கொடைக்குப் பிந்தைய நிலையை எடுத்துரைக்கிறார் புலவர் அரிசில்கிழார்.
ஒலிமென் கூந்தல் கமழ்புகை கொளீஇத்
தண்கமழ் கோதை புனைய (புறம்.146:9-10)
பறம்பு மலையைத் தலைமை இடமாகக் கொண்டு ஆட்சி செய்த குறுநில மன்னர் வேள்பாரி ஆவார். இவர் கடைச்சங்கக் காலத்தைச் சார்ந்தவர். வேளிர் குலத்தில் பிறந்ததால் வேள்பாரி என அழைத்தனர். பாரி பறம்பு மலையையும் அதனைச் சூழ்ந்த பகுதிகளையும் ஆண்டவர். பறம்புநாடு முந்நூறு (300) ஊர்களைக் கொண்டதாகும். பறம்புமலை, பிறம்பு மலை என்றாகி இப்பொழுது ‘பிரான்மலை’ என்று அழைக்கப்படுகிறது. அப்போதைய பாண்டிய அரசின் எல்லையின் அருகில் வரும். இதற்கு இன்னொரு பெயர் ‘கொடுங்குன்றம்’ என்பதாகும். இம்மலை மேருமலையின் ஒரு பகுதி என்னும் புராணக்கதையும் உண்டு. பிரான்மலை சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர், காரைக்குடி திருப்பத்தூர் வட்டத்தில் சிவகங்கை ஒன்றியத்தில் கிருங்காக்கோட்டை என்னும் ஊரின் அருகில் உள்ளது. பாரியின் ஆட்சிக்குட்பட்ட பகுதியில் மொத்தம் 300 கிராமங்களே இருந்தன. அப்படி இருந்த போதிலும் அவர் மூவேந்தர்களை விட பெரும் புகழ் பெறக்காரணம் அவரது கொடைத்தன்மையே எனலாம். கேட்போருக்கு இல்லை எனாது அளிப்பது அவனது தனிச்சிறப்பாக இருந்தது.
புலவர் கபிலர் பாரியின் நண்பராக அறியப்படுகிறார். திருச்சியிலிருந்து மதுரை செல்லும் வழியில் கொட்டாம்பட்டியிலிருந்து விலகிச் செல்லும் சாலையில் கிழக்கு நோக்கிச் சென்றால் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது பிரான்மலை. பாண்டியநாட்டில் உள்ளது திருவாதவூர். அவ்வூரில் பிறந்தவர் கபிலர் எனும் புலவர்; இவர் சங்கத்தமிழ் இலக்கியப்பரப்பில் மிக அதிகமான பாடல்களைப் பாடியவர் என்ற பெருமைக்குரியவர். இவர் கலையழகுமிக்க கவிதைகளைப் பாடியவர்; ‘பொய்யாநாவிற்கபிலர்’ என்று புகழப்படுபவர். இவர் பாரியின் மிகநெருங்கிய நண்பராவார். பாரியைப் பற்றி இறவாப்புகழுடைய பாடல்களைப்பாடியவர் கபிலர். மூவேந்தர்களும் பொறாமை கொள்ளும் அளவிற்கு அரசர் வேள்பாரியின் புகழ் தென்னகம் முழுவதும் பரவி இருந்தது. பாரி மூவேந்தரால் வஞ்சித்துக் கொல்லப்பட்டார். வேள்பாரிக்கு இருமகளிர் உண்டு. அங்கவை, சங்கவை ஆகியோர் இவரது மகள்கள் ஆவர். ஆதரவின்றி இருந்த பாரியின் மகள்களுக்குத் திருமணம் செய்து வைக்க எண்ணி ஔவையார் முயன்றபோது அதனைத் தடுக்க மூவேந்தர்கள் முயன்றனர். ஆனால் ஔவையார் அவர்களைத் தடுத்து நிறுத்தி கரபுரநாதர் கோவிலில் மணம் செய்து வைத்தார். அந்தக் கோவில் தற்போது சேலத்தில் உத்தமசோழபுரம் (சோழன் இருந்த இடம்) என்ற பகுதியில் உள்ளது. மேலும் அருகில் வீரபாண்டி (பாண்டியன் இருந்த இடம்), சேலம் (சேரநிலம்-சேரன் இருந்த இடம்) உள்ளது. பாரியை ஒளவையும் சிறப்பித்துப் பாடியிருக்கிறார்.
வள்ளல் வேள்பாரியின் கொடைப்பண்பைப் பற்றிக் கபிலர் மழையைப் போல கைமாறு ஏதும் கருதாது கொடையை வழங்குபவன் என்று கூறிப் புகழின் உச்சிக்கே கொண்டு செல்வதைக் காணலாம்.
……………சுரும்பு உண
நறுவீ உறைக்கும் நாக நெடுவழிச்
சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய
பிறங்கு வெள்ளருவி வீழும் சாரல்
பறம்பின் கோமான் பாரியும்; (சிறுபாண்.87 – 91)
பாரி பாரி என்று பல ஏத்தி
ஒருவர்ப் புகழ்வர் செந்நாப் புலவர்
பாரி ஒருவனும் அல்லன்
மாரியும் உண்டு ஈண்டு உலகுபுரப் பதுவே (புறம்-107)
பறம்பு பாடினர் அதுவே அறம்பூண்டு
பாரியும் பரிசிலர் இரப்பின் (புறம்.108:4-5)
அதியமான் காலத்து வரலாற்றிலே வந்த காரியும் ஏழு வள்ளல்களில் ஒருவன். அவன் முழுப்பெயர் மலையமான் திருமுடிக் காரி ஆகும். மலையமான் என்பது அவன் குடிப்பெயர். திருக்கோவலூரே அவனுடைய தலைநகர். அதை நடுவிலே பெற்ற நாட்டைப் பல காலமாக ஆண்டு வந்தவர்கள் மலையமான்கள் என்னும் வீரக் குடியினர். அவர்கள் ஆண்ட நாடாதலின் அதற்கு மலையமான் நாடு என்ற பெயர் விளங்கிற்று. அது நாளடைவில் மாறி மலாடு என்று அழைக்கப்பட்டது.
வள்ளல் காரி ஈகையிற் சிறந்தவனாகவும் வீரத்தில் இணையற்றவனாகவும் விளங்கியிருக்கிறான். அவனது பெரும்படையில் தெரிந்தெடுத்த அடலேறு போன்ற வீரர்கள் இருந்தனர். அந்தப் படைப் பலத்தினால் அவனைக் கண்டால் யாரும் அஞ்சி நடுங்குவார்கள். இரு பெரு மன்னர்களுக்குள் போர் மூண்டால் அவரில் ஒரு மன்னன் மலையமான் திருமுடிக் காரியை அணுகுவான். தனக்குத் துணையாக வரவேண்டுமென்று சொல்வான். காரி தன் படையுடன் சென்று போரிலே ஈடுபடுவான். பிறகு வெற்றி யாருக்கு என்பதைப் பற்றி ஐயமே இல்லை. அவனிடம் கரிய நிறம் பொருந்திய குதிரை ஒன்று இருந்தது; காரியென்பதே அதற்கும் பெயர். அது மலையமானுடைய உள்ளம் போலப் பாயும் இயல்புடையது. சோழனுக்கோ, பாண்டியனுக்கோ, சேரனுக்கோ துணையாகச் சென்று போரிடுவான் காரி. போர் முடிவில் வென்ற மன்னன் அவனுக்குப் பற்பல பரிசில்களைத் தருவான். பொன்னும் மணியும் அளிப்பான், ஊர் அளிப்பான்; நாடு அளிப்பான். வண்டி வண்டியாகத் தான் பெற்ற பண்டங்களை ஏற்றிக்கொண்டு வருவான் காரி. யானைகளும் குதிரைகளும் தேர்களும் அவனுக்குப் பரிசிலாக கிடைக்கும்.
ஒருசில நாட்களில் அப்பொருட்கள் அனைத்தையும் காரி வாரி வீசுவான். தமிழ்ப் புலவர்களைக் கண்டால் அவன் பேரன்பு கொள்வான். அவர்களுக்குக் காதிற் கடுக்கன் போட்டுப் பார்ப்பான். தேரைக் கொடுத்து ஏறச் செய்து கண் குளிரக்கண்டு பெருமகிழ்ச்சி அடைவான். இதனால் அவனுக்குத் தேர் வழங்கும் பெரு வள்ளல் என்ற பெயர் வந்துவிட்டது. ‘’தேர்வண் மலையன்” என்று புலவர்கள் பாடிப்புகழ்ந்தனர்.
……………………… கறங்குமணி
வால்உளைப் புரவியொடு வையகம் மருள
ஈர நல்மொழி இரவலர்க்கு ஈந்த
அழல்திகழ்ந்து இமைக்கும் அஞ்சுவரு நெடுவேல்
கழல்தொடித் தடக்கை காரியும் (சிறுபாண்.91-95)
இப்பாட்டில் மன்னன் மலையமான் திருமுடிக்காரியின் கொடைகொடுக்கும் அளவு பற்றிச் சுட்டக்காணலாம். (புறம்.121) எனும் பாட்டில், தன்னை தேடி வருகின்ற புலவர்க்கு பரிசில் வழங்கும் முன், அவர் தம் தகுதியை நன்கறிந்து அதற்கு ஏற்ப பரிசு வழங்குக என்று கபிலர் அறிவுரை கூறும் விதமாக அமைந்திருப்பதன் மூலம் பரிசில் பெறவேண்டி வந்த இரவலர்க்குப் பரிசு வழங்கியதை வெளிக்காட்டுகிறது. (புறம்.123) என்ற பாடலில், தன்னை நாடி வருகின்ற இரவலர்க்குப் பரிசாக தேரையும் கொடுத்தான் என்பதால் திருமுடிக்காரியின் கொடைச்சிறப்பு தெள்ளென விளங்கும்.
புலவர்கள் பாடி பரிசில் வாங்கச் செல்லும் முன் நாள் கிழமையும் சரியல்ல என்றும், தீமை தரும் என உணர்த்தும் சகுணங்களைப் பார்த்தும், அன்றைக்கு மலையமான் காரியின் அவைக்குச் சென்றாலும் திறன் சொல்லால் பாடினாலும் அவன் பரிசில் தருவான் என்று கூறுவதன் மூலம் புலவர்கள் பரிசில் பெறுவதற்கு நாள் கிழமையைப் பார்த்தனர் என்பதும் வெளிக்கொணரும் செய்தியாகிறது.
நாளன்று போகிப் புள்ளிடைத் தட்பப்
புதன்று புக்குத் திறனன்று மொழியினும்
வறிது பெயர்குநர் இரங்கும் அருவிப்
பீடுகெழு மலையற் பாடி யோரே (புறம்-124)
4. வள்ளல் ஆய் அண்டிரன்
நறுமணம் கொண்ட பொதிகைமலை தமிழ்நாட்டிற்கும் தமிழ்மொழிக்கும் சிறப்பைத் தருகிறது. இம்மலையைச் சார்ந்து திருக்குற்றாலம், பாவநாசம் என்னும் அழகிய இடங்கள் இருக்கின்றன. அங்கே ஆய் குடி என்பது ஓரூர். அதை ஆய்க்குடி என்று இப்போது சொல்கிறார்கள். ஆய் என்ற வள்ளல் வாழ்ந்திருந்த இடம் அது. ஆய் அண்டிரன் என்றும் அவனைப் புலவர்கள் புகழ்ந்துரைக்கின்றனர். இவனுடைய ஆட்சிக்குட்பட்டது பொதிய மலை. அக்காலத்தில் அம்மலையில் யானைகள் மிகுதியாக இருந்தன. ஆதலின் ஆய் பல யானைகளைப் பிடித்து வந்து பழக்கினான். ஆண் யானைகளைப் போருக்கு ஏற்றபடியும், பெண் யானைகளை வாகனமாகப் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையிலும் பழக்கச் செய்தான். அவனுடைய ஆனைப் பந்தியில் நூறு யானைகளுக்குக் குறைவாக என்றும் இருந்ததில்லை என்பர். இவனிடம் அடிக்கடி பாணர்களும் புலவர்களும் வருவார்கள். அவர்களுக்கு மற்றவர்கள் கொடுப்பது போலப் பொன்னும் மணியும் கொடுப்பான்; அவற்றோடு யானையையும் பரிசிலாக வழங்குவான். யானைப் பரிசில் தருபவன் என்று போற்றப்படுகிறான்.
ஆய் மன்னன் மோசியாரை ஒருநாள் தன் தேரில் அழைத்துச் சென்றான். அந்தத் தேர் காட்டு வழியே சென்றது. அங்கே பழக்கப்பட்ட பல யானைகள் இருந்தன. அவற்றைப் பார்த்த புலவர் ஒரு பாட்டைப் பாடினார். “இந்தக் காட்டில் இத்தனை களிறுகள் இருக்கின்றனவே! இந்தக் காடு, மேகக் கூட்டங்கள் தங்கும் மலையையும் சுரபுன்னை மலரால் தொடுத்த கண்ணியையும் உடைய ஆய் அண்டிரனுடைய குன்றத்தைப் பாடிற்றே?” என்று பாடினார். அவனுடைய யானைக் கொடையையே அப்பாடலில் சிறப்பித்தார்.
…………… நிழல்திகழ்
நீலநாகம் நல்கிய கலிங்கம்
ஆலஅமர் செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த
சாவம் தாங்கிய சாந்துபுலர் திணிதோள்
ஆர்வ நன்மொழி ஆயும் (சிறுபாண்.95-99)
வள்ளல் ஆய்அண்டிரனின் கொடைச்சிறப்பினைப் பற்றி உரையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடுகிறார்.
ஈகை அரிய இழையணி மகளிரொடு
சாயின்று என்ப ஆஅய் கோயில் (புறம்.127:5-6)
இப்பாடலால் கொடைக்குக் கொடுத்தற்கு அரிய என “இழையணி” என்று குறிக்கப்படுவது தாலி தான் என்று ம.பொ.சி. தம் நூலான “மங்கல அணி” என்னும் நூலில் சுட்டுகின்றார். இதனை தாலி அல்ல என்றும் திரு.அ.தட்சிணாமூர்த்தி தம் நூலான தமிழர் நாகரீகமும் பண்பாடும்(1999) என்ற நூலில் “இழை” என்பதற்கு “அணி” என்ற பொதுப்பொருள் உண்டு என்றும் குறிப்பிடுகின்றார். திரு.கே.கே. பிள்ளை அவர்களும் ம.பொ.சியின் கருத்தை ஆதரிப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. இருப்பினும் தனது மனைவி அணிந்துள்ள மங்கல அணியைத் தவிர எல்லாவற்றையும் வழங்கினார் என்று புலவர் சுட்டுவதைக் காணமுடிகிறது.
ஆய்அண்டிரன் இரவலராக வந்தவருக்கு யானைகளையும் பரிசாக வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கச் செய்தியாகும்.
ஆஅய் அண்டிரன், அடுபோர் அண்ணல்;
இரவலர்க்கு ஈத்த யானையின், (புறம்.129:5-6)
விளங்குமணிக் கொடும்பூண் ஆஅய்! நின்னாட்டு
இளம்பிடி ஒருசூல் பத்து ஈனும்மோ? (புறம்.130:1-2)
மழைக் கணஞ் சேக்கும் மாமலைக் கிழவன்,
வழைப் பூங் கண்ணி வாய்வாள் அண்டிரன்
குன்றம் பாடின கொல்லோ;
களிறு மிக உடைய இக் கவின் பெறு காடே? (புறம்.131)
என்ற பாடலில் புலவர் முடமோசியார் ஆய்அண்டிரனின் நாட்டில் கொடையாகக் கொடுக்க அளவில்லாத யானையைப் பெற்றுள்ளான் என்பதை வெளிக்காட்டுகிறார். பரிசில் பெறவேண்டி யான் வரவில்லை ஆயினும் அதை ஏற்காது பரிசில் வழங்கியதையும் பாடல் எடுத்துரைக்கிறது.
இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும்
அறவிலை வணிகன் ஆஅய் அல்லன் (புறம்-134)
என்பதன் மூலம் சுயநலம் கருதாது கொடையறம் செய்பவன் அண்டிரன் என புகழப்படுகிறார். வள்ளல் ஆய் அண்டிரனின் கொடைச்சிறப்புப் பற்றி ஒளவையார் சிறப்பாகப் பாடியதைக் காணமுடிகிறது.
இருங்கடறு வளைஇய குன்றத் தன்ன ஓர்
பெருங்களிறு நல்கியோனே; அன்னதோர்
தேற்றா ஈகையும் உளதுகொல்? (புறம்-140:7-9)
அதியமான் நெடுமான் அஞ்சி தகடூரை ஆண்ட அதியமான் மரபைச் சேர்ந்த சங்கக் காலக் குறுநில மன்னர்களுள் ஒருவன். இவர் வாழ்ந்த காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியைச் சேர்ந்தது. அஞ்சியின் வீரமும், கொடைச் சிறப்பும் ஒளவையார் முதலிய புலவர்களின் பாடல்களின் கருப்பொருட்களாக உள்ளன. திண்மையான உடல்வலிமை பொருந்தியவன் என்றும் சேரன், சோழன், பாண்டியன் உட்பட்ட ஏழு அரசர்களை எதிர்த்து நின்று வென்றவன், இவனது அரண்மனையில் இல்லையென்று வருவோருக்கு அடையாத வாயிலைக் கொண்டது என்றும் அவனது கைகள் மழையைப் போல் ஈயும் தன்மையுடையது. தனக்குக் கிடைத்த சாவா மருந்தாகிய நெல்லிக்கனியைத் தான் உண்ணாது ஒளவையாருக்குக் கொடுத்தான். இச்செயலே அதியமானின் கொடையின் திறனை வெளிக்காட்டுகிறது.
அந்தக் காலத்தில் மலைநாட்டை ஆண்ட மலையமான் திருமுடிக்காரி என்பவனுடன் போரிட்டு அவனது தலைநகரமான திருக்கோவிலூரை அஞ்சி கைப்பற்றியதாகத் தெரிகிறது. காரிக்குச் சார்பாக சேர மன்னன் பெருஞ்சேரல் இரும்பொறை என்பான் நெடுமான் அஞ்சியுடன் போர் தொடுத்தான். சோழ மன்னனும் பாண்டிய மன்னனும் அதியமானுக்கு ஆதரவாக இருந்தனர். எனினும் அஞ்சி இப்போரில் தோற்று இறந்தான். இப்போரினை நேரில் கண்ட புலவர்கள் பாடிய நூலே தகடூர் யாத்திரை என்பதாகும். இப்போது இந்நூல் முழுமையாகக் கிடைக்கப்பெறவில்லை.
இலக்கியச் சான்றுகள் மட்டுமன்றி, இம்மன்னன் பற்றிய குறிப்புடன் கூடிய ஜம்பைக் கல்வெட்டு என அறியப்படும், தமிழ் பிராமிக் கல்வெட்டு ஒன்று ஜம்பை என்னும் இடத்தில் கிடைத்துள்ளது. ஜம்பை, தென்னாற்காடு மாவட்டம் திருக்கோவிலூருக்கு அருகில் உள்ளது. சமண முனிவருக்கு இம்மன்னன் கற்படுக்கைகள் வெட்டிக் கொடுத்தது பற்றி இக் கல்வெட்டுக் கூறுகின்றது. “சதியபுதோ அதியந் நெடுமாந் அஞ்சி” என்று இம்மன்னனின் பெயர் இக் கல்வெட்டில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது கி.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியைச் சேர்ந்தது என அறியப்பட்டுள்ளது.
……………………….. மால்வரைக்
கமழ்பூஞ் சாரல் கவினிய நெல்லி
அமிழ்துவிளை தீம்கனி ஒளவைக்கு ஈந்த
உரவுச் சினம் கனலும் ஒளிதிகழ் நெடுவேல்
அரவக்கடல் தானை அதிகனும் (சிறுபாண்.99-103)
புறப்பாடல், (புறம்.94) ’பெரும! நீ, நீர்த்துறையில் படிந்திருக்கும் யானை அதன்மீது ஊர்ந்துவந்து அதன் கொம்புகளைக் கழுவும் மக்களுக்கு அடங்கிக் கிடப்பது போல எம்போன்ற பாணர்க்கும் புலவர்க்கும் இனிமை தருபவன். உன் பகைவர்க்கு அந்த யானையின் மதநீர் போலக் கொடுமையானவன்’ என்கிறது. கீழ்க்காணும் பாடல் அதியமான் நெடுமானஞ்சயின் கொடைச் சிறப்பைப் பற்றிக் கூறுகின்றது.
ஒருநாள் செல்லலம்; இருநாட் செல்லலம்;
பன்னாள் பயின்று, பலரொடு செல்லினும்
தலைநாள் பொன்ற விருப்பினன் மாதோ; (புறம்-101:1-3)
இப்பாடலால் அதியமான் அரசவைக்கு பரிசில் பெறவேண்டிவரும் புலவர்க்கு ஒருநாளும் முந்தைய நாள் கொடையை விட அதிகமாகவே தரப்பட்டுள்ளதைச் சிறப்பித்துக் கூறும் அரிய பாடலாக காணப்படுகிறது.
6. வள்ளல் நள்ளி
குறிஞ்சி(மலை) வளம் செறிந்த கண்டீர நாட்டினர். இவரை நளிமலை நாடன் என்றும் கண்டீரக் கோப்பெரு நள்ளி என்றும் பெரு நள்ளி என்றும் வழங்கினர். நள்ளி, தன்னை நாடி வந்தவர்க்கு நல்குரவால் பின்னர் நலியாதவாறும் வேறோருவர் பால் சென்று இரவாதவாறும் நிரம்ப நல்கும் இயல்பினை உடையவர்.
………………………….கரவாது,
நட்டோர் உவப்ப, நடைப் பரிகாரம்
முட்டாது கொடுத்த, முனை விளங்கு தடக் கை, 105
துளி மழை பொழியும் வளி துஞ்சு நெடுங் கோட்டு
நளி மலை நாடன், நள்ளியும்; (சிறுபாண்.103-107)
கண்டீரக் கோப்பெருநள்ளியின் கொடை பற்றி வன்பரணர் என்ற புலவர் சிறப்பித்துப் பாடியிருக்கிறார்.
நள்ளி ! வாழியோ; நள்ளி ! நள்ளென்
மாலை மருதம் பண்ணிக் காலைக்
கைவழி மருங்கிற் செவ்வழி பண்ணி,
வரவுஎமர் மறந்தனர்; அது நீ
புரவுக்கடன் பூண்ட வண்மை யானே (புறம்.149)
என்ற பாட்டினால், பாணர்களுக்குப் பரிசில் வேண்டி மன்னரிடத்தில் மீண்டும் செல்ல தேவையில்லை என்று எண்ணி மாலைநேரமும் காலைநேரத்திலும் பண்பாடுவதை மறந்தனர் என்று புலவர் கூறிமை சுட்டத்தக்கது.
ஒரு நாள் வல்வில் ஓரி தற்போது இராசிபுரம் என்று அழைக்கப்படும் ஸ்ரீ ராஜபுரம் என்னும் பகுதியில் வேட்டையாட சென்ற போது அங்கு ஒரு பன்றியின் மீது அம்பினை செலுத்த, அப்பன்றியானது ஒரு புதரில் போய் மறைந்து விட, அந்த இடத்தில் வல்வில் ஓரி சென்று பார்க்கும் போது அங்குப் பன்றிக்குப் பதிலாக ஒரு சிவலிங்கமும் அச்சிவலிங்கத்தின் மீது வல்வில் ஓரி எய்த அம்பும் அந்த அம்புப்பட்டதால் அந்த சிவலிங்கத்தில் ரத்தமும் கசிந்து கொண்டிருந்தது. இதனைக் கண்ட ஓரி சிவன்தான் தன்னை பன்றி வடிவில் வந்து சோதித்ததாக எண்ணி அவ்விடத்திலேயே சிவபெருமானுக்கு அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் என்ற பெயரில் ஆலயம் எழுப்பினான். இதனைக் குறிக்கும் வகையில் அந்த அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயிலின் கொடிமரத்தில் சிவபெருமானைக் குறிக்கும் வகையில் முட்புதரின் முன் பன்றி வடிவமும் வல்வில் ஓரியை குறிக்கும் வகையில் வாளும் கேடயமும் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு இவ்வாலய கோபுரத்தின் பின்புறத்தில் சித்திரிக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.
இவ்வோரி கடையெழு வள்ளல்களுள் மற்றொருவனான காரி எனபவனோடு போரிட்டு மாண்டான் என நற்றிணை 320 இல் கபிலர் குறிப்பிடுகிறார். நாட்டை வென்ற காரி அதை சேரமான் பெருஞ்சேரலிரும்பொறைக்குக் கொடுத்தான் என்று பரணர் பாடினார். அகநாணுற்றுப் பாடலும் இதனை உறுதி செய்கிறது.
முள்ளூர் மன்னன் கழல்தொடிக் காரி
செல்லா நல் இசை நிறுத்த வல் வில்
ஓரிக் கொன்று சேரலர்க்கு ஈத்த
செவ் வேர்ப் பலவின் பயம் கெழு கொல்லி, (அகம்.209:12-15)
மேலும் வல்வில் ஓரி நற்றிணையின் 6, 265 ஆம் பாடல்களில் சிறப்பாகப் பேசப்படுகிறான். புறநானூற்றில் வன்பரணர், கழைதின் யானையார் என்போர் இவனைப் புகழ்ந்து பாடியதைப் புறம்: 152, 153, 204 ஆம் பாடல்கள் குறிப்பிடக்காணலாம்.
ஓம்பா ஈகை விறல்வெய் யோனே (புறம்.152:32)
மழையணி குன்றத்துக் கிழவன் நாளும்
இழையணி யானை இரப்போர்க்கு ஈயும் (புறம்.153:1-2)
புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை
உள்ளிச் சென்றோர் பழியலர்; அதனாற்
புலவேன் வாழியர், ஓரி; விசும்பின்
கருவி வானம் போல
வரையாது சுரக்கும் வள்ளியோய்! நின்னே. (புறம்.204:10-14
…………………….. நளிசினை
நறும்போது கஞலிய நாகுமுதிர் நாகத்து
குறும்பொறை நல்நாடு கோடியர்க்கு ஈந்த
காரிக் குதிரைக் காரியொடு மலைந்த
ஓரிக்குதிரை ஓரியும் (சிறுபாண்.107-111)
மேற்கண்ட செய்திகளின் வழி, தொல்தமிழ் மக்களின் பண்பட்ட வாழ்வில் கொடைத்தன்மைகள், கொடைச்சிறப்புகள், மன்னர்களின் ஆளுமைச் சிறப்புகள், கடையேழு வள்ளல்களின் கொடைமடச் செய்திகள் போன்றவை வெளிப்பட்டு நிற்கின்றன. கொடை வள்ளல் என்ற பட்டம் வெறும் செயலுக்கான பட்டம் மட்டும் அல்ல அந்த செயல், உயர்ந்த மனநிலையில் எந்த ஒரு சிறு ஆராய்ச்சிக்கும் உட்படுத்தாமல் உள்ளத்தால் செய்யப்பட்டதாகும். இது அவன் தன்மைக்குக் கொடுக்கப்பட்ட பட்டமாகும். பண்டைய தமிழர்கள் அறத்தைக் கூட அது செய்யப்பட்ட மனநிலையைக் கொண்டு அறத்தில் சிறந்த அறம் போற்றி வாழ்வாங்கு வாழ்ந்தனர் என்பதற்கு இவை நற்சான்றாக விளங்குகிறது. மிகத் தொன்மைக் காலத்திலேயே கொடையைப் போற்றி வளர்த்தப் பெருமை தமிழருக்கே உரியது என மார்தட்டிக்கொள்வோம்.
கருவிநூற்பட்டியல்
முனைவர் ப.சு. மூவேந்தன், உதவிப்பேராசிரியர் – தமிழியல்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.
பேராசிரியர் ச. அகத்தியலிங்கனார் தமிழ்மொழிக்குச் செய்துள்ள பணிகள் ஏராளமானதாகும். மொழியியல் ஆய்வுகளில் தன்னிகரற்று விளங்கினாலும். மொழியியல் நோக்கில் சங்க இலக்கியத்தையும் அணுகி, உலக இலக்கியங்களில் மிக உன்னதமான நிலையினைத் தமிழ்மொழி இலக்கிய, இலக்கணங்கள் பெற்றுள்ளதனை ஆய்வுவழி வெளிப்படுத்தியுள்ளார்.
பேராசிரியர் அகத்தியலிங்கனார் சங்க இலக்கியங்களின் செவ்வியல் தன்மைகள் குறித்துப் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள் எழுதி வெளியிட்டுள்ளார். அவற்றுள், “சாகா வரம் பெற்ற சங்கப் பாடல்கள்” என்னும் ஆய்வுநூலில் பின்பற்றியுள்ள ஆய்வு நெறிகள் குறித்து இவண் விளக்கப்படுகின்றது.
தமிழ் மொழியில் இடம்பெற்றுள்ள இலக்கியங்களுள் சங்க இலக்கியங்கள் தனித்திறம் பெற்றவையாகும். மூவாயிரம் ஆண்டுப் பழமையுடைய சங்க இலக்கியங்கள் இன்றும் படிப்பவர் உள்ளங்களில் எழுச்சியையும், உணர்ச்சியையும் ஊட்டவல்லனவாய்த் திகழ்வதற்கு அதில் இடம்பெறும் கருத்துக்களும் ஒரு காரணமாக அமைந்துள்ளன. இதன் பொருட்சிறப்பில் தன் உள்ளத்தைப் பறிகொடுத்த அகத்தியலிங்கனார், தான் பயின்றபோது பெற்ற அனுபவத்தைப் பிறர்க்கு எடுத்துரைக்கும் நோக்கில் இந்நூலினைப் படைத்துள்ளார் என்பது இதன் முன்னுரையால் புலனாகின்றது.
சங்க இலக்கியத்தின் தனிச்சிறப்பினைக் குறித்து, “சங்க இலக்கியம் ஒரு செவ்வியல் இலக்கியம். செவ்வியல் இலக்கியம் என்றாலே நிலைபேறும் நீங்காது நெஞ்சில் நிற்கும் தன்மையும் கொணடு விளங்கவேண்டும் என்ற நிலையில் சங்க இலக்கியமும் நீண்ட நிலைபேறும் நெஞ்சிலிருந்து நீங்காத நிலையும் கொண்டு தமிழ் இலக்கிய உலகில் தனிப்பெரும் இலக்கியமாக விளங்குவது. செவ்வியல் இலக்கியங்கள் என்று கருதப்படும் கிரேக்க, ரோம, ஹீப்ரு, சமஸ்கிருத இலக்கியங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இதன் பெருமையும் தனித்தன்மையும் தெரியவரும்” என்று இந்நூலின் முன்னுரையில் எடுத்துரைக்கின்றார்.
“இந்நூலில் குறுந்தொகையில் இடம்பெறும் தலைசிறந்த நான்கு பாடல்களைக் கொண்டு ஆராய்ந்து கூறப்பட்டுள்ளது. அப்பாடல்களின் கருவையும், செம்மாந்த போக்கையும், செறிவுநிறைந்த கவிதை உத்திகளையும் செவ்வியல் பண்புகளையும் இன்னோரன்ன பிறவற்றையும் எடுத்துரைப்பதே இந்நூலின் நோக்கம்” என்று தம் ஆய்வுப்பரப்பினையும், ஆய்வின் நோக்கத்தினையும் எடுத்துரைத்துச் சொல்கின்றார். இவை ஒரு செறிவார்ந்த ஆய்வாளர்க்குரிய நிலையினையும், அவரது திடமான கொள்கை நெறியினையும் எடுத்துரைப்பதாய் அமைந்திருக்கின்றது.
சொல்லும் கருத்தின் சொல்நேர்த்தி, சொல் தேர்வு, ஆய்வின் தேவைக்கேற்ற உத்திகள், எளிமையான சொற்கள்; வலிமையான கருத்துக்கள் என இந்நூலில் அகத்தியலிங்கனார் எல்லா இடங்களிலும் நிறைந்து விளங்குவதனை இந்நூலால் தெளிவாக அறிந்துகொள்ள முடிகின்றது.
இந்நூலில் குறுந்தொகையில் இடம்பெறும் “யாயும் ஞாயும் யாராகியரோ?”, “நிலத்தினும் பெரிதே, வானினும் உயர்ந்தன்று”, “சிறுகோட்டுப் பெரும்பழம்”, “காலே பரிதப்பினவே” என்னும் நான்கு பாடல்கள் குறித்து ஆய்வுகள் நிகழ்த்தியுள்ளார்.
இப்பாடல் குறித்த ஆய்வுகளில் பேராசிரியர் அகத்தியலிங்கனார் பின்பற்றியுள்ள ஆய்வுநெறிகளாக,
என்பனவற்றைக் காணமுடிகின்றது. இவை குறித்துத் தனித்தனியே விளக்கப்படுகின்றன.
கவிதைக்குரிய சிறப்புக்கூறுகளுள் அதன் உருவம் குறிப்பிடத்தக்கதாகும். சிறிய அடிகள், குறைவான வாக்கியங்கள் கொண்டு உயர்ந்த நோக்கில் படைக்கப்படும் கவிதைகள் காலத்தை வென்றுவாழும் தன்மை கொண்டு விளங்கும் என்பதனைக் குறுந்தொகைப் பாடல்கள் கொண்டு விளக்குகின்றார்.
“சிறந்த கவிதை என்பது செம்மையான பாடுபொருளால் மட்டுமே சிறப்பதில்லை. அப்பாடுபொருளையும் எவ்வாறு கவிதை நோக்கில் கவிதை வளத்துடன் கூறுகின்றது என்பதையும் பொறுத்துத்தான் அதன் வெற்றி உள்ளது என்பதையும் உணரலாம்” 1 என்று கவிதைக்குரிய உள்ளடக்கம் குறித்து விளக்கின்றார்.
சங்க இலக்கியப் பாடல்கள் இன்றும் சுவை மிகுந்து காணப்படுவதற்குக் காரணம் அதில் இடம் பெறும் சொல்லாட்சிகளே. அவற்றுள் ஒரே சொல் பலபொருள்களில் இடம்பெறுவதும், வந்த சொல்லே மீண்டும் மீண்டும் வரத்தொடுப்பதும் தனிச்சிறப்பு எனலாம்.
“கவிதை உருவாக்கத்தில் ஒரே மாதிரியான செய்திகளை ஒன்றன்பின் ஒன்றாக, அடுக்கு அடுக்காகக்கூறி, வாசிப்போர் உள்ளத்தில் ஒருவகையான ஒருமை உணர்ச்சியை ஏற்படுத்துதல் கவிஞர்களிடையே காணப்படுகின்ற ஒரு சிறந்த கவிதை உத்தியாகும். சங்கப் பாடல்களில் இத்தகைய உத்தியை ஏராளமான பாடல்களில் காணலாம்” என எடுத்துக்கூறி,
“காலே பரிதப் பினவே கண்ணே
நோக்கி நோக்கி வாள்இழந் தனவே
அகல்இரு விசும்பின் மீனினும்
பலரே மன்ற இவ்வுலகத்துப் பிறரே.” (குறு. 44)
என்னும் குறுந்தொகைப் பாடலை எடுத்துரைக்கின்றார். இந்தப் பாடல்கள் எடுத்த எடுப்பிலேயே வாசிப்பவர் உள்ளத்தில் சென்று சேருவதற்குக் காரணம் உடன் போக்குச் சென்ற மகளைத் தேடிய நிலையில் உண்டான களைப்பை, களைப்பு உணர்வை மீண்டும் மீண்டும் கூறுகிற நிலைதான் என்பதை யாரும் உணர முடியும் என்று எடுத்துரைக்கின்றார்.
தமிழ் இலக்கியப் பரப்பில், ஒரே மாதிரியான அல்லது ஒரே இலக்கணக்கூறுகளைப் பயன்படுத்தி ஒப்பற்ற பல பாடல்கள், கவிதைகள் உருவாகியிருப்பதை அன்றுமுதல் இன்று வரை காணமுடியும் என்று எடுத்துரைக்கின்றார். சங்க இலக்கியப் பாடல்கள் சிறந்து விளங்குவதற்கு அதில் இடம்பெற்றுள்ள சொல்லாட்சிகளும், உருவ முறைகளும் ஒரு காரணியாக அமைந்திருக்கின்றது என்பது அகத்தியலிங்கனாரின் முடிபான கருத்தாகும்.
“யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறை கேளீர்”
என்னும் பாடலடிகளில் இடம்பெற்றுள்ள கவிதைக்கூறுகள் குறித்து எடுத்துரைக்கும் ஆசிரியரின் திறம் போற்றத்தக்கதாகும். இப்பாடலடிகளில் இடம்பெற்றுள்ள முரண் தொடைகள் குறித்தும் விளக்குகின்றார்.
ஓசை இன்பத்திற்கு அடிப்படைய யாப்பு. பொருள் இன்பத்திற்கு அடிப்படையாக இருப்பது மொழியமைப்பு. இந்த இரண்டையும் இணைத்து ஒரு சிறந்த இரண்டறக்கலந்த கலவையாக மாற்றி ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரித்தரியாதவாறு செய்வதே கவிதைக்கலை. யாப்பில் கவிதைமொழி அமைப்பும், கவிதையின் மொழி அமைப்பில் யாப்பும் இருக்கும். இவற்றை இணைப்பதில் தான் கவிஞனின் திறம் உள்ளது. அத்தகு திறம் சங்கப் புலவர்களிடம் நிறைந்திருந்ததாக எடுத்துரைக்கின்றார் பேராசிரியர். 2
சங்க இலக்கியங்கள் கூற்று முறையில் அமைந்திருக்கின்றன. படைப்பாளன், படைப்புக்கான ஒரு சூழலை ஏற்படுத்தி, அதைப் பிறர் வாயிலாகப் படிப்பவன் உள்ளத்தில் பதிய வைக்கின்றான். இதில் படைப்பாசிரியர் நேரடியாகத் தன் செயலைச் செய்யாமல், பிறர் கூற்றின் வாயிலாக வெளிப்படுகின்றான். இவ்வாறு பிறர் வாயிலாக வெளிப்படும் திறனும் சங்க இலக்கியத்தின் செவ்வியல் தன்மைக்கு ஒரு காரணியாக அமைந்திருப்பதாகக் கூறுகின்றார் ச. அகத்தியலிங்கனார்.
“சங்க இலக்கிய அகப்பாடல்கள் எல்லாம் அகமாந்தர்கள் தங்கள் தங்கள் வாயினால் கூறுவதாக ஆக்கப்பட்ட பாடல்களே”3 என்பர்.
“தாம் கூற வந்த கவிதைப்பொருளை வாசிப்போன் உள்ளத்தில் நீங்காது நிலைபெறச் செய்வதற்காகத் தான் தலைவன் வாயில் வைத்துக் கூறுவது போன்று கூறுகின்றார். ….ஒற்றுமையுடைய, அல்லது ஒரே மாதிரியான செய்திகளை அடுக்கு அடுக்காகக் கூறி அதன் பின்னர் கூற வேண்டிய பொருளையும் கூறவேண்டிய நிலையில் கூறும்போது தான் ஒருவகைக் கவிதை உணர்வும், கவிதை அழகும் உண்டாகும் என்பதையும், அந்நிலையில்தான் வாசிப்போன் உள்ளத்தில் கவிதை உணர்வுடன் கவிதைப் பொருளை உணரவைக்கமுடியும் என்பதையும் நன்கு அறிந்த செம்புலப் பெயனீரார் இத்தகைய செம்மையான உத்தியைக் கையாண்டுள்ளார்” 4 என்று எடுத்துரைக்கின்றார்.
சங்க இலக்கியங்களில் கூற்று என்பது அமைந்துள்ள முறைமை குறித்து, “கூற்று நிலையில் அந்தந்த கதை மாந்தர்களே தத்தம் எண்ணத்தையும், உணர்வையும் கூறும்போது உண்மையான ஒரு தோற்றத்தையும் உணர்ச்சியையும் தந்து நிற்கக் காணலாம். எனவே, உணர்வை வாசகர்கள் உள்ளங்களிலே எழுப்புவதற்கு இதனை ஒரு நல்ல உத்தியாகக் கவிஞர்கள் கையாண்டிருக்கலாம்” என்றும், “சங்க காலக் கவிஞர்கள் சான்றோராகவும், ஆன்றோராகவும் வாழ்ந்த நிலையில் காதல் எண்ணங்களையும் நிகழ்ச்சிகளையும் தாங்கள் தங்கள் உணர்வினைக் கூறுவது போல் அமைந்துவிடக்கூடாதே என்று எண்ணியும் கூட இந்தக் கூற்று வடிவத்தைக் கையாண்டிருக்கலாம். எனினும் சங்க இலக்கியக் கர்த்தாக்கள் தங்கள் கவிதைகளைத் தற்சார்பு நிலையில் ஆக்க விரும்பவில்லை என்றும் அந்த நிலையைத் தவிர்த்துப் பொதுச்சார்பு நிலையில் தங்கள் கவிதைகளை ஆக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் கூற்று என்ற அருமையான ஒரு அமைப்பு உத்தியை அவர்கள் கையாண்டனர் என்று கருதுவதே சிறப்பாகும்” 5 என்றும் எடுத்துரைக்கின்றார்.
சிறந்த கவிஞர்கள் தாங்கள் கூறப்போகும் கவிதைப் பொருளை மிக அருமையாக முதலியே குறிப்பாகக் காட்டிவிடுவார்கள். இது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இருக்கலாம். மிகச்சிறந்த கவிஞர்கள் மறைமுகமாக மிக அருமையாகக் குறிப்பிட்டுக் கோடிட்டுக்காட்டி விடுவர். இந்நிலையில் செம்புலப் பெயனீரார் தலைவன் தலைவியர் உள்ளங்களின் சங்கமத்தை மிகமிக நுணுக்கமாகக் காட்டிவிடுவது நினைந்து மகிழ்வதற்குரியது என்று போற்றவும் செய்கின்றார்.
இவ்வாறு சங்க இலக்கியங்கள் கூற்று வடிவில் நிற்பதால் தான் அவை இன்றும் நிலைத்து நிற்கின்றன என்று எடுத்துரைக்கின்றார்.
கவிதையின் உள்ளடக்கமாகக் கரு என்பது அமைகின்றது. கரு என்பது கவிதையின் உள்ளீடாக அமைவது ஆகும். ஒரு பாடல் சிறந்த நிலையினைப் பெறுவது அதன் உருவத்தாலும், உள்ளடக்கத்தாலும் ஆகும். “உலகப் பொதுமையைத் தன்னகத்தே கொண்டிருக்கும் ஒரு தலைசிறந்த கருவினைக் கொண்டவை சங்கப் பாடல்கள்” 6 என்பது பேராசிரியர் கருத்தாக அமைந்துள்ளதனைக் காணமுடிகின்றது.
ஒரு சொற்கலையாக்கத்தின் சிறப்புக்கு அதன் கரு அல்லது பாடுபொருள் மட்டும் சிறந்திருந்தால் போதாது. எந்த ஒரு உணர்வையும் பல்வேறு நிலைகளில் வெளிப்படுத்தலாம். ஆனால், கவிஞன் தேர்ந்தெடுப்பது ஒரே வகைதான். அந்த வகை கற்பனை வளமும் கவிதைப் பண்பும் வாசகனின் வாழ்வைத் தொடும் நிலையும் நிறைந்ததாக இருக்கும்போது கவிதை வெற்றி பெற்றுவிடுகின்றது.
ஒரு கவிஞன் அல்லது நாடக ஆசிரியன் அல்லது எழுத்தாளன் தன்னுடைய கலையாக்கத்திற்குரிய கருப்பொருளைத் தேர்ந்தெடுப்பதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். தான் படைக்க விரும்புவது நிச்சயமாக வெற்றிபெறும் என்ற நம்பிக்கையுடன் அவன் தன் படைப்பினை வெளிப்படுத்துகின்றான். இந்த நம்பிக்கையுடன் படைக்கப்பட்டனவே சங்க இலக்கியத்தில் படைக்கப்பட்டுள்ள தலைசிறந்த கவிதைகள் என்று எடுத்துரைக்கின்றார்.
காதலின் பரிணாமத்தைக் கூறுவது தான் குறுந்தொகையின் மூன்றாவது பாடலான “நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று…” என்று தொடங்கும் பாடல். பரந்த நிலத்தையும், உயர்ந்த வானையும் ஆழக்கடலையும் எடுத்துக்காட்டி காதலின் பரிணாமத்தை மூன்று உவமைகளின் மூலம் மிக அழகாகக் கூறிநின்றார். அதிலும் ஒரு முகப்போக்கில் ஒரே மாதிரியான வாக்கியங்களில், ஒரே மாதிரியான வினைச்சொல்லில் ஒரே மாதிரியான ஒப்புமைத் தொடரில் கூறி நிற்பது அறியத்தக்கதாகும்.
சங்க இலக்கியத்தின் முக்கியமான கருவே, தலைவன் தலைவியரிடையே காணப்படும் காதலின் பரிமாணம் தான். சங்க அக இலக்கியம் ஒரு ஆண், ஒரு பெண் இவர்களிடையே காணக்கிடக்கும் காதலை அடிப்படையாகக் கொண்டது. இக்காதலின் பரிமாணம், அதன் பவித்திரம், அதன் வேகம், விறுவிறுப்பு, அதன் தெய்வீகம், அது உண்டு பண்ணும் மாற்றம், அதனால் ஏற்படும் பல்வேறு விளைவுகள் போன்றவற்றை மையமாகக் கொண்டவை தான் சங்க அகப்பாடல்கள். சிறந்த அகப்பாடல்கள் எனக் கருதப்படும் பாடல்கள் எல்லாம் இதனை அடிப்படைக் கருவாகக் கொண்டவை தாம்” 7 என்று எடுத்துரைக்கின்றார்.
சங்கப் பாடல்களுக்கு ஆய்வுநோக்கில் விளக்கம் தர முனைந்த பேராசிரியர், அப்பாடல்களின் பொருள்விளக்கத்தினை நயத்துடன் எடுத்துரைத்துள்ள திறம் போற்றத்தக்கதாய் அமைந்துள்ளது. திறனாய்வாளன், தான் ஆய்வுசெய்ய விரும்பும் பொருளில் ஆழ்ந்த உடுபாடும் பற்றுதலும் கொண்டிருத்தல் வேண்டும். அப்போது தான் ஆய்வுகள் பயனுள்ளதாய் அமைந்திருக்கும் என்னும் கூற்றை மெய்ப்பிக்கும் வகையில், தான் ஒரு மிகச்சிறந்த சுவைஞராய் முதலில் நின்று, பின்னரே பாடல்களுக்குப் பொருள்விளக்கம் தரமுனைந்துள்ள திறம் பேராசிரியரின் தனிச்சிறப்பினை எடுத்துரைப்பதாய் அமைந்துள்ளது.
“காலே பரிதப்பினவே” என்னும் பாடலில், “தலைவி உடன்போக்குப் போய்விடுகின்றாள். தோழி செவிலிக்கு உரைக்கின்றாள். செவிலியோ ஒரு சிறந்த தாய். செம்மையான உணர்வும், சிறந்த பண்பும் உடையவள் தான். ஆனால் அதே நேரத்தில் தான் பேணி வளர்த்த தலைவியின் போக்கு சரியாகத் தோன்றவில்லை. எங்கே போய்விடுவாள்? எப்படிப் போய்விடுவாள்? எனக்குத் தெரியாத இடம் எங்கே என்று எண்ணுகின்றாள்.
சுரத்திடைச் சென்ற தலைவியைத் தேடுகின்றாள்; தேடுகின்றாள்; தேடிக்கொண்டே செல்லுகின்றாள். நடக்கின்றாள். கடுமையான வெயில். காட்டுப்பாதை. கால்பட்ட இடம்எல்லாம் கடும் சுரத்தின் வெம்மை. வெந்து போகின்றாள். விரக்தி மெல்ல மெல்ல தலை தூக்குகின்றது. எனினும் உள்ளம் தளரவில்லை. ஆனால், கால்தளர்ந்து விடுகின்றது. தள்ளாடி விடுகின்றது. எதிரே எத்தனை எத்தனையோ இளம் தலைவன் தலைவியர்கள் வந்து கொண்டே இருக்கின்றனர். தன் மகளும் அவள்தன் தலைவனுமா? என்று எட்டி எட்டிப்பாய்ந்து ஓடிப் பார்க்கின்றாள். ஆனால், அவர்களோ பிறர். பலர் வருகின்றனர். ஆனால் தன் மகள் இல்லை. அவள் தலைவனும் இல்லை. உள்ளமும் தளருகின்றது. இந்தப் பின்னணியில் தான் வெள்ளிவீதியார் தன் சாகாவரம் பெற்ற பாடலின் முதல் அடியை இல்லை முதல் வாக்கியத்தை ‘காலே பரிதப்பினவே’ என உணர்வுடனும் கவிதைப் பண்புடனும் கூறுகின்றாள்” 8 என்று பாடலின் சுவையோடு ஒன்றிப்போய் விளக்கும் திறன் பேராசிரியருக்கு மட்டுமே சாலும்.
சங்க இலக்கியங்கள் சுயச்சார்பு இல்லாமல் பொதுச்சார்பு நிலையில் இயங்குவதனால் அவை செவ்வியல் தன்மையைப் பெற்று விளங்குகின்றன என்று எடுத்துரைக்கின்றார். எந்த வித உணர்வையும் பொதுமைப்படுத்திக் கவிஞனின் எந்த விதமான நேரடியான தாக்கமும் இல்லாமல் இருப்பதற்காகத்தான் சங்க காலக் கவிஞர்கள் கூற்று என்ற சக்தி வாய்ந்த ஒரு உத்தியை உருவாக்கி நின்றனர். எந்த ஒரு அகப்பாடலிலும் கவிஞனை நேரடியாகக் காணுவதில்லை; கேட்பதில்லை; அவனுடைய வாழ்வையோ, வாழ்வுத் துன்பங்களையோ நாம் உணருவதில்லை. அவர்களின் மன நிலையையே உணருகிறோம்.
சங்க இலக்கியம் ஒரு செவ்வியல் இலக்கியம். சொல்ல வேண்டிய செய்திகளை அதிகமான உணர்ச்சிப் பிழம்புகளுக்கோ, எல்லை மீறிய உணர்வுகளுக்கோ இடம் இல்லாமல் சில இலக்கிய மரபுகளின் அடிப்படையில் செம்மையாகவும், சிறப்பாகவும் கூறும் இலக்கியம்” என்று சங்க இலக்கியத்தின் சிறப்புக்கூறினை எடுத்துரைக்கின்றார்.
“உடன்போக்கு என்பது சங்க இலக்கியங்களில் மிகச் சிறந்து விளங்கும் ஒரு துறையாகும். சிறந்த தலைமகனும், சிறந்த தலைமகளும் தங்களுடைய வரைவைப் பிறர் மறுக்க வேறுவழி எதுவும் இல்லாமல் தலைவியின் கற்பையும், தலைவனின் காதல் ஆற்றாமையையும் காத்தல் பொருட்டுத் தோழியும், தலைவன் தலைவியரும் இணைந்து எடுக்கும் ஒரு சிறந்த முடிவின் செம்மையான வெளிப்பாடு அல்லது செயல்பாடு ஆகும்” என்று எடுத்துரைத்து, அதற்குச் சான்றாக வெள்ளிவீதியாரின் “காலே பரிதப்பினவே” என்று தொடங்கும் குறுந்தொகைப் பாடலைக் காட்டுகின்றார்.
வெள்ளிவீதியார் நினைத்திருந்தால் நிச்சயமாக உடன்போக்கு என்பது ஒரு சிறந்த நிகழ்ச்சி என்றோ, செம்மையான ஒரு வழக்கு என்றோ வெளிப்படையாகக் கூறியிருக்கலாம். அவ்வாறு செய்யாமல்,
“அகலிரு விசும்பின் மீனினும்
பலரே மன்றஇவ் வுலகத்துப் பிறரே.”
என்று கூறுகின்றார். இது ஒரு செவ்வியல் நிலை. இந்தச் செவ்வியல் நிலையைக் காட்டும் ஒரு உத்தியாகத் தான் சங்ககாலக் கவிஞர்கள் உள்ளுறை, இறைச்சி போன்ற உவமைக்கூறுகளைக் கையாண்டு சங்க இலக்கியத்துக்கு ஒரு தனித்தன்மையையும், தனித்துவத்தையும் சாகாவரத்தையும் அளித்தனர் என்று கூறுகின்றார்.
சங்க இலக்கியங்களின் செவ்வியல் கூறுக்கு அதில் இடம்பெறும் சொல்லாட்சிகளும், தொடரமைப்புகளும் ஒரு முக்கியக் காரணமாக அமைவதைக் காணலாம். இத் தொடர் அமைப்புகளைப் பற்றியும், சொல்லாட்சிகளைப் பற்றியும் விளக்கமாக எடுத்துரைக்கும் பேராசிரியர் அவ்வாறு அமைந்திருப்பதனாலேயே அவை செவ்வியல் தன்மைகொண்ட பாடல்களாக விளங்குவதனையும் தக்க சான்றுகளுடன் எடுத்துரைக்கின்றார்.
ஒரு கவிதையின் சிறப்பு என்பது அதில் சொல்லப்படும் பொருளில் மட்டுமல்ல. அதனை எவ்வாறு கவிஞன் சொல்லுகிறான் என்பதிலும் தான் அடங்கியுள்ளது என்ற கருத்தினை முன்வைத்து, சங்க இலக்கியங்களில் ஒரே தொடரமைப்புகளைக் கொண்ட அல்லது ஒரே அமைப்புள்ள இரண்டு அல்லது மூன்று வாக்கியங்களில் ஒன்றிலிருந்து மற்றொன்றை வேறுபடுத்தவும், வேண்டிய உணர்வை ஏற்படுத்தவும் சலிப்பைத் தவிர்க்கவும் எல்லாவற்றிற்கும் மேலாகப் பாடலின் வேகத்தையும் விறுவிறுப்பையும் கூட்டவும் தமிழ்க்கவிஞர்கள் இத்தகைய உத்தியைப் பயன்படுத்துவர் என்று கூறுகின்றார்.
“வினையே ஆடவர்க்கு உயிரே வாணுதல்
மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர்” (குறு. 135)
என்னும் பாடலடிகளும்,
“உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே” (குறு. 7)
“யானே உண்டை யேனே, என்னலனே
ஆனா நோயொடு கானல் அஅதே” (குறு. 97)
“முகைமுற் றினவே முல்லையொடு
தகைமுற் றினவே தண்கார் வியன்புனம்” (குறு. 188)
என்னும் பாடல்களும் இவ்வுத்தியின் அடிப்படையில் எழுந்தவையாகும் என்று கூறுகின்றார்.
இதேபோன்று கவிதையாக்கத்தில் மீண்டும் மீண்டும் கூறுதல் என்னும் உத்தியைப் பயன்படுத்திக் கவிதையியலாளர்கள், கவிதையின் சுவையை மேலும் மேலும் மெருகூட்டுகின்ற தன்மையினையும் எடுத்துரைக்கின்றார்.
“காலே பரிதப்பினவே கண்ணே
நோக்கிநோக்கி வாள்இழந் தனவே”
“நாட்டின் நாட்டின் எரின் எரின்
குடிமுறை குடிமுறை தேரிற்
கெடுநரும் உளரோநம் காதலோரே” (குறு. 130)
என்னும் பாடலடிகளில் ஒரேவிதமான வாக்கியங்கள், ஒரே விதமான தொடக்கங்கள், ஒரே விதமான முடிவுகள் என்பதோடு வந்த சொற்களே மீண்டும் மீண்டும் வரத் தொடுக்கப்பெற்று, பல்வேறு நிலைகளில் பலவிதமான உத்திகளைக் கையாண்டு தொடக்கமே ஒரு வகையான உணர்ச்சியையும் உணர்வையும் தந்து கவிதைப் பண்பு நிறைந்த கவிதைகளைப் படைத்திருப்பதனைக் காட்டுகின்றார்.
சங்கஇலக்கியக் கவிதையியலை, உலகச் செம்மொழிகளின் கவிதையியலோடு ஒப்புமைப்படுத்தியும், உலகக் கவிதையியற்கோட்பாடுகள் சங்க இலக்கியத்தில் பொருந்தி வரும் திறத்தினை எடுத்துரைப்பதனை ஒரு உத்தியாகக் கையாண்டு சங்க இலக்கியத்தின் தனிச்சிறப்புக்களை மேன்மையுறச் செய்கின்றார் பேராசிரியர்.
தொல்காப்பியர், “நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்” என்னும் தொடரால், உலக வாழ்வில் அதாவது மனித வாழ்வில் நடக்கின்ற சில சிறந்த செயல்கள் அல்லது வாழ்க்கைக் கூறுகளைக் கற்பனைகளுடனும், கவிதைப்பண்புடனும் கூறுவது தான் கவிதை என்றும், மனித வாழ்க்கையில் நடக்கும் சில செய்திகளே அல்லது வாழ்க்கைக் கூறுகளே சிறந்த கவிதைப் பொருள்கள் என்று எடுத்துரைத்துள்ளார்.
இதே கருத்தினை “சிறந்த கவிதைப்பொருள் மனிதவாழ்வின் போலவாக்கம்” என்று கூறுவார் என்றும், ஸ்டிரேபோ இது மனிதச் செயல்கள் என்று கூறுவார் என்றும், ஆர்னால்ட் கவிதையின் பொருள்கள் பாடுபொருள்கள் என்ற வினாவை எழுப்பிக்கொண்டு அவை செயல்கள், சிறந்த செயல்கள், மனிதஇனத்தின் மாபெரும் செயல்கள் என்று எடுத்துக்கூறுவார்” 9 என்றும் எடுத்துரைக்கின்றார்.
சங்க இலக்கியப் பாடல்களில் காணப்படும் ஒருமைப்பாடு தான் அவை சிறந்த இலக்கியங்களாக விளங்குவதற்கு ஒரு காரணம் என்று கூறுகின்ற பேராசிரியர், “நல்ல கவிதைகளைப் பற்றிப் பேசும் சில அறிஞர்கள் அவற்றின் ஒவ்வொரு அடியும் ஒவ்வொரு வரியுமே கவிதைகள் தான் எனக் கூறுவது” என்ற எமர்சன் கூற்றினைச் சங்கப் பாடல்களுக்குப் பொருந்தும் என்று கூறுகின்றார். இதற்குச் சான்றாகக் கபிலரின் “வேரல் வேலி” என்று தொடங்கும் குறுந்தொகைப் பாடலைக் காட்டுகின்றார்.
பலதரப்பட்ட வாக்கியங்களாலும், ஒவ்வொன்றும் ஒவ்வொரு பண்பில் நன்கு உள்ள நிலையில் பாடலும் ஒட்டுமொத்தமாகவும் சுவையுடன் இருப்பது காணத்தக்கது. இதைத்தான் அரிஸ்டாடில், பிளோட்டினஸ் போன்ற அறிஞர்கள் பலபடக்கூறியுள்ளனர் என்று எடுத்துரைக்கின்றார். எந்தவொரு கலையாக்கமும் ஒன்றி ஒருமைப்பாட்டுடன் விளங்க வேண்டும் என்பார். இது கவிதைக்கும் பொருந்தும். ஒரு கலையாக்கத்தின் பெருமை அதன் கூட்டுத்தொகையன்று, அவை ஒன்றி உறவாடி ஒன்றுபட ஒரே கலவையாக நிற்பதில்தான் உள்ளது என்பார் அவர். பிளாட்டினஸ் “எந்தவொரு பகுதியின் அழகும் கவிதையின் முழுமையின் அழகில்தான் அடங்கிக்கிடக்கின்றது” என்பார். இதே கருத்தினைத் தொல்காப்பியர்,
“நூலெனப் படுவது நுவலுங்காலை
முதலும் முடிவும் மாறு கோளின்றித்
தொகையினும் வகையினும் பொருண்மை காட்டி
உண்ணின் றகன்ற உரையொடு புணர்ந்து
நுண்ணிதின் விளக்கல் அதுவதன் பண்பே”
என்று சுட்டியுள்ள திறத்தினை எடுத்துரைக்கின்றார். இத்தகு சீர்மைகொண்ட இலக்கியமாகச் சங்க இலக்கியப் பாடல்கள் இயங்குவதனைச் சான்றுகளுடன் காட்டுகின்றார். இந்த ஒரு ஒருமைப்பாடு எந்தவொரு கலையாக்கத்துக்கும் மிக அவசியம். இதனைக் கபிலர் போன்ற சங்கச் சான்றோர் நன்கு அறிந்திருந்தனர். இந்நிலையில்தான் அவர்கள் ஆக்கிச்சென்ற சங்கச் செய்யுட்களும் செம்மையான வடிவ ஒருமைப்பாட்டுடனும் ஒன்றி உறவாடும் கருத்து ஒப்புமையுடனும் ஒன்றி உறவாடும் கருத்து ஒப்புமையுடனும் காணப்படுகின்றன. கவிதை உருவாக்கத்தில் இப்பண்பு மிகமிகத் தேவையான ஒன்று. இதனைச் சங்கச் சான்றோர்கள் நன்கு பயன்படுத்தித் தங்கள் கவிப்படைப்புகளை வெளிப்படுத்தியுள்ளனர் என்று விளக்குகின்றார்.
சங்க இலக்கியங்களின் செம்மாந்த தன்மைக்கும், தனித்தன்மைக்கும் சான்றாக விளங்குவது, அப்பாடல்கள் எக்காலத்திற்கும் பொருந்திவரும் தன்மையில் அமைந்திருப்பதாகும் என்று எடுத்துரைக்கும் நோக்கில் சங்க இலக்கியத்தின் தனிச்சிறப்புக்களை வியந்து போற்றுகின்றார். சங்க இலக்கியங்களை மண்வாசனை கொண்ட இலக்கியங்கள் என்று எடுத்துரைப்பது குறிப்பிடத்தக்கதாகும். பிற முதல் உலக இலக்கியங்கள் எல்லாம் இறைவனையும் இறைவன் செயல்களையும் மக்களுடன் இணைத்துக் கூறியிருக்க, சங்க இலக்கியங்கள் அந்த நிலையில் இல்லாது, மக்களின் வாழ்க்கையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவையாக உள்ளன. இது சங்க இலக்கியத்திற்குரிய தனிச்சிறப்பு என்று கருதலாம்.
“இன்றைய உலகிலும் சிறந்த அன்பும் செம்மையான பண்பும் கொண்டு வாழும் கணவன் மனைவியரிடையே கூட அடிக்கடி இத்தகைய பேச்சு நடைபெறுதல் கண்கூடு. காதல் மணம் புரிந்து இனிது வாழும் தம்பதியரிடையே மட்டுமல்லாமல் பெற்றோர் பார்த்து மணமுடித்த தம்பதியரிடையேயும் இத்தகைய நிலை ஏற்படுவதைக் காணாலம். கணவனும் மனைவியும் மகிழ்ச்சியோடு இருக்கும் பல நாட்களில், மணம் நடந்த நாளில், நமக்குக் கல்யாணம் ஆகி எத்தனை ஆண்டுகள் ஓடிவிட்டன. நீ எங்கோ பிறந்தாய்; நான் எங்கோ பிறந்தேன். உங்கள் குடும்பத்துக்கும் எங்கள் குடும்பத்துக்கும் அன்று எந்தச் சொந்தபந்தமும் இல்லையே? எப்படியோ தெரியாமல் இணைந்தோம். எத்தனை குழந்தைகள். என்ன அருமையான வாழ்வு நம் வாழ்வு. அந்த ஆண்டவனுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்று கூடிப்பேசும் தம்பதியர்கள் இன்றும் வாழ்கிறார்கள்; என்றும் வாழ்வார்கள். பாட்டில் காணப்படும் உவமைதான் இல்லை. வேறு எல்லாம் உள்ளன இவர்கள் பேச்சில். சிறந்த தம்பதிகளாக வாழும் ஒவ்வொரு இல்லத்திலும் இது நடைபெறுவது தான். இத்தகைய ஒரு அருமையான உணர்வைத் தான் செம்புலப்பெயல்நீரார் தம் கவிதைக் கருவாக்கிக் காலம் கடந்து நிற்கும் இக்கவிதையைப் படைத்திருக்கிறார். இதனால் தான் இக்கவிதை சாகாவரம் பெற்ற ஒரு சங்கப் பாடலாக இன்றும் திகழ்கின்றது. என்றும் திகழ்வது” என்று உலகியலோடு பொருந்தக் கூறும் திறம் பேராசிரியரின் நுண்ணோக்குத்திறனுக்குச் சான்றாக அமைகின்றது.
இதே நிலையில் பிற சங்கப்பாடல்களுக்கும் உலகியலோடு பொருந்தப்பார்க்கும் நிலையினைக் காணமுடிகின்றது.
தொகுப்புரை
சான்றெண் விளக்கம்
மணிவாசகர் பதிப்பகம், சென்னை. 2006, ப. 22
முனைவர் ம. தமிழ்வாணன்
உலகில் செம்மொழிகளாகக் கருதப்படும் மொழிகளில் முதன்மையானது தமிழ். கிரேக்கம், இலத்தீன், சமற்கிருதம், சீனம், ஹீப்ரு போன்ற பிற செம்மொழிகளும் போற்றத்தக்கன. இருப்பினும் தமிழ்மொழியே தனித்துவம் மிக்கது. மிக நீண்ட காலத்திற்கு முன்பே தரப்படுத்தப்பட்டது. எந்தமொழியிலிருந்தும் கடன் வாங்காத வேர்ச்சொற்களின் வளமுடையது. எக்காலத்தும் உயிர்த்துடிப்புடைய இளமைக்குன்றாத இலக்கிய வளம் கொண்டது. தமிழ்மொழி உலகிற்கு அளித்தக் கொடைகள் ஏராளம் எனலாம். அந்த வகையில் தொல்காப்பியமும் சங்க இலக்கியமும் பேறுபெற்றுத் திகழ்கின்றன. பண்டைத் தமிழர் வாழ்க்கையை திணையின் அடிப்படையில் பிரித்துக் கொண்டனர். இவர்களிம் வாழ்வு அகம், புறம் சார்ந்த வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு விளங்கியதால் இவற்றைச் சார்ந்தே சங்க இலக்கியங்கள் தோன்றின. இத்தகைய சூழலில் அகத்தைப் பற்றிக் கூறும் அகநானூற்றில் பாலைத்திணைப் பாடல்கள் பற்றிச் சுருக்கமாக ஆராய்ந்து வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.
அகநானூறு
சங்க இலக்கியத்தில் பதினெண் மேல்கணக்கு நூல்களாகத் தொகுக்கப்பட்ட எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்கள் பொருள் வகையால் அகம், புறம், அகப்புறம் எனப் பகுக்கப்பட்டுள்ளன. இதில் எட்டுத்தொகை நூல்களுள் அகம் சார்ந்த நூலே அகநானூறாகும். இதற்கு அகம், அகப்பாட்டு, நெடுந்தொகை, பெருந்தொகை நானூறு போன்ற வேறுபெயர்களும் உண்டு. ஐங்குறுநூறு, குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, கலித்தொகை ஆகிய நூல்களில் பல பாடல்கள் பாலைத் திணையில் பாடப்பட்டுள்ளன. அகநானூற்றில் சரிபாதிப் பாடல்கள், அதாவது இருநூறு பாடல்கள் பாலைத் திணைப் பாடல்கள் ஆகும். இந்நூல் முப்பெரும் பிரிவுகளாகப் பிரிக்கபட்டிருக்கிறது. அவை:
என்பனவாகும். இப்பகுப்பினை,
“களித்த மும்மதக் களிற்றியானை நிரை
மணியொடு மிடைந்த அணிகினர் பவளம்
மேவிய நித்திலக் கோவை என்றாங்கு
அத்தகு பண்பின் முத்திறமாக
முன்னினர்த் தொடுத்த நன்னெடுந் தொகை”
என்று சிறப்புப் பாயிரம் சுட்டிக்காட்டுகிறது. இந்நூல் ஆசிரியப்பாவால் ஆன பாடல்களை உடையது. பாரதம் பாடிய பெருந்தேவனாரின் கடவுள் வாழ்த்துப் பாக்களுடன் 401 பாடல்களைக் கொண்டுள்ளது. மொத்தம் 145 புலவர்கள் பாடிய பாடல்கள் 13 அடி முதல் 31 அடிவரையுள்ள நெடிய பாடல்களாகும்.
திணையும் பாடலும்
அகநானூற்றைப் பொறுத்தவரை பாடலின் எண்ணைக் கொண்டு இன்ன திணைப்பாடல் எனச் சுட்டிக்காட்ட முடியும். அந்த வகையில் புலவரின் தொகுப்புத்திறனும் பகுப்புத்திறனும் பாராட்டிற்குரியன. இதனை,
“ஒன்றுமூன்று ஐந்து என்பதன் பாலை; ஓதாது
நின்றவற்றில் நான்கு நெறிமுல்லை – அன்றியே
ஆறாம் மருதம் அணிநெய்தல் ஐயிரண்டு
கூறாதவை குறிஞ்சிக் கூற்று”
என்னும் வெண்பாப் பாடல் எடுத்துக்காட்டுகிறது. அதன் திணைப் பகுப்பு விவரம் வருமாறு,
எண் அடிப்படையில் அகநானூற்றில் குறிப்பிட்டுள்ள திணைப் பாடல்களின் மொத்த எண்ணிக்கை வருமாறு,
பாலைத்திணைப் பாடல்கள் – 200
முல்லைத்திணைப் பாடல்கள் – 40
மருதத்திணைப் பாடல்கள் – 40
நெய்தல் திணைப்பாடல்கள் – 40
குறிஞ்சித்திணைப் பாடல்கள் – 80
தொகுத்தவர் – உப்பூரி குடிகிழார் மகனார் உருத்திரசன்மனார்
தொகுப்பித்தவர் – பாண்டியன் உக்கிரப்பெருவழுதி
பாயிரம் இயற்றியவர் – இடையல நாட்டு மணக்குடியான் பால்வண்ண தேவனான வில்ல தரையனார்.
கடவுள் வாழ்த்து – பாரதம் பாடிய பெருந்தேவனார்.
பாலைப் பாடிய புலவர்கள்
அகநானூற்றில் இடம்பெற்றுள்ள 200 பாலைத்திணைப் பாடல்களில் இரண்டினைப் பாடியோர் பெயர் தெரியவில்லை. எஞ்சியுள்ள 198 பாடல்களைப் பாடிய புலவர்களின் வரிசையைக் காண்போம். ஒரு புலவரால் பாடப்பட்ட 62 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. மூன்று பாடல்களைப் பாடியோர் மூவரும் இரண்டிரண்டு பாடல்களைப் பாடியோர் எண்மரும் நான்கு பாடல்களைப் பாடியோர் நால்வரும் இடம் பெற்றுள்ளனர். குடவாயிற் கீர்த்தனாரும் நக்கீரரும் தலா ஒன்பது பாடல்களைப் பாடியுள்ளனர். கல்லாடனார் எழு பாடல்களைப் பாடியுள்ளார். எயினந்தை மகனார் இளஞ்கீரனார் அவர்கள் ஒன்பது பாடல்களைப் பாடியிருக்கிறார். பாலை பாடிய பெருங்கடுங்கோ, கயமனார், மருத இளநாகன் போன்ற மூவரும் தலா 12 பாடல்களைப் பாடியுள்ளனர். சிறப்பிற்குரிய மாமூலனார் 27 பாடல்களைப் பாடியுள்ளார். இதில் பாலை பாடுவதில் வல்லவரான பெருங்கடுங்கோவை விட மாமூலனார் அகநானூற்றில் மிகுதியான பாடல்களைப் பாடியமை அறியத் தகுந்த செய்தியாகும்.
பாலைத் திணை
தொன்மை வாய்ந்த தொல்காப்பியத்தில் திணைகள் ஐந்தெனச் சுட்டப்பட்டுள்ளது. அகத்திணைகள் ஏழு என்று பகுத்துச் சொல்லும் தொல்காப்பியர் இடைநிற்கும் ஐந்து திணைகளை அன்பின் ஐந்திணை என்று கூறுகிறார்.
“நடுவண் ஐந்திணை நடுவணது வொழிய
படுதிரை வையம் பாத்திய பண்பே” (அகத்.2)
இதில் பாலைத்திணை நீங்கலாக நான்கு திணைகளுக்கு மட்டுமே நிலம் உண்டு.
பாலைத்திணை என்பது சுரமும் சுரஞ் சார்ந்த நிலமும் ஆகும். இதன் உரிப்பொருளாகப் பிரிதலும் பிரிதல் நிமித்தமும் திகழ்கிறது (அகத்.14). இத்தகைய பாலைத்திணைக்குரிய சிறுபொழுது, பெரும்பொழுது பற்றிக் குறிப்பிடும் தொல்காப்பியர்,
“நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு
முடிவுநிலை மருங்கின் முன்னிய நெறித்தே” (அகத்.9)
“பின்பனி தானும் உரித்தென மொழிப” (அகத்.10)
என்று சுட்டுவதைக் காணலாம். இதனால் வேனிற் காலத்துப் பெரும்பொழுதும் நண்பகளாகிய சிறுபொழுதொடு பின்பனிக்காலமும் பாலைக்குரிய பொழுதுகளாகும் என்பது பெறப்பட்டது. பாலை நிலம் என்பது நிலையானதல்ல என்பதை அறிஞர்கள் வலியுறுத்துகின்றனர். இக்கருத்தினைப் பற்றி இளங்கோவடிகள் ‘
“முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து
நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப்
பாலை என்பதோர் படிவம் கொள்ளும்” (சிலம்பு.64-66)
என்று சுட்டுவதைக் காணலாம்.
“முதல் கரு உரிப்பொருள் என்ற மூன்றே
நுவலுங்காலை முறைசிறந்தனவே
பாடலுள் பயின்றவை நாடும் காலை” (அகத்.3)
தொல்காப்பியத்தில் ஒவ்வொரு திணைக்கும் மூவகைப் பொருள்கள் இருப்பதை எடுத்துக் கூறுகிறார். அவை,
என்னும் பொருள்களாகும்.
பாலையின் முதற்பொருள்
பாலைத்திணையின் மணலாகிய (சுரவழி) முதற்பொருளை அகநானூற்றுப் பாடல்கள் வறண்ட நிலமாகவே காட்டுகின்றன. இந்நிலத்தை அடைசேர்த்தும் சேர்க்காமலும் அருஞ்சுரம் (பா.17,203,275) கோட்சுரம் (பா.27), சுரம் (பா.721,353), வியன்சுரம் (பா.361), வெஞ்சுரம் (பா.327,385) போன்ற சொற்களால் குறிப்பிடுகின்றனர்.
சூரிய கதிர்களால் நிலப்பகுதி வெப்பத்தைப் பெற்றுப் பாலை நிலமானதைக் “கோடை நீடிய அகன்பெருங் குன்றம்” (அகம்.45) என்னும் பாடலடி விளக்குகிறது. மேலும் நிழற்கவின் இழந்த நீர்இல் நீளிடை அழல்அவிர் அருஞ்சுரம் (அகம்.213). கவின் அழிந்த கனைகடற்று அருஞ்சுரம் (அகம்.325). ஓங்கல் வெற்பின் சுரம்பல இறந்தோர் (அகம்.267) என்னும் அடிகள் பாலைநிலம் பற்றி எடுத்துரைக்கின்றன.
கருவூர் நன்மார்பன், மலையும் மலைசார்ந்த இடமும் மிகுந்த வெப்பத்தின் தாக்குதலால் ஈரமற்றுச் சுரமாவதை “ஈரமில் வெஞ்சுரம்” (அகம்.277) என்கிறார். மாமூலனார் பாடிய,
“எரிகவர் உண்ட கரிபுறப் பெருநிலம்
பீடுகெழு மருங்கின் ஒடுமழை துறந்தென
ஊன்இல் யானை உயங்கும் வேனில்” (அகம்.233:3-5)
என்ற பாட்டினால், ‘குறிஞ்சி நிலத்தைத் தமக்குரிய வாழிடமாகக் கொண்டது யானை. அது நெருப்பினால் எரிந்து நாசமாகியதால் கரிந்த பெரிய நிலத்தில் வாழ்ந்தது. இங்குள்ள வெப்பத்திற்கு அஞ்சிய மேகங்கள் வேறிடத்திற்குச் சென்றமையால் அங்கு மழையில்லை. அதனால் அங்கு வாழ்ந்த யானை உணவின்றி மேலிந்து காணப்பட்டது’ என்னும் செய்தியை வெளிப்படுத்தி இருக்கிறார்.
பாலைத்திணைக்குரிய பெரும்பொழுதுகள் இரண்டு அவை இளவேனில், முதுவேனில் காலங்களாகும். பின்பனி காலமும் உரியது என்பதால் முக்காலங்கள் உரியன.
இளவேனிற்காலம் – சித்திரை, வைகாசி
முதுவேனிற்காலம் – ஆனி, ஆடி
பின்பனிக்காலம் – மாசி, பங்குனி
பண்டைக் காலத்தில் கோடை காலத்தை என்றூழ் என்றும் அழைப்பர். இதனை,
“என்றூழ் நின்ற புன்தலை வைப்பு” (அகம்.21:14)
“ஈந்து குருகு உருகும் என்றூழ் நீளிடை” (அகம்.55:2)
“எறிபருந்து உயவும் என்றூழ்” (அகம்.81:9)
என்னும் அடிகள் எடுத்துரைக்கின்றன. மேலும் வேனிற்காலத்தை யானர் வேனில் (அகம்.317) காமர் வேனில் (அகம்.341) என்றும் குறிப்பிடுவதைக் காணலாம்.
சேரமான் இளங்குட்டுவன், வேனிற் காலத்தில் இலைகள் உதிர்ந்து பின்னர்த் தடுத்துப் பூவோடு பொலிவாய் விளங்கும் இக்காலத்தில் கதிரவனின் வெப்பத்தால் காடு காய்ந்து கிடக்கும் அங்குப் பெருங்காற்று வீசி மூங்கிலைத் தாக்கும். அதனால் சிதறி விழுந்த தீப்பொறியின் நெருப்பால் பசுமை இழந்த மலை உச்சிகள் உடைய பயனற்ற சுரவழிகள் காணப்படுவதைச் சுட்டிச் செல்கிறார். பாலைத்திணைக்குரிய பின்பனிக் காலத்தை அற்சிரம் என்று குறிப்பிடுவதைக் காணமுடிகிறது. இதனை,
“அற்சிரம் நீங்கிய அழும்பத வேனில்” (அகம்.97:17)
“மழைகால் அற்சிரம் (அகம்.205:15)
“புகைநிற உருவின் அற்சிரம்” (அகம்.317:3)
என்னும் சொற்றொடரால் அறியலாம். வாடைக்காற்று கூதிர் காலத்திற்கும் முன்பனிக் காலத்திற்கும் உரியது. அந்தக் காற்று பிடாவினது இனிய மணத்தை எங்கும் பரவச் செய்யும். இக்காலத்தில் தோன்றுகின்ற பனியானது நம்மை வருத்துகிறது. இதனைக் கண்டு வருந்தாமல் இருக்க முடியுமா? எனத் தோழியிடம் தலைவி கூறினாள். இச்செய்தியைக் கருவூர்க் கலிங்கத்தார் பாடுகின்றார்.
“வண்டுவாய் திறக்கும் தண்டா நாற்றம்
கூதிர்அற் சிரத்து ஊதை தூற்ற
பனிஅலைக் கலங்கிய நெஞ்சம்” (அகம்.183:12-15)
கருப்பொருள்
கருப்பொருள் என்பது அந்தந்த நிலத்திற்குக் கருவால் அமைந்த பொருட்களைக் குறிக்கும். இக்கருப்பொருட்களாகத் தெய்வம், உணவு, விலங்கு, மரம், பறவை, பறை, தொழில், யாழ் என்பனவும் பிறவும் ஆகும். பிறவும் என்பதற்கு இளம்பூரணர் தனது உரையில் (அகத்.20 உரை) யாழின் பகுதிகளாகிய பண், நீர் போன்றவற்றையும் எடுத்துரைக்கிறார்.
பாலைத்திணைக்குரிய கருப்பொருள்களாகத் தெய்வம் – கொற்றவை. உணவு – ஆறலைத்தலான் வரும் பொருள். மா – வலியழிந்தயானையும், வலியழிந்த புலியும், வலி அழிந்த செந்நாயும். மரம் – பாலை, இருப்பை, கள்ளி, சூறை கொண்ட பாறையும். செய்தி – ஆறலைத்தல். பண் – பாலை பிறவும் என்றதனால் பூ – மராம்பூ. நீர் – அறுநீர்க் கூவலும் அறுநீர்ச் சுனையும் (அகம்.20 உரை) என இளம்பூரணர் குறிப்பிடுகிறார். இந்நிலத்திற்குரிய தெய்வமான கொற்றவையைக் குடவாயிற் கீரத்தனார் “கானமர் செல்வி” (அகம்.345) என்று கூறுவதைக் காணமுடிகிறது. நிலத் தலைவனை மீளி, விடலை, காளை, எனக் குறிப்பிடுவதை,
“மீளி மொய்ம்பொடு நிலன் எறியாக் குறுகி” (அகம்.93:18)
“மீளி உள்ளம் செலவு வலி உறுப்ப” (அகம்.373:7)
“வெள்வேல் விடலை” (அகம்.7:12)
“கூர்வேல் விடலை” (அகம்.315:14)
“திருந்துவேல் விடலை” (அகம்.195:2)
“வன்கண் காளை” (அகம்.263:9)
“வயக்களிற்று அன்ன காளை” (அகம்.55:5)
“கடுங்கண் காளை” (அகம்.321:12)
என்னும் அடிகள் எடுத்துரைக்கின்றன. பாலை நிலத்தினுடைய மக்கள் நீருக்காகக் கிணற்றை நம்பி இருந்தனர். அக்கிணறுகள் நீரற்றுக் காணப்பட்ட நிலையை, ஓலைக் கூவல் (அகம்.21) அகலிடம் குழித்த அகல்வாய்க் கூவல் (அகம்.295) என்னும் பாடலடிகள் விளக்குகின்றன.
மதுரை எழுத்தாளன் சேந்தன் பூதனின் பாட்டில், ‘யானை நீர்வேண்டித் துழாவித் பார்த்த கிணற்றினைத் தலைவன் ஆழமாகத் தோண்டினான். அதிலிருந்து குறைகுடமாக வெளிப்பட்ட உப்பிநீரைத் தலைவி குடித்தாள்’ (அகம்.207) என்று சொல்லப்பட்டுள்ளது.
பறை, மா
பாலை நில எயினர் அச்சத்தைப் பிறருக்கு மிகுதியாகத் தரும் துடி என்னும் தோற்கருவியைப் பயன்படுத்தினர். இதனை, உருள்துடி (அகம்.19) கடுந்துடி (அகம்.79) என்னும் சொற்கள் எடுத்துரைக்கின்றன. மதுரைக் காஞ்சியில் மறவர்கள் துடிகளை முழங்கியபடி வணிகக் கூட்டத்தோடு போரிட்டு வென்று பெறுதற்குரிய அணிகலன்களைப் பெற்றனர் (அகம்.89) என்று கூறப்பட்டுள்ளது. இம்மக்கள் பாலை யாழையும் பாலைப் பண்ணையும் பயன்படுத்தியதைத் தங்கால் பொற்கொல்லனார் (அகம்.335) பாடலின் மூலம் அறியலாம்.
விலங்குகளில் யானை, புலி, மான், புறா, பருந்து, எருவை, கழுகு போன்றவையும் தாவரங்களில் ஓமை, இரும்பை, குராம்பூ, மராம்பூ போன்றவையும் அகநானூற்றில் மிகுதியான இடங்களில் சொல்லப்பட்டுள்ளன. பாலைநில விலங்காக அறியப்படுவது செந்நாயாகும். இந்நாய் வன்மையான பற்களைக் கொண்டது. இதனை,
“வல்லையிற்றுச் செந்நாய்” (அகம்.53:6)
“திண்நிலை எயிற்ற செந்நாய்” (அகம்.199:9)
என்னும் அடிகளால் அறியலாம்.
உரிப்பொருள்
அந்தந்த திணைகளுக்கு உரிமையுள்ள தனிச்சிறப்பு, ஒழுக்கம் பற்றி எடுத்துரைப்பது. அதாவது பாலைக்குப் பிரிதலும் பிரிதல் நிமித்தமும் உரிப்பொருளாகும். இத்தகைய உரிப்பொருளை உணர்த்துவனவாகப் பாலைத்திணைப் பாடல்கள் அமைந்துள்ளன. அகநானூற்றில் இளங்கீரனார், ‘தலைவன் நாடிடையிட்டும் காடிடையிட்டும் நெடுந்தூரம் பிரிந்து செல்கிறான். அவனுடைய நெஞ்சமோ தலைவியைச் சூழ்ந்து கொண்டே இருக்கிறது’ என்கிறார். இச்செய்தியை,
“கடுங்குரல் குடிஞைய நெடும்பெரும் குன்றம்
எம்மொடு இறத்தலும் செல்லாய் பின்நின்று
ஒழியச் சூழ்ந்தனை ஆயின் தவிராது
செல்இனிச் சிறக்க நின்உள்ளம்” (அகம்.19:5-8)
என்னும் பாடல் வெளிப்படுத்துகிறது. மாமூலனார், ‘தலைவன் பொருளுக்காகக் கொடிய தன்மையுள்ள பாலை நிலத்தையும் வேற்றுமொழி பேசுகின்றோர் நாட்டையும் கடந்து சென்றுள்ள நிலையை,
“…………. நோன்சிலைத்
தொடையமை பகழித் துவன்றுநிலை வடுகர்
பிழியார் மகிழர் கழிசிறந்து ஆர்க்கும்
மொழிபெயர் தோம் இறந்தனர்” (அகம்.295:14-17)
என்னும் பாட்டினால் உணர்த்துகிறார். தலைவன் தலைவியை விட்டுப் பொருளுக்காக நெடுந்தூரம் பிரிந்து செல்வதை,
“………….. சேய் நாட்டுப்
பொலங்கல வெறுக்கை தருமார்” (அகம்.1:8-9)
வெம்முனை அருஞ்சுரம் நீந்தித் தம்வயின்
ஈண்டுவினை மருங்கின் மீண்டோர் மன்” (அகம்.103:10-11)
என்னும் பாடல்களும் உணர்த்தி நிற்கின்றன.
அகநானூற்றில் அதிகப் பாடல்களைக் கொண்ட திணை பாலைத்திணை என்பது அறியத்தகுந்தது. இந்நூலில் அமைந்துள்ள பாலைத்திணைப் பாடல்களில் முதற்பொருள். கருப்பொருள், உரிப்பொருள் ஆகிய மூன்றும் ஒருங்கே பயின்று வருவதை இக்கட்டுரையின் வாயிலாக அறியலாம். மேலும் அகநானூற்றுப் பாலைத்திணைப் பாடல்களை மிகுதியாகப் பாடியவர் மாமுலனாரே என்பதும் பொருள்வயின் பிரிந்து பொருளீட்டும் கடமை தலைவனுக்கே இருந்தது என்பதும் பாலைநில தமிழ் மக்களின் வாழ்வியல் நிலைகள் எவ்வாறு இருந்தன என்பதும் நன்கு வெளிப்பட்டு நிற்கின்றன.
துணைநூற்கள்
சங்க இலக்கியம் சங்க காலத் தமிழர்களின் வாழ்வியல் முறைகளையும் அவர்கள் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த வாழ்க்கை முறையினையும் எடுத்துரைக்கும் காலக் கண்ணாடியாகவும் அழியாச்சான்றாகவும் விளங்குகின்றது. பழந்தமிழர் வாழ்வில் இடம் பெற்ற காதல் , மறம், புகழ் ஆகிய மூன்றும் ஆராயப்பட்ட அளவிற்கு அறிவியல் செய்திகள் ஆராயப்படவில்லை. அவை அறிவியல் பூர்வமகாக ஆரயப்பட்டால் பழந்தமிழரின் ஆழமான அறிவியல் அறிவை அறிந்து கொள்ள முடியும்.
சங்க இலக்கியத்தில் தாவரங்கள் பற்றி ஆராய்ந்த அறிஞர் .பி.எல்.சாமி ‘’சங்க இலக்கியங்களில் செடி கொடி மரங்கள்’’ பற்றிப் பல செய்திகள் விளக்கப்படுகின்றன. அவை பெரும்பாலும் செடி நூலார் (Botanist) கண்டுபிடித்தவையோடு ஒத்திருக்கின்றன என்ற கூறுவார்.
தொல்காப்பியம் தமிழ் மொழிக்கு இலக்கணம் கூற வந்த நூலாயினும் அறிவியல், தத்துவம், மருத்துவம் ,வானவியல் ,சோதிடம், கணிதம் போன்ற கருத்துக்களை வெளியிடும் ஒரு நூலாகவும் அமைந்துள்ளது. மேலைநாட்டு அறிவியல் சிந்தனையாளர்களான தேல்ஸ் (கிமு 639-544), அனாக்ஸி மாண்டர் (611-547) ஷீனோபான்ஸ் (கிமு 576-480) எம்படோகில்ஸ் (கிமு 504-433) அரிஸ்டாட்டில் ( கிமு 384-322) போன்றோர் வெளியிடாத பல அறிவியல் கருத்துக்களைத் தனது இலக்கண நூலில் தொல்காப்பியர் விளக்கியுள்ளார். அவற்றை உயிரியல் சிந்தனைகள், மருத்துவச்சிந்தனைகள், சார்பியல் கோட்பாட்டுச்சிந்தனைகள், தகவல் தொடர்பியல் சிந்தனைகள், வானவியல் சிந்தனைகள் எனப் பிரிக்கலாம். உயிரினப்பாகுபாட்டை உலகில் முதன்முதலில் தொல்காப்பியர் பின்வருமாறு விளக்குகிறார்.
‘’ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறிவதுவே அதனொடு நாவே
மூன்றறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே
ஆறறி வதுவே அவற்றொடு மனனே’’
என்ற நூற்பாவால் (தொல்.., பொருள், மரபு, நூ.26-27 ) விளக்குகின்றார். உயிர்களின் பரிணாம வளர்ச்சியை உயிர்களின் உடம்பினோடும் அதனோடு இணைந்த மெய்,வாய், மூக்கு,கண்,செவி என்னும் ஐம்பொறிகளும், மனமும் ஆகிய ஆறுவகை வாயில்களையும் பெற்று அறிவினால் சிறந்து விளங்கும் இயல்பினை அறிவியல் நோக்கில் குறிப்பிட்டுள்ள தொல்காப்பியரின் திறம் போற்றத்தக்கது.
‘’செஞ்ஞாயிற்றுச் செலவும்
அஞ்ஞாயிற்றுப் பரிப்பும்
பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்
வளி திரிதரு திசையும்
வறிது நிலைஇய காயமும் என்றிவை
சென்றளந்து அறிந்தோர்போல என்றும்
இனைத்து என்போரு முளரே (புறம் 30.1-7)
செஞ்ஞாயிற்றின் வீதியும் அஞ்ஞாயிற்றின் இயக்கமும், அவ்வியக்கத்தால் சூழப்படும் பார்வட்டமும் காற்றியங்கும் திசையில் ஓர் ஆதாரமும் இன்றித் தானே நிற்கின்ற ஆகாயமும் ஆகிய இவற்றை அளந்து அறிந்தவர்களைப் போல நாளும் இத்துணையளவை உடையவென்று எடுத்துக்கூறும் கல்விடையோரும் இருந்தனர் என்ற அறிவியல் குறிப்பினை இப்பாடல் வெளிப்படுத்துகிறது.
சூரியக்குடும்பம்
சூரியக்குடும்பத்தின் ஒரு கிரகத்திலிருந்து வந்தவர்கள் தான் மக்கள் என்ற வானியல் அறிஞர்களின் கருத்திற்கு ஏற்றவாறு சங்க இலக்கியமான மதுரைக்காஞ்சியும் பின்வரும் பாடலில் கூறுகிறது.
‘’சென்ற காலமும் வரூஉம் அமயமும்
இன்று இவண் தோன்றிய ஒழுக்கமொடு நன்கு உணர்ந்து
வானமும் நிலனும் தாம் முழு துணரும்
சான்ற கொள்கைச்சாயா யாக்கை
ஆன்றடங் கறிஞர் செறிந்தனர்’’( மதுரை 477-481 )
பழங்காலத்தில் வாழ்ந்து வந்த சைனர் வானம் ஏறுதல், கடலில் நடத்தல் போன்ற அறிவியல் செயல்களைச் செய்வதில் திறம் பெற்றிருந்தனர் என்பதை குறுந்தொகை 130 –வது பாடல் விளக்குகிறது.
‘’நிலம் தொட்டுப் புகா அர்வானம் ஏறார் விலங்கிரு முந்நீர் காலிற் செல்லார்’’ என்ற பாடலில் தோழி தலைவியிடம் உன் தலைவன் நிலத்தில் புக மாட்டார் வானத்தில் ஏறார் கடலின் மீது நடவார் கவலைப்படாதே என்ற தேற்றுவதாக அறிவியல் செய்தி வருகின்றது.
வான வெளிப் பயணம்
வான வெளிப் பயணம் முன்னோர்கள் அறிந்திருந்த ஒன்றுதான் என்றாலும், இன்றைய காலகட்டத்தில் விமானிகளே இல்லாத விமானங்களை வானவெளியில் செலுத்தமுடியும் என்ற அளவிற்கு விஞ்ஞான வளர்ச்சி அடைந்துள்ளது இக்கருத்தினை
‘’ வலவன் ஏவா வானவூர்தி
எய்துப………….(புறம் பா 27)
என்ற பாடலில் உறையூர் முதுகண்ணன் சாத்தனார் குறிப்பிடுகின்றார். சிறந்த அரசர்கள் விண்ணில் பாகனால் செலுத்தப்படாத தானே இயங்குகின்ற திறன் வாய்ந்த வானவூர்தியில் சென்றனர்எ ன்ற குறிப்பின் வழி தமிழர்கள் விமான ஓட்டும் கலையில் வல்லவர்களாக இருந்தனர் என்பதை அறியமுடிகின்றது.
கணிதவியல் சிந்தனைகள்
வாழ்வியலோடு ஒட்டியதாகும் கணிதம். அதன் உதவியின்றி எதுவும் நடைபெறாது. இதை உணர்ந்தே
‘’எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு ( குறள் 392)
என்று வள்ளுவரும் கூறினார். ஔவையும்
‘’எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
நெய்தலும் குவளையும்ஆம்பலும் சங்கமும்
மைஇல் கமலமும் வெள்ளமும் (பரி 2.13-14) இப்பாடலில் எண் கணிதம் கூறப்பட்டுள்ளது.
கணக்கற்ற பல ஊழிகள் பல கோடி ஆண்டு காலத்தைக் குறிக்கின்றது. இதில் ஆம்பல் என்பது பழந்தமிழர் கணக்கிட்ட ஆயிரம் கோடி என்ற பேரியல் எண் வெள்ளம் என்பது கோடி கோடியைக் குறிக்கின்றது. கோடியை விடவும் பெரிய எண்களுக்கும் தமிழில் பெயர் இருப்பது தமிழரின் தனிச்சிறப்பை உணர்த்தும் குறிப்பாகும்.
மருத்துவச் சிந்தனைகள்
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பர். உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் நலமுடன் வாழ முடியும். நீர்வேட்கைத் தீர்க்கும் பொருட்டு அக்காலத்தில் மூவகை மருந்தாக நெல்லிமரம் பயன்பட்டது. நெடுந்தூரம் வந்த நீர்வேட்கை மிக்க புதியவர்கள் உயிரைப் போகாது தடுக்க நெல்லிக்காயை சுவைத்தனர். நீர்ச்சத்து நிறைந்த தாவரங்களுள் நெல்லிமரம் ஒன்றாகும்.
-கோட்கரம் நீந்தி
நெட்ஞ்சேண் வந்த நீர்நசை வம்பலர்
செல்லுயிர் நிறுத்த சிவைக்காய் நெல்லி (புறம் 271 5-7)
இந்நெல்லிக்கனியை நீண்ட நாள் உயிர்வாழும் பொருட்டு ஒளவைக்கு அதியமான் வழங்கினான் (புறம் 97)
மண்ணறிவியல் சிந்தனைகள்
பழந்தமிழர்கள் மண்ணின் தன்மையை நன்கு அறிந்திருந்தனர். நீர் வற்றாத வைகை ஆற்றில் காணப்படும் மணல் செம்பழுப்பு அல்லது கருப்பாக இருக்கும் . இம்மணல் பயிர் செய்வதற்கு ஏற்றதாக இருந்ததை
வரும்புனல் வையை வார்மணல் அகன்றுறைத்
திருமருதோங்கிய விரிமலர்க் காலின் ( அகம் 36.9-10)
இங்கு ஆற்று நீர் கொண்டு வந்த வெண் மணலின் தன்மையை அறிய முடிகிறது.
புவி வெப்பமடைதலும் பருவ மழை மாறுதலும்
புவி வெப்ப மாற்றத்தால் பாலை நிலம் பாதிக்கப்படுவதை பின்வருமாறு புறநானூறு பாடல் விளக்குகிறது.
கதிர் கையாக வாங்கி ஞாயிறு
பைதரப் பெறூதலின் பயங்கரந்து மாறி
விடிவாயப்பட்ட வியன்கண் மாநிலம் (அகம் 164.!-3)
என்ற பாடல் அடிகள் ஞாயிற்றின் கதிர்கள் ஈரத்தைக் கவர்ந்த்தையும் பசுமையற்ற நிலங்களில் வெடிப்புகள் ஏற்பட்டதையும் இலைகள் வாடிப்போய் உதிர்ந்ததையும் விளக்குகிறது.
நீர்க்கடிகாரம்
நல்ல காரியம் செய்வதற்கு முன் நேரத்தைப் பார்ப்பது உண்டு. சங்க காலத்தில் மன்னர்கள் போருக்குப் புறப்படுவதற்கு முன் நேரத்தைப் பார்ப்பதற்காக நாளிகைக் கணக்கர்கள் கோவில்களிலுள்ள கிடாரமாகிய நீர்க்கடிகாரத்தைக் கண்டு அதிலுள்ள நீரின் அளவைக் கொண்டு நாளிகையைக் கணக்கிட்டுக் கூறினர் என்பதை
‘’எறிநீர் வையகம் வெலீஇய செல்போய் நின்
குறு நீர்க்கன்னல் இனைத்து என்று இசைப்ப’’- (முல்லைப்பாட்டு 57-58)
இதே கருத்தை மாங்குடி மருதநாரும் குறிப்பிடுகின்றார்.
அக்கால மகளிர் நேரத்தை வட்டிலைக்கொண்டுதான் கணக்கிட்டனர்.
கதிரவனைக் கொண்டு அல்லது.
குறுநீர்க்கன்னல் எண்ணுநர் அல்லது
கதிர் மருங்கறியா தஞ்சு வரப்பா அய் (அகம் 43;6,7)
தலைவன் வரவுக்காகக் காத்திருக்கும் தலைவி தன்னிலையில் துயிலாமல் இருப்பவர்கள் யார் என்று எண்ணும் போது நாளிகை வட்டில் அவள் கண்முன் தோன்றுகிறது. இரவெல்லாம் துயிலாமல் நாளிகை வட்டிலையே கூர்ந்து நோக்கியிருப்பது போல நானும் தலைவன் வரவையே எதிர்பார்த்து இருக்கிறேன் என்பதை குறு 261 ஆம் பாடல் விளக்குகிறது.
‘’ அஞ்சு வருபொழுதினானும் என்கண்
துஞ்சா வாழி தோழி காவலர்
கணக்கு ஆய் வகையின் வருந்தி என
நெஞ்சு புண்ணுற்ற விழுமந்தானே’’ (குறு 261)
நியூட்டனின் விதி
‘’வேழம் வீழ்த்த விழுத் தொடைப் பகழி
ஆழல் புற்றத்து உடும்பில் செற்றும்
வல்வில் வேட்டம் வலம் படுத்து இருந்தோன்’’ (புறம் 152)
எய்த வில்லானது யானை , புலி, புள்ளிமான், பன்றி, உடும்பு போன்ற விலங்குகளை வீழ்த்திய வில்லின் வேகம் குறைந்து ஒன்றிலிருந்து மற்றொன்றைத் தாக்கி விசை நிலைப் பெற்றதாகக் கூறுமிடத்து நீயூட்டனின் விதி உணர்த்தப்படுகிறது.
ஆற்றின் வழியாக மிதந்து செல்லும் தெப்பமானது நீரின் விசையை மட்டும் பெற்றுச் செல்கிறது. இந்தத் தெப்பத்தினை வேறு எந்த விசையும் தாக்குவதில்லை. அதைப்போல வாழ்க்கை ஒரேச் சீராகச் செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தும் கீழ்கண்ட புறப்பாடலும் நீயூட்டனின் இரண்டாவது விதிக்குப் பொருந்தியுள்ளது.
‘’பேர்யாற்று
நீர்வழிப்படுஉம் புணைபோல் ஆருயிர்
முறைவழிப்படுஉம் என்பதும் ‘’ (புறம் 192 .8-10)
விண்மீன்கள் பற்றிய அறிவு
விண்மீன்கள் பற்றி அக்கால மக்களுக்கு ஆழ்ந்த அறிவு இருந்தது. வருணனைப் பாங்கில் விண்மீன்கள் தோன்றுதலை ‘’ வெள்ளி முளைத்தல் ‘’ என்றே சங்க இலக்கியங்கள் குறிப்பிடுவதை அறிகிறோம்.
‘’ வெள்ளி முளைத்த நள்ளிருள் விடிய ‘’ (பொரு – 72)
கண்ணுக்கு அழகுபட விளங்குவதன் காரணமாக விண்மீன்கள் தோன்றுவதை பூத்தல் என்று குறிப்பதும் இலக்கிய வழக்காக உள்ளது.
‘’ மீன் பூத்தன்ன உருவ ‘’ ( புறம் 21;4)
‘’வான்மீன் பல பூப்ப’’ ( புறம் 129;7)
விண்மீன்கள் அன்றன்று புதிதாக முளைப்பனவல்ல கதிரவனால் மறைக்கப்பட்டே பகலில் தோன்றாதுள்ளன என்ற அறிவியல் உண்மை அக்காலத்து மக்களுக்கு விளங்காமல் இல்லை.
விண்மீன்கள் என்பனவும்; நிலவும் சூரியனும் போல வானில் சுடர் விட்டுப் பிரகாசிப்பனவே ஆயினும் விண்மீன்களின் பிரகாசம் வேறுபடுகிறது. விட்டு விட்டுப் பிரகாசிப்பன அவை. அதனை காற்றில் அலைந்து அலைந்து எரியும் தீப்பந்தங்களுக்கு இலக்கியங்கள் ஒப்பிட்டுள்ளது பொருத்தமானதாகும்.இது பற்றியே இலக்கியங்கள் விண்மீன்கள் ஒளிவிடுவதை- இமைத்தல் என்றும் குறிக்கின்றன. ‘’ வானமின்னின் வயின் வயின் இமைக்கும்’’ (குறு 150; 2)
மின்னலிலிருந்து வேறுபடுத்துவதை அதனை மீன் என்றனர். மீன் பூத்தன்ன தோன்றலர் ( திரு 169)
‘’சிறுமீன் புரையும் கற்பின் ‘’(பொரு 303)
‘’கைம்மீன் புகையிலும் ‘’(புற 117 ;1)
‘’வடமீன் புரையும் கற்பின் ‘’ (புற 122 ;8)
‘’மீன்றிகழ் விசும்பின் ‘’ (புற 25;1)
பழந்தமிழ் இலக்கியங்களில் மீன் என்பது வானத்து மீனையும் வையத்துக் கயங்களின் மீனையும் குறித்து வருகின்ற இருபொருள் காரணமாக அழகிய வருணனைகள் விளங்குகின்றன. மின்னுகின்ற காரணத்தால் மீன் என்று விண்மீன் குறிக்கப்பட்டதோடன்றி வெள்ளொளி அதன் ஒளி ஆதலின் ஒளிநிறத்தை வைத்து வெள்ளி என்றும் வழங்கப்பட்டது.
’’வெள்ளிஏர்தர ‘’(புறம் 398;1)
‘’வெள்ளி ஓடினும் ‘’ (புறம் 117;2)
‘’இலங்கு கதிர் வெள்ளி’’( புறம் 35;7)
வானத்தில் சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் போன்ற கோள்களும் நட்சத்திரக் கூட்டங்களும் இவற்றுக்கெல்லாம் அப்பால் அழகிய மண்தளங்களும் உண்டு என்பது மாங்குடி மருதனாரின் அறிவியல் சிந்தனை
‘’ அங்கண்மால் விசும்பு புகையவளி போழ்ந்து (மதுரை 384)
பூமியிலிருந்து 200 மைல்களுக்கு மேலே காற்று மண்டலம் கிடையாது என்பதை புறப்பாடல் விளக்குகிறது ‘’வழியிடை வழங்கா வானஞ்சூடிய’’
சங்கப்புலவரின் பாடல்கலெல்லாம் அவர்களின் பட்டறிவே என்பதும் உள்ளதை உள்ளவாறே விளக்குவதும் அவர்களின் அறிவியல் சிந்தனையாகும். ஊர்வன. பறப்பன, நீர்வாழ்வன தாவர விலங்கு பற்றிய அறிவியல் சிந்தனைகளை உணர முடிகிறது.
உலகம் சுழல்கின்ற சுழற்சியை உலகம் தன் சுழற்சியினால் நல்ல இசையை உண்டாக்கும் தன்மை படைத்தது என்பதை ‘’மலையும் சோலையும் மாபுகழ் கானமும் தொலையா நல்லிசை உலகமொடு நிற்ப’’ என்கிறது மலைபடுகடாம் (170-171)
வானம் அளவிட முடியாததாகவும் காற்று நுழைந்து செல்லாத காற்றற்ற வெளியாகவும் விளங்குவதனை
‘’மயங்கிருங் கருவிய விசும்பு முகனாக
இயங்கிய இரு சுடர்
கண்ணெனப் பெயரிய ‘’ என்ற புறப்பாடல் விளக்குகின்றது (365)
நெம்புகோல், தராசு பற்றிய அறிவை புறம் 131 ஆம் பாடல் விளக்குகிறது. ஆய் என்ற வள்ளலை முடமோசியார் வட திசையில் மேரு மலைக்கு சமமாக ஆய் வள்ளலின் பெருங்குடி தென் திசையில் விளங்குவதால் தான் உலகம் ஒரு பக்கம் சரிந்து நிற்கிறது என்பதனை தராசு கோலுடன் உவமையாக விளக்குகிறார்.
குறிஞ்சிப்பூ பற்றிய விளக்கம்
குறிஞ்சி என்ற சொல்லின் விளக்கம் சங்கத்தொகை நூல்களில் 19 இடங்களில் இச்சொல் ஆளப்பட்டிருந்தாலும் இவற்றில் ஏழு இடங்உகளில் மட்டுமே குறிஞ்சி மலர் பற்றிய விளக்கம் இடம் பெறுவதாக பேராசிரியர் இர. குளோரியா சுந்தரமதி குறிப்பிடுகிறார்.
ஒரு மலைத்தலைவனது நாட்டைச் சிறப்பித்துகூறும் ஒரு தலைவி
‘’கருங்கோற் குறிஞ்சிப்பூக்கொண்டு
பெருந்தேனிழைக்கும் நாடனொடு நட்பே ’(குறு .3 )’
என்கிறாள்.
குறிஞ்சிப்பூவின் தேனை மிகவும் அரியதாக கருதியதை இப்பாடல் வரிகள் சுட்டுகின்றன. குறிஞ்சித்தேன் பிறத் தேனை விடச் சிறப்புடையது. பல்லாயிரக்கணக்கில் பூப்பதாலும் தேனீக்கள் நிறையத் தேனைத்தொடுக்க வாய்ப்புண்டாகிறது.பொதுவாகத் தேன் கூடுகளில் பல வகைப்பூக்களின் தேன் காணப்படும் . ஆனால் குறிஞ்சிப்பூக்களின் தேனால் இழைக்கப்படும் கூட்டில் பிற பூக்களின் தேன் கலப்பதில்லை ஏனெனில் குறிஞ்சி செடிப் பூக்க ஆரம்பித்தால் தேனீக்கள் குறிஞ்சித்தேனையே கூடுகளில் சேர்க்கின்றன. இத்தகைய தேனைத் தாவரவியல் அறிஞர்கள் தனிப்பூத் தேன்( Unifloral Honey ) என்று கூறுகின்றார்கள். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூப்பது ஆதலின் இதன் மலரில் சுரக்கும் தேன் அதாவது மலரின் செல்களில் உள்ளச் சாறு மிக முதிர்ந்து தேன் சுரப்பிகளின் வழியாக வெளிப்படுவது இனிதாக இருப்பதில் வியப்பில்லை.
முடிவுரை
சங்க இலக்கிம் ஒரு கடல். கற்பவருக்குப் பல்துறை அறிவு இருந்தாலன்றி சங்க இலக்கியத்தின் முழுப்பொருளையும் அறிதல் சற்றுக் கடினமே. கருங்கோர் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருத்தேன் இழைக்கும் நாடன் என்ற ஒரு குறுந்தொகைப்பாடலை விளங்கிக் கொள்வதற்கே சில துறை அறிவுகள் வேண்டும்.அறிவியல் ஆய்வு முறையில் சங்க இலக்கியத்தை ஆய்வு செய்து பொருளை வெளிக்கொணர்ந்தால் செம்மொழியின் செவ்வியல் இலக்கியங்களை உலகு உணர்ந்து பாராட்டும் என்பதில் ஐயமில்லை
பார்வை நூல்கள்
சங்க இலக்கியங்கள்
தமிழியல் புது நோக்கு ; முனைவர் ப. ஜெயகிருஷ்ணன்
தமிழ்ப்புதுக்கவிதைகளில் அறிவியல் ; முனைவர் க.முருகேசன்
அகநானூறு ஆய்வுக்கோவை ; குறிஞ்சிப்பதிப்பகம்
நற்றினை ஆய்வுக்கோவை : விழிச்சுடர் பதிப்பகம்
`
1937 ஆம் ஆண்டு சென்னையில் நடந்த பாரதீய சாகித்திய பரிஷத்தின் மாநாட்டில் மகாத்மா காந்தி அவர்கள் தலைமை வகித்தபோது உ.வே.சாமிநாதையர் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். அதைக் கேட்டு மகிழ்ந்த காந்தியடிகள் தமிழின் வடிவமாகவே இருக்கும் இவர்கள் திருவடியில் இருந்து தமிழ் பயில வேண்டுமென்ற ஆசை எனக்கு உண்டாகிறது. அந்த வாய்ப்பு எப்போது கிடைக்குமோ என்று சொன்னாராம். தமிழ் படித்த கற்றோரையும் மற்றோரையும் ஈர்த்தவர் உ.வே.சாமிநாதையர் அவர்கள். சங்க இலக்கியப் பதிப்பு முன்னோடியான இவர் அந்தக் காலத்தில் பி.ஏ. படித்த மாணவர்களுக்குப் பாடமாக இருந்த தமிழ்ப் பாட நூல்களுக்கு விளக்கவுரை எழுதியிருக்கிறார். புறநானூறு முதலான பாடத்திட்டப் பகுதிகளுக்கு மிக உன்னதமான விளக்கவுரை எழுதியிருக்கிறார். இதுவரை கவனம் பெறாத புறநானூறு பாடத்திட்ட விளக்கவுரை குறித்து இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.
I
இந்தியாவில் ஐரோப்பியர்களின் வருகைக்குப் பின்னர் அச்சுக்கலை தோன்றலாயிற்று. இதன்வழிப் பழம்பெருமை பொருந்திய இலக்கியங்கள் அச்சேறத் தொடங்கின. அச்சுக்கலை வந்தபிறகே நம் இலக்கிய வளம் நமக்குத் தெரியலாயிற்று.
“ஓலைச்சுவடிகளிலிருந்து நூல்களைப் பெயர்த்தெழுதி காகிதத்தில் அச்சிடும் அச்சுக்கலைப் பயிற்சி அயல்நாட்டவரின் தொடர்பில் நம் நாட்டிலும் ஏற்பட்டது. மரக்கட்டைகளில் எழுத்தைச் செதுக்கி அச்சிட்டதன் பின்னர் உலோகங்களில் வார்க்கப்பட்ட தனித்தனி எழுத்துக்களை அமைத்து அடுக்கி அச்சிடும் கலையும் இங்கு வளர்ச்சியுற்றது. எழுதாமல் பதிப்பிக்கும் இவ்வெழுத்தை ‘எழுதா எழுத்து’ என்றும் ‘தீட்டுதலிலா எழுத்து’ என்றும் நம் முன்னோர் குறித்தனர்” (இரா.மாதவன் 2000:69)
மேலை நாட்டாரின் வருகையினால் தோன்றிய அச்சியந்திர வசதிகளும் கல்வி மறுமலர்ச்சியும் புதிய நூலாக்கங்களுக்கு வழிவகுத்தன. இந்தக் காலக்கட்டத்தில் திருநெல்வேலி அம்பலவாண கவிராயர், அ.முத்துச்சாமிப்பிள்ளை, எல்லிஸ் துரை, புதுவை நயனப்ப முதலியார், முகவை இராமானுஜக்கவிராயர், களத்தூர் வேதகிரி முதலியார், மழவை மகாலிங்கர், தாண்டவ முதலியார், திருத்தணிகை சரவண பெருமாளையர், வேங்கடாசல முதலியார், சந்திரசேகர கவிராச பண்டிதர், திரிசிரபுரம் வி.கோவிந்தபிள்ளை, கொட்டையூர் சிவக்கொழுந்து, சி.எஸ்.சபாபதி முதலியார், யாழ்ப்பாணம் கோப்பாய் அம்பலவாண நாவலர், யாழ்ப்பாணம் வட்டுக்காட்டு அம்பலவாண நாவலர், யாழ்ப்பாணம் மன்னிப்பாய் அருணாசல சதாசிவம் பிள்ளை, இராசநல்லூர் இராமச்சந்திர கவிராயர், மகாவித்துவான் சி.மீனாட்சி சுந்தரம்பிள்ளை, நல்லூர் க. ஆறுமுகநாவலர், இராமலிங்க அடிகளார், எச்.ஏ.கிருஷ்ணபிள்ளை, சோடாவதானம் வ.சுப்பராய செட்டியார், கோமளபுரம் இராசகோபாலபிள்ளை, கு.கதிரைவேற்பிள்ளை, புதுவை சவராயலு நாயகர், பொன்னம்பல சுவாமிகள், தொழுவூர் செ.வேலாயுதமுதலியார், காயல்பட்டினம் செய்து அப்துல் காதிறு நயினார் லெப்பை ஆலிம், யாழ்ப்பாணம் புலோலியூர் நா.கதிரைவேற்பிள்ளை, சபாபதி நாவலர், குமாரசுவாமிப்புலவர், வயித்தியலிங்கம்பிள்ளை, முத்துப்பிள்ளைப் புலவர், த.கனகசுந்தரம்பிள்ளை, திருமயிலை சண்முகம்பிள்ளை, அ.நாராயண அய்யங்கார், பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், நாகலிங்க முனிவர், சோழவந்தான் அரசஞ்சண்முகனார், இரா.இராகவையங்கார், மு.சி.பூர்ணலிங்கம்பிள்ளை, வை.தாமோதரம்பிள்ளை, ச.பவானந்தம்பிள்ளை, நமச்சிவாய முதலியார் போன்ற பலரும் உ.வே.சாவிற்கு முன்பாகவே பல தமிழ் நூல்களைப் பதிப்பித்துள்ளனர். 1918க்குள் சங்க இலக்கியங்கள் முழுமையாகப் பதிப்பிக்கப்பட்டன.
| 1851 | திருமுருகாற்றுப்படை | – | ஆறுமுகநாவலர் |
| 1887 | கலித்தொகை | – | சி.வை.தாமோதரம்பிள்ளை |
| 1889 | பத்துப்பாட்டு | – | உ.வே.சாமிநாதையர் |
| 1894 | புறநானூறு | – | உ.வே.சாமிநாதையர் |
| 1903 | ஐங்குறுநூறு | – | உ.வே.சாமிநாதையர் |
| 1903 | முல்லைப்பாட்டு | – | மறைமலையடிகள் |
| 1904 | பதிற்றுப்பத்து | – | உ.வே.சாமிநாதையர் |
| 1904 | பட்டினப்பாலை | – | மறைமலையடிகள் |
| 1907 | பொருநராற்றுப்படை | – | வா.மகாதேவமுதலியார் |
| 1915 | குறுந்தொகை | – | சௌரிப்பெருமாள் அரங்கனார் |
| 1915 | நற்றிணை | – | பின்னத்தூர் நாராயண அய்யர் |
| 1918 | பரிபாடல் | – | உ.வே.சாமிநாதையர் |
| 1918 | அகநானூறு | – | ரா.இராகவையங்கார் |
“இவற்றைத் தொடர்ந்து சங்க இலக்கியங்களுக்குப் பல்வேறு வகையில் நூல்கள் எழுந்தன. பழைய உரைகளைப் பதிப்பித்தனர். புத்துரைகளும் விளக்கவுரைகளும் எளிய உரைகளும் எனப் பொதுமக்கள் எளிதில் படித்துணர்ந்து கொள்ளுமாறு பல பதிப்பு வகைகள் தோன்றின. ஒவ்வொரு நூலுக்கும் திறனாய்வு நோக்கிலும் பல நூல்கள் எழுந்தன. அறிஞர்கள் எளிமையான விளக்கங்களுடன் சங்க இலக்கியத்தை மக்கட்கு அறிமுகம் செய்தமை பெரிதும் குறிப்பிடத்தக்கது” (இ.சுந்தரமூர்த்தி, 2005:70)
உ.வே.சாமிநாதர் அவர்களால் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பத்துப்பாட்டின் முதற்பதிப்பும் (1889) புறநானூற்றின் முதற்பதிப்பும் (1894) கொண்டுவரப்பட்டது. இவற்றைத் தொடர்ந்து இருபதாம் நூற்றாண்டின் முதற் பத்தாண்டிலேயே ஐங்குறுநூற்றின் முதல் பதிப்பும் (1903) பதிற்றுப்பத்தின் முதற்பதிப்பும் (1904) பதிப்புப்பெற்று நூல் உருவம் பெற்றன. பதினேழு ஆண்டுகளில் பத்துப்பாட்டையும் எட்டுத்தொகை நூல்களில் மூன்றையும் உ.வே.சாமிநாதையர் அவர்கள் பதிப்பித்துள்ளார்.
“கால வரிசைப்படி உ.வே.சாமிநாதையர் அவர்களின் பதிப்புகளை ஒழுங்குபடுத்தும் போது பதிப்புகளின் முறை இவ்வாறு அமைகிறது.
பத்துப்பாட்டு 1889 (1918, 1931, 1950, 1956, 1961, 1974)
புறநானூறு 1894 (1923, 1935, 1950, 1956, 1963, 1971)
ஐங்குறுநூறு 1903 (1920, 1944, 1949, 1957)
பதிற்றுப்பத்து 1904 (1920, 1944, 1945, 1949)
பரிபாடல் 1918 (1935)
குறுந்தொகை 1937 (1947, 1955, 1962)” (குளோரியா சுந்தரமதி, 1984:8)
உ.வே.சாமிநாதையர் பழந்தமிழ் நூல்களைப் பதிப்பித்து வெளியிட்ட காலகட்டத்தில் மூன்று வகைகளாக பதிப்பு நெறிமுறைகளைக் கையாண்டார். 1. பழைய உரைகளோடு குறிப்புக்களைப் பதிப்பிப்பது. 2. புதிய உரையோடு பதிப்பிப்பது. 3. உரை இல்லாமல் மூலம் மட்டும் பதிப்பிப்பது. இந்த மூன்று பதிப்பு நெறிமுறைகள் அவரின் காலத்தில் இருந்தது. மூன்று நெறிமுறைகளைக் கையாண்ட பெருமை உ.வே.சாமிநாதையர் அவர்களையே சாரும். இக்காலக்கட்டத்தில் பல நூல்கள் மறுபதிப்புக் கண்டன. உ.வே.சாமிநாதையர் அவர்களும் தாம் பதிப்பித்த நூல்களைச் செம்மையுற மறுபதிப்பு செய்கிறார்.
புறநானூற்றின் இரண்டாம் பாடலின் மூலம் திணைக்குறிப்பு, பாடினோர், பாடப்பெற்றோர் பெயர்கள் இவற்றைத் திருத்தமுற அமைத்த முறையைக் குறிப்பிடுகிறார். மேலும் ஒப்புமைப்பகுதிகள் மேற்கோள் விளக்கங்கள் தேவையான குறிப்புரைகள் இணைவுற்றதையும் எடுத்துரைக்கிறார்.
“உ.வே.சா. அவர்களைப் பொறுத்த அளவில் ஒரு நூலின் அடுத்த என்பது திருந்திய பதிப்பு. பதிப்புக்கலையின் நுட்பங்கள் முன்னைப் பதிப்பிலும் செறிவுற்றமையும் பதிப்பு” (சொல் விளங்கும் பெருமாள், 1981)
எனவே மறுபதிப்பு செய்கின்ற வேளையில் தீவிரத்தன்மையுடன் கூடிய பதிப்புநெறிகளைக் கையாண்டு பதிப்பித்தார் உ.வே.சா.
II
நூல்களுக்கு உரை எழுதாமல் வாயால் விளக்கிச் செவியால் அறிந்து கொள்ளும் காலக்கட்டம் இருந்தது. பலமுறை வாய்மொழி வழியாக வழங்கிவந்த உரைகளே பிற்காலத்தில் உரைகளாக எழுந்தன. உரையின் வளர்ச்சி என்பது.
“மூலபாடம் சொல்லல், கருத்துரைத்தல், சொல் வருவித்தல், சொற்பொருள் உரைத்தல், பொழிப்புரைத்தல், உதாரணங்காட்டல், விரிவுகாட்டல், அதிகார வரவு காட்டல், பணிவுகூறல், பயனொடெடுத்தல், ஆசிரிய வசனம் காட்டல் என்று பல வகைகளாக விரிந்தது என்பதை மயிலைநாதர் உரையால் அறியமுடிகிறது.” (இ.சுந்தரமூர்த்தி 2005:74)
சங்க இலக்கியங்களைப் பதிப்பிக்கத் தொடங்கியவர்கள் மூலத்தோடு சொந்தமாக எழுதிய உரையைப் பதிப்பித்தனர். ஆனால் உ.வே.சாமிநாதையர் அவர்கள் பழைய உரைகளோடு பெரும்பாலும் சங்க இலக்கியத்தைப் பதிப்பித்தார். ஐங்குறுநூற்றின் இரண்டாம் பதிப்பில் பழைய உரை குறித்தும் தமது உரை முயற்சி குறித்தும் குறிப்பிடும்போது ‘பழைய உரையில்லாத செய்யுள்களுக்கு உள்ளுறையுவமம் முதலியவற்றைப் புலப்படுத்தி ஏதோ ஒரு வகையாக உரை எழுதி இத்துடன் பதிப்பிக்கலாம் என்ற விருப்பம் சில சமயம் எனக்கு நிகழ்ந்ததுண்டு. நிகழ்ந்தும் இந்நூலையும் இவ்வுரையையும் உற்று நோக்க அவ்விருப்பம் அடியோடே மாறிவிட்டது. இந்நூல் முழுமைக்கும் நான் எழுதி வைத்த அரும்பதிவுரையை இத்துடன் பதியாமைக்கு காரணம் இதுவே எனக் குறிப்பிட்டுள்ளார்.’
“இப்பகுதி பழைய நூல் உரைகள் குறித்து உ.வே.சா. அவர்கள் கொண்டிருந்த பெருமதிப்பையும் தாமாக உரை எழுதும் வன்மை பெற்றிருந்தும் தன்னடக்கம் காரணமாக தன் நிறை காணாது குறையையே எண்ணும் தகைமையையும் காட்டுகின்றது. உ.வே.சா. அவர்கள் பதிப்பித்த சங்கத் தொகை நூல்களில் இத்தகைய பழைய உரை எதனையும் பெறாது அமைந்த நூல் குறுந்தொகை ஒன்றே. சங்க இலக்கியப் பதிப்பு வரிசையில் இறுதியாக அமையும் இந்நூலுக்கு மட்டுமே உ.வே.சா. அவர்கள் பதவுரை, விசேடஉரை, மேற்கோள் விளக்கம், ஒப்புமைப்பகுதி ஆகியவற்றை வழங்கியுள்ளார். பிறவற்றிற்குக் குறிப்புரை மட்டுமே பொருந்துகின்றது.” (குளோரியா சுந்தரமதி, 1984:34)
பாடநூலாய்ப் புறநானூறு (பா.101-125) அன்றைய காலத்தில் (1911) பி.ஏ. மாணவர்களுக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்தப் பாடல்களுக்குப் பதவுரையும் விளக்கவுரையும் ஒப்புமைப் பகுதியும் உ.வே.சாமிநாதையர் அவர்கள் எழுதியுள்ளார். இது புதுமையானதாகும். டாக்டர் உ.வே.சாமிநாதையர் அவர்கள் புறநானூற்றைப் பதிப்பித்தது அதாவது முதல் பதிப்பு 1894. இரண்டாம் பதிப்பு 1923 அதனைத் தொடர்ந்து பல பதிப்புகள் வருகின்றன. இந்தப் புறநானூற்றுப் பதிப்பிற்குக் குறிப்புரை மட்டுமே தருகிறார். புறநானூறின் முதல் பதிப்பிற்கும் (1834) இரண்டாம் பதிப்பிற்கும் (1923) இடையே பி.ஏ. மாணவர்களுக்குப் பாடமாக (1911) இருந்த புறநானூறு 101 முதல் 125 பாடல்களுக்குச் சிறந்ததொரு பதவுரையும் விளக்கவுரையும் தருகிறார். இந்த உரை குறித்து யாரும் பேசவில்லை.
இந்நூலில் முகவுரை, பாடினோர் வரலாறு, பாடப்பட்டோர் வரலாறு, புறநானூறு மூலம் உரையும் [க0க – கஉரு] திணை விளக்கம், துறை விளக்கம், பிரயோக விளக்கம் போன்றவற்றைத் தந்துள்ளார். மேலும் சொல் பிரிப்பு, பதவுரை, விசேடவுரை, சொற்பொருள நிரை, சொற்பொருள் மயக்கம் தவிர்த்தல், ஒருசொல்லுக்குப் பல பொருள் பயிலும் நிலையை எடுத்துரைத்தல், உரையாசிரியர்கள் வழிநின்று சொற்பொருள் வரையறுத்தல், உரையாசிரியர் தரும் பொருள் விளக்கங்களை எடுத்துரைத்தல், சொற்களின் வடிவம் பற்றிய சிந்தனை, சொல்தேர்ச்சி, இலக்கணம், பிரதிபேதங்கள், விசேட உரையும் குறிப்புரையும், ஒப்புமைப் பகுதி போன்றவறறைத் தருகின்றார்.
உ.வே.சாமிநாதையர் பாடலின் உரையை நான்கு பகுதிகளில் வகைப்படுத்தித் தருகிறார். அவை 1. பதவுரை 2. முடிவு 3. கருத்து 4. விசேடவுரை என்பனவாகும்.
பதவுரை என்பது பாடலின் கட்டுக்கோப்பில் சொற்களையும் தொடர்களையும் நிறுத்திக்கொண்டு பொருள் காண்பது. இது கவிதை மொழியின் செறிவமைப்பை இனங்காட்டி நிற்கும். புறநானூறு 102 ஆம் பாடல்
“எருதே யிளைய நுகமுண ராவே
சகடம் பண்டம் பெரிதுபெய் தன்றே
யவலிழியினு மிசை யேறினு
மவண தறியுநர் யாரென வுமணர்
கீழ்மரத் தியாத்த சேமவச் சன்ன
விசைவிளங்கு கவிகை நெடியோய் திங்க
ணாணிறை மதியத் தனையையிருள்
யாவண தோநின் னிழல்வாழ் வோர்க்கே”
பதவுரை
இளைய எருது நுகம் உணரா – இளைய எருதுகளானவை நுகம்பூணுதலை மதியா; சகடம் பண்டம் பெரிது பெய்தன்றே – வண்டியானது உப்பாகிய பண்டம் பெரிதாக இடப்பட்டது; ஆதலால் அவல் இழியினும் – அவ்வண்டி பள்ளத்தே இறங்கினாலும்; மிசை ஏறினும் – மேட்டிலே ஏறினாலும்; அவணது அறியுநர்யார் என – அவ்விடத்து வரும் இடையூற்றை அறிவார் யார்தா னென்று நினைத்து, உமணர் கீழ்மரத்து யாத்த – உப்பு வணிகர் அச்சுமரத்தின் கண்ணே அடுத்துக் கட்டப்பட்ட; சேம அச்சு அன்ன – சேமவச்சுப்போன்ற; இசை விளங்கு கவிகை நெடியோய் – புகழ் விளங்கிய இடக்கவிந்த கையையுடைய உயர்ந்தோய்! திங்கள் நாள் நிறை மதியத்து அனையை – நீ திங்களாகிய நாள் நிறைந்த மதியத்தை யொப்பை; ஆகலின், நின் நிழல் வாழ்வோர்க்கு இருள் யாவணது – நின்னிழற்கண் வாழுமவர்களுக்குத் துன்பமாகிய இருள் எவ்விடத்துள்ளது.
இந்தப் பாடல் அமைப்பில் முன்னும் பின்னும் இடம்பெயர்ந்து அமையும் தொடரைப் பொருள் கொள்வதற்கு வாய்ப்பாக உரை அமைப்பில் இரண்டு இடங்களை ஒழுங்குபடுத்தியுள்ளார்.
வாக்கிய நிலையிலும் தொடர்நிலையிலும் அமையும் இடமாற்றங்கள் ஒழுங்குபடுத்தப்பெற்றுப் பாடல் தொடரைப் பொருள் கொள்ள வசதியாக அமைத்துக்கொள்ளுதலைப் பதவுரையின் முதல்படிநிலையாகக் கொள்ளலாம்.
அடுத்த படிநிலைகளாகச் சொற்களைத் தனித்தனியாக எளிதில் புரிந்து கொள்ளும்படி பிரித்துக்கொள்ளும் உயிரும் உயிரும், மெய்யும் உயிரும் உற்ற சந்திமாற்றங்கள் அல்லது திரிபுகள் நீக்கப்பட்டுச் சொற்கள் தனிப்படுத்தப்படுகின்றன. இதன்விளைவாக
“ஒருதலைப் பதலை தூங்க வொருதலைத்
தூம்பாகச் சிறுமுழாத் தூங்கத் தூக்கித்”
என்ற செய்யுளடிகள்
“ஒருதலை பதலை தூங்க ஒருதலை
தூம்பு அகம் சிறுமுழா தூங்க தூக்கி” (க0ங.1-2)
என்ற சொற்களின் தொகுதியாக மாற்றப்படுகின்றன.‘
இசைநிறைக்காக அமைந்த பொருளுள்ள சொற்கள் (அசைகள்) விடப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக வாழ்கவன்தாளே (ஏ), (க0ங) என்பதில் அமைந்த ஏகாரம் பதவுரையில் இடம்பெறவில்லை.
முடிவும் கருத்தும்
முடிவு என்ற பகுதியில் உ.வே.சாமிநாதையர் அவர்கள் வழங்குவது பாடலின் வினைமுடிவு. பாடலில் பொருந்தும் அடிப்படையான தொடரமைப்பு. கருத்து என்ற பகுதியில் அவர் வழங்குவது பாடலின் கருத்து. பாடலில் பொருந்தும் தொடர் அமைப்பும் அதன் கருத்தும் இரண்டு எல்லைகள்.
“சங்கப் பாடல்களைப் புரிந்துகொள்வதற்கு-பயிலுவதற்கும் பயிற்றுவிப்பதற்கும் பாடலிற் செறிந்தமைந்த அடைகளைக் கோத்துச் செல்லும் பாடலின் அடிப்படையான தொடரை உணர்ந்து கொள்வது முதற்படி. பாடலின் அடிப்படைத் தொடரை எடுத்து வழங்கும் நிலை பழைய உரையாசிரியர்களிடம் அமைந்த உரைநெறிகளில் ஒன்று. இதனையே உ.வே.சாமிநாதையர் அவர்கள் தமது முடிவு என்ற பகுதியில் அமைத்துள்ளார்.” (குளோரியா சுந்தரமதி, 1984:44)
புறநானூறு க0ங பாடலில் பதலையென்பது – ஒருதலையுடையதொரு தோற்கருவி. பகைப்புலத்தோனென்ற கருத்து. பகைவர்பால் திறைகொண்ட பொருளுடையனாதலின் நீவேண்டியவெல்லாந்தருதல். அவனுக்கு எளிதென்பதாம். சேணோனல்லனென்பதற்கு – பரிசில் நீட்டிப்பானல்லனென்று உரைப்பினுமமையும் என்று கூறியுள்ளார்.
விசேடவுரை
உ.வே.சாமிநாதையர் அவர்கள் விசேடவுரையில் சொற்பொருள் நிலை, சொற்பொருள் மயக்கம் தவிர்த்தல், உரையாசிரியர் வழிநின்று சொற்பொருள் வரையறுத்தல், உரையாசிரியர் தரும் பொருள் விளக்கங்களைத் தருதல், சொற்களின் வடிவம் பற்றிய சிந்தனை, அளபெடை, உவமை முதலிய அணிகள் எனப் பலவற்றைத் தருகிறார். எடுத்துக்காட்டாக“கா-தேற்சுமை, ஒருதலை-ஒருபக்கம், தூங்க – தொங்க, அகம் – உள், முழா – மத்தளம், பரிசு – விதம், மண்டை – ஏற்கும் பாத்திரம், மலர்த்தல் – வாய் மேலாகப் பிடிக்கச் செய்தல், விறலி – விளிப்பெயர் – விறல் படப்பாடியாடுபவளென்பது பொருள். சேய்மை – தொலைவு, முனைப்புலம் – பகைவருறையுமிடம். (ங)
இதற்கடுத்த நிலையில் பல செய்திகளைப் எழுதியுள்ளார். இந்தப் படிநிலையில் வரிசையில் ஒவ்வொரு பாடலையும் அமைத்துள்ளார்.
நூலின் இறுதியில் இந்தப் பகுதியில் (பாடப்பகுதி புறம்.101-125) வந்துள்ள துறைகளுக்குச் சுருக்கமான விளக்கத்தைத் தருகிறார். அரசவாகை, இயல்மொழி, கையறுநிலை, பரிசில்கடாநிலை, பொருண்மொழிக்காஞ்சி, மகண்மறுத்தல், விறலியாற்றுப்படை. இதற்கடுத்த நிலையில் இப்புறநானூற்றுப்பபாடல்கள் இலக்கிய-இலக்கண நூல்களில் இடம்பெற்றுள்ள இடங்களைக் குறிப்பிடுகிறார்.
முடிவுரை
இந்தப் பாடத்திட்ட உரையில் ஏராளமான நுட்பமான விளக்கங்களைத் தந்துள்ளார். மேற்கோள் நூல்கள் பலவற்றை எடுத்துத் தருவதோடு, உரையாசிரியர்கள் கருத்துக்களையும் தந்து செல்கிறார். உ.வே.சாமிநாதையர் அவர்கள் தாம் உரை வகுத்த குறுந்தொகைக்கு மட்டுமே விசேடவுரை வழங்கியுள்ளார். ஏனைய நூல்களுக்குப் பழைய உரை அமைந்துள்ளமையால் குறிப்புரை மட்டுமே வழங்கியுள்ளார். இக்குறிப்புரையின் வளர்ச்சிநிலையே இப்பாடலுக்கான மேற்கோள் காட்டித் தன் புலமையை வெளிப்படுத்துகிறார். பழைய நூல்களை எவ்வாறு அணுகுவது என்பதனை இவ்வுரையின்வழித் தெளியமுடிகிறது. பாடநூலாக இருக்கும் நூலுக்கு எதையாவது சொல்லிவிடலாம் என்று இல்லாமல் தெளிவாகப் பதவுரை, விளக்கவுரை, இலக்கண விளக்கம், ஒப்புமைப் பகுதி, மேற்கோள் விளக்கம், பிரதிபாடம், பாடினோர், பாடப்பட்டோர் வரலாறு, உவமை நயம் போன்ற பலவற்றை மிகச்சிறப்பாக எடுத்தியம்புகிறார். இரண்டு விசயங்களை நாம் கவனிக்கவேண்டியது 1.ஆங்கிலேயர்கள் தமிழ்ப்பாட நூல்களுக்குக் கொடுத்த முக்கியத்துவம். மற்றொன்று ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் இருந்த பாடத்திட்ட அமைப்பு முறை குறித்தானது. இது குறித்துத் தனியே ஆராய வேண்டும்.
குறிப்புகள்