கவனம் பெறாத உ.வே.சா. வின் பாடத்திட்ட விளக்கவுரை

0

கவனம் பெறாத உ.வே.சா.வின் பாடத்திட்ட விளக்கவுரை

முனைவர் இரா.வெங்கடேசன் , இணைப்பேராசிரியர், இந்திய மொழிகள் மற்றும்  ஒப்பிலக்கியப் பள்ளி , தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் – 10.

1937 ஆம் ஆண்டு சென்னையில் நடந்த பாரதீய சாகித்திய பரிஷத்தின் மாநாட்டில் மகாத்மா காந்தி அவர்கள் தலைமை வகித்தபோது உ.வே.சாமிநாதையர் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். அதைக் கேட்டு மகிழ்ந்த காந்தியடிகள் தமிழின் வடிவமாகவே இருக்கும் இவர்கள் திருவடியில் இருந்து தமிழ் பயில வேண்டுமென்ற ஆசை எனக்கு உண்டாகிறது. அந்த வாய்ப்பு எப்போது கிடைக்குமோ என்று சொன்னாராம். தமிழ் படித்த கற்றோரையும் மற்றோரையும் ஈர்த்தவர் உ.வே.சாமிநாதையர் அவர்கள். சங்க இலக்கியப் பதிப்பு முன்னோடியான இவர் அந்தக் காலத்தில் பி.ஏ. படித்த மாணவர்களுக்குப் பாடமாக இருந்த தமிழ்ப் பாட நூல்களுக்கு விளக்கவுரை எழுதியிருக்கிறார். புறநானூறு முதலான பாடத்திட்டப் பகுதிகளுக்கு மிக உன்னதமான விளக்கவுரை எழுதியிருக்கிறார். இதுவரை கவனம் பெறாத புறநானூறு பாடத்திட்ட விளக்கவுரை குறித்து இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.

I

இந்தியாவில் ஐரோப்பியர்களின் வருகைக்குப் பின்னர் அச்சுக்கலை தோன்றலாயிற்று. இதன்வழிப் பழம்பெருமை பொருந்திய இலக்கியங்கள் அச்சேறத் தொடங்கின. அச்சுக்கலை வந்தபிறகே நம் இலக்கிய வளம் நமக்குத் தெரியலாயிற்று.

“ஓலைச்சுவடிகளிலிருந்து நூல்களைப் பெயர்த்தெழுதி காகிதத்தில் அச்சிடும் அச்சுக்கலைப் பயிற்சி அயல்நாட்டவரின் தொடர்பில் நம் நாட்டிலும் ஏற்பட்டது. மரக்கட்டைகளில் எழுத்தைச் செதுக்கி அச்சிட்டதன் பின்னர் உலோகங்களில் வார்க்கப்பட்ட தனித்தனி எழுத்துக்களை அமைத்து அடுக்கி அச்சிடும் கலையும் இங்கு வளர்ச்சியுற்றது. எழுதாமல் பதிப்பிக்கும் இவ்வெழுத்தை ‘எழுதா எழுத்து’ என்றும் ‘தீட்டுதலிலா எழுத்து’ என்றும் நம் முன்னோர் குறித்தனர்” (இரா.மாதவன் 2000:69)

மேலை நாட்டாரின் வருகையினால் தோன்றிய அச்சியந்திர வசதிகளும் கல்வி மறுமலர்ச்சியும் புதிய நூலாக்கங்களுக்கு வழிவகுத்தன. இந்தக் காலக்கட்டத்தில் திருநெல்வேலி அம்பலவாண கவிராயர், அ.முத்துச்சாமிப்பிள்ளை, எல்லிஸ் துரை, புதுவை நயனப்ப முதலியார், முகவை இராமானுஜக்கவிராயர், களத்தூர் வேதகிரி முதலியார், மழவை மகாலிங்கர், தாண்டவ முதலியார், திருத்தணிகை சரவண பெருமாளையர், வேங்கடாசல முதலியார், சந்திரசேகர கவிராச பண்டிதர், திரிசிரபுரம் வி.கோவிந்தபிள்ளை, கொட்டையூர் சிவக்கொழுந்து, சி.எஸ்.சபாபதி முதலியார், யாழ்ப்பாணம் கோப்பாய் அம்பலவாண நாவலர், யாழ்ப்பாணம் வட்டுக்காட்டு அம்பலவாண நாவலர், யாழ்ப்பாணம் மன்னிப்பாய் அருணாசல சதாசிவம் பிள்ளை, இராசநல்லூர் இராமச்சந்திர கவிராயர், மகாவித்துவான் சி.மீனாட்சி சுந்தரம்பிள்ளை, நல்லூர் க. ஆறுமுகநாவலர், இராமலிங்க அடிகளார், எச்.ஏ.கிருஷ்ணபிள்ளை, சோடாவதானம் வ.சுப்பராய செட்டியார், கோமளபுரம் இராசகோபாலபிள்ளை, கு.கதிரைவேற்பிள்ளை, புதுவை சவராயலு நாயகர், பொன்னம்பல சுவாமிகள், தொழுவூர் செ.வேலாயுதமுதலியார், காயல்பட்டினம் செய்து அப்துல் காதிறு நயினார் லெப்பை ஆலிம், யாழ்ப்பாணம் புலோலியூர் நா.கதிரைவேற்பிள்ளை, சபாபதி நாவலர், குமாரசுவாமிப்புலவர், வயித்தியலிங்கம்பிள்ளை, முத்துப்பிள்ளைப் புலவர், த.கனகசுந்தரம்பிள்ளை, திருமயிலை சண்முகம்பிள்ளை, அ.நாராயண அய்யங்கார், பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், நாகலிங்க முனிவர், சோழவந்தான் அரசஞ்சண்முகனார், இரா.இராகவையங்கார், மு.சி.பூர்ணலிங்கம்பிள்ளை, வை.தாமோதரம்பிள்ளை, ச.பவானந்தம்பிள்ளை, நமச்சிவாய முதலியார் போன்ற பலரும் உ.வே.சாவிற்கு முன்பாகவே பல தமிழ் நூல்களைப் பதிப்பித்துள்ளனர். 1918க்குள் சங்க இலக்கியங்கள் முழுமையாகப் பதிப்பிக்கப்பட்டன.

1851 திருமுருகாற்றுப்படை ஆறுமுகநாவலர்
1887 கலித்தொகை சி.வை.தாமோதரம்பிள்ளை
1889 பத்துப்பாட்டு உ.வே.சாமிநாதையர்
1894 புறநானூறு உ.வே.சாமிநாதையர்
1903 ஐங்குறுநூறு உ.வே.சாமிநாதையர்
1903 முல்லைப்பாட்டு மறைமலையடிகள்
1904 பதிற்றுப்பத்து உ.வே.சாமிநாதையர்
1904 பட்டினப்பாலை மறைமலையடிகள்
1907 பொருநராற்றுப்படை வா.மகாதேவமுதலியார்
1915 குறுந்தொகை சௌரிப்பெருமாள் அரங்கனார்
1915 நற்றிணை பின்னத்தூர் நாராயண அய்யர்
1918 பரிபாடல் உ.வே.சாமிநாதையர்
1918 அகநானூறு ரா.இராகவையங்கார்

“இவற்றைத் தொடர்ந்து சங்க இலக்கியங்களுக்குப் பல்வேறு வகையில் நூல்கள் எழுந்தன. பழைய உரைகளைப் பதிப்பித்தனர். புத்துரைகளும் விளக்கவுரைகளும் எளிய உரைகளும் எனப் பொதுமக்கள் எளிதில் படித்துணர்ந்து கொள்ளுமாறு பல பதிப்பு வகைகள் தோன்றின. ஒவ்வொரு நூலுக்கும் திறனாய்வு நோக்கிலும் பல நூல்கள் எழுந்தன. அறிஞர்கள் எளிமையான விளக்கங்களுடன் சங்க இலக்கியத்தை மக்கட்கு அறிமுகம் செய்தமை பெரிதும் குறிப்பிடத்தக்கது” (இ.சுந்தரமூர்த்தி, 2005:70)

உ.வே.சாமிநாதர் அவர்களால் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பத்துப்பாட்டின் முதற்பதிப்பும் (1889) புறநானூற்றின் முதற்பதிப்பும் (1894) கொண்டுவரப்பட்டது. இவற்றைத் தொடர்ந்து இருபதாம் நூற்றாண்டின் முதற் பத்தாண்டிலேயே ஐங்குறுநூற்றின் முதல் பதிப்பும் (1903) பதிற்றுப்பத்தின் முதற்பதிப்பும் (1904) பதிப்புப்பெற்று நூல் உருவம் பெற்றன. பதினேழு ஆண்டுகளில் பத்துப்பாட்டையும் எட்டுத்தொகை நூல்களில் மூன்றையும் உ.வே.சாமிநாதையர் அவர்கள் பதிப்பித்துள்ளார்.

“கால வரிசைப்படி உ.வே.சாமிநாதையர் அவர்களின் பதிப்புகளை ஒழுங்குபடுத்தும் போது பதிப்புகளின் முறை இவ்வாறு அமைகிறது.

பத்துப்பாட்டு 1889 (1918, 1931, 1950, 1956, 1961, 1974)

புறநானூறு 1894 (1923, 1935, 1950, 1956, 1963, 1971)

ஐங்குறுநூறு 1903 (1920, 1944, 1949, 1957)

பதிற்றுப்பத்து 1904 (1920, 1944, 1945, 1949)

பரிபாடல் 1918 (1935)

குறுந்தொகை 1937 (1947, 1955, 1962)” (குளோரியா சுந்தரமதி, 1984:8)

உ.வே.சாமிநாதையர் பழந்தமிழ் நூல்களைப் பதிப்பித்து வெளியிட்ட காலகட்டத்தில் மூன்று வகைகளாக பதிப்பு நெறிமுறைகளைக் கையாண்டார். 1. பழைய உரைகளோடு குறிப்புக்களைப் பதிப்பிப்பது. 2. புதிய உரையோடு பதிப்பிப்பது. 3. உரை இல்லாமல் மூலம் மட்டும் பதிப்பிப்பது. இந்த மூன்று பதிப்பு நெறிமுறைகள் அவரின் காலத்தில் இருந்தது. மூன்று நெறிமுறைகளைக் கையாண்ட பெருமை உ.வே.சாமிநாதையர் அவர்களையே சாரும். இக்காலக்கட்டத்தில் பல நூல்கள் மறுபதிப்புக் கண்டன. உ.வே.சாமிநாதையர் அவர்களும் தாம் பதிப்பித்த நூல்களைச் செம்மையுற மறுபதிப்பு செய்கிறார்.

புறநானூற்றின் இரண்டாம் பாடலின் மூலம் திணைக்குறிப்பு, பாடினோர், பாடப்பெற்றோர் பெயர்கள் இவற்றைத் திருத்தமுற அமைத்த முறையைக் குறிப்பிடுகிறார். மேலும் ஒப்புமைப்பகுதிகள் மேற்கோள் விளக்கங்கள் தேவையான குறிப்புரைகள் இணைவுற்றதையும் எடுத்துரைக்கிறார்.

“உ.வே.சா. அவர்களைப் பொறுத்த அளவில் ஒரு நூலின் அடுத்த என்பது திருந்திய பதிப்பு. பதிப்புக்கலையின் நுட்பங்கள் முன்னைப் பதிப்பிலும் செறிவுற்றமையும் பதிப்பு” (சொல் விளங்கும் பெருமாள், 1981)

 எனவே மறுபதிப்பு செய்கின்ற வேளையில் தீவிரத்தன்மையுடன் கூடிய பதிப்புநெறிகளைக் கையாண்டு பதிப்பித்தார் உ.வே.சா.

II

நூல்களுக்கு உரை எழுதாமல் வாயால் விளக்கிச் செவியால் அறிந்து கொள்ளும் காலக்கட்டம் இருந்தது. பலமுறை வாய்மொழி வழியாக வழங்கிவந்த உரைகளே பிற்காலத்தில் உரைகளாக எழுந்தன. உரையின் வளர்ச்சி என்பது.

“மூலபாடம் சொல்லல், கருத்துரைத்தல், சொல் வருவித்தல், சொற்பொருள் உரைத்தல், பொழிப்புரைத்தல், உதாரணங்காட்டல், விரிவுகாட்டல், அதிகார வரவு காட்டல், பணிவுகூறல், பயனொடெடுத்தல், ஆசிரிய வசனம் காட்டல் என்று பல வகைகளாக விரிந்தது என்பதை மயிலைநாதர் உரையால் அறியமுடிகிறது.” (இ.சுந்தரமூர்த்தி 2005:74)

சங்க இலக்கியங்களைப் பதிப்பிக்கத் தொடங்கியவர்கள் மூலத்தோடு சொந்தமாக எழுதிய உரையைப் பதிப்பித்தனர். ஆனால் உ.வே.சாமிநாதையர் அவர்கள் பழைய உரைகளோடு பெரும்பாலும் சங்க இலக்கியத்தைப் பதிப்பித்தார். ஐங்குறுநூற்றின் இரண்டாம் பதிப்பில் பழைய உரை குறித்தும் தமது உரை முயற்சி குறித்தும் குறிப்பிடும்போது ‘பழைய உரையில்லாத செய்யுள்களுக்கு உள்ளுறையுவமம் முதலியவற்றைப் புலப்படுத்தி ஏதோ ஒரு வகையாக உரை எழுதி இத்துடன் பதிப்பிக்கலாம் என்ற விருப்பம் சில சமயம் எனக்கு நிகழ்ந்ததுண்டு. நிகழ்ந்தும் இந்நூலையும் இவ்வுரையையும் உற்று நோக்க அவ்விருப்பம் அடியோடே மாறிவிட்டது. இந்நூல் முழுமைக்கும் நான் எழுதி வைத்த அரும்பதிவுரையை இத்துடன் பதியாமைக்கு காரணம் இதுவே எனக் குறிப்பிட்டுள்ளார்.’

“இப்பகுதி பழைய நூல் உரைகள் குறித்து உ.வே.சா. அவர்கள் கொண்டிருந்த பெருமதிப்பையும் தாமாக உரை எழுதும் வன்மை பெற்றிருந்தும் தன்னடக்கம் காரணமாக தன் நிறை காணாது குறையையே எண்ணும் தகைமையையும் காட்டுகின்றது. உ.வே.சா. அவர்கள் பதிப்பித்த சங்கத் தொகை நூல்களில் இத்தகைய பழைய உரை எதனையும் பெறாது அமைந்த நூல் குறுந்தொகை ஒன்றே. சங்க இலக்கியப் பதிப்பு வரிசையில் இறுதியாக அமையும் இந்நூலுக்கு மட்டுமே உ.வே.சா. அவர்கள் பதவுரை, விசேடஉரை, மேற்கோள் விளக்கம், ஒப்புமைப்பகுதி ஆகியவற்றை வழங்கியுள்ளார். பிறவற்றிற்குக் குறிப்புரை மட்டுமே பொருந்துகின்றது.” (குளோரியா சுந்தரமதி, 1984:34)

பாடநூலாய்ப் புறநானூறு (பா.101-125) அன்றைய காலத்தில் (1911) பி.ஏ. மாணவர்களுக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்தப் பாடல்களுக்குப் பதவுரையும் விளக்கவுரையும் ஒப்புமைப் பகுதியும் உ.வே.சாமிநாதையர் அவர்கள் எழுதியுள்ளார். இது புதுமையானதாகும். டாக்டர் உ.வே.சாமிநாதையர் அவர்கள் புறநானூற்றைப் பதிப்பித்தது அதாவது முதல் பதிப்பு 1894. இரண்டாம் பதிப்பு 1923 அதனைத் தொடர்ந்து பல பதிப்புகள் வருகின்றன. இந்தப் புறநானூற்றுப் பதிப்பிற்குக் குறிப்புரை மட்டுமே தருகிறார். புறநானூறின் முதல் பதிப்பிற்கும் (1834) இரண்டாம் பதிப்பிற்கும் (1923) இடையே பி.ஏ. மாணவர்களுக்குப் பாடமாக (1911) இருந்த புறநானூறு 101 முதல் 125 பாடல்களுக்குச் சிறந்ததொரு பதவுரையும் விளக்கவுரையும் தருகிறார். இந்த உரை குறித்து யாரும் பேசவில்லை.

இந்நூலில் முகவுரை, பாடினோர் வரலாறு, பாடப்பட்டோர் வரலாறு, புறநானூறு மூலம் உரையும் [க0க – கஉரு] திணை விளக்கம், துறை விளக்கம், பிரயோக விளக்கம் போன்றவற்றைத் தந்துள்ளார். மேலும் சொல் பிரிப்பு, பதவுரை, விசேடவுரை, சொற்பொருள நிரை, சொற்பொருள் மயக்கம் தவிர்த்தல், ஒருசொல்லுக்குப் பல பொருள் பயிலும் நிலையை எடுத்துரைத்தல், உரையாசிரியர்கள் வழிநின்று சொற்பொருள் வரையறுத்தல், உரையாசிரியர் தரும் பொருள் விளக்கங்களை எடுத்துரைத்தல், சொற்களின் வடிவம் பற்றிய சிந்தனை, சொல்தேர்ச்சி, இலக்கணம், பிரதிபேதங்கள், விசேட உரையும் குறிப்புரையும், ஒப்புமைப் பகுதி போன்றவறறைத் தருகின்றார்.

உ.வே.சாமிநாதையர் பாடலின் உரையை நான்கு பகுதிகளில் வகைப்படுத்தித் தருகிறார். அவை 1. பதவுரை 2. முடிவு 3. கருத்து 4. விசேடவுரை என்பனவாகும்.

பதவுரை என்பது பாடலின் கட்டுக்கோப்பில் சொற்களையும் தொடர்களையும் நிறுத்திக்கொண்டு பொருள் காண்பது. இது கவிதை மொழியின் செறிவமைப்பை இனங்காட்டி நிற்கும். புறநானூறு 102 ஆம் பாடல்

“எருதே யிளைய நுகமுண ராவே

சகடம் பண்டம் பெரிதுபெய் தன்றே

யவலிழியினு மிசை யேறினு

மவண தறியுநர் யாரென வுமணர்

கீழ்மரத் தியாத்த சேமவச் சன்ன

விசைவிளங்கு கவிகை நெடியோய் திங்க

ணாணிறை மதியத் தனையையிருள்

யாவண தோநின் னிழல்வாழ் வோர்க்கே”

பதவுரை

இளைய எருது நுகம் உணரா – இளைய எருதுகளானவை நுகம்பூணுதலை மதியா; சகடம் பண்டம் பெரிது பெய்தன்றே – வண்டியானது உப்பாகிய பண்டம் பெரிதாக இடப்பட்டது; ஆதலால் அவல் இழியினும் – அவ்வண்டி பள்ளத்தே இறங்கினாலும்; மிசை ஏறினும் – மேட்டிலே ஏறினாலும்; அவணது அறியுநர்யார் என – அவ்விடத்து வரும் இடையூற்றை அறிவார் யார்தா னென்று நினைத்து, உமணர் கீழ்மரத்து யாத்த – உப்பு வணிகர் அச்சுமரத்தின் கண்ணே அடுத்துக் கட்டப்பட்ட; சேம அச்சு அன்ன – சேமவச்சுப்போன்ற; இசை விளங்கு கவிகை நெடியோய் – புகழ் விளங்கிய இடக்கவிந்த கையையுடைய உயர்ந்தோய்! திங்கள் நாள் நிறை மதியத்து அனையை – நீ திங்களாகிய நாள் நிறைந்த மதியத்தை யொப்பை; ஆகலின், நின் நிழல் வாழ்வோர்க்கு இருள் யாவணது – நின்னிழற்கண் வாழுமவர்களுக்குத் துன்பமாகிய இருள் எவ்விடத்துள்ளது.

இந்தப் பாடல் அமைப்பில் முன்னும் பின்னும் இடம்பெயர்ந்து அமையும் தொடரைப் பொருள் கொள்வதற்கு வாய்ப்பாக உரை அமைப்பில் இரண்டு இடங்களை ஒழுங்குபடுத்தியுள்ளார்.

வாக்கிய நிலையிலும் தொடர்நிலையிலும் அமையும் இடமாற்றங்கள் ஒழுங்குபடுத்தப்பெற்றுப் பாடல் தொடரைப் பொருள் கொள்ள வசதியாக அமைத்துக்கொள்ளுதலைப் பதவுரையின் முதல்படிநிலையாகக் கொள்ளலாம்.

அடுத்த படிநிலைகளாகச் சொற்களைத் தனித்தனியாக எளிதில் புரிந்து கொள்ளும்படி பிரித்துக்கொள்ளும் உயிரும் உயிரும், மெய்யும் உயிரும் உற்ற சந்திமாற்றங்கள் அல்லது திரிபுகள் நீக்கப்பட்டுச் சொற்கள் தனிப்படுத்தப்படுகின்றன. இதன்விளைவாக

“ஒருதலைப் பதலை தூங்க வொருதலைத்

தூம்பாகச் சிறுமுழாத் தூங்கத் தூக்கித்”

என்ற செய்யுளடிகள்

“ஒருதலை பதலை தூங்க ஒருதலை

தூம்பு அகம் சிறுமுழா தூங்க தூக்கி” (க0ங.1-2)

என்ற சொற்களின் தொகுதியாக மாற்றப்படுகின்றன.‘

இசைநிறைக்காக அமைந்த பொருளுள்ள சொற்கள் (அசைகள்) விடப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக வாழ்கவன்தாளே (ஏ), (க0ங) என்பதில் அமைந்த ஏகாரம் பதவுரையில் இடம்பெறவில்லை.

முடிவும் கருத்தும்

முடிவு என்ற பகுதியில் உ.வே.சாமிநாதையர் அவர்கள் வழங்குவது பாடலின் வினைமுடிவு. பாடலில் பொருந்தும் அடிப்படையான தொடரமைப்பு. கருத்து என்ற பகுதியில் அவர் வழங்குவது பாடலின் கருத்து. பாடலில் பொருந்தும் தொடர் அமைப்பும் அதன் கருத்தும் இரண்டு எல்லைகள்.

“சங்கப் பாடல்களைப் புரிந்துகொள்வதற்கு-பயிலுவதற்கும் பயிற்றுவிப்பதற்கும் பாடலிற் செறிந்தமைந்த அடைகளைக் கோத்துச் செல்லும் பாடலின் அடிப்படையான தொடரை உணர்ந்து கொள்வது முதற்படி. பாடலின் அடிப்படைத் தொடரை எடுத்து வழங்கும் நிலை பழைய உரையாசிரியர்களிடம் அமைந்த உரைநெறிகளில் ஒன்று. இதனையே உ.வே.சாமிநாதையர் அவர்கள் தமது முடிவு என்ற பகுதியில் அமைத்துள்ளார்.” (குளோரியா சுந்தரமதி, 1984:44)

புறநானூறு க0ங பாடலில் பதலையென்பது – ஒருதலையுடையதொரு தோற்கருவி. பகைப்புலத்தோனென்ற கருத்து. பகைவர்பால் திறைகொண்ட பொருளுடையனாதலின் நீவேண்டியவெல்லாந்தருதல். அவனுக்கு எளிதென்பதாம். சேணோனல்லனென்பதற்கு – பரிசில் நீட்டிப்பானல்லனென்று உரைப்பினுமமையும் என்று கூறியுள்ளார்.

விசேடவுரை

உ.வே.சாமிநாதையர் அவர்கள் விசேடவுரையில் சொற்பொருள் நிலை, சொற்பொருள் மயக்கம் தவிர்த்தல், உரையாசிரியர் வழிநின்று சொற்பொருள் வரையறுத்தல், உரையாசிரியர் தரும் பொருள் விளக்கங்களைத் தருதல், சொற்களின் வடிவம் பற்றிய சிந்தனை, அளபெடை, உவமை முதலிய அணிகள் எனப் பலவற்றைத் தருகிறார். எடுத்துக்காட்டாக“கா-தேற்சுமை, ஒருதலை-ஒருபக்கம், தூங்க – தொங்க, அகம் – உள், முழா – மத்தளம், பரிசு – விதம், மண்டை – ஏற்கும் பாத்திரம், மலர்த்தல் – வாய் மேலாகப் பிடிக்கச் செய்தல், விறலி – விளிப்பெயர் – விறல் படப்பாடியாடுபவளென்பது பொருள். சேய்மை – தொலைவு, முனைப்புலம் – பகைவருறையுமிடம். (ங)

இதற்கடுத்த நிலையில் பல செய்திகளைப் எழுதியுள்ளார். இந்தப் படிநிலையில் வரிசையில் ஒவ்வொரு பாடலையும் அமைத்துள்ளார்.

நூலின் இறுதியில் இந்தப் பகுதியில் (பாடப்பகுதி புறம்.101-125) வந்துள்ள துறைகளுக்குச் சுருக்கமான விளக்கத்தைத் தருகிறார். அரசவாகை, இயல்மொழி, கையறுநிலை, பரிசில்கடாநிலை, பொருண்மொழிக்காஞ்சி, மகண்மறுத்தல், விறலியாற்றுப்படை. இதற்கடுத்த நிலையில் இப்புறநானூற்றுப்பபாடல்கள் இலக்கிய-இலக்கண நூல்களில் இடம்பெற்றுள்ள இடங்களைக் குறிப்பிடுகிறார்.

முடிவுரை

இந்தப் பாடத்திட்ட உரையில் ஏராளமான நுட்பமான விளக்கங்களைத் தந்துள்ளார். மேற்கோள் நூல்கள் பலவற்றை எடுத்துத் தருவதோடு, உரையாசிரியர்கள் கருத்துக்களையும் தந்து செல்கிறார். உ.வே.சாமிநாதையர் அவர்கள் தாம் உரை வகுத்த குறுந்தொகைக்கு மட்டுமே விசேடவுரை வழங்கியுள்ளார். ஏனைய நூல்களுக்குப் பழைய உரை அமைந்துள்ளமையால் குறிப்புரை மட்டுமே வழங்கியுள்ளார். இக்குறிப்புரையின் வளர்ச்சிநிலையே இப்பாடலுக்கான மேற்கோள் காட்டித் தன் புலமையை வெளிப்படுத்துகிறார். பழைய நூல்களை எவ்வாறு அணுகுவது என்பதனை இவ்வுரையின்வழித் தெளியமுடிகிறது. பாடநூலாக இருக்கும் நூலுக்கு எதையாவது சொல்லிவிடலாம் என்று இல்லாமல் தெளிவாகப் பதவுரை, விளக்கவுரை, இலக்கண விளக்கம், ஒப்புமைப் பகுதி, மேற்கோள் விளக்கம், பிரதிபாடம், பாடினோர், பாடப்பட்டோர் வரலாறு, உவமை நயம் போன்ற பலவற்றை மிகச்சிறப்பாக எடுத்தியம்புகிறார். இரண்டு விசயங்களை நாம் கவனிக்கவேண்டியது 1.ஆங்கிலேயர்கள் தமிழ்ப்பாட நூல்களுக்குக் கொடுத்த முக்கியத்துவம். மற்றொன்று ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் இருந்த பாடத்திட்ட அமைப்பு முறை குறித்தானது. இது குறித்துத் தனியே ஆராய வேண்டும்.

குறிப்புகள்

  1. இரா.மாதவன், 2000, சுவடிப்பதிப்பியல், பாவை வெளியீட்டகம், தஞ்சாவூர் – 5
  2. சுந்தரமூர்த்தி, 2005, பதிப்பியல் சிந்தனைகள், சேகர் பதிப்பகம், சென்னை
  3. குளோரியா சுந்தரமதி, 1934, டாக்டர் உ.வே.சா. சங்க இலக்கியப் பதிப்புகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை
  4. பூ. சொல் விளங்கும் பெருமாள், டாக்டர் உ.வே.சா. பதிப்புப் பணி ஓராய்வு, மதுரை
  5. இ.சுந்தரமூர்த்தி, 2005, பதிப்பியல் சிந்தனைகள், சேகர் பதிப்பகம், சென்னை

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *