சர்வாதிகாரத்தை நோக்கி நகரும் உலகம்

சர்வாதிகாரத்தை நோக்கி நகரும் உலகம்

நாகேஸ்வரி அண்ணாமலை

உலகில் மிகவும் தாழ்ந்து போயிருந்த அமெரிக்காவின் படிமத்தை உயர்த்த வேண்டும் என்று விரும்பி அதையே தன் தேர்தல் வாக்குறுதியாக வைத்துத் தேர்தல் பிரச்சாரம் செய்த ஒபாமா தேர்தலில் ஜெயித்து ஜனாதிபதி ஆன பிறகு தன் விருப்பத்தில் ஓரளவு வெற்றியும் பெற்றார் என்று கூறலாம். சில நாடுகளுடனான அமெரிக்காவின் உறவைப் பலப்படுத்தினார்; அமெரிக்கா பல காலமாக வன்மம் பாராட்டிவந்த கியூவுடனான உறவையும் சீர்படுத்த நிறைய முயற்சிகள் செய்தார். அமெரிக்கா ஈடுபட்டிருந்த போர்களில் ராணுவத்தின் அளவைக் குறைத்தார். மொத்தத்தில் அமெரிக்கா உலக நாடுகளின் போலீஸ்காரன் அல்ல என்று மற்ற நாடுகள் உணரும்படி செய்ய முயற்சிகள் பல செய்தார்.

ஆனால் ஒபாமாவிற்குப் பின் அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற ட்ரம்ப் ஒபாமா உள்நாட்டிலும் அகில உலக அளவிலும் செய்த எல்லாச் சீர்திருத்தங்களையும் ஒவ்வொன்றாக ஒழித்து வருகிறார். அமெரிக்காவின் சட்டாம்பிள்ளைத் தனத்தை திரும்பக் கொண்டுவர முயன்று வருகிறார். இவர் பதவியை விட்டு விலகும் முன் அமெரிக்காவின் படிமத்தை உலக நாடுகளிடையே வெகுவாகக் குறைத்துவிடுவார்போல் தெரிகிறது. அடாவடித்தனமாக இவர் காரியங்கள் செய்தாலும் இன்னும் இவருக்கென்று நிறைய ஆதரவாளர்கள் இருக்கிறார்கள் என்று அறியும்போது மிகவும் பயமாக இருக்கிறது.

உலக அரங்கில் இப்போது நிறைய சர்வாதிகாரிகள் இருக்கிறார்கள்; அந்த எண்ணிக்கை இப்போது கூடிக்கொண்டு போவதுபோல் தெரிகிறது. ஏற்கனவே சர்வாதிகாரிகளாக இருந்த ரஷ்யாவின் புதின், வடகொரிய அதிபர் கிம் ஜான் அர்ன் ஆகியோரோடு துருக்கியின் எர்டோவன், எகிப்தின் ஸிஸி என்று இன்னும் பலர் உருவாகி வருகிறார்கள்.

சீனா கம்யூனிஸ்ட் நாடு என்று தன்னைக் கூறிக்கொண்டாலும் அங்கும் ஒரு வகையான சர்வாதிகார ஆட்சிதான் நடந்துகொண்டிருக்கிறது. ஆனால் இதுவரை பத்து வருடங்களுக்கொரு முறையாவது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதுத் தலைவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொள்வார். இப்போது அந்த ஏற்பாட்டையும் தகர்த்தெறிவதுபோல் சீனாவின் ஜனாதிபதி ஷி ஜின் பிங், சீன ஜனாதிபதிகள் இரண்டு முறை மட்டுமே பதவியில் இருக்க முடியும் என்ற அரசியல் சட்டத்தை மாற்றப் போவதாகச் செய்தி வந்திருக்கிறது. அப்படியென்றால் அவர் ஆயுள் முழுவதும் ஜனாதிபதியாக நீடிப்பார் என்பது உறுதியாகிறது. இது சீனாவுக்கும் மற்ற நாடுகளுக்கும் எவ்வளவு பெரிய ஆபத்தை விளைவிக்கலாம் என்று உலகத் தலைவர்கள் பலர் அஞ்சுகிறார்கள். சீன மக்கள் இப்போது அவர்களுக்குள்ள ஒரு சில மனித உரிமைகளையும் இழக்கலாம் என்ற அச்சமும் சீனாவிலும் சீனாவிற்கு வெளியிலும் பரவி வருகிறது.

இப்படிப் பலர் அஞ்சினாலும் சீனாவுடனான வர்த்தகம் பாதிக்கப்படலாம் என்று அஞ்சிப் பல நாட்டுத் தலைவர்கள் அது பற்றி எந்தக் கருத்தும் கூறவில்லை. சென்ற ஜனவரி மாதம் பிரான்ஸ் தலைவர் மேக்ரான் சீனாவுக்கு விஜயம் செய்தபோது ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் தன் வர்த்தக உறவுகளை சீனா பலப்படுத்திக்கொள்வதின் அபாயத்தைப் பற்றி எச்சரித்தாலும் சீன அரசு தன் மக்களை நடத்தும் முறை பற்றிச் சாதுர்யமாக எதுவும் சொல்லவில்லை. ஜப்பானுக்கும் சீனாவுக்கும் இப்போதைக்கு உறவு அவ்வளவு சுமுகமாக இல்லையென்றாலும் ஜப்பான் கூட ஷி ஜின் பெங்கின் ஆட்சி அவருடைய ஆயுள் முழுவதும் இருக்கும் என்பது பற்றி எந்தவிதக் கருத்தும் தெரிவிக்கவில்லை. சீனா ஆஸ்திரேலியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவது பற்றி ஆஸ்திரேலியா குறை சொன்னபோது சீனா திருப்பிப் பதிலடி கொடுத்ததால் இப்போது சீனாவில் வரக்கூடிய அரசியல் மாற்றம் பற்றி எதுவும் கூற ஆஸ்திரேலியா தயாராக இல்லை. இதற்குக் காரணம் சீனாவுடனான வர்த்தக உறவுகள்தான். (இந்தியா எப்படி சீனாவின் சர்வதிகாரம் நோக்கி நகரும் இந்த மாற்றத்திற்கு எதிர்வினை ஆற்றியது என்று தெரியவில்லை. மோதியின் கருத்து என்னவென்று தெரியவில்லை.)

மற்ற நாடுகள் இம்மாதிரி நடந்துகொள்ளும் வேளையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அது பற்றிக் கருத்துக் கூறியிருப்பது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. நண்பர்களுடன் தனிப்பட்ட சந்திப்பின்போது ட்ரம்ப், ‘ஷி கின் பிங் ஆயுளுக்கும் சீனாவின் ஜனாதிபதி ஆகலாம். கேட்கவே நன்றாக இருக்கிறது. ஒரு நாள் அமெரிக்காவும் இதை முயன்று பார்க்கலாம்” என்று கூறியிருக்கிறார். தனிக் கூட்டத்தில் இப்படி ட்ரம்ப் கூறியிருந்தாலும் அது எப்படியோ வெளியே வந்துவிட்டது. அமெரிக்கா சுமார் முன்னூற்று ஐம்பது வருடங்களுக்கு முன்புதான் நாடாக உருவானது. அப்போது அவர்கள் எழுதிய அரசியல் சாசனத்தின்படி அமெரிக்காவில் ஒருபோதும் சர்வாதிகார ஆட்சி ஏற்படாது என்று உறுதிப்படுத்திக்கொண்டார்கள். மேலும் அமெரிக்கா உலகம் முழுவதிலும் ஜனநாயகத்தின் ஒளிவிளக்கு என்று பெயர் வாங்கியிருக்கிறது. இந்த நாட்டின் ஜனாதிபதியாக பதவி ஏற்றிருக்கும் ட்ரம்பின் மனதில் இப்படி ஒரு ஆசை ஏற்பட்டிருக்கிறதே என்று நினைத்தால் எவ்வளவு கீழ்த்தரமான சிந்தனை உள்ள மனிதர் ட்ரம்ப் என்றுதான் எண்ண வேண்டியிருக்கிறது. சென்ற நவம்பர் மாதம் சீனாவுக்குச் சென்றிருந்த ட்ரம்ப்பிற்கு வெகு விமரிசையாக வரவேற்பு அளிக்கப்பட்டது அதில் உச்சிகுளிர்ந்த ட்ரம்ப் ஷி ஜின் பிங்கை இந்த மாற்றத்தைக் கொண்டுவருவதற்காக அவரைப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார். மற்ற நாடுகள் வர்த்தக உறவுகளுக்காகச் சீனாவை எதிர்க்க முடியாமல் இருக்க, ட் ரம்ப்போ சீனாவின் ஷி ஜின் பிங்கை புகழ்ந்து தள்ளியிருக்கிறார். இவரை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்த அமெரிக்க மக்களை என்னவென்று சொல்வது. இவரைப் போன்றவர்களிடமிருந்தும் மற்ற சர்வாதிகாரிகளிடமிருந்தும் இறைவன் உலகைக் காக்கட்டும்.

நாகேஸ்வரி அண்ணாமலை

https://www.facebook.com/a.nageswari

https://twitter.com/a_nageswari

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.