உறவுகள் மேம்பட…!
– ஆ. செந்தில் குமார்
உதிர்க்கின்ற கடுஞ்சொல்லால்
உறவு நிலைக்குமா?
காண்கின்ற குற்றத்தால்
சுற்றம் நிலைக்குமா?
கடுகடுத்த முகத்தைக் கண்டால்
குடும்பம் மகிழுமா?
சிடுசிடுக்கும் பேச்சாலே
சிந்தை குளிருமா?
முணுமுணுக்கும் வார்த்தைகளால்
முகங்கள் மலருமா?
பசப்பு மொழி பேசினாலே
பாசம் கிடைக்குமா?
தந்திரங்கள் கையாண்டால்
தந்தை மகிழ்வாரா?
தறிகெட்டுத் திரிந்தாலே
தாய் மகிழ்வாரா?
நயவஞ்சகம் கொண்டிருந்தால்
நட்பு நிலைக்குமா?
நீதி நேர்மை இல்லையென்றால்
நண்பன் கிடைப்பானா?
செருக்கு கொண்ட கணவனாலே
வாழ்வு இனிக்குமா?
அகந்தை கொண்ட மனைவியாலே
அமைதி கிடைக்குமா?
அன்பு என்ற ஆணி வேரை
உறுதிப் படுத்துவோம்!
உறவு என்ற ஆலமரத்தை
தழைக்கச் செய்குவோம்!