திருச்சதகத்தில் மணிவாசகர்

 திருச்சதகத்தில் மணிவாசகர்

முனைவர் இரா. மதன் குமார். உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம், கோயம்புத்தூர் – 21.

முன்னுரை

தொல்லை இரும்பிறவிப் பிணி தீர்க்கின்ற அருமருந்தென விளங்குவது, ‘திருவாசகம்’. அதன் ஐந்தாம் திருப்பாடல் தொகுப்பாக இடம்பெறுவது, நூறு திருப்பாடல்களைக்கொண்ட திருச்சதகமாகும். மெய்யுணர்தல் முதலாக, ஆனந்தாதீதம் ஈறாகிய பத்துத் தலைப்புகளின் கீழுள்ள,   ஒவ்வொரு திருப்பாடலின் சொல்லும் பொருளும், மணிவாசகரின் சிவானுபவப் பதிவுகளாக உள்ளன. அத்திருப்பாடல்கள், தாயைத் தேடி அலைகின்ற குழந்தையின் ஆராத தவிப்பாக, கண்ணொளி பெற்று அதனை மீண்டும் இழந்தானின் தீராத ஆற்றாமையாக, உலக வாழ்க்கையை ஆற்றாது, சிவத்தைச் சேர மணிவாசகர் கொண்ட ஞானத்தவிப்பின் பதிவுகளாக விளங்குகின்றன. அவ்வகையில், திருச்சதகத் திருப்பாடல்களில் புலனாகும், மணிவாசகரின் பக்தி அனுபவத்தை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.

ஞானநாடகம்

‘உலகும், உடம்பும், இளமையும், செல்வமும் நிலையில்லாதன’ என உணர்தலும், ‘சிவமே மெய்ப்பொருள்’ என்று தெளிதலுமே, மெய்யுணர்தலாகும். ஏதேனும் ஒன்றைப் பற்றி நிற்பதே உயிரின் இயல்பாகும். உயிரானது, பொய்ப்பொருளைப் பற்றி நிற்கின்ற அறியாமை மயக்கிலிருந்து தெளிகின்றபோது, மெய்ப்பொருளாகிய சிவத்தைச் சார்கின்ற பேரறிவு வாய்க்கின்றது. அப்பேரறிவானது, பற்றற்றவனாகிய பரத்தையே நாளும் பற்றுகின்ற மெய்யுணர்வை மேன்மேலும் உயிரிடத்தில் விளங்கச்செய்கிறது. மணிவாசகர், திருப்பெருந்துறையில் இறைவன் தமக்கு ஞானகுருவாக வந்தருளிய நொடிமுதலாக, சித்தத்தைச் சிவன்பாலே வைக்கின்ற மெய்யுணர்வில் முழுமையாக ஆழ்ந்தார். பெருமான் அவர்பொருட்டு, நரியைக் குதிரைகளாக்கியும், பிட்டுக்கு மண் சுமந்தும் நிகழ்த்திய விளையாடல்களின் வழியே அவர்தம் அருள்சிறப்பினைத் தென்னவன் உணர்ந்தான். அவன், தனது ஆட்சிப்பொறுப்பை அடிகளிடம் தந்து, தம்மையும் மக்களையும் உய்விக்க வேண்டினான். அடிகள், தமது ஞானத்தெளிவாகிய மெய்யுணர்வால், நாடாளுகின்ற பேற்றினையும் தாழ்வென ஒதுக்கினார். ‘தம்மை ஆள்கின்ற நாதன் பாதம் பணிவதே, உயிர்க்கு உறுதி’ என்ற மெய்யுணர்வில் நிலைகொண்டார். நிலையில்லா உலகியல் இன்பங்களின் மீதான மயக்கம் தீர்தலும், திருவடியில் கண்ணீர்ப் பெருக்குதலும், அன்பை மறவாத பற்றுறுதியுமாகிய மணிவாசகரின் மெய்யுணர்வு அனுபவங்கள், திருச்சதகத்தில், ‘மெய்யுணர்தல்’ என்னும் தலைப்பின்கீழ் உரைக்கப்பெற்றுள்ளன.

‘மெய்தான் அரும்பி விதிர்விதிர்த் துன்விரை யார்கழற்கென்

கைதான் தலைவைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பியுள்ளம்

பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி சயசய போற்றியென்னும்

கைதான் நெகிழ விடேன்உடை யாயென்னைனைக் கண்டுகொள்ளே’ (திருச்சதகம்:1)

என்றமைந்த பாடலின் இறுதி அடியிலுள்ள, ‘கை’ என்பது, ‘ஒழுக்கம்’ எனப் பொருள்படும். ‘நெகிழவிடேன்’ என்பது, ‘கைவிடேன்’ என்னும் பற்றுறுதியைக் குறிக்கும். ’பெருமானைப் பணிவதே பணி’ என மணிவாசகர் பெற்ற மெய்யுணர்வின் வெளிப்பாடாக இத்திருப்பாடல் அமைந்திலங்குகிறது.

அறிவுறுத்தல்

உலகியல் வாழ்வில் உயிர்கள், ‘யானே அனைத்தையும் செய்கின்றேன்’ என்ற அகப்பற்றுடனும், ‘எல்லாம் எனது உடமை’ என்னும் புறப்பற்றுடனும் அறியாமைக் கூத்தாடி, அன்றாடம் வாழ்நாளை வீணே கழிக்கின்றன. பயனற்ற அறியாமைக்கூத்தின் அவலத்தை உயிர்க்கு அறிவுறுத்தி மீட்டருள வேண்டியே பெருமான், அம்பலத்தின்கண் ஓயாது ஆனந்தக்கூத்தாடுகின்றான். ‘அம்பலமாகிய அண்டக்கூத்தே, பிண்டத்திலும் விளங்குகிறது; அனைத்து உயிரினுள்ளும் இருந்து பெருமானே அனைத்தையும் இயக்குகின்றான்’; அவனே உள்ளிருந்து, தன்னையும் இயக்குகின்றான்’ என்னும் மெய்யுணர்வு பாழாகாதவகையில், பெருமானை இடையறாது தொழுது பக்தியில் ஆழ்வதே நன்னெறியாகும்’ என மணிவாசகர் நெஞ்சுக்கு அறிவுறுத்துகின்றார்.

‘வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே வல்வினைப்பட்டு

ஆழ்கின்றாய் ஆழாமற் காப்பானை ஏத்தாதே

சூழ்கின்றாய் கேடுனக்குச் சொல்கின்றேன்

வீழ்கின்றாய் நீஅவலக் கடலாய வெள்ளத்தே’          (திருச்சதகம்: 20)

சுட்டறுத்தல்

பொறி முதலிய கருவிகளின் துணையால், குறித்த ஒன்றினைச் சுட்டி நம் சிற்றறிவுக்கு எட்டியவாறு உணர்தல், சுட்டறிவாகும். ஆனால், ‘பெருமான், அத்தகைய பசுஞானத்தால் உணர வல்லவன் அல்லன்’. அதனைப் பெருமானே உயிர்க்கு அறிவுறுத்தித் தெளியச்செய்தலே சுட்டறுத்தலாகும் (சிற்றறிவு அகற்றல்). ’ஊனக்கண் பாசம் உணராப் பதியை ஞானக்கண்ணினில் சிந்தை நாடுக’ என்பது சிவஞானபோதம். அவனருளையே கண்ணாகக் கொண்டு காணமுற்பட்டால் மட்டுமே, இறைவன் அனைத்து பொருள்களின் குண குணியாகவும், அவற்றைக் கடந்த அரும்பொருளாகவும் விளங்குகின்ற பரத்துவத்தை உணரலாம். திருவருளே கண்ணாக இருந்து, உயிர்க்குப் பெருமானை உணர்த்துகிறது. ‘காண வல்லார்க்குக் கண்ணின் மணி’ என்பது திருமந்திரம் (பாடல்: 2823).

‘இனையன்நான் என்றுன்னை அறிவித் தென்னை

ஆட்கொண்டெம் பிரான் ஆனாய்’                 (திருச்சதகம்: 22)

என்னும் தொடர்கள், ‘தகுதிநோக்காது பெருமான், தானே எளியனாக எழுந்தருளி, இன்ன தன்மையன் என்பதைக் காட்டியருளினன்’ என்று, மணிவாசகரின் அருளனுபவத்தைச் சுட்டுகின்றன.

‘யான்’ ; ‘எனது’ என்னும் பற்றற்ற உயிர், தன்னை மறந்து, தன்னைச் சிறுபொருளாக உணர்ந்து, தன்னிலும் மேலான பெரும்பொருளை அறிதற்கு ஞானப்பேராவல் கொள்கிறது. தன்னை உணர்ந்த மெய்யணர்வு நிலையே, உயிர்க்கு, அன்பென்னும் அகக்கண்ணையும், அருளென்னும் வழித்துணையையும் தந்து, பெருமானுடன் பிரிவரியாத திருவருளுறவுக்கு வகைசெய்கிறது. ‘தனது அறிவென்னும் குறையுணர்வால், பெருமானைக் குறைவுற உணர்கின்ற அவலம் நேராதவகையில், பெருமானே தமக்கு குருவாகிவந்து, திருவருளையே கண்ணாகத் தந்தருளி, ஞானநிலையினை உணர்த்தியருளிய பெருங்கருணைக்கு நன்றியுடையவராக மணிவாசகர், தம்மை, ‘நாய்’ என்று குறித்தருளியுள்ளார்.

‘நாட்டார்கள் விழித்திருப்ப ஞாலத் துள்ளே

நாயினுக்குத் தவிசிட்டு நாயி னேற்கே

காட்டா தனவெல்லாங் காட்டிப் பின்னுங்

கேளா தனவெல்லாங் கேட்பித் தென்னை

மீட்டேயும் பிறவாமற் காத்தாட் கொண்டான்

எம்பெருமான் செய்திட்ட விச்சை தானே’                 (திருச்சதகம்: 28)

சுட்டறிவின் வழியல்லாது, அவனருளால் அவனைக் காணும்படியான வித்தையினைப் பெருமான் செய்தருளிய கருணையின் பெருமிதத்தை மணிவாசகர்,

‘சிந்தனைநின் தனக்காக்கி நாயி னேன்தன்

கண்ணினைநின் திருப்பாதப் போதுக் காக்கி

வந்தனையும் அம்மலர்க்கே யாக்கி வாக்குன்

மணிவார்த்தைக் காக்கிஐம் புலன்க ளார

வந்தனை ஆட்கொண்டுள்ளே புகுந்த விச்சை’                 (திருச்சதகம்: 26)

என்று குறித்தருளியுள்ளார். இப்பாடலில், ‘வாக்கு உன் மணிவார்த்தைக்கு ஆக்கி’ என்றமைந்த தொடர், பெருமானின் திருவடியில் அன்புபெருக்கி, மணிவாசகங்களால், திருவாசகத்தை அருளிச் செய்கின்றவகையில், பெருமான் தம்மிடத்தில் கீழான சுட்டறிவை மாய்த்துச் சிவஞானத்தை விளங்கச்செய்ததனைக் குறிப்பதாகும்.

ஆத்துமசுத்தி

சுட்டறிவாகிய சிற்றறிவுநிலை அகன்று, மனம், மொழி, மெய் ஆகிய முக்கரணங்களாலும் உயிர் தூய்மைபெற்று விளங்குவதே ‘ஆத்துமசுத்தி’ (ஆன்மத்தூய்மை) என்பதாகும். அத்தகைய தூய்மைநிலை, ‘மெய்யன்பு’ எனப்பெறும்; மெய்யன்பாகிய தூய்மைநிலை, தன்னை மறந்து, உலகியலை முற்றிலும் துறந்து, ஆன்மநாயகனாகிய பெருமானை உள்ளும் புறமும் இடையறாது தேடித் திரிகின்ற ஆன்மவிழிப்பைத் தருகிறது; இமைப்பொழுதும் பெருமானைப் பிரியாது, அன்பு மிகுந்து, ஆடுதலும், பாடுதலும், தேடுதலும், திகைத்தலும், தெளிதலுமாகிய அருளனுபவங்கள் உயிர்க்கு வாய்க்கிறது. அத்தகு அருளனுபவங்களுக்கு இடையூறு நேருங்கால், உடல் தாங்கி வாழவும் அவ்வுயிர் பொறுப்பதில்லை. அவ்வகையில் மணிவாசகரும் ஆத்துமசுத்தியுடன், பெருமானை அணுப்பொழுதும் பிரிந்திருக்க ஆற்றாமல், தீயில் வீழவும், மலையிலிருந்து பாயவும், பெருங்கடலில் வீழவும் துடிக்கின்றார்.

‘தாயி லாகிய இன்னருள் புரிந்தஎன் தலைவனை நனிகாணேன்

தீயில் வீழ்கிலேன் திண்வரை உருள்கிலேன் செழுங்கடல் புகுவனே’   (திருச்சதகம்: 39)

 கைம்மாறு கொடுத்தல்

கைம்மாறு கொடுத்தலாவது, பிறர் செய்த உதவிக்கு நன்றியாக நாம் அவர்கட்கு மீள உதவுதல். ‘கருணையே உருவமாகி, அனைத்து உயிர்க்கும் இரங்குதலே இறைவன், உயிர்கட்குப் புரிகின்ற பேருதவியாகும்; தாயைப் பிரிந்த கன்றெனப் பெருமானை இடையறாது தேடுதலே, நாம் அவனுக்குச் செய்கின்ற கைம்மாறாகும். அடிகளுக்கு அருளவேண்டி பெருமான், திருப்பெருந்துறையில் அருமையில் எளிய அழகனாக வந்தான். அதுகாறும் தாம், ‘அறிவீனன்’ என்னும் நிலையிலேயே இருந்ததாகவும், பெருமானே அருங்கருணையால் அடியவனாக ஆட்கொண்டு, அவனை முற்றும் அறிகின்ற சிவஞானத்தையும் தந்தருளினான்’ என்றும், அதனால் அவனிடத்தில் உண்மையான பக்தி செலுத்துதலே அதற்குரிய மேலான கைம்மாறு என்றும் மணிவாசகர் அறிவிக்கின்றார்.

‘அறிவ னேயமு தேயடிநாயினேன்

அறிவ னாகக்கொண் டோஎனை ஆண்டது

அறிவி லாமையன் றேகண்ட தாண்டநாள்

அறிவனோவல்ல னோஅரு ளீசனே’                 (திருச்சதகம்: 50)

என்றமைந்த பாடலில், ‘தாம் அறிவுடையவரா? அன்றி அறிவற்றவரா?’ என்று அடிகள் பெருமானிடத்தில் ஞானவினா எழுப்புகின்றார். அவ்வினா, அடிகள் தம்மை உணர்ந்த ஞானத்தெளிவின் வெளிப்பாடாகும்.

அநுபோகசுத்தி

செயல்கள், உயிர்க்கு வினைத்தொடர்பை ஊட்டுகின்றன. வினைத்தொடர்பால் உயிர் மேலும் பல பிறவிகளில் பிறந்திளைக்க நேரிடுகிறது. பிறவிகளை வாய்ப்பாகக்கொண்டு, ஆணவம், கன்மம், மாயையாகிய மும்மலங்களும், சார்ந்ததன் வண்ணமாக விளங்கவல்ல உயிரைக் கீழ்நிலைகளில் செலுத்தி, அதன் தூய்மையினைச் சிதைக்கின்றன. ஆனால், தன்னை உணர்ந்து, திருவருள் தொடர்பில் ஆழ்கின்ற சிவஞானிகளிடத்தில், ஆணவமலம் மெலிகிறது. மாயையின் மயக்கமும் நீங்குகிறது. அவர்களது கருவி கரணங்கள், சிவகரணங்களாகவும், சிந்தை, சிவச்சார்பிலேயே ஆழ்ந்தும், செயல், சிவனது அருள்விளையாடல்களாகவும் மேம்படுகின்றன. அவ்வுயர்நிலையினைச் சீவன்முத்தநிலை என்பர். அந்நிலையில், சிவத்துடன் பிரிப்பின்றிக் கலந்திருந்து, அழுந்தி அறிதலாகிய பேறு உயிர்க்கு வாய்க்கிறது. சீவன்முத்தரெனச் சித்தத்தைச் சிவன்பாலே வைத்த உறைப்பினாலேயே திருஞானசம்பந்தர், ‘எனதுரை தனதுரையாக’ என்று பாடியருளினார். மணிவாசகரும் அத்தகைய அருளுறுநிலைக்குத் தடையாக உள்ள உடம்பைச் சுமக்க ஆற்றாமல் புலம்புகின்றார். சீவன்முத்தர்களாகிய உண்மையடியார்கள் சிவச்சார்பில் உறுதிஉடையவர்கள்; அவர்கள், பெருமானது திருக்குறிப்பையே திருவருளாணையாக ஏற்றுப் பணிபவர்கள்; வினைத்தொடர்பினை ஒழித்த அவர்களது உயர்வு, திருப்பெருந்துறையில் அவர்கள், பெருமானின் கழல் அடைந்துய்ய வகைசெய்தது. ஆனால், தான்மட்டும், வினைத்தொடர்பை மேன்மேலும் பெறுகின்றகின்றவாறு உடம்பைப் பேணுகின்ற தாழ்வு கொண்டுள்ளதாகக் குறித்துள்ளார்.

‘மானேர் நோக்கி உமையாள் பங்கா வந்திங் காட்கொண்ட

தேனே அமுதே கரும்பின் தெளிவே சிவனே தென்தில்லைக்

கோனே உன்தன் திருக்குறிப்புக் கூடு வார்நின் கழல்கூட

ஊனார் புழுக்கூ டிதுகாத்திங் கிருப்ப தானேன் உடையானே’     (திருச்சதகம்: 55)

காருணியத்திரங்கல்

தாம் இடையறாமல் திருவருள் திளைப்பில் களிப்பினும், அடிகளின் அன்புள்ளம், தில்லையில் பெருமானைச் சேர்கின்ற பேராவலில் ஓயாமல் தவித்தது. திருப்பெருந்துறையில் ஞானகுருவாக வந்த பெருமானுடன் வந்த அடியார்களும் சிவசோதியில் கலந்து மறைந்தனர். ‘நீர் மட்டும் மண்ணுலகில் சிலகாலம் தங்கியிருந்து, தில்லையை வந்தடைந்து எம்மைச் சேர்க!’ என்று அடிகளுக்குப் பெருமானால் அருளாணை அருளப்பெற்றது. அவர் அருளியவாறு, ‘தில்லைக்கூத்தனைச் சேர்கின்ற கருணைப்பேறு எந்நாளில் வாய்க்கும்?’ என்பதே அடிகளின் தீராத பேராவலாக இருந்தது. அதற்கென, தில்லைப் பெருமானை வேண்டி,

‘வருகவென் றென்னை நின்பால் வாங்கிட வேண்டும் போற்றி’    (திருச்சதகம்: 68)

என்று பாடி, பெருமானின் கருணைக்கு ஏங்குகிறார்.

ஆனந்தத்து அழுந்தல்

சமயக்குரவர் முதலாயினோரின் மண்ணுலக இருப்பானது, மக்கள்தம் நல்வாழ்வின் பொருட்டு இறைவனால் அருளிச்செய்யப்பட்டதாகும். பிள்ளையாரும், அரசுகளும், நம்பிகளும் மண்ணுலகில் வாழ்ந்த பெரும்பேறே, சைவப்பெருஉலகின் தேவாரத் திருச்செல்வமாகத் திகழ்கிறது. அவ்வாறே, அடிகளின் மண்ணுலக வாழ்வும் நம்மைத் திருவாசகமென வாழ்விக்கிறது. அடிகள், திருவருள் திளைப்பில் ஆழ்ந்து, மண்ணுலகில் சீவன்முத்தரென வாழ்ந்தநாளில், தில்லை நகரடைந்து, அம்பலவனைக் கூடுவதே அவரின் பெருவிருப்பாக நிலைத்திருந்தது.

அடிகள், தில்லையை அடைதலும், அங்கு பலநாள் தங்கியிருத்தலும், பௌத்தரை வாதில் வெல்லுதலும், திருக்கோவை பாடுதலும், பெருமானே திருவாசகத்தைப் படியெடுக்க வரவிருத்தலுமாகிய திருவிளையாடல்கள் தில்லையின்கண் நிகழ்தற்கு உரியகாலம் வாய்க்கின்றவரையில், அடிகள் தில்லையை அடைதற்குப் பெருமான் திருவருளாணை அருளவில்லை. ‘வேண்டத்தக்கது அறிவோய் நீ; வேண்ட முழுதும் தருவோய் நீ; வேண்டும் பரிசு ஒன்று உண்டென்னில், அதுவும் உன்தன் விருப்பன்றே’ என்ற ஞானத்தெளிவு கொண்ட அடிகள்,

‘உண்மையடியார்கள் அன்று உம்முடன் வர அருளி, என்னை மட்டிலும் மண்ணுலகில் விடுத்துச் சென்றீர்; ‘அவர்களது உண்மையான பூசனைப்பயனே அவர்கட்கு உம்மைப் பெற்றுத்தந்தது. அவ்வகையில் யானும் உம்மைப் பெறுதற்குக் கருவியாக, ‘பூசனைப்பேற்றினைத் தந்தருள்க!’ என பெருமானிடத்தில் வேண்டுகிறார். சிவானந்தத்தில் அழுந்தியிருக்கக் கருவியாகிய மெய்யன்பை விளைவிக்கின்ற பூசனைப் பேற்றை வேண்டுபவராக,

‘புணர்ப்ப தாக அன்றி தாக அன்பு நின்க ழற்கணே

புணர்ப்ப தாக அங்க ணாள புங்க மான போகமே’ (திருச்சதகம்: 71)

என்று பாடியுள்ளார். இத்தொடர்களில், ‘புங்கமான போகம்’ என்பது, மேலான பேறு என்பதாகும்.

பூசனையே மேலான பேறாகும். ‘ஏடுடைய மலரால் முனைநாள் பணிந்தேத்த அருள்செய்த’ என்பது, பிள்ளையார் தேவாரம். அதனாலேயே அம்மையும் அப்பனை அடைவதற்குரிய பேறாகப் பூசனையை வேண்டினாள். அப்பனும் அவளது பூசனைக்கு உகந்து,  ‘நின் பூசனை என்றும் எம்பால் முடிவதில்லை’ என்று அருளியுள்ளான். அடிகளும் அத்தகைய அருள்பேற்றினைப் பெற விழைகின்றார். வழிபாடாகிய இன்பத்தில் இடையறாது திளைக்கின்ற வேட்கையைச் சுட்டுவதால் இத்திருப்பதிகத் தொகுதிக்கு, ‘ஆனந்தத்து அழுந்தல்’ என்னும் பெயர் பொருத்தமுடையதாகும்.

 ஆனந்த பரவசம்

‘இறைவனுடன் கூடியிருத்தலே, ‘சிவானந்தம்’. அத்தகைய பேற்றுக்கு மெய்யன்பே கருவியாகும்’ என்று தெளிந்த மணிவாசகர், தமது தாழ்நிலையினை உணர்ந்து கழிவிரக்கம் கொண்டார். ‘பெருமானை அடைந்து உய்வுற்ற அடியார்கள் அனைவரும், ‘உண்மையடியார்கள்’ என்னும் பக்குவநிலையும், ‘பழவடியார்’ என்னும் தகுதிநிலையும் பெற்றவர்கள். ஆனால், தமது தகுதியோ, அவர்களினும் குறைந்ததாக இருக்க, அவர்களைப்போலவே சிவனடி கூடிடக் காலம் தாழ்வதற்குக் கவலை கொள்வதில் பொருளில்லை’ என ஆற்றாமையால் தம்மைத்தாமே தேற்றிக்கொள்கின்றார். ‘நல்லபசுக்கள் இடையனைக் கண்டு அன்பின் பெருக்கில் கனைக்க, இடையனைக் காணக் கண்ணற்ற குருட்டுப் பசுவும், பிற பசுக்களுடன் கலந்து கனைக்கின்ற அறியாமையைப் போன்றதே தனது முயற்சியும்’ என்பது மணிவாசகரின் சிந்தனை.

‘தாராய் உடையாய் அடியேற் குன்தா ளிணையன்பு

பேரா உலகம் புக்கா ரடியார் புறமே போந்தேன்யான்

ஊரா மிலைக்கக் குருட்டா மிலைத்திங் குன்தா ளிணையன்புக்கு

ஆரா அடியேன் அயலே மயல்கொண் டழுகேனே’ (திருச்சதகம்: 87)

 

என்று பாடிய அடிகள், மெய்யன்பர்கள், தீ சேர் மெழுகாக உள்ளம் உருகிக் கரைந்ததே அவர்களின் தனித்தகுதியாக அமைந்ததனை உணர்ந்தார். தாமும் அவ்வகையையே பின்பற்றி, பெரும்பற்றப் புலியூரானைக் கூட எண்ணி,

‘ அழுகேன் நின்பால் அன்பாம் மனமாய் அழல்சேர்ந்த

மெழுகே அன்னார் மின்னார் பொன்னார் கழல் கண்டு

தொழுதே உன்னைத் தொடர்ந்தா ரோடுந் தொடராதே

பழுதே பிறந்தேன் என்கொண் டுன்னைப் பணிகேனே’      (திருச்சதகம்: 88)

 

என்று தெளிந்தார். சிவானந்தத்தைப் பெறுதற்குரிய பெருநெறியாக, அன்பென்னும் ஆறு கரையது புரள, கண்ணீர்ப் பெருவெள்ளம் பெருக அழுதலாகிய சிவானந்தப் பரவசத்தில் ஆழ்ந்தார்.

‘யானே பொய்என் நெஞ்சும் பொய்என் அன்பும்பொய்

ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே’       (திருச்சதகம்: 90)

ஆனந்தாதீதம்

அடிகளுக்குப் பெருமான் இடையறாத மெய்யன்பினை வழங்கிப் பித்தனாக்கினான்; அவன் அன்பருக்கும் அன்பனாக்கி அருளினான்; திருக்கோயில் தொறும், அழுது அரற்றி, அவனைத் தேடித் திரியும்படியும் செய்தருளினான். ‘தாம் வளர்த்த நச்சுமரத்தையும் வெட்டத்துணியாத பெரியோர் போல, தகுதியில்லாமையை அறிந்திருந்தும் பெருமான் தம்மை ஒதுக்காமல், பேரின்பப்பேற்றுக்குக் கருவியாகிய மெய்யன்பு மேன்மேலும் வளரும்படி அருளிய அருந்திறத்தை எண்ணியெண்ணி அடிகள், அளவிறந்த ஆனந்தவெள்ளத்தில் திளைத்தார். பெருமான், பக்தி என்னும் வயலுள், ‘மெய்ம்மை’ என்னும் வித்தின்றியே, ‘சிவானந்தம்’ என்னும் பெரும்பயிரை வளர்த்ததாகக் குறித்தருள் கின்றார். தமக்கு அருளிய பேற்றினை நினைந்த அடிகள்,

‘விச்ச தின்றியே விளைவு செய்குவாய்’            (திருச்சதகம்: 96)

‘நச்சு மாமர மாயி னுங்கொலார்

நானும் அங்ஙனே உடைய நாதனே’     (மேலது பாடல்)

எத்தகைய பிழை செய்தாலும், தம்மை அரவணைத்துக் காக்கின்ற பெருமான், திருவடிப்பேற்றுக்குத் தம்மைத் தகுதியுடையவனாக ஆக்கியதும், கல்லை மென்கனியாக்கிய வித்தை’ என்று வியக்கின்றார்.

‘கல்லை மென்கனி யாக்கும் விச்சைகொண்

டென்னை நின்கழற் கன்ப னாக்கினாய்’    (திருச்சதகம்: 94)

முடிவுரை

அடிகளின் அருளனுபவப் பிழிவாக உள்ள திருச்சதகம், நமக்குப் பெருமானையே பெற்றுத்தர வல்லது; பக்தியின் பெயரால், அவனடியார் போல நடிக்கின்ற பொய்மையை நீக்கவல்லது; உயிரறிவாகிய சுட்டறிவை நீக்கி, பேரறிவால் பெருமானைத் தேட வழிகாட்டுவது; ‘ஞானம் ஈசன்பால் அன்பே’ என்னும் ஆன்மதூய்மையினை வலியுறுத்துவது; ‘நீங்காத அடிமைத்திறமே’ பெருமானுக்கு, நமது கைம்மாறு என நிறுவுவது. சிவானந்தத்துக்குத் திருவருளே கருவியாவதை விளங்கச்செய்வது; சிவானந்தத்தில் அழுந்தவும், மேன்மேலும் பரவசத்தில் திளைக்கவும், மெய்யன்பே மேன்மேலும் வகைசெய்யும் என்று விளக்குவது; தன்னை மறந்து, உள்ளம் உருகிக் கண்ணீர் சிந்துதலே, ‘உண்மையான பக்தி’ என்று உணர்த்தவல்லது.

திருச்சதகத்தின் தெளிபொருளைச் சான்றோர், ‘பக்தி வைராக்கிய விசித்திரம்’ என்று வரையறுப்பர். பக்தியாவது, பெருமான்பால், அடிகள் கொண்ட நிலையான பேரன்பு; வைராக்கியமாவது, அவர்தம் பேரின்பப் பற்றுறுதி; விசித்திரமாவது, வியப்புணர்வு. பெருமானின் எளிவந்த கருணையினை எண்ணுந்தொறும், தகுதியின்மையினைப் பொருட்படுத்தாமல் பெருமான், தனக்கு இரங்குகின்றமையினை எண்ணுந்தொறும் எழுகின்ற பெருவியப்பு. இத்தகைய அருளனுபவப் பதிவுகள், ‘யானே பொய்என் நெஞ்சும் பொய்என் அன்பும்பொய்; ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே’ எனப் பக்திநெறி காட்டவல்லன.

துணைநூல்கள்:

  1. திருவாசகம் (மூலம்), சைவசித்தாந்தப் பெருமன்றம், சென்னை வெளியீடு, ஆண்டு: 1999.
  2. திருவாசகம்-திருச்சதகம் (பண்டிதமணி உரை), மேலைச்சிவபுரி சன்மார்க்கசபை வெளியீடு, ஆண்டு: 1985

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.