பேராசிரியர் ச. அகத்தியலிங்கனாரின் “சாகாவரம் பெற்ற சங்கப் பாடல்கள்”
முனைவர் ப.சு. மூவேந்தன், உதவிப்பேராசிரியர் – தமிழியல்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.
பேராசிரியர் ச. அகத்தியலிங்கனார் தமிழ்மொழிக்குச் செய்துள்ள பணிகள் ஏராளமானதாகும். மொழியியல் ஆய்வுகளில் தன்னிகரற்று விளங்கினாலும். மொழியியல் நோக்கில் சங்க இலக்கியத்தையும் அணுகி, உலக இலக்கியங்களில் மிக உன்னதமான நிலையினைத் தமிழ்மொழி இலக்கிய, இலக்கணங்கள் பெற்றுள்ளதனை ஆய்வுவழி வெளிப்படுத்தியுள்ளார்.
பேராசிரியர் அகத்தியலிங்கனார் சங்க இலக்கியங்களின் செவ்வியல் தன்மைகள் குறித்துப் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள் எழுதி வெளியிட்டுள்ளார். அவற்றுள், “சாகா வரம் பெற்ற சங்கப் பாடல்கள்” என்னும் ஆய்வுநூலில் பின்பற்றியுள்ள ஆய்வு நெறிகள் குறித்து இவண் விளக்கப்படுகின்றது.
தமிழ் மொழியில் இடம்பெற்றுள்ள இலக்கியங்களுள் சங்க இலக்கியங்கள் தனித்திறம் பெற்றவையாகும். மூவாயிரம் ஆண்டுப் பழமையுடைய சங்க இலக்கியங்கள் இன்றும் படிப்பவர் உள்ளங்களில் எழுச்சியையும், உணர்ச்சியையும் ஊட்டவல்லனவாய்த் திகழ்வதற்கு அதில் இடம்பெறும் கருத்துக்களும் ஒரு காரணமாக அமைந்துள்ளன. இதன் பொருட்சிறப்பில் தன் உள்ளத்தைப் பறிகொடுத்த அகத்தியலிங்கனார், தான் பயின்றபோது பெற்ற அனுபவத்தைப் பிறர்க்கு எடுத்துரைக்கும் நோக்கில் இந்நூலினைப் படைத்துள்ளார் என்பது இதன் முன்னுரையால் புலனாகின்றது.
சங்க இலக்கியத்தின் தனிச்சிறப்பினைக் குறித்து, “சங்க இலக்கியம் ஒரு செவ்வியல் இலக்கியம். செவ்வியல் இலக்கியம் என்றாலே நிலைபேறும் நீங்காது நெஞ்சில் நிற்கும் தன்மையும் கொணடு விளங்கவேண்டும் என்ற நிலையில் சங்க இலக்கியமும் நீண்ட நிலைபேறும் நெஞ்சிலிருந்து நீங்காத நிலையும் கொண்டு தமிழ் இலக்கிய உலகில் தனிப்பெரும் இலக்கியமாக விளங்குவது. செவ்வியல் இலக்கியங்கள் என்று கருதப்படும் கிரேக்க, ரோம, ஹீப்ரு, சமஸ்கிருத இலக்கியங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இதன் பெருமையும் தனித்தன்மையும் தெரியவரும்” என்று இந்நூலின் முன்னுரையில் எடுத்துரைக்கின்றார்.
“இந்நூலில் குறுந்தொகையில் இடம்பெறும் தலைசிறந்த நான்கு பாடல்களைக் கொண்டு ஆராய்ந்து கூறப்பட்டுள்ளது. அப்பாடல்களின் கருவையும், செம்மாந்த போக்கையும், செறிவுநிறைந்த கவிதை உத்திகளையும் செவ்வியல் பண்புகளையும் இன்னோரன்ன பிறவற்றையும் எடுத்துரைப்பதே இந்நூலின் நோக்கம்” என்று தம் ஆய்வுப்பரப்பினையும், ஆய்வின் நோக்கத்தினையும் எடுத்துரைத்துச் சொல்கின்றார். இவை ஒரு செறிவார்ந்த ஆய்வாளர்க்குரிய நிலையினையும், அவரது திடமான கொள்கை நெறியினையும் எடுத்துரைப்பதாய் அமைந்திருக்கின்றது.
சொல்லும் கருத்தின் சொல்நேர்த்தி, சொல் தேர்வு, ஆய்வின் தேவைக்கேற்ற உத்திகள், எளிமையான சொற்கள்; வலிமையான கருத்துக்கள் என இந்நூலில் அகத்தியலிங்கனார் எல்லா இடங்களிலும் நிறைந்து விளங்குவதனை இந்நூலால் தெளிவாக அறிந்துகொள்ள முடிகின்றது.
இந்நூலில் குறுந்தொகையில் இடம்பெறும் “யாயும் ஞாயும் யாராகியரோ?”, “நிலத்தினும் பெரிதே, வானினும் உயர்ந்தன்று”, “சிறுகோட்டுப் பெரும்பழம்”, “காலே பரிதப்பினவே” என்னும் நான்கு பாடல்கள் குறித்து ஆய்வுகள் நிகழ்த்தியுள்ளார்.
இப்பாடல் குறித்த ஆய்வுகளில் பேராசிரியர் அகத்தியலிங்கனார் பின்பற்றியுள்ள ஆய்வுநெறிகளாக,
- உருவம் குறித்து விளக்குதல்
- கூற்று முறையினை எடுத்துரைத்தல்
- உள்ளடக்கம் குறித்து விளக்குதல்
- பொருள்விளக்கம் தருதல்
- செவ்வியல் தன்மையைப் புலப்படுத்துதல்
- ஒப்புநோக்கி எடுத்துரைத்தல்
- உலகியலோடு உணர்த்துதல்
என்பனவற்றைக் காணமுடிகின்றது. இவை குறித்துத் தனித்தனியே விளக்கப்படுகின்றன.
- உருவம் குறித்து விளக்குதல்
கவிதைக்குரிய சிறப்புக்கூறுகளுள் அதன் உருவம் குறிப்பிடத்தக்கதாகும். சிறிய அடிகள், குறைவான வாக்கியங்கள் கொண்டு உயர்ந்த நோக்கில் படைக்கப்படும் கவிதைகள் காலத்தை வென்றுவாழும் தன்மை கொண்டு விளங்கும் என்பதனைக் குறுந்தொகைப் பாடல்கள் கொண்டு விளக்குகின்றார்.
“சிறந்த கவிதை என்பது செம்மையான பாடுபொருளால் மட்டுமே சிறப்பதில்லை. அப்பாடுபொருளையும் எவ்வாறு கவிதை நோக்கில் கவிதை வளத்துடன் கூறுகின்றது என்பதையும் பொறுத்துத்தான் அதன் வெற்றி உள்ளது என்பதையும் உணரலாம்” 1 என்று கவிதைக்குரிய உள்ளடக்கம் குறித்து விளக்கின்றார்.
சங்க இலக்கியப் பாடல்கள் இன்றும் சுவை மிகுந்து காணப்படுவதற்குக் காரணம் அதில் இடம் பெறும் சொல்லாட்சிகளே. அவற்றுள் ஒரே சொல் பலபொருள்களில் இடம்பெறுவதும், வந்த சொல்லே மீண்டும் மீண்டும் வரத்தொடுப்பதும் தனிச்சிறப்பு எனலாம்.
“கவிதை உருவாக்கத்தில் ஒரே மாதிரியான செய்திகளை ஒன்றன்பின் ஒன்றாக, அடுக்கு அடுக்காகக்கூறி, வாசிப்போர் உள்ளத்தில் ஒருவகையான ஒருமை உணர்ச்சியை ஏற்படுத்துதல் கவிஞர்களிடையே காணப்படுகின்ற ஒரு சிறந்த கவிதை உத்தியாகும். சங்கப் பாடல்களில் இத்தகைய உத்தியை ஏராளமான பாடல்களில் காணலாம்” என எடுத்துக்கூறி,
“காலே பரிதப் பினவே கண்ணே
நோக்கி நோக்கி வாள்இழந் தனவே
அகல்இரு விசும்பின் மீனினும்
பலரே மன்ற இவ்வுலகத்துப் பிறரே.” (குறு. 44)
என்னும் குறுந்தொகைப் பாடலை எடுத்துரைக்கின்றார். இந்தப் பாடல்கள் எடுத்த எடுப்பிலேயே வாசிப்பவர் உள்ளத்தில் சென்று சேருவதற்குக் காரணம் உடன் போக்குச் சென்ற மகளைத் தேடிய நிலையில் உண்டான களைப்பை, களைப்பு உணர்வை மீண்டும் மீண்டும் கூறுகிற நிலைதான் என்பதை யாரும் உணர முடியும் என்று எடுத்துரைக்கின்றார்.
தமிழ் இலக்கியப் பரப்பில், ஒரே மாதிரியான அல்லது ஒரே இலக்கணக்கூறுகளைப் பயன்படுத்தி ஒப்பற்ற பல பாடல்கள், கவிதைகள் உருவாகியிருப்பதை அன்றுமுதல் இன்று வரை காணமுடியும் என்று எடுத்துரைக்கின்றார். சங்க இலக்கியப் பாடல்கள் சிறந்து விளங்குவதற்கு அதில் இடம்பெற்றுள்ள சொல்லாட்சிகளும், உருவ முறைகளும் ஒரு காரணியாக அமைந்திருக்கின்றது என்பது அகத்தியலிங்கனாரின் முடிபான கருத்தாகும்.
“யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறை கேளீர்”
என்னும் பாடலடிகளில் இடம்பெற்றுள்ள கவிதைக்கூறுகள் குறித்து எடுத்துரைக்கும் ஆசிரியரின் திறம் போற்றத்தக்கதாகும். இப்பாடலடிகளில் இடம்பெற்றுள்ள முரண் தொடைகள் குறித்தும் விளக்குகின்றார்.
ஓசை இன்பத்திற்கு அடிப்படைய யாப்பு. பொருள் இன்பத்திற்கு அடிப்படையாக இருப்பது மொழியமைப்பு. இந்த இரண்டையும் இணைத்து ஒரு சிறந்த இரண்டறக்கலந்த கலவையாக மாற்றி ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரித்தரியாதவாறு செய்வதே கவிதைக்கலை. யாப்பில் கவிதைமொழி அமைப்பும், கவிதையின் மொழி அமைப்பில் யாப்பும் இருக்கும். இவற்றை இணைப்பதில் தான் கவிஞனின் திறம் உள்ளது. அத்தகு திறம் சங்கப் புலவர்களிடம் நிறைந்திருந்ததாக எடுத்துரைக்கின்றார் பேராசிரியர். 2
- கூற்று முறையினை எடுத்துரைத்தல்
சங்க இலக்கியங்கள் கூற்று முறையில் அமைந்திருக்கின்றன. படைப்பாளன், படைப்புக்கான ஒரு சூழலை ஏற்படுத்தி, அதைப் பிறர் வாயிலாகப் படிப்பவன் உள்ளத்தில் பதிய வைக்கின்றான். இதில் படைப்பாசிரியர் நேரடியாகத் தன் செயலைச் செய்யாமல், பிறர் கூற்றின் வாயிலாக வெளிப்படுகின்றான். இவ்வாறு பிறர் வாயிலாக வெளிப்படும் திறனும் சங்க இலக்கியத்தின் செவ்வியல் தன்மைக்கு ஒரு காரணியாக அமைந்திருப்பதாகக் கூறுகின்றார் ச. அகத்தியலிங்கனார்.
“சங்க இலக்கிய அகப்பாடல்கள் எல்லாம் அகமாந்தர்கள் தங்கள் தங்கள் வாயினால் கூறுவதாக ஆக்கப்பட்ட பாடல்களே”3 என்பர்.
“தாம் கூற வந்த கவிதைப்பொருளை வாசிப்போன் உள்ளத்தில் நீங்காது நிலைபெறச் செய்வதற்காகத் தான் தலைவன் வாயில் வைத்துக் கூறுவது போன்று கூறுகின்றார். ….ஒற்றுமையுடைய, அல்லது ஒரே மாதிரியான செய்திகளை அடுக்கு அடுக்காகக் கூறி அதன் பின்னர் கூற வேண்டிய பொருளையும் கூறவேண்டிய நிலையில் கூறும்போது தான் ஒருவகைக் கவிதை உணர்வும், கவிதை அழகும் உண்டாகும் என்பதையும், அந்நிலையில்தான் வாசிப்போன் உள்ளத்தில் கவிதை உணர்வுடன் கவிதைப் பொருளை உணரவைக்கமுடியும் என்பதையும் நன்கு அறிந்த செம்புலப் பெயனீரார் இத்தகைய செம்மையான உத்தியைக் கையாண்டுள்ளார்” 4 என்று எடுத்துரைக்கின்றார்.
சங்க இலக்கியங்களில் கூற்று என்பது அமைந்துள்ள முறைமை குறித்து, “கூற்று நிலையில் அந்தந்த கதை மாந்தர்களே தத்தம் எண்ணத்தையும், உணர்வையும் கூறும்போது உண்மையான ஒரு தோற்றத்தையும் உணர்ச்சியையும் தந்து நிற்கக் காணலாம். எனவே, உணர்வை வாசகர்கள் உள்ளங்களிலே எழுப்புவதற்கு இதனை ஒரு நல்ல உத்தியாகக் கவிஞர்கள் கையாண்டிருக்கலாம்” என்றும், “சங்க காலக் கவிஞர்கள் சான்றோராகவும், ஆன்றோராகவும் வாழ்ந்த நிலையில் காதல் எண்ணங்களையும் நிகழ்ச்சிகளையும் தாங்கள் தங்கள் உணர்வினைக் கூறுவது போல் அமைந்துவிடக்கூடாதே என்று எண்ணியும் கூட இந்தக் கூற்று வடிவத்தைக் கையாண்டிருக்கலாம். எனினும் சங்க இலக்கியக் கர்த்தாக்கள் தங்கள் கவிதைகளைத் தற்சார்பு நிலையில் ஆக்க விரும்பவில்லை என்றும் அந்த நிலையைத் தவிர்த்துப் பொதுச்சார்பு நிலையில் தங்கள் கவிதைகளை ஆக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் கூற்று என்ற அருமையான ஒரு அமைப்பு உத்தியை அவர்கள் கையாண்டனர் என்று கருதுவதே சிறப்பாகும்” 5 என்றும் எடுத்துரைக்கின்றார்.
சிறந்த கவிஞர்கள் தாங்கள் கூறப்போகும் கவிதைப் பொருளை மிக அருமையாக முதலியே குறிப்பாகக் காட்டிவிடுவார்கள். இது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இருக்கலாம். மிகச்சிறந்த கவிஞர்கள் மறைமுகமாக மிக அருமையாகக் குறிப்பிட்டுக் கோடிட்டுக்காட்டி விடுவர். இந்நிலையில் செம்புலப் பெயனீரார் தலைவன் தலைவியர் உள்ளங்களின் சங்கமத்தை மிகமிக நுணுக்கமாகக் காட்டிவிடுவது நினைந்து மகிழ்வதற்குரியது என்று போற்றவும் செய்கின்றார்.
இவ்வாறு சங்க இலக்கியங்கள் கூற்று வடிவில் நிற்பதால் தான் அவை இன்றும் நிலைத்து நிற்கின்றன என்று எடுத்துரைக்கின்றார்.
- உள்ளடக்கம் குறித்து விளக்குதல்
கவிதையின் உள்ளடக்கமாகக் கரு என்பது அமைகின்றது. கரு என்பது கவிதையின் உள்ளீடாக அமைவது ஆகும். ஒரு பாடல் சிறந்த நிலையினைப் பெறுவது அதன் உருவத்தாலும், உள்ளடக்கத்தாலும் ஆகும். “உலகப் பொதுமையைத் தன்னகத்தே கொண்டிருக்கும் ஒரு தலைசிறந்த கருவினைக் கொண்டவை சங்கப் பாடல்கள்” 6 என்பது பேராசிரியர் கருத்தாக அமைந்துள்ளதனைக் காணமுடிகின்றது.
ஒரு சொற்கலையாக்கத்தின் சிறப்புக்கு அதன் கரு அல்லது பாடுபொருள் மட்டும் சிறந்திருந்தால் போதாது. எந்த ஒரு உணர்வையும் பல்வேறு நிலைகளில் வெளிப்படுத்தலாம். ஆனால், கவிஞன் தேர்ந்தெடுப்பது ஒரே வகைதான். அந்த வகை கற்பனை வளமும் கவிதைப் பண்பும் வாசகனின் வாழ்வைத் தொடும் நிலையும் நிறைந்ததாக இருக்கும்போது கவிதை வெற்றி பெற்றுவிடுகின்றது.
ஒரு கவிஞன் அல்லது நாடக ஆசிரியன் அல்லது எழுத்தாளன் தன்னுடைய கலையாக்கத்திற்குரிய கருப்பொருளைத் தேர்ந்தெடுப்பதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். தான் படைக்க விரும்புவது நிச்சயமாக வெற்றிபெறும் என்ற நம்பிக்கையுடன் அவன் தன் படைப்பினை வெளிப்படுத்துகின்றான். இந்த நம்பிக்கையுடன் படைக்கப்பட்டனவே சங்க இலக்கியத்தில் படைக்கப்பட்டுள்ள தலைசிறந்த கவிதைகள் என்று எடுத்துரைக்கின்றார்.
காதலின் பரிணாமத்தைக் கூறுவது தான் குறுந்தொகையின் மூன்றாவது பாடலான “நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று…” என்று தொடங்கும் பாடல். பரந்த நிலத்தையும், உயர்ந்த வானையும் ஆழக்கடலையும் எடுத்துக்காட்டி காதலின் பரிணாமத்தை மூன்று உவமைகளின் மூலம் மிக அழகாகக் கூறிநின்றார். அதிலும் ஒரு முகப்போக்கில் ஒரே மாதிரியான வாக்கியங்களில், ஒரே மாதிரியான வினைச்சொல்லில் ஒரே மாதிரியான ஒப்புமைத் தொடரில் கூறி நிற்பது அறியத்தக்கதாகும்.
சங்க இலக்கியத்தின் முக்கியமான கருவே, தலைவன் தலைவியரிடையே காணப்படும் காதலின் பரிமாணம் தான். சங்க அக இலக்கியம் ஒரு ஆண், ஒரு பெண் இவர்களிடையே காணக்கிடக்கும் காதலை அடிப்படையாகக் கொண்டது. இக்காதலின் பரிமாணம், அதன் பவித்திரம், அதன் வேகம், விறுவிறுப்பு, அதன் தெய்வீகம், அது உண்டு பண்ணும் மாற்றம், அதனால் ஏற்படும் பல்வேறு விளைவுகள் போன்றவற்றை மையமாகக் கொண்டவை தான் சங்க அகப்பாடல்கள். சிறந்த அகப்பாடல்கள் எனக் கருதப்படும் பாடல்கள் எல்லாம் இதனை அடிப்படைக் கருவாகக் கொண்டவை தாம்” 7 என்று எடுத்துரைக்கின்றார்.
- பொருள் விளக்கம் தருதல்
சங்கப் பாடல்களுக்கு ஆய்வுநோக்கில் விளக்கம் தர முனைந்த பேராசிரியர், அப்பாடல்களின் பொருள்விளக்கத்தினை நயத்துடன் எடுத்துரைத்துள்ள திறம் போற்றத்தக்கதாய் அமைந்துள்ளது. திறனாய்வாளன், தான் ஆய்வுசெய்ய விரும்பும் பொருளில் ஆழ்ந்த உடுபாடும் பற்றுதலும் கொண்டிருத்தல் வேண்டும். அப்போது தான் ஆய்வுகள் பயனுள்ளதாய் அமைந்திருக்கும் என்னும் கூற்றை மெய்ப்பிக்கும் வகையில், தான் ஒரு மிகச்சிறந்த சுவைஞராய் முதலில் நின்று, பின்னரே பாடல்களுக்குப் பொருள்விளக்கம் தரமுனைந்துள்ள திறம் பேராசிரியரின் தனிச்சிறப்பினை எடுத்துரைப்பதாய் அமைந்துள்ளது.
“காலே பரிதப்பினவே” என்னும் பாடலில், “தலைவி உடன்போக்குப் போய்விடுகின்றாள். தோழி செவிலிக்கு உரைக்கின்றாள். செவிலியோ ஒரு சிறந்த தாய். செம்மையான உணர்வும், சிறந்த பண்பும் உடையவள் தான். ஆனால் அதே நேரத்தில் தான் பேணி வளர்த்த தலைவியின் போக்கு சரியாகத் தோன்றவில்லை. எங்கே போய்விடுவாள்? எப்படிப் போய்விடுவாள்? எனக்குத் தெரியாத இடம் எங்கே என்று எண்ணுகின்றாள்.
சுரத்திடைச் சென்ற தலைவியைத் தேடுகின்றாள்; தேடுகின்றாள்; தேடிக்கொண்டே செல்லுகின்றாள். நடக்கின்றாள். கடுமையான வெயில். காட்டுப்பாதை. கால்பட்ட இடம்எல்லாம் கடும் சுரத்தின் வெம்மை. வெந்து போகின்றாள். விரக்தி மெல்ல மெல்ல தலை தூக்குகின்றது. எனினும் உள்ளம் தளரவில்லை. ஆனால், கால்தளர்ந்து விடுகின்றது. தள்ளாடி விடுகின்றது. எதிரே எத்தனை எத்தனையோ இளம் தலைவன் தலைவியர்கள் வந்து கொண்டே இருக்கின்றனர். தன் மகளும் அவள்தன் தலைவனுமா? என்று எட்டி எட்டிப்பாய்ந்து ஓடிப் பார்க்கின்றாள். ஆனால், அவர்களோ பிறர். பலர் வருகின்றனர். ஆனால் தன் மகள் இல்லை. அவள் தலைவனும் இல்லை. உள்ளமும் தளருகின்றது. இந்தப் பின்னணியில் தான் வெள்ளிவீதியார் தன் சாகாவரம் பெற்ற பாடலின் முதல் அடியை இல்லை முதல் வாக்கியத்தை ‘காலே பரிதப்பினவே’ என உணர்வுடனும் கவிதைப் பண்புடனும் கூறுகின்றாள்” 8 என்று பாடலின் சுவையோடு ஒன்றிப்போய் விளக்கும் திறன் பேராசிரியருக்கு மட்டுமே சாலும்.
- செவ்வியல் தன்மையை எடுத்துரைத்தல்
சங்க இலக்கியங்கள் சுயச்சார்பு இல்லாமல் பொதுச்சார்பு நிலையில் இயங்குவதனால் அவை செவ்வியல் தன்மையைப் பெற்று விளங்குகின்றன என்று எடுத்துரைக்கின்றார். எந்த வித உணர்வையும் பொதுமைப்படுத்திக் கவிஞனின் எந்த விதமான நேரடியான தாக்கமும் இல்லாமல் இருப்பதற்காகத்தான் சங்க காலக் கவிஞர்கள் கூற்று என்ற சக்தி வாய்ந்த ஒரு உத்தியை உருவாக்கி நின்றனர். எந்த ஒரு அகப்பாடலிலும் கவிஞனை நேரடியாகக் காணுவதில்லை; கேட்பதில்லை; அவனுடைய வாழ்வையோ, வாழ்வுத் துன்பங்களையோ நாம் உணருவதில்லை. அவர்களின் மன நிலையையே உணருகிறோம்.
சங்க இலக்கியம் ஒரு செவ்வியல் இலக்கியம். சொல்ல வேண்டிய செய்திகளை அதிகமான உணர்ச்சிப் பிழம்புகளுக்கோ, எல்லை மீறிய உணர்வுகளுக்கோ இடம் இல்லாமல் சில இலக்கிய மரபுகளின் அடிப்படையில் செம்மையாகவும், சிறப்பாகவும் கூறும் இலக்கியம்” என்று சங்க இலக்கியத்தின் சிறப்புக்கூறினை எடுத்துரைக்கின்றார்.
“உடன்போக்கு என்பது சங்க இலக்கியங்களில் மிகச் சிறந்து விளங்கும் ஒரு துறையாகும். சிறந்த தலைமகனும், சிறந்த தலைமகளும் தங்களுடைய வரைவைப் பிறர் மறுக்க வேறுவழி எதுவும் இல்லாமல் தலைவியின் கற்பையும், தலைவனின் காதல் ஆற்றாமையையும் காத்தல் பொருட்டுத் தோழியும், தலைவன் தலைவியரும் இணைந்து எடுக்கும் ஒரு சிறந்த முடிவின் செம்மையான வெளிப்பாடு அல்லது செயல்பாடு ஆகும்” என்று எடுத்துரைத்து, அதற்குச் சான்றாக வெள்ளிவீதியாரின் “காலே பரிதப்பினவே” என்று தொடங்கும் குறுந்தொகைப் பாடலைக் காட்டுகின்றார்.
வெள்ளிவீதியார் நினைத்திருந்தால் நிச்சயமாக உடன்போக்கு என்பது ஒரு சிறந்த நிகழ்ச்சி என்றோ, செம்மையான ஒரு வழக்கு என்றோ வெளிப்படையாகக் கூறியிருக்கலாம். அவ்வாறு செய்யாமல்,
“அகலிரு விசும்பின் மீனினும்
பலரே மன்றஇவ் வுலகத்துப் பிறரே.”
என்று கூறுகின்றார். இது ஒரு செவ்வியல் நிலை. இந்தச் செவ்வியல் நிலையைக் காட்டும் ஒரு உத்தியாகத் தான் சங்ககாலக் கவிஞர்கள் உள்ளுறை, இறைச்சி போன்ற உவமைக்கூறுகளைக் கையாண்டு சங்க இலக்கியத்துக்கு ஒரு தனித்தன்மையையும், தனித்துவத்தையும் சாகாவரத்தையும் அளித்தனர் என்று கூறுகின்றார்.
சங்க இலக்கியங்களின் செவ்வியல் கூறுக்கு அதில் இடம்பெறும் சொல்லாட்சிகளும், தொடரமைப்புகளும் ஒரு முக்கியக் காரணமாக அமைவதைக் காணலாம். இத் தொடர் அமைப்புகளைப் பற்றியும், சொல்லாட்சிகளைப் பற்றியும் விளக்கமாக எடுத்துரைக்கும் பேராசிரியர் அவ்வாறு அமைந்திருப்பதனாலேயே அவை செவ்வியல் தன்மைகொண்ட பாடல்களாக விளங்குவதனையும் தக்க சான்றுகளுடன் எடுத்துரைக்கின்றார்.
ஒரு கவிதையின் சிறப்பு என்பது அதில் சொல்லப்படும் பொருளில் மட்டுமல்ல. அதனை எவ்வாறு கவிஞன் சொல்லுகிறான் என்பதிலும் தான் அடங்கியுள்ளது என்ற கருத்தினை முன்வைத்து, சங்க இலக்கியங்களில் ஒரே தொடரமைப்புகளைக் கொண்ட அல்லது ஒரே அமைப்புள்ள இரண்டு அல்லது மூன்று வாக்கியங்களில் ஒன்றிலிருந்து மற்றொன்றை வேறுபடுத்தவும், வேண்டிய உணர்வை ஏற்படுத்தவும் சலிப்பைத் தவிர்க்கவும் எல்லாவற்றிற்கும் மேலாகப் பாடலின் வேகத்தையும் விறுவிறுப்பையும் கூட்டவும் தமிழ்க்கவிஞர்கள் இத்தகைய உத்தியைப் பயன்படுத்துவர் என்று கூறுகின்றார்.
“வினையே ஆடவர்க்கு உயிரே வாணுதல்
மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர்” (குறு. 135)
என்னும் பாடலடிகளும்,
“உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே” (குறு. 7)
“யானே உண்டை யேனே, என்னலனே
ஆனா நோயொடு கானல் அஅதே” (குறு. 97)
“முகைமுற் றினவே முல்லையொடு
தகைமுற் றினவே தண்கார் வியன்புனம்” (குறு. 188)
என்னும் பாடல்களும் இவ்வுத்தியின் அடிப்படையில் எழுந்தவையாகும் என்று கூறுகின்றார்.
இதேபோன்று கவிதையாக்கத்தில் மீண்டும் மீண்டும் கூறுதல் என்னும் உத்தியைப் பயன்படுத்திக் கவிதையியலாளர்கள், கவிதையின் சுவையை மேலும் மேலும் மெருகூட்டுகின்ற தன்மையினையும் எடுத்துரைக்கின்றார்.
“காலே பரிதப்பினவே கண்ணே
நோக்கிநோக்கி வாள்இழந் தனவே”
“நாட்டின் நாட்டின் எரின் எரின்
குடிமுறை குடிமுறை தேரிற்
கெடுநரும் உளரோநம் காதலோரே” (குறு. 130)
என்னும் பாடலடிகளில் ஒரேவிதமான வாக்கியங்கள், ஒரே விதமான தொடக்கங்கள், ஒரே விதமான முடிவுகள் என்பதோடு வந்த சொற்களே மீண்டும் மீண்டும் வரத் தொடுக்கப்பெற்று, பல்வேறு நிலைகளில் பலவிதமான உத்திகளைக் கையாண்டு தொடக்கமே ஒரு வகையான உணர்ச்சியையும் உணர்வையும் தந்து கவிதைப் பண்பு நிறைந்த கவிதைகளைப் படைத்திருப்பதனைக் காட்டுகின்றார்.
- ஒப்புநோக்கி எடுத்துரைத்தல்
சங்கஇலக்கியக் கவிதையியலை, உலகச் செம்மொழிகளின் கவிதையியலோடு ஒப்புமைப்படுத்தியும், உலகக் கவிதையியற்கோட்பாடுகள் சங்க இலக்கியத்தில் பொருந்தி வரும் திறத்தினை எடுத்துரைப்பதனை ஒரு உத்தியாகக் கையாண்டு சங்க இலக்கியத்தின் தனிச்சிறப்புக்களை மேன்மையுறச் செய்கின்றார் பேராசிரியர்.
தொல்காப்பியர், “நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்” என்னும் தொடரால், உலக வாழ்வில் அதாவது மனித வாழ்வில் நடக்கின்ற சில சிறந்த செயல்கள் அல்லது வாழ்க்கைக் கூறுகளைக் கற்பனைகளுடனும், கவிதைப்பண்புடனும் கூறுவது தான் கவிதை என்றும், மனித வாழ்க்கையில் நடக்கும் சில செய்திகளே அல்லது வாழ்க்கைக் கூறுகளே சிறந்த கவிதைப் பொருள்கள் என்று எடுத்துரைத்துள்ளார்.
இதே கருத்தினை “சிறந்த கவிதைப்பொருள் மனிதவாழ்வின் போலவாக்கம்” என்று கூறுவார் என்றும், ஸ்டிரேபோ இது மனிதச் செயல்கள் என்று கூறுவார் என்றும், ஆர்னால்ட் கவிதையின் பொருள்கள் பாடுபொருள்கள் என்ற வினாவை எழுப்பிக்கொண்டு அவை செயல்கள், சிறந்த செயல்கள், மனிதஇனத்தின் மாபெரும் செயல்கள் என்று எடுத்துக்கூறுவார்” 9 என்றும் எடுத்துரைக்கின்றார்.
சங்க இலக்கியப் பாடல்களில் காணப்படும் ஒருமைப்பாடு தான் அவை சிறந்த இலக்கியங்களாக விளங்குவதற்கு ஒரு காரணம் என்று கூறுகின்ற பேராசிரியர், “நல்ல கவிதைகளைப் பற்றிப் பேசும் சில அறிஞர்கள் அவற்றின் ஒவ்வொரு அடியும் ஒவ்வொரு வரியுமே கவிதைகள் தான் எனக் கூறுவது” என்ற எமர்சன் கூற்றினைச் சங்கப் பாடல்களுக்குப் பொருந்தும் என்று கூறுகின்றார். இதற்குச் சான்றாகக் கபிலரின் “வேரல் வேலி” என்று தொடங்கும் குறுந்தொகைப் பாடலைக் காட்டுகின்றார்.
பலதரப்பட்ட வாக்கியங்களாலும், ஒவ்வொன்றும் ஒவ்வொரு பண்பில் நன்கு உள்ள நிலையில் பாடலும் ஒட்டுமொத்தமாகவும் சுவையுடன் இருப்பது காணத்தக்கது. இதைத்தான் அரிஸ்டாடில், பிளோட்டினஸ் போன்ற அறிஞர்கள் பலபடக்கூறியுள்ளனர் என்று எடுத்துரைக்கின்றார். எந்தவொரு கலையாக்கமும் ஒன்றி ஒருமைப்பாட்டுடன் விளங்க வேண்டும் என்பார். இது கவிதைக்கும் பொருந்தும். ஒரு கலையாக்கத்தின் பெருமை அதன் கூட்டுத்தொகையன்று, அவை ஒன்றி உறவாடி ஒன்றுபட ஒரே கலவையாக நிற்பதில்தான் உள்ளது என்பார் அவர். பிளாட்டினஸ் “எந்தவொரு பகுதியின் அழகும் கவிதையின் முழுமையின் அழகில்தான் அடங்கிக்கிடக்கின்றது” என்பார். இதே கருத்தினைத் தொல்காப்பியர்,
“நூலெனப் படுவது நுவலுங்காலை
முதலும் முடிவும் மாறு கோளின்றித்
தொகையினும் வகையினும் பொருண்மை காட்டி
உண்ணின் றகன்ற உரையொடு புணர்ந்து
நுண்ணிதின் விளக்கல் அதுவதன் பண்பே”
என்று சுட்டியுள்ள திறத்தினை எடுத்துரைக்கின்றார். இத்தகு சீர்மைகொண்ட இலக்கியமாகச் சங்க இலக்கியப் பாடல்கள் இயங்குவதனைச் சான்றுகளுடன் காட்டுகின்றார். இந்த ஒரு ஒருமைப்பாடு எந்தவொரு கலையாக்கத்துக்கும் மிக அவசியம். இதனைக் கபிலர் போன்ற சங்கச் சான்றோர் நன்கு அறிந்திருந்தனர். இந்நிலையில்தான் அவர்கள் ஆக்கிச்சென்ற சங்கச் செய்யுட்களும் செம்மையான வடிவ ஒருமைப்பாட்டுடனும் ஒன்றி உறவாடும் கருத்து ஒப்புமையுடனும் ஒன்றி உறவாடும் கருத்து ஒப்புமையுடனும் காணப்படுகின்றன. கவிதை உருவாக்கத்தில் இப்பண்பு மிகமிகத் தேவையான ஒன்று. இதனைச் சங்கச் சான்றோர்கள் நன்கு பயன்படுத்தித் தங்கள் கவிப்படைப்புகளை வெளிப்படுத்தியுள்ளனர் என்று விளக்குகின்றார்.
- உலகியலோடு உரைத்தல்
சங்க இலக்கியங்களின் செம்மாந்த தன்மைக்கும், தனித்தன்மைக்கும் சான்றாக விளங்குவது, அப்பாடல்கள் எக்காலத்திற்கும் பொருந்திவரும் தன்மையில் அமைந்திருப்பதாகும் என்று எடுத்துரைக்கும் நோக்கில் சங்க இலக்கியத்தின் தனிச்சிறப்புக்களை வியந்து போற்றுகின்றார். சங்க இலக்கியங்களை மண்வாசனை கொண்ட இலக்கியங்கள் என்று எடுத்துரைப்பது குறிப்பிடத்தக்கதாகும். பிற முதல் உலக இலக்கியங்கள் எல்லாம் இறைவனையும் இறைவன் செயல்களையும் மக்களுடன் இணைத்துக் கூறியிருக்க, சங்க இலக்கியங்கள் அந்த நிலையில் இல்லாது, மக்களின் வாழ்க்கையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவையாக உள்ளன. இது சங்க இலக்கியத்திற்குரிய தனிச்சிறப்பு என்று கருதலாம்.
“இன்றைய உலகிலும் சிறந்த அன்பும் செம்மையான பண்பும் கொண்டு வாழும் கணவன் மனைவியரிடையே கூட அடிக்கடி இத்தகைய பேச்சு நடைபெறுதல் கண்கூடு. காதல் மணம் புரிந்து இனிது வாழும் தம்பதியரிடையே மட்டுமல்லாமல் பெற்றோர் பார்த்து மணமுடித்த தம்பதியரிடையேயும் இத்தகைய நிலை ஏற்படுவதைக் காணாலம். கணவனும் மனைவியும் மகிழ்ச்சியோடு இருக்கும் பல நாட்களில், மணம் நடந்த நாளில், நமக்குக் கல்யாணம் ஆகி எத்தனை ஆண்டுகள் ஓடிவிட்டன. நீ எங்கோ பிறந்தாய்; நான் எங்கோ பிறந்தேன். உங்கள் குடும்பத்துக்கும் எங்கள் குடும்பத்துக்கும் அன்று எந்தச் சொந்தபந்தமும் இல்லையே? எப்படியோ தெரியாமல் இணைந்தோம். எத்தனை குழந்தைகள். என்ன அருமையான வாழ்வு நம் வாழ்வு. அந்த ஆண்டவனுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்று கூடிப்பேசும் தம்பதியர்கள் இன்றும் வாழ்கிறார்கள்; என்றும் வாழ்வார்கள். பாட்டில் காணப்படும் உவமைதான் இல்லை. வேறு எல்லாம் உள்ளன இவர்கள் பேச்சில். சிறந்த தம்பதிகளாக வாழும் ஒவ்வொரு இல்லத்திலும் இது நடைபெறுவது தான். இத்தகைய ஒரு அருமையான உணர்வைத் தான் செம்புலப்பெயல்நீரார் தம் கவிதைக் கருவாக்கிக் காலம் கடந்து நிற்கும் இக்கவிதையைப் படைத்திருக்கிறார். இதனால் தான் இக்கவிதை சாகாவரம் பெற்ற ஒரு சங்கப் பாடலாக இன்றும் திகழ்கின்றது. என்றும் திகழ்வது” என்று உலகியலோடு பொருந்தக் கூறும் திறம் பேராசிரியரின் நுண்ணோக்குத்திறனுக்குச் சான்றாக அமைகின்றது.
இதே நிலையில் பிற சங்கப்பாடல்களுக்கும் உலகியலோடு பொருந்தப்பார்க்கும் நிலையினைக் காணமுடிகின்றது.
தொகுப்புரை
- சங்க இலக்கியத்தின் மேன்மையினை அறிவியல் நோக்கோடும், மேலைத்திறனாய்வுக் கொள்கைகளோடும் ஒப்பிட்டு ஆய்ந்துள்ள பேராசிரியரின் திறம் போற்றத்தக்கதாகும்.
- சங்க இலக்கியத்தின் தனிச்சிறப்புகளைப் பிறநாட்டு அறிஞர்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் எடுத்துரைத்துள்ள திறம் அவரது தனிச்சிறப்பாக அமைந்துள்ளதனைக் காணமுடிகின்றது.
- இத்தகு ஆய்வுகளுக்கு அவரது மொழியியல் புலமையும், உலக மொழி இலக்கிய, இலக்கண அறிவும் பயன்படுள்ளன என்பது தெளிவாகின்றது.
- சங்க இலக்கியத்தில் புதிய ஆய்வுகள் செய்யவிரும்புவோர், அவரது ஆய்வுநெறிகளைப் பின்பற்றிப் புதிய விளக்கங்களைத் தரமுடியும் என்பதும் புலனாகின்றது.
சான்றெண் விளக்கம்
- அகத்தியலிங்கனார், ச., சாகா வரம்பெற்ற சங்கப்பாடல்கள்,
மணிவாசகர் பதிப்பகம், சென்னை. 2006, ப. 22
- மேலது, ப. 102
- மேலது, ப. 57
- மேலது, ப. 27
- மேலது, ப. 58
- மேலது, ப. 18
- மேலது, ப. 166
- மேலது, ப. 174
- மேலது, ப. 14