(Peer reviewed) சங்க இலக்கியத்தில் மண்ணறிவியல்
த.திருமுருகன்
முனைவர் பட்ட ஆய்வாளர்
தமிழ்த் துறை
அழகப்பா பல்கலைக்கழகம்
காரைக்குடி – 630003
thirukutty5593@gmail.com
சங்க இலக்கியத்தில் மண்ணறிவியல்
சங்ககாலத் தமிழகம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று நிலப் பகுப்பைப் பெற்றிருந்ததைத் தொல்காப்பியமும் சங்க இலக்கியங்களும் குறிப்பிடுகின்றன. இந்நில அமைப்புகளை நிறம், குணம், பயன் அடிப்படையில் ‘புலம்’ என்ற சொல்லால் குறிப்பிட்டமையைச் சங்க இலக்கியங்கள் சுட்டுகின்றன. நிலமும் புலமும் ஒன்றா அல்லது வேறுபட்டவையா என்ற ஐயம் பொதுவாகத் தோன்றும். இவ்வையப்பாட்டை நீக்கும் பொருட்டு நிலம், புலம் பற்றிய வரையறைகளைக் காண்பதும், அவற்றுக்குள்ள வேற்றுமைகளை விளக்குவதும், சங்க கால மண் வகைகளைத் தற்கால மண்வகைகளோடு ஒப்பிட்டுக் காண்பதும், இந்நில, புலத்தில் இடம்பெறும் தாவரங்கள், விலங்குகள், தொழில்கள் பற்றிக் காண்பதும் இக்கட்டுரையின் நோக்கமாகும்.
நிலம், புலம் வரையறை
புலம் என்பதற்கு “வயல், மேட்டு நிலம், இடம், திக்கு, நுண்மை, அறிவு, திசை, வேகம்” என்று சங்க இலக்கியப் பொருட்களஞ்சியமும் (பக்.70-79), நிலம் என்பதற்கு, “பூமி, இடம், தேசம், தரை, மண், உலகு” என்று நா.கதிரைவேற்பிள்ளை அகராதியும் (ப.93) குறிப்பிடுகின்றன. புலமும் நிலமும் ஒரே பொருளைக் குறிப்பன அல்ல. இதனைத் தொல்காப்பியம் “நிலம் பெயர்ந்து உரைத்தல்” (தொல்.பொருள்.இளம்பூரணர் உரை, நூற்.167) என்று குறிப்பிடுகிறது. அதாவது தலைவன் வேறொரு நாட்டுக்கு நிலம் பெயர்ந்து செல்லுதல் என்று நிலத்தை மட்டும் குறிப்பிட்டுள்ளார்.
இவர் புலம் பற்றிக் குறிப்பிடவில்லை. சங்க இலக்கியத்தில்தான் முதன்முதலாகப் புலம் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. நிலம் என்பது வாழும் இடத்தைக் குறிப்பதாகத் தொல்காப்பியமும், புலம் என்பது வாழும் இடத்திற்கு வெளியேயுள்ள இடத்தைக் குறிப்பதாகச் சங்க இலக்கியங்களும் சுட்டுவதை உரைகளின் வழி அறிய முடிகிறது. நில புலங்கள் என்றொரு சொல் இன்று வரையிலும் வருவாய்த் துறைப் பதிவேட்டில் வழக்கிலுள்ளது.
புலம் பற்றி, “புன்புல மயக்கத்து விளைந்தன தினையே” (ஐங்குறுநூறு260), “வன்புலத்துப் பகடு விட்டு” (புறநானூறு.395), “மென்புலத்து வயல் உழுவர்” (புறநானூறு.395) என்ற இப்பாடலடிகள் சுட்டுகின்றன. புன்புலமான குறிஞ்சி நிலத்தில் தினைப்பயிர் விதைக்கப்பட்ட செய்தியும், வன்புல முல்லை நிலத்தில் எருதுகள் மேய்கின்ற செய்தியும், மென்புல மருத நிலத்தில் உழவர் பயன்படுத்தும் மென்மையான நிலச் செய்தியும் பற்றிச் சங்க இலக்கியங்கள் குறிப்பிட்டுள்ளன. இச்சங்கப் பாடல்கள், மக்கள் வாழும் இடத்தின் வெளிப்புறப் பகுதியில் தினை பயிரிடும் இடத்தையும், விலங்குகள் வாழும் இடத்தையும் கால்நடை மேய்ச்சல் இடத்தையும் மக்கள் வேளாண்மைக்கு உழவு செய்யும் இடத்தையும் புலமென்று சுட்டுகின்றன. இவற்றின் வழி புலம் என்பது மக்கள் வாழும் இடத்தின் புறத்தேயுள்ள வயல் வெளிகள் என்பதனை அறிய முடிகிறது.
மக்கள் வாழும் இடத்தைவிட்டு மற்றோர் இடத்தை வெளிப் புழக்கத்திற்காகவும், பயணத்திற்காகவும் பயன்படுத்துவதனால் இவற்றிற்குப் புலம் என்று சான்றோர்கள் சுட்டியிருக்க வேண்டும். சங்க காலத்தில் குறிப்பிட்டுள்ள புலம் என்ற பெயர் தற்காலத்தில் ஊர்ப்பெயர்களாகத் தாழிபுலம் (ஓர் ஊரில் இடுகாட்டைக் குறிப்பிடும் பகுதி), செட்டிபுலம் (செட்டியார்கள் வாழும் பகுதி), மாரியப்புலம், கோயிலுப்புலம், பள்ளம்புலம் போன்றவை அமைந்துள்ளன. இவை பெரும்பாலும் ஊரின் புறப்பகுதியில் உள்ள குடியிருப்புகளாக அமைகின்றன. இவற்றை நோக்கும்போது புலம் என்பது ஊரின் வெளிப்பகுதியையே சுட்டுகின்றது. இதனாலேயே தற்காலத்தில் புலம் பெயர்ந்தோர் என்ற சொல் வந்திருக்க வேண்டும் என்று எண்ண இடமளிக்கிறது. இதனை, “தென்புலத்தார் தெய்வம்” (இளங்குமரனார் உரை, திருக்குறள்.43) என்ற இத்திருக்குறளுக்குப் புங்கையூரன், “புலம் என்பது திசையைக் காட்டுகின்றது. எனவே வெவ்வேறு திசைகளுக்குப் போனவர்களைப் புலம்பெயர்ந்தவர்கள் என்று கூறலாம்” (புங்கையூரன், யாழ் இணையக் கட்டுரை, நவம்பர் 14, 2011) என்று தன் இணையக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
தற்கால மண் வகைகள்
மனிதர்கள் தாவரங்கள், உயிரினங்கள் போன்றவற்றைச் சார்ந்தே வாழ்கின்றனர். நிலத்தில் வெவ்வேறு மண் அடுக்குகள் காணப்படுகின்றன. மண்ணமைவில் பௌதிக, மற்றும் இரசாயன மாற்றங்கள் ஏற்படும் என்பது அறிஞர்களின் கருத்தாகும். இவற்றின் அடிப்படையில் மனிதன் வேளாண்மையைத் தொடங்கினான். தற்கால வேளாண்மைக்குரிய அனைத்து மண்வகைகளும் தமிழ்நாட்டில் உள்ளதென்று வேளாண் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். செம்மண், வண்டல் மண், கரிசல் மண், சரளை மண், மணற்சாரி மண், உவர்மண் மற்றும் களர்மண் போன்றவை தற்கால மண்வகைகள் ஆகும்.
பாறைகளிலிருந்து தோன்றிய மண், பாறைகளின் தன்மைகளிலிருந்து மிகவும் வேறுபட்டதென்று தற்கால ஆய்வின் மூலம் விளக்கப்பட்டுள்ளது. தற்காலத்தில் மண்ணைப் பரிசோதனை செய்து அதன் வளத்தினைக் கண்டறிந்து வேளாண்மை செய்கின்றனர். சங்க காலத்தில் நிலத்தின் இயற்கைத் தன்மையையும், விளையும் குணத்தையும், நிறத்தையும் அறிந்து வன்புலம் (புறநானூறு.395), புன்புலம் (குறுந்தொகை.383), மென்புலம் (புறநானூறு.395), இடைப்புலம் (புறநானூறு.288), சேட்புலம் (புறநானூறு.326), செம்புலம் (குறுந்தொகை.40), மெல்லம்புலம் (ஐங்குறுநூறு.120), கானலம்புலம் (ஐங்குறுநூறு.152,154), உவர்நிலம் (அகநானூறு.309), செம்மணல் (அகநானூறு.345), செம்புலப்புறவு (அகநானூறு.221), மென்பால் (புறநானூறு.384), வன்பால் (புறநானூறு.384), சாய்அறல் (பதிற்றுப்பத்து.74) என்று பெயரிட்டு வழங்கியுள்ளனர்.
இப்புல வகைகள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐவகை நிலங்களுக்குள் அடங்கும். இதனை மகிழேந்தி, “வன்னிலங்களாகக் குறிஞ்சி, முல்லை ஆகியனவும் மென்னிலங்களாகப் பிற மூன்றும் காணப்படுகின்றன” (மகிழேந்தி, சுற்றுச் சூழலியல் நோக்கில் சங்கத் தமிழகம், ப.160) என்பர். இதனை, “வன்புலம் தழீஇய மென்பால் தோறும்” (பதிற்றுப்பத்து.75:8) என்ற பாடலடி விளக்கும். தற்கால வேளாண் அறிஞர்களின் கண்டுபிடிப்பை அன்றே தமிழன் எவ்விதப் பரிசோதனைக் கருவியுமின்றிக் கண்டுபிடித்துள்ளான் என்பதை மேற்கண்ட சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன.
சங்க இலக்கியப் புல வகைகளும், தற்கால மண்ணமைவும்
மக்கள் வாழும் பகுதியைத் தமிழர்கள் ஐவகை நிலமாகக் குறிப்பிடுவதை, ”காடுறை உலகம், மைவரை உலகம், தீம்புனல் உலகம், பெருமணல் உலகம்” (தொல்காப்பியம் பொருளதிகாரம், இளம்பூரணர் உரை, நூற்.951) என்ற நூற்பாவில் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்று குறிப்பிடுகிறார். இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் பாலை நிலத்திற்கு விளக்கம் தந்துள்ளார். இதனை, “முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து … பாலை என்பதோர் படிவம் கொள்ளும்” (அடியார்க்கு நல்லார் உரை, சிலப்பதிகாரம் – காடுகாண் காதை 64-66) என்று குறிப்பிடுகிறார். இவ்வகை நிலங்கள் பெரும் நிலப்பரப்பினை உடையன. இந்நிலங்களில் உள்ள மண்ணின் இயல்புகளையும் தன்மைகளையும் அறிந்து நிலங்களின் உட்பிரிவாக மென்புலம், வன்புலம், இடைப் புலம், புன்புலம், சேட்புலம், செம்புலம், உவர்நிலம் என்று சங்க இலக்கியப் புலவர்களால் வைக்கப்பட்டுள்ளதை அறிய முடிகிறது.
தற்காலத்தில், “நஞ்சை நிலம் – மென்பால் (விளையும் நிலம்) என்றும், புன்செய் நிலம் – வன்புலம் (விளையாத நிலம்) என்றும், கரம்பை நிலம் – வன்னிலம்” என்று கிராம நிர்வாக அலுவலகப் பதிவேட்டில் (ப.55) இடம் பெற்றுள்ளது. “வன்னிலம் என்பது வன்புலத்திலுள்ள நீர் வறண்டு போவதால் அவற்றைப் பாழ்நிலம் என்றும், கரம்பை நிலமென்றும்” என்று பவானந்தன் தமிழ்ச் சொல்லகராதி (ப.414,114) குறிப்பிடுகிறது.
செம்மண்
சிவப்பு நிறமாக இருப்பதால் இதற்குச் செம்மண் எனச் சான்றோர் பெயரிட்டுள்ளனர். சங்க இலக்கியங்களிலும் தற்காலத்திலும் செம்மண் என்றே வழங்கப்படுகிறது. இம்மண் புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம், பெரம்பலூர், அரியலூர் போன்ற மாவட்டங்களில் பரவிக் காணப்படுகிறது. செம்மண் என்ற மண் வகை, செவ்வாய்க் கோளிலும் இருப்பதாகத் தற்கால விண்வெளி ஆராய்ச்சிகள் புலப்படுத்துகின்றன.
“செம்மண் வகைகள், அமிலத்தன்மையுடைய கருங்கல் பாறைகள், பழங்காலப் பாறைகள், உருமாறிய பாறைகள் போன்றவை காலப்போக்கில் சிதறுண்டு நொறுங்கியதால் உண்டானவை ஆகும். மலைச் சரிவுகளில் இருந்து மழை நீரினாலும், புவி ஈர்ப்பு விசையினாலும் இவை கீழே கொண்டு வரப்பட்டு மலை அடிவாரங்களில் பரவிக் கிடக்கின்றன. இவற்றில் இரும்பு ஆக்ஸைடு அதிக அளவில் உள்ளதால் இம்மண் சிவப்பு நிறத்துடன் காணப்படுகின்றது. இவை பொதுவாக இளகிய இயல்புடையது ஆகும்” என்று தமிழ் விக்கிப்பீடியா (நாள்.10.02.2014) விளக்குகிறது. தற்காலத்தில் புவியியல் ஆய்வாளர்கள் குறிப்பிடும் செம்மண், சங்க இலக்கியங்களில் செம்புலம், செம்புலப்புறவு, செம்மணல், செந்நிலப்புறவு, செந்நிலம், செந்நிலன் என்று அழைக்கப்பட்டுள்ளதை அறிய முடிகிறது.
செம்புலம்
“செம்புலப் பெயல்நீர் போல” (குறுந்தொகை.40) என்ற பாடலடியில், குறிஞ்சி நிலத்தில் செம்மண் இருப்பதையும், இம்மண்ணைச் செம்புலம் என்று குறிப்பிடுவதையும் அறிய முடிகிறது. “செம்புல மருங்கில்” (அகநானூறு.389) என்ற பாடல், பாலை நிலத்தில் சிவந்த நிறமான செம்மண் இருப்பதாகச் சுட்டுகிறது.
செந்நிலப்புறவு
செம்மண் முல்லை நிலத்தில் அமைவதனை, “வம்பு விரிந்தன்ன செம்புலப் புறவில்” (நற்றிணை.221), “செந்நிலப் புறவின் புன்மயிர்ப் புரவை” (நற்றிணை.321) என்ற இப்பாடலடிகளில் சரக்கொன்றைப் பூக்கள் பூப்பதையும் செம்மண் காடுகள் இருந்தமையையும், இந்நிலத்தில் ஆயர்களின் ஆடுகள் கட்டப்பட்டிருந்த செய்தியையும் அறிய முடிகிறது. முல்லை நிலச் செம்மண்ணில், வள்ளிக்கொடியும் பெய்த மழையால் வளைந்த கதிரையுடைய வரகுகள் விளைந்திருந்ததையும் (மலைபடுகடாம்.97-100) சுட்டுகிறது. செம்மண் அரக்கைப் பரப்பி வைத்தாற்போல சிவந்த நிலத்தில் இருந்ததை, “அரக்குவிரித் தன்ன செந்நில மருங்கின்” (மலைபடுகடாம்.507-508) என்ற அடி உணர்த்துகின்றது.
முல்லை நில செம்புலக் காட்டில் செவ்வரக்கும், காயாம் பூக்களும் இந்திர கோபப் பூச்சிகளும் (அகநானூறு.14), உடும்பு (மலைபடுகடாம்.507), மான்கள் (நற்றிணை.97) இருப்பதையும், பாலை நிலச் செம்மண்ணில் பிடவ மலர்களும் (அகநானூறு.79), தேக்கு, இருப்பை மரங்களும் (அகநானூறு.225), யானைகள் (அகநானூறு.227) இருப்பதையும் அறிய முடிகிறது.
செம்மணல்
பாலை நிலத்திலுள்ள செம்மண்ணில் வேங்கை மரத்தின் மலர்கள் பரவியிருந்தன எனபதனை, “செம்மணற் சிறுநெறி கம்மென வரிப்ப” (அகநானூறு.345) என்ற அடி விளக்குகிறது. செம்புலம் என்ற சிவந்த மண் முல்லை, குறிஞ்சி, பாலை போன்ற நிலங்களில் அதிகம் இருப்பதைச் சங்க இலக்கியங்கள் சுட்டுகின்றன. செம்மண் இருக்கும் இடத்தைச் செம்புலமென்றும், அந்நிலத்தில் காணப்படும் மலர்கள், விலங்குகள், பூச்சிகள், மரங்கள் மற்றும் நிறங்கள் பற்றியும் விளக்கப்பட்டுள்ளது. இம்மண் வேளாண்மைக்கு மிகவும் ஏற்றதாகவும், தழைச்சத்து, நார்ச்சத்து, கனிமங்கள் உடையதாக இருப்பதையும் தற்கால ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
வண்டல் மண்
இம்மண்ணில் நெல், வாழை, கரும்பு, கோதுமை போன்ற பயிர்களும், ஊடு பயிராகச் சோளம், உளுந்து, பாசிப்பயிறு, வெற்றிலை போன்ற பயிர்களும் நன்கு விளையும். பெரும்பாலும் மருத நிலம் விளைநிலமாகக் கருதப்படுகிறது. நீர்ப்பிடிப்புப் பகுதியான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, பெரம்பலூர், கடலூர், கரூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் இம்மண் பரவிக் காணப்படுகிறது.
வண்டல் மண்ணைச் சங்க இலக்கியத்தில் மென்புலம், மென்பால், சேட்புலம், வண்டல் என்ற பெயரில் குறிப்பிட்டுள்ளனர். மருத நிலத்து உழவர் பயன்படுத்தும் நிலமாக மென்புலம் கருதப்படுவதை “மென்புலத்து வயல் உழவர்” (புறநானூறு.395) என்ற பாடலடி விளக்குகிறது. மென்பால் என்பது மென்மையான நீரினையுடைய நிலம் ஆகும். இந்நீரையுடைய வயல்களில் நாரை வாழ்வதைப் பற்றிப் புறநானூறு 384ஆம் பாடல் குறிப்பிடுகிறது.
மருத நிலத்தில் வேளாண்மை செய்வதற்காகக் கண்மாய் நீர் வரும் மடை அருகிலுள்ள சேற்று நிலத்தைச் சேட்புலம் என்று குறிப்பிடப்படுகிறது. இச்சேற்று நீர் வற்றாமல் இருக்கும். இந்நிலத்தில் குறுந்தாள் உடும்பு இருந்ததைப் புறநானூறு 326ஆம் பாடல் குறிப்பிடுகிறது. வண்டல் மண்ணில் பாவை செய்த செய்தியையும், தலைவன் ஊரைச் சிறப்பிக்கும் நிலையிலும் வண்டல் மண் குறிப்பிடப்படுகிறது. இதனை, “வண்டற் பாவை வௌவலின்” (கலித்தொகை.29:5) என்றும், “மென்புல வைப்பின் நாடுகிழ வோனே” (ஐங்குறுநூறு.407:4) என்றும் இப்பாடலடிகள் உணர்த்துகின்றன.
கரிசல் மண்
கரிசல் மண், எரிமலைக் குழம்பு லாவா பூமியிலிருந்து வெளிவந்து படிதலால் ஏற்படுகிறது. இம்மண் பெரும்பாலும் தண்ணீரை உறிஞ்சும் தன்மை கொண்டது. கரிசல் மண்ணைச் சங்க இலக்கியத்தில் வன்புலம், வன்பால், கரம்பை, வன்னிலம் என்ற பெயரில் சான்றோர்கள் அழைத்துள்ளனர். வன்புலம் என்பது முல்லை நிலத்தில் அமைந்த வலிமையான புலம் என்றும், இந்நிலத்தில் இடையர்கள் ஆடு மேய்த்ததையும், உடும்பு, தவளை, ஈசல் வாழும் மண்ணையுடைய செய்தியையும் புறநானூறு 395ஆம் பாடல் விளக்குகிறது.
முல்லை நிலக் கரிசல் மண்ணில் செம்பூழ்ப் பறவைகளும் (ஐங்குறுநூறு.469), நடுகல் நிரம்பிய காடுகளும், நெல்லி மரங்களும் (புறநானூறு.314), மருத நிலக் கரிசல் மண்ணில் குறும்பூழ்ப் பறவையும் கடம்ப மலரும் (பெரும்பாணாற்றுப்படை.77), முயல்களும் (புறநானூறு.322) காணப்படுகின்றன. மேலும் வன்புலத்தைக் கரம்பை என்று குறிப்பிடுவதையும், இப்புலத்தில் வௌ்வரகு, செந்நெல் விளைவதையும் “வௌ்வரகு உழுத கொள்ளுடைக் கரம்பைச் செந்நெல்” (பதிற்றுப்பத்து.75) என்ற பாடலடிகள் விளக்குகின்றன. வன்புலத்தை வன்னிலம் என்று குறிப்பிடுவதை, ‘‘வன்னிலங்கள் துனிபடச் சென்று’’ (அகநானூறு.79) என்ற பாடலடி குறிப்பிடுகிறது. இப்புலம், கற்கள் நிறைந்த நீண்ட காடுகளால் ஆனது.
சரளை மண்
இம்மண் பாறைப் பரல்களாலான பீட பூமியாகும். மலைப்பாங்கான பிரதேசத்தில் இம்மண் காணப்படும். சோளம், கம்பு, தினை வகைகள் பயிரிடப்படுகிறன. தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, நீலகிரி, திருப்பூர், கோவை மாவட்டங்களில் சரளை மண் (துருகல் மண்) பரவிக் காணப்படுகிறது. இம்மண்ணைச் சங்க இலக்கியம் புன்புலம், இடைப்புலம் என்று குறிப்பிடுகின்றது. இம்மண்ணின் பெயரைப் பண்டைய மக்கள் முறைப்படக் குறிப்பதை, “புன்புலத்து அமன்ற சிறியிலை நெருஞ்சிக்” (குறுந்தொகை.202) என்று குறுந்தொகையும், புன்செய் நிலத்தில் நெருஞ்சி மலர் பூத்திருப்பதையும், தினைப் பயிர்களை யானைகள் மேய்ந்ததையும் (ஐங்குறுநூறு.260) உழவர்கள் காளைகளைப் பூட்டிக் கலப்பையால் உழவு செய்யும் திண்மையான நிலம் என்பதையும் (பரிபாடல்.58:15) சங்க இலக்கியங்கள் விளக்குகின்றன.
முல்லை நிலமான புன்புலத்தில் முயல்களும் (ஐங்குறுநூறு.421), வேல மரங்கள் (பரிபாடல்.58) இருப்பதையும், இந்நிலம் பொலிவற்று இருந்ததையும் இவ்விலக்கியங்கள் சுட்டுகின்றன. இப்புலத்தில் நெல் விளையாது. வரகு, தினை போன்றவை விளைந்தன என்ற செய்தியை, “புறவு சேர்ந்திருந்த, புன்புலச் சீறூர் நெல் விளையாதே, வரகும் தினையும் உள்ளவை எல்லாம்” (புறநானூறு.328) என்ற பாடலடிகள் குறிப்பிடுகின்றன.
உவர்(களர்)மண், மணற்சாரிமண்
உவர்மண், பாலை மண் என்று அழைக்கப்படுகிறது. இந்நிலத்தில் உப்பு எடுத்தல், மீன் உணக்கல், மீன் வலை உலர்த்தல் போன்ற தொழில்கள் நடைபெறுகின்றன. இம்மண் வகையைச் சங்க இலக்கியம் மெல்லம்புலம், கானலம் புலம், உவர்நிலம் என்று குறிப்பிடுகிறது. உவர்மண் நெய்தல் நில மண்ணாகும். நெய்தல் நிலத்திலுள்ள இம்மண்ணை, “மெல்லம் புலம்பன் வந்த மாறே” (ஐங்குறுநூறு.120) என்ற பாடலடி விளக்கும். மெய்ப்புலம் என்பது நெய்தல் நிலத்திலுள்ள ஊரைக் குறிக்கும். இந்நிலம் உவர் நிலமென்றும், சேண்புலம் என்றும் குறிப்பிடுவதை, “உவர்விளை உப்பின் கொள்ளை சாற்றி, அதன்படு பூழிய சேண்புலம் படரும்” (அகநானூறு.309) என்ற இப்பாடலடிகள் உணர்த்துகின்றன.
நெய்தல் நிலத்திற்கும் மருத நிலத்திற்கும் இடையே காணப்படும் கருப்பு நிறமான மணலைச் ‘சாய் அறல்’ (பதிற்று.74) என்று குறிப்பிட்டுள்ளனர். இதன்மூலம் நெய்தல் நிலத்திற்கும் மருத நிலத்திற்கும் இடையே கருநிற மணல் இருப்பதை அறிய முடிகிறது. சங்க இலக்கியத்தில் குறிப்பிட்ட மண்ணின் அமைப்பை, “வண்டல் மருத நிலத்து ஆற்றுப் படுகைகளிலும், செம்புறை குறிஞ்சி நிலத்திலும் மணற்பாங்கானது நெய்தல் நிலத்திலும், செம்மண் முல்லை நிலத்திலும் காணப்படுகின்றன. கரிசல் மண் மிகுதியான அளவு நன்புலத்திலும், சிறுபான்மை புன்புலத்திலும் காணப்படுகின்றது” (ப.118) என்று ந.வீ.செயராமன், தமிழ் இலக்கியத்தில் வேளாண்மை அறிவியல் என்ற நூலில் குறிப்பிடுகிறார்.
தொகுப்புரை
சங்ககால மக்கள் மண்ணின் தன்மைக்கும் நிறத்திற்கும் ஏற்றவாறு பெயரிட்டுள்ளதைச் சங்க இலக்கியங்கள் தெளிவுபடுத்துகின்றன. ஐவகை நிலங்களில் ஆறு வகையான புலங்கள் காணப்படுகின்றன. செம்புலம், வன்புலம், மென்புலம், புன்புலம், மெல்லம் புலம் போன்றவை குறிஞ்சி நிலத்தில் இடம்பெற்றுள்ளன.
குறிப்பிட்ட வேளாண் பயிர்கள், விலங்குகள் பூக்கள் வேற்று நிலத்தில் பெரும்பான்மையாக வளர்வதில்லை. இவற்றை அறிந்த முன்னோர்கள் இந்நிலத்தில் இன்னதுதான் வளரும் என்பதற்கு ஏற்றவாறு மண்ணிற்கு அக்காலத்தில் பொருள்பட பெயர் வைத்துள்ளதை மேற்கண்ட சான்றுகளின் வழி அறியமுடிகிறது.
புலம் என்ற பெயர் வைத்து வேளாண்மை செய்யும் இடத்திற்கும், நிலத்தின் இயல்புக்கும் ஏற்றவாறு பெயர்கள் சூட்டியிருக்க வேண்டும். எந்தெந்தப் பயிர்கள். எந்தெந்த நிலங்களில் நன்றாக விளையும் என்ற அறிவைச் சங்க கால மக்கள் பெற்றிருந்தனர். இதன் மூலம் அக்கால மக்களிடம் மண்ணியல் அறிவும், நிலத்திற்கும் புலத்திற்கும் வேறுபாடு உண்டு என்பதையும் அறிய முடிகிறது.
சங்க கால மக்கள் நிலத்தில் வாழ்ந்து புலத்தில் வேளாண்மை செய்தனர் என்பதை மேற்கூறிய கருத்துகள் வெளிப்படுத்துகின்றன. ஓரிடத்தில் பல தலைமுறைகளாக வாழ்ந்த மக்களில் சிலர், தாம் வாழ்ந்த நிலத்தை விட்டு வேறொரு நிலத்திற்குப் புலம் பெயர்ந்ததைப் ‘புலம்பெயர்ந்தோர்’ என்ற சொல் குறிப்பிடுவதையும் அறிய முடிகிறது.
துணைநூற்பட்டியல்
- சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு
- ந.கதிரைவேற்பிள்ளை தமிழகராதி, சாரதா பதிப்பகம் சென்னை, 2003.
- தொல்காப்பியம், இளம்பூரணர் உரை, சாரதா பதிப்பகம் சென்னை, 2005.
- ஐங்குறுநூறு, பொ.வே.சோமசுந்தரனார், கழக வெளியீடு சென்னை, 2009.
- புறநானூறு, உ.வே.சாமிநாதையர் உரை, உ.வே.சா. நூல் நிலையம் சென்னை, 2018.
- திருக்குறள், இரா.இளங்குமரனார் உரை, பாவாணர் அறக்கட்டளை வெளியீடு, புதுக்கோட்டை, 2006.
- குறுந்தொகை, உ.வே.சாமிநாதையர் உரை, உ.வே.சா. நூல் நிலையம் சென்னை, 2017.
- அகநானூறு, ந.மு.வேங்கடசாமி நாட்டார், கழக வெளியீடு, சென்னை, 2007.
- பதிற்றுப்பத்து, உ.வே.சாமிநாதையர் உரை, உ.வே.சா.நூல் நிலையம் சென்னை, 2018.
- மகிழேந்தி, சுற்றுச் சூழலியல் நோக்கில் சங்கத் தமிழகம், தி பார்க்கா், இராயப்பேட்டை சென்னை, 2003.
- சிலப்பதிகாரம், அடியார்க்கு நல்லார் உரை, சாரதா பதிப்பகம் சென்னை, 2008.
- பவானந்தர் தமிழ்ச் சொல்லகராதி, நியு செஞ்சுரி புக் ஹவுஸ் சென்னை, 2010.
- நற்றிணை, அ.நாராயணசாமி உரை, கழக வெளியீடு சென்னை, 1947.
- மலைபடுகடாம், உ.வே.சாமிநாதையர் உரை, உ.வே.சா. நூல் நிலையம் சென்னை, 2017.
- கலித்தொகை, நச்சினார்க்கினியர் உரை, கழக வெளியீடு சென்னை, 2007.
- பரிபாடல், உ.வே.சாமிநாதையர் உரை, உ.வே.சா. நூல் நிலையம் சென்னை, 2017.
- ந.வீ.செயராமன், தமிழ் இலக்கியத்தில் வேளாண் அறிவியல், நியு செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 1978.
- அரசு வருவாய்த் துறை, கிராம நிர்வாக அலுவலகப் பதிவேடு, ப.55
- தமிழ் விக்கிப்பீடியா, நாள் -10.02.2014
- புங்கையூரன், யாழ் இணையக் கட்டுரை நாள் -14.11.2011.
======================================================================
ஆய்வறிஞர் கருத்துரை (Peer review):
‘சங்க இலக்கியத்தில் மண்ணறிவியல்’ என்னும் கட்டுரை, நிலம், புலம் குறித்த பதிவுகள் தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியத்திலும் எவ்வாறு இடம்பெற்றுள்ளன என்பதை விளக்க முயல்கின்றது. தொல்காப்பியத்தில் நிலம் பற்றிய சான்றுகளே உள்ளன. இதை ஐந்து வகையான திணைகளும் அவற்றின் இடங்களும் புலப்படுத்துகின்றன. புலம் என்பது குறித்த பதிவு சங்க இலக்கியத்தில்தான் முதன்முதல் இடம் பெறுகின்றது. புலம் குறித்த பதிவுகள் ஐங்குறுநூறு, புறநானூறு உள்ளிட்ட இலக்கியங்களில் காணப்படுவதை முறையாகத் தொகுத்துக் கட்டுரையாளர் விளக்குகின்றார்.
சங்க கால மண்ணமைப்பு முறைகளையும் தற்கால மண்வகைகளையும் அறிமுகப்படுத்தும் இக்கட்டுரை, சங்க காலத்தில் இருந்த புலங்களைத் தக்க சான்றுகளோடு எடுத்துரைக்கின்றது. செம்புலம், வன்புலம், மென்புலம், புன்புலம், மெல்லம்புலம் என்னும் இப்புலங்களில் பயிரிடப்படும் உணவுப் பொருட்களைப் பட்டியலிட்டுச் செல்கின்றார் கட்டுரையாளர். மேலும் நவீன வேளாண்மைக்கு முன்னோடியாகப் பண்டைத் தமிழர்களின் வேளாண்மைத் தொழில்களும் உற்பத்தி முறைகளும் இருந்தன என்பதைத் தக்க ஆதாரங்களோடு முன்வைத்திருக்கும் கட்டுரையாளருக்குப் பாராட்டுகள்.
======================================================================
நாட்டின் முதுகெலும்பு நமது விவசாயம்.அதனை மறந்து
மறுக்கப்பட்டும் நாடு எங்கோ பயணிக்கும் வேளையில் இத்தகைய விவசாயம் , மண்ணின் வகைகள்
அனைத்து பெரூமையையும் இலக்கியத்திலிருந்து
எடுத்து எழுதி யுள்ளார் ஆசிரியர். நம் மண்ணை அறிய மிகவும் பெருமையாக உள்ளது.மிக்க நன்றி