நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 39
-நாங்குநேரி வாசஸ்ரீ
நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்
39. இறை மாட்சி
குறள் 381:
படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசரு ளேறு
வீரம் நெறஞ்ச படை, நாட்டு மேல உசிரா இருக்க சனங்க, கொறையாத செல்வம், நல்ல மந்திரி, அக்கம்பக்கத்து நாட்டோட சினேகம், பலமான அரண் இந்த ஆறு சிறப்பும் இருக்குதவன் தான் அரசர்கள் ல ஆண் சிங்கம் மாதிரி இருக்கவன்.
குறள் 382:
அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தற் கியல்பு
துணிச்சல், இல்லாதவங்களுக்கு கொடுக்கது, புத்திசாலித்தனம், ஊக்கம் இந்த நாலு கொணமும் ராசாக்கு இருக்கணும். . .
குறள் 383:
தூங்காமை கல்வி துணிவுடைமை அம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவற்கு
எதையும் பைய நேரங்கழிச்சு செய்யாம படிச்ச புத்திசாலியா துணிச்சக்காரனா இருக்கது நாட்ட ஆளுத ராசாக்கு தேவையான கொணம்.
குறள் 384:
அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மான முடைய தரசு
அறநெறி தவறாம குத்தம் கொற செய்யாம வீரத்தோடயும் மானத்தோடயும் ஆட்சி செய்யுதவனே சிறந்த ராசா.
குறள் 385:
இயற்றலும் ஈட்டலுங் காத்தலுங் காத்த
வகுத்தலும் வல்ல தரசு
பொருள சம்பாதிக்க வழிய உண்டாக்கி பொறவு வந்தத சேத்து வச்சி காப்பாத்தி அத செலவு செய்யதுக்கு நல்ல மொறைல திட்டம்போட்டு ஆட்சி நடத்துதவனே நல்ல ராசா.
குறள் 386:
காட்சி கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்
பாக்கதுக்கு எளிமையா மனசு நோவ கடுமையா வையாம பேசுத ராசாவத்தான் ஒலகம் புகழும்.
குறள் 387:
இன்சொலால் ஈத்தளிக்க வல்லாற்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு
தன்மையா பேசி தேவப்பட்டவங்களுக்கு பொருளக் கொடுத்து காக்குத ராசாவுக்கு நெனச்சதெல்லாம் குடுக்கும் இந்த ஒலகம்.
குறள் 388:
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்
கிறையென்று வைக்கப் படும்
நியாயதர்மத்தோட ஆட்சி நடத்தி மக்கள காப்பாத்துத ராசா தான் மக்கள் தலைவன் னு மதிக்கப்படுவான்.
குறள் 389:
செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கு முலகு
கொறைபேசுதவங்க சொல்லுதத கேட்டு காது வலிச்சாலும் பொறுத்துப் போகுத ராசாவுக்கு தான் மக்கள் கிட்ட மதிப்பு இருக்கும்.
குறள் 390:
கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி
தேவப்படுதவங்களுக்கு கொடுத்து , கருண காட்டி, நியாயம் தவறாம ஆட்சி செஞ்சு மக்களக் காப்பாத்துத ராசா தான் ராசாக்கெல்லாம் விளக்கு கணக்கா இருக்கவன்.
(அடுத்தாப்லையும் வரும்…..