Tag: சந்திரா மனோகரன்

  • கடைசி அலை !

    சந்திரா  மனோகரன்

     

     

    அவள்  மென்முறுவலில்

    என்  வனம்  நனைந்து  சிலிர்க்கிறது

    பச்சையோ  சிதறி

    புதுப் புது  பட்சிகளால் உயிர்த்தெழுகிறது !

    ஆனாலும் —

    என் இதயமோ  கற்பாறையாய்

    இறுகியே  கிடக்கின்றது

    அந்த  சிசுப்பாதங்களின் பதிவுகள்

    பாதையெங்கும்  தழும்புகளாய்

    முளைத்துக் கிடக்கின்றன

    பெருங்காற்றின்  சுழற்சியில்

    அவள்  முணுமுணுப்பு

    என் மனதைக்  கலங்கடிக்கிறது

    ஊற்றெடுக்கும்  ஈரக்கசிவில்

    பூத்திருந்த பகைமை

    உடைத்தெறியப்படுகிறது

    வலுவிழந்த  மனதின் வலி

    வீழ்ந்து  நொறுங்கிப் போகிறது

    அடர்ந்த  இலைகளுக்குள்

    மெல்லத்  தேய்ந்துபோகும்  இருள் !

    நேற்றுவரை  அறுந்த  கம்பி !

    இன்று மென்சிறகுகளால்

    போர்த்தப்படுகிறேன்

    அவள்  வருகை  மாயையின் பிம்பமா ?

    இல்லை , பேரொளியின் அதிர்வு !

    மென்தளிர்போல்  மென்மையாய்

    மொழியற்ற  சந்திப்பில்  இருவரும் …

    கடலில்  எது  கடைசி அலை  ?

    எனக்குள் புதிதாய்  ஓரு பேரலை  !

     

     

     

     

    Share
  • இரவின் தனிமை

     

       சந்திரா  மனோகரன்

     

     

    எனக்கும்  அவனுக்குமிடையே

    முறுவலின்  அலைகள் !

    படகின்  மிதப்பில் —

    குளிர்மாலை  ஒளியில் —

    ஏரியின்  சிலிர்ப்பில்–

    அடைபட்ட  எண்ணங்கள்

    அவன் எதிர்பார்ப்பின்றி

    *பட பட * வென்று …

    அவன்  மௌனம்  இனியது

    சிற்றலைகளின்  அமைதியில்

    சிதறி  உடையும்  சொற்கள்

    மழைச் சாரல்  ஏரியை

    துளைத்தெடுக்கின்றன

    நீண்ட  நதிபோல்

    நெளிந்து கிடக்கும்  நீர்க்குளம்

    அவன்  மோனமும்  துணிவும்

    முடிவற்ற  பரிச்சயம்  எனக்கு

    இடையிலென்ன  இரும்புத்திரை ….

    தடுப்புச்சுவர்  அழியட்டும்

    நீரலைக்குள்  நீர்த்துப்போகட்டும்

    கரிய இரவுப்பயணம்  முடிந்துவிடும்

    கரைந்த  மோனத்தின் சில்லுகள்

    நிழல்களாய்ப்  படிகிறது , நீரில்

    மங்கலாய்த்  தெரியும்  கரையில்

    பளீரிடும்  நம்பிக்கை !

    சிற்றொளியில்  உதிரும்  சோகம்

    அவன்  மட்டும் கால்பதிக்க …

    பாவம்  பேதை

    வாழ்வின்  இரகசியம் புரியாதவள் !

    ஏரியும்  தோணியும் துணையற்ற  இருளும்

    என்னை ஏந்திய வண்ணம்  !

     

     

     

     

     

     

    Share
  • சொற்களின் வரலாறு

      சந்திரா  மனோகரன் 

     

     

    மெல்ல  சுரக்கும்  சொற்கள்

    ஊமையாகிப்  போயிருந்தன …

    அவள்  மென்விரல்களைப் போலவே  !

    அதன்  பின்னணியில்  ஒரு

    மௌன யுத்தம் முடிந்திருந்தது

    மொழி  பாவம்  என்ன செய்யும் …

    நொண்டி  நொண்டி சறுக்குகிறது

    வற்றாத  சொற்பெருக்கு !

    புகைந்து  நெளியும்  உக்கிர நெருப்பில்

    நழுவி  விழுந்து சாம்பலாகிப்போகும்  அவலம்

    வழிப்போக்கனைப்போல்  ஏகாந்தமாகிப்போன

    எனக்கு  ஆறுதலே  அந்த

    வசீகரிக்கும்  சொல்லலங்காரம்தான்  !

    என் சொற்களின்  பிறப்பிடம்

    எனக்கு அந்தரங்கமானது.

    எனக்குள் ஊற்றெடுக்கும்

    எல்லா சொற்பட்சிகளுக்கும்

    இப்பொழுது  சிறகுகள் !

    என்னைவிட்டு  விடுதலையாகி

    அவள்  விதியை  சீண்டிப்பார்க்கும்  ஆசான் அவை  !

    அவளை உடைத்தெறிய  அவை போதும்

    வண்ண வண்ண சொல்வலையில் விழுந்து

    காயம் பட்டு … சீர் கெட்டு …

    ஒரே  ஒரு தடவையேனும்

    அவள்  பொழிகிற  சொல்மழையில்

    தொப்பலாய் நனைய  ஆசை

    அலைப்பில்  தவிக்கும்  மனசுள்

    அவை  பீடு நடை  போடட்டும் …

    சிலசமயம்  ஆர்ப்பரிக்கும்  சொற்போரில்

    அவள்  எழில்  கூடுகிறதே  !

    அந்தப்  பரவசத்தில்  பிய்த்துக்கொண்டு வரும்

    ஒளியில் … மௌனமாய் சுருண்டுகொள்ளும்

    என்  முடிவற்ற  சொற்கள்  !

    Share