இரவின் தனிமை
சந்திரா மனோகரன்
எனக்கும் அவனுக்குமிடையே
முறுவலின் அலைகள் !
படகின் மிதப்பில் —
குளிர்மாலை ஒளியில் —
ஏரியின் சிலிர்ப்பில்–
அடைபட்ட எண்ணங்கள்
அவன் எதிர்பார்ப்பின்றி
*பட பட * வென்று …
அவன் மௌனம் இனியது
சிற்றலைகளின் அமைதியில்
சிதறி உடையும் சொற்கள்
மழைச் சாரல் ஏரியை
துளைத்தெடுக்கின்றன
நீண்ட நதிபோல்
நெளிந்து கிடக்கும் நீர்க்குளம்
அவன் மோனமும் துணிவும்
முடிவற்ற பரிச்சயம் எனக்கு
இடையிலென்ன இரும்புத்திரை ….
தடுப்புச்சுவர் அழியட்டும்
நீரலைக்குள் நீர்த்துப்போகட்டும்
கரிய இரவுப்பயணம் முடிந்துவிடும்
கரைந்த மோனத்தின் சில்லுகள்
நிழல்களாய்ப் படிகிறது , நீரில்
மங்கலாய்த் தெரியும் கரையில்
பளீரிடும் நம்பிக்கை !
சிற்றொளியில் உதிரும் சோகம்
அவன் மட்டும் கால்பதிக்க …
பாவம் பேதை
வாழ்வின் இரகசியம் புரியாதவள் !
ஏரியும் தோணியும் துணையற்ற இருளும்
என்னை ஏந்திய வண்ணம் !