-மீனாட்சி பாலகணேஷ்

தொல்காப்பியம் மாயோனாகிய திருமால், சேயோன் எனப்படும் முருகன், வேந்தன் எனப்படும் இந்திரன், வருணன் ஆகியோரை நானிலத் தெய்வங்களாகக் காட்டுகின்றது.

மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்,
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல்’  (தொல்காப்பியம்- அகத்திணையியல் –  பொருளதிகாரம்)

பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐவகை நிலங்களையும் அவை பற்றிய செய்திகளையும் பாடல்களில் இணைத்துக் கூறுவதுண்டு என முன்பு கண்டோம். முருகனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட பிள்ளைத்தமிழ் நூல்களில் குறிஞ்சிநிலம் பற்றிய செய்திகள் பெரிதளவில் பேசப்பட்டுள்ளன. பாட்டுடைத்தலைவன், தலைவியின் நாட்டு வளத்தைப் போற்றிவரும் பாடல்களில் வயல்சூழ்ந்த மருதநிலம், கடற்புறமான முத்துக்கள் விளையும் நெய்தல்நிலம், ஆகியன மிக விரிவாக விளக்கப்படுகின்றன எனக் கண்டோம். முல்லை, பாலை நிலங்கள் தொடர்பான செய்திகள் மிகவும் அரிதாகவே காணப்படுகின்றன. திருமால் பற்றிய பிள்ளைத்தமிழ் நூல்களிலும் முல்லைநிலம் பற்றிய வருணனைகளும் பாடல்களும் காணப்படவில்லை என்பது வியப்பையளிக்கின்றது. இக்கட்டுரையில் முருகப்பிரானைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்ட பிள்ளைத்தமிழ் நூலொன்றிலிருந்து முல்லைநிலத்தின் வளத்தினைப் பற்றிய ஒரு பாடலைக் காண்போம். சிதம்பர அடிகளார் இயற்றியுள்ள திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழின் சிறுபறைப் பருவப் பாடலிது.

அழகான திருப்போரூர் முல்லைநிலங்கள் செறிந்தவூர். meenatchi1இவ்வூரின்கண் பலவிதமான ஒலிகள் எப்போதும் எழுந்த வண்ணமாக உள்ளன. தயிரின் முடைநாற்றம் கமழும் மெல்லிய உருவம் கொண்ட இடைப்பெண்களின் மத்துக்கள் அவர்கள் தயிர் கடையும் கலங்களில் முழங்கும் ஒலி ஒருபுறம் கேட்கிறது; பசுக்களின் கூட்டங்கள் தம் கன்றுகளை நினைத்தமட்டிலேயே அழகான குடம்போலும் மடித்தலத்திலுள்ள பாலைச் சுரந்து கன்றுகளை எண்ணிக் கத்தும் முழக்கமும் மிகுதியாகக் கேட்கின்றது.

இசையமைந்த துளைகளினூடே விரல்களைப் பொருத்திப்பிடித்து தொறுவர்கள் எனப்படும் இடையர்கள் ஊதும் புல்லாங்குழலோசையும்  கேட்கின்றது. பலவிதமான நிறங்கள் கொண்ட காட்டுக்கோழிகள் முறைமுறையாக நின்று நெருங்கிக் கூவும் ஓசையும் எழுந்தவண்ணம் உள்ளது.

செழித்து விளைந்து மலர்ந்த செம்முல்லை மலர்களில் வரிவண்டுகள் அமர்ந்து விளரிப்பண்ணை இசைக்கும் அழகிய இனிய முழக்கமும் கேட்கின்றது. காலை விடியற்போதில் எழும் கடலின் ஒலியைப்போல இந்தப் பலவகை முழக்கங்களும் மிகுதியாக எழுகின்ற தன்மை கொண்டது இப்போரூரின் முல்லைநிலங்கள்.

அம்முல்லை நிலத்தில் வாழ்பவனும் ‘குளமலி கண்ணனா’கிய சிவன் தந்தருளியவனுமான முருகப்பெருமானை, “முருகா, நீ சிறுபறை கொட்டுக! முத்தமிழினை மெத்த வளர்த்தவனே! சிறுபறை கொட்டுக!”- என வேண்டுவதாக அமைந்த பாடல்.

ஒருவரைப் பற்றிக் கூறும்போது அவர் புகழ்வாய்ந்த குடும்பப் பின்னணி உடையவராயின் அவர் பெற்றோர், மற்ற உறவுமுறைகளைக்கூறி அவரைப் பெருமைப்படுத்துவது வழக்கம். அதுபோன்றே இப்பாடலில் முருகனின் புகழ்வாய்ந்த தந்தையாகிய சிவபிரானின் புகழையும் விளக்கியுள்ளார் புலவர். குலம்- குடிப்பெருமை கூற ‘குளமலி கண்ணன் தரும் இறை’ எனச் சிலசொற்களையே கூறுகிறார். குளம் = நெற்றி; அலிகம்- நெற்றி. நெற்றிக்கண்ணனாகிய சிவபெருமான் தந்தருளும் முருகக்கடவுள் என்கிறார்.  வேறென்ன பெருமை வேண்டும் முருகனுக்கு? அவனும் தன் பங்கிற்கு முத்தமிழையும் தனது பெற்றோரைப்போல் தொடர்ந்து வளர்த்து அருளுபவன் அல்லவா?

“அளைகடை முடைகது வியதளிர் வடிவத்
தாய்ச்சியர் மத்தொலியும்
அங்குட மடிமுலை விம்மிக் கன்றுளி
ஆன்நிரை கத்தொலியும்
……………………………………
…………………………முல்லைக்
குளமலி கண்ணன் தருபோ ரூரிறை
கொட்டுக சிறுபறையே” (திருப்போரூர் முருகன் பி. த.- சிறுபறைப்பருவம்- சிதம்பர அடிகள்)

முல்லைநிலத்திற்கான பண் ‘விளரிப்பண்’ என்பது இதிலிருந்து பெறப்படுகின்றது. ஆனால் தமிழிசை மரபுப்படி விளரிப்பண்ணானது மருதநிலத்துக்கு உரிய பண்ணாகும். வண்டுகளின் ஒலியே விளரிப்பண் என அறியப்படுகின்றது. இவ்வாறு திணைமயங்கி வருவதும் ஓர் இலக்கிய உத்தியாகக் கருதப்படுகிறது.

மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் அம்மானைப் பருவத்துப் பாடலொன்றில், ‘விளரிப் பண்ணைப் பாடுகின்ற வண்டுகள் முழங்குகின்ற கூந்தலையுடைய கொடி போன்றவளே!’ என அன்னை விளிக்கப்படுகிறாள்.

‘விளரிமி ழற்றருளி குமிறுகு ழற்கொடி.’

இப்பாடலில் புல்லாங்குழலை இடையர்கள் வாசிக்கும் முறை நுட்பமாகக் கூறப்பட்டுள்ளது. மூங்கிற்குழலில் அமைக்கப்பட்ட துளைகளில் (இசைக்கேற்ப) விரல்களை மாற்றிமாற்றிப் பொருத்தி (அவற்றை மூடியும் திறந்தும்) இசைக்கிறார்கள் என விளக்கமாகக் கூறியுள்ளமுறை நயக்கத்தக்கது. இவ்வாறு நுணுக்கமான நயங்களை ஆங்காங்கே தாமியற்றியுள்ள பாடல்களிலும் நூல்களிலும் பொருத்திப் பாடியுள்ளமையும் வியக்கத்தக்கது. ஆராய்ந்து கண்டெடுத்து படித்து நுகரவேண்டும்.

****

அடுத்து குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நான்கு நிலங்களையும் ஒரு தொடராக நயந்து பாடிய பாடலொன்றினை குறுக்குத்துறை குமரன் பிள்ளைத்தமிழ் செங்கீரைப்பருவத்துப் பாடல்வாயிலாகக் காணலாம்.

meenatchiகுமரன் குடிகொண்டுள்ள குறுக்குத்துறையெனும் ஊரானது பொருநை எனப்படும் தாமிரபரணி நதியினருகே அமைந்துள்ள அழகியதோர் ஊராகும். குமரனெனும் குழந்தையைச் செங்கீரையாட வேண்டிடும் புலவர், அப்பொருநை நதியின் அலைமுழக்கிற்கியையச் செங்கீரையாட வேண்டுகிறார். அந்நதியின் பெருமையை விளக்க அது ஓடிச்செல்லும் பாதையை நயமுற விரித்துரைப்பதே இப்பாடல். வேதங்களிலும், புராணங்களிலும், இலக்கியங்களிலும், வரலாற்றிலும் உயர்வாகப்பேசப்படும் நதி தாமிரபரணியாகும்.

தென் தமிழ் நாட்டு அகன் பொதியில் திரு
முனிவன் தமிழ்ச் சங்கம் சேர்கிற்பீரேல்,
என்றும் அவன் உறைவிடம் ஆம்; ஆதலினால்,
அம்மலையை இறைஞ்சி ஏகி,
பொன்திணிந்த புனல் பெருகும் பொருநை எனும்
திரு நதி………’ எனக் கம்பராமாயணமும் போற்றுகிறது.

‘தெற்கேயுள்ள தமிழ்நாடான பாண்டியநாட்டுப் பகுதியில் அகன்ற பொதியமலையில் நிலைபெற்ற சிறந்த அகத்தியமுனிவனது தமிழ்ச்சங்கத்தைச் சேர்ந்தால், அது எப்போதும் அம்முனிவன் வாழும் உறைவிடமாகும். அம்மலையை வணங்கிச் சென்றால் அப்பால், பொன்துகள்கள் நிரம்பிய நீர் பெருகும் பொருநை எனும் திருநதியைக் காண்பீர்கள்,’ என சுக்கிரீவன் கூறுவதாக அமைந்த பாடல்.

பொதிகை மலையின் உச்சியினின்றும் குதித்து இறங்கி ஓடிவரும் நதி, முதலில் தினைப்புனங்கள் நிரம்பிய மலைகள் சார்ந்த குறிஞ்சிநிலத்திற்கு வளங்களைச் சேர்க்கின்றது. பிரம்மாவின் மகனான புலத்திய முனிவரின் மகனாகிய அகத்தியரின் பெருமையை உலகிற்கு அறிவிக்கின்றது இப்பொருநை நதி.

எவ்வாறு?

பெருமை வாய்ந்த உயர்ந்த முனிவர்களுள் அகத்திய முனிவர் முதன்மையானவராவார். அகத்தியர்meenatchi2 கைக்கமண்டலத்தைக் காக வடிவில் வந்த விநாயகன் தட்டி விட்டதனால் சிந்திய நீரினின்றும் உற்பத்தியானவள் காவிரி நதியாள்*. தம்முடைய கமண்டலத்தில் அடைபட்டிருந்த நீரை, பூமி செழித்து வளம் பெறவேண்டும் என்பதற்காக, அகத்தியர் தாமே உவந்து திருவுள்ளங்கொண்டு கவிழ்த்ததனால் தாமிரபரணி என அறியப்படும் தண்பொருநை* நதியாள் பெருகியோடினாள் எனக் கூறப்படுகிறது. அது மட்டுமின்றித் தன்னில் வந்து நீராடுவோருக்கு, அவர்களுடைய பாவங்களைக் களைந்துவிடும் தன்மையும் கொண்டவள் அவள். பின்பு பெருமை சேர்ந்த காடுசார்ந்த இடமாகிய முல்லைநிலங்களின் வழியாக, அவற்றின் வளங்களைக் கண்ணுற்றபடி செல்கின்றாள்.

அடுத்து, பலவிதமான பயிர்கள் விளைவிக்கப்பட்டுள்ள வயற்பிரதேசமாகிய மருதநிலத்தில் புகுந்து உலவிச் செல்கிறாள் தாமிரபரணியாள். அவ்வாறு உலவுங்கால், அகன்று விரிந்து வயல்களில் நீரெனத் தேங்கி, நெல்லினை விளைவித்தும் மகிழ்கிறாள்; குமரியெனக் குதிநடை போடாமல் அடங்கி மென்னடை நடந்து ஸ்ரீவைகுண்டம் எனும் புண்ணியத் தலத்தைச் சேர்ந்து வழிபடுகிறாள்; பின்பு அங்கிருந்தும் நீங்கி கடல்சார்ந்த நெய்தல் நிலத்தில் புகுகிறாள் அவள். அங்குகுழை எனப்படும் ஒருவகை நெய்தல்நில மலரில் புகுந்து தங்கியிருந்து இளைப்பாறுகிறாள். பின் எழுந்து உருண்டுபுரண்டு ஓடுபவள் அழகிய கடலின் கரங்களால் அரவணைத்துக் கொள்ளப்படுகிறாள். இவ்வாறு பெருமை கொண்ட நதியான தண்பொருநையின் முழக்கத்திற்கு இசைவாக நீயும் நயமாக செங்கீரை ஆடிடுவாயாக! குறுக்குத்துறை நாதனான குமரனே! செங்கீரையாடுக! என வேண்டுகிறார் புலவர்.

தண்பொருநையான தாமிரபரணியின் பாதையை இயற்கையின் இனிய காட்சிநயத்துடன் விளக்கும் பாடல்.

பொதிகைப் பொருப்பின் குதித்திறங்கிப்
புனஞ்சேர் குறிஞ்சி வளம்பெருக்கிப்
புலத்தி யன்றன் சுதன்பெருமை
புவிக்கே காட்டித் தனைச்சேர்ந்தார்
………………………………………………
நதியாம் பொருநை யலைமுழக்கில்
நயந்தா டிடுக செங்கீரை
நலமார் குறுக்குத் துறைநாதா
நன்கா டிடுக செங்கீரை.

(புலத்தியன் தன் சுதன்- புலத்திய முனிவரின் மகனான அகத்தியர்)

(குறுக்குத்துறை குமரன் பி. த.- செங்கீரைப்பருவம்- வித்துவான் தி. சு. ஆறுமுகம் எனும் சிவதாசன்)

*நதிகளைப் பெண்ணெனக் குறிப்பிடுவது நம் நாட்டு வழக்கு.

***************

ஆய்வுக்கு உதவிய நூல்கள்:

  1. திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழ்- சிதம்பர அடிகள்
  2. குறுக்குத்துறை குமரன் பிள்ளைத்தமிழ்- சிவதாசன்.

*****

கட்டுரையாளர்
முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
தமிழ்த்துறைத் தலைவர்

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *