நீலக் கண்கள் கொண்ட இந்தக் காட்டு மைனாவைக் கொடைக்கானலில் கண்டேன். என் கண்ணெதிரே சுவரிலிருந்து ஓர் இலையைப் பறித்தது. இது என்னுடையதாக்கும் என ஒரு குழந்தையைப் போல், அலகால் பற்றியபடியே இங்கும் அங்கும் சுற்றி வந்தது. கீழே போடமாட்டேன் என உறுதியுடன், இலையை வாயால் கவ்வியபடியே குரல் எழுப்பியது. அந்த அழகிய காட்சி இதோ.
மயில் பச்சை என ஒரு நிறமே உண்டு. கோவையில் தற்செயலாக இந்தப் பச்சைக் கழுத்து மயிலைக் கண்டேன். எனது நல்வாய்ப்பு, அதன் பல்வேறு உணர்வுகளை, அசைவுகளை நெருங்கி நின்று படமெடுக்க முடிந்தது.
மறவன்புலவு சச்சிதானந்தன், ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்குச் சென்றுள்ளார். அங்குள்ள தம் மகள் சிவகாமியின் இல்லத்தில் தங்கியுள்ளார். அந்த வீட்டுத் தோட்டத்தில் இந்திய மைனாவைப் போலவே உருவம் கொண்டுள்ள நாய்சி மைனர் என்ற பறவையைக் கண்டார். சிட்னி மைனா, சிவகாமியின் சிட்டு என அழைத்து அதைப் பதிந்து நமக்கு அனுப்பியுள்ளார். அந்த அழகிய பறவையைக் கண்டு மகிழுங்கள்.
பறக்கும் பறவைகளில் மிகப் பெரிய நீர்ப் பறவை, கூழைக்கடா. இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது. இவ்வினத்தின் எண்ணிக்கை மிதமான-துரித வீதத்தில் குறைந்து வருவதால் இதனை அச்சுறுத்துநிலையை எட்டியவை என்ற பிரிவில் ஐயுசிஎன் (The International Union for Conservation of Nature – IUCN) – சிவப்புப் பட்டியலில் வகுத்துள்ளது.
சென்னை, போரூர் ஏரியில் நீந்திக்கொண்டிருந்த புள்ளி அலகு கூழைக்கடா ஒன்றைப் படம் பிடிக்கத் தொடங்கினேன். அது மொத்த ஏரியையும் சுற்றிக் காண்பித்துவிட்டது. வகை வகையான பறவைகள், தாவரங்கள், மலர்கள் என எல்லாவற்றையும் இந்த ஒரே பதிவில் காணலாம்.
எங்கள் வீட்டு மொட்டை மாடியில் நின்று பார்த்த போது, சற்றும் எதிர்பாராத நிகழ்வு. கருப்பும் வெளுப்புமாக ஓராயிரம் பறவைகள் ஒரே இடத்தில் பறந்துகொண்டிருந்தன. எதற்காக இவை இப்படிக் கூடிப் பறக்கின்றன? உங்களுக்கு ஏதும் தெரியுமா?
சென்னை, சிட்லப்பாக்கம் ஏரியில் குழுவாக நீந்தும் நீர்க்காகங்கள் இதோ. வானில் பறக்கவும் நீரிலும் நீருக்கடியிலும் நீந்தவும் மிதக்கவும் வல்ல பறவை இது. நீருக்கடியில் நீந்தும்போதே மீனைப் பிடித்து வந்து உண்ணும் அரிய காட்சியைப் பாருங்கள்.
இந்தப் பறவையின் பெயர், முக்குளிப்பான். என்ன பொருத்தமான பெயர். தண்ணீருக்குள் என்னமாய் முக்குளிக்கிறது பாருங்கள். சிட்லப்பாக்கம் ஏரியில் நேற்று மாலை கண்ட காட்சி.