Tag: முனைவர் ச.அருள்

  • சமூக நோக்கில் கணேசகுமாரனின் ‘எழுத்தாளன்’ புதினம்

    -முனைவர் ச. அருள் 

    முன்னுரை

    arulஎழுத்தாளர் என்பவர் கதை, கவிதை, புதினம் உள்ளிட்ட எழுத்துப் படைப்புக்களைப் படைப்பவர். அவரது படைப்புக்கள் இதழ்கள், நூல்கள் மூலமாக வெளியாகும். இதழ்களில் எழுதும் எழுத்தாளர்களைத் தொழில்முறை எழுத்தாளர்கள் என்றும், சுதந்தர எழுத்தாளர்கள் என்றும் இரு வகையாகப் பிரிக்கலாம். ஒரு சமூகத்தில் சிந்திக்கும் எழுத்தாளன் நேர்மையான எழுத்தைப் பதிவு செய்பவனாகவும் சமரசங்களை ஒதுக்கித் தள்ளுபவனாகவும் வளைந்து கொடுக்காதவனாகவும் இருக்க வேண்டும். ஒரு சாதாரண சமூகத்தில் இருந்து எல்லாரையும் போல வெளியில் வருபவன்தான் எழுத்தாளன். எழுத்தாளன் என்பவன் கொம்பு முளைத்தவன் அல்லன். எழுத்தாளன் என்பவன் தான் வாழும் சமூகம் குறித்துச் சிந்தித்துத் தன் எழுத்துக்களால் சமூகத்தில் மாற்றத்தை மலரச் செய்பவன். அவ்வகையில் தமிழகத்தில் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவரான கணேசகுமாரனின் ‘எழுத்தாளன்’ என்னும் புதினம் குறித்தது இக்கட்டுரை.

    சமூகப் புதினம்

    முதிர்ச்சி அடைந்த சமுதாயத்திலிருந்து காலப்போக்கில் இலக்கியம் தோன்றுகிறது. இவ்வாறு தோன்றும்  இலக்கியம் தான் தோன்றிய சமுதாயத்தின் நிறை, குறைகளை வெளிப்படுத்துவதாக இருக்கும். இத்தகைய தன்மையுடைய புதினங்கள் சமூகப் புதினங்கள் எனப்படுகின்றன. கணேசகுமாரனின் ‘எழுத்தாளன்’ என்னும் புதினமும் இந்த வகையைச் (சமூக நாவல்) சார்ந்ததாகும்.

    “ஒரு குறிப்பிட்ட காலத்தின் சமூக, பொருளாதாரச் சூழ்நிலையினை வெளியிடுவதில் தீவிரம் காட்டுகிறது சமூக நாவல்”1 என்று உலக இலக்கியச் சொல்லகராதி உரைக்கிறது.“ ‘சமூக நாவல்’ என்று நாம் மேலெழுந்தவாரியாகக் கூறும் நாவல் வகையானது உண்மையில் சமகால வரலாற்று நாவலாகத்தான் இருத்தல் வேண்டும். ஏனெனில் சமூக நாவலை ஆக்குகிறவன். சமகால வரலாற்றின் தன்மைகள் சிலவற்றிற்கு இலக்கிய வடிவம் கொடுக்கிறான்”2 என்பது க.கைலாபதி கருத்து.

    சமூகப் புதினங்கள், சமகாலச் சமுதாய நிலைமைகளைக் காட்டுவதோடு, சமுதாயத்தில் நிகழும் மாற்றங்களையும் காட்டுகின்றன. இதனை,“சமூகம் மாறுகிறது என்றால் மாறுகின்ற சமூகத்தால் படைக்கப்பெறும் இலக்கிய வகைகளுள் ஒன்றான நாவல்கள் தம்மை வெளிப்படுத்திய சமூகத்தையும், அது அவ்வப்போது அடைந்துவரும் மாற்றங்களையும் காட்டத் தவறுவதில்லை. எனவே, தமிழ்ச் சமூக நாவல்கள், தமிழ்ச் சமூகத்தையும் தமிழ் மக்களிடையே காணும் மாற்றங்களையும் அறிவிக்கும் ‘காலைச் சங்குகள்’”3 என்று தா.வே.வீராசாமி குறிப்பிடுகின்றார்.

    திருமணம்

    சமூக நடப்பியலில் முதன்மையானது திருமணம். “மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு சடங்கின் மூலம் ஆணும் பெண்ணும் புதிய குடும்பத்தை உருவாக்கிக் கொள்ள நிறுவப்பட்ட ஒரு வினையே மணம் ஆகும். எனவே, அதுவும் ஒரு நிறுவனம் ஆகும். மணத்திற்குப் பிறகு கணவன் – மனைவி உறவு நிலைபெற்றதாகிறது.”4 என்பர். இவ்வுறவினை நீடித்து நிலைக்கச் செய்வது மக்கட்பேறாகும். நம் தமிழ்ச் சமூகத்தில் குடும்பத்தின் தலைமைப் பொறுப்பான பொருள் ஈட்டலையும் காத்தலையும் ஆடவன் ஏற்றுக் கொண்டாலும், குழந்தை வளர்ப்பும், குடும்பத்தைக் காக்கும் கடமையும், குலப்பெருமையைக் காப்பாற்றும் பொறுப்பும் இன்றும் பெண்கள் கையில்தான் இருக்கின்றன. எனவே, குடும்பத்தின் அடிக்கல்லாக இருப்பவள் பெண்.

    மரபுத் திருமணம்

    பெற்றோர் அல்லது உறவினர் உறுதிசெய்த ஏற்பாட்டுத் திருமணங்களே (மரபுத் திருமணம்) மிகுதி. இன்று திருமணம் என்பது நம் தமிழ்ச் சமூகத்தில் மிகுதியும் வணிக நெறியில் நடைபெற்று வருவதைக் காணமுடிகிறது. எழுத்தாளன் புதினத்தில் ஜெயந்தி என்னும் 21 வயது பெண்ணுக்கும் சகாதேவன் என்னும் எழுத்தாளனுக்கும் பெற்றோரால் நிச்சயிக்கப் பெற்ற மரபுத் திருமணம் நடைபெறுகிறது. “அப்போது ஜெயந்திக்கு 21 வயதுதான் யார் கையிலாவது தன் பெண்ணைப் பிடித்துக் கொடுத்துவிட்டால் தன் கடமை முடிந்துவிடும் என்று உறுதியாக நம்பினார் ராகவன். அம்மா இல்லாத ஜெயந்தியை காலேஜ் வரையில் வளர்த்ததே தன் வாழ்நாளில் பெரிய சாதனையாய் நினைத்தார். அவருக்கு மிகப்பெரிய ஓய்வு தேவைப்பட்டது. பெண் பார்க்க வந்த சகாதேவன் ஜெயந்தியுடன் தனியாய்ப் பேசினான்” – (எழுத்தாளன், ப.18). ஒரு கார்மென்ட்ஸ் கம்பெனியில் கணக்கு எழுதும் வேலை பார்த்துக் கொண்டே எழுத்தாளனாகவும் உருமாறிக் கொண்டிருந்த சகாதேவனை ஜெயந்தி மணம்செய்து கொள்கிறாள்.

    திருமணத்திற்குப் பிறகு ஜெயந்தியின் வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லாமல் சோகமே இழையோடுகிறது. அவள் நினைத்த வாழ்க்கை வேறு அவளுக்கு அமைந்த வாழ்க்கை வேறாக இருக்கிறது. “ஜெயந்தி ஒன்றும் தெரியாத பெண் அல்லள். ஆனால், அவளுக்கென்று சில எல்லைகள் இருந்தன. ஆரம்பத்திலிருந்தே அவள் தனக்கென ஒரு வட்டமிட்டு அதில் சுற்றி வந்தாள். வட்டம் தாண்டிய வானம் குறித்து அவள் பெரிதாய்க் கவலைப்படவில்லை. அப்படித்தான் அவள் சகாதேவனுக்கு மனைவியானாள். ஒரு மனைவி கணவனிடத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்று அவளுக்கு சொல்லப்பட்ட, அவள் கண்டுணர்ந்த வாழ்க்கையில் வாழ்ந்து சாக முடிவெடுத்தாள். ஆனால், அவளின் பகலும் இரவும் இடம் மாறியதைப் போல் ஆகிற்று திருமணத்திற்குப் பிறகான அவளது உலகத்தில் இன்னொரு கிரகத்தில் வாழ்வதைப் போன்ற உணர்வினை சகாதேவன் அவளுக்குத் தந்தான்” (எழுத்தாளன், ப.18).  ஜெயந்திக்கு தான் வாழ நினைத்த வாழ்க்கையும் அமையவில்லை. அவளுக்குப் பிறரால் சொல்லப்பட்ட வாழ்க்கையும் அமையவில்லை.

    இரவில் தன்னுடன் கூடும் தன் கணவன் எப்போது தன்னை விட்டு விலகிப் போகிறான். எப்போது உறங்குகிறான் என்பது புரியாமலே ஜெயந்தி உறங்கினாள், விழித்தாள், களைத்தாள். ஒருநாள் வழக்கமான கூடலுக்குப் பின் சகாதேவன் தன்னை விட்டு விலகுவதைப் பார்த்து ‘எங்கே போறீங்க’ என்று கேட்கிறாள். ‘ஒனக்கு சொன்னாப் புரியாது ஜெயந்தி. எனக்கு எழுதுறதுக்கான மூடு வர்றதே ஒனக்கும் எனக்குமான இது முடிஞ்சதுக்கப்புறம்தான்”  – (எழுத்தாளன், ப.19).  என்று பதில் உரைக்கிறான் சகாதேவன். “கட்டிலைவிட்டு இறங்கி லைட்டைப் போட்டுவிட்டு தன்னைப் பார்த்து சிரித்தவாறே சொன்ன கணவனையே இமைக்காமல் பார்த்தாள் ஜெயந்தி, அவளுக்கு இருள் தேவைப்பட்டது. சகாதேவனோ பெரும் வெளிச்சத்தில் நின்றிருந்தான். இனி ஒவ்வொரு முறை தன்னைத் தொடும்போதும் எப்போது இவன் முடித்து விலகுவான் என்ற எண்ணம்தானே தன்னை ஆக்ரமித்திருக்கும் என்று நினைக்கும்போது ஜெயந்திக்கு உடம்பெல்லாம் கூசியது. கணவன் முன்பான தன் நிர்வாணம் கைகொட்டிச் சிரிப்பதைக் கண்கலங்க பார்த்துக் கொண்டிருந்தாள்” – (எழுத்தாளன், ப.19).  இந்தப் புதினத்தில் ஜெயந்தி என்பவள் சகாதேவனின் உடல் பசியைத் தீர்ப்பவளாகவும் குழந்தைகள் பெற்றெடுக்கும் எந்திரமாகவும் படைக்கப்பட்டிருகிறாள். அவளுக்கான எந்த ஒரு விருப்பத்தையும் நிறைவேற்றத் தவறியவனாகவே சகாதேவன் சித்திரிக்கப்பட்டிருக்கிறான்.

    காதல் திருமணம்

    ஆணும் பெண்ணும் பருவ வயதில் உடலில் ஏற்படும் ஓர் இயற்கை உந்துதலால் தூண்டப்பட்டு உடல் இச்சை கொண்டு இன்பம் பெறவிரும்பி, காதல் வயப்பட்டு, பெண் ஆணையும் ஆண் பெண்ணையும் விரும்பிக் காதலிப்பர். ஓர் ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் விரும்பிப் பெற்றோரின் சம்மதம் பெற்றோ பெறாமலோ திருமணம் செய்து கொண்டால் அதற்குக் காதல் மணம் என்று பெயர். களவு வழிவந்த திருமணத்தை,

    யாமே, பிரிவின் றியைந்த துவராநட்பின்
    இருதலைப்
    புள்ளி னோருயி ரம்மே”5
    என்று அகநானூறு சுட்டுகிறது.

    எழுத்தாளன் புதினத்தில் வரும் மதிபாரதி என்கிற ஜெயலெட்சுமி தீபக் என்பவனைக் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறாள். இவர்களுக்கு வயதுக்கு வந்த இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்; அவர்கள் இருவரும் கல்லூரியில் படிக்கிறார்கள். இந்நிலையில் தீபக் ஒருநாள் சனிக்கிழமை மாலை நேரத்தில் வீட்டில் வேறொரு பெண்ணுடன் நெருக்கமாக இருப்பதைப் பார்த்த மதிபாரதி அதிர்ச்சி அடைந்து அழத் தொடங்குகிறாள். பின்பு அவளே அழக்கூடாது எனத் தீர்மானித்து அழுகையை நிறுத்துகிறாள். இது குறித்து தீபக்கிடம் கேட்கிறாள். அவன் தான் செய்தது சரி என நியாயம் கற்பிக்கிறான். ஆனால், மதிபாரதி அவன் சொன்ன நியாயங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. தீபக் தான் ஓர் ஆணாதிக்கவாதி என்பதை நிரூபிக்கும் வகையில் பேசுகிறான்.

    “நீ மட்டும் இலக்கியக் கூட்டம், கவிதைத் தொகுப்பு வெளியீடுன்னு கௌம்பி வெளியூர் போயிட்டு வர்றே…. நான் எதுவும் உன்னைக் கேக்குறேனா… கும்பலா நின்று போட்டோவுக்கு போஸ் வேற குடுக்குறீங்க, என் பொண்டாட்டி கவிஞர்னு சொல்லிக்கிறதில் எனக்கென்ன பெருமை… கல்யாணப் பத்திரிகையில் ஜெயலட்சுமிதான். மதிபாரதிங்கறது நான் குடுத்த பர்மிசன்தானே” – (எழுத்தாளன், ப.11).  என்று தீபக்கின் குரல் ஒலிப்பதைக் கேட்ட மதிபாரதிக்கு, யாரோ ஓர் அந்நிய பெண்ணுடன் கணவன் தன் பெட்ரூம் குளியல் அறையில் இருப்பதைப் பார்த்த நினைவு அடிக்கடி வந்து போவதால் சுய நினைவு இல்லாமல் தலையில் கை வைத்தபடி சோகத்தில் ஆழ்ந்திருக்கிறாள். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் மீண்டும் அவளிடம் ‘அந்தச் சகாதேவனுக்கும் ஒனக்கும் என்ன சம்பந்தம்’ என்று கேட்கிறான். மதிபாரதி சகாதேவனைப் பற்றி தன் மனத்தில் நினைத்து அசைபோடுகிறாள். சகாதேவன் ஓர் எழுத்தாளன். தான் ஒரு கவிஞர். அவ்வளவுதான் இலக்கியம் என்று வரும்போது கருத்துக்கள் ஒத்துப் போதலோ மாற்றுக் கருத்துக்கள் தோன்றுதலோ இயல்பு என்ற அளவில்தான் மதிபாரதி நினைத்துக் கொண்டிருக்கிறாள். சகாதேவனின் பார்வையிலும் அவ்வாறே இருக்கிறது. ஆனால், அவளைச் சுற்றியுள்ள மனிதர்களின் பார்வையில் நிறைந்த களங்கம் மதிபாரதியை யோசிக்க வைக்கிறது. மதிபாரதியின் எழுத்துக்கான முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருக்கிறான் சகாதேவன். யதார்த்தமாக சகாதேவனும் மதிபாரதியும் பேசிக் கொள்வதற்கே சந்தேகப்படுகிறான் தீபக். ஆனால், அவன் செய்த துரோகத்துக்கு எந்தப் பதிலும் இல்லாமல் இரகசியமாக உறவைத் தொடர்கிறான். அந்தச் சனிக்கிழமைக்குப் பிறகு தீபக் மதிபாரதியை தொடவே இல்லை. அவளது வாழ்க்கை வேறு நிறத்துக்கு மாறுகிறது. மதிபாரதியின் கவிதைகள் இதழ்களில் தொடர்ந்து வெளியாக தீபக்கின் கோபமும் அதிகமாகிறது.

    “ஒனக்கு எழுதணும் நெறைய புகழ் கிடைக்கணும் உன் பேரும் போட்டோவும் எல்லா புக்குலையும் வரணும் ஏகப்பட்ட ஆம்பளைங்களோடு பேசணும், பழகணும் குறிப்பாக, உன் எழுத்து வாழ்க்கைக்கு எல்லாமுமா இருக்கிற அந்த சகாதேவன் இல்லாம உன்னால இருக்க முடியாதுல்ல” -(எழுத்தாளன்,ப.17).  என்று கூர்மையான சொற்களால் முள்போல் மதிபாரதியின் மனத்தில் குத்துகிறான் தீபக்.

    மதிபாரதி சகாதேவனிடம் பேசுவதற்காக கைப்பேசியில் அவனை அழைக்கிறாள். எதிர் முனையில் பேசிய சகாதேவன் தான் பேருந்தில் சொந்த ஊரான வேலூருக்குச் செல்வதாகக் கூறுகிறான். மதிபாரதி சத்தம் இல்லாமல் அழுது கொண்டே அவனிடம் பேசுகிறாள். “நான் லவ் மேரேஜ்தான் சார். தீபக் என் கணவர். ஆர்க்கிடெக்ட், மேரேஜ் ஆன அடுத்த வருசமே ட்வின்ஸ் பொறந்தாங்க. ரெண்டு பொண்ணுங்க. பெரியவங்களாகிட்டாங்க” -(எழுத்தாளன், ப.21).  என்று கூறுகிறாள். நீண்ட நாள்களாக தான் எழுதி வைத்திருந்த கவிதைகள் எல்லாம் சென்ற ஆண்டு தொகுப்பாக வந்ததாகவும், அப்போது எல்லாம் தீபக் தன்னை ஊக்கப்படுத்தியதாவும் கூறுகிறாள். ஆனால், கவிதை பேசப்பட்டதும் இலக்கியக் கூட்டங்களுக்கு தான் போகத் தொடங்கியதும் அவருக்குப் பிடிக்கவில்லை என சகாதேவனிடம் புலம்புகிறாள்.

    சகாதேவன் மதிபாரதிக்கு ஆதரவாகவும் ஆறுதலாகவும் பேசுகிறான். ஆனால், அவள் தன் அழுகையையும் வலிகளையும் தாங்கிக் கொண்டு, “நான் அழாம இருக்க கஷ்டப்பட்டுதான் இப்போ உங்ககிட்ட பேசிட்டிருக்கேன். படிச்சவர், காதலிச்சிக் கல்யாணம் பண்ணின புருஷன் இப்போ மொத்தமா மாறிப் போயிருக்கார். அன்னிக்கி உங்க புக்ஃபங்ஷனுக்கு வந்தேனே ஞாபகம் இருக்கா?” -(எழுத்தாளன், ப.21).  என்று சகாதேவனிடம் பேசுகிறாள். தன் கணவர் தீபக் இன்னொருத்தியுடன் தன் வீட்டில் ஒன்றாக இருந்ததையும் அது குறித்துக் கேட்டதற்கு தன்னையும் சகாதேவனையும் இணைத்துப் பேசியதையும் ஒன்று விடாமல் அவனிடம் ஒப்பிக்கிறாள். அவனும், உங்க வாழ்க்கையில் பிரச்சனை வருவதற்கு நானும் தெரிந்தோ தெரியாமலோ காரணமாக இருந்துருக்கேன் என வருத்தப்படுகிறான்.

    கணவன் தனக்குச் செய்த துரோகத்துக்குப் பதில் தானும் துரோகம் செய்யத் துணிகிறாள். அஃதாவது தன்னையே எழுத்தாளன் சகாதேவனிடம் ஒப்படைக்கிறாள். “சராசரி ஆம்பளைக்கு இருக்குற எல்லா ஆசையும் சராசரி பொம்பளைக்கும் இருக்கும்ல. அதேதான் எனக்கும் இப்போ வந்த ஒடனே கேட்டீங்கள்ல, அந்த மாதிரி ஒருநாள் கூட தீபக் என்கிட்ட இந்தப் பொடவையில் நல்லாருக்கேன்னு சொன்னதில்ல. லவ் பண்ணினப்போ இருந்த தீபக்கை நான் மேரேஜுக்கு அப்புறம் மிஸ் பண்ணிட்டேன். பொண்ணுங்களுக்கு எப்பவுமே ஒரு செக்யூரிட்டி தேவைப்பட்டுக்கிட்டே இருக்கும். அப்பா பாதுகாப்புல இந்த ஒலகத்தைக் கவனிச்சிட்டு அப்புறமா இன்னொரு ஆணோட பயணப்படுறதுன்னா அது புருஷனாத்தானே இருக்க முடியும். அப்பிடித்தானே இந்தச் சமூகம் சொல்லியிருக்கு. நாம இந்தச் சமூகத்துக்கு எதிரா எதுமே பண்ண முடியாது. யோசிச்சுப் பாருங்க. அப்படி எல்லாம் மறுக்கப்பட்ட நிலையில் ஒரு பொண்ணா நான் என்ன பண்ணியிருக்க முடியும். என் பொண்ணுங்க வாழ்க்கையை நெனச்சிப் பார்த்துதான் டைவர்ஸுக்கு சம்மதிக்கல. எனக்காகவும் கொஞ்சம் வாழணும்னு தோணுச்சி. நீங்க வந்தீங்க. என் மேல அன்பா இருந்தீங்க. அது காதலா மாறிச்சி. காமம் கலக்காட்டி காதல் ருசிக்காதுல்ல. அதான் படுத்துட்டேன்” -(எழுத்தாளன்,ப.50).  காலந்தோறும் பெண்கள் ஆண்களைச் சார்ந்தே வாழவேண்டியிருக்கிறது. முதலில் தந்தையின் கட்டுப்பாட்டில், அடுத்து கணவனின் கட்டுப்பாட்டில், அதன் பிறகு மகனின் கட்டுப்பாட்டில் வாழ வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதைத்தான் மதிபாரதியின் கருத்தாகக் கணேசகுமாரன் பிரதி பலித்துக்காட்டியுள்ளார்.

    பெண்கள்

    ஆண், பெண் இருபாலரும் எந்தப் பருவத்தினராயினும் இருவரும் இணைந்துதான் சமூகம் உருவாகிறது. ஆண் சமூகம், பெண் சமூகம் எனப் பிரித்துப் பேசினாலும் இவை சமூகத்தின் அங்கங்களாகி இணையும் பொழுதுதான் முழுமை பெறுகிறது. ஆனால், சமூகத்தில் இருபாலரும் ஒத்த நிலையில் வைத்து எண்ணப்படுவதில்லை. ஆணுக்குப் பெண் தாழ்ந்தவள் கட்டுப்பட்டவள் என்ற எண்ணமே சமூகத்தில் வேரோடி நிற்கிறது. இதனால், சமூகத்தில் பெண்கள் பல்வேறு நிலைகளில் இழிவுக்குள்ளாக்கப்படுகிறார்கள். இந்நிலை அகற்றப்பட வேண்டும் என்பதே சமூகச் சீர்திருத்தவாதிகளின் எண்ணமாகும்.

    எழுத்தாளன் புதினத்தில் இடம்பெரும் பெண் கதைமாந்தர்களில் பெரும்பான்மையானவர்கள் ஆண்களால் புறக்கணிக்கப்படக் கூடியவர்களாகவே படைக்கப்பட்டிருக்கிறார்கள். சகாதேவனின் மனைவி ஜெயந்தி, மகள் தமிழ். தீபக்கின் மனைவி மதிபாரதி என்கிற ஜெயலட்சுமி இவர்களின் மகள்கள் (இரட்டையர்) இருவர். சண்முகத்தின் மனைவி சரிதா, மகள் தர்ஷனா. சண்முகத்தின் காதலி உமா.

    ஜெயந்தியைத் திருமணம் செய்து கொண்ட சகாதேவன் சில காலம் அவளுடன் தன் உடல்பசியை மட்டுமே தீர்த்துக் கொள்பவனாக வாழ்கிறான். பின்பு சென்னைக்குச் சென்று எழுத்தாளனாகப் பிறரால் அடையாளம் காணப்பட்டதும் தன் மனைவியின் நினைவே இல்லாமல் இருக்கிறான். இந்தக் காலகட்டத்தில்தான் கவிஞர் மதிபாரதியுடன் நட்புறவை ஏற்படுத்திக் கொண்டு அவளுடன் அடிக்கடித் தங்கும் விடுதிகளில் காம விளையாட்டில் ஈடுபடுகிறான். திருவள்ளுவர்,

    பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
    அறனொன்றோ
    ஆன்ற ஒழுக்கு”  6

    என்று உரைக்கின்றார். அஃதாவது பிறனுடைய மனைவியை விரும்பி நோக்காத பெரிய ஆண்மை, சான்றோர்க்கு அறம் மட்டும் அன்று, நிறைந்த ஒழுக்கமும் ஆகும் என்கிறார். ஆனால், பெண்கள் குறித்து உயர்வாக எழுதும் எழுத்தாளன் சகாதேவன் இன்னொருவன் மனைவி எனத் தெரிந்தும் மதிபாரதியுடன் கூடிக் குலவுகிறான்.

    தீபக், தன் மனைவி மதிபாரதி கவிதை எழுதக் கூடாது எனக் கண்டிக்கிறான். ‘நீ எழுதுறது எனக்குப் பிடிக்கலைனு சொல்றேன். எழுதுறதை நிறுத்திடு. எனக்குப் பொண்டாட்டியா இருந்தா மட்டும் போதும்’ எனக் கூறுகிறான். மதிபாரதியின் எழுத்துச் சுதந்திரத்தைக் கூடப் பறிக்க நினைக்கிறான் தீபக். பெண் என்பவள் தனக்காக வாழாமல் தன் கணவனுக்காக மட்டுமே வாழவேண்டும் என்பதை இக்கூற்று தெளிவுறுத்துகிறது.

    சண்முகம் என்பவன் ‘உமா’ என்ற பெண்ணைக் காதலிக்கிறான். ஆனால், அவனது பெற்றோர் அவனைக் கட்டாயப்படுத்தி சரிதா என்ற பெண்ணை அவனுக்குத் திருமணம் செய்து வைக்கின்றனர். தாலி கட்டிய நாள் முதல் அவளை ஒரு மனுஷியாகக்கூட  ஏற்றுக் கொள்ளாமல் அவளுடன் வாழ்கிறான். ஒரு நாள் பெசன்ட் நகர் பீச்சுக்கு சரிதாவை அழைத்துச் சென்று அவளிடம் உரையாடுகிறான்.

    “நமக்கு நடந்தது அரேஞ்சுடு மேரேஜ். நம்ம ஃபர்ஸ்ட் நைட்ல பெருசா எதுவும் ஷேர் பண்ணிக்கல. இப்போ சொல்றேன். என்னோட பாஸ்ட்ல ஒரு லவ் இருக்கு. கல்யாணம்னு என் அப்பா கம்பெல் பண்ணினப்போ அந்தக் காதலுக்கு குட்பை சொல்லிட்டுத்தான் வந்தேன். எனக்கு அமையற பொண்டாட்டி கிட்ட நாம உண்மையா இருப்போம்னுதான் கல்யாணத்துக்கு சம்மதிச்சேன். நான் எதிர்பார்த்த மாதிரி எதுவும் நடக்கல. ஒய்ஃபும். உன்னைத் தப்பா சொல்லல” -(எழுத்தாளன்,ப.44-45).  தனக்குப் பிடித்தது போல் இல்லை என்பதற்காகவே சரிதாவைப் புறக்கணிக்கிறான். அவள் தனக்காக வாழாமல் தன் கணவனுக்காகவே வாழ்கிறாள். இருந்தும் அவளை வெறுத்து ஒதுக்கும் இழி குணம் கொண்டவனாகவே சண்முகம் படைக்கப்பட்டிருக்கிறான்.

    விவாகரத்து

    தம்பதியரின் திருமண வாழ்வில் எத்தனையோ பிரச்சனைகள் வரலாம். பரஸ்பரம் விட்டுக் கொடுத்து அனுசரித்து வாழ்வதே வாழ்க்கை. மனம்ஒத்த தம்பதிகள் அப்படித்தான் செய்வர். ஆனால், குறிப்பிட்ட ஒருவரே தொடர்ந்து விட்டுக் கொடுக்க முடியாது. மட்டுமின்றி விட்டுக் கொடுக்கவே இயலாத விடயம் ஏதும் ஒன்று பிரச்சினையாகி அதன் மூலம் மனத்தாங்கல் ஏற்பட்டு இனிச் சேர்ந்து வாழவே இயலாது போனால்…. பிரிவதைத் தவிர வேறு வழி இல்லை. இந்நிலையில் மனம் ஒத்துப் போகாத தம்பதியர் அரசு அனுமதியுடன் அதிகாரப் பூர்வமாக பிரிதலே விவாகரத்து. ஆங்கிலேயர் வருகையால் நமது பண்பாட்டிலும் பழக்க வழக்கங்களிலும் ஏற்பட்டுள்ள பெரும் மாறுதல்களுள் ஒன்று சட்டப்படி விவாகரத்து பெறுதல். நம் நாட்டில் விவாகரத்து பெறுவது எளிதல்ல. அதில் ஏகப்பட்ட விதிகள் இருக்கின்றன. ஒவ்வொன்றிற்கும் தக்க காரணங்கள் காட்ட வேண்டும். ஒரு குடும்பம் பிரிந்தால் அஃது அந்தக் குடும்பத்தை மட்டுமல்ல, சமூகத்தையும் நாட்டையும் பாதிக்கிறது. எனவே, நமது சட்டம் கூடியவரை விவாகரத்து ஏற்படுவதைத் தவிர்க்கவே விரும்புகிறது. ஆனால், சட்டத்தின் துணை கொண்டு மணவிலக்குப் பெறாமலே பிரிந்து வாழ்வதும் இன்றைய தமிழ்ச் சமூகத்தில் பல்கிப் பெருகி வருகின்றது.

    மரபுத் திருமணம் செய்து கொண்ட சண்முகம் – சரிதா தம்பதியர் வாழ்வில் விரிசல் ஏற்படுகிறது. திருமணமான ஓர் ஆண்டிற்குள்ளேயே அவளை விட்டுப் பிரிய நினைக்கிறான் சண்முகம். அவள் தன் வயிற்றில் சண்முகத்தின் கருவைச் சுமந்து கொண்டிருக்கிறாள். “நீ கன்சீவா இருக்கிறேன்னு சொன்னப்போ எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. ஏன் இவ்ளோ அவசரமா நடக்குதுன்னு எனக்கே என்மேல கோபமாதான் இருந்துச்சி. ஒனக்கு அடுத்த மாசம் டெலிவரி. அதுவரைக்கும் நான் உன்கூட இருக்கேன். முறைப்படி டிவோர்ஸ் அப்ளை பண்ணி ஒன் இயர் வெயிட் பண்ணி அதுக்கப்புறம் ஃபார்மாலிட்டீஸ்லாம் முடிச்சிட்டுப் பிரியறதுக்கு அடுத்த மாசமே பிரிஞ்சிடலாம். எனக்கும் உமாவுக்கும் நெக்ஸ்ட் இயர் மேரேஜ் நடந்திடும். நான் உன் லைஃப்ல எந்த விதத்திலும் க்ராஸ் பண்ண மாட்டேன். என் பேரன்ட்ஸை நான் கன்வின்ஸ் பண்ணிக்குவேன். உங்க அப்பா அம்மாகிட்டவும் நான் பேசுறேன். நான் இவ்ளோ தைரியமா முடிவெடுக்குறதுக்குக் கூட நீதான் காரணம். உன்னால் எதையும் ஃபேஸ் பண்ண முடியும்ங்கிறதைத்தான் இந்த ஆறு மாசம் பார்த்தேன். உனக்குப் பணமா எந்த ஹெல்ப் வேணும்னாலும் நான் பண்றேன். நாம பிரிஞ்சிடலாம்” -(எழுத்தாளன்,ப.45).  என்று சண்முகம் கூறியதைக் கேட்ட சரிதா விவாகரத்துக்குச் சம்மதிக்கிறாள். பின்பு அவளுக்கு தர்சனா என்ற பெண் குழந்தை பிறக்கிறாள். அதன் பிறகு ஆண்கள் மீது நம்பிக்கை இல்லாமல் தன் மகளுடன் தனியாகவே வாழ்ந்து வருகிறாள். சரிதாவின் பெற்றோர் அவளை வேறொரு திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியும் அவள் மறுத்து விடுகிறாள். எட்டு வருடங்களுக்குப் பிறகு சகாதேவனின் கவிதைகளைப் படித்து அவனுடைய இலக்கியக் கூட்டங்களுக்குச் செல்கிறாள். அவனது எழுத்துக்கள் பெண்கள் பிரச்சனைகளை அவர்களே எழுதுவது போல் உள்ளது. இதன் காரணமாகவே சகாதேவனின் எழுத்துக்களை உயிர்ப்புடன் நேசிக்கும் வாசகியாகிறாள். சகாதேவனின் எழுத்துக்களில் ஒன்றி விட்ட சரிதா அவனையும் அவனது எழுத்துக்களையும் விமர்சிக்கும் விமர்சகியாகவும் மாறுகிறாள்.

    காதலித்து மணம் புரிந்து கொண்ட தீபக் தன் மனைவி ஜெயலெட்சுமியை (மதிபாரதி) விவாகரத்து செய்ய நினைக்கிறான். ஆனால், அவள் தன் இரண்டு மகள்களின் எதிர்காலத்தை நினைத்து பிரிய மறுக்கிறாள். ஒரு நாள் மதிபாரதி தன் கவிதைகள் குறித்து சகாதேவனுடன் பேசிக்கொண்டிருக்கிறாள். அப்போது சகாதேவன் ‘நீங்கள் எழுதித்தான் தீரணும்னா அதுக்கு சில விலை தந்துதான் ஆகணும்’ என்கிறான். அதற்கு அவள், “இல்லைங்க. அதெல்லாம் தாண்டியாச்சி, டைவர்ஸ் வரைக்கும் போய் நிக்குது” -(எழுத்தாளன்,ப.21).  என்கிறாள். எந்தச் சூழலிலும் திருமண உறவினை முறிக்கக்கூடாது என்று பெண்களின் உள்ளத்தில் ஊறிப் போன சமூக மரபு முழுவதுமாக நம்பிக்கையற்றதாய், பயனற்றதாய்ப் போய் விடவில்லை என்பதையே மதிபாரதியின் செயல்பாடு காட்டுகிறது.

    மதுப் பழக்கம்

    பெரும்பான்மையான படைப்பாளிகளும் சரி கலைஞர்களும் சரி இந்த ‘மது’ என்னும் அரக்கனின் பிடியில் இருந்து தப்பித்ததாக வரலாறு என்பது இதுவரை இல்லை. கவிஞர்களுக்கும், கலைஞர்களுக்கும் மது என்பது ஒரு சாபக்கேடு என்பதில் எள்ளின் முனைஅளவுகூட சந்தேகம் இல்லை. “மது அருந்தும் பழக்கம் நம் நாட்டில் சங்ககாலந்தொட்டு இன்று வரை நிலவி வருகின்றது. இன்று இல்லங்களில், காப்பி, தேநீர் மற்றும் பலவகை சத்துணவுப் பானங்கள் அருந்தப்படுவது போல அன்று மது தமிழரின் வாழ்விலும் இன்ப துன்பங்களிலும் இடம் பெற்றாலும் பெரும் சிக்கல்கள் உருவானதாகத் தெரியவில்லை”7 ஆனால், இன்று மது அருந்தும் பழக்கம், சூது, மாது, போதைப்பொருள் எனப் பல்வேறு ஒழுக்கக் கேடுகளுக்கு அழைத்துச் செல்கிறது.

    சகாதேவன் ஓர் இலக்கிய நிகழ்வுக்காக சேலம் செல்கிறான். பேருந்து நிலையம் அருகில் அறை எடுத்துச் சக எழுத்தாளர்களான பாரதி நேசன், ராம், கௌரவன் ஆகியோருடன் தங்குகிறான். காலை, மதியம் இலக்கிய நிகழ்வு முடிந்து அருகிலேயே அவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்கிறார்கள். அன்று இரவு சகாதேவன் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துகிறான். “இரவு சக எழுத்தாள நண்பர்களுடன் மது அருந்தினான் சகாதேவன்” -(எழுத்தாளன்,ப.28).  மதுபோதை தலைக்கு ஏறியதும் அவர்களுக்குள் சண்டை ஏற்படுகிறது. சகாதேவன் ராமைப் பார்த்து, “என்ன ராம்…. பெக் அதிகமாகிடுச்சோ” -(எழுத்தாளன்,ப.28)  என்று கேட்கிறான். பிறகு கலவரம் அதிகமாகி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்கிறார்கள். அன்று  இரவே பக்கத்து அறையில் தங்கியிருக்கும் மதிபாரதியை அழைத்துக் கொண்டு வெளியேறுகிறான் சகாதேவன். “அளவோடு இருந்தால் குடிப்பழக்கமும் தவறானதன்று; அளவுக்கு மீறினால் தவறு”8 என்று ஜெயகாந்தன் கூறும் கருத்து இவ்விடத்தில் ஒப்புநோக்கத்தக்கது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை குடிப்பழக்கத்திற்கு ஆளானோர் அளவோடு நிற்பதில்லை என்பதை மேற்காணும் நிகழ்வு படம்படித்துக் காட்டுகிறது.

    முடிவுரை

    ஒரு சமூகத்தை ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நியாயமாகவும் நேர்மையாகவும் கடத்திச் செல்பவனே சிறந்த எழுத்தாளன் ஆகிறான். இப்புதினத்தில் முதன்மைக் கதைமாந்தனாக வரும் எழுத்தாளன் சகாதேவன் சுயக்கட்டுப்பாடு, சுய ஒழுக்கம் இல்லாதவனாகவே இருக்கிறான். புதினத்தின் தொடக்கத்தில் இருந்து கடைசி வரை தான் ஓர் ஆண் என்பதை நிரூபித்துக் கொண்டே இருக்கிறான் சகாதேவன். வரிக்கு வரி நான் ஓர் ஆண், நான் ஓர் ஆண், நான் அடுத்தவன் மனைவி கூட இருப்பேன் அதைப்பற்றி எனக்குக் கவலை இல்லை ஏனென்றால் நான் ஒரு ஆண் என்பதாகவே இக்கதை நகர்கிறது. தன் மனைவி ஜெயந்தி தன்னுடைய எழுத்தை இரசிக்கவில்லை என்பதற்காகவே சகாதேவன் அவளைக் குற்றப்படுத்துகிறான். சகாதேவன் எல்லா இடங்களிலும் தன்னை நியாயப்படுத்துகிறான். தன் மனைவி ஜெயந்திக்குத் தெரியாமல் வேறொருவன் (தீபக்) மனைவியுடன் (மதிபாரதி) தவறான உறவை ஏற்படுத்தி வாழ்ந்து வருகிறான். அது குறித்த எந்தக் குற்ற உணர்ச்சியும் அவன் மனத்தில் இல்லை.

    இரண்டு மகள்களோடு வாழ்க்கையில் தடுமாறும் மதிபாரதியை நற்கருத்துக்கள் கூறி நல்வழிப்படுத்தாமல் தன்வயப்படுத்தி தன் இச்சையைத் தீர்த்துக்கொள்கிறான் சகாதேவன். இந்தச் சமூகத்தில் ஓர் ஆண் தனியாக வாழ்ந்து விடலாம். ஆனால், ஒரு பெண் தனியாக வாழ முடியாது. அதனால்தான் மதிபாரதியின் கணவன் தீபக் நாம் இதிலிருந்து பிரிந்து விடலாமா? எனக் கேட்கும் போது அவள் மறுத்துவிடுகிறாள். அவள் விவாகரத்து செய்தால் தன் இரண்டு மகள்களோடு தனியாக வாழ முடியாது. அப்படியே தனித்து வாழ்ந்தாலும் இந்தச் சமூகம் அவளை அடங்காப்பிடாரி, மோசமானவள் எனக் கூறலாம். கணவன் தீபக் வேறொரு பெண்ணுடன் இருப்பதைப் பார்த்த மதிபாரதி மனம் கலங்கி, பின்பு தன்னைத் தானே ஆசுவாசப்படுத்திக்கொண்டு, கணவனைப் பழிவாங்கும் நோக்கில் இன்னொருத்தியின் கணவனைத் தேடிப் போகிறாள்.

    மதிபாரதி தான் வேறொரு ஆணுடன் (சகாதேவன்) இருப்பதைப் பற்றி கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லாதவளாகவே இருக்கிறாள்.  சரிதா தன் கணவனை விவாகரத்து செய்து, தனியாக தன் மகளுடன் வாழும் போதும் சுயமரியாதை உள்ளவளாகவும், ஒழுக்கம் மிக்கவளாகவும் வாழ்ந்து வருகிறாள்.

    எழுத்தாளர்கள் என்பவர்கள் பெருங்குடிகாரர்கள் என்பதை இப்புதினத்தின் கதைமாந்தர்கள் வழி கணேசகுமாரன் புலப்படுத்தியுள்ளார். முந்நாளில் பெண்கள் திருமணம் ஆகும் வரை பெற்றோருக்கும், திருமணம் ஆனபின் கணவனுக்கும் கட்டுப்பட்டு வாழ்ந்தார்கள். ஆனால், இந்நாளில் அவர்கள் தாங்களாகவே பொருள் தேடவும், சிந்திக்கவும், செயல்படவும் தொடங்கிவிட்டார்கள் என்பதை இப்புதினம் வழி அறியமுடிகிறது.

    *****

    குறிப்புகள்

    1. இரா.தண்டாயுதம், சமூக நாவல்கள், ப.25
    2. க.கைலாசபதி, தமிழ் நாவல் இலக்கியம், ப.116
    3. தா.வே.வீராசாமி, தமிழில் சமூக நாவல்கள், பக்.3-4
    4. எஸ்.ஜெ.பாஸ்கல் கிஸ்யாட், சமூகவியலின் அடிப்படைக் கோட்பாடுகள், ப.1
    5. அகநானூறு, பா.12:4-5
    6. திருக்குறள், 148
    7. ச.பரிமளா, சங்கத் தமிழர் வாழ்வில் தேறல் (ஆய்வுக் கோவை-1), இந்தியப் பல்கலைக்கழக தமிழாசிரியர் மன்றம், பக்.372-377
    8. கரு.முத்தையா, ஜெயகாந்தன் நாவல்களில் பாத்திரப்படைப்பு, ப.378

    *****

    கட்டுரையாளர்
    உதவிப் பேராசிரியர்,
    தமிழாய்வுத்துறை,
    அ.வ.அ.கல்லூரி (தன்.),
    மன்னன் பந்தல்,
    மயிலாடுதுறை.

    Share
  • வ.சுப.மாணிக்கனாரின் ‘மாமலர்கள்’ வீசும் மணம் – 2

    -முனைவர் ச.அருள்

    தமிழ் வளர்த்த சான்றோரைப் பாராட்டல்

    19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய அறிஞர்கள் பலர் தமிழுக்கு ஆற்றிய தொண்டு அளப்பரியது. தெலுங்கு, மராட்டியம், ஆங்கிலம் எனப் பல நூற்றாண்டுகளாக பிறமொழி ஆதிக்கத்தால் தொய்வுற்றிருந்த தமிழ் மொழியை மீட்டெடுத்து தமிழர்களைப் பெருமையுறச் செய்த தமிழ் அறிஞர்கள் பலர். அவர்களுள் தலைசிறந்த தமிழ் அறிஞராக இன்றும் என்றும் போற்றத்தக்கவர் உ.வே.சாமிநாத ஐயர் அவர்கள். இவர் மட்டும் தமிழ்நாட்டில் பிறந்திருக்காவிடில் எத்தனையோ இலக்கியங்கள் தமிழர்களுக்குக் கிட்டாமலேயே போயிருக்கும். ‘ஏடு காத்த ஏந்தல்’ என்று இவரைச் சிறப்பிக்கின்றார்கள். பல்வேறு ஆசிரியர்களிடமும் திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடமும் பயின்றவர்.  உ.வே.சாமிநாத ஐயர் சிந்தாமணி, சிலப்பதிகாரம், பத்துப்பாட்டு, புறநானூறு, மணிமேகலை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், பெருங்கதை முதலிய இலக்கியங்களை ஓலைச்சுவடியில் இருந்து தொகுத்து, உரைகளைச் சரிபார்த்து தொகுத்து தமிழ் உலகத்திற்குத் தருவதற்காகத் தம் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்.

    கவிஞர் வைரமுத்து, ‘மொழி காத்தான் சாமி’ என்னும் பொருண்மையில் உ.வே.சா. குறித்து எழுதிய கட்டுரையில், “தமிழ் என்பது விழுமியம், பெருமிதம், வீரம், ஈரம், காதல், பண்பாடு, தத்துவம் என எல்லாம் கூடிக் கலந்த ஒரு பெரிய கலாசாரக் கடல். இத்தனை கருவிகளுக்கும் சான்று தந்தவர்தாம் உ.வே.சாமிநாதையர். அவர் இல்லையெனில் தமிழின் தொன்மைக்கும், தமிழினத்தின் பெருமைக்கும் தடயங்களும் சான்றுகளும் ஆவணங்களும் இல்லை. ஊர் ஊராய் ஏடு தேடி அந்த அந்தணக் கிழவன் சந்தனமாய்த் தேய்ந்திராவிடில் ஒரு செம்மொழியின் முதல் தகுதியான தொன்மை என்பதற்கு நாம் ஆதாரமற்றுப் போயிருப்போம்” என்று கூறியுள்ளார்.

    வ.சுப.மாணிக்கனார், ‘மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே.சாமிநாதையர்க்கு’ என்னும் கவிதையில்,

    பார்காத்தார் ஆயிரம்பேர் பசித்தார்க்காகப்
    பயிர்காத்தார் ஆயிரம்பேர் பாலர்க் காக
     மார்காத்தார் ஆயிரம்பேர் வாழ்ந்த நாட்டில்
    மனங்காத்த தமிழ்த்தாய் “என் உடைமை யெல்லாம்
    யார்காத்தார்” எனக்கேட்க ஒருவன் அம்மா
    யான்காப்பேன் எனவெழுந்தான்
    சாமி தான்!
    நீர்காத்த தமிழகத்தார்
    நெஞ்சின் உள்ளான்
    நிலைகாத்த மலையிமய நெற்றி மேலான்.
       பொய்யாத தமிழ்க்குமரி ஈன்ற சாமி!
    போகாத புகழ்க்கன்னி மணந்த நாத!
    செய்யாத மொழித்தொண்டு செய்த ஐய!
    சிறுகாத நெஞ்சத்தேம் வணங்கு செம்மல்!
    எய்யாத திருவடியால் எண்பத் தாண்டும்
    இளையாத உள்ளத்தால் எங்குஞ் சென்று
    நெய்யாத தொன்னூல்கள் நிலைக்க வைத்த
    நீங்காத தமிழ்க்குயிரே! நின்தாள் வாழ்க!”             – (மாமலர்கள், .72)

    என்று வாழ்த்துகிறார். உலகினைக் காத்தவர்கள் பசித்தோர்க்கு உணவு கொடுக்கப் பயிர் செய்து அந்தப் பயிரைக் காத்தவர்கள்; குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பதற்காக தாய்மடி காத்தவர்கள்; இவர்கள் மத்தியில் தமிழ்த்தாயின் உடைமைகளை, தமிழ் இலக்கியங்களைக் காப்பதற்காக தன்னார்வத் தொண்டராக வந்தவர்தாம் உ.வே.சாமிநாதையர். இவர் தமிழ் மொழிக்குத் தொண்டு செய்தவர். எண்பது ஆண்டுகளுக்கு மேல் ஓய்வில்லாமல் தமிழ்த் தொண்டாற்றி தமிழர்கள் உள்ளத்தில் நிலைத்து நிற்கிறார். தமிழைத் தன் உயிர் மூச்சாகக் கொண்டவர் தமிழுக்கு உயிரானவர் உ.வே.சா.சாமிநாதையர் அவர்தம் தாள் வாழ்க என்கிறார் வ.சுப.மாணிக்கனார்.

    அண்ணாமலை செட்டியார்

     செட்டி நாட்டு அரசர் சர் ராஜா அண்ணாமலை தமிழ் இசைக்காக தமிழ் மொழிக்காக உழைத்த உத்தமர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தினை நிறுவி பலருக்குக் கல்வி வழங்கிய அண்ணாமலை செட்டியார் சிறந்த கொடை உள்ளம் படைத்தவர். தமிழ் இசை மீது ஈடுபாடு கொண்ட அண்ணாமலை செட்டியார் தமிழிசையை ஆய்வு செய்வதற்காக 1941– இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு நிதியுதவி செய்தார். இந்த நிதியானது தமிழிசை இயக்கத்திற்கு ஓர் உந்துதலாக இருந்தது. வ.சுப.மாணிக்கனார் ‘வள்ளல் அண்ணாமலையரசர்’ என்னும் கவிதையில்,

    நில்லாத செல்வத்தை நிலைக்கச் செய்தான்;
    நீங்காத கலைப்புரட்சி நிரம்பச் செய்தான்;
    கல்லாத இனமெல்லாம் கற்க வைத்தான்;
    காணாத பெருங்கழகம் களத்து வைத்தான்;
    இல்லாத புலவர்களை இருப்போர் ஆக்கி
    இணையாத தமிழ்ப்புகழை ஈட்டிக் கொண்டான்;
    வெல்லாத செயலில்லை என்று போற்ற                                    விளங்கியவன் மன்அண்ணா மலையன் வாழ்க.” – (மாமலர்கள், 76)

    என்று அண்ணாமலை செட்டியாரைப் போற்றிப் புகழ்ந்துள்ளார். நிலைத்து நிற்காத செல்வத்தை நிலைக்கச் செய்து, கலைகளில் புரட்சி செய்தவர் அண்ணாமலையரசர். மிகப்பெரும் பல்கலைக்கழக்தை உருவாக்கி, கல்லாத மக்களே இல்லாத நிலையை உருவாக்கியவர். தமிழறிஞர்களை ஊக்குவித்து தமிழின் புகழை உலகறியச் செய்தவர். அண்ணாமலை அரசர் தம் பல்கலைக்கழகத்தில் (மீனாட்சி, தமிழ்க்கல்லூரி) தலைவராக உ.வே.சாமிநாதையரை நியமித்து, விபுலானந்த அடிகள், கா.சுப்பிரமணியப்பிள்ளை, சோமசுந்தர பாரதியார், பண்டிதமணி மு.கதிரேசச் செட்டியார், ந.மு.வேங்கடசாமி நாட்டார், ரா.ராகவையங்கார், அ.சிதம்பரநாதன், கோ.சுப்பிரமணியப் பிள்ளை, மு.அருணாசலம், தெ.பொ.மீனாட்சி சுந்தரம்பிள்ளை, ரா.பி.சேதுப்பிள்ளை முதலிய தமிழ் அறிஞர்களைப் பணியில் அமர்த்தியவர். இவர்களைப் பற்றி விரிவாக மேற்கண்ட கவிதையில் மேலும் வரிகள் நீட்சி பெறுகின்றன.

    தமிழ்சூடி

    ஔவையார் எழுதிய ஆத்திசூடியின் பாயிரம் ‘ஆத்திசூடி அமர்ந்த தேவனை ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே’ என்று அமைந்திருந்ததால் பாடலின் முதல் சொல்லையே இந்த இலக்கியத்திற்கு உரிய பெயராக அமைத்துக் கொண்டனர். ஔவையாருக்குப் பின்னர் ஆத்திசூடிகள் எழுதியவர்களில் பாரதியார் – புதிய ஆத்திசூடி, பாரதிதாசன் ஆத்திசூடி, வாணிதாசன், சுத்தானந்த பாரதி, ந.சஞ்சீவி, மு.வரதராசன் ஆகியோரின் புதிய ஆத்திசூடி, ந.ரா.நாச்சியப்பன் – நெறிசூடி, ச.மெய்யப்பன் – அறவியல்சூடி, தமிழண்ணல் – ஆய்வு சூடி, ரெ.முத்து கணேசன் – முத்துசூடி, புலவர் சோம.இளவரசு – நீதி சூடி எனத் தங்கள் விருப்பத்திற்கேற்ப பெயர்களை அமைத்துக் கொண்டனர். இவர்களைப் போல் வ.சுப.மாணிக்கனார் தமிழ்சூடி என்னும் நூலை இயற்றியுள்ளார். இந்நூலில் சிறுவர்கள் சிந்திக்கத்தக்க 118 சிறந்த அறக்கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன. தமிழ்சூடி பாயிரத்தில்,

    தமிழ்சூடி வழிபாடு செய்வாய் குழந்தாய்
    தாய்மொழி தவறாது கற்பாய் குழந்தாய்
    திருக்குறள் கண்போலத் தெளிவாய் குழந்தாய்
    தீமைகள் மனத்தினும் தீண்டாய் குழந்தாய்
    துடிபோலப் பள்ளிக்குத் தொடர்வாய் குழந்தாய்
    தூய்தமிழ் எங்குமே சொல்வாய் குழந்தாய்
    தென்றலில் நன்றாகத் திளைப்பாய் குழந்தாய்
    தேனினிய நூலகம் செல்வாய் குழந்தாய்
    தைத்திங்கள் பொங்கலில் தளிர்ப்பாய் குழந்தாய்
    தொண்டுகள் பலசெய்யத் துடிப்பாய் குழந்தாய்
    தோலாத தமிழ்நூல்கள் தொகுப்பாய் குழந்தாய்
    தமிழ்சூடி வழிபாடு செய்வாய் குழந்தாய்”                               – (மாமலர்கள், ப.140)

    என்று வ.சுப.மாணிக்கனார் பாடியுள்ளார். தாய்மொழியாம் தமிழ் மொழியைத் தவறாமல் கற்றுத் திருக்குறளில் தெளிவு பெற்றால் மனத்தில் தீமைகள் அண்டாது என்கிறார். துடிப்போடு பள்ளிக்குச் சென்று தூய தமிழில் பேச சொல்கிறார். இயற்கைக் காற்றை சுவாசித்து, நூலகத்தில் நல்ல நூல்களை வாசித்து தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை நன்றாகக் கொண்டாடப் பணிக்கின்றார். வாண்டுகள் தொண்டுகள் பல செய்து, தமிழ் நூல்களைத் தொகுத்து தமிழை மாலையாகச் சூடி வழிபடச் சொல்கின்றார்.

    வ.சுப.மாணிக்கனார் தமிழ் சூடியில் தமிழ்மொழி, தமிழ் நூல்கள், தமிழ் இனம் குறித்துப் பேசுகிறார். செந்தமிழ் பயில் (50), சொல்லைக் கலவேல் (53), இந்தியை விலக்கு (21), தாய்மொழி முதன்மொழி (62), அகத்தமிழ்படி (1), புறத்திணை படி (88), தொல்காப்பியம் படி (70), திருக்குறள் வரப்பண் (63), சங்க நூல் போற்று (44), ஔவையைப் போற்று (12), குறுந்தொகை படி (36), முத்தமிழ் பரப்பு (100), தமிழிசை பரப்பு (61), யாப்புப் பழகு (108), தேவாரம் பாடு (68), விவிலியம்படி(113), மொழிபல கல் (104), நூல்கள் எழுது (77), கண்ணகி வழிநட (19), சிலம்பை நடி (46), பூம்புகார் போற்று (89), பேகனைப் புகழ் (91), ஆழ்வார் நெறிநில் (2) எனத் தமிழ்சூடி உரைக்கின்றது. தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்று, அதற்கு ஏற்ப வாழுமாறு வலியுறுத்துகின்றார். மேலும், தீண்டாமை யொழி (64), போரையொழி (94), மதுவை விலக்கு (96), கையூட்டு மறு (40), கிளர்ச்சி எதற்கு (34) எனச் சமூக அவலங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளார். நெஞ்சை உயர்த்து (78), உன்னைத் திருத்து (31), ஏனென்று கேள் (8), சாவிலும் மகிழ் (45), பிறவியை மதி (86), மக்களை மதி (14), யமனைப் புறங்காண் (45), மாற்றம் விரும்பு (97) என தன் முன்னேற்றச் சிந்தனைகளை விதைத்துச் சென்றுள்ளார்.

    பெண்மையைப் போற்றிய வ.சுப.மாணிக்கனார்

    இலங்கை வேந்தன் இராவணனின் மனைவி மண்டோதரி, அரக்க மன்னன் தேவதச்சன் மயனின் மகள். அழகு, கடமை, கண்ணியம், நேர்மை பண்புகள் நிறைந்தவள். இராவணன் பிறன் மனையாளாகிய சீதையைக் காமுற்று அசோகவனத்தில் கொண்டு வந்து சிறை வைத்திருக்கிறான் என்ற செய்தி கேட்டு மண்டோதரி மனம் உடைந்து கலங்குகிறாள். அவனைத் திருத்தத் துணிவு கொள்கிறாள். இராவணன் நள்ளிரவில் அசோகவனம் சென்று இரந்து சீதையின் காலடியில் விழ முற்பட்டபோது, அங்கு முன்னரே சென்றிருந்த மண்டோதரி எதிரே நிற்கிறாள். தன் மனைவியைக் கண்ட இராவணன் நடுங்குகிறான். மண்டோதரி அவனுக்கு அரசு நெறியையும் ஒழுக்க நெறியையும் இடித்துச் சொல்லிச் சீதைக்கு உடனே, விடுதலை அளிக்கிறாள். கணவனைத் திருத்திய மண்டோதரியின் கற்புப் புரட்சியை,

    நுழையாத குடிசைக்குள் நோன்பிருப்பார்
      விட்டகன்ற நொடிமை பார்த்து
    விழையாத முனிவேடம் மேற்கொண்டு
      பிறனுடலை விரும்பித் தூக்கி
    இழையாத துயர்வனத்தில் இல்லாள்கள்
      செவிகேட்க வைத்தான் என்றால்
     பிழையாத மனைவியர்க்கும் பிழைசெய்ய
       இடங்கொடுத்த பிசடு போமே
    களித்தாடுங் கணவனையும் கழிகாமக்
      கணவனையும் கன்று சூதல்
    விளித்தாடுங் கணவனையும் வினைசுருக்கித்
       தசைபெருக்கி வீம்பே பேசி
    நெளித்தாடுங் கணவனையும் நெஞ்சரிக்கும்
       புகைகுடித்து நீள ஊதித்
     திளைத்தாடுங் கணவனையும் திருத்துகின்ற
      பொறுப்புடையாள் தீமை யில்லாள்                               – (மாமலர்கள், பக்.147-148)

    என்று ‘புரட்சி மண்டோதரி’ பாடல் பாடுகின்றார். இராமன் இல்லாத கவிதையில் நேரத்தில் முனிவர் வேடத்தில் சீதையைத் தூக்கி வந்த இராவணனைத் திருத்தும் கற்புடையாளாக மண்டோதரியைக் காட்டியுள்ளார் வ.சுப.மாணிக்கனார். இந்தப் படைப்பில் இராவணணின் கயமை, பேதைமை, கீழ்மை, சூழ்ச்சி பேசப்படுகிறது. மண்டோதரியை புரட்சிப் பெண்ணாகக் காட்சிப்படுத்தியுள்ளார்.

    வீரச்செல்வி செம்மலர்

    ‘கொல்லாச் சிலம்பு’ என்னும் கவிதையில், பொற்கொல்லன் மனைவி செம்மலர் என்பவள் தன் வீட்டின் உள்ளறைக்குள் விலை உயர்ந்த சிலம்பு ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருப்பதைத் திடீரென காண்கிறாள். பாண்டிமாதேவி தன் ஒரு சிலம்பு காணாமல் போயிற்று என்று சொன்ன செய்தி நினைவுக்கு வருகிறது. குடுகுடுப்பைக்காரனுக்குப் பொற்கொல்லன் கொடை செய்த அருமையும் அவள் நினைவுக்கு வருகிறது. உடனே, பாண்டியன் தேவியைப் பார்க்கிறாள். புகாரிலிருந்து மனைவியொடு வந்த ஒரு வணிகன் தன் சிலம்பைக் களவாடினான் எனவும் பெருந்தண்டனை பெறுவான் எனவும் தேவி வெளிப்படுத்துகிறாள். இவருவரும் அரசவைக்குச் சென்ற சமயம் கள்வனைக் கொன்று சிலம்பினைக் கொண்டு வருக என்று பாண்டியன் ஊர்க் காவலர்க்குக் கட்டளையிட்டுக் கொண்டிருக்கிறான். அரசனை இடைமறித்துச் செம்மலர் இத்தீர்ப்பு முறையற்றது எனக் கூறித் தான் அன்று எதிர்பாராது ஓரிடத்துக் கண்ட சிலம்பினைக் காட்டுகிறாள். அதுதான் காணாமல் போன பாண்டிமாதேவியின் காற்சிலம்பு.

                    நிகழ இருந்த கொலையைத் தவிர்த்து செங்கோலையும் தங்கள் உயிர்களையும் காத்து அளித்த செம்மலர் நல்லாளைப் பாண்டியன் அரசவையில் பொதுமக்கள் முன்னிலையில் பாராட்டுகிறான். அவளது பெருந்தொண்டினையும் துணிச்சலையும் உலகத்தார் அறிய வேண்டிய ‘செம்மலர்’ என்ற நாடகம் அரசு விழாவாக ஆண்டு தோறும் நடைபெற வேண்டும் என்று ஆணையிடுகிறான். பாண்டியன் அன்புப் பரிசாக வழங்கிய முத்து மாலையைச் செம்மலர் தன் தொண்டின் பரிசாக வாங்க மறுத்து விடுகிறாள். தங்களுக்கு வர இருந்த தீய விளைவுகள் செம்மலரின் கடமை வீரத்தால் மாறி விட்டன என்ற நிலையறிந்த கோவலனும் கண்ணகியும் ‘வீரச்செல்வி’ என்று செம்மலராளை மனத்தில் வைத்துப் போற்றுகின்றனர். செம்மலர் நங்கையின் நற்புகழினை,

    ”சோலை மலருட் சுருண்ட பாம்புபோல்
      சேலை யடுக்கினுட் சிலம்பணி கண்டாள்
    பொன்செய் கொல்லன் பொன்னன் மனையாள்
    நன்செய் போலும் நல்வரம் புடையவள்
    பைங்கலன் கொழிக்கும் பட்டினம் பிறந்தவள்
    செம்மலர் என்னும் செல்லப் பெயரினள்
     நாற்பது வயதினும் நலியா இளமையள்
     ஏற்பதை ஏற்பாள் எதிர்ப்பதை எதிர்ப்பாள்
    திண்ணைப் பள்ளியிற் சிறுதமிழ் கற்றாள்
    எண்ணல் பெருக்கல் இளங்கணக் கறிவாள்
    உண்மைக் கதைகளை உள்ளங் கொள்வாள்
    அரிய தாயினும் உரியதைப் பேணி
    உரிய தாயினும் ஊர்வம்பு பேசாள்
    அன்புடைக் கணவன் அரண்மனைக் கொல்லன்
     என்ற தொடர்பால் இல்லற முதலே
     பாண்டிய தேவியொடு பழகி வருவாள்”    – (மாமலர்கள், ப.153)

    என்று வ.சுப.மாணிக்கனார். புகழ்ந்துப் போற்றியுள்ளார். செம்மலர் என்பவள் நல்லவற்றை ஏற்பவளாகவும் அல்லவற்றை எதிர்ப்பவளாகவும் படைக்கப்பட்டிருக்கிறாள். பாண்டியனைக் கொலைப் பழியில் இருந்து காப்பாற்றியதற்காக,

        “எதிரது அறிந்துடன் எல்லாம் தடுத்த
           முதுக்குறை நங்கைக்கு முடிதாழ் வணக்கம்!
          கொலையும் பழியும் கொடுமையும் தவிர்த்து
          நிலையும் புகழும் நேர்மையும் காட்டி
          உற்ற காலத்துள் ஓடோடி வந்து
          குற்றம் புகாமல் கோன்மை காத்துப்
          பெற்ற தாயினும் பேரன்பு செய்த
          வெற்றிச் செம்மலர் வீரியை வணங்குதும்”           – (மாமலர்கள், பக்.157-158)

    என்று செம்மலரைப் புகழ்ந்து வணங்குகிறார். பெற்ற தாயினும் சிறந்தவளாக செம்மலரை பாண்டிய மன்னன் உயர்த்திப் போற்றியுள்ளான். கண்ணகியைப் புலம்ப வைத்த பொல்லாச் சிலம்பை கொல்லாச் சிலம்பு என்று வ.சுப.மாணிக்கனார் கூறுகின்றார். சிலம்புக்கு உரியவளான கண்ணகியையும் அவளது கணவன் கோவலனையும் கொல்லாச் சிலம்பு புகழ்ந்து பேசுகிறது. பாண்டிய மன்னனின் தீர்ப்பு இந்தப் படைப்பில் ரத்து செய்யப்படுகிறது. கோவலன் மீது சுமத்தப்பெற்ற குற்றம் நிராகரிக்கப்பட்டுள்ளது. பாண்டிய மன்னன் நல்லவனாகவும் குடிமக்களுக்கான நீதியை நிலை நாட்டக் கூடியவனாகும் கடமை தவறாதவனாவும் காட்சிப்படுத்தபட்டிகிறான். இந்தப் படைப்பை வ.சுப.மாணிக்கனார் சிலப்பதிகாரத்தின் மாற்றுச் சிந்தனைக்கான விதையாக ஊன்றியுள்ளார்.

    முடிவுரை

    வ.சுப.மாணிக்கனார் படைப்பாளர், பேராசிரியர், தமிழ்ப் பற்றாளர், பதிப்பாளர், உரைநடை ஆசிரியர், உரை ஆசிரியர், நாடக ஆசிரியர், கவிஞர், ஆய்வாளர், ஆங்கிலப் புலமையாளர் எனப் பன்முக ஆற்றல் வாய்ந்தவராக ஒளிர்கின்றார். இவரது கவிதை நூல்கள் இவரை மிகச் சிறந்த கவிஞராக அடையாளப்படுத்துகின்றன. தொல்காப்பியம், சங்க நூல்கள், திருக்குறள், திருவாசகம், இராமாயணம், பாரதியம் ஆகியவற்றில் தனித்த ஈடுபாடு கொண்டவர் என்பதை இவரது கவிதைகள் மெய்ப்பித்துக்காட்டுகின்றன. குறிப்பாக, மாமலர்கள் என்னும் கவிதை நூல் இவரை மாபெறும் கவிஞராகவும், சிந்தனையாளராகவும் வெளிக்காட்டியுள்ளது. இந்நூலினைப் பல்வகைச் செய்யுளோடு பல்வகைப் பொருண்மைச் சார்ந்ததாகப் படைத்திருக்கிறார்.

    பழைமையில் பிடிப்பும் புதுமையில் வேட்கையும் கொண்டவராகத் திகழ்கின்றார். இந்தியை எதிர்த்தும் தாய்மொழியாம் தமிழ்மொழிக் கல்வியை ஆதரித்தும் எழுதியுள்ளார். தாய்மொழியைக் கற்க வலியுறுத்தும் வ.சுப.மாணிக்கனார் மொழிக்கலப்பினால் தாய்மொழியான தமிழ்மொழிக்குக் கேடு விளையும் என்பதையும் தெளிவுற உரைக்கின்றார்.

    எழுத்துச் சீர்திருத்தத்தை பெரிதும் ஏற்றுக் கொள்ளாதவர் என்பதை இவரது கவிதைகள் புலப்படுத்துகின்றன. தமிழ்நாடு, தமிழ்மொழி, தமிழ் இனம் பற்றிய சிந்தனைகள் இவரது கவிதைகளில் நீக்கமற நிறைந்திருக்கின்றன.

    தமிழர்கள் ஆங்கிலத்தின் பால் கொண்ட மோகத்தைச் சாடியுள்ளார். இந்தி இந்தியாவின் பொதுமொழி இல்லை என்பதைத் தம் கவிதை வழி நிறுவியுள்ளார். தமிழ் மொழி, தமிழ் இசை, தமிழ்க் கல்வி, தமிழர் கலை வளர்த்த சான்றோரை உச்சி முகர்ந்து புகழ்ந்துள்ளார்.

    வ.சுப.மாணிக்கனார் உள்ளம், சொல், செயல்களால் தூய்மையானவர் என்பதால் நாடு நலம் பெற நற்கருத்துக்களை நாளும் சிந்தித்து எழுதியுள்ளார். சிறார் மனங்களில் நல்ல கருத்துக்களை விதைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆத்திசூடி அமைப்பில் தமிழ்சூடி இயற்றிச் சிறுவர் உள்ளமும் வாழ்வும் செழிப்புற வழிவகைக் கண்டுள்ளார். ‘புரட்சி மண்டோதரி’, ‘கொல்லாச் சிலம்பு’ என்னும் இரண்டு கவிதைகளும் இராமாயணம், சிலப்பதிகாரம் சார்ந்த காப்பியங்களாகவும், இவை பெண்மைக்கும் பெண்களின் புரட்சிப் பண்புக்கும் மதிப்பளிக்கும் புதிய படைப்புகளாக மிளிர்கின்றன.

    தன் வாழ்நாள் முழுவதும் தமிழுக்காகவே வாழ்ந்து தமிழ் வளர்ச்சியைப் பற்றியே சிந்தித்துத் தமிழின் சிறப்புகளைப் பற்றி ஆய்வுகள் செய்து தானே தமிழாகி விட்ட தமிழ்ப் பேராசானுக்கு இக்கட்டுரை சமர்ப்பணம்.

     

    Share
  • வ.சுப.மாணிக்கனாரின் ‘மாமலர்கள்’ வீசும் மணம் – 1

    -முனைவர் ச.அருள்

    முன்னுரை

    நேர்மையின் இலக்கணமாய், புலமையின் இயக்கமாய், எளிமையின் உருவமாய்ச் சங்கப் பனுவலில் திளைத்தவர் மூதறிஞர் வ.சுப.மாணிக்கனார். தமிழ்க்காதலால் வள்ளுவத்தை வரைந்து காட்டியவர்; திருவாசகத் தேன் உண்ணும் தும்பியிவர். ஏழிளந்தமிழில் வாழப்பழகியவர்; மாணவர்களின் மனக்கோவிலில் நிலைபெற்றுத் தெய்வமானவர்; கற்றோர் உள்ளத்தில் கலந்திட்ட மாமேதை; ‘எங்கும் தமிழ் எதிலும் தமிழ்’ என்று கூறி, தமிழ் வழிக்கல்விக்காகத் தெருவில் இறங்கித் தமிழ் முழக்கம் செய்தவர்; கொடை விளக்கு வழங்கிய மாமலர் இவர்; தில்லையம்பலத்தில் தேவார, திருவாசகத் திருமுறைகளை முழங்கச் செய்தவர்; கல்லாத இனத்தைக் கற்க வைத்தவருக்கு அண்ணாமலைச் செட்டியார் பாடாண் திணை பாடிய பாவலர்; வீடும் கொடுத்த விழுச்செல்வரைப் (வள்ளல் அழகப்பர்) பாட்டு மாளிகையில் படிமமாக்கிக் காட்டியவர்; பண்டிதமணி கதிரேசன் செட்டியாரின் புலமை வழித்தோன்றலில் இவரும் ஒருவர்; தமிழ்ப் பகையை எதிர்த்து நின்றதில் சிங்கம் போன்றவர்; பார் காத்தவர்களையும் பயிர் காத்தவர்களையும் போற்றும் உலகில் செந்தமிழ் காத்தவர்களைப் போற்றிய பண்பாளர் வ.சுப.மாணிக்கனார். இவர்தம் ‘மாமலர்கள்’ என்னும் கவிதை நூலினை இக்கட்டுரை ஆராய்கிறது.

    மாமலர்கள் – கவிதைப் பொருண்மைகள்

    1.இந்தியப் பாயிரம், 2. காந்தி எட்டு, 3. திருவாசகச் சுவட்டில், 4. உரிமைப் பாடல்கள்,       5. கையுறைப் பாடல்கள், 6. வள்ளல் அண்ணாமலையரசர், 7. பாராட்டுப் பாடல்கள்,                  8. வாழ்த்துப் பாடல்கள், 9. குழந்தைப் பாடல்கள், 10. அறப்பாடல்கள், 11. பாடற் கலம்பகம்,   12. அழகப்பர் பத்து, 13. எண்ணம் இருபது, 14. ஊர்தி முப்பது. 15. தமிழாட்டு, 16. தமிழ் சூடி,   17. புரட்சி மண்டோதரி, 18. கொல்லாச் சிலம்பு,
    19. அன்னை கொதிக்கிறாள்,   20. உலகப்பாயிரம்.

    பாயிரம்

     பாயிரம் என்பது முன்னுரை, முகவுரை, அணிந்துரை, மதிப்புரை போன்றதாகும். எனினும் இலக்கணத்தில் கூறப்படும் முன்னுரையே பாயிரம் என்னும் சிறப்புடைத்தாகும் என்று வ.சுப.மாணிக்கனார் கூறுகின்றார். இலக்கணப் பாயிரத்தில் மொழி வழங்கும் எல்லைகள், அடிப்படை, நுவல்பொருள், நெறி, நோக்கம், அரங்கேறிய இடம், காலம், ஆசிரியன் பெயர், ஆசிரியர் தகுதி என்னும் அறிமுகக் கூறுகள் பெருமிதமாகவும் சுருக்கமாகவும் சுட்டப்படுதல் உண்டு.

    வ.சுப.மாணிக்கனாரின் ‘மாமலர்கள்’ என்னும் கவிதை நூலில் இடம் பெற்றுள்ள தொடக்கக் கவிதையின் தலைப்பு ‘இந்தியப் பாயிரம்’ என்பதாகும். முடிவுக் கவிதையின் தலைப்பு ‘உலகப் பாயிரம்’ என்பதாகும். இந்தியப் பாயிரத்தில் தொடங்கி, உலகப் பாயிரத்தில் முடிவது போல் இந்நூலை வ.சுப.மாணிக்கனார் படைத்திருக்கும் திறம் போற்றத்தக்கதாகும்.

                    தொல்காப்பியச் சிறப்புப் பாயிரம் பாடிய பனம்பாரனார்,
    வடவேங்கடம் தென்குமரி
    ஆயிடைத்
                     தமிழ் கூறு நல்லுலகம்”   (தொல்.சிறப்புப்பாயிரம்,1-3)

    என்று தமிழகத்தின் எல்லைகளைக் குறித்துள்ளார். எனவே, வடக்கே வேங்கட மலை முதல் தெற்கே குமரி வரை தமிழ் பேசப்பட்டதாக இதன் மூலம் அறியமுடிகிறது.

    வ.சுப.மாணிக்கனார் இந்தியப் பாயிரம் என்னும் கவிதையில்,

                    வடவிமயம் தென்குமரி
    ஆயிடைக்
    குடியரசு நடத்துங் கோடாச் செங்கோல்
    படிமிசைச் சிறந்த பாரதம் வாழிய”                  (மாமலர்கள், ப. 63)

    என்று கூறியுள்ளார். அஃதாவது வடவேங்கடத்துக்கும் தென் குமரிக்கும் இடைப்பட்ட பகுதியில் மிகச் சிறப்பாக குடியாட்சி நடத்தும் பழம்பெருமை வாய்ந்த பாரதநாடு வாழிய என்று சுட்டுகின்றார். சிறந்த பாரம்பரியத்தையும், உயர்ந்த பண்பாட்டையும் உடையநாடு. இங்குத் தோன்றிய சிந்து வெளி நாகரிகம், உலக நாகரிகங்களுள் தொன்மையானது. நில வளமும், நீர் வளமும்  கலை வளமும் மிகுந்த நாடு பாரதநாடு. இதன் சிறப்பினை பாரதியாரும்,
    பாருக்குள்ளே நல்ல நாடு – எங்கள்
    பாரதநாடு”                
                                   – (பாரதநாடு – பல்லவி)

    என்று புகழ்ந்துரைக்கின்றார்.

    உலகப் பாயிரம் என்னும் கவிதையில், வ.சுப.மாணிக்கனார்,
    உலகம் என்பது கலகம் ஆகி
    இன்றோ
    நாளையோ என்றோ அறியோம்
    வாரா அழிவுகள் வருவ போலும்;
    மாயமுன் னேற்றம் மயங்க வேண்டா;
    அடக்கமொடு வளர்தல் அறிவா கும்மே;
    உலகம் என்பது உயிர்களின் உடைமை
    மரமுத லாக மானிடம் ஈறா
    எல்லா வுயிர்க்கும் இருப்பிடம் ஆகும்”       – (மாமலர்கள், ப. 183)

    என்று உரைக்கின்றார். இதில்,  உலகில் கலகம் ஏற்பட்டு இன்றோ, நாளையோ, என்றோ ஒரு நாள் அழிவுகள் ஏற்படலாம்; ஆனால் மாய முன்னேற்றம் கண்டு மயங்காமல் அடக்கத்துடன் வளர்ச்சி அடைவதே அறிவுக்கு உகந்ததாகும் என்கிறார். மேலும், உலகம் என்பது எல்லா உயிர்களுக்கும் பொதுவானது, மரம் முதலாக, மனிதன் ஈறாக எல்லா உயிர்களுக்கும் இதுவே இருப்பிடமாகும் என்கின்றார்.

    நாட்டுப் பற்று

    நாட்டுப் பற்று என்பது ஒவ்வொரு குடிமகனிடமும் அவசியம் இருக்க வேண்டும். குடிமக்களிடம்  நாட்டுப் பற்று நிலை கொண்டிருந்தால் நாட்டை சிறந்த முறையில் வழி நடத்துவதோடு நாட்டை மேம்படுத்தவும் முடியும். வ.சுப.மாணிக்கனார் தம் படைப்பின் வழி நாட்டுப் பற்றை வெளிப்படுத்துகின்றார்.

    சாதிப் பற்றும் சமயப் பற்றும்
    காதல்
    அன்ன கட்சிப் பற்றும்
    மோதல் இல்லா மொழியின் பற்றும்
    ஆசை நீங்காக் காசுப் பற்றும்
    பாசம் ஏறிய பதவிப் பற்றும்
    நேசங் கலந்த ஈசன் பற்றும்
    தேசப் பற்றுமுன் சிறுபற் றாகுக;
    பற்றுக நாட்டுப் பற்றினைப் பற்றுக
    மற்றோர் பற்று மனம்புகல் வேண்டா”        – (மாமலர்கள், ப. 63)

    இந்தியாவில் வாழும் அனைவரும் தேசப்பற்று கொண்டவர்களாகவும், தேசத்திற்காக உயிர் விடவும் துணிந்தவர்களாகவும், எந்தச் சூழலிலும் யாருக்காகவும் எதற்காகவும் தேசத்தை விட்டுக் கொடுக்காதவர்களாகவும் இருக்க வேண்டும் என்கிறார். இந்தியத் திருநாடு எந்தச் சூழ்நிலையிலும் பிளவுப்பட்டுப் பிரிவினைவாத நிலைக்கு தள்ளப்படக் கூடாது என்ற நோக்கத்தில் சாதி, சமயம், காதல், கட்சி, பதவி, பணம், மோதல் இல்லா மொழிப்பற்று ஆகியவற்றில் குறைவான பற்றும் நாட்டின் மீது அதீதப் பற்றும் கொள்ளவேண்டும் என மொழிகின்றார்.

    மொழிப்பற்று

     உலகில் பிறந்த அனைத்து மக்களுக்கும் தாய்ப்பால் போன்றது அவரவர் தாய்மொழி. பாரதியார் தன் தாய்மொழியான தமிழ் மொழியை,

    யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
    இனிதாவது எங்கும் காணோம்”         – (பாரதியார் கவிதைகள் – தமிழ், வரி.1-2)

    என்கின்றார். இந்த உலகில் மிக உயர்வான பண்புகளைக் கொண்ட இனம் தமிழினம். தமிழ், தமிழர் என்று மொழியாலும் இனத்தாலும் அடையாளப்படுத்தி பெருமைப்பட வேண்டியவர்கள் இன்று தமிழில் பேசுவதற்கே தயங்குகிறார்கள். மொழியைப் பற்றி தந்தை பெரியார் கூறுமிடத்து, “ஒரு நாட்டில் பிறந்த மக்களுக்கு தேவைப்படும் பற்றுகளுள் முதன்மையானது மொழிப்பற்றே ஆகும். அத்தகைய மொழிப்பற்று இல்லாதவனிடத்து தேசப்பற்றும் இருக்காது என்பது நிச்சயம். தேசம் என்பது மொழி அடிப்படையாகக் கொண்டு இயங்குவது ஆதலால் தமிழர்களுக்கு மொழிப்பற்று பெருக வேண்டும் என்பதே என் பிரார்த்தனை” என்கிறார்.

    வ.சுப.மாணிக்கனார் தாய் மொழியாம் தமிழ் மொழியை உயர்த்திப்பாடுகின்றார்.

    தாய்காட்டும் தாய்மொழிக்கே முதன்மை வேண்டும்
    தாராத
    அரசினையாம் மதிப்பதில்லை
    தாய்நாட்டுப் பற்றுக்கே முதன்மை வேண்டும்
    தடுமாறும் கட்சியையாம் மதிப்பதில்லை”           – (மாமலர்கள், ப.104)

    அரசும், அரசியல் கட்சிகளும் தாய்மொழிக்கு முக்கியத்துவம் தர வேண்டும். அவ்வாறு தரவில்லை எனில் அவற்றை நான் மதிக்க மாட்டேன் என்கிறார்.

    தமிழ் மொழியின் பெருமைகளை ‘அன்னை கொதிக்கிறாள்’ என்னும் கவிதையில் அழகுறப் பட்டியலிடுகின்றார்.

    இந்திய மொழிகளுட் செந்தமிழ் ஒன்றே
    உலக மொழியெனும் ஒண்புகழ்க் குரியது
    இலங்கை சிங்கை எழிலார் மலேயா
    பருமா செய்கோன் பல்வள மொரைசு
    பீசி முதலாப் பிறநா டெல்லாம்
    தமிழ்மொழி பேசுந் தங்குடி கொண்டது”                   – (மாமலர்கள், ப.162)

    செம்மொழித் தகுதி பெற்றுள்ள தமிழ் மொழியை உலகம் முழுவதும் சுமார் 80 மில்லியன் மக்கள் பேசுகிறார்கள். தமிழ்மொழி இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, பர்மா (இன்றைய மியான்மர்), மொரீசியஸ், செய்கோன், பிஜி தீவு ஆகிய நாடுகளில் பேசப்படுவதாக வ.சுப.மாணிக்கனார் தம் கவிதை வழிப் புலப்படுத்துகின்றார்.

    ‘பச்சைத் தமிழர்’ என்று பெரியாரால் பாராட்டப்பட்டவர் காமராசர். இவர் தம் சொந்த முயற்சியில் ஆங்கிலம் கற்றவர். கேரளத்தில் இருந்த குறைவான காலத்தில் மளையாளம் கற்றுக் கொண்டார். தெலுங்கும் தெரியும், இந்தியும் பேசுவார்.  நாடாளுமன்றத்தில் அவர் ஒருமுறை ஆங்கிலத்தில் உரையாற்றியதை ‘மாசற்ற ஆங்கிலம்’ என்று புகழ்ந்து எழுதியது ‘தி இந்து’ ஆங்கிலம் நாளிதழ் ஆனாலும், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் மாநாடுகளில் பேசும்போது தமிழில்தான் பேசுவார். கையெழுத்தும் தமிழில்தான். இவரது பெருமையைப் போற்றி கவிதைப் படைக்கின்றார் வ.சுப.மாணிக்கனார்,

    உலகுபுகழ் நேருவின் உடல்மறை காலை
    ஞாலத் தலைவர்கள் நடத்திய தில்லி
    இரங்கற் கூட்டத்து எளியோர் தலைவன்
    காமனை வென்ற காமராசன்
    தமிழிற் பேசித் தாய்புகழ் நிறுத்தினன்;
    ஞாலப் பெரியோன் நம்மகன் காந்தி
    சாலும் தமிழில் தன்பெயர் எழுதினன்;
    தன்கல் லறையில் தண்டமிழ் மாணவன்
    என்று பொறித்தனன் இறையடி போப்பன்;
    முதுமையில் தமிழை முறையொடு கற்றபின்
    எதுகை குறையா ஏகக் காப்பியம்
    ஆரமா அணிந்தான் வீரமா முனிவன்;
    தனித்து வளரும் தகையது எனவே
    கணித்துப் புகழ்ந்தனன் கால்டு வேலன்;
    வடமொழி பிரெஞ்சு வளமார் ஆங்கிலம்
    நடைமொழி பலவும் நவின்ற பாரதி
    யாமறி மொழிகளுள் நற்றமிழ் ஒன்றே
    தாமினி தாகும் சால்பது என்றான்;”                                – (மாமலர்கள், பக்.163-164)

    காந்தியடிகள் தன் பெயரைத் தமிழில் எழுதியதை நினைவுபடுத்தியுள்ளார். மகாத்மாவின் தாய்மொழி குஜராத்தியாக இருந்தாலும் தமிழ்மொழி மீதும் பற்று கொண்டவர். வள்ளுவரைப் பற்றி மகாத்மா, “யான் தமிழ் கற்க விரும்பியதற்குக் காரணம், வள்ளுவரின் வாய்மொழியை அவருடைய தாய்மொழி மூலம் படித்தறிவதற்கேயாம்” என்று தன் விருப்பத்தைக் கூறியுள்ளார். ஜி.யு.போப் தன் இறப்புக்குப் பின் தனது கல்லறையில் “இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்” என்னும் வாசகம் இடம்பெற வேண்டும் என தனது உயிலில் எழுதியிருந்தார். ஆனால், இவரது ஆசை நிறைவேறவில்லை.

    தமிழிகத்தில் வாழ்ந்த புலவர்களுள் பல்துறை வித்தகராகத் திகழ்ந்தவர் வீரமாமுனிவர். தேம்பாவணி என்னும் காப்பியத்தை இயற்றியதற்காக வீரமாமுனிவருக்கு ‘செந்தமிழ்த் தேசிகர்’ என்னும் பட்டம் வழங்கப்பட்டது. இவர் இலக்கண அறிவு, இலக்கியப் புலமை, மொழியியல் உணர்வு, பக்தி இலக்கிய ஆற்றல், ஆய்வியற் சிந்தனை, பண்பாட்டில் தோய்வு எனப் பல்வகையிலும் சிறந்தவர். தமிழுக்காகவே வாழ்ந்து தொண்டு செய்து புகழ் எய்திய வீரமாமுனிவரைப் புகழ்ந்துரைக்கின்றார் வ.சுப.மாணிக்கனார். ராபர்ட் கால்டுவெல் திராவிட மொழியியலின் தந்தை எனப் போற்றப்படுபவர். திராவிட மொழிகளின் தனித்துவத்தை நிலைநிறுத்தியதில் பெரும்பங்கு இவருடையது. இவருக்கும் வ.சுப.மாணிக்கனார் கவிதை மலர்களால் மாலைச்சூட்டியுள்ளார். பாரதியார், தமிழ், ஆங்கிலம், இந்தி, சமற்கிருதம், வங்காளம் ஆகிய மொழிகளில் புலமைப் பெற்றவர். ஆனால், ‘தமிழ்மொழி போல் இனிமையான மொழி வேறு எங்கும் இல்லை’ என்று தன் தாய்மொழியான தமிழ் மொழியை உயர்த்திப் பாடியதற்காக மகாகவிக்கு கவிதை மாலை சூட்டியுள்ளார் வ.சுப.மாணிக்கனார்.  பாரதியின் தமிழ்மொழிப் பற்றை வ.சுப.மாணிக்கனார் தம் கவிதை வழிக் கலந்து தமிழர்களுக்கு தமிழமுதம் ஊட்டுகின்றார்.

    ஆங்கில மோகம்

    குழந்தைகளின் மன வளர்ச்சிக்குத் தாய்மொழியே சிறந்தது என காந்தியடிகள் உள்ளிட்ட பலரும் எடுத்துரைத்தாலும் தமிழர்களை ஆங்கில மோகம் கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கிறது. ‘ஆங்கிலம் உலகப் பொதுமொழி’ என்ற வலுவான எண்ணம்தான் இதற்குக் காரணம். சீனத்திற்கும் ஸ்பானிசிற்கும் அடுத்த நிலையில்தான் ஆங்கிலம் உள்ளது. இங்கிலாந்து அருகில் உள்ள பிரான்சில் ஆங்கிலம் ஒரு மொழியாகவே கருதப்படவில்லை. தமிழர்கள் தம் தாய்மொழியான தமிழ் மொழியைப் புறக்கணித்து ஆங்கில மோகத்தில் அலைகிறார்கள். தங்கள் குழந்தைகளை ஆங்கிலப் பள்ளிகளில் சேர்த்து அவர்களின் அறிவை மழுங்கடிக்கிறார்கள். இதனை வ.சுப.மாணிக்கனார்,

    பாலர் பள்ளியாம் பாழ்கொலைக் களங்கள்
    காளான் போலவும் கறையான் போலவும்
    பட்டி தொட்டி பட்டினம் எல்லாம்
    எட்டிப்பிடித்தும் இழுவலை வீசியும்
    மூன்று வயதில் முழுத்தமிழ்க் குழவிகள்
    அஆ என்பதை அறியா வகையில்
    ஆங்கிலம் ஒன்றே ஆசையொடு கற்கும்
    பாங்கில் உணர்ச்சியைப் பரப்புகின்றன
    பள்ளிச் சிறாஅர் படிப்பிது வாயின்
    கொள்ளி தமிழ்க்கெனக் கூறவும் வேண்டுமோ?”            -(மாமலர்கள், ப.170)

    என்று ஆதங்கத்தோடு சாடியுள்ளார். காளான் போலவும் கறையான் போலவும் பட்டி தொட்டி எங்கும் பரவியிருக்கு மழலையர் (Nursery) பள்ளிகளைக் கொலைக்களங்கள் என்று மனக்குமுறலோடு குறை கூறுகின்றார். மூன்று வயதே நிரம்பிய மழலைகளுக்கு தாய்ப்பாலுடன் சேர்த்து தமிழ்ப்பாலை (தமிழ்மொழியை) ஊட்டாமல், புட்டிப்பாலை (ஆங்கிலத்தை) ஊட்டுவது பொருத்தப்பாடு இல்லாததாகும்.

    இந்தி எதிர்ப்பு

    இந்தி மட்டும் இந்திய அரசாங்கத்தின் மொழியாக ஆவதையும் அது மாநிலங்களில் மறைமுகமாகத் திணிக்கப்படுவதையும் அறிஞர்களும், அரசியல் தலைவர்களும் புலவர்களும் கல்வியாளர்களும் ஆசிரியர்களும் மாணவர்களும் நாள்தோறும் எதிர்த்து வருகிறார்கள். இன்றைய சூழலில் இந்தி படித்தால்தான் நடுவண் அரசின் பதவி கிட்டும் என்றும், வடநாட்டில் பணிபுரியும் வாய்ப்பு கிட்டும் என்றும் கூறிச் சிலர் இந்தியைக் கற்கும்படி மக்களை வற்புறுத்துகின்றனர். “இந்திக்கு அடிமையாகி இறப்பதை விட இப்பொழுதே இறந்து விடுவது மேல்” என எண்ணி எரியில் மூழ்கி உயிர் நீத்த சின்னசாமியின் வீரச்செயல் கூடத் தமிழர்களை தட்டி எழுப்ப வில்லையோ என எண்ணத் தோன்றுகிறது. அதனால்தான் வ.சுப.மாணிக்கனார்,

    இந்தியை ஏனையோர் இனித்துக் கற்க
    உந்தும் நடுவரசு உறுபொருள் அளிக்கும்;
    நந்தமி ழரசோ நம்மவர் தமக்கே
    செந்தமிழ் வாயிலாய்ச் சிறப்புமேற் கல்வியை
    வந்து கற்க வருபொருள் வழங்கும்.
    சிறுமையோ பெருமையோ சிந்திப் பீரே
    ஆண்மையும் துறவும் அரசுக் கில்லை
    மானமும் தெளிவும் மக்கட் கில்லை”       – (மாமலர்கள், ப.171)

    என்று கேள்வி கேட்கிறார். ‘மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு’ என்பார் பெரியார். ‘மானமும் தெளிவும் மக்களுக்கு இல்லை’ என்று சாடுகிறார் வ.சுப.மாணிக்கனார்.

    இந்தியாவின் தேசிய மொழி எது எனக் கேட்டால் பலரும் இந்தி என்று பதில் கூறுகின்றனர். வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள் இந்திதான் தேசிய மொழி என்கின்றார்கள். ஆனால் உண்மையில் இந்தி தேசிய மொழி அன்று. இந்திய அரசால் அங்கீகரிக்கப் பெற்ற 22 மொழிகளில் இந்தியும் ஒன்று. வட மாநிலங்களில் அதிகமாகப் பேசப்படும் மொழியாக இந்தி உள்ளது. இந்தியாவில் தில்லி, ராஜஸ்தான், அரியானா, உத்தரகண்ட், உத்திரப் பிரதேசம், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், இமாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட், பீகார் போன்ற மாநிலங்களில் இந்தி பேசப்படுகிறது. பிற மாநிலங்களில் இரண்டாவது, மூன்றாவது மொழியாக இந்தி பயிற்றுவிக்கப்படுகிறது. இந்தி மொழி இந்தியாவிற்கான பொதுமொழி இல்லை என்பதை,

    இந்திய மொழிகளுள் இந்தியும் ஒன்றாம்
    என்னுடைப் போர்த்தியுள் இவளொடு சிறுமி
    அன்ன உறவில் அன்பும் உடையேன்
    அவள்தன் வளர்ச்சியில் அழுக்காக றில்லை
    இந்தி ஒன்றே பொதுமொழி என்பதை
    இந்தியன் இன்றே எதிர்க்க வேண்டும்
    எதிர்க்கா எவனும் இந்தியன் ஆகான்
    இந்தித் தாய்மொழி இந்தியன் கூடப்
    புந்தியில் கொள்கையைப் பொசுக்க வேண்டும்
    இந்தியை எதிர்த்தல் இந்தியத் தொண்டாம்”                       – (மாமலர்கள், ப. 177)

    என்னும் கவிதை வழி வ.சுப.மாணிக்கனார். உணர்த்துகின்றார். இந்தி மொழி வளர்ச்சி அடையட்டும். அதனை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், இந்தி மொழி ஒன்று மட்டுமே இந்தியா முழுவதும் ஆட்சி மொழி என்பதை நான் எதிர்கிறேன், இந்தியர்களும் எதிர்க்க வேண்டும் எனச் சாடியுள்ளார்.

    [தொடரும்]

     

     

     

     

    Share
  • கவிஞர் சுரதாவின் கவிதைகளில் குமுகாயச் சிந்தனைகள்

    முனைவர் ச.அருள்

    முன்னுரை 

         மனிதன் சமுதாயம் என்ற அமைப்பில் இருந்து தனித்து வாழ்பவன் அல்லன். ஏனெனில் மனித வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகள், உணர்வுகள் அனைத்தும் சமுதாயத்தின் வழியேதான் நிறைவு பெறுகின்றன. பரவிக்கிடக்கும் தேவைகளைப் பெறத் தனி மனிதன் இன்னொரு மனிதனை நாடுகின்றான். தன்னுடைய உணர்வுகளைத் தனக்குள்ளேயே அடக்கிக் கொள்ளாமல், மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள எண்ணுவது மனித இயல்பு. இவ்வாறு தேவைகளும், எண்ணங்களும், தொடர்புகளும் பரிமாறப்படுவதால் சமுதாய அமைப்பு விரிவடைகிறது. கவிஞர்கள் சமுதாயத்தில் ஓர் அங்கமாகத் திகழக் கூடியவர்கள். படைப்பாளர்கள் வரிசையில் கவிஞர்களுக்கான இடம் முதன்மையானதாகும். சமுதாயத்தின் குரலைப் படியெடுத்து வெளியிடும் திறனில் கவிதைகள் தனியிடம் பெறத்தக்கன. அவ்வகையில் உவமைக் கவிஞர் சுரதாவின் கவிதைகள் வழிக் குமுகாயச் சிந்தனைகளை வெளிக்கொணர்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

    குமுகாயம் 

         குமுகாயத்தில் வாழும் குடிமக்கள் ஒவ்வொருவரும் கொள்ளவேண்டிய குமுகாயச் சிந்தனை தம் குமுகாயம் அறிவார்ந்த – நேர்மையான – நல்ல வழியில் சென்று முன்னேறிச் சிறப்பதற்கான வழிவகைகளைச் சிந்தித்து செயல்படுத்த முனைதலே குமுகாயச் சிந்தனையாகும்.

         எவர் ஒருவர் தம் அண்டை மக்களின் துன்பங்களைத் தம் துன்பமாக எண்ணித் துடித்து, அவற்றைப் போக்க முற்படுகிறாரோ அவரே குமுகாயச் சிந்தனையுள்ள மாந்தர் ஆவார். “குமுகாயவியலாரின் கோட்பாட்டின்படித் தனி மாந்தனின் செயல்பாடுகளிலிருந்து தான் குமுகம் உருவாகிறது என்பதை உணரமுடிகிறது. எனவே, நல்ல குமுகம் மலரவேண்டுமெனில் தனி மாந்தன் உயரவேண்டும். தனி மாந்தனின் நல்ல செயல்பாடுகளே குமுகத்தை உருவாக்குவன”1 “மனிதர்கள் பலர் சேர்ந்து வாழ்வது குடும்பம். பல குடும்பங்கள் சேர்ந்தது சமூகம். சமூகத்தின் சட்ட திட்டங்கள், பழக்க வழக்கங்கள், செயல் முறைகள், ஒருவருக்கொருவர் உதவுதல், ஒழுங்கு முறைகள் ஆகியவற்றை நிர்ணயிப்பதே சமுதாயம் ஆகும்.”2 என்னும் கருத்தும் நோக்கத்தக்கதாகும். இவற்றின் மூலம் ஒரு குறிப்பிட்ட தனி இயல்பு கொண்ட மக்கள் கூட்டத்தைச் சமூகம் என்றும், சமூகத்தின் அனைத்து அம்சங்களையும் கணக்கில் கொண்ட பொது ஒழுங்குமுறைக்குக் கட்டுப்பட்டு வாழும் சமூகக் குழுக்களைச் குமுகாயம் என்றும் பிரித்து அறியமுடிகிறது.

    சாதிப்பாகுபாடு 

         சமுதாயம் என்பது உணவு, உடை, மொழி, பண்பாடு முதலியவற்றின் அடிப்படையில் அமைவதாகும். இவற்றால் ஒன்றிணைந்திருந்த தமிழ்ச் சமுதாயம் சாதியாலும் சமயத்தாலும் பல பிரிவாகிப் போராடுவதைக் காணமுடிகிறது. இந்தியச் சமுதாயத்தையும் பெரிதாகப் பீடித்திருக்கும் நோய்களுள் ஒன்று சாதிப்பாகுபாடு. “இந்தியாவில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட சாதிகள் காணப்படுகின்றன. இச்சாதிகள் ஒவ்வொன்றும் மற்ற சாதிகளில் இருந்து தாங்கள் மேம்பாடுடையவையென நிலை நாட்ட விழைகின்றன”3 இக்கூற்றின் மூலம், இந்தியாவில் உள்ள சாதிப்பிரிவுகளையும், சாதியின் இயல்பையும் அறிந்து கொள்ளமுடிகிறது.

         தொடக்க காலத்தில் சமுதாயத்தில், பிறப்பால் வேற்றுமை பாராட்டும் சாதிமுறை இல்லை. பிற்காலத்தில் ஏற்பட்ட சமயப் பிரிவுகளே இச்சாதி முறையைப் புகுத்தியுள்ளன. இதனை, “ஆரியர் வருகைக்கு முன்பு தமிழ்நாட்டில்  சாதிமுறை என்பதே இல்லை”4  என்னும் கூற்றும், “மதமே வாழ்க்கையாகக் கொண்டிருந்த ஆரியர் வந்த பிறகுதான் தமிழ்நாட்டில் சாதி தோன்றியது”5 என்னும் கூற்றும் உறுதி செய்கின்றன. “ஆரியர் வருகையால் வருணம், ஏற்றத்தாழ்வுகள் முதலியன வந்து புகுந்து தமிழ்ச் சமுதாயத்தைச் சிதறடித்தன.”6 ஒன்றாக இணைந்திருக்க வேண்டிய சமுதாயம் பிரிந்து பாழ்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவே, இதனை, உவமைக் கவிஞர் சுரதா கடுமையாகச் சாடுவதுடன், சாதி அமைப்பால் சிலர் உயர்ந்தோர் எனக் கூறிக் கொள்வதையும் கண்டிக்கின்றார்.

               “செரிக்காத சோறாகும் மனித னுக்கே
    தேவையற்ற சாதிமதம்…………….”7

         இதில், சாதி வேறுபாடுகளைப் புகுத்த சமயமும் துணைநிற்கிறது என்பதால் அதனையும் சேர்த்தே கண்டித்துள்ளார். பண்டைக் காலத்தில் வேதங்களைப் பின்பற்றி நடந்த பிராமணர்களை ’வேதியர்’ என்று அழைப்பது மரபாக இருந்துள்ளது. ஆனால், இன்று எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் வேதங்களையும் இந்துசமய சாத்திரங்களையும் தழுவி நடப்போரை வேதியர் என அழைக்கலாம். இதனை,

               “ஜாதி மதங்களைப் பாரோம்………………
    வேதியர் ஆயினும் ஒன்றே, அன்றி
    வேறு குலத்தவர் ஆயினும் ஒன்றே”8

         என்று பாரதியார் பாடியுள்ளார். சமுதாயச் சீர்திருத்த எண்ணம் கொண்ட பாரதி, இந்தியாவில் காணப்பட்ட ஒற்றுமை இன்மைக்குக் காரணம் சாதி, சமய வேறுபாடுகள் என்று உணர்ந்து, அந்தணர், அந்தணர் அல்லாதவர் ஆகிய எல்லாரும் ஒன்றே என்னும் கருத்தில் சாதி, சமயம்அற்ற சமுதாயம் அமையக் குரல் கொடுத்துள்ளார். பாரதியின் தாசனுக்குத் தாசனான சுரதா,

               “சாதியென்பார், மதமென்பார், சங்க டத்தைச்
    சடங்கென்பார், சாத்திரகோத் திரங்க ளென்பார்
    நீதியென்பார், மனுநீதி சிறந்த தென்பார்
    நிலையற்ற உடலென்பார் நெய்பால் உண்பார்
    வேதியர்யாம் வீதியர்நீர் என்பார் எல்லாம்
    விதியென்பார் வினையென்பார் வேத மென்பார்
    ஓதுகலை ஒருசிலர்க்கே உரிய தென்பார்
    ஊழ்வினையே வையத்தின் வரலா றென்பார்”9

         என்று பாடியுள்ளார். இதில், சாதி, மதம், சடங்கு முறை, சாத்திரம், மனுநீதி, விதி, வேதம், ஊழ்வினை ஆகியவை நையாண்டிக்கு உரியவை என எடுத்துரைத்துள்ளார்.

         இந்து சமயத்தில் பிறவியிலேயே, சாதியும் உடன் பிறக்கிறது. நிறத்தால் அழகாக இருப்பதாலேயே ஒருவரை உயர்ந்தோர் எனக் கூறிவிட முடியாது. ஒரு மனிதனை உயர்ந்தோன் ஆக்கிக் காட்டுவது அவனுடைய பண்பாடே ஆகும். இதனை,

             “நிறத்தாலே பிறப்பாலே சிறந்தோர் என்று
    நினைப்பவ ரெல்லாங்கடையர் மடயர் மேனி
    நிறத்தாலே அந்தணர்கள் சிறந்தா ரேனும்
    நினைப்பாலே உயராதார் மேலோர் ஆகார்”10

    என்று சுரதா சுட்டியுள்ளார்.

         பண்டைக்காலத் தமிழ்ச் சமுதாயத்தில் சாதிப் பிரிவுகள் இருந்ததில்லை. பிற்காலத்தில் புகுத்தப்பட்டவையே இப்பிரிவுகள். ஆனால், தூக்கத்தில் ஆழ்ந்து கிடக்கும் தமிழர்கள் இதனை உணரவில்லை. எடுத்துச் சொன்னாலும் அவர்களுக்குப் புரியவில்லை. எனவே, இக்கருத்தினைத் தமிழர்களுக்கு உணர்த்த வேண்டும் என்பதை,

               “………………………….. கலப்பை மூலம்
    நிலத்தில்நாம் உண்டாகும் கலப்பை மாந்தர்
    நெஞ்சத்தில் உண்டாக்கி விடுவோ மாயின்
    கலப்புமணம் உருவாக வழியுண் டாகும்
    கலப்புமணத் தால்சாதி செத்தே போகும்”11

         என்னும் கவிதை வழி வெளிப்படுத்தியுள்ளார். இதில், கலப்பு மணம் செய்தால் சாதியற்ற சமுதாயத்தை உருவாக்க முடியும் என்கிறார்.

    உடன்கட்டை ஏற்றுதல் 

         பெண்களுக்கு ஏதிரான ஆண்களின் வன்முறைகளில் ஒன்றுதான் உடன்கட்டை ஏற்றுதல். கணவன் இறந்தஉடன் உடன்கட்டை ஏறும் பெண்கள் குறித்து இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன. தொல்காப்பியம்,

               “நல்லோள் கணவனொடு நனியழல் புகீஇச்
    சொல்லிடை இட்ட பாலை நிலையும்”12

         என்று சுட்டியுள்ளது. அஃதாவது கணவனின் இறந்த உடலுடன் கூடவே எரிமூழ்கிய அவள் சமுதாயத்தில் முழுமையான நல்லபெண் ஆகிவிடுகிறாள். இதில், ‘நல்லோள்’ என்னும் சொல் கணவனுடன் எரிபுகும் பெண்ணைக் குறிக்கக் கையாளப்படிருக்கிறது.

         “தம்முடன் இறக்கும் மனைவி, வேலைக்காரர், குதிரை போன்றவை தம்முடன் மறுஉலகுக்குச் செல்கின்றன என நம்பப்பட்டு வந்தது. ஆகவே பிரதானி ஒருவன் இறந்தபோது அவன் மனைவி வேளையாள் முதலியோரும் உடன் வைத்துக் கொளுத்தப்பட்டார்கள் அல்லது புதைக்கப்பட்டார்கள்”13 மனைவியை உடன்கட்டை ஏற்றுவதற்கு வேறு காரணமும் இருந்தது எனலாம். கணவன் இறந்தபின் அவன் மனைவி பிற ஆடவனைக் கணவனாகக் கொண்டு வாழ்வாள் என்னும் பொறாமைக் குணம் அவன் உள்ளத்தில் குடிகொண்டிருந்திருக்கலாம். கணவன் இறந்தபின் குழந்தை இல்லாத மனைவிக்குச் சொத்துரிமைச் சென்று விடக்கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கலாம். இதனால் பெண்களை உடன்கட்டை ஏற்றியிருக்கலாம்.

         நாட்டில் ஆணுக்கொரு நீதியும் பெண்ணுக்கொரு நீதியும் வரையறுக்கப்பட்டுள்ளன. மனைவி இறந்தால், கணவன் கிழவனாக இருந்தாலும் மறுமணம் செய்து கொள்ளலாம். அவன், கன்னிப் பெண்ணாக இருந்தாலும் அவளை மணந்து கொள்ளலாம். ஆனால், கணவனை இழந்த பெண், இளமையுடன் இருந்தாலும் அவள் மறுமணம் செய்து கொள்ளக்கூடாது. கணவன் இறந்தஉடன் அவனுடன் உடன்கட்டை ஏறிவிட வேண்டும்.

    இக்கொடுமையைக் கண்டு கொதித்துஎழும் கவிஞர் சுரதா,

    “பால்நிலவுப் பத்தினியும் பாடைமீது
    படுப்பானேன்? உடன்கட்டை ஏறு வானேன்?
    வேல்தொடரும் விழியுடையாள் கணவ னோடு
    வெந்துவிட வேண்டுமென்ப தென்ன நியாயம்”14

    “புடம்போட்ட பசும்பொன்னைப் போன்ற பெண்கள்
    பூவோடும் பொட்டோடும் மஞ்ச ளோடும்
    உடன்கட்டை ஏறிவரும் வழக்க மிங்கே
    உண்டென்ப தறிவீர்நீர் ஆய்ந்து பார்த்தால்
    முடம்பட்ட நெஞ்சத்தார் புகுத்தி விட்ட
    முழுமூடத் தனமென்ற முடிவே தோன்றும்”15

         என்னும் கவிதைகள் வழியாகச் சமுதாயத்திற்குச் சாட்டையடி கொடுத்துள்ளார். இவ்வாறு பெண் குலத்தைத் தீயிட்டுக் கொளுத்திய கொடுமைக்குக் காரணம் மக்களின் மூடத்தனமே எனக் கூறியுள்ளார். இம்மூடத்தனத்திற்குப் பலியான சிலரையும் எடுத்துக்காட்டுகின்றார். இதனை,

               “சித்திரப்பெண் பத்தினியும் காஷ்மீ ரத்தில்
    சிற்சிலரும் செஞ்சியிலோர் பதுமைப் பெண்ணும்
    கத்துகடல் முத்தரசன் ராச ராசன்
    காலத்து மங்கையரும் தீயில் தூங்கிச்
    செத்ததைநாம் வரலாற்றில் அறிவோம் அன்னார்
    தேன்வாழ்வை ஏன்கெடுத்துக் கொண்டா ரென்றால்
    பத்தினிமார் உடன்கட்டை ஏறிச் செத்தால்
    பரலோகம் கிட்டிடுமாம் எனவே செத்தார்”16
         என்னும் கவிதை வழி அறியலாம். முடிவாகக் கவிஞர்,

    “சித்திரத்தேர் தீப்பற்றி எரிதல் போன்ற
    தீச்செயலைத் தடுப்பீரென் றெண்ணு கின்றேன்”17
         என்று எடுத்துரைக்கின்றார்.

    குடும்பமும் கல்வியும்

         குடும்பம் என்னும் நிறுவனத்தின் நங்கூரமாகப் பெண்ணே கருதப்படுகிறாள். குடும்பத்தைக் கட்டிக்காக்கும் பொறுப்பு பெண்ணுக்கு மட்டுமே உரியதாகிவிட்டது. பெண், தன்னுடைய குழந்தையின் அறிவு வளர்ச்சிக்கும் பண்பாட்டிற்கும் அடித்தளமிடுபவள் ஆகிறாள். குழந்தையின் மழலை மொழியினைத் திருவள்ளுவர்,

               “குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
    மழலைச்சொல் கேளா தவர்”18

         என்று எடுத்துரைப்பார். மனைவி இல்லாதவன் வாழ்க்கை கரும்பின் பூவைப் போன்றது. புத்தகம், முத்தமிடும் மனைவி, மழலைமொழி பேசும் மக்கள் இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் சிறப்பினைத் தருவதாகும். புத்தகம் வாசிப்பதால் மனிதன் முழுமையான அறிவு பெறுகிறான். இதனை,

               “புத்தகங்கள் முத்தமிடும் மனைவி சொற்கள்
    புரியாத மழலைமொழி பேசும் மக்கள்
    இத்தரைமீ தினில் ஒவ்வோர் மனிதனுக்கும்
    இருப்பதுவே சிறப்பாகும் இருக்கு மாயின்
    புத்தகத்தால் பேரறிவும் குழந்தைப் பேச்சால்
    பூரிப்பும் மனைவி யினால் சுகமும் சேரும்
    எத்தனைபேர் இருந்தென்ன? மனைவி யில்லான்
    இல்வாழ்க்கைக் கரும்புக்கு வெறும்பூ வன்றோ?”19

         என்னும் கவிதை வரிகள் மெய்ப்பித்துக்காட்டுகின்றன. மனிதனின் நுகர்வுக்கு வேண்டியனவற்றையும் அவற்றை எந்தந்தத் தருணத்தில் பெற வேண்டும் என்பதையும் அறுதியிட்டுக் கூறுகிறார். இதனை,

               “திருமண வாழ்க்கையே சிறந்த பதிப்புரை
    ஓரெட்டில் உணவும், ஈரெட்டில் கல்வியும்
    மூவெட்டில் புதல்வனும் நாலெட்டில் பொருளும்
    ஐயெட்டில் ஞானமும் அடைவதே சிறப்பாம்”20
         என்னும் கவிதைக் காட்சிப்படுத்தியுள்ளது.

    பெண்மை

         பெண் உரிமையோடும் பெருமையோடும் கடமை உணர்வோடும் கண்ணியத்தோடும் இருக்க வேண்டும் எனக் கருதிக் கவிதைப் புனைந்தவர் சுரதா. காதலை மிகுதியாகப் பாடிப் பெண்ணின் அழகை நுட்பமாகப் பல்வேறு சொற்களால் புனைந்திருந்தாலும் பெண்கள் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தவர். என் கடமை, என்னும் கவிதையில் ஒரு பெண் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்பதை,

               “ஒளிவீசும் காலையில்நான் எழுந்திருந்து
    நுரைசெய்யும் ஆற்றில்நீ ராடச் செல்வேன்
    நுணுக்கமுள்ள ஆசாரக் கோவை கூறும்
    வரிவெண்பா நீதியைப்பின் பற்றி வாழ்ந்து
    வருவதனால் நீரில்நான் உமிழ மாட்டேன்
    ………………………………………………………………………..
    ஊரறிந்த பேரறிஞர் மேடைப் பேச்சை
    ஒருநாளும் நான்கேட்கத் தவற மாட்டேன்
    பாரறிந்த பைந்தமிழை அழிக்க வேண்டிப்
    படைவந்தே எதிர்த்தாலும் அஞ்ச மாட்டேன்”21

    என்று விரிவாகப்பாடியுள்ளார்.

         மனைவிக்குக் கணவன்மேல் உண்மையான காதல் இருக்க வேண்டுமென்றால், அவளுடைய மனத்திற்குப் பிடித்தவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும் இருத்தல் வேண்டும். எப்படிப்பட்டவனைக் கணவனாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதையும் அவளே தீர்மானிக்க வேண்டும். யாரைக் கணவனாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை விட யாரைக் கணவனாகத் தேர்ந்தெடுக்கக் கூடாது என்பதில் கவனமாக இருக்கும் தமிழ்ப் பெண் ஒருத்தி கூறுவதாக,

               “தேய்புரி பழங்க யிற்றைப்
    போன்றானைச் சிறப்பில் லானை
    வாய்மையும் சிறந்த வாக்கு
    வன்மையும் இல்லா தானை
    நோய்மத வெறிகொண் டானை
    நுண்ணறி வில்லா தானைத்
    தாய்மொழிப் பற்றில் லானைத்
    தையல்நான் மணக்க மாட்டேன்                ………………………………………………………………………….
    …………………… அறிவில் மூத்தோன்
    வடித்தநூ லான முப்பால்
    திருக்குறள் கல்லா தானைத்
    திருமணம் செய்து கொள்ளேன்”22

    என்று சுரதா கூறியுள்ளார். இந்தக் கவிதை வரிகள் ஒவ்வொன்றும் சிந்திக்கத்தக்கனவாக அமைந்துள்ளன.

    ஒழுக்கம்

         ஒழுக்கம் என்பது மக்களின் வாழ்வியலை முறைப்படுத்துவதில் முதன்மையானதாகத் திகழ்ந்து உயிரினும் மேலானதாகக் கருதப்படுகிறது. ஒழுக்கமுடைய வாழ்வே உயர்ந்த வாழ்வு என்பது பண்டையத் தமிழரின் கொள்கையாகும். மனிதனுக்கு புறத்தூய்மை, அகத்தூய்மை ஆகிய இரண்டும் வேண்டும். புறத்தூய்மை உடல் நோய்கள் வராமலும், அகத்தூய்மை அகநோய்கள் வராமலும் காக்கும். எனவே, அகமும் புறமும் தூய்மையாக இருத்தலே உயர்ந்த நாகரிகம். திருவள்ளுவர்,

               “புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
    வாய்மையால் காணப் படும்”23

         என்ற கூறுகின்றார். புறத்தூய்மையை உடனடியாகக் கண்டுகொள்ள முடியும். அகத்தூய்மையைப் படிப்படியாக, அவரவர் நடத்தையின் மூலமே அறிந்துகொள்ள இயலும். ஒருவன் சமுதாயத்தில் வகிக்கும் பதவியையோ, செய்யும் தொழிலையோ வைத்து அவனுடைய அகத்தூய்மையை உறுதிப்படுத்தி விடக்கூடாது. வெளிஉலகிற்கு நல்லவனாகக் காட்சியளிக்கும் ஒருவன் அகத்தில் அழுக்கு நிறைந்தவனாக இருக்கலாம். இதனை,

               “காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளவும்,
    கதவுள்ள போதே சாத்திக் கொள்ளவும்,
    நன்கு தெரிந்த நடிகை …… ……..
    நித்தம் இருமுறை நீராடு வாராம்
    விடிந்ததும் ஒருமுறை வெந்நீரில் குளியலாம்
    எல்லாம் முடிந்தபின் இன்னொரு குளியலாம்
    ………………………………………………………………………………….
    ஆடை பாதியும் அழகு பாதியும்
    தெரியக் காட்டும் திரைப்பட நடிகையோ,
    அறிஞனோ, கலைஞனோ, அரசியல் தலைவனோ,
    மடாதி பதியோ, மக்கள் திலகமோ,
    கோப்பைக் கவிஞனோ, கோயில் குருக்களோ,
    மற்றிங்கு வாழும் மக்கள் கூட்டமோ,
    ஆயிரம் தடவை அன்றாடம் குளிப்பினும்
    மிகத்தூய்மை பெறுவது மேனியே யன்றி
    அகத்தூய்மை நீரால் அமைவ தில்லையே”24

         என்னும் பாடல்களில் சுரதா சுட்டிக்காட்டியுள்ளார். இந்தக் கவிதையில் பலரையும் குறிப்பிடும் கவிஞர், அறிஞனையும் சேர்த்துக் கூறுகின்றார். பண்பாட்டை அறிவு உருவாக்கும், ஆனால் சில சமயம் தீமையைக் கூர்மைபடுத்தி விடுவதும் உண்டு. உணர்ச்சியைச் செம்மைப்படுத்தத் தவறிவிடுவதும் உண்டு. எனவே, தான் ஆங்கிலத்தில் ‘Intellectual Giants are moral Pygmies’ என்னும் பழமொழி வழங்குகிறது. ‘அறிவில் வானளாவ உயர்ந்திருப்பவர்களும் ஒழுக்கத்தில் குள்ளராக இருப்பதுண்டு’.

    குடும்பக்கட்டுப்பாடு 

         செல்வங்களில் சிறந்தது குழந்தைச் செல்வம். ஆனால் அளவில் மிஞ்சினால், அதுவே குடும்பத்திலும், பின்பு நாட்டிலும் வறுமையைத் தோற்றுவிக்கும். மக்கள்தொகைப் பெருக்கம் இன்று உலகை மிரட்டும் சிக்கலாக மாறி வருகிறது. 138 கோடி மக்களைக் கொண்டுள்ள சீனா, உலகிலேயே அதிகபட்ச மக்கள் தொகையைக் கொண்ட நாடாகத் திகழ்கிறது. குறிப்பாக, சீனாவில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக் கொள்ளத் தம்பதியருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்போது சீனாவில் குடும்பக் கட்டுப்பாட்டு விதி தீவிரமாகக் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், வருங்கால நலனைக் கருத்தில் கொண்டு, குடும்பக்கட்டுப்பாட்டு விதியைத் தளர்த்த சீன அரசு முடிவெடுத்துள்ளது. எனவே, மக்கள்தொகைப் பெருக்கத்தை உலக நாடுகள் கட்டுப்படுத்த வில்லையானால் உலகில் வறுமை, பஞ்சம், பட்டினி, நோய் போன்றவை பெருகும். இந்த எச்சரிக்கையை முற்போக்குச் சிந்தனையாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். இந்திய அரசும் இதனை ஏற்று செயல்படுத்தி வருகிறது. இந்தக் கொள்கையைப் பெரியார், “பெண்கள் விடுதலையடையவும், சுயேச்சை பெறவும் கர்ப்பத்தடை அவசியமென்று நாம் கூறுகின்றோம். மற்றவர்கள், பெண்கள் உடல்நலத்தை உத்தேசித்தும், பிள்ளைகளின் தாட்டீகத்தை உத்தேசித்தும், நாட்டின் பொருளாதார நிலையை உத்தேசித்தும் குடும்பச் சொத்துக்கு அதிகப் பங்கு ஏற்பட்டுக் குறைந்தும், குலைந்தும் போகாமல் இருக்க வேண்டும் என்பதை உத்தேசித்தும் கர்ப்பத்தடை அவசியமென்று கருதுகிறார்கள்”25 என்று எடுத்துக் கூறியுள்ளார். பெரியாரின் சிந்தனையை அடியொற்றி கவிதைகள் படைத்து வந்த பாரதிதாசன்,

               “காதலுக்கு வழிவைத்துக் கருப்பாதை சாத்தக்
    கதவொன்று கண்டறிவோம் இதிலென்ன
    குற்றம்?”26
         என்று பாடியிருக்கிறார். இதே சிந்தனையை, அவருடைய மாணவரான உவமைக் கவிஞர் சுரதா,

    “பெருக்கெடுக்கும் உணர்ச்சியினால் ஒன்று பத்தாய்ப்
    பெற்றெடுக்கும் குழந்தையெனும் கொழுந்தின் கூட்டம்
    நெருக்கடியின் அடையாள மன்றோ? அந்த
    நெருக்கடிக்கிங் கிடங்கொடுத்தால் குடும்ப வாழ்வே
    சருக்குநிலம் ஆகிவிடும் அதனால், பெற்றோர்
    தயவுசெய்து குடும்பநலம் காக்க வேண்டும்”27

         என்று பாடுகிறார். மக்கள் செல்வம் மிகுதியானால், அறிவையும், கற்பனை வளத்தையும் குறைத்துவிடும் என்றும், அதனால் குடும்பத்தில் வறுமையும், நிம்மதியின்மையும் தோன்றும் என்றும் எடுத்துரைக்கின்றார்.

    முடிவுரை

         சாதி, சமய வேறுபாடுகளைக் கண்டிக்கும் கவிஞர், அவை மானிட சமூகத்திற்குத் தேவையற்றது எனச் சாடியுள்ளார். நிறத்தாலும், பிறப்பாலும் உயர்ந்தோர் என்று எண்ணக் கூடியவர்களை மடையர்கள் எனக் கண்டித்துள்ளார். பெண்கள் உடன்கட்டை ஏறும் வழக்கத்தைக் கண்டித்து,  இந்த மூடத்தனமான கொடுமையைத் தடுத்து நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். குடும்பத் தலைவனுக்கு மனைவியும் மழலையும் தரும் மகிழ்வும், புத்தகங்கள் தரும் அறிவும் அலாதியானவை என்பதைக் கவிதை வழி வெளிப்படுத்தியுள்ளார். இல்லாள் இல்லாதவனை இருந்தும் பயன் இல்லாதவன் என ஏளனமாகக் கூறியுள்ளார். தனக்குப் பிடித்தவனைத் தானே தேர்ந்தெடுக்கும் உரிமையும், தனக்குப் பிடிக்காதவனைத் தானே நிராகரிக்கும் உரிமையும் பெண்களுக்கு வேண்டும் எனக் குரல் கொடுக்கின்றார். மகளிர் தம் அன்றாட வாழ்வில் எவற்றை எல்லாம் கடைபிடித்து வாழ வேண்டும் எனப் பட்டியலிடுகின்றார். ஒழுக்கத்தினை உயிரினும் மேலாகக் கருதும் கவிஞர் சுரதா, ஒழுக்கம் இல்லாதவனை உள்ளத்தில் அழுக்கு நிறைந்தவனாகக் காட்சிப்படுத்தியுள்ளார். மக்கள் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த, தாய்மார்கள் குழந்தைச் செல்வங்களை அளவோடு பெற்றுக்கொள்ள அறிவுரை கூறும் கவிஞர், குடும்பக்கட்டுப்பாட்டுச் சிந்தனையையும் விதைத்துச் சென்றுள்ளார்.

    ***

    குறிப்புகள்

    1. மு.அவையாம்பாள் (க.ஆ), ‘கவிராயரின் சமூகவியல் சிந்தனைகள்’ உடுமலை நாராயணகவி பன்முகப்பார்வை, இரா.சந்திரசேகரன், க.இந்திரசித்து (ப.ஆ), ப.237
    2. கி.முத்துக்கூரி (க.ஆ), பூமணியின் நல்ல நாளில் சமூகச் சித்திரிப்பு, இ.ப.த.ம. முப்பத்தோராம் கருத்தரங்கு ஆய்வுக்கோவை- தொகுதி-3, ப.1393.
    3. பி.யோகீஸ்வரன், தமிழ்க் கவிதைகளில் சமுதாயச் சிக்கல்கள், ப.128.
    4. “Before the arrival of Aryans there was no caste systems in the Tamil Country” Srinivasa Iyengar,M, Tamil Studies, P.61
    5. சி.என். அண்ணாதுரை, ஆரிய மாயை, ப.65
    6. சுப.கதிரேசன், கண்ணதாசன் கவிதைகளில் சமுதாயக் கூறுகள், பிஎச்.டி., ஆய்வேடு, ப.53
    7. சுரதா, தேன்மழை, ப.43.
    8. பாரதியார், வந்தே மாதரம், 1
    9. சுரதா, தேன்மழை, ப. 120
    10. மேலது, ப.37
    11. மேலது, ப.64
    12. தொல்.புறத்திணை, நூ.19
    13. ந.சி.கந்தையாபிள்ளை, பெண்கள் உலகம், ப. 70
    14. சுரதா, தேன்மழை, ப.123
    15. மேலது, ப.122
    16. மேலது, ப.124
    17. மேலது, ப.127
    18. திருக்குறள், 66
    19. சுரதா, சுரதா கவிதைகள், ப.79
    20. சுரதா, சுவரும் சுண்ணாம்பும், ப.6
    21. சுரதா, தேன்மழை, ப.112
    22. மேலது, ப.113
    23. திருக்குறள், 298
    24. சுரதா, சுவரும் சுண்ணாம்பும், பக்.17-18
    25. பெரியார், பெண் ஏன் அடிமையானாள்?, ப.57
    26. பாரதிதாசன், பாரதிதாசன் கவிதைகள், தொகுதி-1, ப.40
    27. சுரதா, துறைமுகம், ப.142

     

     

     

     

    Share